அண்மையில் நடைபெற்ற ஜி.20 நாடுகள் மாநாட்டில் இந்தியாவின் குடிஅரசுத் தலைவர் என்பதை பாரதத்தின் குடிஅரசுத் தலைவர் என்று அழைப்பிதழில் ஒன்றிய அரசு அச்சிட்டிருந்தது.

இந்தியா என்கிற பெயர் அன்னியர்களால் நம் நாட்டிற்குச் சூட்டப்பட்ட பெயர்; அது நமக்கு இழிவைத் தருவது. நமது நாட்டின் பழைய கால பெயரான பாரதம் என்பதையே நம் நாட்டின் பெயராக மாற்ற வேண்டும் என்பது தீவிர இந்துத்வா உணர்வாளர்களின் கோரிக்கையாகும்.

1921இல் மறைவுற்ற சி. சுப்பிரமணிய பாரதியார் இந்த நாட்டிற்குப் பாரதம் என்ற பெயரைச் சூட்ட வேண்டும் என்று அப்போதே கூறிச் சென்றுள்ளார்.

“பாரதம் பரதன் நிலைநாட்டியது. இந்தப் பரதன் துஷ்யந்தராஜாவின் மகன், இமயமலை முதல் கன்னியா குமரி வரையிலுள்ள நமது நாட்டை இவன் ஒன்றுசேர்த்து அதன் மிசை முதலாவது சக்ராதி பத்தியம் (ஒற்றை ஆட்சி) ஏற்படுத்திய படியால் இந்த நாட்டிற்குப் பாரத தேசம் என்று பெயர் உண்டாயிற்று” (பாரதியார் கட்டுரைகள். ப.53).

அப்படி ஒரு அரசன் எந்தக் காலத்திலும் இந்தியா முழுவதையும் ஒற்றை ஆட்சியின்கீழ் கொண்டு வந்து ஆட்சி நடத்தியதாக எந்த வரலாற்று நூலிலும் இல்லை. மகாபாரத கதையில் கூட 56 தேசங்கள் இருந்ததாகத்தான் இருந்தது.bharat indiaமறைந்த காஞ்சி சங்கராச்சாரி சந்திரசேகரனின் சொற் பொழிவுகளைத் திரட்டி வானதி பதிப்பகம் ஏழு தொகுதிகளாக ‘தெய்வத்தின் குரல்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர். அதில் அவர் மறந்தும்கூட இந்தியா என்கிற பெயரை பயன் படுத்தவில்லை. பாரதம் என்ற பெயரைத்தான் பயன்படுத்தி உள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் குரு. எம்.எஸ். கோல்வால் கரின் சிந்தனைக் கொத்து (Bunch of Thoughts) என்ற நூலில் இந்தியா என்பதற்கு மாற்றாக பாரதம் என்ற பெயரைப் பயன்படுத்தி உள்ளார். இந்நாட்டிற்கு பாரத் வர்ஷ் என்ற பெயரைச் சூட்ட வேண்டுகிறார்.

இந்திய அரசமைப்புச் சட்டம் எழுதுவதற்காக உருவாக் கப்பட்ட இந்திய அரசியல் நிர்ணய அவையில் இந்த நாட்டிற்கு பெயர் வைப்பது தொடர்பான விவாதங்கள் 1948ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் நாள் நடைபெற்றது.

அரசு அமைப்புச் சட்ட முதல் வரைவில் “இந்தியா” என்ற பெயர் மட்டுமே இடம்பெற்றிருந்தது.

பேராசிரியர் சிப்பன்லால் சக்ஸ்சேனா என்ற உறுப்பினர் இந்தியாவிற்கு மாற்றாக “பாரதம்” என்ற பெயரை முன் மொழிந்தார். மேலும் அவர் பாரத நாட்டின் தேசிய கீதமாக “வந்தே மாதரம்” என்ற பாடல் இடம்பெறவேண்டும் என்னும் திருத்தம் கொண்டு வந்தார்.

பேராசிரியர் கே.டி. ஷா என்ற உறுப்பினர் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் முதலாவது கூறில் ஒரு திருத்தத்தை கொண்டு வந்தார்.

