இந்தியாவை காந்தியின் தேசம் என்றே உலகம் நினைக்கிறது; அடையாளம் காண்கிறது. அவர் ‘மகாத்மா’ என்றே அழைக்கப்பட்டார். ஏழை எளிய மக்களின் ஆடைகளை அணிந்து கொண்டு செல்வந்தர்களும் தேடி வரும்படியான ஆசிரம வாழ்க்கை. உலகமே கூர்ந்து கவனிக்கும்படியாக மெல்லிய குரலில் பேச்சு.

‘மனித வர்க்கத்திடமிருக்கும் வேற்றுமையில்லா அன்பிலிருந்துதான் என் செயல்கள் எல்லாம் பிறக்கின்றன’ என்றார் காந்தியடிகள். சத்தியத்தை நாடும் ஆர்வத்தை முக்கியமாகக் கொண்டதாகவும், உயிர்களிடத்து அளவு கடந்த பற்றும், ஆன்மிகத் தேடுதலும் கொண்டதாகவும் அவரது வாழ்க்கை அமைந்தது.

nehru gandhi patelபெரிய மகான் எப்போதோ ஒருமுறை அவதரிக்கிறார். அப்படிப்பட்ட ஒருவர் அவதரிக்காமல் பல நூற்றாண்டுகள் கழிவதும் உண்டு. அவரது செயல்பாடுகளைக் கொண்டே அவர்தம் வாழ்வில் அறியப்படுகிறார். முதலில் அவர் வாழ்ந்து காட்டுகிறார்; மற்றவர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதைக் கூறுகிறார். அங்கே சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு இருப்பதில்லை.

இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் அகிம்சை, தம்மைத் தாமே வருத்திக் கொள்வது என்னும் நாகரிகமான புதிய முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். இந்தியாவின் விடுதலை தொடர்பாக அவர் மேற்கொண்ட நிலை ஆங்கிலேயர் மீது எவ்விதமான வெறுப்பையும் அடிப்படையாகக் கொண்டது அல்ல.

“உயிர்களிடத்து அன்பு கொள்வது போன்றதுதான் நாட்டின் மீது அன்பு கொள்வதும். மனிதனாகவும், மனிதநேயம் கொண்டவனாகவும் இருப்பதால்தான் தேசப்பற்று கொண்டவனாகவும் நான் இருக்கிறேன். இந்தியாவுக்குச் சேவை செய்வதற்காக இங்கிலாந்திற்கோ, ஜெர்மனிக்கோ தீங்கிழைக்க மாட்டேன்” என்றார் அண்ணல் காந்தியார்.

மனித வரலாற்றில் அகிம்சைக் கொள்கையை தனிப்பட்டவரிடமிருந்து சமூக, அரசியல் மட்டத்திற்கு முதன் முதல் பரப்பியவர் காந்தியார். அகிம்சையை சோதிப்பதற்கும் அதன் தகுதியை நிலை நாட்டுவதற்குமே அரசியலில் இறங்கினார்.

“சத்தியத்திற்கும் அகிம்சைக்கும் அரசியலிலும், உலகச் செயல்பாடுகளிலும் இடமில்லை என்று சில நண்பர்கள் என்னிடம் கூறியுள்ளனர். அதை நான் ஒப்புக் கொள்ளவில்லை. அன்றாட வாழ்க்கையில் அவற்றைப் புகுத்தி அனுசரிப்பதே நெடுகவும் எனது சோதனையாக இருந்து வருகிறது,” என்கிறார் அவர்.

அணு ஆயுதங்கள் மிகுந்திருக்கும் இந்தக் காலத்தில் உலகத்தைப் பாதுகாக்க வேண்டுமானால் அகிம்சைக் கொள்கையையே நாம் கடைப்பிடித்தாக வேண்டும். “அணுகுண்டு ஹிரோஷிமாவை நிர்மூலமாக்கி விட்டது என்பதை முதலில் நான் அறிந்தபோது சலனமின்றியே இருந்தேன். இப்பொழுது உலகம் அகிம்சையை அனுசரித்தால் அன்றி மனிதவர்க்கத்தின் கதி தற்கொலையிலேயே போய் முடியும்” என்று வேதனையுடன் கூறினார்.

