thalatu 350‘ஒரு ஊர்ல...’ என்றோ ‘முன்னொரு காலத்தில்...’ என்றோ இன்றும் நாம்  கதை சொல்லிக் கொண்டிருப்பது நாட்டுப்புற இலக்கியத்தின் தாக்கத்தில்தான்.  இன்றும் நாம் எழுதும் கதைகளில், பாடல்களில் குழந்தைகளை குருவிகளோடு பறக்க வைக்கிறோம். வண்ணத்துப் பூச்சிகளோடு பேச வைக்கிறோம்.

சிங்கம்தான் காட்டுக்கு ராஜாவாக இருக்கிறது. யானைகளுக்கு சிறகுகள் முளைத்து வானத்தில் பறக்கின்றன.  நரி இன்னமும் தந்திரம் செய்கிறது. பூனைக்கும் எலிக்கும் பகைமை தீரவில்லை. நாய்தான் காவலுக்குக் கெட்டிக்காரன்.  பூதங்களுக்கு பசி தீரவில்லை.  கடலுக்கடியில் நாகக் கன்னிகை இருக்கிறாள்.  சுண்டைக்காய் இளவரசன் ஆகிறது. 

தமிழ்க் குழந்தை இலக்கியத்தின் எண்ணத்திலும் வண்ணத்திலும் நாட்டுப்புற இலக்கியம் மாயாஜாலம் செய்து கொண்டிருக்கிறது.  மாயாஜாலத்தோடு சேர்ந்து ஓர் அறத்தையும் கற்பிக்கிறது.  விறகுவெட்டியும் தேவதையும் கதையின் அறம் உண்மை அல்லவா?

வாய்மொழியாக (oral) சொல்லப்பட்டு வந்தவையே நாட்டுப்புற இலக்கியமாகும் (folk literature). நாட்டுப்புற இலக்கியம் தலைமுறை தலைமுறையாக சொல்லப்பட்டு, கடத்தப்பட்டு, காக்கப்பட்டது.

தொன்மக் கதைகள் (myths), பழங்கால புனைவுக் கதைகள் (legends), இதிகாசங்கள் (epics), நீதிக் கதைகள் (fables), நாடோடிக் கதைகள் (folk tales), நாட்டுப்புற பாடல்கள் (folk songs), பழமொழி, சொலவடைகள் (proverbs),, விடுகதைகளும் (riddles) நாட்டுப்புற இலக்கியத்தில் அடங்கும்.

‘நாடோடிப் பாடலுக்கு தாய் தந்தை யாரோ’ என்பது ஒரு திரைப்பாடலின் வரியாகும்.  நாட்டுப்புற இலக்கியத்திற்கு முகந்தெரியாத மனித சமூகமே படைப்பாளியாக இருக்கிறது.  நாட்டுப்புற இலக்கியம் ஒரு கூட்டுப் படைப்பு.  அப்படைப்புகளில் சமூகத்தின் பண்பாடு.  நீதி நியாயங்கள் இடம் பெறுகின்றன.  இவை சமூகத்தின் நனவிலி மனதில் பதிந்து கிடக்கின்றன.

ஒவ்வொரு சமூகமும் வளமான நாட்டுப்புற இலக்கியத்தைக் கொண்டுள்ளது.  பக்தி, பற்று, பணிவு, பரிவு, துணிவு, பயம், பாசம், நேசம், நன்மை, தீமை போன்ற எல்லா பண்புகளையும் (ஸ்ணீறீuமீs) நாட்டுப்புற இலக்கியம் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

நாட்டுப்புற இலக்கியம் குழந்தை இலக்கியத்தின் வேர்.  நாட்டுப்புற இலக்கியத்தின் தாக்கம் தமிழ்க் குழந்தை இலக்கியத்தில் பெரும்பான்மையாகக் காணப்படுகிறது.

