காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின் மீதான வழக்கில் இறுதியிலும் இறுதியான தீர்ப்பை உச்சநீதிமன்றம் 18.5.2018 அன்று வழங்கியது. உச்சநீதி மன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட நடுவண் அரசின் காவிரி மேலாண்மை ஆணையத்தின் வரைவுத் திட்டத்தை பருவ மழை தொடங்குவதற்கு முன்பாக அரசி தழில் வெளியிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறி வுறுத்தி உள்ளது.
கிட்டத்தட்ட அய்ம்பது ஆண்டுகளாக நீடித்து வந்த காவிரி ஆற்றுநீர் பங்கீடு குறித்த சட்டச் சிக்கலுக்கு ஒரு திட்டவட்டமான தீர்வு எட்டப்பட்டுள்ளது என்ற வகையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கதே ஆகும்.
அதேசமயம் காவிரி ஆற்றுநீர் உரிமையை நிலைநாட்டுவதற்காகத் தமிழக அரசும், தமிழக மக்களும் மேற்கொண்ட முயற்சிகளையும், போராட் டங்களையும் நடுவண் அரசில் இருந்த காங்கிரசுக் கட்சியும் பாரதிய சனதா கட்சியும் வஞ்சகமாக எவ்வா றெல்லாம் நீர்த்துப் போகச் செய்தன என்கிற வரலாற்றின் பின்னணியில் பார்க்கும் போது, உச்சநீதிமன்றத் தின் தீர்ப்பை பெரும் வெற்றியாகக் கருத முடியாது. காவிரி சட்டச் சிக்கலில் கடந்து வந்த சில படிநிலைகள் :
* கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சி காவிரி தீர்ப்பாயம் அமைக்கக் கோரி 1971 ஆகத்துத மாதம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.
* 1972 மே மாதம் தமிழகம் வந்த பிரதமர் இந்திரா காந்தி முதலமைச்சர் கருணாநிதியைச் சந்தித்து, காவிரிச் சிக்கலைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று உறுதியளித்ததன் பேரில் உச்சநீதிமன்றத் தில் தொடுத்த வழக்கைத் தமிழக அரசு திரும்பப் பெற்றது. அதற்குமுன் கருணாநிதி அனைத்துக் கட்சிகள் கூட்டத்தைக் கூட்டி ஒப்புதல் பெற்றார்.
* 1972 சூன் 12 அன்று காவிரி உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. 1974 நவம்பர் 29 அன்று நடுவண் அரசின் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற மாநில முதலமைச்சர் கள் கூட்டத்தில் நடுவண் அரசு உருவாக்கியிருந்த காவிரி ஒப்பந்த வரைவு விவாதிக்கப்பட்டது.
* பேச்சு வார்த்தைகள் பயன்தராததால் 1975இல் முதலமைச்சர் கருணாநிதி அனைத்துக் கட்சிகள் கூட்டத்தைக் கூட்டியபின், தீர்ப்பாயம் அமைக்கக் கோரி நடுவண் அரசுக்கு மடல் எழுதினார்.
* 1983 நவம்பரில் காவிரிப்படுகை உழவர்கள் சார்பில் மன்னார்குடி ரங்கநாதன், பொன்னுசாமி ரெட்டியார் இருவரும் 1956ஆம் ஆண்டின் சட்டத் தின்படி, காவிரி ஆற்றுநீர் நடுவர் மன்றம் அமைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
* எம்.ஜி. இராமச்சந்திரன் 1977இல் முதலமைச்சரான பின் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் பயன் தராததால், 1986 நவம்பரில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் ரங்கநாதன் வழக்கில் தன்னையும் இணைத்துக் கொண்டது.
* 1989இல் முதலமைச்சரான பின் கலைஞர் கருணாநிதி கர்நாடகத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் பயன் ஏற்படாததால், நடுவர் மன்றம் அமைக்கக் கோரி நடுவண் அரசுக்கு மடல் எழுதினார். மேலும் நடுவர் மன்றம் அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தின் படியை நடுவண் அரசின் வழக்குரைஞர் மூலமாக உச்சநீதிமன்றத் தின் பார்வைக்கும் அனுப்பினார்.
