பேராசிரியர் நா.வானமாமலை தோற்றுவித்து நடத்திய ஆராய்ச்சி இதழும், அவர் ஒருங்கிணைத்து வழிநடத்திய நெல்லை ஆய்வுக்குழுவும், ஒரு செறிவானதும் தனித்தன்மை உடையதுமான, சமூக அறிவியல் மற்றும் கலைப்புல ஆய்வுமரபு வேரூன்றிப் பரவுவதற்கு வழிகோலிய சிந்தனாப் பள்ளியின் செறிவுமிக்க விளைச்சலாகவும் அடையாளமாகவும் இடையறாமல் செயல்பட்டு வருபவர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்.

aa sivasubramanian 250அனைத்து வகையான சமூக நிகழ்வுகளையும் மக்கள் மரபுகளையும், தனிமனிதப் படைப்புகளையும் நோக்குவதற்கும் புரிந்துகொள்வதற்கும் ஒரு முக்கிய அளவுகோலாக மார்க்சியச் சிந்தனைகளைக் கையாண்ட ஓர் ஆய்வுப்பள்ளியானது, பன்முகக் கல்விப்புலப் பார்வை தழுவிய ஆய்வு நெறிமுறையானது கல்வி நிறுவனச் சூழலுக்கு வெளியில் வேரோடிப் பரவுவதற்குக் காரணமாயிற்று. கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் நடைபெற்ற தமிழியற்புல ஆய்வுகள் பற்றிய வரலாறானது, கலப்புப்புல ஆய்வு நோக்கும் (inter disciplinary perspective) பன்முகப்புல ஆய்வுநோக்கும் (multidisciplinary perspective தாக்கம் செலுத்திய அறிஞர்தம் ஆய்வுப்படைப்புகளின் தனித்தன்மையைப் பேசுகிறது.

இந்தப் பின்புலத்தில் இயங்கிய முன்னோடியானவர் அறிஞர் நா.வா. ஆவார். பல்துறைச் சிந்தனைகள் தழுவிய அவருடைய ஆய்வுப் படைப்புகள் என்பன தனித்தன்மை உடைய பன்முகக் கல்விப்புல ஆய்வு மரபையும் அதன் பரிமாணத்தையும் காட்டுவன. பன்முகக் கல்விப்புல ஆய்வு மரபு என்பது, ஒன்றுக்கு மேற்பட்ட அறிவுப்புலங்கள் சார்ந்த கருத்தாக்கங்கள், கோட்பாடுகள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட ஆய்வுப்பொருள் பற்றிய விசாரணைக்கு மிகவும் இயைந்தவாறு பயன்படுத்த வகுத்துக்கொள்ளும் நெறிமுறை தழுவிய படிநிலையை அடியற்றியது.

இலக்கியம், நாட்டார் வழக்காற்றியல், பழங்குடியினர்ப் பண்பாடு, வரலாறு முதலிய அறிவுப்புலங்களில் - அத்துறை சார்ந்த ஆய்வுப் பொருள்களின்பால் மானிடவியல், சமூகவியல் முதலிய சமூக அறிவியல் புலங்களின் சிந்தனைகளையும் கோட்பாடுகளையும் ஒருங்கிணைக்கும் படிமுறையைக் கொண்ட மேற்கண்ட ஆராய்ச்சி நெறிமுறை என்னும் தனி ஒரு மரபினை நா.வா.வுடன் இணைத்துச் செழுமைப்படுத்தியதோடு, அது மேன்மேலும் தொடர்ந்து நடைபோடும் வகையில், தமது வளமான ஆய்வுப் படைப்புகள் வாயிலாக அதற்கு வலிமை ஊட்டியவர் என்று பேராசிரியர் ஆ.சி.யின் எழுத்துக்களை அடியற்றிக் குறிப்பிடலாம்.

அரசியல், சமூகம், மக்கள் கலை - இலக்கியங்கள் (நாட்டார் வழக்காற்று வடிவங்கள்) படைப்பிலக்கியம், வரலாறு, பண்பாடு முதலிய துறைகளில் அடங்கும் அவருடைய ஆய்வுப் படைப்புகளைப் பின்வரும் மையப் பொருளின் அடிப்படையில் வகைப்படுத்தலாம்:

1) நாட்டார் வழக்காற்றியல்

(அ) நாட்டார் வழக்காற்று வடிவங்களைச் சேகரித்துத் தொகுத்தல் & பகுப்பாய்வு செய்தல்.

