திரைப்பட இயக்குநராக மட்டுமல்லாமல், ஒரு பண்பாட்டு இயக்கமாகத் தமிழ்த் திரையுலகில் திகழ்ந்தவர் பாரதிராஜா. அவருடைய மறைவு ஒரு தனி மனிதனின் மறைவு அல்ல; தமிழர் வாழ்வியலைத் தனது திரைப்படைப்புகளின் மூலம் உலகிற்கு எடுத்துச் சொன்ன ஒரு சகாப்தத்தின் நிறைவு.

bharathiraja 375அவரது திரைப்படங்களில் கிராமங்கள் வெறும் பின்னணியாக இல்லாமல் உயிருள்ள கதாபாத்திரங்களாகவே உலா வந்தன. வயல்வெளிகள், கிணறுகள், மண் பாதைகள், மழையில் நனைந்த நிலங்கள், திருவிழாக்கள், நாட்டுப்புறப் பாடல்கள், மக்களின் அன்றாட வாழ்க்கை - இவை அனைத்தும் அவரது படைப்புகளில் இயல்பாக இடம்பிடித்தன. அவர் காட்சிப்படுத்திய கிராமம் ஒரு கற்பனை உலகமாக இல்லாமல் அது தமிழ்நாட்டின் உண்மையான முகமாக இருந்தது. அதுவே அவருடைய தனித்துவமாக மிளிர்ந்தது.

பாரதிராஜாவிற்கு முன்பாக தமிழ்த் திரைப்படங்களில் கிராமம் பெரும்பாலும் இயற்கை அழகு, மரபு, நல்லிணக்கம் ஆகியவற்றின் குறியீடாகச் சித்தரிக்கப்பட்டது. ஆனால் பாரதிராஜா கிராமத்தை அதன் முழுமையான சமூகச் சிக்கல்களுடன் பதிவு செய்தார்.

தேனி மாவட்டம், அல்லிநகரத்தில் பெரிய மாயத்தேவர் - மீனாட்சி அம்மாள் (எ) கருத்தம்மாள் தம்பதிக்கு 1941 ஜூலை 17-ல் பிறந்தார், பாரதிராஜா. இயற்பெயர் சின்னசாமி.

பள்ளிப் பருவத்திலேயே நடிப்பு ஆர்வம். நாடகங்கள் பார்த்து பார்த்து வளர்ந்தவர், ஒரு கட்டத்தில் நாடகங்களுக்குக் கதை எழுதி, அரங்கேற்றவும் ஆரம்பித்தார். இடையே சுகாதார ஆய்வாளராக வேலை கிடைத்தது. ஊர் ஊராகச் சென்று மக்களிடம் நோய் பற்றி விசாரித்து ரிப்போர்ட் செய்கிற வேலை... வேலையும், நாடகமுமாக வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்த சமயத்தில் பண்ணைபுரத்தில் இளையராஜா சகோதரர்களோடு நட்பு ஏற்பட்டது. அப்போது அண்ணன் பாவலர் வரதராஜனோடு சென்று கம்யூனிஸ்ட் மேடைகளில் இசை வாசித்துக் கொண்டிருந்த இளையராஜா சகோதரர்கள், பாரதிராஜாவின் நாடகத்துக்கும் இசை வாசிக்க வாய்த்தது.

பாரதிராஜா இயக்கிய 'ஊர் சிரிக்கிறது', 'சும்மா ஒரு கதை' போன்ற நாடகங்கள் புதுமையாக இருந்தன. இவர்களின் நாடக ஆர்வத்தைப் பார்த்த கம்யூனிஸ்ட் தலைவர் என்.சங்கரய்யாவின் அண்ணன் மகன் ஆர்.செல்வராஜ், இவர்களுடன் நட்பு கொண்டார். சினிமாவுக்குச் சென்றால் பெரிய அளவில் புகழ் பெறலாம் என்று கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.

இந்தப் பின்னணியில், சென்னைக்கு வந்து சேர்ந்த பாரதிராஜா பலவிதப் போராட்டங்களுக்குப் பிறகு இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷால் கன்னட இயக்குநர் புட்டண்ணா கனகலிடம் உதவியாளராகச் சேர்த்துவிடப்பட்டார்.