* பேச்சுவார்த்தையால் பயனில்லை என்று வி.பி. சிங் அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. அதன் பின் 1990 மே 4 அன்று உச்சநீதிமன்றம் காவிரி நடுவர் மன்றம் அமைக்குமாறு ஆணையிட்டது.
* 1990 சூன் 2 அன்று மூன்று நீதிபதிகள் கொண்ட காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.
* 1991 சனவரி சனவரி 10 அன்று காவிரி நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி உச்சநீதிமன்றத் தில் விண்ணப்பித்தார்.
* 1991 சனவரி 31 அன்று அரசியல் காரணங்களுக் காக தி.மு.க. ஆட்சிக் கலைக்கப்பட்டது.
* 1991 சூன் 25 அன்று நடுவர் மன்றம் இடைக் காலத் தீர்ப்பை வழங்கியது.
* 1990க்கு முற்பட்ட 50 ஆண்டுகளில் கர்நாடகத் திலிருந்து மேட்டூர் அணைக்கு ஆண்டிற்கு சராசரியாக 361 டி.எம்.சி. நீர் பெறப்பட்டது. அதிக நீர் மற்றும் குறைவான நீர்வரும் ஆண்டுகளைக் கழித்துவிட்டு, சராசரியில் கணக்கிட்டால் ஆண்டிற்கு 305 டி.எம்.சி. வந்தது. இதுவே தமிழ்நாட்டு அரசின் காவிரி நீர் உரிமையின் கோரிக்கையாக இருந்தது. ஆனால் அதைவிட 100 டி.எம்.சி. நீரைக் குறைத்து 205 டி.எம்.சி. நீரைக் கர்நாடகம் தரவேண்டும் என்று இடைக்காலத் தீர்ப்பில் கூறப்பட்டது. 1980 முதல் 1990 வரையிலான காலத்தில் கர்நாடகத்திலிருந்து பெறப்பட்ட நீரின் சராசரி அடிப்படையில் 205 டி.எம்.சி. என்று நிர்ணயித்ததாக நடுவர் மன்றம் கூறியது. இது தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோக மாகும்.
* 1991 சூலையில் முதலமைச்சர் செயலலிதா காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை நடுவண் அரசின் அரசிதழில் வெளியிட வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி னார்.
* உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, 1991 திசம்பர் 10 அன்று நடுவர் மன்றத்தின் இடைக் காலத் தீர்ப்பு நடுவண் அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது.
* இடைக்காலத் தீர்ப்பின்படி கர்நாடகம் தண்ணீரைத் திறந்துவிடக்கோரி முதலமைச்சர் செயலலிதா 1993 சூலை 18 முதல் மூன்று நாள்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினை விடத்தில் உண்ணாநோன்பு இருந்தார்.
* 2007 பிப்பிரவரி 5 அன்று காவிரி நடுவர் மன்றத் தின் இறுதித் தீர்ப்பு வெளியானது. இதில் தமிழகத் திற்கான நீரின் அளவு 192 டி.எம்.சி.யாகக் குறைக் கப்பட்டது. இதிலிருந்து புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி. நீர் தமிழகம் தரவேண்டும்.
* 2012 ஏப்பிரல் 17 அன்று நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடக்கோரி முதலமைச்சர் செயலலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
* 2013 பிப்பிரவரி 20க்குள் அரசிதழில் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்ட தால், மன்மோகன் சிங் தலைமையிலான நடுவண் அரசு 2013 பிப்பிரவரி 19 அன்று இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது.
* 2007 பிப்பிரவரி 5 அன்று நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பு தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தன. 2016 அக்டோபர் 18 அன்று இவற்றை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
* 2017 பிப்பிரவரி முதல் தொடர்ந்து விசாரணை நடைபெற்ற இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் 16.2.18 தீர்ப்பு வழங்கியது.
