தமிழ் இலக்கியத்தில் பக்தி இலக்கியத்தின் பாடுபொருள் என்பது காணும் பொருள்கள் அனைத்திலும் இறைவனைக் காணுவதாக அமைகிறது.
ஆழ்வார்கள், நாயன்மார்கள் முதற்கொண்டு பாரதியார் வரை இறைவனைத் தலைவனாகவும், தங்களைத் தலைவியாகவும் பாவித்து எழுதிய பாடல்களை நோக்கினால் புறப்பொருள் கூறுகளோடு அகப்பொருளமைதி கொண்டு பாடும் மரபு தமிழ் பக்தி இலக்கியத்திற்கு உண்டு என்பதை அறிய இயலுகிறது.
திருஞான சம்பந்தர் பாடிய முதலாம் திருமுறை திருக்கானூர்ப் பதிகத்தில் ‘அறத்தொடு நிற்றல்’ என்னும் அகப்பொருள் துறையில் பாடியமையை ஆய்வதை நோக்கமாகக் கொண்டு இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது.
திருக்கானூர்த் திருத்தலம்:
தற்போது மணல்மேடு என்று அழைக்கப்படும் திருக்கானூர் காவிரியின் வடகரைத் தலமாக அமைகிறது. அம்பிகை சிவயோகத்தில் இருந்த போது ஈசன் தீ வண்ணராகத் திருவுருவம் காட்டிய தலமாகும். இங்கு எழுந்தருளியிருக்கும் இறைவன் செம்மேனி நாதர் எனவும் இறைவி சிவலோகநாயகி எனவும் வணங்கப்படுகின்றனர். தக்கேசிப் பண்ணில் நாயக-நாயகி பாவனையில் அமைந்த பதிகமாகும்.
நாயக-நாயகி பாவனை:
ஆன்மாவைத் தலைவியாகவும், இறைவனைத் தலைவனாகவும் கொண்டு பாடுவது நாயக-நாயகி பாவனை என அழைக்கப்படுகிறது.
இறைவனோடு எண்ணங்களில் ஒன்ற நினைத்த ஏக்கமே அகப்பொருளமைதி கொண்ட பக்தியாக மாறுகிறது. பக்தி இலக்கியம் இத்தகு பொருண்மையில், அமைப்பினில் பாடுவதை நாயக-நாயகி பாவனை என அழைக்கப்படுகிறது.
இறைவனோடு எண்ணங்களில் ஒன்ற நினைத்த ஏக்கமே அகப்பொருளமைதி கொண்ட பக்தியாக மாறுகிறது. பக்தி இலக்கியம் இத்தகு பொருண்மையில், அமைப்பினில் பாடுவதை நாயக-நாயகி பாவனை என அழைக்கிறது.
“காமப் பகுதி கடவுளும் வரையார்
ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்” - (தொல்.பொருள்.81)
என கடவுள் மாட்டுத் தெய்வப் பெண்டிர் நயந்த பக்கமும், மானிடப் பெண்டிர் நயந்த பக்கமும் பாடப்படும் என்று குறிப்பிடுகிறது தொல்காப்பியம்.
அறத்தொடு நிற்றல்:
‘அறத்தொடு நிற்றல்’ என்பதற்கு தமிழ்-தமிழ் அகராதி களவினைத் தமர்க்கு (சுற்றத்தார்க்கு) வெளிப்படுத்தல் என விளக்கம் தருகிறது.
களவொழுக்கத்தில் ஈடுபட்ட தலைவி தோழிக்கும், தோழி செவிலிக்கும், செவிலி நற்றாய்க்கும், நற்றாய் தந்தை-தன்னையர்க்கும் முறையாக வெளிப்படுத்தி நிற்பது அறத்தொடு நிற்றல் எனப்படும்.
இதனை,
“தலைவி பாங்கிக் கறத்தோடு நிற்கும்
பாங்கி செவிலிக் கறத்தோடு நிற்கும்
செவிலி நற்றாய்க் கறத்தோடு நிற்கும்
நற்றாய் தன்னை தன்னையர்க் கறத்தோடு
நிற்ப என்ப நெறியுணர்ந் தோரே”
(நம்பி அகத்.48)
என்று நம்பியகப் பொருள் குறிப்பிடுகிறது.
அறத்தொடு நிற்றலுக்கு விளக்கம் தருமிடத்து,
முறையுடையதாகப் பேசும் பேச்சை ‘அறத்தொடு நிற்றல்’
என்று கூறக் காரணம் என்ன? தலைவி அறத்தொடு பொருந்தவே நடந்திருக்கின்றாள் என்பதை ஒருவருக்கொருவர் காட்டி நிற்றல்தான் அறத்தொடு நிற்றல் என்பது. அறம் என்பதை இங்கு முறை, தக்கது என்று பொருள்படுத்த வேண்டும் என்பார்.