தமிழ் நாட்டுப்புற இலக்கியத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சியவர்கள் ஆராய்ச்சி அறிஞர் நா.வானமாமலை, எழுத்தாளர்கள் கி.ராஜநாராயணன், வீர.வேலுச்சாமி, கழனியூரன், ச.மாடசாமி ஆகியோராவர்.  அவர்களைப் பின்பற்றி பொன்னீலன், பாரததேவி, ரோஸ்லெட் டானிபாய் ஆகியோர் நாட்டுப்புற கதைகளை சேகரித்துத் தந்துள்ளனர்.

நாட்டுப்புற கதைகளில் நாயகன் X நாயகி X வில்லன் என்று ஒரே மாதிரியான (stereo typical) பாத்திர வார்ப்பே காணப்படுகிறது.  நாயகன் ஙீ நாயகிக்கு வரும் சிக்கல் இயற்கைக்கு மாறான அதீத சக்தியின் உதவியால் (aided by super natural forces) தீர்க்கப்படுவதாக அமைகிறது.

நாட்டுப்புற கதைகளில் ஒரே மாதிரியான சம்பவங்கள் திரும்ப திரும்ப (Repetitions patterns) வருகின்றன.  முடிவு பெரும்பாலும் மகிழ்ச்சிகரமாகவே அமைகிறது.

குழந்தை எழுத்தாளர் உதய சங்கரின் ‘மாயக் கண்ணாடி’, ‘அண்டா மழை’ ஆகிய இருகதைத் தொகுப்புகளில் உள்ள கதைகளில் நாட்டுப்புற கதைப் பண்புகளின் தாக்கம் மேலோங்கி காணப்படுகிறது.

திரும்பத் திரும்ப கூறுதல் என்பது நாட்டுப்புற கதைகளின் பண்பாகும். ‘மாயக்கண்ணாடி’ தொகுப்பிலுள்ள II கதைகளிலும் ஒரே மாதிரி குணாம்சம் கொண்ட ராஜாவே பாத்திரமாக வருகிறார்.  நாட்டுப்புற கதைகளில் வரும் சிக்கல் இயற்கைக்கு மாறான அதீத சக்தியின் உதவியால் தீர்க்கப்படுவதாக அமையும்.  மாயக் கண்ணாடி கதையில் வரும் சிக்கல் இவ்வாறே தீர்க்கப்படுகிறது.

கிள்ளியூர் தேசத்து ராஜா சோம்பேறி, சாப்பாட்டு ராமன். எப்போதும் சாப்பிட்டு பூதம் மாதிரி ஆகி விடுகிறார். கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்த அவர் பயந்து விடுகிறார்.  நாட்டில் யாரும் கண்ணாடி பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவு போடுகிறார். இதனால் மக்கள் சிக்கலுக்கு உள்ளாகிறார்கள்.  இச்சிக்கல் நாட்டுப்புற கதைகளில் வருவதுபோல் தேவதையின் உதவியால் தீர்க்கப்படுகிறது.

‘பிரம்படி வைத்தியம்’ கதையில் வரும் சிக்கலும் தேவதைகளால் தான் தீர்க்கப்படுகிறது.

‘அண்டா மழை’ கதையிலும் மழை பொய்த்துப் போன சிக்கலை மழை தேவதைதான் தீர்த்து வைக்கிறாள்.

‘பஞ்சுமிட்டாய்’ கதையிலும் இடி ராஜாவால் மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் தேவதைகளால் தான் தீர்த்து வைக்கப்படுகிறது.

‘மண்ணாக மாறிய பொன்’ கதையில் குபேர தேவதையும் ‘திருட்டு விளையாட்டு’ கதையில் உழைப்பு தேவதையும் ‘இலவசம், இலவசம், இலவசம்’ கதையில் அறிவு தேவதையும் கதையில் எழும் சிக்கல்களைத் தீர்க்கிறார்கள்.

உதயசங்கரின் ‘பேசும் தாடி’ சிறுவர் நாவலிலும் சிறுகதைகளிலும் நாட்டுப்புற இலக்கியத்தின் தாக்கம் காணப்படுகிறது.