மேலே தரப்பட்டுள்ள முதன்மையான குறிப்புகள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி ஆற்றுநீர் மீது தமிழகம் பெற்றிருந்த உரிமையை, இந்திய அரசு கர்நாடக மாநில அரசை இளைய கூட்டாளியாக வைத்துக் கொண்டு எவ்வாறெல்லாம் வஞ்சிக்க முயன்றது என்பதைப் புரிந்து கொள்வதற் காகவே தரப்பட்டுள்ளன.
1924இல் அன்றைய சென்னை மாகாண அரசுக் கும் மைசூர் மன்னராட்சிக்கும் இடையில் ஏற்பட்ட காவிரி நீர் ஒப்பந்தப்படி, மைசூரில் கிருஷ்ணராஜசாகர் அணையும், சென்னை மாகாணத்தில் 1934இல் மேட்டூர் அணையும் கட்டப்பட்டன. அய்ம்பது ஆண்டுகள் கழித்து - அதாவது 1974இல் இந்த ஒப்பந்தம் குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என்று 1924 ஒப்பந்தத்தில் எழுதப்பட்டது.
காங்கிரசு ஆட்சியின்கீழ் இருந்த கர்நாடக அரசு 1924இன் ஒப்பந்தப்படி, தமிழ்நாட்டு அரசின் அனுமதி யைக் கேட்காமல், 1960களில் ஹேமாவதி, ஹாரங்கி, கபினி ஆகிய அணைகளைக் கட்டிக்கொண்டது. தமிழ் நாட்டை ஆண்டு கொண்டிருந்த காங்கிரசுக் கட்சியும் கர்நாடகத்தில் புதிய அணைகள் கட்டுவதைத் தடுக்கத் தவறிவிட்டது. இதனால் கர்நாடகத்திலிருந்து தமிழ் நாட்டுக்கு வரும் நீரின் அளவு குறைந்தது.
இந்தப் பின்னணியில் 1970 முதல் தமிழ்நாட்டு அரசு, தமிழகத்துக்கான காவிரி உரிமையை மீட்டெடுப் பதற்காக முயற்சிகளை மேற்கொண்ட போதெல்லாம் தில்லி ஆட்சியாளர்கள் தமிழ்நாடும் கர்நாடகமும் பேசித்தீர்த்துக் கொள்ளலாம் என்று திசைத்திருப்பி இழுத்தடித்தனர். 1967இல் தமிழகச் சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலில் காங்கிரசு தோற்றது. தி.மு.க. ஆட்சி அமைத்தது. அதுமுதல் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய திராவிடக் கட்சிகளே தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்து வருகின்றன. அதனால் காங்கிரசுக் கட்சிக்குக் கர்நாடகத்தில் ஆட்சியில் நீடிக்க வேண்டிய கட்டாயத் தேவை இருந்தது. அதனால் தமிழகத்தின் நியாயமான காவிரி உரிமையைப் புறக்கணித்து, கர்நாடகத்துக்குச் சார்பான நிலைப்பாட்டையே தில்லியில் ஆட்சியில் இருந்த காங்கிரசுக் கட்சி மேற்கொண்டது. இந்திய நாட்டின் பிரதமர்களிலேயே தமிழ்நாட்டின் உரிமைக்கு நியாயமாக நடந்து கொண்டவர் வி.பி. சிங் மட்டுமே ஆவார்.
