நந்தவனத்தில் நாலாவித வண்ணப் பூக்கள் பூத்துக் குலுங்குவது போல் உலகக் குழந்தை இலக்கியத்தில் பலவிதப் போக்குகள் (TRENDS) காணப்படுகின்றன.  தமிழ்க் குழந்தை இலக்கியத்திலும் அவ்விதப் போக்குகளைக் காண முடிகிறது.  அவை எட்டு வகைப்படும்

  1. மரபான நாட்டுப்புறப் பாடல்களும் கதைகளும் (Folk)
  2. அதீத கற்பனை (Fantasy)
  3. எதார்த்தம் (Realism)
  4. நீதிநெறி (Moral)
  5. அறிவியல் (Science)
  6. கல்வி (School Education)
  7. சாகசம் (Adventure)
  8. நகைச்சுவை (Humour)

முதல் வகையான நாட்டுப்புறப் பாடல்கள் குழந்தையைத் தாலாட்டும் பாடல்களாகவும் சீராட்டும் பாடல்களாகவும் இருக்கின்றன.

‘ஆராரோ, ஆரிராரோ...

யாரடிச்சி நீ அழுதே

மாமன் அடிச்சாளோ

மல்லிகைப் பூ செண்டாலே...’

என்பது போன்ற தாலாட்டுப் பாடல்களும்

‘காக்கா, காக்கா

கண்ணுக்கு மை கொண்டு வா

குருவி, குருவி

கொண்டைக்கு பூக்கொண்டு வா’

என்பது போன்ற பாடல்களும் தாய்மார்களுக்கு உரியது.  என்றாலும் அவை குழந்தை இலக்கியமாகவே கருதப்படுகிறது.

‘அப்பா எழுந்திரையா

அரசே எழுந்திரையா

கொக் கொக்கோ என்று

கோழி கூவுது பார்’

என்று குழந்தையை சீராட்டும் பாடலை கவிமணி எழுதியிருக்கிறார்.

‘காக்காய்! காக்காய்! பறந்து வர்

கண்ணுக்கு மை கொண்டு வா.

கோழீ! கோழீ! கூவி வா

குழந்தைக்கு பூக்கொண்டு வா’

என்ற கவிமணியின் பாடல் ‘காக்கா, காக்கா, கண்ணுக்கு மை கொண்டு வா’ என்ற நாட்டுப்புறப் பாடலை ஒத்ததாக உள்ளது.

‘ஆராரோ ஆராரோ

ஆரிவரோ ஆராரோ

சூடாமணியே

துலக்கமாய் நின்றொளிரும்

வாடா மலரே, என்

மரகதமே கண் வளராய்’

என்பது அழ. வள்ளியப்பா எழுதிய தாலாட்டுப் பாடலாகும்.

kids books 600குழந்தைக் கவிஞர்கள் பலரும் தாலாட்டுப் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.  இன்றும் எழுதுகிறார்கள் என்பதற்குச் சான்று நான் எழுதிய தாலாட்டுப் பாடல் ‘தங்கச்சிப் பாப்பா’ என்ற சிறுவர் பாடல் நூலில் உள்ளது.

தமிழ்க் குழந்தை இலக்கியத்தில் நாட்டுப்புறக் கதைகள் இன்றும் செல்வாக்குடன் விளங்குகின்றன.  ‘வாலுப் போச்சு... கத்தி வந்தது’ போன்ற கதைகளை குழந்தைகள் விரும்பிக் கேட்கிறார்கள்.

‘பாட்டி வடை சுட்ட கதை’ ஒரு நாட்டுப்புறக் கதைதான்.  அக்கதை இன்றும் பல கோணங்களில் சொல்லப்படுகிறது.

‘நாட்டு எலியும் நகரத்து எலியும்’ என்ற நாட்டுப்புறக் கதையை மறைமலையடிகள் மறுஆக்கம் செய்திருக்கிறார்.  விஜய பாஸ்கர் விஜய் ஒரு நாட்டுப்புறக் கதையை இணைத்து ‘நம்பிக்கை’ என்ற ஒரு கதையை எழுதியிருக்கிறார்.

என்றுமே குழந்தைகளுக்கு அதீத கற்பனைக் (ஃபேன்டசி) கதைகள் மிகவும் விருப்பமானவை.  அதிசய உலகில் ஆலிஸ், ஹாரிபாட்டர் போன்ற படைப்புகளின் வெற்றி இதை பறைசாற்றுகிறது.  முன்பின் அறியாத ஒரு உலகத்திற்கு இக்கதைகள் குழந்தைகளை அழைத்துச் செல்கின்றன.