அறிவியல் உண்டாக்கியிருக்கும் புதிய நிலைமைக்கு ஏற்ற வகையில் நம்மை ஒழுங்குபடுத்திக் கொள்ளவேண்டும். அவ்வாறு ஒழுங்குபடுத்திக் கொள்ளமுடியாமல் இருக்கும் இந்தச் சிக்கலான நிலையில் அகிம்சை, சத்தியம், நிலைமையை உணர்ந்து கொள்ளும் கொள்கை ஆகியவற்றைக் கடைப்பிடித்து வருவது எளிதானது அல்ல. ஆனால் அதற்காக நாம் நம் முயற்சியை விட்டுவிடக் கூடாது.

ஒரு புத்தர் அல்லது ஒரு காந்தி, ஒரு நீரோ அல்லது ஒரு ஹிட்லர் போன்ற மாறுபட்ட படைப்புகளையும் உலகம் கண்டு கொண்டிருக்கிறது. என்றாலும், வரலாற்றில் தோன்றிய ஒரு மகாத்மா நம் தலைமுறையில் வாழ்ந்தார். நம்முடன் வாழ்ந்தார், நம்முடன் பேசினார், நாட்டின் விடுதலைக்கு நம்மை அணி திரட்டினார் என்பது பெருமையாக இல்லையா?

இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்தியாரின் வழிகாட்டுதல் முக்கிய இடம்பெற்றது. நேரு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். காந்திஜியும், நேருவும் கொண்டிருந்த உறவு வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருந்தது. இவ்வளவுக்கும் காந்திஜியின் அரசியல், ஆன்மீகக் கருத்துகளோடு முற்றிலும் மாறுபட்டவர் நேரு.

நேரு பகுத்தறிவு வாதி. சாதி, சமயங்களை வெறுத்தவர். மூடநம்பிக்கைகளை எதிர்த்தவர். இந்தியா மதச் சார்பற்ற நாடாக இருப்பதற்கு அவரே காரணம். நேருவுக்கும், காந்திஜிக்கும் எவ்வளவு முரண்பாடுகள் உண்டோ, அவற்றைவிட அதிகமாக நேருவுக்கும், வல்லபாய் பட்டேலுக்கும் உண்டு. இவர்களே இந்தியாவின் முதல் பிரதமராகவும், முதல் துணைப் பிரதமராகவும் பதவி ஏற்று சிறப்பாகப் பணிபுரிந்தார்கள். ‘இரும்பு மனிதர்’ என்று பாராட்டப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேல் குட்டி சமஸ்தானங்களை இணைத்து புதிய இந்தியாவை உருவாக்கினார்.

இந்தியா விடுதலை பெற்றபோது இரண்டு நாடுகளாகப் பிளவுபட்டதை யாராலும் தடுக்க முடியவில்லை. ‘இந்தியா ஒரு நாடோ அல்லது தேசமோ அன்று; பல நாடுகளின் சேர்க்கையே’ என்று ஜின்னா வாதிட்டார்.

‘பிரிவினையை காங்கிரஸ் ஏற்றால் அது தமது சடலத்தின் மீதுதான் நடைபெற முடியும்’ என்று ஒருமுறை ஆசாத்திடம் கூறிய காந்திஜியும், பிரிவினை இல்லையென்றால் இந்தியாவில் இரத்த ஆறு ஓடும் என்பதை உணர்ந்து பிரிவினைக்காகப் பரிந்து பேச முன்வந்தார்.

இந்திய விடுதலை நாள் நெருங்க நெருங்க, வகுப்புக் கலவரங்கள் நடந்தன. அவற்றைத் தொடர்ந்து அகதிகளாக மக்கள் ஒரு பக்கமிருந்து மறுபக்கம் செல்லத் தொடங்கினர். கொலை, கொள்ளை, கற்பழிப்பு வழியெங்கும். சுமார் 2 இலட்சம் பேர் மடிந்தனர் என்று மதிப்பிடப்படுகிறது. வீடிழந்தும், வாழ்விழந்தும் அநாதையானவர் தொகை ஏராளம். இந்திய வரலாற்றில் கறை படிந்த பக்கங்கள் இவை.