அவரிடம் 'இருளும் ஒளியும்' படத்தில் உதவி இயக்குநராகப் பணி புரிந்த பாரதிராஜா, அடுத்து கே.ஆர்.ஜி. தயாரிப்பில் கிருஷ்ணன் நாயர் இயக்கிய 'தலைப்பிரசவம்' படத்தில் உதவி இயக்குராகப் பணிபுரிந்தார். அடுத்து அதே கே.ஆர்.ஜி. தயாரிப்பில் ஏ.ஜெகநாதன் இயக்கிய 'அதிர்ஷ்டம் அழைக்கிறது' படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். பாரதிராஜாவின் திறமையை உணர்ந்த கே.ஆர்.ஜி. அவருக்கு முதல் படம் இயக்கும் வாய்ப்பை வழங்கினார்.

பாரதிராஜாவிற்கு முன்பே சென்னைக்கு வந்து இயக்குநர் மல்லியம் ராஜகோபால், கதாசிரியர்கள் பாலமுருகன், பஞ்சு அருணாசலம் போன்றோரிடம் உதவியாளராகப் பணிபுரிந்து ‘எங்கம்மா சபதம்’ என்கிற படத்திற்கு கதை எழுதி முத்திரை பதித்திருந்த ஆர்.செல்வராஜ், பாரதிராஜாவின் முதல் படத்திற்குக் கதை - வசனம் எழுதினார். முத்துராமன், ஜெயலலிதா நாயகன் - கதாநாயகியாக முடிவு செய்யப்பட்டனர்.

ஜெயலலிதாவிடம் ஒரு மணி நேரம் கதை சொல்லி கால்ஷீட்டும் வாங்கப்பட்டுவிட்ட நிலையில் சில காரணங்களால் அந்தப் படம் ஆரம்பிக்கப்படாமலே நின்று போனது. ‘சொந்த வீடு’ என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்தப்படம் தான் பல ஆண்டுகள் கழித்து 'புதுமைப் பெண்’ என்கிற பெயரில் ஏவி.எம். தயாரித்து வெளியிட்டது. ஜெயலலிதா நடிக்கவிருந்த 'புதுமைப் பெண்' பாத்திரத்தில் ரேவதி நடித்தார்.

முதலில் ஆரம்பிப்பதாக இருந்த படம் நின்று போன பிறகு கே.ஆர்.ஜி.யின் அலுவலகத்துக்கு அப்போது பைனான்சியராக வந்து போய்க்கொண்டிருந்த எஸ்.ஏ.ராஜ்கண்ணுவிடம் ஒருநாள் ‘மயிலு’ என்கிற கதையை பாரதிராஜா சொல்ல, அது '16 வயதினிலே' என்ற பெயரில் பாரதிராஜாவின் முதல் படமாக சிறிய அளவிலான ஒரு ஆர்ட் பிலிமுக்கே உண்டான தன்மையோடு தொடங்கப்பட்டது.

ஆனால், 1977ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி வெளியான ‘16 வயதினிலே’ திரைப்படம், தமிழ்ச் சினிமாவில் அதுவரை இல்லாத அளவிற்கு ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியது. ஒரு சராசரி திரைப்படத்தின் வெற்றியைத் தாண்டிய புரட்சியாக அது பேசப்பட்டது, எழுதப்பட்டது, பாராட்டப்பட்டது, கொண்டாடப்பட்டது.

பெரும்பாலான திரைப்படங்கள் செயற்கையான அரங்குகளிலும் நகர்ப்புறச் சூழல்களிலும் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டம் அது… அந்தச் சூழலில் பாரதிராஜா கிராமத்தை நேரடியாக திரைக்கு அழைத்து வந்திருந்தார்.

படத்தில் காணப்பட்ட மயில், சப்பாணி, பரட்டை போன்ற கதாபாத்திரங்கள் நிஜ வாழ்க்கையில் நாம் காணும் மனிதர்களைப் போலத் தோன்றின. அவர்களின் மொழி, உடை, நடத்தை, ஆசைகள், ஏமாற்றங்கள் அனைத்தும் உண்மையாக இருந்தன. ரசிகர்கள் முதன்முறையாக தங்களைத் தாங்களே திரையில் கண்ட புதிய அனுபவத்தைப் பெற்றனர்.

