சோலை சுந்தரபெருமாள் புதினங்களை முன்வைத்து...

வர்ணக் கோட்பாடுகள்

இந்திய சமூகத்தில் வைதீகக் கருத்துகளின் விளைவாக வருணாசிரம முறை தோன்றியது. மனுதரும சாத்திரத்தின் எழுச்சியினால் வருணாசிரமம் வலுவடைந்தது. அதற்குத் தகுந்தாற்போல் சாதி அமைப்பை உருவாக்கியது. இதன் அடிப்படையில் நால் வருண முறை சாதிய அடுக்கிற்குள் புகுத்தப்பட்டது. பார்ப்பனர்கள் அனைத்தையும் தீர்மானிப்பவர்களாகக் கருதப்பட்டனர். ஏனைய வருணத்தார் பார்ப்பனர்களின் கீழ் ஊழியம் செய்து வாழ்பவர்களாகப் படிநிலைப் படுத்தப்பட்டனர். தொழில் அடிப்படையில் உருவான பெயர்கள் பிறப்போடு இணைக்கப்பட்டு சாதி எனும் கருத்தியலுக்கு உறுதித் தன்மை அளிக்கப்பட்டது. தமிழ் சமூகத்தில் தொன்மையான இலக்கியங்கள் மக்களைத் தொழில் அடிப்படையில் அடையாளப்படுத்தின.

Solai sundaraperumalபார்ப்பனக் கருத்தியலின் ஊடுருவலுக்குப் பின்னர் சாதிய வர்ணக் கோட்பாடுகள் தமிழ் மண்ணில் ஊடுருவத் தொடங்கின. இச்சூழல் பல்லவர், சோழர் காலகட்டங்களில் வகைப்படுத்தப்பட்டது. நாயக்கர் ஆட்சி காலத்தில் இறுக்கம் அடைந்தது. அதாவது தமிழ் மண்ணில் உழைப்பாளி பாட்டாளி வர்க்கம் என்னும் அணிதிரட்டலுக்கு மாறாக,சாதியம் சார்ந்த அடையாள ஒருங்கிணைப்பு முன்வைக்கப்பட்டது. காலனியக் காலத்தில் ஆங்கிலேய ஆட்சியாளர்களும் சாதி அடிப்படையிலான பிரதிநிதித்துவ வளர்ச்சியை ஊக்குவித்தனர். இதன் விளைவாக, தமிழ் இலக்கியத்தில் ஐரோப்பிய இலக்கியங்கள் போன்ற (நாவல், சிறுகதை) நவீன இலக்கியப் போக்குகள் வளர்ச்சி அடைந்தன. தமிழ் இலக்கியப் பரப்பில் அறிமுகமான மேலைச் சிந்தனைகளின் தாக்கத்தினால் மார்க்சியம், பெண்ணியம், தலித்தியம் போன்ற கோட்பாடுகள் செல்வாக்கு செலுத்தின. இடதுசாரி சிந்தனைகளை உள்வாங்கி பலர் தமிழ்ப் படைப்புலகில் இயங்கினர். அவ்வகையில் சோலை சுந்தரபெருமாள் குறிப்பிடத்தக்க படைப்பாளியாவார். பழைய தஞ்சை வட்டாரத்தில் ஆதிக்கச் சாதியினரால் தலித் மக்கள் எதிர்கொண்ட அவலங்கள், அவற்றிற்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி ஆகியவற்றை தமது புதினங்களில் ஆவணப்படுத்தியுள்ளார்.

சாதி

சங்க இலக்கியங்களில் சில சாதியினர் ‘இழிசினர்’ என்று வகைப்படுத்தப்படுகின்றனர். ஊசியில் வாரைக் கோத்துக் கட்டில் பிணிக்கும் புலைமகன், துடியை அறைந்து செய்தியை அறிவிக்கும் துடியன், சுடுகாட்டில் பிணங்களை விலங்குகளுக்கு இரையாகத் தூக்கி எறியும் வெட்டியான், பாசறைக்கண் தண்ணுமை என்னும் போர்ப்பறையை அறைபவன் ஆகியோர் ‘இழிசினர்’ என்றும் ‘இழி பிறப்பாளன்’ என்றும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

‘துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று

இந்நான் கல்லது குடியுமில்லை” (புறநானூறு, பா.எண் - 35, வரி - 7, ப. 510);

என்று மாங்குடிக்கிழார் நான்கு வகைக் குடிகளைப் பற்றிப் பாடியுள்ளார். தொழிலின் அடிப்படையில் உருவான இந்தச் சாதியப் பாகுபாடு, பின் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளினால் இந்திய தமிழ்ச் சமூகத்தில் ஆழ வேரூன்றி கிளை பரப்பியுள்ளது. முன்னர் இவை ஒழுங்கான வடிவத்துடன் அவரவருக்குரிய பணிகளைச் செய்வதற்காகப் பிரிக்கப்பட்டாலும், சமுதாயத்தின் வளர்ச்சிக்கேற்ப அதனுள்ளே ஆழமான பிரிவினைகள், வேற்றுமைகள், ஏற்றத்தாழ்வுகள் ஆகியவை இயல்பாக ஏற்பட்டுவிட்டன.

