மோடிக்கு மட்டும் வாக்களியுங்களேன்! அவர் இந்தியாவை எங்கேயோ கொண்டு போய்ச் சேர்க்கப் போகிறார் பாருங்கள்! எனத்தான் மோடி ரசிகர்கள் ஓராண்டுக்கு மேலாய்க் கதையளந்து வந்தார்கள். தமிழக மோடி ரசிகர் மன்றத்தினரோ இன்னும் ஒரு படி மேலே போய், கச்சத்தீவு மீட்பார்! ஈழத் துயர் துடைப்பார்! மின்தடை நீக்குவார்! காவிரித்தாய் விடுவிப்பார்! நதிநீர்கள் வளைத்து மண்வளம் பெருக்குவார்! என மோடி நாமாவளி பாடினர்.
இவர் இந்துத்துவர்களின் வளர்ச்சி நாயகன் அன்றோ! காங்கிரசை விட விரைந்து செயல்பட வேண்டாமா? வந்ததும் வராததுமாக புதுப் புதுக் குண்டுகளை வீசினார். முடிசூட்டு விழாவில் ராஜபட்சேவை அமர வைத்து அழகு பார்த்தார். இனி உலக அரங்கிலும் இந்திய அரங்கிலும் இந்தியில்தான் பேசுவாராம். அரசு அதிகாரிகளும் இந்தியில்தான் பேச வேண்டுமாம், எழுத வேண்டுமாம்! இனி. . .
இந்தியர் என்றால் இந்தியில்தான் பேச வேண்டும் என விரைவில் அறிவிப்பார், இந்தியத்துக்குப் புதுக் குருதி பாய்ச்சும் தலைவரல்லவா!
மோடியின் இந்திக் குண்டு தமிழகத்தைக் கலக்குகிறது என்றால், காஷ்மீரக் குண்டு இந்தியாவைக் கலக்குகிறது. காஷ்மீருக்கான சிறப்பு உறுப்பு 370ஐ நீக்ககும் வேலைகளை ஆரம்பித்து விட்டோம் எனத் தலைமையமைச்சர் அலுவலகத்தின் துணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்ததுதான் தாமதம், உடனே காங்கிரஸ், மார்க்சிஸ்டு, சமாஜ்வாதி உள்ளிட்ட மதச்சார்பின்மை பேசும் கட்சிகள் அனைத்தும் இது இந்திய ஒற்றுமைக்கும் மதச்சார்பின்மைக்கும் பெருங்கேடு எனப் படபடத்தனர். காஷ்மீரத்தையும் குஜராத்தைப் போல் முன்னேற்றிக் காட்டவே 370ஐ நீக்குவதாகச் சொன்னார்கள் வளர்ச்சி மந்திரம் ஜெபிக்கும் பாஜகவினர்.
ஒரு தமிழன் குஜராத்தில் சொத்து வாங்கலாம், ஒரு வங்காளி மராத்தியத்தில் சொத்து வாங்கலாம், ஆனால் எந்த இந்தியனும் காஷ்மீரத்தில் குண்டூசி முனைச் சொத்தையும் வாங்கத் தடைவிதிக்கும் 370ஆவது உறுப்பை ஒழித்துக் கட்டுவதுதானே நியாயமென ஊடகங்களில் தொண்டை புடைக்கப் பேசுகிறார்கள் பாஜக தலைவர்கள். இந்த நியாயத்தைத் தட்டிக் கேட்கத் திராணியற்ற போலி மதர்சார்பின்மைவாதிகளின் சந்தர்ப்பவாதம் பாரீர் எனக் கேலி பேசுகின்றனர். 370 நீங்கினால் காஷ்மீர் விடுபடும் எனச் சொன்ன ஒமர் அப்துல்லா போன்றோரைத் தேசத் துரோகிகள் எனத் தூற்றுகின்றனர்.
ஆனால் உணர்ச்சி பொங்கச் சண்டையிட்டுக் கொள்ளும் இந்த அரசியல் பங்காளிகள் சங்கமித்துக் கொள்ளும் இடம் ஒன்றே. 370ஐ நீக்கத் துடிக்கும் சங்கப் பரிவாரம், 370ஐ நீக்க மறுக்கும் மதச்சார்பின்மைப் பரிவாரம் ஆகிய இரண்டின் புனிதக் குறிக்கோளும் ஒன்றே - பாரத மாதா சிரம் காத்தல்.