நாட்டுப்புற கதைகளில் சிக்கல்களை விலங்குகளோ அல்லது பறவைகளோ தீர்த்து வைப்பதாக வரும்.  வை.கோவிந்தன் எழுதிய ‘சின்னத்தம்பியும் புலியும்’ கதையில் ஒரு முயல் சிக்கலை தீர்த்து வைக்கிறது.  ஒரு புலி கூண்டுக்குள் மாட்டிக் கொள்கிறது.  சின்னத்தம்பி இரக்கப்பட்டு புலியை விடுவிக்கிறான்.  புலி நன்றி மறந்து சின்னத் தம்பியை கொன்று தின்ன முயற்சிக்கிறது.  சின்னத்தம்பிக்கு ஏற்பட்ட சிக்கலை முயல்தான் சமயோசிதமாகத் தீர்த்து வைக்கிறது.

நாட்டுப்புற கதைகள் மக்களின் நம்பிக்கைகளை கதைப்பொருளாகப் பேசுகின்றன.  கொடும்பாவி கட்டினால் மழை பெய்யும் என்பது அதிலொரு நம்பிக்கை.  மயில் தோகை விரித்து ஆடினால் மழைபெய்யும் என்ற நம்பிக்கையை அடிப்படையாக வைத்து ஒரு நாட்டுப்புற கதை இருக்கிறது.  அதைப்போல் விஷ்ணுபுரம் சரவணன் கொடும்பாவி கட்டினால் மழை பெய்யும் என்ற நம்பிக்கையை வைத்து ‘வானத்துடன் டூ’ கதையை எழுதி உள்ளார்.

சிறுமி துர்காவின் ஊரில் மழையே பெய்யவில்லை.  தண்ணீர் கஷ்டம்.  சிநேகிதியின் ஆலோசனைப்படி துர்கா கொடும்பாவி கட்டுகிறாள்.  கொடும்பாவி கட்டி 10 நாட்களாகியும் மழை பெய்யவில்லை.  11 ஆம் நாள் மழை பெய்யவில்லையென்றால் வானத்துடன் டூ விடப்போவதாக துர்கா சொல்கிறாள்.  அன்றிரவே மழை பெய்து விடுகிறது.

நாட்டுப்புற கதைகளில் முடிவு எப்போதும் சுபமாக அமையும்.  விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய ‘மான் தப்பிப்பது எப்படி?’ கதையிலும் புலியிடமிருந்தும் மலைப்பாம்பிடமிருந்தும் மான் தப்பித்து விடுகிறது.

விழியன் எழுதிய ‘கிச்சா பச்சா’ கதையில் காகங்கள் ஏன் கருப்பாச்சு? என்பதை பர்மா நாட்டு நாடோடிக் கதையின் மூலமே விளக்கியிருக்கிறார்.  விழியன் எழுதிய பல படைப்புகளில் நாட்டுப்புற இலக்கியத்தின் தாக்கத்தைக் காணமுடியும்.

சிறுவர்களிடம் மிகவும் பிரபலமான கதை ‘சுண்டைக்காயின் சாகசம்.’  ‘சுண்டைக்காய் இளவரசன்’ என்ற சிறுவர் நாவலில் யெஸ்.பாலபாரதி நாட்டுப்புற கதைகளின் பாணியில் மூன்று கதைகளைக் கூறியிருக்கிறார்.  சாபம், சாப விமோசனம், சாகசப் பயணம், இறுதியில் வெற்றி என்பவை நாட்டுப்புற கதைகளின் போக்காகும்.  அதை சிறப்பாகக் கையாண்டு குழந்தைகளுக்குப் பிடித்த ஒரு கற்பனை உலகத்தை யெஸ்.பாலபாரதி தந்திருக்கிறார்.

குழந்தை எழுத்தாளர்கள் பலரும் நாட்டுப்புற கதைகளை மீளவும் எழுதியிருக்கிறார்கள்.  நெ.சி.தெய்வசிகாமணி ‘இரண்டு கிளிகள்’ கதையை அவ்வாறு எழுதியிருக்கிறார்.