“கிரீடம் செய்கிறவன் மதிப்புடையவனாகவும் காலணி செய்பவன் அவமதிப்புடையவனாகவும் காணப்படுகிறான். நாய்கள் கூட தெருக்களில் நுழையலாம். தீண்டத் தகாதவர்கள் தெருக்களில் கூட நடமாட முடிவதில்லை. கடும் வெயிலில் செருப்பணிந்து செல்வதும் தடை செய்யப்பட்டது. தாங்கள் உயர்ந்த சாதியினர் என்று சொல்லிக் கொள்பவர்களைக் கண்டால் தோளின் துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு கூனிக்குறுகி நடக்க வேண்டும் என்ற எழுதப்படாத சட்டங்கள் இருந்த நிலை. சாதிகள் வளர்வதற்கு சமய நம்பிக்கைகளும் யாகம் வளர்த்தன.” (க.மோகன், பொன்னான அடிகளார், ப.30)

தமிழ் இலக்கியத்தில் நவயுகத்தின் தேவைகளுக்கு முதல் குரல் கொடுத்தவர் பாரதியார்.

“ஏழை என்றும் அடிமை என்றும்

எவரும் இல்லை ஜாதியில்

இழிவு கொண்ட மனிதரென்பர்

இந்தியாவில் இல்லையே” (பாரதியார் கவிதைகள், விடுதலை, ப.133)

என்று இந்தியாவில் சாதியில் இழிவான அடிமைகள் இல்லா நிலையில் ஒரு சமூகம் ஏற்பட வேண்டும் எனக் கனவு கண்டார். தாழத்தப்பட்டவர்களாகக் கருதப்பட்டவர்களும் விடுதலை பெறவேண்டும் என்பதும் பாரதியின் வேட்கையாக இருந்தது. இது அவரின்

“பறையருக்கும் இங்கு தீயர்

புலையருக்கும் விடுதலை” (பாரதியார் கவிதைகள், விடுதலை, ப.168)

என்னும் வரிகளிலும் வெளிப்பட்டது. தொடர்ச்சியாக பாரதிதாசனும்,

“தாழ்ந்தவன் என்றொரு சாதி உரைப்பவன் தீயன்

அவன் தன்னுடலைப் பிறர் சொத்தில்

வளர்த்திடும் பேயன்” (பாரதிதாசன் கவிதைகள், சுயமரியாதை, ப.468)

என்று ‘சுயமரியாதை’ என்னும் கவிதையில் பாடியுள்ளார்.

அடிமை முறை

அடிமை முறை தொன்மைக் காலங்களில் இனங்களிடையே போரினால் ஏற்பட்டது. தோற்ற வீரர்கள் அடிமைகளாக்கப்பட்டார்கள். அவர்களின் பெண்களும், குழந்தைகளும் அடிமையாக்கப்பட்டனர். பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்து வருபவர்களை விளிம்புநிலை மக்கள் என்கிறோம். நிலவுடைமையாளர்களுக்குச் சாதி மற்றும் பொருளாதாரத்தின் அடிப்படையில் ஒடுக்கப்பட்டவர்களான பள்ளன், பறையன், சக்கிலியன், புதரை வண்ணான் போன்ற சாதிகளைச் சார்ந்தவர்கள் அடிமைகளாகவே கீழ்ச்சாதியினர் என்ற பெயரில் வாழ்கின்றனர்.

ஒவ்வொரு மேல்சாதியினருக்கும் ஒவ்வொரு கீழ்ச்சாதியினர் பண்ணை அடிமைகளாக உள்ளனர். சிறுவயதிலேயே, அதாவது ஏழு அல்லது எட்டு வயதிலிருந்தே பண்ணை வீட்டில் அடிமையாக மாடு கன்றுகளை மேய்க்க, வெளி வேலைகள் அனைத்தையும் செய்ய தலைமுறைகள் தோறும் ஒரே வீட்டிலிருப்பதைக் காணமுடிகிறது. கீழவெண்மணியின் கொடூரம் குறித்த செய்திகளை ஆவணப்படுத்தும் ‘செந்நெல்’ புதினத்தில் ஐம்பது காசு கூலி உயர்வு கேட்டதற்காகப் பெண்கள், குழந்தைகள் உட்பட 44 பேரை உயிரோடு வைத்து எரித்துச் சாம்பலாக்கி விட்ட உண்மைச் சம்பவத்தைக் கதையாக ஆசிரியர் வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறார்.