இந்திய ஒற்றுமையின் குறியீடாக்கப்படும் இந்த முந்நூற்று எழுபதுதான் என்ன? எந்த இந்தியனும் எங்கும் சொத்து வாங்கலாம், ஆனால் இது காஷ்மீருக்கு ஆகாதென 370 தடைபோடுவது சனநாயகமாகுமா? 370 நீங்கினால் காஷ்மீரம் தனிநாடாகும் என்றெல்லாம் கூறுவது பிரிவினைவாதமில்லையா? இப்படி ஒரு மாநிலத்துக்கு மட்டும் சிறப்புத் தகுதி வழங்குவது காஷ்மீரி பயங்கரவாதிகளையும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தையும் ஊக்கப்படுத்துவது ஆகாதா? ஆக, 370 நீங்குவதால் காஷ்மீரிகளுக்கு அப்படி என்ன பெரிய இழப்பு? இப்படிப் பல வினாக்கள் நம் தமிழ் இளைஞர்கள் உள்ளிட்ட பலரிடமும் எழாமல் இல்லை.
உள்ளபடியே இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 370 என்பது காஷ்மீரத்துக்கென இயற்றப்பட்டதே என்றாலும், அது இந்தச் சொத்துரிமை பற்றியெல்லாம் பேசவே இல்லை. அப்படியானால் இந்தச் சொத்துரிமைக் கதை வெறும் புரளியா எனக் கேட்கலாம். உள்ளபடியே இன்னொரு மூலக்கதையின் கிளைக்கதையே உறுப்பு 370. மூலக் கதை புரிந்தால் கிளைக்கதை தன்னால் விளங்கும்.
காஷ்மீரம் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி என நேற்று முளைத்த ஆம் ஆத்மிகள் கூட முழங்குகிறார்களே! உண்மையில் காஷ்மீர் என்னும் தலை இல்லா முண்டமாகத்தான் 1947 ஆகஸ்டு 15 அன்று பாரத மாதா பிறந்தாள்! அவளுக்கு 20 நாள் முன்பாக ஜூலை 25 அன்றே பிறந்து விடுதலைக் காற்றை சுவாசிக்கத் தொடங்கினாள் காஷ்மீரத் தாய்! இந்தியாவுக்கு முன்பே விடுதலைத் தேசமாகத் திகழ்ந்த காஷ்மீரத்தைத்தான் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி என்கின்றனர் இன்றைய பாரதப் புதல்வர்கள். அப்படியானால் சுதந்திரக் காஷ்மீரத்துக்கு இந்தக் கதி ஏற்பட்டது எப்படி?
காஷ்மீர விடுதலைக்கும், இந்திய விடுதலைக்கும் முன்பே காஷ்மீரத்தை ஆண்டு வந்த இந்து மன்னன் அரிசிங்கின் கொடுங்கோன்மைக்கு எதிராகக் காஷ்மீரிகள் பெரும் போராட்டங்கள் நடத்தி வந்தனர். குறிப்பாக இந்தப் போராட்டங்களின் வாயிலாகப் பெரும்பான்மை இசுலாமியருக்கு மட்டுமல்லாது சிறுபான்மை இந்துக்கள் உள்ளிட்ட காஷ்மீரிகளின் பெருந்தலைவராக எழுந்த ஷேக் முகம்மது அப்துல்லா காஷ்மீரிகளின் விடுதலையை முன்வைத்து தேசிய மாநாட்டுக் கட்சியை (National Conference)1939இல் தொடங்கினார். தொடர்ந்து போராட்டங்கள் முற்றின.
இந்திய, பாகிஸ்தானிய விடுதலைகள் நெருங்கிக் கொண்டிருந்த நிலையில், அன்றைய ஆங்கிலேயர்களின் நேரடி ஆளுகையில் அடங்காத ஐதராபாத், மைசூர், ஜுனாகத், காஷ்மீர் போன்ற சமஸ்தானங்களின் விடுதலை ஒப்பந்தங்கள் நிறைவேறின. அவற்றின்படி, இந்த சமஸ்தானங்கள் அவர்கள் விருப்பப்படியோ, அல்லது ஏதும் சிக்கல் எழுந்தால் அம்மக்களிடம் பொதுவாக்கெடுப்பு (plebiscite) நடத்தி அதன் அடிப்படையிலோ சுதந்திரமாக இயங்கலாம், அல்லது இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ சேர்ந்து கொள்ளலாம்.