ஆகஸ்ட் 13 அன்று கராச்சி சென்று பாகிஸ்தான் விடுதலை குறித்து உரையாற்றிய மவுண்ட்பேட்டன், ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை ஆளுநராகப் பதவி ஏற்றுக் கொண்டார். நேருவின் தலைமையில் அமைச்சரவை உறுதி எடுத்துக் கொண்டது.

1947 ஆகஸ்ட் 14ஆம் நாள் நள்ளிரவில் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்துப் பேசினார்: “வரலாற்றிலேயே மிகமிக அரிதாக வரும் ஒரு தினம் இப்போது வருகிறது. பழமையிலிருந்து வெளியேறிப் புதுமையில் கால் வைக்கின்ற ஒரு கணம், யுகம் முடிவுறுகின்ற ஒரு கணம், நீண்ட காலமாக அடக்கப்பட்டுக் கிடந்த ஒரு நாட்டின் ஆத்மா கட்டறுத்துக் குரலெழுப்பும் ஒரு கணம் இது. இத்தகைய ஒரு கணத்தில் இந்திய நாட்டுக்கும், அதன் மக்களுக்கும், மனிதகுலம் முழுவதற்குமே தொண்டாற்றுவதற்கு நம்மை அர்ப்பணித்துக் கொள்வதென்று உறுதிமொழி மேற்கொள்வது பொருத்தமாகும்” என்று நேரு குறிப்பிட்டார்.

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்ற நேரத்தில் நவகாளியில் இந்து முஸ்லிம் கலவரம் பற்றி எரிந்தது. பல்வேறு பகுதிகளுக்கும் வகுப்புக் கலவரம் பரவியது. தமது பணி அங்கேதான் தொடர்கிறது என்று கூறி காந்தியடிகள் நவகாளியை நோக்கித் தம் பயணத்தைத் தொடங்கினார்.

நாடெங்கும் இந்து முஸ்லிம் வகுப்புக் கலவரம் இன்னும் ஓயவில்லை. 1948 ஜனவரி 12 அன்று உண்ணாவிரதம் இருக்கப் போவதாக காந்திஜி அறிவித்தார். அவருடைய வாழ்க்கையில் இது 16ஆவது உண்ணாவிரதம். தில்லியில் அமைதியும், ஒழுங்கும் ஏற்படும் வரை உண்ணாவிரதத்தைத் தொடர்வதென்று உறுதியுடன் இருந்தார்.

அன்றைய தினமே நேரு, ஆசாத், பட்டேல் ஆகிய மூவரும் உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் என்று காந்திஜியைக் கேட்டுக் கொண்டனர். எல்லாவிதமான மதச் சண்டைகளும் நிறுத்தப்பட வேண்டும்; முஸ்லிம்களின் மசூதிகளும், நினைவுச் சின்னங்களும் அழித்ததற்கு இந்துக்கள் ஈடு செய்ய வேண்டும் என்று காந்திஜி நிபந்தனைகளைக் கூறினார்.

நாட்டில் மறுபடியும் அமைதி ஏற்பட்டது. காந்திஜியும் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். ஆனால் இந்த முடிவு எல்லோருக்கும் திருப்தியைக் கொடுக்கவில்லை. காந்தி புனிதமான இந்து மதத்துக்குத் துரோகம் செய்துவிட்டார் என்று இந்து மகா சபைத் தலைவர்கள் குற்றம் சுமத்தினர். காந்தியின் பிரார்த்தனைக் கூட்டங்களில் குரான் மற்றும் பைபிளிலிருந்து சில பகுதிகள் வாசிப்பதை அனுமதிக்க மாட்டோம் என்று அச்சுறுத்தினர்.