கல்வி கற்கத் தடை

‘பெருந்திணை’ புதினத்தில் பண்ணை அடிமைகளாக வாழ்ந்து வரும் தாழ்த்தப்பட்ட மக்கள், தங்களுடைய அடுத்த தலைமுறையாவது படித்து முன்னேறி வசதியோடிருக்க வேண்டுமென்று நினைக்கின்றனர். ஆனால் நிலவுடைமையாளர்களோ அக்குழந்தைகள் தங்களின் பண்ணைகளில்தான் வேலை செய்ய வேண்டுமென்று நிர்ப்பந்திக்கின்றனர். மீறினால் அவர்கள் மீது வீண்பழி சுமத்திக் கடும் தண்டனைக்குள்ளாக்கி விடுவதையும் காணமுடிகிறது. தந்தை பெற்ற கடனுக்கு, படித்த மகனைப் பண்ணை வேலை செய்யச் சொல்கின்றனர் பண்ணையாளர்கள். அவ்வாறு வர மறுப்பவர்களின் மேல் பொய்க்குற்றம் சுமத்தித் தண்டனை பெற வைக்கிறார்கள். “போன மாசம் அம்மாசி பேரன் நல்ல மார்க் வாங்கிக்கிட்டு காலேஜில படிக்கன்னு முரண்டு பிடிச்சத அந்தப் பண்ணைக்கிட்ட அவனோட அப்பன் சொல்ல, படிச்சிட்டு வந்ததும் வேலையா காத்துக்கிட்டு இருக்கு? பேசாம நம்ம பால் பண்ணைக்கு அவனை அனுப்பிவிடு, ஆயிரம் ரூவா சம்பளம் போட்டுத் தாரேன் என்று, அய்யருங்க சொன்னதக் கேக்காம, காலேஜிக்கு அனுபிட்டான்னு அவர் மனசிலிருந்த வஞ்சத்த தீத்துக்க பால் பண்ணையிலுள்ள பணத்தத் திருடிட்டான்னு திருட்டு வேஷம் கட்டி போலீஸ்ல கேஸ் கொடுத்து சிக்க வச்சிட்டார்.” (பெருந்திணை, பக். 9-10) இக்கூற்றிலிருந்து பண்ணையடிமைகள் கல்வி கற்று எக்காலத்திலும் முன்னேறிவிடக் கூடாது, காலத்திற்கும் தமக்கு அடிமைகளாகவே இருக்கவேண்டும் என்று கருதும் பண்ணையாளர்களின் ஆதிக்க மனப்பான்மை வெளிப்படுகின்றது.

சாதிப் பெயரைச் சொல்லி அழைத்தல்

தங்களைக் காட்டிலும் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்களை, (முதியவர்களாக இருந்தாலும்) சாதிப் பெயரைச் சொல்லி அழைக்கும் போது அவர்கள் படும் மன உளைச்சலைத் ‘தப்பாட்டம்’ புதினம் எடுத்துரைக்கின்றது. வண்ணான் இனத்தைச் சேர்ந்த வீரவாகு, மதுக்கன் பகடையிடம் தன் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார். “பெரியய்யா! நாலு எடத்தில் போவ வர இருக்கிற நீங்களே சொல்லுங்களேன். இந்த தெருவில உள்ள தலைக்கட்டுகள்ல பாதிக்கு மேல உள்ளவங்கள எம் பொண்டாட்டி பேறு பாத்து பீத்துணி கசக்கிப் போட்டு வளத்ததுங்கைய்யா. இப்பத் தலையெடுத்து வர்ற விடுத்தானுங்க கூட ஏ! வண்ணாத்தி இங்க வாடி! போடி.... தலையில அடிச்சாப்போல கூப்புட்டுக்கிட்டு இருக்கிறப்ப தாங்கிக்க முடியிலங்க…” (தப்பாட்டம், ப.112) எனும் இச்சான்றின் வழி அவர்களின் தொழிலை வைத்து மட்டந்தட்டி அவமானப்படுத்துவதை, இதன் மூலம் உணர முடிகிறது.

இழிசினர்

Solai sundaraperumal booksகி.பி 12 ஆம் நூற்றாண்டில் சேக்கிழார் இயற்றிய பெரியபுராணத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த நந்தனார் தலைமை மாந்தராக இருக்கிறார். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அவருக்கும் அவருடைய குலத்தாருக்கும் கோயிலுக்குள் நுழையும் உரிமை இல்லாததால் திருப்புன்கூரில் வெளி வாயிலிருந்தே சாமி தரிசனம் செய்ய முயற்சி செய்தனர். அப்பொழுது நந்தி விலகி நின்று சிவபெருமானைப் பார்க்க விட்டதெனக் கூறப்பட்டுள்ளது.