இன்று புதிதாக எழுத வரும் குழந்தை எழுத்தாளர்கள் ‘ஃபேன்டசி’ வகைக் கதைகளை அதிகம் எழுத விரும்புகிறார்கள்.  கற்பனைக் குதிரையைத் தட்டி விடுவது அவர்களுக்கு எளிதாக இருக்கிறதோ, என்னமோ!

குழந்தை இலக்கியத்தில் அதீத கற்பனை வகைக் கதைகளுக்கு நீண்ட பாரம்பரியம் இருக்கிறது, ‘கதைக்கு கண்ணு மூக்கு கிடையாது’ என்கிற பழமொழி இக் கதைகளின் தன்மையினால்தான் ஏற்பட்டது.

மந்திர மாயாஜால கதைகள், தேவதைக் கதைகள் பகுத்தறிவுக்கு முரணானவை.  விலங்குகளும் பறவைகளும் பேசுமா? அவைகளுக்கு மனிதத் தன்மைகள் கிடையாது. நரிக்கு தந்திர அறிவு, காக்கைக்கு ஒற்றுமை, எறும்புக்கு சுறுசுறுப்பு இவற்றை கற்பித்துக் கொண்டிருக்கிறோம்.  இது அறிவியலுக்கு விரோதமானது என்று எதிர்ப்பு தெரிவிப்பவர்களும்  இருக்கிறார்கள்.

உண்மை எது? கற்பனை எது? என்று குழந்தைகளுக்குத் தெரியும்.  பாட்டி சொல்லும் கதையில் பூனை பேசுவதை ஏற்றுக் கொள்ளும் குழந்தைக்கு உண்மையில் பூனை பேசாது என்பது தெரியும் என்று ஆதரவு தெரிவிப்பவர்கள் வாதிடுகிறார்கள்.

விழியன் எழுதியிருக்கும் ‘பென்சில்களின் அட்டகாசம்’ ஒரு அதீத கற்பனை வகைக் கதை.  அதில் பென்சில்கள் பேசுகின்றன.  ஒரே வகுப்பில் படிக்கும் குழந்தைகளின் பென்சில்கள் ‘டூர்’ செல்கின்றன.  ஒரு பென்சில் பொம்மைக் காரை ஓட்டுகிறது.  பென்சில்கள் ஆமையுடன் உரையாடுகின்றன.  இந்த விசித்திர கற்பனை குழந்தைகளைகக் கவருகிறது.

‘பஞ்சு மிட்டாய்’ பிரபு எழுதிய ‘எனக்குப் பிடிச்ச கலரு’ சிறுவர் நாவலில் வண்ணங்களின் உலகமான வண்ணுலகத்தின் தலைவன் வானவன் சிவப்பு, நீலம், பச்சை நிறங்களை சிறை வைக்கிறான்.  வனிதா எனும் சிறுமி வண்ணுலகம் சென்று நிறங்களை விடுதலை செய்கிறான்.  நிறங்களைப் பற்றிய அறிவியலையும் பிரபு இக்கதையில் இணைத்துள்ளார்.  அறிவியலுக்கும் அதீத கற்பனைக்கும் இடையே முரண்பாடு இல்லாமல் இப்படைப்பு உள்ளது.

குழந்தைகளின் மனதில் பயத்தையும் மூட நம்பிக்கையையும் விதைக்கும் அதீத கற்பனைக் கதைகள் மீது எழும் விமர்சனத்தைத் தள்ளி விட முடியாது.  பேய், பிசாக, அரக்கன், முனிவர் பாத்திரங்களைக் கொண்ட கதைகள் குழந்தைகளின் நனவிலி மனதில் பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.  குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்காத அதீத கற்பனைக் கதைகளை ஏற்றுக் கொள்ளலாம்.

குழந்தைகளின் உணர்ச்சிகள் கூர்மையடைவதற்கும் குடும்ப, சமூக உறவுகளை வளர்ப்பதற்கும் எதார்த்த கதைகளே உதவுகின்றன.  மற்றவர்களின் கருத்துகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தையும் அவை தருகின்றன.