“India shall be a Secular, Federal
Socialist Union of States”

இந்தியா மதச்சார்பற்ற கூட்டாட்சி; சோசலிச மாநிலங்களின் ஒன்றியம் என்பது அவரது திருத்தமாகும்.

மயூப் அலிபாய் சாய்ப் பகதூர் என்ற உறுப்பினர் Union என்ற சொல்லுக்கு மாற்றாக Federation என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்ற திருத்தத்தை முன்மொழிந்தார். அரசியல் அமைப்புச் சட்டத்தின் முதலாவது கூறுக்கான அனைத்து திருத்தங்களையும் டாக்டர் அம்பேத்கர் நிராகரித்தார்.

இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்றே 15.11.1948 அன்று முடிவு செய்யப்பட்டது. (அரசியல் நிர்ணய அவை விவாதங்கள் தொகுதி ஏழு)

அரசமைப்பு அவையில் மீண்டும் 18.9.1949இல் இது தொடர்பான விவாதங்கள் நடைபெற்றன.

எச்.வி. காமத் என்ற உறுப்பினர் பல்வேறு உறுப்பினர் கள் கொண்டுவந்த திருத்தங்களை எடுத்துக்காட்டினார். பாரத், இந்துஸ்தான் இண்ட், பாரத் பூமி அல்லது பாரத் வர்ஷ் ஆகிய பெயர்கள் முன்மொழியப்பட்டதைக் கூறிவிட்டு துஷ்யந்தனுக்கும் சகுந்தலைக்கும் பிறந்த பரதன் என்ற அரசன் மற்ற அரசர்களை அடக்கி இந்தியாவை ஒரே

குடையின்கீழ் ஆட்சி செய்தான். அந்தக் காலம் முதலே பரதக் கண்டம் என்ற பெயர் வழங்கி வருகிறது என்று கூறினார்.

எனவே பாரத் என்ற பெயரைச் சூட்டுமாறு திருத்தம் கொண்டு வந்தார்.

சேத் கோவிந்ததாஸ் என்ற மற்றொரு உறுப்பினர் இந்தியா அதாவது பாரதம் என்பது சரியல்ல. பாரதம் என்ற பெயர் மட்டுமே சரியானது என்றார். மேலும் அவர் வேதங்கள், உபநிடதங்கள், பிராமணங்கள், மகாபாரதம் போன்ற பழைய புனித நூல்களில் பாரதம் என்ற பெயர் மட்டுமே உள்ளது. விஷ்ணு புராணத்திலும், பிரம்ம புராணத்திலும் பாரதம் என்ற பெயர் உள்ளது என்றார்.

சீனப் பயணி யுவான் சுவாங் இந்த நாட்டை குறிப்பிட பாரத் என்ற பெயரையே பயன்படுத்தியுள்ளார். மகாத்மா காந்தி அவர்கள் “பாரத் மாதாகி ஜே” என்ற முழக்கத்தை முன்வைத்தார் என்று கூறி எனவே பாரதம் என்ற பெயரை மட்டுமே வைக்க வேண்டும் என்றார். இவருக்கு ஆதரவாக இருந்தவரும் இவரை நீண்டநேரம் பேச அனுமதித்தவரும் அரசமைப்பு அவையின் தலைவரான இராசேந்திர பிரசாத் ஆவார்.

கமலாபதி திரிவேதி என்ற உறுப்பினர் ஆயிரம் ஆண்டுகள் அடிமைத்தனத்தில் பாரதம் தன் ஆன்மாவை இழந்துவிட்டது. எனவே அதை மீட்டெடுக்க வேண்டும் என்றார். பாரதம் என்ற பெயரையே சூட்ட வேண்டும் என்றார்.

