பெட்ரோல், தீசல் போன்ற எரிபொருள்கள் விலை ஏறிக் கொண்டே போகின்றன. சமையல் எரிவாயுவின் விலையும் இதுவரை காணாத விலைஉயர்வைக் கண்டிருக்கிறது.

amit sha 372நாடு முழுவதும் மக்களின் கோபமும் மெதுவாக ஏறுநிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறது. என்ன செய்யலாம்? ஆங்கிலம் வேண்டாம், இந்தி போதும் என்று சொல்லலாம். உடனே மக்கள் அதுபற்றிப் பேசுவார்கள். இந்தி எதிர்ப்பில் எரிபொருள் விலையேற்றம் அமிழ்ந்து போகும் என்று ஒன்றிய அரசு திட்டம் போட்டுச் செயல்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இது ஒரு திசைதிருப்பும் முயற்சியாக இருக்கலாம். இருந்தபோதிலும், நாம் இரண்டிலும் கவனமாக இருப்போம்! இரண்டையும் எதிர்ப்போம்!!

“பிரதமர் மோடி முடிவெடுத்து விட்டார். இப்போதே 70 விழுக்காடு ஒன்றிய அரசின் கோப்புகள் இந்தியில்தான் தயாராகின்றன. இனி 100 விழுக்காடும் இந்தியே ஆட்சி செய்யும். ஆங்கிலத்திற்கு வேலையில்லை” என்று அறிவித்துள்ளார் அமித்ஷா. ஆங்கிலத்திற்கு மாற்றாகத்தான் இந்தியே தவிர, உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக இல்லை என்று ஒரு சமாதானத்தையும் கூறியுள்ளார்.

இதே சமாதானம்தான் கடந்த 75 ஆண்டுகளாகச் சொல்லப்படுகிறது. இங்கே ஆங்கிலத்தின் மீது ஏன் இவ்வளவு கோபம் என்ற வினாவிற்கு ஒரே ஒரு விடைதான் உள்ளது. அது ஆங்கிலத்தின் மீதான கோபம் இல்லை. ஆங்கிலம் வேண்டாம் என்று சொல்பவர்களின் வீட்டுப் பிள்ளைகள் எல்லோரும் ஆங்கிலம் அறிந்தவர்களாகவே இருக்கின்றனர். எங்களுக்கு மட்டும் ஆங்கிலம் இருக்கட்டும், உங்களுக்கெல்லாம் வேண்டாம் என்பதுதான் அதன் பொருள்!

ஆங்கிலம் ஒழிந்தால்தான், இந்தியும், இந்தி வழி சமஸ்கிருதமும், சமஸ்கிருதத்தின் வழி பார்ப்பனியமும் ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். இது வெறும் மொழிப்போர் அன்று. இது ஒரு பண்பாட்டுப் போர்!

இன்று ஆங்கிலம் வேண்டாம், உங்கள் தாய்மொழியும், இந்தியும் இருக்கட்டும் என்று சொல்பவர்கள், நாளை, தாய்மொழியும் வேண்டாம், இந்தி மட்டுமே போதும் என்று சொல்வார்கள். அப்படிச் சொல்வார்கள் என்பதற்கு என்ன ஆதாரம்? இன்றைய வடஇந்திய மாநிலங்கள் பலவே இதற்கான ஆதாரங்களாக உள்ளன!

வடஇந்தியாவில் பல மாநிலங்களில், அம்மாநிலத் தாய்மொழிகளைப் புறந்தள்ளி விட்டு, இந்தி ஆட்சிக்கட்டில் ஏறிவிட்டது என்பது வெளிப்படை! சில எடுத்துக்காட்டுகளை வேண்டுமானால் பார்க்கலாம்.

உத்தரப்பிரதேச மாநிலமே, முழுக்க இந்தி பேசும் மாநிலமில்லை. அங்கு பல்வேறு தாய்மொழிகள் உள்ளன. வடமேற்கு உ.பி.யின் தாய்மொழி பிரஜ் பாஷா. தென்மேற்கு உ.பி.யின் தாய்மொழி புத்தேல்கண்டி. வடகிழக்கு உ.பி.யிலோ போஜ்பூரி தாய்மொழி. ஆனால் எல்லா மொழிகளையும் தின்றுவிட்டு, இந்தி அங்கு ஆட்சிமொழியாக இருக்கிறது.

உத்தர்காண்டில் இந்தியும், சமஸ்கிருதமும் ஆட்சிமொழிகள். ஆனால் அங்கு வாழும் பெரும்பான்மையான மக்களின் தாய்மொழி, கடுவாலி.