தமிழ்க் குழந்தை இலக்கியத்தில் முன்பு எதார்த்த வகைக் கதைகளே அதிகம் எழுதப்பட்டன.  சமூக மாற்றத்தின் காரணமாக பெரியோர் இலக்கியத்திலும் எதார்த்தத்தின் வலு குன்றியது.  குழந்தை இலக்கியத்திலும் அது பிரதிபலித்தது.

குழந்தைகளின் மனவுலகை எதார்த்த வகைக் கதைகளின் மூலமே தெரிந்து கொள்கிறோம்.  குடும்பத்திலும் சமூகத்திலும் அவர்களின் வாழ்க்கை நிலையை அவை பேசுகின்றன.

குழந்தைகள் அனுபவிக்கும் பலவிதக் கொடுமைகளை சமூகத்தின் பார்வைக்குக் கொண்டு வந்தது எதார்த்த வகைக் கதைகளே.  விடுதிகளில் வாழும் குழந்தைகளின் துயரத்தை ‘லே மிஸரபிலும்’ கறுப்பின குழந்தைகளின் அடிமை நிலையை ‘டாம் மாமாவின் குடிசை’யும் போரினால் குழந்தைகள் அகதியாகும் நிலையை ‘என் பெயர் சன்மோல்’ கதையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தன.

தமிழ்க் குழந்தை இலக்கியமும் குழந்தைகளின் மீதான கொடுமைகளை சித்தரித்து உள்ளது.  சித்தியின் கொடுமையை பார்த்திபன் எழுதிய ‘நொண்டிக் குழந்தை’ கதை விவரிக்கிறது.  செல்வந்தர்களின் கொடுமையால் குழந்தைகள் அனுபவிக்கும் துன்பங்களைப் பற்றி ஏராளமான கதைகள் வந்துள்ளன.  கா.சுந்தரி எழுதிய ‘அன்பு ஒன்றுதான்’ என்ற கதை புதுமையானது.  நாவலாசிரியர் சுஜாதாவின் ‘பூக்குட்டி’ நாவலும் இதே பிரச்சனையைத் தான் பேசுகிறது.  நாவலாசிரியர் அகிலனின் ‘கண்ணான கண்ணன்’ சாதிக் கொடுமைக்கு குழந்தைகள் உள்ளாவதைப் பற்றிய கதையாகும்.  மூத்த குழந்தை எழுத்தாளர் ரேவதியின் ‘கொடி காட்ட வந்தவன்’ சிறுவர் நாவல் தீண்டாமையை உள்ளடக்கமாகக் கொண்டது.  அவருடைய ‘ராம் - ரஸாக்’ நாவல் இந்து - முஸ்லீம் ஒற்றுமையை சிறுவர்களுக்கு எடுத்துக் கூறுகிறது.

எதார்த்த வகைக் கதைகள் குழந்தைகளுக்கிடையே காணப்படும் பாசம், அன்பு, நட்பு, பொறாமை, பணிவு, முயற்சி, பற்று, மூத்தோருக்கு மரியாதை போன்ற உள்ளடக்கத்தில் அதிகம் எழுதப்பட்டுள்ளன.  பூவண்ணனின் ‘காவேரியின் அன்பு’ அழ. வள்ளியப்பாவின் ‘நீலா - மாலா’, ‘நல்ல நண்பர்கள்’, தி.கோவிந்தராஜனின் ‘கறுப்பு பூனை’, ஜி.என். சித்ராவின் ‘சித்ராவின் அன்பு’, மேகலையின் ‘தாராவும் மீராவும்’ நல்ல உதாரணங்களாகும்.

கடந்த 30 ஆண்டுகளாக எதார்த்த வகைப் போக்கிலான கதைகளை பூதலூர் முத்து, ஆர்.வி.பதி, பூவை அமுதன், மா.கமலவேலன், லூர்து எஸ்.ராஜ், கொ.மா. கோதண்டம், அரி மதி தென்னகன், தி. ராஜகோபாலன், சுப்ரபாரதிமணியன், சுகுமாரன் போன்றோர் நிறைய எழுதியிருக்கிறார்கள். 

மா. கமலவேலனின் ‘பால புரஸ்கார்’ விருது பெற்ற ‘அந்தோனியின் ஆட்டுக்குட்டி’ இரண்டு சிறுவர்களின் நட்பைப் பற்றிக் கூறும் சிறுவர் நாவலாகும்.