 உ-ம்: பூச்சியம்மன் வில்லுப்பாட்டு (1989 & 2013)

 தமிழக நாட்டுப்புறப் பாடல் களஞ்சியம் (தொகுப்பு: 10) 2003

தமிழக நாட்டுப்புறக் கதைக்களஞ்சியம் (தொ. 10) 2001

(ஆ) நாட்டார் வழக்காறுகள், நம்பிக்கைகள், சடங்கியல் வடிவங்களை மானிடவியல் கோட்பாடுகளின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்து எழுதப்பட்டவை: உ-ம் மந்திரமும் சடங்குகளும் (1988)

2) நாட்டார் வழக்காறுகளும் வரலாறும்

(அ) நாட்டார் வழக்காறுகளை வரலாற்றுக்கான மூல ஆதாரங்களாகப் பயன்படுத்தலாம் என்பதை நிறுவும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்

(ஆ) மாற்று வரலாறு அல்லது கீழிருந்து மேலெழும் வரலாறு என்பதை அடியற்றி வாய்மொழி வரலாறு, இனக்குழு வரலாறு போன்றவற்றை மையப்படுத்திய ஆய்வுகள் (உ-ம்: அடித்தள மக்கள் வரலாறு நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்)

3) இலக்கியமும் மானிடவியலும்

(அ) சங்க இலக்கியப் படைப்புகள் பற்றிய மானிடவியல் நோக்கியான ஆய்வு

(ஆ) தற்கால இலக்கியப் படைப்புகளில் நாவல்கள் சிலவற்றை இனவரைவியல் நாவல்களாக அடையாளப்படுத்தும் ஆய்வு

4) பிற துறைகள்

அரசியல் இயக்கங்கள் (Movement) தொழிலாளர் போராட்டம், அடிமை முறை, தலித்தியம், கிறிஸ்துவம், இஸ்லாமியம், சாதியம் போன்ற பல்வேறு பொருட்கூறுகள் பற்றி எழுதப்பட்ட நூல்கள். (எடுத்துக்காட்டு: தமிழகத்தில் அடிமை முறை, கிறிஸ்தவமும் தமிழ்ச்சூழலும், எந்தப் பாதை, பிள்ளையார் அரசியல், மதமாற்றத்தின் மறுபக்கம் என்பன உள்ளிட்ட பல நூல்கள்)

பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன், பெருநூல்களாகவும் குறுநூல்களாகவும் பல வகையான துவல்பொருள்களில் (focal themes) தொடர்ந்து எழுதி வருபவர். சமூக அறிவியற் சிந்தனையில் ஈடுபாடுள்ள ஓர் ஆய்வாளர் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுக்கான தேடுபொருளாக அவருடைய ஆய்வுகளை மையப்படுத்தி, அவருடைய பங்களிப்பை மதிப்பிடும் நிலையில், அவருடைய ஆய்வுப்படைப்புகளை முறையாக வகைமைப்படுத்த வாய்ப்பிருக்கிறது. இங்கு அவருடைய எழுத்துகள் பற்றிய வகைமை என்பது ஒரு தற்காலிக நோக்கம் தழுவியது.

பேராசிரியரின் ஆய்வு நூல்கள் ஊடாக எமது கவனத்தை ஈர்த்த முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு கருத்தியல் தளங்களாக நாம் பார்ப்பது (1).வாய்மொழி வழக்காறுகள், எழுத்திலக்கியங்கள் பற்றிய மானிடவியல் ஆய்வுமுறை (2) அடித்தள மக்களின் வரலாற்றை மீட்டெடுக்கும் வகையில் வாய்மொழி வரலாறு முதலிய வரலாற்று முறையியல்கள் பற்றிய விவாதங்களை முன்வைக்கும் ஆய்வுகள். இந்த இரண்டு பெரும் ஆய்வுத் தளங்களிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை நிகழ்த்தியுள்ளார்.