ந.சுப்புரெட்டியார் (தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை ப.144)
அறத்தொடு நிற்றல் நடைபெறும் முறை:
அறத்தொடு நிலையானது முன்னிலைமொழி, முன்னிலைப் புறமொழி என இரு வகைப்படும் என்பார் நாற்கவிராச நம்பி.
தொல்காப்பியர்,
“எளித்தல் ஏத்தல் வேட்கை யுரைத்தல்
கூறுதல் உசாவுதல் ஏதீடு தலைப்பாடு
உண்மை செப்புங் கிளவியோடு தொகை இ
அவ்வெழு வகைய என்மனார் புலவர்” (தொல்.பொருளியல்.நூ.12)
என தலைவனை எளியவனாகக் கூறுதல், தலைவனை உயர்த்திக் கூறுதல், தலைவனது வேட்கையை மிகுத்துரைத்தல், தாமும் பிறருடனே உசாவுதல், காரணங்கூறி உணர்த்துதல், எதிர்ப்பட்டமை கூறுதல், உண்மையுரைத்தல் என்னும் ஏழு வகைகளில் தோழி அறத்தொடு நிற்றல் அமையும் என்பர்.
தலைவி அறத்தொடு நிற்றல்:
பாங்கியிற் கூட்டம் ஒன்று நீங்கலாக மற்ற மூன்று புணர்ச்சிக் கண் தலைவன் ஒரு வழித்தளத்திலும், வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிந்தாலும் தலைவனைச் செவிலி குறிவயிற் கண்டாலும், மனைவயிற் செறிக்கப்பட்டாலும், தலைவிக்கு வருத்தம் மிகுமாயின் தோழி தன்னை வினவினாலும், வினவாவிட்டாலும்
அத்தோழியிடத்து அனநடைக்கிழத்தி அறத்தோடு நிற்கும். இதனை,
“...வருத்தங்கூறின்
வினவியக் கண்ணும் வினவாக்கண்ணும்
அனநடைக் கிழத்தி அறத்தொடு நிற்கும்” (நம்பி.அகத்.49)
அறத்தொடு நிற்றல் தோழிக்கே சிறப்புடையதாக இருப்பதைத் தொல்காப்பியம், நம்பியகப் பொருள் போன்ற இலக்கண நூல்களும், குறிஞ்சிப்பாட்டு முதலான சங்க இலக்கிய நூல்களும் எடுத்துரைக்கின்றன. இருப்பினும் பக்தி இலக்கியத்தைப் பொறுத்த வரையில் உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்த நாயக-நாயகி பாவனை அவசியமாகிறது. திருக்கானூர்ப் பதிகத்தில் ஞான சம்பந்தர் தன்னை ஒரு பெண்ணாகப் பாவித்து சிவனை ஆண்மகனாக அன்பு கொண்டு தன் பக்தியை வெளிப்படுத்துவதால் தலைவியின் கூற்றாகவே இப்பதிகம் அமைகிறது. திருஞான சம்பந்தர் அறத்தொடு நிற்றலைத் தலைவிக்குச் சிறப்புரிமையாக்கிப் பாடியதைத் திருக்கானூர்ப் பதிகத்தில் காண முடிகிறது.
திருக்கானூர்ப் பதிகத்தில் அறத்தொடு நிற்றல்:
தக்கனால் நேரப்பெற்ற சாபம் நிவர்த்தியடையும் பொருட்டு ஈசன் சந்திரனைத் திருமுடியில் சூடி அருள் புரிந்த இடம் திருக்கானூர் ஆகும். பெருமை மிகுந்த இடம் வாகனத்தில் வரும் இறைவனாகிய தலைவன் தன் இல்லம் புகுந்து உள்ளத்தைக் கவர்ந்து கொண்டதாக தலைவி தோழிக்கு அறத்தொடு நிற்பதாகப் பாடியுள்ளார் திருஞான சம்பந்தர்
இதனை
“இறையார் வந்தென் இல்புகுந்தென்
னெழில் நலமுங் கொண்டார்”
(சம்பந்தர் தேவாரம் 1-73.3)
என்ற பாடலடிகளால் அறிய முடிகிறது.