இதனால் இந்திய, பாகிஸ்தானிய நாக்குகளில் எச்சில் ஒழுகத் தொடங்கியது. இந்தப் பின்னணியில் மன்னன் அரிசிங் தற்காலிகமாகப் பாதுகாப்பு கருதி மாறாநிலை ஒப்பந்தம் (standstill agreement) ஒன்றை இந்திய விடுதலை நாளன்று பாகிஸ்தானுடன் செய்து கெண்டார். இதன்படி காஷ்மீரம் குறித்த ஓர் உறுதியான நிலை ஏற்படும் வரை, எந்த நடவடிக்கையிலும் பாகிஸ்தான் இறங்கக் கூடாது. இருப்பினும் பாகிஸ்தான் காஷ்மீரத்தை விழுங்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தது. ஷேக் அப்துல்லாவின் போராட்டத்தில் அரிசிங் எப்போது கவிழ்வார், நாம் எப்போது புகுந்து மேயலாம் எனக் காத்திருந்தது இந்தியா.
இந்தியா அடிப்படையில் எல்லை பிடிப்பதையே கொள்கையாகக் கொண்ட நாடு. இந்திய அரசமைப்பின் முதல் உறுப்பே எந்த நிலப் பரப்பையும் பாரதம் ஆசைப்பட்டபடி சேர்த்துக் கொள்ளலாம் என அதன் களவாணித்தனத்தைக் கூச்சநாச்சமில்லாமல் பிரகடனப்படுத்துகிறது. இந்த மண்ணாசை பிடித்த ஓர் அரசமைப்பின் கீழ் இயங்கும் தலைவர்களிடம் நாம் எந்த ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியும்?
நேரு, பட்டேல் கூட்டம் இடம் பொருள் ஏவல் பார்த்து, தடி எடுத்தும், கிள்ளி விட்டும், தட்டிக் கொடுத்தும் தெலங்கானா, திருவிதாங்கூர் என ஒவ்வொரு சமஸ்தானமாகச் சுருட்டிக் கொண்டிருந்தது. இடதுசாரிகளாலேயே மதச்சார்பின்மைக் காவலனாகச் சித்திரிக்கப்பட்ட நேரு இந்தச் சுருட்டலுக்குச் சொன்ன காரணம் தெரியுமா? அவை எல்லாம் இந்துப் பெரும்பான்மைப் பகுதிகளாம்!
நாத்திகராக அறியப்பட்ட இந்த இந்துத்துவவாதி நேரு சற்றேனும் அறிவு நாணயத்துடன் நடந்து கொண்டாரா? தமது தருக்கத்தை இன்னும் நீட்டி, பெரும்பான்மை இசுலாமியர் வாழும் காஷ்மீரம் பாகிஸ்தானுக்கே சொந்தம் என நேர்மையாக அறிவித்தாரா? இல்லை, அதனையும் பாரத மாதா கக்கத்தில் அடக்கத் துணிந்தார். அதற்குச் சரியான நேரம் காலம் பார்த்துக் காத்திருந்தார்.
1947 செப்டம்பரில் அரிசிங் விதித்திருந்த கடுமையான வரிகளை எதிர்த்துக் காஷ்மீரத்தில், குறிப்பாக பூஞ்ச் பகுதியில் பெரும் போராட்டங்கள் வெடித்தன. அரசு பெருமளவில் போராட்டக்காரர்களையும் அப்பாவி மக்களையும் சுட்டு வீழ்த்தியது. இதனால் அறுபதாயிரத்துக்கு மேற்பட்டோர் நாட்டை விட்டு வெளியேறினர்.