கள்ளூர் சுப்பராவ் என்ற உறுப்பினர் பாரதம் என்ற பெயரையே ஆதரித்தார். ரிக் வேதத்தில் பாரதம் என்ற சொல் உள்ளதாக எடுத்துக்காட்டினார் (ரிக் 3, 4, 234). இந்திரனே பாரத புத்திரர்களுக்கு சந்ததியை கொடு என்ற சொற்றொடர் உள்ளதாகக் கூறினார். மேலும் வாயு புராணத்தில் இமயம் முதல் குமரி வரை பாரதத்தின் எல்லையாக வரையறுக் கப்பட்டதாகக் கூறினார்.

அடுத்துப் பேசிய மற்றொரு உறுப்பினர் பி.எம். குப்தா, பாரதம் என்ற பெயரையே ஆதரித்தார்.

பழைமைவாதிகளின் கூடாராமாகத் திகழ்ந்த இந்திய அரசியல் நிர்ணய அவையில் அண்ணல் அம்பேத்கர் அவர்களால் தனித்துப் போராடி வெற்றி பெற முடியாத சூழ்நிலையில்தான்,

“இந்தியா அதாவது பாரதம் மாநிலங்களின் ஒன்றியம் ஆகும்” என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். (அரசியல் நிர்ணய அவை விவாதங்கள் தொகுதி ஒன்பது)

தமிழ்நாட்டில் திராவிடர் இயக்கம் விழிப்பாக இருந்த காரணத்தால் நாம் பாரதம் என்ற பெயரைப் பயன்படுத்து வதில்லை. வடஇந்தியாவில் அனைத்துக் கட்சிகளும் இதை சர்வ சாதாரணமாகப் பயன்படுத்துகின்றனர். காங்கிரசுத் தலைவர் ராகுல் காந்தி கூட தன் நடைப்பயணத்திற்கு ‘பாரத் ஜடோவ்’ என்று பெயரிட்டார். இந்திய அரசின் பாரதம் என்ற அறிவிப்புக்கும் அவர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்தியா, பாரதம் இரண்டும் ஒன்றுதான் என்கிறார்.

இந்து சனாதன சாமியார்களின் சன்ஸ்தான் தயாரித்த இந்துராட்டிரத்திற்கான அரசியல் அமைப்புச் சட்டத்தின் 32 பக்க வரைவு அறிக்கையை 14.8.2022 அன்று வெளி யிட்டனர். அதில் இந்நாட்டின் பெயர் பாரத் வர்ஷ், தலை நகரம் வாரணாசி. இங்கு கிறித்தவர்களுக்கும் இசுலாமியர் களுக்கும் வாக்குரிமை இல்லை. அதுமட்டுமல்ல, பழைய யுகங்களில் இருந்த சாஸ்திரங்களே சட்டங்களாக இருக்கும் என்று அறிவித்திருந்தனர். அவர்கள் மீண்டும் நேரடியான மநுதர்ம ஆட்சி அமைக்க அறைகூவல் விடுக்கின்றனர்.

அதற்கான முன்நகர்வுகளில் ஒன்றுதான் இந்த ‘பாரத்’ என்கிற பெயர் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யாமலே மோடி அரசு வேண்டுமென்றே இந்த பெயரைப் பயன்படுத்துகிறது.

ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு சமற்கிருத மொழியில் பெயர் சூட்டப்படுகிறது. இந்தி பேசாத மக்களால் இப்பெயர் களை உச்சரிக்கவும் முடியாது. பாரதம் என்பது நேரடியாக இந்து மதத்துடன் தொடர்புடையது. பாரதம் என்று பெயரிட் டால் இது இந்துக்களின் நாடு என்பதாகும். இது இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் சிறுபான்மை மதத்தவர்க்கும் இந்தி பேசாத பிறமொழித் தேச மக்களுக்கும் மதச்சார்பின்மைக் கோட்பாட்டிற்கும் அனைவரையும் உள்ளடக்கும் நோக்கம் கொண்ட சனநாயக நெறிக்கும் எதிரானதாகும்.

எனவே மதப்போர்வை கொண்ட பாரத்தை எதிர்ப்போம்.

மதச்சார்பின்மையின் குறியீட்டுச் சொல்லான இந்தியாவை உயர்த்திப் பிடிப்போம்!

- வாலாசா வல்லவன்

Pin It