பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி 05.02.1942இல் கோயம்புத்தூர் வெள்ளலூரில் பிறந்தார். இவரது தந்தையார் இளையபெருமாள் ஆசிரியராகவும், சோதிடத்தில் ஈடுபாடு உள்ளவராகவும் விளங்கியவர். ‘எனது முதல் வகுப்பு… முதல் வகுப்பு’ எனத் தான் தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கியதைப் பெருமிதத்துடன் கூறுவார். கோவையில் தமிழறிஞர் ப.சு. மணியம் அவர்களிடம் தமிழ் பயின்றார். தொடர்ந்து பட்டங்கள் பெற்றார். ‘பரிமேலழகர் திருக்குறள் உரைத்திறன்’ எனும் தலைப்பில் இவர் மேற்கொண்ட முனைவர் பட்டம் இவரின் சிந்தனைப் புலத்தைக் கட்டமைத்தது.

i sundramoorthyசென்னைப் பல்கலைக்கழகத் திருக்குறள் இருக்கையில் முதலில் பணியமர்வு பெற்றார். அறிஞர்கள் மு. வரதராசனார், க. த. திருநாவுக்கரசு ஆகியோரின் அரவணைப்பும் வழிகாட்டலும் இவருக்கு அடித்தளமாக அமைந்தன. பெரும் பேராசிரியர் மு. சண்முகம் பிள்ளை அவர்களுடன் பணி செய்யும் வாய்ப்பினைப் பெற்றார். சுவடியியல், பதிப்பியல் சார்ந்த தூண்டலை இங்கிருந்தே பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஒன்றாயிருந்த தமிழ்த் துறையில் பணியாற்றிப் பின்னர் தமிழ் மொழித் துறை, தமிழ் இலக்கியத் துறை ஆகியவற்றில் பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும் திகழ்ந்தார். சென்னைப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை இயக்குநராகவும் திறம்படச் செயல்பட்டார்.

திருக்குறள் சார்ந்த ஆய்வுகள் இவரின் வாழ்நாள் பணியாக அமையப்பெற்றது. இவரின் முதல் நூலான ‘திருக்குறள் அணிநலம்,’ (1971) முன்னுரையில் “அறமும் நீதியும் நவிலும் நூல்கள் பொதுவாக இலக்கிய இன்பம் தாரா என்பர். ஆயின், திருக்குறளோ இலக்கிய நயமும் இன்பமும் தரும் எழிலும் ஏற்றமும் பெற்று விளங்கும் ஓர் இனிய கருத்துக் கருவூலம்” என்பார். இவரின் ‘திருக்குறள் பரிமேலழகர் உரைத்திறன்’ எனும் ஆய்வு இவரின் ஆய்வு முறைமையை விளங்கிக் கொள்ளக்கூடியது. கருவி நூலாக இது விளங்குகிறது. சொல் வலை வேட்டுவர், திருக்குறள் பரிமேலழகர் உரை நுண்பொருள் மாலை, வான்மறை வள்ளுவம், திருக்குறள் மூலப்பதிப்பு, திருக்குறள் பதிப்பு வரலாறு, திருக்குறள் சில அரிய பதிப்புகள், குறளமுதம் முதலிய இவரின் நூல்கள் வள்ளுவம் குறித்த ஆய்வுப் புலத்தில் முக்கியப் பங்களிப்புகளாக அமைகின்றன.

 சுவடிகள் பற்றியும் சுவடிகளைப் பதிப்பித்தல் குறித்தும் இவர் கவனம் செலுத்தினார். பதிப்பியல் குறித்து இவரின் அறிமுக நூல்கள் முக்கியமானவை. இவர் பதிப்பித்த கல்கத்தா தேசிய நூலகச் சுவடிகள், உவமான சங்கிரகம், இருபுராண விருத்தம், கொங்கு மண்டல சதகங்கள் போன்றவை குறிப்பிடத்தக்கன. தமிழில் முதன்மை நிகண்டாகக் கருதப்பெரும் ‘திவாகரம்’ நிகண்டை இரு தொகுதிகளாகப் பதிப்பித்தார். பல சுவடிகள், பதிப்புகளை ஒப்பு நோக்கி இடைச் செருகல்களைச் சுட்டி அமைந்த செம்பதிப்பாக இது விளங்குகிறது. ‘நிகண்டுகளின் தோற்றமும் வளர்ச்சியும்’ என அமைந்த இவரின் ஆய்வு முன்னுரை அகராதியியலுக்கு அரும் கொடை எனலாம். சூடாமணி நிகண்டின் ஒரு பகுதியை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் கொண்டு வந்தார்.

பதிப்பியலுடன் தொடர்புள்ள இதழியலிலும் அக்கறை கொண்டவராக விளங்கினார். இந்திய விடுதலைக்கு முந்தைய இதழ்கள் (4 தொகுதிகள்), மகளிர் இதழ்கள், இலக்கிய இதழ்கள், திராவிட இயக்க இதழ்கள், பொதுவுடமை இதழ்கள் ஆகிய கருத்தரங்கக் கட்டுரைகளைத் தொகுப்புகளாக அமைந்த நூல்கள் தமிழ் இதழியல் ஆவணங்களாகக் கருதத் தக்கவை.