அக்டோபர் 24இல் போராளிகள் ஆசாத் காஷ்மீரை (சுதந்திரக் காஷ்மீரை) பிரகடனப்படுத்தினர். மேலும், எக்காரணம் கொண்டும் இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்கக் கூடாதென அரிசிங்கிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் அப்போது சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஷேக் அப்துல்லா இதனை ஏற்க மறுத்துச் சிறையிலிருந்து அறிக்கை விட்டார். சிறையிலிருந்து வெளியே வந்தவர் காஷ்மீர் விடுதலைக்குப் பின்னரே இந்திய இணைப்பு பற்றிப் பேச முடியுமெனத் தெளிவாக அறிவித்தார்.
இந்திய இணைப்பை அறவே விரும்பாத போராளிகள் பாகிஸ்தானைச் சேர்ந்த பதான் பழங்குடிகளுடன் இணைந்து பாகிஸ்தான் உயர் இராணுவ அதிகாரிகளின் துணையுடன் பெரும் ஆயுதத் தாக்குதல் நடத்தினர். காஷ்மீரப் பரப்பைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கைப்பற்றி முன்னேறினர். வேறுவழியின்றி இந்தியாவின் உதவியை நாடினார் அரிசிங். இப்படி ஒரு சந்தர்ப்பத்துக்குக் காத்திருந்த நேரு இந்திய இணைப்பை நிபந்தனையாக்கினார். அக்டோபர் 26 அன்று இணைப்பு உடன்படிக்கை (Instrument of Accession)ஒன்றில் கையொப்பமிட்டார் அரிசிங். இது தங்களுடன் செய்து கொண்ட மாறாநிலை ஒப்பந்ததுக்குச் செய்யும் துரோகம் என பாகிஸ்தான் சினந்தது. இந்தப் பின்னணியில் இந்தியா இராணுவத்தை அனுப்பி பூஞ்ச் போராளிகளின் முன்னேற்றத்தைத் தடுத்துப் பின்னுக்குத் தள்ளியது.
அதேபோது இந்தியா வெள்ளை அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது. காஷ்மீர மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தி அவர்களிடம் இந்திய இணைப்புக்கு ஒப்புதல் பெற்ற பின்னரே இணைப்பு உடன்படிக்கை செயலுக்கு வரும் என அந்த அறிக்கை சொன்னது. இந்த இணைப்பைத் தற்காலிகமாக ஏற்றுக் கொள்வதாக அறிவித்த ஷேக் அப்துல்லா எதையும் பொது வாக்கெடுப்புக்குக்குப் பிறகே முடிவெடுக்க முடியும் என்றும் தெளிவுபடுத்தினார்.
முதலில் காஷ்மீரில் பாகிஸ்தானிய ஆக்கிரமிப்பு அகன்ற பிறகே பொதுவாக்கெடுப்பு நடத்த முடியும் என்றது இந்தியா. இந்திய இராணுவ ஊடுருவல் அகலும் வரை பொதுவாக்கெடுப்பு சாத்தியமில்லை என்றது பாகிஸ்தான். இதன் விளைவாக காஷ்மீரை வைத்து முதல் இந்திய-பாகிஸ்தான் போர் வெடித்தது.
இந்தப் பூசலை 1948 சனவரி 1 அன்று ஐநா பாதுகாப்பு அவைக்கு எடுத்துச் சென்றது இந்தியா. இதன் தொடர்விளைவாக 1949 சனவரி 1 அன்று போர்நிறுத்தம் செயலுக்கு வந்தது. அன்றைய தேதியில் இந்தியா தன் இராணுவக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பகுதியை ஜம்மு காஷ்மீர் என்றும், பாகிஸ்தான் வசமிருந்த பகுதியை பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக் காஷ்மீர் (Pakistan Occupied Kashmir – POK)என்றும் கூறியது.
இதற்கு நேர்மாறாக பாகிஸ்தான் தன் பகுதியை ஆசாத் காஷ்மீர் என்றும், இந்தியப் பகுதியை இந்தியக் கட்டுப்பாட்டுக் காஷ்மீர் (Indian Occupied Kashmir – IOK)என்றும் வர்ணித்தது. காஷ்மீரிகளின் நோக்கில் இரண்டுமே ஆக்கிரமிப்பு காஷ்மீர்களே! இரு நாடுகளும் பங்கு போட்டுக் கொண்ட இரு காஷ்மீர நிலப் பரப்புகளையும் பிரிக்கும் கோடே கட்டுப்பாட்டுக் கோடு (Line of Control)எனப்படுகிறது.