வருடக்கணக்கில் வீதிகள், விசேஷ வீடுகள், திருவிழாக்கள், டீக்கடை, தையல்கடை என திரும்பிய இடங்களிலெல்லாம் மயிலு, சப்பாணி, பரட்டை, குருவம்மா என்கிற பெயர்களும் அவர்கள் பேசுகின்ற வசனங்களும் ஒலித்துக் கொண்டே இருந்தன. காடு - மேடுகளிலெல்லாம் எதிரொலித்துக் கொண்டிருந்தன. ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் ஏற்கெனவே அறிமுகமாகி பட்டி தொட்டியெங்கும் கோலோச்சிக் கொண்டிருந்த இளையராஜாவின் இசையும் பாடல்களும் இந்தப்படத்தின் சிறப்புக்குச் சிறப்புச் சேர்த்தன.

மக்கள் கொண்டாடும் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்து, வசூலில் மிகப் பெரிய சாதனை படைத்தது. முதல் படத்திலேயே சிறந்த இயக்குநருக்கான தமிழக அரசின் விருது பெற்றார், பாரதிராஜா. தமிழ்ச் சினிமா வரலாற்றில் '16 வயதினிலே’ சாதனை படைத்த திரைப்படமாக மட்டுமல்ல, ஒரு கலாசார மாற்றத்தின் தொடக்கமாக இன்றளவும் நினைவுகூரப்படுகிறது.

தொட்டதெல்லாம் வெற்றி என்பது போல, அடுத்தடுத்து வெளிவந்த அவரது 5 படங்களும் ஒன்றையொன்று விஞ்சும் வண்ணம் தொடர்ந்து வெற்றி பெற்றன.

பாரதிராஜாவின் திரைப்படங்களில் காதல் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றது. கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை, கடலோரக் கவிதைகள் போன்ற திரைப்படங்கள் காதலின் ஆழத்தை உணர்த்தியவை. அவரது காதல் கதைகளில் மகிழ்ச்சியும் இருந்தது; கண்ணீரும் இருந்தது; சமூகத் தடைகளும் இருந்தன; தியாகங்களும் இருந்தன. அவரது கதாபாத்திரங்கள் காதலித்த விதம் மக்களின் இதயங்களைத் தொட்டது. பல தலைமுறைகள் கடந்த பிறகும் அவரது காதல் திரைப்படங்கள் இன்றும் பேசப்படுவதற்கான காரணம் அதுதான்.

அதேசமயம், பாரதிராஜா வெறும் பொழுதுபோக்குத் திரைப்படங்களை மட்டுமே உருவாக்கியவர் அல்லர். சமூகத்தின் மீது ஆழ்ந்த அக்கறை கொண்ட படைப்பாளியாகவும் விளங்கினார். அவர் தன்னை ஓர் அரசியல் கோட்பாட்டாளராக முன்வைக்கவில்லை; ஆனாலும், அவரது திரைப்படங்கள் எழுப்பிய கேள்விகள், அவர் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்கள், அவர் காட்டிய சமூக முரண்பாடுகள் ஆகியவை முற்போக்குச் சிந்தனையை வெளிப்படுத்தின. சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான குரலாகவும், பெண்களின் உரிமை, மரியாதை மற்றும் வாழ்வியல் சிக்கல்களை மையப்படுத்தும் விதமாகவும் - கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம், வறுமை மற்றும் மனித உறவுகளின் யதார்த்தத்தை முன்னிறுத்தியும் - மூடநம்பிக்கை, அதிகார வன்முறை, சமூக அநீதி போன்றவற்றை விமர்சித்தும் - சமத்துவம், சமூக மாற்றம், மனிதநேயம் ஆகியவற்றை வலியுறுத்தியும் அவரது பல படைப்புகள் வெளிவந்துள்ளன.

இது ஒரு முக்கியமான அரசியல் பார்வை. சமூகத்தின் கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கையைக் கலைக்குரிய பொருளாக உயர்த்துவது என்பது முற்போக்குக் கலை மரபின் அடிப்படை அம்சங்களில் ஒன்றாகும்.