‘டால்ஸ்டாயின் குட்டிக் கதைகள்’கூட நாட்டுப்புற கதைகளை மறுபடியும் கூறியதுதான்.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானவை நாட்டுப்புற கதைகளே.  அதனால் குழந்தை எழுத்தாளர்கள் பலரும் நாட்டுப்புற பாணியிலான கதைகளை எழுதி வெளியிட்டுள்ளனர்.  அயல்நாட்டு நாடோடிக் கதைகளை மொழிபெயர்த்தும் தந்துள்ளனர்.

நாட்டுப்புற பாணியிலான கதைகளை எழுதுவதில் பெ.தூரன், வாண்டு மாமா, வை.கோவிந்தன், முல்லை தங்கராசன் ஆகியோர் வல்லவர்கள். பெ.தூரனின் நிலாப்பாட்டி, நாட்டிய ராணி, ஓலைக் கிளி ஆகியனவும் வாண்டுமாமாவின் தங்கத் தீவு, மந்திரக்குளம், சந்திரகிரி கோட்டை, முல்லை தங்கராசனின் தங்க மயில் தேவதை, அதிசய குதிரை ஆகிய கதைகள் நாட்டுப்புற கதைகளின் தாக்கத்தில் எழுதப்பட்டவையாகும்.  நாகை தருமனின் ‘மாயாபுரி மன்னன் ராஜியின் தங்க மாம்பழம், பூவண்ணனின் எரிமலை அரக்கன், ஆலந்தூர் கோ.மோகனரங்கனின் சந்திர மண்டலத்தில் மந்திரவாதி, சந்தனுவின் வேதாள உலகில் விச்சு என்று பெரிய பட்டியலே உள்ளது.  இவையெல்லாம் முன்னொரு காலத்தில்...

முதலில் குழந்தைகளுக்கு நாட்டுப்புற பாடல்களோடுதான் பரிச்சயம் ஏற்படுகிறது.

‘காக்கா, காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா

‘கைவீசம்மா கைவீசு’,

‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு’,

‘நிலா, நிலா, ஓடி வா’,

‘பச்சைக் கிளியே வா, வா’,

‘ஆனை ஆனை அழகர் ஆனை’,

போன்ற நாடோடிப் பாடல்கள் குழந்தைகளை மகிழ்வூட்டுகின்றன.

‘மழலையர் மணிப்பாடல்கள்’ என்ற நூலில் கவிஞர் வெற்றிச் செழியன் நாட்டுப்புற பாடல்களின் தாக்கத்தில் சில பாடல்களை எழுதியிருக்கிறார்.

‘கைவீசம்மா கை வீசு’ என்ற பாடல் தாக்கத்தில்,

‘கைவீசம்மா கை வீசு

கூடி மகிழ்ந்து கை வீசு

குதித்து ஆடிக் கை வீசு’

என்றும்

‘தம்பி, தம்பி!

எங்கே போற? சந்தைக்கு

சந்தைக்கு எதற்கு? வாளி வாங்க.

வாளி எதற்கு? தண்ணீர் எடுக்க.’

என்ற பாடலிலும் நாட்டுப்புற பாடலின் தாக்கத்தைக் காணமுடிகிறது.

‘தாத்தா’ பற்றிய வேடிக்கையான மகிழ்வூட்டும் நாட்டுப்புற பாடல் இது.

‘தாடி நீண்ட தாத்தா

தடவி ஒரு நாள் பார்த்தார்.

மாடப்புறா ரெண்டு

மைனாப் பறவை ரெண்டு

காடக்குருவி ரெண்டு

நரிக்குருவி ரெண்டு

தாடிக்குள்ளே தங்கி

முட்டெ யிட்டன ரெண்டு.’

இப்பாடலின் தாக்கத்தில் தம்பி சீனிவாசன் எழுதிய பாடல் அதே வேடிக்கை உணர்வை குழந்தைகளுக்குத் தருகிறது.

‘காட்டுப் பாக்கம் தாத்தாவுக்குக்

காடு போல தாடியாம்

காடு போல தாடியாம்

மாடி மேலே நிற்கும் போது

தாடி ரோடில் புரளுமாம்.