இந்தக் கதையில் 370 எங்கே கிளைக்கிறது? அரிசிங் இந்தியாவுடன் செய்து கொண்ட அந்த இணைப்பு உடன்படிக்கையின் கீழ் கிளைத்ததே 370. எப்படி எனப் பார்ப்போம்.
இந்திய இணைப்பு உடன்படிக்கையின்படி, பாதுகாப்பு, வெளியுறவு, தொலைத்தொடர்பு தவிர்த்து வேறெந்த வகையிலும் இந்தியா காஷ்மீரில் தலையிடலாகாது. முறைப்படியான இணைப்பு நடக்கும் வரை, மன்னராட்சிக் காலச் சட்ட விதிகளே செல்லுபடியாகும். இந்த விதிகளில் ஒன்றுதான் இந்தியர்கள் காஷ்மீரில் நிலம் வாங்குவதைத் தடுக்கிறது. இன்னும் தேவைப்படுகிற சட்ட திட்டங்களை காஷ்மீர மக்களே தங்களுக்கான அரசியல் நிர்ணய சபையைக் கூட்டி முடிவு செய்து கொள்வார்கள் என்றும் அப்போது முடிவானது.
அந்த இந்திய இணைப்பு உடன்படிக்கைக் கூறுகளை ஏற்கும் வகையில்தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுப்பு 370 சேர்க்கப்பட்டது.
370 சாரமாகச் சொல்லும் கருத்து இதுதான்:
1. ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணயசபை ஏற்றுக் கொள்ளும் வரை இந்திய அரசமைப்புச் சட்டம் அங்கு செல்லுபடியாகாது.
2. இந்திய நாடாளுமன்றம் இயற்றுகிற சட்டங்கள் இறுதியாக ஜம்மு காஷ்மீருக்குப் பொருந்துவதற்கு ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபையின் இசைவு தேவை.
3. இந்திய அரசமைப்பு உறுப்பு 1இன் வழிவகைகள் ஜம்மு காஷ்மீருக்குப் பொருந்துமாறு செய்யப்பட்டுள்ளது.
4.பொதுப் பட்டியலின் கீழ் இயற்றப்படும் சட்டங்களுக்கு ஜம்மு காஷ்மீர் அரசின் இசைவு தேவை. இணைப்பு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்பாடுகள் தொடர்பான எந்த ஆணையையும் மாநில அரசைக் கலந்து கொள்ளாமல் பிறப்பிக்கக் கூடாது.
5. இந்த உறுப்பு 370 ஆனது குறித்த நாளிலிருந்து செல்லுபடியாகாது என்றோ, அல்லது விதிவிலக்குகள் திருத்தங்களோடு மட்டுமே செயல்படும் என்றோ குடியரசுத் தலைவர் பொது அறிவிக்கை வாயிலாகப் பறைசாற்றலாம்.
6. ஆனால் குடியரசுத் தலைவர் இப்படி அறிவிக்கை செய்யுமுன் மாநில அரசியல் நிர்ணய சபையின் பரிந்துரை அவசியமாகும்.
மேலே 370இல் 3ஆவது கூறுதான் காஷ்மீர விடுதலைக் கனவுகளுக்கு நேரு வைத்த பொறி. இந்தியாவில் அடங்கும் மாநிலங்களைப் பட்டியலிடும் உறுப்பு 1இல் காஷ்மீரையும் சேர்த்த செயல் இணைப்பு உடன்படிக்கையின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு முற்றிலும் எதிரானது ஆகும். இதுவே பின்னர் காஷ்மீரை இந்தியா ஏப்பமிடுவதற்குக் காரணமாயிற்று.
இணைப்பு உடன்படிக்கையின்படி 1949 அக்டோபர் 17 அன்று கூடிய அரசியல் நிர்ணய சபை 1956 நவம்பர் 17 அன்று தனது பணியை முடித்துக் கொண்டது. இதன்படி, காஷ்மீரிகள் தங்கள் தேசத்துக்குரிய சட்ட திட்டங்களைத் தங்களுக்குத் தாங்களே இயற்றிக் கொண்டனர். தாங்கள் தேர்ந்தெடுக்கும் அவையை நாடாளுமன்றம் என்றும், பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் தலைவரைப் பிரதமர் என்றும் அழைத்தனர்.