இப்போது உதயசங்கர், விஷ்ணுபுரம் சரவணன், மு.முருகேஷ், கன்னிக்கோவில் ராஜா, பெ.கருணாகரன், கொ.மா.கோ.இளங்கோ ஆகியோர் எதார்த்த போக்கிலான சிறுவர் கதைகளை எழுதி வருகிறார்கள். விஷ்ணுபுரம் சரவணனின் ‘வித்தைக்கார சிறுமி’ குழந்தைகளின் பரிவுணர்ச்சியை அழகாகச் சித்தரிக்கிறது.  ‘பட்டாம் பூச்சி எங்கே?’யும் நல்ல கதை.  மு.முருகேஷ் -ன் ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ தொகுப்பில் நிறைய எதார்த்த வகைக் கதைகள் உள்ளன.  கொ.மா.கோ. இளங்கோவின் ‘கலாவின் நிலா’ அழகான கதை.

எதார்த்த வகையிலான கதைகள் எழுத, குழந்தை எழுத்தாளர்களுக்கு அனுபவமும் குழந்தை உலகத்தோடு தொடர்பும் வேண்டும் என்பது முக்கியமானதாக இருக்கிறது.

குழந்தை இலக்கியம் என்றாலே அது அறிவுரை சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களே அதிகம். அதனால் நிறைய நீதிநெறிக் கதைகள், ஆன்மீகக் கதைகள், பாடல்கள் தமிழில் எழுதப்பட்டுள்ளன,  இன்றும் எழுதப்படுகின்றன.

சிறுவர் பாடல்களிலும் கதைகளிலும் நல்ல நீதி இருக்க வேண்டுமென்பதற்காக நீதிநூல்களின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு திருக்குறள் கதைகள், ஆத்திசூடி கதைகள், புதிய ஆத்திசூடி கதைகள், கொன்றை வேந்தன் கதைகள்,  நல்வழிக் கதைகள், நன்னெறிக் கதைகள், பொன்மொழிக் கதைகள், பழமொழிக் கதைகள், காந்தி மொழிக் கதைகள், நல்லொழுக்கக் கதைகள், பண்பைப் போற்றும் கதைகள் என்று நூற்றுக்கணக்கான சிறுவர் நூல்கள் தமிழில் வந்துள்ளன.

புராண, இதிகாச, காப்பியக் கதைகள் பக்திநெறி போதனைக் கதைகளாக எழுதப்பட்டுள்ளன.  ‘பாலர் இராமாயணம்’, ‘பாலர் மகாபாரதம்’, ‘பைபிள் கதைகள்’ ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவை.  அரிச்சந்திரன் கதை உண்மைக்கும், சிரவணன் கதை பெற்றோர் மீதான பக்திக்கும் எடுத்துக்காட்டுகளாகக் கூறப்படுகின்றன.

ஓடி விளையாடு பாப்பா, கூடி விளையாடு பாப்பா, காலையில் படி பாப்பா, மாலையில் விளையாடு பாப்பா, பொய் சொல்லாதே பாப்பா, புறஞ் சொல்லாதே பாப்பா என்று பாப்பா பாட்டு முழுவதும் அறிவுரைகளைக் கூறியவர் நம் பாரதிதான்.  அவரைப் பின்பற்றி அழ.வள்ளியப்பாவும் செல்ல கணபதியும் நிறைய அறிவுரைப் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.

‘அன்னை, பிதா, குரு, தெய்வம் என்று

அறநூல் உரைக்குதடி பாப்பா

உன் நாடும் உன் மொழிப்பற்றும் -உ ன்

உடல், உயிர் ஆகுமடி பாப்பா’

என்று கவியோகி பேகன் பாடுகிறார்.

தமிழ்க் குழந்தை இலக்கியத்தில் போதனை செய்யும் போக்கு வலுவாகவே இருக்கிறது.  கவிஞர் வெற்றிச் செழியன் திருக்குறள் கதைகளை இன்றும் எழுதி வருகிறார்.

அறிவுரை சொல்லுவதற்காக எழுதப்படும் கதையோ, பாடலோ இயல்பாக இருக்க வேண்டும்.  செயற்கையாக இருக்கக் கூடாது.  கதைப் போக்கில் நீதி மறைந்திருக்க வேண்டும்.  பகுத்தறிவுக்கு முரணான அறிவுரைகள் குழந்தைகளை மூட நம்பிக்கையில் ஆழ்த்தி விடும்.