1948 ஜனவரி 30இல் காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்டார். நாடே கொந்தளித்தது. இந்தப் படுகொலையைச் செய்தவன் முஸ்லிமாகவே இருப்பான் என்று நினைத்தது தவறாகப் போய்விட்டது. இந்தப் படுகொலையைச் செய்தவன் இந்து மதவெறி அமைப்பான இந்து மகா சபையைச் சேர்ந்தவன் என்பதை அறிந்தபோது, இந்து மதவெறிக்கு அவர் பலியானார் என்பது உலகத்துக்குத் தெரிந்தது.

“நம்முடைய வாழ்க்கைக்கு வழிகாட்டிய விளக்கு அணைந்துவிட்டது. இருள் நம்மைச் சூழ்ந்து விட்டது” என்று நேரு பதறியபடி கதறினார்.

“உங்களிடம் எதைச் சொல்வது, அதை எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. நாம் அன்போடு நேசித்த தலைவர் - பாபு என்றுதான் நாம் அவரை அழைத்தோம். நாட்டின் தந்தை மறைந்துவிட்டார். அறிவுரை அல்லது ஆறுதல் வார்த்தைகளைக் கேட்பதற்காக நாம் இனிமேல் அவரிடம் போக முடியாது...”

காந்திஜி மரணமடைவதற்கு 6 ஆண்டுகளுக்கு முன்பே தன்னுடைய அரசியல் வாரிசு என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு முறைப்படி அறிவித்தார். அவரும் நேருவும் வெவ்வேறு அரசியல் மொழிகளைப் பேசுபவர்களாயிற்றே என்று காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் ஐயப்பாடு ஏற்பட்டபோது, இதயங்கள் ஒன்று சேருவதற்கு மொழி ஒரு தடையல்ல; நான் மறைந்த பிறகு, நேரு என்னுடைய மொழியைப் பேசுவார் என்று காந்தி உறுதியாகப் பதிலளித்தார்.

ஆயினும், காங்கிரஸ் கட்சியிலிருந்த வலதுசாரிகள் வல்லபாய் பட்டேலை இரண்டாவது இடத்தில் வைத்திருந்தனர். பட்டேல் பிரதமர் நேருவைப் பலமுறை எதிர்த்தார். அண்மைக் காலமாக காந்திஜியின் கருத்துக்களை அவர் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

ஆனால் ஜனவரி 30இல் வெடித்த துப்பாக்கிக் குண்டுகள் பட்டேலுக்கு எதிராகத் திரும்பின. அன்று நடந்த நிகழ்வுகளுக்கு உள்துறையமைச்சர்தான் பொறுப்பு என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. காந்திஜிக்கு எதிராக ஜனவரி 20 அன்றே வெடிகுண்டு வீசப்பட்டது. அதன் பின்னும் அவருக்குப் போதுமான பாதுகாப்புக் கொடுக்கப்படவில்லை. காந்திஜியின் உயிரைக் காப்பதற்கு அவர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்தது.

பட்டேல் கோபம் கொண்டார். எனக்கு எதிராக இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளைச் சொல்லி காங்கிரசில் பிளவு ஏற்படுத்த காங்கிரஸ் விரோதிகள் முயல்கிறார்கள் என்று அவர் கூறினார். பட்டேலின் பல குணங்களை நேரு வெறுத்தார். அறிவுஜீவிகளைத் தவிர்ப்பது, சமதரும நம்பிக்கைகளைக் கேலி செய்வது, கம்யூனிஸ்டுகளிடம் கடுமையாக நடந்து கொள்வது என்னும் குறைகள் பட்டேலிடம் இருந்தன.

ஒருவரைத் தனிப்பட்ட முறையில் பிடிக்காவிட்டாலும், அரசியல் என்று வரும்போது அவரோடு ஒத்துழைக்கும் பரந்த மனம் நேருவுக்கு உண்டு. கட்சியமைப்புகளில் பட்டேலுக்கு இருந்த திறமையை அவர் மதித்தார். சுதந்திரமான, பலம் பொருந்திய இந்தியாவை உருவாக்கிய அவரது தேசபக்தியை நேரு சந்தேகிக்கவில்லை.