பழம்பெரும் இலக்கியங்களைப் பதிப்பித்தல் தொடர்பான நெறிமுறைகளை உருவாக்கியதுடன் அவற்றின் அடியாகப் பதிப்பித்தும் காட்டியவர் இ.சு.

நவீன இலக்கியக் கோட்பாடுகளில் ஒன்றான 'நடையியல்' குறித்துத் தமிழில் எழுதிய ஒரு சிலரில் இ.சு.வும் ஒருவர். நடையியல் அறிமுகம் (1979), பாரதி நடையியல் (1985), திருக்குறள் நடையியல் (1987), நடையியல் சிந்தனைகள் (1994) ஆகிய இவரின் நூல்கள் தமிழில் நடையியல் சார்ந்த குறிப்பிடத்தக்க முயற்சிகள் எனலாம்.

மரபிலக்கியப் புலமை, இடைக்கால இலக்கியப் பயிற்சி, இலக்கண நூலறிவு, தற்காலப் படைப்பு ஈடுபாடு, ஆராய்ச்சி - திறனாய்வு நுட்பம் மிகுந்த இ.சு. தமிழில் ‘நடையியல்’ குறித்த ஆக்கங்களையும் தந்துள்ளார். நடையியல் அறிமுகம், நடையியல் சிந்தனைகள், பாரதி நடையியல், திருக்குறள் நடையியல் ஆகிய இவரின் நூல்கள் இத்துறையில் முக்கியமானவை.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் (2001 – 2004), செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் (2021 -2024) சிறப்பாகச் செயல்பட்டார். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கல்வியாளராக விளங்கினார். பல ஆய்வாளர்களை உருவாக்கி உள்ளார். ஆசிரியர் - மாணவர் உறவு நிலைக்கு அடையாளமாகக் கருதத்தக்கவர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசின் வழிகாட்டலுடன் முதன் முதலில் முதுகலை வகுப்புகளைத் தொடங்கினார். இருநூறுக்கும் மேற்பட்ட புதிய, மறுபதிப்பு நூல்களைப் பதிப்புத் துறை வழி வெளியிட்டார். விருப்பு வெறுப்பு அகற்றி அதிகாரத்துவம் இன்றி செயல்பட்டார். கல்விசார் பணிகள் சிறப்புடன் நடைபெற்றன. பல்கலைக்கழகத்தின் தனித்த மாண்புகளைக் காத்தார்.

இ.சு. அவர்கள் நியூசெஞ்சுரி புத்தக நிறுவனத்துடன் அறிவுத் தொடர்பில் இருந்தார். இதன் தலைவராக இருந்த தோழர் இரா. நல்லகண்ணு, பதிப்புத் துறைத் தலைவர் தோழர் ஆர். பார்த்தசாரதி ஆகியோருடன் மிகுந்த தோழமை கொண்டவர். என்.சி.பி.ஹெச். பதிப்பாசிரியர் குழுவிலும் இருந்து நல் ஆலோசனைகள் வழங்கினார். பல நூல்கள், தொகுப்புகள் வெளிவரக் காரணமாக இருந்தார்.

சங்க இலக்கியம் மூலமும் உரையும் 2004-ல் தொகுப்புகளாக வெளிவர இவர் உந்து சக்தியாக விளங்கினார். இதன் பதிப்புரையில், "ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு முன் சங்க இலக்கியங்கள் உரையுடன் வெளியிடுவதற்குச் சிந்தித்தோம். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் இ.சுந்தரமூர்த்தி அவர்கள் உதவ முன்வந்தார்," என ஆர். பி. எஸ். சுட்டுவார்.

சங்க இலக்கியம் தொகுப்பு அணிந்துரையில், "என்.சி.பி.எச். நிறுவனம் பல்லாண்டுகளுக்கு முன் சங்க இலக்கிய மூலத்தை (மர்ரே பதிப்பு) மறுபதிப்பு செய்து வெளியிட்டுத் தொண்டாற்றியது. தொடர்ந்து பின்னர் ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து முதலான நூல்களுக்கு எளிய உரை எழுதி வெளியிட்டது.

இப்பொழுது அரிய பெரிய முயற்சியை மேற்கொண்டு ஏறத்தாழ இருபது தொகுதிகளில் சங்க இலக்கியத்தை உரையோடு வெளியிட்டுப் பழந்தமிழுக்குப் பெருந்தொண்டாற்றியுள்ளது... சங்க இலக்கியப்பதிப்பு வரலாற்றில் இத்தொகுதிகள் புதுவரவாக, நல்வரவாகத் திகழும்." என இ.சுந்தரமூர்த்தி குறிப்பிடுகிறார்.

எழுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். பல நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டவர். பல்வேறு கல்வி, இலக்கியம் சார் குழுக்களில் பங்களிப்பு செய்தவர். சாகித்திய அகாதெமியின் பொதுக்குழுவிலும், ஆலோசனைக் குழுவிலும் செயல்பட்டவர். அண்மையில் கூட செர்மனியைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ‘அனைத்துலகக் கல்வி, பண்பாடு அறிவியல் மேம்பாட்டுக்கழகம்’ (ITEC) எனும் சேவை அமைப்புக்குத் தமிழ்ப் பாடத்திட்டங்கள் உருவாக்கும் பணியைப் பொறுப்பேற்று பாடநூல்கள் எழுதிட உறுதுணையாக இருந்தார்.

இவரின் எழுத்து போலவே பேச்சும் நிதானமாக, நிரல்படக் கருத்துக்களை முன் வைப்பதாக அமையும். மிகுந்த தயாரிப்பும், கையில் குறிப்புமாக அவையை ஆரவாரமின்றி அலங்கரிப்பார்.

இ.சு. தான் வாழும் காலத்திலேயே பல சிறப்புகளையும் பொறுப்புகளையும் பெற்றவர். தமிழ்நாடு அரசின் திருக்குறள் விருது, கலைஞர் செம்மொழி விருது உள்ளிட்டப் பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன.

தமிழகத்தில் இவரின் பண்பு நலத்தால் தக்கார் பலரால் கொண்டாடப்பட்டவராகத் திகழ்ந்தார்.

"பழைய புலமை தலைமுறை ஒன்று, மறந்து வைத்து விட்டுப் போன சங்க நிதி ஒன்றுண்டு. அதன் இன்னொரு பெயர் பேராசிரியர் இ.சுந்தர மூர்த்தி" என்பார் கவிஞர் சிற்பி.

"சிலரைப் பார்த்தால் சில பண்புகள் நமக்கு நினைவுக்கு வருதல் கண் கூடு. கம்பநாடார் இற்பிறப்பு, இரும்பொறை, கற்பு என்னும் பண்புகளின் சேர்க்கையாகச் சீதையை அனுமன் கண்டான் என்கிறார். எனக்குப் புலமை, இனிமை, எளிமை ஆகிய பண்புகளின் பசுங்கூட்டமாகக் காட்சி தருபவர் பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி ஆவார்." என்கிறார் தெ. ஞானசுந்தரம்.

‘இ.சு.’ என அன்புடன் அழைக்கப்பட்ட இவரின் நட்பு வட்டம் பெரியது. தனி வாழ்வு, குடும்பம், பணி வாழ்க்கை யாவற்றிலும் தன் ஒழுங்கும் ஒழுக்கமும் மிக்கவராக இவர் திகழ்ந்தார். மனித உறவுகளைப் பேணினார். மனிதப் பண்புகளைக் கொண்டாடினார். தன் வாழ்நாளிலேயே உரிய சிறப்புகளையும் பெற்றார். தமிழ்நாட்டின் இரு தரப்பு அரசுகள் மட்டுமல்ல. ஒன்றிய அரசும் கூட இவரின் தகுதியறிந்து அங்கீகரித்தது.

ஆசிரியர் - மாணவர் உறவுக்கு எடுகோளாகத் திகழ்பவர் இ.சு. தான் ஆசிரியர்களுடன் நல்லுறவைப் பேணியது போலவே தம் மாணவர்களிடம் அணுக்கமாகத் திகழ்ந்தார். இவரிடம் நாற்பத்தாறு பேர் முனைவர் பட்டமும், ஐம்பத்தைந்து பேர் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றுள்ளனர். இவரால் தாக்கம் பெற்று உருவான ஆய்வாளர்களும் பலர் உண்டு.

அன்பும், அமைதியும், இன் முகமும் கொண்ட இவரின் மென்மை மிகு சுபாவம் அனைவருடனும் ‘இணக்கமாக’ இருத்தலைச் சாத்தியப்படுத்தியது. யாருடனும் பகை கொள்ளா நன்நெஞ்சினராய் அவர் வாழ்ந்தார். “காய்த்துத்தான் பழங்கள் கூடக் கனிகின்றன. இவரிடம் காய்ப்புப் பருவமே இருந்ததில்லை. கனியும் பருவம் மட்டுமே உண்டு” எனும் ஈரோடு தமிழன்பனின் கவிவாக்கு மெய்தான் என்பதை வாழ்ந்து காட்டியவர் அறிஞர் இ. சுந்தரமூர்த்தி. தொடக்கப்பள்ளி ஆசிரியராக வாழ்வினைத் தொடங்கிப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வரை உயர்ந்து 13.05.2026இல் இயற்கையில் கலந்தார்.

- பேராசிரியர் இரா. காமராசுதலைவர், நாட்டுப்புறவியல் துறை, தமிழ்ப் பல்க்லைக்கழகம், தஞ்சாவூர்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.