OUR HINDU RASHTRA WHAT IT IS HOW WE GOT HERE / AAkAR PATEL (2020),

west Land publications private limited, 1st Floor, A Block, East Wing, plot No40, SP Infocity, Dr MGR Salai, Perungudi, kandanchavadi, 600 096

ஓரளவுக்கு இந்தியாவின் விடுதலை இயக்க வரலாற்றையும் இந்திய அரசியலையும் சற்று ஆர்வத்துடன் வாசிப்பவர்களுக்கு ‘இந்து ராஷ்டிரம்’ என்ற அரசியல் வரலாற்றுக் கலைச்சொல் புதியதுமல்ல புரியாததுமல்ல. வரலாற்று அடிப்படையில் நோக்கும் போது இந்தியாவின் கடந்த கால வரலாற்றில் பல்வேறு மதங்கள் புதிதாகத் தோன்றியதும் மறைந்ததும் நிகழ்ந்துள்ளன. தொல் சமயம் (புராதன சமயம் -பிரிமிடிவ் ரிலிஜன்) தொடங்கி வேத அல்லது வைதீக சமயம், (சைவம் வைணவம்) வேத மறுப்புச் சமயங்கள் (சமணம், பௌத்தம், ஆசீவகம்,) கடவுள் என்ற கருத்து நிலையை ஏற்றுக் கொள்ளாத உலகாயுதம் அல்லது சார்வாகம் எனக் குறிப்பிட்டுச் சொல்லும் எண்ணிக்கையில் புதிய சமயங்கள் உருவாகி நிலை பெற்றுமுள்ளன, மறைந்தும் உள்ளன.

OUR HINDU RASHTRAஇதன் அடுத்த கட்டமாக அயல் நாடுகளில் இருந்து பார்சி மதம், இஸ்லாம், கிறித்தவம் ஆகிய சமயங்கள் பரவி நிலை பெற்றன. இவை தவிர இயற்கை வழிபாடு, ஆவியம், குலக்குறியம் சார்ந்த வழிபாடு எனப் பழங்குடிகள் தொல்சமயத்தைப் பின்பற்றி வந்தனர். இவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது ஒற்றைச் சமயத்தைப் பின்பற்றும் நாடாக வரலாற்றில் இந்தியா இருந்ததில்லை என்பது புலப்படுகிறது. மன்னர்களின் விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்ப சில குறிப்பிட்ட மதங்கள் அவ்வப்போது அரசு மதம் போன்று காட்சியளித்தாலும் அத் தகுதி பெறாத மதங்கள் முற்றிலும் அழிந்துவிடவில்லை.

இன்றைய இந்திய அரசியலில் சற்று வலுவாக ஒலிக்கப்படும் சொல்லாக ‘இந்து ராஷ்டிரா' (இந்து இராச்சியம்) என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இது குறித்து இந்நூல் அறிமுகம் செய்கிறது.

நூலாசிரியர்

இந் நூலின் ஆசிரியரான ஆகர் பாட்டில் இதழாளர், மொழிபெயர்ப்பாளர், சிண்டிகேட் கட்டுரையாளர். பன்னாட்டுப் பொது மன்னிப்புக் கழகத்தின் (Amnesty International) இந்தியக் கிளையின் நிர்வாக இயக்குநராக 2019 நவம்பர் வரை பணியாற்றியுள்ளார்.

நூலின் உள்ளடக்கம்

பதினான்கு இயல்களைக் கொண்ட இந்நூலின் உள்ளடக்கம் குறித்து இந் நூலின் முன்னுரையிலும், பதினாறு பக்க அளவிலான அறிமுக உரையிலும் மிகத் தெளிவாக நூலாசிரியர் அறிமுகம் செய்துள்ளார்.இதுவே இந்நூலின் மையக் கருத்தை நாம் சரியாகப் புரிந்துகொள்ளப் போதுமானதாக உள்ளது.