காந்திஜி மரணமடைந்து சிறிது காலத்திற்குப் பிறகு ஒரு அமெரிக்கப் பத்திரிகையாளர் நேருவிடம் ஒரு கேள்வி கேட்டார். “நீங்களும் பட்டேலும் அரசியல் எதிரிகள், உங்கள் இருவரில் வெற்றி பெறப்போவது யார் என்பதைப் பொருத்தே நாட்டின் எதிர்காலம் அமையும் என்று கூறுவது சரியாகுமா?...”

“நாங்கள் அடிக்கடி வேறுபடுவதுண்டு. ஆனால், காந்திஜியின் நினைவு எப்படியோ எங்களை ஒன்று சேர்த்து விடுகிறது...” என்றார் நேரு.

காந்திஜி மறைந்து விட்டார். இதுவரையில் வெற்றிகரமாக நடைபெற்ற பட்டேலின் அரசியல் வாழ்க்கையில் ஏதோ குறைகள் ஏற்பட்டன. அரசியல் மற்றும் தனிப்பட்ட தோல்விகள் பட்டேலின் அசாதாரணமான ஆற்றலைப் பலவீனப்படுத்தி விட்டன. கடைசியில் அவர் உடல்நலம் கெட்டது. 1948 மார்ச்சில் பட்டேலுக்கு ஆபத்தான இதயவலி ஏற்பட்டது.

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில், பர்தோலி வட்டம் உள்ளது. அங்குள்ள மக்களுக்கு பயிர்த்தொழிலே உயிர்த்தொழில். ஆங்கில ஆட்சியாளர் அங்கு நிலவரியை 27 விழுக்காடு உயர்த்திவிட்டனர். பர்தோலி மக்கள் அதிர்ச்சியும், ஆத்திரமும் கொண்டனர்.

அவர்களுக்காக வல்லபாய் பட்டேல் காந்திஜியின் வழிகாட்டுதலின்படி அகிம்சை அறப்போர் நடத்தினர். 80 ஆயிரம் விவசாயிகள் அதில் பங்கேற்றனர். உறுதி குலையாத விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆங்கில அரசு பணிந்தது. காந்திஜி பெருமிதம் அடைந்தார். இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திய வல்லபாய் பட்டேலை ‘பர்தோலியின் சர்தார்’ என்று சிறப்பித்தார். சர்தார் என்றால் தலைவர் என்று பொருள்.

கடுமையான வயிற்று வலிக்குப் பிறகு சர்தார் ஓய்வெடுக்க மும்பை சென்றார்: “நான் வாழ்வில் முதுமைப் பருவத்தை அடைந்து விட்டேன். இந்த வயதில் நான் ஓய்வு எடுத்துக் கொள்வது எனது உரிமைதான். ஆனால் எனது தாய்நாடு நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறது. எஞ்சியுள்ள நாட்களை நாட்டுப் பணிக்கு அர்ப்பணிக்க என் மனம் விரும்புகிறது” என்று அங்குப் பேசினார்.

பல மாதங்கள் சிகிச்சைக்குப் பிறகு அவர் ஓரளவு குணமடைந்தார். ஒரு கூட்டத்தில் நேரு மேடையில் தோன்றியதும் ஏராளமான விவசாயிகள் அவரை உற்சாகமாக வரவேற்றதையும், தன்னைப் பற்றி அவர்கள் சிறிதும் அக்கறை எடுத்துக் கொள்ளாததையும் பட்டேல் கவனித்தார்.

“இவர்களை என் பக்கத்துக்குத் திருப்ப என்னால் ஒருபோதும் முடியாது. அவர்கள் ஜவஹர்லாலைப் பார்க்க வந்திருக்கிறார்கள்” என்று பட்டேல் அங்கிருந்த காங்கிரஸ்காரரிடம் கூறினார்.

காந்தியின் மரணம் இந்தியா முழுமைக்கும் ஈடு செய்யப்பட முடியாத இழப்பாக இருந்தது. பிரதமர் நேருவுக்கும், துணைப் பிரதமர் பட்டேலுக்கும் கேட்க வேண்டுமா?

Pin It