நாட்டார் வழக்காறுகள் இலக்கியம் பற்றிய மானிடவியல் அணுகுமுறைகள்

பொதுவாக நாட்டார் வழக்காற்றியல் என்பது ஒரு கலப்புப்புலமாகும். மக்களுடைய சமூக வாழ்க்கை முறையைத் தீர்மானிக்கும் கூட்டுத்தன்மை வாய்ந்த சக்திகளே கூட்டுப் படைப்புகளாகக் கருதப்படும் நாட்டார் வழக்காற்று வடிவங்களின் படைப்புகளையும் தீர்மானிக்கின்றன. எனவே, அத்தகைய படைப்புகள் பற்றிய அர்த்தங்களையும் செயல்பாடுகளையும் புரிந்து கொள்வதற்கு மானிடவியலின் கருத்துருவங்களும் கோட்பாடுகளும் இன்றியமையாதவை. இத்தேவையே கலப்புப்புல ஆய்வு முறையைத் தம்முடைய ஆய்வுகளில் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை உணர்த்தின.

நாட்டார் வழக்காற்று வடிவங்களில் நம்பிக்கைகள், சடங்குகள், சடங்கியல் நிகழ்த்துதல்கள், கோயில் கொடை விழாக்கள், வளமைச் சடங்குகள் போன்றவை குறித்த மக்கள் உளவியலையும். அவற்றில் பொதிந்திருக்கும் செயல்பாடுகளையும் வெளிப்படுத்த மானிடவியலின் மந்திரம் பற்றிய கருத்துருவங்களையும் கோட்பாடுகளையும் சார்ந்தே ஒருவர் ஆராயவியலும். இக்கோணத்தில், பேராசிரியரின் ‘மந்திரமும் சடங்குகளும்’ (2013) நூலில் அடங்கியுள்ள ஆய்வுக்கட்டுரைகள் தமிழரின் சமய, சடங்கியல் மரபுகளில் பொதிந்திருக்கும் நுட்பங்களைப் புரிந்து கொள்ள நமக்குத் துணைபுரியும் படைப்பாகும்.

மானிடவியலின் இரு கிளைகளாகச் செயல்படுபவை ‘இனவரைவியல்’ என்னும் களப்பணி ஆய்வு முறையும் ‘பண்பாட்டிடை ஒப்பாய்வும்’ ஆகும். குறிப்பிட்ட பண்பாட்டினரிடம் அல்லது ஒரு சமூகக் குழுவினரிடம் கணிசமான காலத்திற்குக் களப்பணியில் ஈடுபட்டு, அக்குழுவினரின் வாழ்க்கையை அவர்களோடு சேர்ந்து தானும் வாழ்ந்து பெற்ற தரவுகளைக் கொண்டு, ஒரு மானிடவியலை உருவாக்கும் ‘பண்பாட்டு வரைவே’ இனவரைவியலாகும். இது ஓர் ஆய்வுப் படைப்பு; இலக்கிய வடிவமல்ல. சமூக அறிவியல் படைப்பு. மக்களிடமிருந்து திரட்டப்பட்ட சமூக - பண்பாட்டுத் தரவுகளைக் கொண்டு, எழுதப்படும் இனவரைவியல் என்ற பண்பாட்டுச் சித்திரிப்பு நூலைப் போலவே மேற்குலகில் ஆங்காங்கே எழுத்தாளர்கள் சிலர் தாங்கள் நன்கு அறிந்த மக்கள் சமூகங்களையும் அவர்தம் நடத்தை முறைகளையும் உற்று நோக்கிப் பெற்றுத் திரட்டிய செய்திகளைக் கொண்டு நாவல்களைப் படைத்தனர்.

ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்நாவல்கள், சராசரியான நாவல்களிலிருந்து வேறுபட்டு குறிப்பிட்ட மக்களின் பண்பாட்டுக் கூறுகளை உயிர்ப்புடன் பேசுவனவாகத் திகழ்ந்தன. எனவே, அந்நாவல்களை வழக்கமான நாவல்களிலிருந்து வேறுபடுத்தும் வகையில் இனவரைவியல் நாவல்கள் என்று தனி அடையாளம் கொடுத்தனர். இனவரைவியல் நாவல்களைப் பண்பாட்டு ஆவணமாக மானிடவியலர் அணுகினர். (Poyatos, 1998). மேலும், ஓர் இனவரைவியல் நாவல் (Ethnographic Novel) என்பது எந்த ஒரு குறிப்பிட்ட பண்பாட்டிலிருந்து தோன்றுகிறதோ அந்தப் பண்பாட்டைப் பற்றிய குறிப்பிடத்தக்க தகவலை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று வரையறுத்தனர். (Janet Tallman, 2002: 12) இனவரைவியல் நாவலில் இரண்டு வகை இருப்பதையும் சுட்டிக்காட்டினர். (Elizabeth Fernea).. அதாவது, ஓர் அந்நியப் பண்பாடு பற்றி, அதனைச் சேராத வெளியாளாக விளங்கும் எழுத்தாளர் ஒருவரால் எழுதப்படும் இனவரைவியல். மற்றொன்று, சொந்தப் பண்பாட்டைச் சேர்ந்த ஓர் எழுத்தாளரால், தன்னுடைய பண்பாட்டையே ஆதாரமாகக் கொண்டு படைக்கப்படும் இனவரைவியல் நாவல்.