அதன் பிறகும் நந்தனார் உயர் குலத்தோரின் உயிர் தெய்வமாகக் கருதப்பட்ட சிதம்பர நடராசரைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆசையை வளர்த்து நாளைப் போகலாம் நாளைப் போகலாம் என ஒத்திப் போட்டுக் கொண்டேச் செல்கிறார். எப்படியாவது கோயிலுக்குள் செல்ல வேண்டுமென்று நினைத்த நந்தனாருக்குச், சிவபெருமான் அவரின் கனவில் தோன்றி அருள் பாலிக்கின்றார்.

“தப்பட்ட இப்பிறவி போய் நீங்க எரியினிடை

நீ மூழ்கி முப்புரி நூன் மார்பருடன்

முன்னணை வாய் என மொழிந்தப்பரிசே

தில்லைவாழ் அந்தணருக்கும் எரியமைக்க மெய்ப்பொருளானார்

அருளி அம்பலத்தே மேவினர்” (சேக்கிழார், பெரியபுராணம், பாடல் எண்.1068)

தாழ்த்தப்பட்ட மக்களின் பிறவியை இழி பிறவி என்று குறிப்பிட்டு, அந்த இழிபிறவியால் உடம்பு தூய்மையில்லாது போனதால் தீயினில் மூழ்கிப் புதுப் பிறவி எடுத்து வரும்படி சிவபெருமான் கூறியதாக நம்பப்படும் இக்கதை தான் இந்த நந்தனார் சரித்திரமாக விளங்குகின்றது. இக்கதையை மையமாக வைத்து எழுதப்பட்டது தான் ‘மரக்கால்’ எனும் புதினம் ஆகும். இப்புதினத்தில் நந்தன் பறையர் குலத்தில் பிறந்து சிவபெருமானின் நாமத்தை உச்சரித்து உடம்பெல்லாம் திருநீற்றுப்பட்டையைப் போட்டுக் கொண்டு நடமாடுவதை ஆதனூர் பிரம்மதேயம் அனுமதிக்கவில்லை.

நந்தனும் அவனின் கூட்டாளிகளும் சிவ நாமத்தை உச்சரிப்பதைப் பொறுக்கமாட்டாத ராமுமழவராயன் என்பவர், “நீசப் பறை புலையனுங்களா! பிரம்மதேய அதிபர்சாமி, நீசப் புலையன்களா பொறந்திருக்கும் உங்களை வைக்க வேண்டிய இடத்தில்தான் வச்சிருக்காங்கடா. நீசனுங்க இடம் மாறிப்போக நினைச்சா முடியுமாடா? செத்த மாடு தின்னு, புளிச்சக் கள்ளைக் குடிச்சி ஆண்டைகளுக்கு அடங்கி ஒடுங்கி, இழுத்த இழுப்புக்கு நின்னு வேலை பாத்து படிக்கூலி வாங்கிப் போற உங்களுக்குன்னு காத்தன், மூக்கன், பாவாடை, மாரி இருக்கேடா அதைக் கும்பிடப் போங்கடா.... அதை விட்டு விட்டு சிவ மந்திரங்களைச் சொல்லி சிவலோக நாதனை அணுகி தரிசிக்க நினைச்சா முடியுமாடா? எல்லாத்தையும் மீறி நீங்க நீறு தரிச்சி சிவ சிவான்னு சொல்ல, பிரமதேயம் விட்டுட்டு விரல சப்பிக்கிட்டு நிக்கும்னு, நீசனுங்க கனவுல கூட நினைச்சுப் பார்க்கலாமாடா...” (மரகால்,ப.53) என ஆவேசமாகக் கத்துகிறார்.

இத்தடைகள் பலவற்றையும் மீறித் தில்லை செல்கிறான் நந்தன். செல்லும் வழியில் மருதன் என்ற பறையனைச் சந்திக்கிறான். வழியில் உப்பு உமணன் ஒருவன், “தைப்பூச நாள்ல உங்க சாதிசனத்தை கேணக்கரைக்கு அனுப்பி வச்சிடுவாங்க. இந்த நேரத்தில் கீழ்ச் சாதிக்காரங்க யாரும் குறுக்க நெடுக்க தலையைக்கூட காட்டக்கூடாதுன்னு” (மரகால், ப.269) என்று தில்லையில் கீழ்ச்சாதியினரை நடத்தும் முறையைப் பற்றிக் கூறுகிறான். தில்லைவாழ் அந்தணர்கள், கீழ்சாதிக்காரர்களைக் காண்பதே தீட்டு என்று கருதினர். அவ்வாறு இருக்க, மருதன் யாருக்கும் தெரியாமல் நந்தனைக் கோவிலுக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் இறந்து போகிறான். நந்தன் உயிரோடு தீ வைத்துக் கொளுத்தப்படுகிறான்.