குழந்தைகள் ஆயிரம் கேள்விகள் கேட்டு அறிவை வளர்த்துக் கொள்ளும் இயல்புடையவர்கள்.  இயற்கை நிகழ்வுகள், கண்டுபிடிப்புகளைப் பற்றிய அறிவைத் தருவது அறிவியலாகும்.  அறிவியலைப் பாடமாகப் படிப்பது சுமையாக இருக்கும்.  அதை சுகமாக மாற்றுவது அறிவியலைப் பற்றிய பாடல்களும் கதைகளுமாகும்.

சோவியத் பதிப்பகங்கள் வெளியிட்ட குழந்தைகளுக்கான அறிவியல் நூல்கள், தமிழில் அறிவியல் நூல்கள் தோன்ற உந்துதலாக இருந்தன.  ‘நான் ஏன் தந்தையை’ப் போலிருக்கிறேன்’ என்ற நூல் ஒரு மைல்கல்.

ஆராய்ச்சி அறிஞர்கள் நா.வானமாமலை, எஸ்.தோதாத்ரி, பெ.தூரன், கல்வி கோபாலகிருஷ்ணன் போன்றோர் காகிதத்தின் கதை, கப்பலின் கதை, மின்சாரத்தின் கதை, பறக்கும் பாப்பா போன்ற நூல்களை எழுதினார்.  பெ.தூரன் தொகுத்த ‘குழந்தைகள் கலைக்களஞ்சியம்’ தமிழில் அறிவுப் பெட்டகமாகத் திகழ்கிறது.  ரேவதி, லூர்து எஸ்.ராஜ் போன்றோர் அறிவியல் உண்மைகளைக் கதை போல் எழுதியுள்ளார்கள்.

‘தம்பி தங்கை விஞ்ஞானத்தில்

தளரக் கூடாது - சிறு

செப்புத் தண்ணீர் போல அறிவு

தேங்கக் கூடாது’

என்று சுப்பு ஆறுமுகம் ‘வேண்டும் விஞ்ஞானம்’ பாடலில் வலியுறுத்துகிறார்.

வானொலி, வானூர்தி, கைப்பேசி, கணிப்பெரி, தொலைக்காட்சி போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகளைக் குழந்தைகளுக்கு அறிமுகப் படுத்தும் பாடல்களை குழந்தைக் கவிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். செம்பை சேவியர் அறிவியல் அறிஞர்களைப் பற்றிய பாடல்களை எழுதியிருக்கிறார்.

‘பால புரஸ்கார்’ விருது பெற்ற கிருங்கை சேதுபதி எழுதிய ‘டிரிங்... டிரிங்’ என்ற தொலைபேசியைப் பற்றிய பாடலின் இறுதி வரிகளில்,

‘உன்னைப்போல உதவி செய்ய

நான் பழகுவேன்.

உலகமெல்லாம் இணைத்து வைத்து

உண்மை பேசுவேன்’

என்று அறிவியலோடு அறவுரையையும் சேர்த்து எழுதியுள்ளது புதுமையானது.

அதேபோல் குறிஞ்சிச் செல்வர் கொ.மா.கோதண்டம் தொலைக்காட்சியை ‘சூனியக்காரக் கிழவி’என்று விமர்சனத்தோடு கூறி,

‘எதிலும் முதன்மை என்றுயர

ஏற்புடைய அறிவியல் பயன் பெறுக

சதி செய்யும் கிழவியாம் டி.வி. தனை

தம்பி தங்கைகளே பார்க்காதீர்’

என்று எச்சரிக்கை செய்கிறார்.

தமிழ்க் குழந்தை இலக்கியத்தில் அறிவியல் போக்கினை வளர்ப்பதற்காக யூமா.வாசுகியும், உதயசங்கரும் மலையாளத்திலிருந்து ஏராளமான அறிவியல் கதை நூல்களை மொழி பெயர்த்துத் தருகின்றனர்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ‘துளிர்’ இதழ் மூலமாகவும் பதிப்பக வெளியீடுகள் மூலமாகவும் அறிவியல் அறிவையும் பார்வையையும் தரும் படைப்புகளைத் தந்துள்ளனர்.