கர்நாடகத்தில் எந்தக் கட்சி ஆண்டாலும், யார் முதலமைச்சராக இருந்தாலும் தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீர் உரிமையை மறுப்பதில் ஒத்த கருத்தையே கொண்டிருந்தனர். தமிழகத்துக்குத் தண்ணீர் தரக் கூடாது என்று கர்நாடகத்தில் கலவரங்களைத் துண்டி விடுவது. உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இழுத்தடிப்பது என்பது கர்நாடக அரசின் கொள்கையாக இருந்து வந்துள்ளது. இதற்கு எல்லா அரசியல் கட்சிகளும் கன்னட அமைப்புகளும் ஒரே குரலில் ஒத்து ஊதின. நடுவண் அரசு, கர்நாடகத்தில் தன் கட்சியின் அரசியல் ஆதாயத்தைக் கருதி, கர்நாடக அரசின் அட்டூழியங் களுக்குத் துணை நின்றது. மேலும் தில்லியில் உள்ள மேல்சாதி உயர் அதிகார வர்க்கம் தமிழினப் பகை உணர்வுடன் தமிழர்களின் உரிமைகளைப் பறிப்பதில் ஈடுபட்டு வருவதும் ஒரு காரணமாகும்.
இக்காரணங்களால் காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை 1970இல் தமிழ்நாடு அரசு முன்வைத்த போதிலும், இருபது ஆண்டுகள் கழித்து, 1990இல்தான் நடுவண் அரசு காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தது. அதுவும்கூட உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியதால் அமைத்தது. 1991 சூன் 25 அன்று வழங்கப்பட்ட நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பில் தமிழகத்துக்கு 205 டி.எம்.சி. நீரை மாத வாரியாக எவ்வளவு திறந்துவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்த போதிலும், கர்நாடகம் இதை நடைமுறைப்படுத்த முடியாது என்று சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றியது. மீண்டும் உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் நடுவர் மன்றத்தின் இடைக் காலத் தீர்ப்பை பி.வி. நரசிம்மராவ் ஆட்சி 1991 திசம்பர் 10 அன்று அரசிதழில் வெளியிட்டது. இதை எதிர்த்து கர்நாடகத்தில் வாழ்ந்த தமிழர்கள் மீது கன்னட வெறி யர்கள் கொடுந் தாக்குதலை நடத்தினர்; அவர்களின் உடைமைகள் சூறையாடப்பட்டன; ஒரு இலட்சம் தமிழர்கள் கர்நாடகத்திலிருந்து வெளியேறி தமிழகம் வந்தனர். கன்னட வெறியர்கள் தமிழர்கள் மீது நடத்திய தாக்குதலை நடுவண் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
2007 பிப்பிரவரி 5 அன்று வழங்கப்பட்ட நடுவர் மன்றத்தின் தீர்ப்பை அரசிதழில் வெளியிடாமல் நடுவண் அரசு தவிர்த்து வந்தது. உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்த பிறகுதான், 2013 பிப்பிரவரி 19 அன்று அரசி தழில் வெளியிட்டது. ஆனால் இந்த இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்துவதற்கான அதிகாரம் படைத்த காவிரி மேலாண்மை வாரியத்தை 2014 மே வரையில் ஆட்சியில் இருந்த மன்மோகன் சிங் அரசு அமைக்க வில்லை.
2014 மே மாதம் தனிப்பெரும்பான்மையுடன் தலைமை அமைச்சராகப் பதவி ஏற்ற நரேந்திர மோடி ஆட்சியும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வில்லை. 2016 செப்டம்பர் 29 அன்று உச்சநீதிமன்றம், நடுவண் அரசு நான்கு கிழமைகளுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று காவிரி வழக்கில் இடைக்கால ஆணையிட்டது. ஆனால் நரேந்திர மோடியின் ஆட்சி, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மீது முடிவு எடுக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கு இல்லை; நாடாளுமன்றத்துக்குத் தான் உண்டு என்று ஆணவத்துடன் பதில் சொன்னது. மேலும் ஒவ்வொரு ஆற்றுநீர்ப் பங்கீட்டுக்கும் தனித் தனி வாரியங்கள் இருப்பதற்குப் பதிலாக, நாடு முழு வதற்கும் நீர்ப்பங்கீட்டுக்கென்று ஒரே வாரியம் கொண்டு வரும் திட்டத்தை மோடி ஆட்சி முன்மொழிந்தது. அதன்மூலம் காவிரி மேலாண்மை வாரியத்தைக் குழிதோண்டிப் புதைக்க எண்ணியது. ஆனால் ஒரே வாரியம் என்கிற திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
2007இல் வெளியிடப்பட்ட நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநில அரசுகள் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தன. பல்வேறு வகை யான சட்டச் சிக்கல்கள், காலத்தாழ்வுகளுக்குப்பின் 2016 அக்டோபர் மாதம் இம்முறையீடுகள் ஒரே வழக் காக ஏற்கப்பட்டன. 2017 பிப்பிரவரி முதல் உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு 16.2.2018 அன்று இறுதித் தீர்ப்பை வழங்கியது.