தீண்டாமை

‘தப்பாட்டம்’ புதினத்தில் சேரித் தெருவைச் சேர்ந்தவர்கள், ஊருக்குள் சட்டை போட்டுக்கொண்டோ, தோளில் துண்டைப் போட்டுக்கொண்டோ வரக்கூடாது என்று விதி வகுக்கப்பட்டிருந்தது. மேலும் தாழ்த்தப்பட்ட மக்கள் தெருவில் பீடியைப் பிடித்துக்கொண்டு வருவதைப் பார்த்துவிட்டால் கையில் கிடைப்பதை எடுத்து அடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். எத்தனை தலைமுறைகள் வந்தாலும் மேல்சாதியினரிடமிருந்து கீழ்ச்சாதியினருக்கு விடுதலையில்லை. இதை மதுக்கன் பகடை தன் மச்சினரோடு வரும்போது, அவருடைய மச்சினர் “பாவா! இந்த ஊருல நம்ம சாதிசனத்துக்கு மூப்பனாருகளிடமிருந்தும், அம்பலக்காரவங்களிடமிருந்தும் அடுத்த தலைமுறைக்குக்கூட விமோசனம் கெடைக்காது போலிருக்கு” (தப்பாட்டம், ப.21) என்று கூறுவதன்; மூலம் உணரமுடிகிறது. சாதிப்பெயரைச் சொல்லித் திட்டும் பழக்கத்தையும் இப்புதினத்தில் காணமுடிகிறது. “அட... பறை ஒக்காலி ஓழிகளா! பறையனுங்களுக்கும் சக்கிலியப் பயலுங்களுக்கும் பாளை வச்சி அலையுதாடா” (தப்பாட்டம், ப.194) என்று மூப்பனார் சமூகத்தைச் சார்ந்தவர் கூறுகிறார். எத்தனைப் பெரியார் வந்தாலும் சாதியை ஒழிக்க முடியாது என்பதனையே இது காட்டுகிறது.

சாவு சொல்லிப் போகவும், தப்பு அடிக்கவும் இம்மக்களைப் பயன்படுத்திக்கொள்ளும் இச்சமூகம் இவர்களின் மேல் ஒடுக்குமுறையைக் கையாளுகிறது. கூலியை உயர்த்திக்கேட்டுத் தப்பு அடிக்க மறுத்தான் குருமூர்த்தி சம்பான். அதற்காகக் கள்ளர் இனத்தைச் சேர்ந்த சிவகுருமன் கொண்டார் அவனுடைய இரு கட்டை விரல்களையும் துண்டித்து விடுகிறார். இதே போன்று இரட்டைக்குவளை முறை, முடிவெட்டும் இடத்தில் கீழ்ச்சாதியினரை உட்கார விடாமல் அவமதிப்பது, பறையர், பள்ளர்,சக்கிலியரை வெள்ளாடு வளர்க்கக் கூடாது எனக்கூறுவது போன்ற பல கொடுமைகளையும் ‘தப்பாட்டம்’ புதினம் புரையோடி சீழ்படிந்திருக்கும் இந்த சமூக அவலங்களை நிரூபிக்கிறது.

பிரித்தாளும் சூழ்ச்சி

கீழவெண்மணியின் கொடூரம் குறித்த செய்திகளைக் காட்டும் ‘செந்நெல்’ புதினத்தில், பொருளாதாரத்தில் கீழாக உள்ள மேட்டுக்குடி விவசாயக் கூலிகள், தாழ்த்தப்பட்டவர்களுடன் சேர்ந்து கூலி உயர்வுக்காகப் போராட்டம் செய்வதைப் பண்ணை முதலாளிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் சாதியின் பெயரால் அவர்களைத் தம் பக்கம் இழுக்க முயலுகின்றனர்.