இந்தியக் கொடி மறுத்துத் தங்களுக்கென்ற ஒரு தேசியக் கொடியையும் அறிவித்தனர். இந்நிலை பொதுவாக்கெடுப்பு நடைபெறும் வரை தொடருமெனத் தெளிவுபடுத்தினர்.
இந்தக் காலக் கட்டங்களில் நேருவும் பட்டேலும் பாகிஸ்தானுக்கும் காஷ்மீரத்துக்குக்கும் ஐநாவுக்கும் அள்ளித் தெளித்த வாக்குறுதிகள் கொஞ்ச நஞ்சமல்ல.
பாகிஸ்தான், இந்தியா இரண்டில் எப்பக்கம் இணைவது என்பது முழுக்க முழுக்க காஷ்மிரி மக்களின் விருப்பம் என 1947 அக்டோபர் 27 அன்று பாகிஸ்தான் தலைமையமைச்சருக்கு அனுப்பிய தந்தியில் குறிப்பிட்டார் நேரு. பொதுவாக்கெடுக்குப் பிறகு காஷ்மீரத்தை இணைத்துக் கொள்வதே தமது கொள்கை என்றும், அவர்கள் விதியை அவர்களே தீர்மானித்துக் கொள்வார்கள் என்றும் 1947 நவம்பர் 2, 3 தேதிகளில் நிகழ்த்திய வானொலி உரைகளில் குறிப்பிட்டார் நேரு.
இதே போன்ற வாக்குறுதிகளை 1948 மார்ச்சு 5 அன்று இந்திய அரசியல் நிர்ணய சபையில் ஆற்றிய உரையிலும் குறிப்பிட்டார். காஷ்மீர் பிரதேசம் இந்தியாவுக்கோ பாகிஸ்தானுக்கோ அளிக்கப்பட்ட பரிசாகவே அனைவராலும் கருதப்படுகிறது என்றும், காஷ்மீர் விற்பனைப் பண்டமன்று என்பதை மக்கள் மறந்து விடுகிறார்கள் என்றும் 1951 ஜூலை 6 அன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு அளித்த அறிக்கையில் குறிப்பிட்டார்.
காஷ்மீரத்தில் நம் விருப்பங்கள் எதையும் திணிக்கப் பார்ப்பது நமது நாடாளுமன்றம் கடைப்பிடிக்கும் கொள்கைகளுக்கு முரணானது என்றும், அவர்கள் இந்தியாவை விட்டுப் போக விரும்பினால் அவர்களை அனுப்பிவைப்பதே நியாயமானது என்றும், அது நமக்கு எவ்வளவு கசப்பாக இருந்தாலும் நாம் அதனை நிறைவேற்றித் தர வேண்டும் என்றும் 1952 ஆகஸ்டு 7 அன்று இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றினார் நேரு.
காஷ்மீர் இணைப்பு தற்காலிகமானதே என்பதை பட்டேலும் ஷ்யாம் பிரகாஷ் முகர்ஜியும் பல முறை தெளிவுபடுத்தியதை காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை விவாதங்களே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
எவ்வளவோ வாக்குறுதிகளை காஷ்மீரத்துக்கு அளித்த நேருதான் பிற்பாடு தன் நெஞ்சமெல்லாம் வஞ்சம் குடிகொண்டிருந்ததை மெய்ப்பிக்கலானார். ஷேக் அப்துல்லா காஷ்மீரைப் பிரித்துச் செல்ல சதி செய்வதாகக் கூறி அவரை 1953 ஆகஸ்டில் கைது செய்து சிறையிலடைத்தார். காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை வரித்துக் கொண்ட உரிமைகள் ஒவ்வொன்றாகச் சட்டங்களுக்கும் அறங்களுக்கும் எதிராகப் பறிக்கத் தொடங்கினார்.