அத்தீர்ப்பில் தமிழகத்துக்கு 2007ஆம் ஆண்டின் நடுவர் மன்றத் தீர்ப்பில் வழங்கப்பட்ட 192 டி.எம்.சி. நீரில் 14.75 டி.எம்.சி. குறைந்து 177.25 டி.எம்.சி. மட்டுமே வழங்கப்பட்டது. 1990 வரையில் சராசரியில் 360 டி.எம்.சி. காவிரி நீரைப் பெற்றுவந்த தமிழகத் துக்கு, தொடர்ச்சியாக இழைக்கப்பட்ட வஞ்சகத்தால் அதில் பாதிக்கும் கீழாகக் குறைப்பட்ட கொடுமை நேர்ந்துள்ளது. இவ்வாறு தமிழகத்திற்கு உரிய நீரின் பங்கு குறைக்கப்பட்டதற்கு உச்சநீதிமன்றம் கூறியுள்ள காரணம் இன்னும் கொடுமையானதாகும்.
வேகமான தொழில் வளர்ச்சி பெற்றுள்ள பெங்களூரு நகரத்திற்கு 4.75 டி.எம்.சி. ஒதுக்கப்படுவதாகக் கூறப் பட்டுள்ளது. சென்னை நகரம் பெங்களூருவைவிட தொழில் வளர்ச்சி பெற்ற பெரிய நகரம் என்பதையும், காவிரியிலிருந்து சென்னை நகருக்குத் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது என்பதையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வசதியாக மறந்துவிட்டனர். மீதி 10 டி.எம்.சி. நீரைக் காவிரிப் படுகையில் நிலத்தடியில் உள்ள 20 டி.எம்.சி. நீரிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. காவிரி ஆற்றில் பாயும் நீரைப் பகிர்ந்து கொள்வது குறித்துதான் இந்த வழக்கு; இதில் நிலத்தடி நீரை இணைப்பது வஞ்சகச் செயலாகும்.
உச்சநீதிமன்றம் 16.2.2018 அன்று வழங்கிய தீர்ப்பில் ஆறு கிழமைகளுக்குள் காவிரி நடுவர் மன்றத் தின் இறுதித் தீர்ப்பையும், அதில் உச்சநீதிமன்றம் செய்துள்ள மாற்றத்தையும் (தமிழகத்துக்கு நீரின் அளவைக் குறைத்தது) செயல்படுத்துவதற்கான ஒரு வரைவை உச்சநீதிமன்றத்தில் நடுவண் அரசு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் என்று நேரடியாக உச்சநீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்படாமை தமிழர்களிடையே அய்யத்தை ஏற்படுத்தியது. கடந்த காலங்களில் வஞ்சிக்கப்பட்ட நிகழ்வுகளை மனதில் கொண்டு அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் காவிரி நடுவர் மன்றம் வகுத்துள்ளபடி, காவிரி மேலாண்மை வாரியம் என்பதையே அமைக்க வேண்டும் என்று நடுவண் அரசுக்குக் கோரிக்கை வைத்து, தொடர்ந்து பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தின.