தேகத்தை ‘இல்லம்’ எனவும் அத்தேகத்தில் புகுந்த இறைவன் மனத்தினில் நுழைந்து, எழில் பெறச்செய்து தன்னைத்தானே ஆட்கொண்டான் என்ற மிகு அன்பு நெறி உணர்த்தப்படுகிறது.
“எண்ணா வந்தென் இல்புகுந்து அங்கு
எவ்வ நோய் செய்தான்”
(சம்பந்தர் தேவாரம் 1: 73.4)
“ஊர்கொள் தோறும் ஐயம் ஏற்றுஎன்
னுள்வெந் நோய் செய்தார்”
(சம்பந்தர் தேவாரம் 1: 73.5)
என்று பிற பொருட்கள் மீது வெறுப்படையுமாறு செய்து, ஊர்கள்தோறும் பிச்சை ஏற்கும் செயல் புரிந்து உள்ளத்தைக் கவர்ந்த கள்வன் என்று அறத்தொடு நிற்கிறாள் தலைவி.
ஈசன் உள்ளம் புகுந்து ஆட்கொண்டதால் உலகப்பொருள் மீது பற்று நீங்கி தலைவனாகிய ஈசனை மட்டுமே நினைந்து இன்புறும் தகைமையை ‘எவ்வ நோய் செய்தான்’ என்று அறத்தொடு நிற்கிறாள் தலைவி.
“....ஐயம் என்றென்
இல்லே புகுந்து உள்ளத்
தெளிவு நானும் கொண்ட கள்வர்”
(சம்பந்தர் தேவாரம் 1:73:6)
“..... பொக்கம் பல பேசிப்
போவார் போல் மால் செய்து உள்ளம்
புக்க புரி நூலர்”
(சம்பந்தர் தேவாரம் 1:73:7)
என்று இல்லம் புகுந்து தன்னுடைய உள்ளத்தையும், தெளிவினையும், தன்மானத்தையும் கவர்ந்து கொண்டார் ஈசனாகிய தலைவன். தலைவனை நினைத்து மகிழும் தலைவியின் மனம் களிக்குமாறு பேசிச் செல்லும் தலைவனின் செயலை ‘பொக்கம் பல பேசிப் போவார் போல’ என்று அறத்தொடு நிற்கிறாள் தலைவி. இவ்வாறு தலைவனாகிய ஈசனை களவில் கண்டு மகிழ்ந்து, கற்பனையில் தோற்றத்தைக் கண்டு மகிழ்ந்து களவொழுக்கத்தைத் தலைவி வெளிப்படுத்துவதாகப் பாடியுள்ளார் சம்பந்தர்.
தமிழ் போன்று இனிமையாகப் பேசியும், தாளம், வீணை, முழவம், மொந்தை ஆகிய இசைக்கருவிகளுடன் பாடல்களைப் பாடியும், பாடல்களுக்கு ஏற்ப அசைவுகளைப் புரிந்தும், தன்னுள்ளத்தில் மகிழ்ச்சியைத் தந்து, எந்நேரமும் தலைவனையே நினைக்கச் செய்து குமிழும் பூ நிறத்தைத் தந்தவன் திருக்கானூர் ஈசன் என்று அறத்தொடு நிற்கிறாள் தலைவி.
“.... என்னுள்ளம் புகுந்து மாலை காலை ஆடுவான்”
(சம்பந்தர் தேவாரம் 1.70.9)
என்றும்,
“.... கள்வர் வெள்ளர் போல உள் வெந்நோய் செய்தார்”
(சம்பந்தர் தேவாரம் 1.70.10)
என்றும், திருமாலும், பிரமனும் காண இயலாத ஈசனாகிய தலைவன் தன் சிந்தையில் புகுந்தும், நாவின் உறைந்தும் சென்னியிலும் விளங்குகின்றான். தலைவியை முழுமையாக ஆட்கொண்டதை உணர்த்துகிறது. தன் உள்ளத்தில் புகுந்து காலை, மாலை இரு வேளையிலும் ஆடுதலைத் தலைவி தோழிக்கு உணர்த்துவதாக அறத்தொடு நிற்றல் அமைகிறது. கள்வராகிய ஈசன் தூய்மையாக உள்ளவர் போல் தன் உள்ளத்தில் புகுந்து நோய் உறுமாறு செய்தார் என தலைவி அறத்தொடு நிற்கும் நிலையை திருக்கானூர்ப் பதிகத்தில் காண முடிகிறது.
பார்வை நூல்கள்
- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதலாம் திருமுறை
- தொல்காப்பியம் - பொருளதிகாரம்
- நம்பியகப்பொருள்
- தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை - ந.சுப்புரெட்டியார்