பேராசிரியர் தொ. பரமசிவன் தம் சிந்தனையை நிறுத்திக்கொண்டார் !
தொ.ப என எல்லோராலும் அழைக்கப்பெற்ற முதுபெரும் தமிழறிஞர் அய்யா பேராசிரியர் தொ.பரம சிவன் தம் சிந்தனையை நிறுத்திக்கொண்டார்.
தமிழ்த்தேச அரசியலுக்குத் திராவிட இயக்கப் பங்களிப்புகளை நேர்மையோடு திறனாய்வு செய்வதிலும் பெரும் பங்காற்றிய சீரிய சிந்தனையாளர். பெரியாரின் சிந்தனைகள் எப்படித் தமிழுக்கும் தமிழருக்கும் அரண் சேர்ப்பவை என்பதை நடுவுநிலைமையோடு ஆய்ந்தளித் தவர். பெரியாரைத் தமிழ்ச் சமூகத்திற்கு எதிர் நிலையில் நிறுத்த முயல்வோரை இடித்துரைத்தவர்.
ஆர்எஸ்எஸ் பார்ப்பனிய இந்துத்துவப் பாசிசம் நாட்டையே பீடித்துக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில் பெரியார் முன்னிலும் அதிகமாகத் தேவைப்படுகிறார்; பெரியாரும் அம்பேத்கரும் பார்ப்பனியத்தின் வேரெதிரியாய் உயர்ந்துநிற்கும் ஆகப்பெரிய அடிக்கட்டுமானங்கள்; அம்பேத்கர் மீது அவதுறு பரப்பி அழிக்கப் பார்த்த பார்ப்பனக் கூட்டம், அது முடியாதுபோனதால் இப்போது அவரை அண்டிப் புகழ்ந்து உட்செரிக்க முயலுகிறது.
ஆனால், தந்தை பெரியாரை ஒரு போதும் அவர்களால் உட்செரிக்க முடியாது என்பதால்தான் அழிக்க நினைக் கிறார்கள் என்று பார்ப்பனியத்தின் சூழ்ச்சிகளைத் தோலுரித்தவர்.
தொல் படிமங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள், இலக்கியங்களிலிருந்து மட்டுமே வரலாற்றுத் தொன்மங்களைப் பார்க்கும் ஆய்வுச் சூழலை மாற்றி, நாட்டார் வழக்கு பற்றிய கதையாடல்களின் வழியாகப் பொதுமை நெறியில் நின்று விளிம்புநிலை மக்களின் பண்பாட்டில் இருந்து தமிழர் பண்பாட்டைக் கட்டியெழுப்பி மீட்டுரு வாக்கம் செய்தவர்.
தொ.ப அவர்கள் தமிழுக்கு வழங்கியுள்ள ஆய்வுக் கொடைகளுள் ஆகச்சிறந்தது ‘அறியப்படாத தமிழகம்’ எனும் தமிழரின் பண்பாட்டு வரலாற்றுத் தொடர்ச்சியை அறியவைத்த ஆய்வு நூல்.
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வில் தம் தனித்துவமான ஆய்வுப் பார்வையால் தமிழர் வரலாற்றுக்குப் பெரும்பங்காற்றிய தொ.ப. ஒரு தலைசிறந்த போராளியும் ஆவார். கல்லூரி ஆசிரியர் சங்கப் போராட்டங்கள் சிலவற்றில் தனி ஆளாய் நின்றுகூடப் போராடி வென்றவர்.
ஆரியப் பார்ப்பனிய இந்துத்துவக் கேடுகளை வரலாற்றோடு விளக்கி தமிழ்ப் பண்பாட்டுக்கும், திராவிட தமிழ்த்தேச அரசியலுக்கும் புது வெளிச்சம் பாய்ச்சியவர்.
மார்க்சியப் பெரியாரிப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் பெரியார் பிறந்த நாள் விழாப் பயணங்களில் நெல்லை - தூத்துக்குடி மாவட்டப் பயணங்கள் சிலவற்றுக்குத் துணைசெய்து தோழர் வே.ஆனைமுத்துவோடு நேரில் அளவளாவியர்.
2010, சனவரி 22-24 நாள்களில், பாளையங்கோட்டை தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டு மையத்தில், பெரியார் ஈ.வெ.ரா - நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளையும் செம் மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனமும் இணைந்து நடத்திய ‘தமிழ்நாட்டுத் தெல்லியல் ஆய்வுகள் : ஆதிச்ச நல்லுர் சிறப்பும் எதிர்கால திட்டமும்’ எனும் கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றியதோடு, அக் கருத்தரங்கம் செம்மையாக நடைபெற தம் ஆய்வு மாணவர்களோடு எல்லா வகையிலும் துணைசெய்தவர்.
திராவிட இயக்கச் சிந்தனையாளர்களின் பேரெழுச்சியை வரலாற்றில் பதித்த நிகழ்வாய் அமைந்த 23.12.2018 திருச்சி கருஞ்சட்டைப் பேரணி - பொதுக்கூட்டத்தில், ஆட்கொல்லி நோயான நீரிழிவு நோய்க்கு ஆட்பட்டு, கால் நீக்கப்பட்டு நடக்கமுடியாத நிலையிலும் சக்கரநாற்காலியில் அமர்ந்த படியே வந்திருந்து முழங்கிய கொள்கை மறவர்.
பெரியாரின் பெருந்தொண்டரான அறிஞர் தொ.ப பெரியார் தம் சிந்தனையை நிறுத்திக் கொண்ட அதே நாளில், 24.12.2020-இல், தம் 70ஆம் அகவையில் தாமும் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார்.
நம்மை எல்லாம் அவர் காட்டிய வழியில் சிந்திக்கச் சொல்லிவிட்டுத் தம் சிந்தனையை நிறுத்திக் கொண்டு மீளாத் துயிலில் ஆழ்ந்துவிட்ட முதுபெரும் தமிழறிஞர் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள் புகழ் ஓங்குக!
- முனைவர் முத்தமிழ்