‘வேதம் புதிது’ திரைப்படம் சாதி அமைப்பின் கொடுமைகளை கேள்விக்குட்படுத்தியது. ‘கருத்தம்மா’ பெண் சிசுக் கொலையின் கொடூரத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து பொதுவெளியில் தீவிரமாக விவாதிக்க வைத்து, தமிழ்ச் சமூகத்தின் மனச்சாட்சியை உலுக்கியது.‘முதல் மரியாதை’ ‘அந்திமந்தாரை’ போன்ற படங்கள் உறவுகளின் கண்ணியத்தையும், உணர்வுகளின் ஆழத்தையும் பேசும் படைப்புகளாக அமைந்திருந்தன. ‘புதுமைப்பெண்’ குடும்ப உறவுகளுக்குள் நிலவும் பெண்ணடிமைத்தனத்தைச் சுட்டிக்காட்டி பெண் சுதந்திரம் மற்றும் பெண்களுக்கு இருக்க வேண்டிய சுயமரியாதை உணர்ச்சியை உயர்த்திப் பிடிக்கும் படைப்பாக மிளிர்ந்தது.

பாரதிராஜாவின் மிகப் பெரிய பங்களிப்பு என்னவென்றால், அவர் கலைக்கும் மக்களுக்கும் இடையிலான தூரத்தைக் குறைத்தார். அவரது திரைப்படங்களைப் புரிந்துகொள்ள பெரிய அறிவியல் தேவைப்படவில்லை. ஒரு சாதாரண கிராமத்துப் பார்வையாளருக்கும் அவரது திரைப்படங்கள் பேசின. அதே நேரத்தில் சமூக அறிவியலாளர்களுக்கும் ஆய்வுக்குரிய பல நுட்பங்களை வழங்கின.

பாரதிராஜா என்றால் கிராமியம், புதுமை, அழகியல் என்று மக்கள் எண்ணித் திளைத்த காலகட்டம் அது.

சிறுவனாக இருந்த போது சக நண்பனுடன் 'மண்வாசனை' படம் பார்க்கச் சென்று, படம் முடிந்து தியேட்டரை விட்டு எல்லோரும் வெளியேறிச் சென்றுவிட்ட பின்பும் நான் மட்டும் திரையை விட்டு கண்களை அகற்றாமல் இமைக்காமல் அந்தக் கிராமத்தையும் கிராமத்து மக்களையும் விட்டுப் பிரிந்து வர மனம் இல்லாமல் தனியே நின்றிருந்தேன். கூட்டத்தோடு வெளியேறிச் சென்றிருந்த நண்பன் என்னைக் காணாமல் திரும்பி வந்து அசைவற்று நிற்கும் என்னை உலுக்கி அழைத்துச் சென்றது இன்னும் நினைவிலிருக்கிறது.

தமிழ்த் திரைப்பட வரலாற்றில் மிகவும் தாக்கம் செலுத்திய படைப்புக் கூட்டணிகளில் ஒன்று பாரதிராஜா – இளையராஜா – ஆர். செல்வராஜ் – வைரமுத்து கூட்டணியாகும். இவர்கள் இணைந்தபோது கிராமிய வாழ்வியல், காதல், இயற்கை, மனித உறவுகள், சமூக உணர்வுகள் புதிய கலைமொழியுடன் திரையில் வெளிப்பட்டன. திரைப்படம் வெறும் பொழுதுபோக்கு அம்சமாக இல்லாமல், தமிழ் மண்ணின் பண்பாடு, மொழி, உணர்வு ஆகியவற்றின் கலை ஆவணமாக மாறியது என்று சொல்லலாம்.

பாரதிராஜாவின் திரைப்படங்களில் மற்றுமொரு மிக முக்கியச் சிறப்பு, வட்டார மொழி. கதாபாத்திரங்கள் இயல்பான வட்டாரத் தமிழில் பேசினர். இதனால் மொழியின் உண்மைத்தன்மை பாதுகாக்கப்பட்டது. வட்டார மொழி பேசுவோருக்கு சமூக அங்கீகாரம் கிடைத்தது. தமிழ் மொழியின் பல்வேறு பேச்சுவழக்குகள் திரைப்படங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படத் தொடங்கின.