கடந்த முப்பது ஆண்டு காலமாகவே இந்தியாவில் பெரும்பான்மைவாதம் தலைதூக்கியுள்ளதாகக் கூறும் நூலாசிரியர் இப்போதைய நிலையை நாம் எப்படி வந்தடைந்தோம் என்பதை அறிந்து கொள்ளத் தம்முடைய இந்நூல் துணை நிற்கும் என்று கருதுகிறார். மேலும் இந் நூலின் நோக்கம் குறித்து,

“இந்தியாவில் கடந்த முப்பது ஆண்டுகளாக நடந்திருப்பது புதியது அல்ல. ஏற்கெனவே இங்கு இருந்த பெரும்பான்மைவாதத்தின் ஒன்றிணைப்பு தான் இது. ஆனால் இன்று செயல் படுத்தப் படுவதைப்போல இவ்வளவு வெளிப்படையாகவும், வெறியுடனும் அன்று இல்லை. ஆனாலும் இருந்தது. இன்று நிலவும் நிலைக்கு நாம் எப்படி வந்து சேர்ந்தோம் என்பதைப் புரிந்து கொள்ள இந்த நூல் முயற்சி செய்கிறது.” என்று தமது முன்னுரையில் (பக்கம்: vii) குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் பெரும்பான்மை வாதம்

தென் கிழக்கு ஆசிய நாடுகளான ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மாலத்தீவு, ஸ்ரீலங்கா, பங்களாதேஷ், பூடான், நேபாளம் ஆகிவை தத்தம் நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டப்படி ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு அல்லது ஒரு சமூகத்திற்கு முன்னுரிமை வழங்கும் நாடுகளாக உள்ளன. ஆனால் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அவ்வாறில்லை. இது எந்த ஒரு சமூகத்திற்கும் சமயத்திற்கும் முன்னுரிமை வழங்கவில்லை.இவ்வகையில் இது வேறுபட்டு நிற்கிறது.

2014இல் பாரதிய ஜனதா கட்சி இந்தியாவில் ஆட்சிக்கு வந்த பின்னர் இதுவரை இருந்த இந்நிலைக்கு எதிர்மறையான திசையில் பயணிக்கத் தொடங்கிவிட்டது.இது நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் இலட்சியத்திற்கும், நம் சமூக நடப்பியலுக்கும் எதிரானதாக அமைந்துவிட்டது. சிறுபான்மை­யினர் உளம் சார்ந்த உளைச்சலுக்குத் தொடர்ச்சியாக ஆளாகிறார்கள். மாற்றுக் கருத்துடையோர் தண்டனைக்கு ஆளாகிறார்கள். நீதித்துறை செயலற்றுப்போக அவர்களது உரிமைகள் அரசால் கட்டுப்படுத்தப் படுகின்றன. வன்முறையும், பாகுபாடுகளும் ஊடகங்களில் நாள்தோறும் இடம் பெறுகின்றன.வகுப்புவாதத்தை நோக்கி பி.ஜே.பி. மக்களைத் தள்ளுகிறது. இவ்வாறு பெரும்பான்மைவாதத்தை நோக்கி இந்தியா பயணிக்கிறது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாறுதல்கள் எவற்றையும் மேற்கொள்ளாமலேயே நடை முறையில் உள்ள சட்டங்களின் துணையுடனேயே பெரும்பான்மைவாதம் நடைமுறைப் படுத்தப்படுகிறது.

வலதுசாரிக் கருத்தியல்

இந்துத்துவா கருத்தியலும் அதன் ஆதரவாளர்களும், அதற்கு வாக்காளிப்போரும் வலதுசாரிகள் என்று அழைக்கப்படுகின்றனர். இதன் பொருத்தப்பாடு குறித்து சற்று விரிவாகவே இந் நூலாசிரியர் தன் அறிமுக உரையில் விவாதித்துள்ளார். தம் விவாதத்தின் தொடக்கத்தில் வலது அல்லது வலதுசாரி என்ற சொல்லின் உருவாக்கம் குறித்தும் அது வெளிப்படுத்தும் பொருள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.