நிலத்தில் ஒரே வர்க்கமாக நின்று வேலை பார்க்கிற மனிதர்கள் ஊருக்குள் வரும்போது உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்று பிளவு பட்டு நிற்கிற கொடுமை காணப்படுகிறது. “.....வேங்கடபதி நீங்கயெல்லாம் கூலிக்குப் போய் தான் ஜீவனம் வளக்கிறீங்க. அதுல என்னப்பா தப்பு. உங்கள நாங்க வேத்துக் கலப்பாவா வச்சிருக்கோம். எங்க வீட்டு அடுப்பாங்கரை வரைக்கும் வந்து பத்தாயத்தில் நெல்லு கொட்டுறது நீங்கதானே. அந்தக் கெட்ட சாதிக்காரப் பயலுங்களவா செய்ய சொல்லுறோம்? எங்க வீட்ல ஒரு நல்லதுன்னா உட்கார வைக்கிலயா? அவனுங்க கொல்லையில தின்னுட்டுதானே வாங்கிக்கிட்டுப் போறானுங்க. இப்படி இருக்கும்போது நீங்க எல்லாம் இன்னும் அந்தக் கெட்டசாதிகாரப் பயலுங்களோடப் போவப் போறோம்னு சொல்லுறது நல்லாயிருக்காப்பா?” (செந்நெல்,ப.69) என ஒரே வேலை செய்யும் விவசாயக் கூலிகள், சாதியின் பெயரால் பிரித்தாளப்பட்டுச் சூழ்ச்சிக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

பெண்கள் மீதான ஒடுக்குமுறை

தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த பெண்களை மேல்சாதியினர் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்குகின்றனர். தொட்டால் தீட்டு, மூச்சுக்காற்று பட்டாலே குற்றம் என்று கூறும் மேல் சாதியினர் ஏனோ உடலுறவில் மட்டும் சாதிகள் பார்ப்பதில்லை. நிலவுடைமைச் சமுதாயத்தில் ஒரு பெண்ணுடைய முதலிரவு, அவளுடைய கணவனுடன் நடைபெறாது. பண்ணையாருடன் தான் அப்பெண்ணுக்கு முதலிரவு நடக்கும். இதை அவர்கள் எதிர்க்கவோ மறுக்கவோ முடியாது. ‘தப்பாட்டம்’ புதினத்தில் முனியாண்டி சம்பானின் தங்கை மகள் வெள்ளைக்குத் திருமணமாக மூன்றே நாட்கள் இருந்த நிலையில் காட்டிற்குச் சாப்பாடு கொண்டு போனவளைத் தங்கசாமி மூப்பனாரின் மகன் பாலியல் கொடுமை செய்து கொன்றுவிடுகிறான். சில நேரங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் திருட்டுப்பட்டம் கட்டித் தண்டனைக் கொடுப்பதையும் இவருடைய புதினங்களில் காணமுடிகின்றது.

thappaattamதன் கணவன் தீய வழியில் சென்று பிற பெண்களிடம் தொடர்பு வைத்திருந்தாலும் அதனையும் ஏற்றுக்கொண்டு ஊமைக் கண்ணகியாக வலம் வரக்கூடிய பெண்ணை இவருடைய 'நஞ்சை மனிதர்கள்' புதினத்தில் காணமுடிகிறது. ஒரு ஆண் பல பெண்களை மணமுடிப்பதும் பல பெண்களுடன் தொடர்பு கொள்வதும் பெருமைக்குரியச் செயலாக கருதப்படுவதை இவருடைய 'நஞ்சை மனிதர்கள்', 'தப்பாட்டம்' புதினங்களின் வழி அறியமுடிகிறது.

திருமணத்திற்குப் பின் கணவனை இழந்த பெண்களின் நிலை மேலும் பரிதாபத்திற்கு உரியதாக அமைகிறது. அவர்களை உயிருள்ள பிறவிகளாகக் கருதுவதற்கேச் சமூகம் இசைவாக இல்லை என்பதும் ஆண்களின் ஏளனப் பொருளாக அவர்கள் நடமாட வேண்டியுள்ளது என்பதும் புலனாகின்றது.

சமூக விழிப்புணர்வு

இன்றைய தலித் இலக்கியங்களில் அம்மக்கள் பெற்றுவரும் மாற்றத்தைக் காணமுடிகிறது. அவர்களின் விழிப்புணர்வை 17 ஆம் நூற்றாண்டில் எழுந்த ‘முக்கூடற் பள்ளு’ என்ற படைப்பு வெளிக்காட்டுகிறது. அது தீண்டாமை எதிர்ப்பு இலக்கியமாக, அந்த மக்களின் வாழ்வை மையமாகக் கொண்டதாக, அவர்களையே முக்கியப் பாத்திரங்களாக மையப்படுத்திய முற்போக்கு இலக்கியமாகும்.

தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்டோர் இலக்கியத்தின் கூறுகள் ஆரம்பகால திராவிட இயக்கப் பிரசுரங்கள் சொற்பொழிவுகளில் இடம்பெற்றன. இப்பொழுது புத்துருவம் பெற்றுப் புதினங்களாகவும் சிறுகதைகளாகவும், நாட்டுபுறப்பாடல்களாகவும், புதுக்கவிதைகளாகவும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. செருப்புப் போட்டாலோ, சட்டைப்போட்டுக் கொண்டுவந்தாலோ, துண்டு அணிந்து வந்தாலோ, சைக்கிளில் ஏறி ஓட்டிக்கொண்டு வந்தாலோ, பீடி பற்ற வைத்துத் தெருவில் குடித்துக் கொண்டு வந்தாலோ, பெரிய குற்றமான செயல் என்று தண்டனைக் கொடுக்கும் காலம் மாறிவிட்டது. பண்ணை அடிமையாக வேலை செய்பவனின் குழந்தைகள் பண்ணை அடிமையாகவே தலைமுறைக்கும் வரவேண்டியதில்லை. பல சமூகக் கொடுமைகளிலிருந்து மக்கள் விடுதலைப் பெற்று வசதியாக வாழ வேண்டுமெனில் கல்வி கற்று, உயர்ப் பதவிகளை அடைந்து பொருளாதார மேம்பாடு அடைய வேண்டும் என்பதனைப் ‘பெருந்திணை’ என்ற புதினத்தில் ஆறுமுகத்தின் மகன் ‘சாமிக்கண்ணு’ கதைமாந்தர்வழி காட்டியுள்ளார் சோலை சுந்தரபெருமாள்.

‘நஞ்சை மனிதர்கள்’ புதினத்தில் பண்ணை அடிமைகளாக வாழ்ந்துவரும் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களான குண்டுக்கண்ணு, அம்மாக்கண்ணு தம்பதியினர், தங்களின் அயராத உழைப்பால் நிலத்தை வாங்கும் அளவிற்கு முன்னேறிச் சமூக மதிப்பைப் பெறுகின்றனர்.

பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகி வரும் தலித் பெண்களின் நிலையைச் ‘செந்நெல்’ புதினம் எடுத்துக்காட்டுகிறது. செல்வி என்ற தாழ்த்தப்பட்ட பெண்ணை வழிமறித்து ரெங்கபாஷ்ய நாயுடு தகராறு செய்து கையைப் பிடித்து இழுக்க, அவள் உதறி விட்டு ‘அய்யா மாருங்கலாச்சேன்று மட்டுமரியாதையா விட்டுவிட்டுப் போறேன்’ என்று சொல்ல, அதற்கு நாயுடு “என்னாடி பெரிசா பத்தினிக் கொட்டு கொட்டுறா... சட்டமா சாணி அள்ளிப் போடன்னு வரச்சொல்லி நாங்க ருசி பாத்தி அனுப்பி வச்ச காலம் மாறிப்போச்சாடி” (செந்நெல், ப.99) என்று கேட்டு வம்பிக்கிழுத்தவனிடம், “நாய்க்கப்பயலேப் போடா ஒன்னோட பொண்ண அழைச்சிக்கிட்டு வந்து என் மாமன்கிட்டக்க விட்டுட்டு வாடா; நான் உன்கிட்ட படுத்துக்கிறேன்” (செந்நெல், ப.100) என்றுகூறும் செல்வியின் மனவெழுச்சியைக் காணமுடிகிறது. ‘குட்டக் குட்டக் குனிந்த காலம் போச்சு’ என்பதற்கேற்ப, சாதிப்பெயரைச் சொல்லி ஒரு தாழ்த்தப்பட்ட பெண் உயர்சாதியினரைத் திட்டுவதைக் கொண்டு இம்மக்களின் மனஉறுதியையும் முற்போக்கான சிந்தனையில் சமூகமாற்றத்தையும் காணமுடிகின்றது.

கீழவெண்மணியில் தாழ்த்தப்பட்ட விவசாயக் கூலிகள் தங்களின் கூலியை உயர்த்திக் கேட்பதற்குப் பொதுவுடைக் கட்சி துணையாக நிற்கிறது. ஆனால் நெல் உற்பத்தியாளர் சங்கம் அவர்களின் உரிமையைக் கொடுக்க மறுப்பதோடு பல வழிகளிலும் கொடுமை இழைக்கின்றது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் குடியானத் தெருவைச் சேர்ந்த ‘வடிவேலு’ என்பவன் பக்க பலமாக நிற்கிறான். குடியானவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் துணையாக நின்றாலும் அவர்களை மிரட்டித் தன் பக்கம் இழுத்துக் கொள்வதும், அவர்கள் சொல்வதைக் கேட்கவில்லையென்றால் வெட்டிக்கொலைச் செய்தும்விடுகின்றனர்.