தமிழ்த் திரையுலகின் வளர்ச்சிப் பயணத்தில், காலத்தை உருவாக்கியவர்களாக சில இயக்குநர்கள் திகழ்வதுண்டு. அந்த வரிசையில், 'பாரதிராஜாவிற்கு முன் – பாரதிராஜாவிற்குப் பின்' என்று தமிழ்ச் சினிமாவின் பரிணாமத்தைப் பகுத்துப் பேசும் அளவுக்கு சினிமாவின் காட்சிமொழியையும் கதையாடலையும் மாற்றியவராக பாரதிராஜா அறியப்படுகிறார். ஒரு மரம், ஒரு மழைத்துளி, ஒரு வெறிச்சோடிய பாதை போன்ற எளிய காட்சிகளைக் கூட குறியீடாகப் பயன்படுத்திய ரசனை அவருடையது.

பாரதிராஜாவின் படைப்புகளை உலகத் திரைப்படங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அவர் யாரையும் அப்படியே பின்பற்றியவர் அல்லர் என்பது முதலில் புரிகிறது. ஆனால் உலகத் திரைப்பட மேதைகள் உருவாக்கிய சில அழகியல், யதார்த்தவாத, மனிதநேய மரபுகளை தமிழின் மண், மொழி, பண்பாடு, சாதி, பாலின உறவுகள், கிராம வாழ்க்கை ஆகியவற்றோடு இணைத்து தனக்கே உரிய திரைப்பட மொழியை உருவாக்கியவர்.

உலக அளவில் முத்திரை பதிக்கப்பட்ட இயக்குநர்களாக அறியப்பட்ட விட்டோரியோ டி சிகாவின் படைப்புகளில் காணப்பட்ட யதார்த்தம், சத்யஜித் ரேவின் படைப்புகளில் மிளிர்ந்த மனிதநேயம், அகிரா குரோசாவாவின் காட்சிப்படைப்பு, அந்த்ரெய் தார்கோவ்ஸ்கியின் கவித்துவம் ஆகியவற்றுக்கு இணையான கலைநுணுக்கங்களை, தமிழின் மண், மொழி, இசை, நாட்டுப்புற உணர்வு மற்றும் சமூகச் சிக்கல்களுடன் கலந்துவைத்து முற்றிலும் புதிய திரைப்பட மொழியை உருவாக்கியவர் என்று பாரதிராஜாவைச் சொல்லலாம்.

ஒரு கலைஞனின் மகத்துவம் அவன் உருவாக்குகிற படைப்புகளில் மட்டுமல்ல; அவனால் உருவாக்கப்படுகிற மனிதர்களைப் பொருத்தும் அமைகிறது. இளம் திறமைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாய்ப்பளிப்பதில் அவர் தயங்கியதில்லை.

தமிழ்த் திரையுலகில் எண்ணற்ற நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பாரதிராஜாவின் மூலம் அறிமுகமானார்கள்; புதிய அடையாளம் பெற்றார்கள். அந்தப் பட்டியல் நீண்ட நெடியது. பலருக்கு அவர் இயக்குநராக மட்டுமல்ல, ஆசானாக மனதிலிறுத்திப் போற்றப்படுகிறவராகவும் இருக்கிறார். திரைத்துறையைச் சார்ந்தவன் என்கிற முறையில் எனக்குத் தெரிய தமிழ்த் திரையுலகில் அவருக்கு முன்னும் பின்னுமாக எத்தனையோ மிகப்பெரிய - மிகச்சிறந்த - மிகப் பிரபலமான இயக்குநர்கள் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். ஆனால், இயக்குனர்கள் எல்லோரும் பாரபட்சமின்றி ஒருவரை பெயர் சொல்லாமல் ‘இயக்குநர்’ என்று அடையாளப்படுத்தி உச்சரிப்பது பாரதிராஜாவை மட்டுமே. இயக்குநர்களுக்கான அடையாளமாக அவர் மட்டுமே உச்சரிக்கப்பட்டார்.