ஆந்தை இரண்டு, கோழி, மைனா

அண்டங் காக்கை, குருவிகள்

பாந்தமாகத் தாடியுள்ளே

பதுங்கிக் கொண்டிருந்தன.

உச்சி மீது நின்ற தாத்தா

உடல் குலுங்கத் தும்மினார்

அச்சு அச்சு என்றபோது

அவை அனைத்தும் பறந்தன.’

சுகுமாரன் எழுதிய ‘தங்கச்சிப் பாப்பா’ சிறுவர் பாடல் நூலில் நாட்டுப்புற பாடல்களின் தாக்கத்தில் ‘காக்காவுக்குக் கல்யாணம்’, ‘பிரியாணி’, ‘எண்கள்’ ஆகிய பாடல்கள் அமைந்துள்ளன.  ‘ஆமையும் முயலும்’ என்கிற நாட்டுப்புற கதை கதைப்பாடலாக மாறியுள்ளது.

கிருங்கை சேதுபதியின் ‘சிறகு முளைத்த யானை’ குழந்தைப் பாடல் நாட்டுப்புற பாடலின் தாக்கம் கொண்டதே.

குழந்தைக் கவிஞர்கள் பலரும் நாட்டுப்புற கதைகளை கதைப் பாடலாக எழுதியுள்ளனர்.  அதில் முக்கியமானவர் தண்டரை முகில் வண்ணன் ஆவார்.  அவர் சோவியத் நாட்டுப்புற கதைகளை கதைப் பாடல்களாக தந்துள்ளார்.

‘சங்கு சக்கர சாமி வந்து

சிங்கு சிங் குன்னு ஆடுமாம்’

என்கிற நாட்டுப்புற பாடலை அழ.வள்ளியப்பா இப்படி பாடுகிறார்.

‘சங்கு சக்கரச்சாமியாம்

சாய்ந்து படுத்து கிடக்குமாம்.’

குழந்தையைத் தாலாட்டும் பாடல்கள் நாட்டுப்புற பாடல்களாக இருக்கின்றன.  அத்தாக்கத்தில் அழ.வள்ளியப்பாவும் தாலாட்டுப் பாடல்களை எழுதியிருக்கிறார்.

‘ஆராரோ, ஆராரோ

ஆரிரரோ ஆராரோ

சூடாமணியே

துலக்கமாய் நின்றொளிரும்

வாடா மலரே, என்

மரகதமே கண் வளராய்.’

‘கை வீசம்மா கை வீசு’ நாட்டுப்புற பாடலை புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் இப்படி எழுதியிருக்கிறார்.

‘கை வீசம்மா கை வீசு!

கடலை வாங்கலாம் கை வீசு!

நெய் உருண்டை கை வீசு!

நிறைய வாங்கலாம் கை வீசு!

..............................

‘தட்டாங்கி’ என்ற பாடல் புரட்சிக் கவிஞர் எழுதியது.  நாட்டுப்புற பாடலின் தாக்கத்தால் விளைந்தது தான்.

‘தட்டாங்கி தட்டாங்கி

தலை மேலே தாழம்பூ!

பட்டாலே சட்டை

பஞ்சாலே சல்லடம்

செட்டாக அணிந்து

சீராக முந்தி

தட்டு நீ தட்டு

தட்டாங்கி தட்டாங்கி’

‘எலி படும் பாடு’ என்ற தலைப்பில் ‘எலியாரே, எங்கே போறீங்க? நான் இருட்டறையில் நல்லுணவைத் தேடப் போறேங்க’ என்று கோ.பெரியண்ணன் நாட்டுப்புற பாணியில் எழுதியிருக்கிறார்.

நாட்டுப்புற இலக்கியத்தின் தாக்கம் தமிழ்க் குழந்தை இலக்கியத்தை வளமிக்கதாக மாற்றியுள்ளது.  பண்பாட்டின் சாரத்தையும் கற்பனை வளத்தையும் குழந்தைகருக்குத் தந்துள்ளது காலத்தின் தேவைக்கேற்ப புதிய உள்ளடக்கத்தையும் பெற்றுள்ளது.