உச்சநீதிமன்றம் அளித்த கால எல்லை 29.3.18 அன்றுடன் முடிவடைந்தது. நடுவண் அரசு அதுவரை அறிக்கை அளிக்கவில்லை. தமிழ்நாட்டு அரசு நடுவண் அரசுமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. அதே நாளில் நடுவண் அரசு உச்சநீதிமன்றத்தில் ஒரு விண்ணப்பம் அளித்தது. உச்சநீதிமன்றத் தீர்ப்பில் உள்ள “ஒரு செயல் திட்டம்” (A Scheme) என்பதற்கு என்ன பொருள் என்று விளக்கம் கேட்டிருந்தது. கர் நாடகத்தில் தேர்தல் நடைபெறுவதால், காவிரிச் சிக்கல் கர்நாடகத்தில் உணர்வுப்பூர்வமானதாக இருப்பதால், மேலும் மூன்று மாதங்கள் காலநீட்டிப்பு வழங்க வேண்டும் என்று கோரியது.
“நான் அடிப்பதுபோல் அடிக்கிறேன்; நீ அழுவது போல் அழு” என்பதுபோல் ஆறு வாரங்களுக்குள் செயல்திட்ட அறிக்கை அளிக்காததற்காக நடுவண் அரசை உச்சநீதிமன்றம் கடிந்து கொள்வதாகக் காட்டிக் கொண்டது. இக்கோரிக்கையை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று கூறி இதன் மீதான விசார ணையை 9-4-2018க்கு ஒத்தி வைத்தது. 9.4.2018 அன்று உச்சநீதிமன்றம் மே மாதம் 3ஆம் நாளுக்குள் வரைவுத் திட்டத்தை அளிக்க வேண்டும் என்று நடுவண் அரசுக்கு ஆணையிட்டது. நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தபின் நிலவும் அரசியலைப் புரிந்தவர்கள் மே 12இல் கர்நாடகச் சட்டமன்றத் தேர்தல் நடப்பதற்கு முன்பாக நடுவண் அரசு காவிரி வரைவுத் திட்டத்தை அளிக்காது என்று கூறினர்.
மே 3 அன்று உச்சநீதிமன்றத்தில் நடுவண் அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால், “வரைவு செயல்திட்டம் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வைக்கப்பட வேண்டும். பிரதமரும் அமைச்சர்களும் கர்நாடகத் தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதால் இந்த வழக்கு விசாரணையை தேர்தலுக்கு மறுநாள் எடுத்துக் கொள்ளலாம்” என்று வாதிட்டார். நீதிபதிகள் நடுவண் அரசு மே 8 அன்று வரைவு அறிக்கையை அளிக்க வேண்டும் என்று ஆணை யிட்டனர். மே 8 அன்றும் உச்சநீதிமன்றமும் நடுவண் அரசும் இணைந்து இதே நாடகக் காட்சியை அரங் கேற்றின. மே 14 அன்று நீர்வளத்துறைச் செயலாளர் செயல்திட்ட அறிக்கையுடன் உச்சநீதிமன்றத்தில் காலை 10.30 மணிக்கு நேர் நிற்க வேண்டும் என்று நீதிபதிகள் ஆணையிட்டனர்.
14.5.2018 அன்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடுவண் அரசின் நீர் வளத்துறைச் செயலாளர் யு.பி. சிங் 14 பக்கங்கள் கொண்ட செயல் திட்ட வரைவு அறிக் கையை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் அளித்தார். காவிரி மேலாண்மை அமைப்புக்கு வாரியம் அல்லது ஆணையம் அல்லது அமைப்பு என்று பெயரிடும் பொறுப்பை உச்சநீதிமன்றத்தின் முடிவுக்கு விடுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. காவிரி மேலாண்மை அமைப்பின் உறுப்பினர்களுக்கிடையே ஒரு முடிவை எடுக்க முடியாத நிலையில் நடுவண் அரசின் உதவியை நாடலாம். அந்நிலையில் நடுவண் அரசு எடுக்கும் முடிவே இறுதியானது; அனைவரும் அதற்குக் கட்டுப்பட வேண்டும் என்று கூறப்பட்டி ருந்தது. மேலாண்மை அமைப்பின் தலைமையிடம் பெங்களூருவில் இருக்கும். நான்கு மாநில அரசு களுக்கும் நடுவண் அரசின் அறிக்கை அளிக்கப்பட்டது. அதன்மீதான அவர்கள் கருத்தை 16.5.2018 அன்று உச்சநீதிமன்றத்தில் அறிக்கையாக அளிக்குமாறு உச்சநீதிமன்றம் கூறியது.