அவரது குரல் மிகவும் தனித்துவமானது. திரைப்படத்தின் துவக்கத்தில் அவரது கரங்கள் கும்பிட்டபடி உயர உயர, “என் இனிய தமிழ் மக்களே…” என்று ஒலிக்கும் அந்தக் கம்பீரக் குரலுக்குக் தியேட்டரில் எழும் கரகோஷம் முன்னெப்போதும் காணாத அதிசய அனுபவம். மொத்தம் தமிழ், தெலுங்கு, இந்தி என 46 படங்களை இயக்கியுள்ளார்.

'கல்லுக்குள் ஈரம்' படத்தில் அவரே கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பலவிதமான பாத்திரங்களை ஏற்று 25-க்கும் மேற்பட்ட படங்களில் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் திகழ்ந்தார். இவர் இயக்கிய ‘தெக்கத்தி பொண்ணு’ என்கிற தொலைக்காட்சித் தொடரும் மிகுந்த கவனத்தைப் பெற்றது.

6 தேசியத் திரைப்பட விருதுகள், 4 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், 6 தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதுகள், ஒரு நந்தி விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வென்றவர்.

திரைப்படத்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, 2004-ஆம் ஆண்டில், இந்திய அரசு இவருக்கு இந்தியாவின் நான்காவது உயரிய விருதான 'பத்மஸ்ரீ ' விருதை வழங்கிக் கௌரவித்தது. 2005-ஆம் ஆண்டில், சத்யபாமா பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

தமிழ் மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் பிரச்சினை வந்த போதெல்லாம் ஒரு கலைஞனாக இருந்து தமிழ்த் திரைப்பட அமைப்புகளின் சார்பிலும், தனிப்பட்ட முறையிலும் அவர் குரல் உயர்த்தத் தயங்கியதில்லை.

பாரதிராஜா புத்தக வாசிப்புக்கு வசப்பட்டவர். 'வாசிப்புதான் கற்பனைக்கு வேராகிறது; காட்சிகளுக்கு உயிரூட்டுகிறது. நல்ல இலக்கியங்களைப் படித்தால்தான் நல்ல கதைகள் உருவாகும். புத்தகம் படிக்காத இயக்குநரால் மனிதர்களின் வாழ்க்கையை ஆழமாகப் புரிந்துகொள்ள முடியாது' என்று புத்தகங்களின் மீது தான் கொண்டிருந்த நம்பிக்கையைப் பல நேர்காணல்களிலும் நேரடி உரையாடல்களின் போதும் தெரிவித்திருக்கிறார்.

த.ஸ்டாலின் குணசேகரன் தலைமையில் இயங்கும் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஆண்டுதோறும் பிரம்மாண்டமாக நடத்தப்படும் ஈரோடு புத்தகத் திருவிழாவில் 2011 ஆம் ஆண்டு நிறைவுவிழா நிகழ்ச்சிக்கு சிறப்புரையாற்ற பாரதிராஜா அழைக்கப்பட்டார். அந்த நிகழ்ச்சியில் அவரே ஒரு திறந்த புத்தகமாக இருந்து தனது வாழ்க்கை அனுபவங்களையும் புத்தகம், வாசிப்பு சார்ந்த கருத்துகளையும் தனக்கே உரிய பாணியில் சுவைபடப் பேசி உரை நிகழ்த்தினார்.

கதை, நடிப்பு, நாடகம், திரைப்பட இயக்கம், தயாரிப்பு, திரைப்பட இயக்குநர் சங்கப் பொறுப்பு, மேடைப் பேச்சு, சமூகச் செயல்பாடு என பல தளங்களில் செவ்வனே கடமையாற்றிய பெருமைக்குரிய பாரதிராஜா என்கிற கலைமகன் இன்று நம்மிடையே இல்லை. ஆனால் அவர் உருவாக்கிய உலகம் இன்னும் உயிரோடு இருக்கிறது. வயல்வெளிகளில் வீசும் தென்றலிலும், கிராமத்துக் காதலின் நெகிழ்ச்சியிலும், மண்ணின் மணத்தோடு கலந்த மனித உணர்வுகளிலும் அவர் இன்னும் வாழ்கிறார்; என்றும் வாழ்வார்.

- ந.அன்பரசு

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.