இனவரைவியல் நாவலில், இனவரைவியலன், நாவலாசிரியன் ஆகிய இருவருக்கும் இடைப்பட்ட தொடர்பானது தெளிவற்றுக் கரைந்துபோய் விடுகிறது என்றும் கூறுவர். அவ்வாறே இனவரைவியலையும், நாவலையும் எடுத்துக் கொண்டு ஒப்பிட்டு நோக்கும்போது, இனவரைவியலுக்கு ஆதாரமாக எந்தப் பண்பாடு உள்ளதோ அப்பண்பாட்டிற்குரிய மக்களின் சொந்தக் குரல், அவ்வினவரைவியல் படைப்பிலிருந்து ஒருபோதும் எதிரொலிப்பதில்லை. ஆனால், இனவரைவியல் நாவலிலோ அதற்குரிய பண்பாட்டின் உறுப்பினர்களான மக்களின் குரல்கள் எதிரொலிக்கக் கேட்கலாம் என்பர் (2002: 12)

இனவரைவியல் நாவல்கள் பற்றிய இந்தக் கருத்தியல் பின்புலத்திலிருந்து பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனின் இனவரைவியலும் தமிழ் நாவலும், 2014 நூலை வாசிப்போமானால், தமிழ் நாவல் இலக்கிய வடிவத்தில் தோன்றிய ஒரு புதிய கதை வடிவத்தின் தனித்தன்மையை உள்வாங்கிக் கொள்வதற்கு இனவரைவியல் என்பது எத்தகைய பொருத்தமான அளவுகோலாக உள்ளது என்பதைப் புரிந்துகொள்ளவியலும்.

ஒரு நாவலானது வாசகனிடம் தனித்த ஈர்ப்பினை ஏற்படுத்துவதற்கு இனவரைவியல் அல்லது பண்பாட்டுக் கூறுகள் என்பன அந்நாவலில் ஊடிழையாக விரவிக் காணப்பட வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டும் ஆ.சி. இனவரைவியல் நாவலின் இயல்புகளைக் கோடிட்டுக் காட்டும் விதமாக,

“ஒரு குறிப்பிட்ட சமூக அமைப்பில் வாழும் மனிதர்களின் வாழ்வியல் பிரச்சினைகளையும் உளவியல் பிரச்சினைகளையும் மையமாகக் கொண்டு எழுதும் நாவலானது அம்மனிதர்களினதும், சமூகத்தினதும் பண்பாடு, பழக்க வழக்கங்கள், சமய வாழ்வு மற்றும் வாழ்வியல் அம்சங்களை முழுமையாகப் பிரதிபலிப்பது அவசியமாகும். அப்பொழுதுதான் அந்நாவலைப் படிக்கும் வாசகன் அதில் இடம்பெறும் சமூகச் சூழலோடு ஒன்றிவிட முடியும். அத்துடன், அந்நாவலில் இடம்பெறும் பாத்திரங்கள், அவை சித்திரிக்கப்படும் காலச்சூழலோடு பொருந்தி நிற்கும்” (ஆ.சிவசுப்பிரமணியன், 2014: 17)

“ஒரு குறிப்பிட்ட தொழிலை - நெசவுத் தொழிலை அடிப்படை வாழ்வாதாரமாகக் கொண்டு இயங்கும் மக்களைப் பற்றிப் பேசும் நாவல்களான பஞ்சும் பசியும், வேள்வித் தீ ஆகிய இரண்டினையும் ஒப்பிட்டுப் பேசும் நிலையில், வாசக ஈர்ப்புக்கு இனவரைவியல் செய்திகள் (பண்பாட்டுத் தகவல்கள்) நாவலில் இடம்பெறுவது எத்துணை அளவிற்கு இன்றியமையாதது என்பதைக் குறிப்பிடுகிறார். எம்.வி.வெங்கட்ராமின் வேள்வித் தீ நாவலானது, அது பேசும் சௌராஷ்டிர மக்களின் இனவரைவியலைப் பேசுவதற்கு இணையாக, தொ.மு.சி.ரகுநாதனின் பஞ்சம் பசியும் நாவல், தான் யாரைப் பற்றிப் பேசுகிறதோ அந்த நெசவாளர்களின் (முதலியார்) இனவரைவியல் செய்திகள் எவற்றைப் பற்றியும் எங்கும் பேசவில்லை.