பிரஞ்சு பாராளுமன்றத்தில் அதன் உறுப்பினர்கள் அமரும் இருக்கை இடம்பெறும் இடத்தை அடிப்படையாகக் கொண்டே வலது என்ற சொல் உருவாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் பழமைவாதிகள் சமூக மாற்றங்களை விரும்பாது முடியாட்சியின் பிற்போக்குச் சிந்தனைகளையும் பழைய சமுக ஒழுங்கையும் பாதுகாக்க முயன்றார்கள். இவர்கள் அந்நாட்டின் சட்டமன்றத்தில் அதன் தலைவருக்கு வலது பக்கத்தில் அமருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இவர்களுக்கு மாறாக பழமைக்கு எதிரான சீர்திருத்தங்களை ஆதரிக்கும் குடியரசு ஆதரவாளர்கள் அவைத் தலைவரின் இடது புறத்தில் அமர்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதன் அடிப்படையிலேயே சீர்திருத்தங்களை எதிர்ப்பவர் களாகவும், மிதவாதிகளாகவும், பழமைவாதிகளாகவும் விளங்குவோர் வலது என்றழைக்கப்படலாயினர்.

கிறித்தவத் தகவுகளையும் மரபுகளையும் அரசின் தலையீட்டில் இருந்து பாதுகாப்பவர்களாக அமெரிக்க அரசியலில் பழமைவாதிகள் உள்ளனர். (கருக்கலைப்பையும், ஆண் ஓரினச் சேர்க்கையையும், அனுமதித்தல் தொடர்பாக) இப் பழமை வாதிகள் அந் நாட்டின் ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி என்ற இரு கட்சிகளிலும் உள்ளனர். கடந்த சில தசாப்தங்களாக இவர்கள் பெரும்பாலும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.

இங்கிலாந்தின் பழமைவாதம் வர்க்க அமைப்பில் இருந்து உருவாகியுள்ளது. இதன் அடிப்படையிலேயே இவர்கள் பழமைவாதிகள் என்ற பொருளை வெளிப்படுத்தும் வகையில் கன்சர்வேட்டிஸ் என்ற பெயரைத் தாங்கியுள்ளனர். இவர்கள் பெரு நில உடைமையாளர்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள். முடியாட்சி ஆதரவு, கிறித்தவத் தேவாலய மேலாண்மையை ஏற்றுக் கொள்ளல் என்பன இவர்களிடம் இடம் பெற்றுள்ளது. இவர்களுக்கு எதிரான அரசியலில் வர்க்க அடிப்படையில் தொழிற்கட்சி உள்ளது. இக் கட்சி தனியார் தொழில் நிறுவனங்களுக்கு மாற்றாக அரசு நிறுவனங்கள் செயல்படுவதை ஆதரிக்கிறது.

அகராதிகளின் வரையறைப்படி ஒரு வலதுசாரி மனிதரோ குழுவோ பழமை வாதிகளாகவும் முதலாளித்துவப் பார்வை கொண்டவர்களாகவோ பிற்போக்கான சிந்தனை கொண்டவர்களாகவோ இருப்பர். மரபு வழிச் சிந்தனைகளுக்கு ஆட்பட்டவர்களாகவும் குறைந்த வரி விதிக்கப்படவேண்டும் என்றும் தொழிற்சாலைகள் தனியாரால் நிருவகிக்கப்பட வேண்டும் என்றும் குறைந்த அளவிலேயே ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்றும் விரும்புவார்கள்.

இந்துத்துவாவின் கருத்தியல்

இச் செய்திகளின் பின்புலத்தில் (1) இந்துத்துவா என்பது வலதுசாரிகளின் கருத்தியல் என்று கொண்டால் அது எதைப் பாதுகாக்க முனைகிறது? (2)இது ஒரு சமூக ஒழுங்கு முறையா?(3)சமூக ஒழுங்கு முறை என்றால் என்ன? சாதிய அமைப்பா வேறு ஏதேனுமா?

இம் மூன்று கேள்விகளுக்கான விடை இதன் பனுவல்களிலோ (Texts) அதன் செயல்பாடுகளிலோ காணப்படவில்லை என்று கூறும் நூலாசிரியர் இந்துத்துவா என்ற சொல் சற்று வேறுபாடான ஒரு சொல் என்கிறார். அவரது கருத்துப்படி வலதுசாரி என்ற சொல்லை இந்துத்துவா என்பதற்கு இணையாகக் குறிப்பிட முடியாது.