இதனால் பிரதமர் முதல்வரானார், காஷ்மீர் தேசியக் கொடி இந்தியக் கொடி ஆயிற்று. பாகிஸ்தான் ஊடுருவல், ஷேக் அப்துல்லா சதி என இல்லாத பொல்லாத காரணங்களைக் கூறி பொது வாக்கெடுப்பு நடத்தாமல் அவர் சாகும் வரை ஏமாற்றி வந்தார்.
ஆனால் இந்தக் கடைந்தெடுத்த இந்தியத் துரோகங்களையும் பொய்மைகளையும் மூடி மறைந்து விட்டுத்தான் இன்றைய பாஜகவினர் உறுப்பு 370ஐ நீக்கு எனக் கூப்பாடு போடுகின்றனர். அரிசிங்கே காஷ்மீரை தாரை வார்க்கத் தயாராக இருந்த நிலையில், நேரு அவசரப்பட்டுப் பொது வாக்கெடுப்புக்கு ஒத்துக் கொண்டு விட்டாராம். இப்படி ஒப்புக் கொள்ளா விட்டால் ஷேக் அப்துல்லாவால் மிக எளிதாக காஷ்மீரத்தை பாகிஸ்தானுடன் இணைத்திருக்க முடியுமென நாடாளுமன்றத்திலேயே போட்டுடைத்தார் நேரு. அதாவது இதைத் தடுக்க அவர் நடத்திக் காட்டியதே பொதுவாக்கெடுப்பு நாடகம்!
நேரு ஐநாவுக்குச் சென்றதே தவறாம். எதையும் பொருட்படுத்தாது அவர் பாகிஸ்தான் படைகளை முழுக்க விரட்டியடித்து முழுக் காஷ்மீரத்தையும் கைப்பற்றியிருக்க வேண்டுமென காமிக்ஸ் சாகசக் கதைகளை அவிழ்த்து விடுகிறது பாஜக. திரைப்படத்தில் நரசிம்மா அவதாரமெடுத்து நாலைந்து பேரைக் கூட்டிச் சென்று காஷ்மீரத்தை மீட்டு மிரட்டிய கேப்டன் விஜயகாந்துடன் கூட்டணி கண்ட பாதிப்பா இது தெரியவில்லை.
நேரு தோள்கள் தினவெடுத்து முன்னேறும் வரை, உலக நாடுகள் போண்டா வடை சாப்பிட போயிருக்கும் போலும். நல்லது, இவர்களின் சூராதி சூரர் வாஜ்பாய் கார்கிலோடு சேர்த்து முழுக் காஷ்மீரத்தையும் வெல்லாது போனது ஏனோ? போகட்டும், இந்திரா காந்தி தானம் தந்த கச்சத்தீவைச் சுண்டைக்காய் இலங்கையிடமிருந்து மீட்டுக் காட்டுவாரா இவர்களின் மோடி?
பாஜகவின் அகண்ட பாரத அராஜகங்களுக்கு அளவே இல்லை. இந்திய ஒற்றுமை காக்க, கொடுத்த வாக்குறுதிகளை மீறுவது தவறில்லையாம். ஆகட்டும், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் திடீரென இந்திய-பிரித்தானிய விடுதலை ஒப்பந்தம் செல்லாதென்றும், இந்தியம் தழைக்க இங்கிலீஷ் ஆளுமையே சிறந்தது (இப்போ மட்டும் என்ன வாழுதுன்னு கேட்டுடாதீங்க!) என்றும் கூறினால் அதனை அயோக்கியத்தனம் எனக் கூற மாட்டார்களா இந்துத்துவக் கூட்டத்தினர்.
காஷ்மீரில் நடக்கும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களே அம்மக்கள் இந்தியாவுடன் இணைவதற்கான இசைவாகக் கொள்ளலாம் என பாஜகவுடன் சேர்ந்து ஊதுகின்றன காங்கிரசும் இடதுசாரிக் கட்சிகளும். இந்தத் தேர்தல்கள் பெரும்பாலும் மோசடியானவை என்பது ஒரு புறமிருக்க, இத்தகைய தேர்தல்கள் ஒருபோதும் பொதுவாக்கெடுப்பு ஆகாது என ஐநா 1951இல் தீர்மானமே இயற்றியதை இந்த அரசியல் பண்டிதர்கள் அறிவார்களா?