விழிப்புணர்வு பெற்ற மக்கள் தங்களின் உரிமையைக் கேட்கும் போது முதலில் பல இன்னல்களுக்கு ஆட்பட்டார்கள் என்பதைத் ‘தப்பாட்டம்’ புதினமும் உணர்த்துகின்றது. ‘செந்நெல்’ புதினத்தில் வடிவேலுவைப் போல இப்புதினத்தில் மூப்பனார் சாதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி வாத்தியார் பொதுவுடைமைக் கட்சி மூலம் தாழ்த்தப்பட்ட மக்களை விழிப்படையச் செய்கிறார். “தோழர்களே! ஒரு நாள் ஒரு வாரம் ஒரு மாசம் போராட்டம் நடத்தி நாம எதையும் வென்று எடுத்திட முடியாது. காலகாலமா ஆதிக்கம் பண்ணிக்கிட்டு இருக்கிறவங்க நம்மவங்களுக்குள்ள முரண்பாடுகளை முன்வச்சு திசைதிருப்பி விடுறாங்க. தொடர்ந்தும் அப்படித்தான் செய்வாங்க அது எல்லாத்தையும் மீறித்தான் நாமும் தொடர்ந்து போராடத் தயாரா இருக்கணும். நாம சோந்துட்டா எப்படி?” (தப்பாட்டம் ப.268) என்று சுந்தரமூர்த்தி வாத்தியார் அவர்களின் வாழ்க்கைக்காகப் போராடி அவா்களை ஊக்கப்படுத்துகிறார்.

சாதியின் பெயரால் ஒடுக்க முடியாது

காலங்காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்க்கைச் சிக்கல்கள், அவமானங்கள், புறக்கணிப்புகள், ஒடுக்குமுறைகள், இழிநிலைகள், போன்றவற்றை சோலை சுந்தரபெருமாள் தம் புதினங்களில் பதிவு செய்துள்ளமையை இக்கட்டுரை எடுத்துக்காட்டியுள்ளது. கல்வி கற்று உயர் பதவிகளையும் அதிகாரத்தினையும் அடைந்து பொருளாதார மேம்பாடு அடைவதன் மூலம் தான் தாழ்த்தப்பட்ட சாதி என்னும் தளையிலிருந்து விடுபடமுடியும் என்பதைத் தம் கதைமாந்தர்கள் வாயிலாகக் காட்டுகிறார் சோலை சுந்தரபெருமாள். கட்டுண்டு பரிதவித்த தலித் இனத்தவர், பொதுவுடைமைக் கட்சியினால் விழிப்புணர்வு பெற்றுத் தம் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதையும் தம் படைப்புகளில் காட்டியுள்ளார். பல்லாண்டு காலமாகப் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி வந்த தாழ்த்தப்பட்ட இனப் பெண்கள் வீறுகொண்டு எழுந்து எதிர்த்து நிற்பதாக ஆசிரியா் சித்திரிப்பதன் மூலம் இனியும் ஆதிக்கவர்க்கம் சாதியின் பெயரால் தலித் மக்களை அடக்கியொடுக்க முடியாது என்பது சோலை சுந்தரபெருமாள் படைப்புகளின் வழி புலனாகின்றது.

துணைநூற் பட்டியல்

1.     சாமிநாதையர். உ.வே. (தொ.ஆ.) புறநானூறு மூலம் உரையும். தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு, தஞ்சாவூர். முதற்பதிப்பு - 1985.

2.        சாதியப் பாகுபாடு இனப்பாகுபாடே: உலக தலித் ஆதரவுக் கூட்டமைப்பின் அறிக்கை. மனித உரிமைக் கங்காணி, ஜூன் 2000.

3.        சேக்கிழார், பெரியபுராணம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை - 2004.

4.        சோலை சுந்தரபெருமாள், செந்நெல், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், சென்னை,இரண்டாம் பதிப்பு - 2001.

5.        சோலை சுந்தரபெருமாள், தப்பாட்டம், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், சென்னை, முதற்பதிப்பு - 2002.

6.        சோலை சுந்தரபெருமாள், பெருந்திணை, பாரதி புத்தகாலயம், சென்னை - 600 018. முதல் பதிப்பு - 2005.

7.        சோலை சுந்தரபெருமாள், மரக்கால், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், சென்னை,முதற்பதிப்பு - 2007.

8.        பாரதியார், பாரதியார் கவிதைகள். மணிவாசகர் பதிப்பகம், சென்னை, நான்காம் பதிப்பு - 1991.

9.        பாரதிதாசன், பாரதிதாசன் கவிதைகள். மணிவாசகர் பதிப்பகம், சென்னை, ஐந்தாம்பதிப்பு - 1994.

10.  மோகன், க. பொன்னான அடிகளார். நிதிஸ் பிரபா பதிப்பகம், காரை,க்குடி, இரண்டாம் பதிப்பு - 2008.

- பா.ஜெனிதா, கௌரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை, அரசு மகளிர் கலைக் கல்லூரி, நிலக்கோட்டை

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.