குழந்தை எழுத்தாளர் கன்னிக்கோவில் ராஜா ‘பூமிக்கு இறங்கி வந்த குட்டி மேகம்’ என்ற சுற்றுச் சூழல் பற்றிய கதைத் தொகுப்பைத் தந்துள்ளார்.  அவருடைய ‘நிலாவை எச்சரித்த கரடிக் குட்டி’ நூலில் சிறுவருக்கான அறிவியல் கதைகள் உள்ளன.

அறிவியல் போக்கிலான படைப்புகள் கல்வி சார்ந்த இலக்கியத்திற்கும் (School oriented literature) வளம் சேர்க்கிறது.

கல்வி சார்ந்த குழந்தை இலக்கிய போக்கு ஆங்கிலத்தோடு ஒப்பிடும்போது தமிழில் குறைவு.  கல்வி சார்ந்த தலைப்புகளில் தகவல்களைத் திரட்டி வயதிற்கு ஏற்ப எழுதப்படும் நூல்கள் ஆங்கிலத்தில் ஆயிரக் கணக்கில் இருக்கின்றன.

பள்ளிக்குப் போ, பாடம் படி என்று அறிவுரை கூறும் பாடல்களோடு இப்போக்கு தமிழில் திருப்தி அடைந்து விடுகிறதோ, என்னமோ!

நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள் என்ற தலைப்பு வரிசையில் அறிவியல் அறிஞர்கள், தலைவர்கள், சுதந்தரப் போராட்ட வீரர்கள் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல்களை பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டுள்ளது. கிழக்கு பதிப்பகத்தில் சிறுவர் பிரிவும் இத்தகைய நூல்களை வெளியிட்டுள்ளது.  நேஷனல் புக் டிரஸ்ட், சாகித்ய அகாடமியும் கவிஞர்கள், எழுத்தாளர்கள் பற்றிய நூல்களை சிறுவர்களுக்காக வெளியிட்டுள்ளன.

அழ. வள்ளியப்பா ‘பெரியோர் வாழ்விலே’ என்று இரண்டு வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார்.  ‘குழந்தைகள் உலகம்’ ஏ.ஜி.எஸ். மணியின் ‘எடிசனின் கதை’ எளிமையான ஒன்று.  நான் எழுதிய ‘தந்தை பெரியாரின் கதை’ இத்துறையில் வரவேற்பைப் பெற்ற நூல்.  ரா.அ.பத்மநாபனின் ‘சித்திர பாரதி’ கல்வி நோக்கத்திற்கு உதவக் கூடியது.

மொழியையும் எண்களையும் கற்பிக்க உதவும் விதத்தில் பாடல்களைக் குழந்தைக் கவிஞர்கள் எழுதியிருக்கிறார்கள்.

‘அன்னம் நீரில் நீந்தும்

ஆடு துள்ளி ஓடும்

இறகு காற்றில் பறக்கும்

ஈக்கள் எங்கும் திரியும்’

என்ற அகர வரிசைப் பாடலை ‘மழலையர் மணிப்பாடல்கள்’ என்ற நூலில் கவிஞர் வெற்றிச் செழியன் தந்துள்ளார்.

தமிழில் சாகசப் போக்கிலான படைப்புகளில் மொழிபெயர்ப்புகளே அதிகம்.  டாம்சாயரின் சாகசங்கள், கலிவரின் பயணங்கள், ராபின்சன் குரூசோ, வில்லியம் டெல், அலாவுதீனும் அற்புத விளக்கும், சிந்துபாத் போன்ற கதைகள் குழந்தைகளை ஈர்த்துள்ளன.

1950 - 60 களில் வாண்டு மாமா, முல்லை தங்கராசன், புவிவேந்தன் போன்றோர் சாகசக் கதைகளை குழந்தைகளுக்கு எழுதினார்.  அம்புலி மாமாவில் வெளிவந்த விக்கிரமாதித்தன் கதை குழந்தைகளைக் கவர்ந்தது.

ஆங்கில சாகச மன்னன் ஜேம்ஸ் பான்ட்டைப் போல் தமிழ்வாணன் கல்கண்டு இதழில் சங்கர்லால் துப்பறியும் கதைகளை எழுதினார்.

கூத்தபிரான், ஜெ.எத்திராஜன் எழுதிய ராஜா ராணி கதைகளில் இளவரசர்களின் வீர தீர பராக்கிரமங்களை குழந்தைகள் விரும்பினர்.