16.5.2018 அன்று உச்சநீதிமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது, காவிரி மேலாண்மை வாரியம் என்று பெயரிடுவதில் நடுவண் அரசுக்கு மாற்றுக் கருத்து இல்லை என்று வேணுகோபால் தெரிவித்தார். புதுச்சேரி மாநில வழக்குரைஞர், இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் நடுவண் அரசிடம் இருக்கக் கூடாது என்று கூறியதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். அதேபோல் காவிரி மேலாண்மை அமைப்பின் தலைமையகத்தைப் புதுதில்லிக்கு மாற்ற முடிவு செய்தனர். இந்த மாற்றங் களை உள்ளடக்கிய வரைவை நடுவண் அரசு 17.5.18 அன்று அளித்தது. அதில் காவிரி மேலாண்மை ஆணையம் என்று பெயர் இடப்பட்டிருந்தது. வாரியம் என்ற சொல்லை இறுதி வரையில் நடுவண் அரசு ஏற்கவில்லை. இதை ஏற்று 18.5.2018 அன்று உச்ச நீதிமன்றத்தின் அமர்வு இறுதித் தீர்ப்பை வழங்கியது.
முதலில் இந்த இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளி யிடப்பட வேண்டும். தென்மேற்குப் பருவமழை வழக்க மாகத் தொடங்கும் சூன் முதல் நாளுக்கு முன்பாக காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை நடுவண் அரசு அமைக்க வேண்டும். ஆனால் 30.5.18 அன்று வரையில் நடுவண் இதற் கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆணையத்தின் தலைவராக நடுவண் அரசின் நீர்வளத் துறையின் மூத்த அதிகாரி, அல்லது மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி இருப்பார் என்று இப்போது கூறப் பட்டுள்ளது. நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பில் நீர்ப் பாசனத் துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த பொறியாளர் வாரியத்தின் தலைவராக அமர்த்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையம் முற்றிலுமாகத் தன்னாட்சி அதிகாரம் கொண்டது என்று குறிப்பிடப் படவில்லை. காவிரி நீர் சேமிப்பு, பங்கீடு, ஒழுங்கு படுத்தல் மற்றும் கட்டுப்பாடு, நீர்த் தேக்கங்களின் மேற்பார்வை அதிகாரம் ஆகியவற்றுக்கான அதிகாரம் மேலாண்மை வாரியத்திடம் வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் நீர்த் தேக்கங்களை இயக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடமே இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே மேலாண்மை வாரியம் நீர் திறந்து விடுவது குறித்துப் பிறப்பிக்கும் ஆணையின் படி கர்நாடகம் அணைகளிலிருந்து நீரைத் திறந்து விடுமா? என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது. பியால் ஆற்றின் குறுக்கே இருக்கும் அனைத்து அணைகளும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட பக்ரா-பியால் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதுபோல் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஏன் அதிகாரம் வழங்கப்படவில்லை?
எனவே 2018 சூன் முதல் திசம்பர் வரையில் காவிரி மேலாண்மை வாரியத்தின் ஆணையின்படி கர்நாடகம் நீரைத் திறந்துவிடுகிறதா என்பதைப் பார்த்த பிறகே இறுதித் தீர்ப்பின் வெற்றியைக் கணிக்க முடியும்!