பொதுவாக்கெடுப்பு எனப் பேசுவதே மகா பாவம் என்றால், இதே வாக்கெடுப்பை நடத்தி, இந்துப் பெரும்பான்மை கொண்ட ஜுனாகத் என்னும் குஜராத்தியப் பரப்பை இந்தியா 1948இல் இணைத்துக் கொண்டது எப்படி? பொதுவாக்கெடுப்பு இந்துக்களுக்கு என்றால் இனிக்கும், இசுலாமியருக்கு மட்டும் கசக்கும் என்பதுதான் இந்துத்துவ நீதியோ?
370ஆவது உறுப்பு தற்காலிகமானது என இந்திய அரசமைப்பே கூறும் போது அதனை நீக்குவதில் தவறென்ன என்று குழப்புகிறது பாஜக. இங்கு தற்காலிகம் என்னும் சொல் குறிப்பது பொதுவாக்கெடுப்பு நடத்துவது வரையிலான காலத்தையே என்பதை நாம் குழம்பாது புரிந்து கொள்ள வேண்டும்.
370இன்படி காஷ்மீரச் சொத்துக்களை அனுபவிக்க முடியவில்லையே என பாஜக புலம்புகிறது. கர்நாடகத்தில் அதிகப்படியான வேளாண் நிலங்களை அயல் மாநிலத்தார் வாங்கத் தடைவிதிக்கும் சட்டம் உள்ளதே, அதனை கர்நாடகத்தை ஆண்ட பாஜக முதலமைச்சர்கள் எவரும் அகற்றத் துணியாதது ஏனோ?
370ஆவது உறுப்பை உண்டாக்கியது நேருவின் பெருந்தவறாம். ஒவ்வொரு சமஸ்தானத்தையும் அண்டைத் தேசங்களையும் கபளீகரம் செய்யும் போதும், நாகலாந்துக்கு 371 A, மணிப்பூருக்கு 371 C, சிக்கிமுக்கு 371 F, கோவாவுக்கு 371 I என்று விதவிதமான அல்வா கொடுத்து இந்திய வல்லாதிக்க அரசுகள் நடத்திய ஏமாற்று நாடகங்கள் இவர்களுக்குத் தெரியாதா என்ன?
370ஐ மறுப்போரும் ஆதரிப்போரும் இந்தியாவின் பொதுவாக்கெடுப்பு உறுதிமொழியை மறுப்பதில் உறுதியாக உள்ளனர்.
பாரத ஒற்றுமை காக்க இன்று வரை ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட காஷ்மீரிகள் பலி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், ஐந்து காஷ்மீரிக்கு ஓர் இந்தியப் படையாள் என்ற கணக்கில் முழுக் காஷ்மீரமுமே இராணுவமயமாகி விட்ட சூழலில், ஏதோ காஷ்மீர்ச் சிக்கல் என்பதையே முழுக்க இந்திய-பாகிஸ்தானியச் சிக்கலாகப் புனைந்து, எந்தப் பேச்சுவார்த்தைகளிலும் காஷ்மீரிகளை ஒரு தரப்பாகச் சேர்த்துக் கொள்ள மறுக்கும் சர்வாதிகரப் போக்குக்கு நடுவில், இந்தியாவின் காஷ்மீர அட்டூழியங்கள் அம்பலத்துக்கு வந்த பிறகு, அடிப்படை அறங்களை, சனநாயக மரபுகளைக் கடைப்பிடிக்க விரும்பும் எவருக்கும், 370 இனியும் ஒரு பொருட்டன்று. பொதுவாக்கெடுப்பில் காஷ்மீர் தேசம் பங்கேற்கட்டும்! அது முடிவெடுக்கட்டும், அவர்களுக்குத் தேவை பாகிஸ்தானா? இந்தியாவா? சுதந்திரமா? என்று.
இந்தச் சனநாயக முடிவே இந்தியத் துணைக் கண்டத்தில் சிறைப்பட்டுக் கிடக்கும் அனைத்துத் தேசிய இனங்களுக்கும் கலங்கரை விளக்கமாய் அமையும்!
(ஆழம் ஜூலை 2014 இதழில் வெளியான கட்டுரை சில திருத்தங்களுடன்)