அவரது கருத்துப்படி வலதுசாரி என்ற அரசியல் கலைச் சொல்லை இந்துத்துவா என்ற சொல்லுக்கு இணையாகப் பயன்படுத்த முடியாது. அவ்வாறு பயன்படுத்துவது இந்துப் பெரும்பான்மை வாதத்தை இயல்பான ஒன்றாக ஏற்றுக்கொள்ளும் தவறுக்கு ஆளாக நேரிடும்.

நம் கால அரசியல் மொழியில் கூறினால் வலதுசாரி என்ற கலைச்சொல்லானது தனிமனித உரிமை, குறுகிய வெறித்தனமான தேசியவாதம், புலம் பெயர்ந்து வந்தோரின் குடியேற்றத்தை எதிர்த்தல், பிற துறை நிதி ஆதரங்களை மடைமாற்றம் செய்து இராணுவத்தைப் பலப்படுத்தல், பொருளாதாரத்தைத் தாராளமயமாக்கல் எனபனவற்றை உள்ளடக்கிய ஒன்றாகும். இவ் வகையில் இந்தியாவின் இரு தேசிய அரசியல் கட்சிகளின் கொள்கைகளையும் அணுகுமுறைகளையும் பிரித்துப் பார்ப்பது எளிதானதல்ல. மேலும் அமெரிக்காவின் குடியரசுக் கட்சியுடனோ, இங்கிலாந்தின் கன்சர்வெட்டிவ் கட்சியுடனோ பி.ஜே.பி. யை ஒப்பிட முடியாது. இவ்விரு கட்சிகளும் சிறுபான்மையினருக்கு எதிரானவை அல்ல என்பது நூலாசிரியரின் கருத்தாக உள்ளது (அயர்லாந்தில் கத்தோலிக்கர்களுக்கு எதிரான நிலைப்பாடு உள்ளது). இந்துத்துவாவின் முன்னோடிக் கருத்தியலாளரான சாவர்க்கர் இந்துயிசம் என்பது வேதங்கள், புராணங்கள் மீதான நம்பிக்கை என்கிறார். இந்துத்துவம் மூன்று அரசியல் கோரிக்கைகளை நிறைவேற்றும்படி முஸ்லிம்களை வலியுறுத்தி வந்தது. அவை வருமாறு:

(1)          அயோத்தியாவில் உள்ள பள்ளிவாசலை (இராம ஜன்ம பூமி) இந்துக்களிடம் ஒப்படைத்தல்

(2)          இஸ்லாமியர்கள் தம் தனி உரிமைச் சட்டத்தைக் கைவிட்டு பொது சிவில் சட்டத்தை ஏற்றுக் கொள்ளுதல்

(3)          அரசியல் அமைப்புச் சட்டப்படி காஷ்மீருக்கு வழங்கப் பட்டுள்ள சிறப்புரிமைச் சட்டத்தை (பிரிவு370) கைவிடல்.

இவை மூன்றும் கருத்தியல் சார்ந்ததல்ல.ஆனால் இந்து ராச்சியத்தை இந்தியாவில் நிறுவ பி.ஜே.பி. எடுக்கும் முயற்சியின் வெளிப்பாடு என்று கருதத் தூண்டுகிறது. நம்மைச் சுற்றி உள்ள நாடுகளான ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலத்தீவு, ஸ்ரீலங்கா, பூடான், நேபாளம் ஆகியன சமயப் பெரும்பான்மையினரின் ஆட்சிக்கு உட்பட்ட நாடுகள்.

இவற்றின் வரிசையில் இந்தியாவும் இணையுமா என்பதை இந்நூல் ஆராய்கிறது.

- ஆ.சிவசுப்பிரமணியன், தமிழர் சமூக வரலாற்று ஆய்வாளர், மார்க்சிய சிந்தனையாளர்

Pin It