ஹரியானா மாநில மக்கள் பெரும்பான்மையோரின் தாய்மொழி ஹரியானி என்றபோதும் அங்கும் இந்திதான் ஆட்சிமொழி.

மிகப்பெரிய கொடுமை ராஜஸ்தானில் நடக்கிறது. அங்கே 5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ராஜஸ்தானி மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். ஆனால் அம்மக்களின் மொழி அங்கு ஆட்சி மொழியாக இல்லை என்பது மட்டுமில்லை, எட்டாவது அட்டவணையில் கூட அந்த மொழி இடம்பெறவில்லை. இந்தியே ஆட்சிமொழியாக உள்ளது. மத்தியப் பிரதேசத்தில் இந்தி பலருக்குத் தாய்மொழியாக உள்ளது என்ற போதிலும், அங்கு உருது, அவதி, மால்வி, பகேலி போன்ற பல மொழிகள் உள்ளன. அவைகளுக்கு அங்கு எந்த மதிப்பும் இல்லை. சத்தீஸ்கரில், அவர்களின் சட்டிஸ்கரி மொழியை விட்டுவிட்டு இந்தியை ஆட்சிமொழி ஆக்கியுள்ளனர். ஜம்முவின் தாய்மொழி டோக்ரி. லடாக்கின் தாய்மொழி லடாக்கி. ஆனால் அங்கும் இந்தியே ஆட்சிமொழி என்று அண்மையில் அறிவித்துள்ளனர்.

எனவே இன்றைய அமித்ஷாவின் பேச்சு நாளை இந்தியா முழுவதும் உள்ள தாய்மொழிகளை அழிக்கும் முயற்சி! ஆங்கிலத்திற்கு மட்டும் எதிரானது என்று எண்ணி ஏமாந்துவிடக் கூடாது.

இவற்றையெல்லாம் தொலைநோக்கோடு முன்னுணர்ந்தே பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற நம் தலைவர்கள், தமிழ், ஆங்கிலம் என்னும் இருமொழிக் கொள்கையை விடாது வலியுறுத்தி வந்துள்ளனர். இன்றைய தலைவர் தளபதியும் அதில் உறுதியாக இருக்கிறார்.

நாம் ஒன்றும் ஆங்கில மோகம் உடையவர்களோ, ஆங்கில அடிமைகளோ இல்லை. இந்தியாவின் அராசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளும் ஆட்சிமொழிகளாக இருக்க வேண்டும் என்பதே நம் கோரிக்கை. ஆங்கிலத்தைத் தொடர்பு மொழியாக மட்டுமே கோருகின்றோம். நம் இந்த நிலைப்பாடு திடீரென்று தோன்றியதில்லை. 1963 ஆம் ஆண்டே அறிஞர் அண்ணா இந்தக் கோரிக்கையை, மாநிலங்களவையில் முன்வைத்தார். அதன்பிறகு, முரசொலி மாறன் 1982 அக்டோபரிலும், திருச்சி சிவா 2013 மார்ச்சிலும் முன்வைத்தனர். திமுகவின் வலியுறுத்தலை ஏற்றுத்தான்

2004 ஆம் ஆண்டு, அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக்குவது குறித்து ஆராய, டாக்டர் சிட்டகாந்ட் மகோபாத்ரா குழுவை அமைக்கப்பட்டது. நாம் தெளிவாகவே உள்ளோம்.

அவர்களும் சிலவற்றில் தெளிவாக இருக்கின்றனர். தமிழ்நாட்டில் திராவிடத்தை ஒழிக்காமல், ஆரியத்தை நுழைக்க முடியாது, ஆங்கிலத்தை ஒழிக்காமல் இந்தி, சம்ஸ்கிருத மொழிகளை நுழைக்க முடியாது என்று உணர்ந்துள்ளனர்.

அதனால்தான், திராவிட எதிர்ப்பு, ஆங்கில எதிர்ப்பு என இரண்டிலும், ஆரிய இந்துக்கள், தமிழ் இந்துக்கள் இருவரும் கைகோத்துச் செயல்படுகின்றனர்.

அந்தச் செயல்பாடுகளின் அடுத்தடுத்த முயற்சிகள்தான், அமித்ஷாவின் பேச்சுகள்! நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல், மொழிப்போரை உருவாக்குவது நாட்டிற்கு நல்லதில்லை. இந்தியாவை இன்றைய இலங்கையாக ஒன்றிய அரசு ஆக்கிவிடக் கூடாது!

- சுப.வீரபாண்டியன்

Pin It