சாகசக் கதைகளுக்கு ஆங்கில மொழி பெயப்புக் கதைகளை நம்பியிருக்கும் நிலையே இன்றும் தொடர்கிறது.  புதையல் தீவு, கருணைத் தீவு போன்ற கடற் பயண சாகசங்களைக் கூறும் நாவல்களை சுகுமாரன் மொழி பெயர்த்துத் தந்துள்ளார்.

நாவலாசிரியர் ஜெயமோகன் ‘பனி மனிதன்’ எனும் சிறுவர் நாவலில் பனி மனிதனை தேடிச் செல்லும் சாகசத்தை எழுதியுள்ளார்.  சாகசக் கதைகள் எழுதப்படுவது தமிழ்க் குழந்தை இலக்கியத்தில் அரிதாக இருக்கிறது என்பதே உண்மை.

நகைச்சுவைக் கதைகளை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. குழந்தைகளும் நகைச்சுவைக் கதைகளை விரும்புகிறார்கள். தெனாலி ராமன், மரியாதை ராமன், பீர்பால், முல்லா கதைகள் குழந்தைகளைக் குலுங்கக் குலுங்க சிரிக்க வைக்கின்றன.  வீரமாமுனிவர் எழுதிய ‘பரமார்த்த குருவும் சீடர்களும்’ கதையை எத்தனை முறை கேட்டாலும் படித்தாலும் குழந்தைகள் சலிப்படைவதில்லை.

நகைச்சுவைப் போக்கிலான பாடல்களும் கதைகளும் குழந்தைகளை சிரிக்கவும் வைக்கிறது; சிந்திக்கவும் வைக்கிறது.

பல நாடோடி கதைகள் நகைச்சுவையிலிருந்து படைப்பவையே. ‘வாலுப் போச்சு... கத்தி வந்தது’, ‘கல்செக்கு குட்டிப் போடுமா?’ போன்ற கதைகளைக் குழந்தைகள் ரசிக்கிறார்கள்.

விகடகவி தெனாலிராமனைப் போலவே சுப்பாண்டியின் ஒவ்வொரு செயலும் குழந்தைகளுக்கு சிரிப்பை மூட்டுகிறது.

குழந்தை எழுத்தாளர்கள் பலரும் நகைச்சுவைக் கதைகளை எழுதியிருக்கிறார்கள். ப.பரிதி பாண்டியன் எழுதிய ‘கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு’ கதையில் காக்கைகள் நிறத்தையும் குரலையும் மாற்றிக் கொள்ள கடவுளிடம் வரம் பெற்று திண்டாடுவது சிரிப்பை வரவழைக்கிறது.

பூவண்ணன், பேராசிரியர் எ.சோதி, நெ.சி. தெய்வசிகாமணி, கூத்தபிரான், மாயன் என்று பலரும் நகைச்சுவைப் போக்கிலான சிறுகதைகளை எழுதியிருக்கிறார்கள். 

ஆனால் நாவல்கள் மிகுதியாக தோன்றவில்லை.  தமிழ்வாணனின் ‘சிரிக்காதே’, தங்கமணியின் குண்டுமணி, ஆர்.வி.யின் ‘அசட்டுப் பிச்சு’, பூவண்ணனின் ‘பரமார்த்த சீடர்கள்’ போன்ற சில படைப்புகளே உள்ளன.

நாடோடி நகைச்சுவைக் கதைகள் போலவே நகைச்சுவை நாடோடிப் பாடல்களும் இருக்கின்றன.

‘திருப்பதிக்கு போய் வந்தேன்

நாராயணா

திருமொட்டை அடித்து வந்தேன்

நாராயணா’

என்ற பாடல் தொடங்கும் போதே சிரிப்பை வரவழைத்து விடுகிறது.

குழந்தைக் கவிஞர்களான அழ.வள்ளியப்பா, செல்லகணபதி, பெ.தூரன், ம.இலெ.தங்கப்பா போன்றோர் நகைச்சுவைப் பாடல்களுக்கு முக்கியத்துவம் தந்துள்ளனர்.

தமிழ்க் குழந்தை இலக்கியத்தை நந்தவனமாக மாற்றியிருப்பது பல்வேறு போக்குகளைக் கொண்ட படைப்புகளே.  எல்லா வகைப் போக்குகளிலும் எழுதிப் பார்க்கவே குழந்தை எழுத்தாளர்கள் விரும்புகிறார்கள் என்பதே உண்மை.

Pin It