இவ்வெதார்த்தங்களை முன்னிறுத்தி இனவரைவியல் செய்திகளின் துணையால், பிற்போக்கான தன்மை கொண்ட நாவல் கூட, சராசரி வாசகனை ஈர்ப்பதாகவும், அது இடம்பெறத் தவறும்போது, முற்போக்கான நாவல் கூட ஈர்ப்பாற்றல் குன்றுவதையும் இச்செய்திகளால் உணர முடிகிறது” என்கிறார் (2014: 10) வாசகனை ஈர்க்கக் கூடிய அழகியல் கூறுகளாக இனவரைவியல் செய்திகள் நாவலில் செயல்படுகின்றனவா என்பது பற்றிய விவாதத்தை இக்கண்ணோட்டம் எழுப்புகிறது.

அடித்தள மக்களின் பண்பாடு

சொத்துரிமை, அரசியல் அதிகாரம் என்பவற்றின் அடிப்படையில் வலிமை வாய்ந்த சமூகங்களுக்கிடையே உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகக் காணப்படும் அடித்தள மக்கள் அல்லது விளிம்புநிலை மக்களின் படைப்புகளான வாய்மொழி வழக்காறுகள், பகுப்பொருள் படைப்புகள், நிகழ்த்துதல் கலை வடிவங்கள் என்பன, ஏனைய சாதியச் சமூகங்களின் வழக்காறுகள் மொழிசாராத மரபுகள் ஆகியவற்றிற்கு எவ்வகையிலும் தரங்குறைந்தவை அல்ல. ஆயினும், அத்தகைய வழக்காறுகளும் கலைமரபுகளும் ஆய்வாளர்களுடைய கவனத்தை ஈர்க்கவில்லை. ஆனால், ஆய்வறிஞர் ஆ.சிவசுப்பிரமணியன் போன்ற வெகுசில ஆய்வாளர்கள் மட்டுமே புறக்கணிக்கப்பட்ட மக்களின் வாய்மொழி இலக்கியம் உள்ளிட்ட மரபுகளின்பால் உரிய முறையியலோடு ஆர்வம் காட்டினர்.

இந்திய அளவில், சமூக ரீதியில் புறக்கணிக்கப்பட்ட மக்களின் பண்பாட்டையும் கலைமரபுகளையும் பொதுவெளியில் முன்னிறுத்திக் காட்டத்தக்க வகையில் குறிப்பிடத்தக்க ஆய்வுகள் போதுமான அளவிற்கு நடைபெற்றிராத ஓர் யதார்த்தத்தைச் சுட்டிக் காட்டிய சமூகவியல் அறிஞர்கள் சிலர் அடித்தள மக்களின் பண்பாட்டுச் சித்திரம் இந்தியப் பண்பாட்டு வரைபடத்தில் இடம்பெற வேண்டுவதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

“இந்தியாவின் பல வண்ணப் பண்பாட்டுத் தொகுதிக்குள் கழைக் கூத்தாடிகள், கதைப் பாடகர்கள், இரவலார்கள், காமத்தரகர்கள், பாலியல் பணியாளர்கள், நிகழ்த்துக் கலைஞர்கள், வேடிக்கை காட்டுவோர், ஆட்டம் மற்றும் பாட்டுக் கலைஞர்கள், பாம்பாட்டிகள், விலங்குகளைப் பழக்கி வித்தை காட்டுவோர், கதை சொல்லிகள், சோதிடர்கள், நாடோடிகள் போன்றோர் அடங்குகின்றனர். நாட்டார் மற்றும் வெகுமக்கள் பண்பாட்டின் பன்முகத்தன்மைக்கும் உயிர்ப்புத் தன்மைக்கும் இந்தக் குழுக்கள் மிகப்பெரும் அளவில் பங்களிப்புச் செய்துள்ளன. ஆனால், நாட்டின் ஒட்டுமொத்தப் பண்பாட்டுத் தொகுதிக்குள் இந்தக் குழுக்கள் தனித்து இடம்பெறவில்லை. இந்தக் குழுக்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். செய்து முடிக்கப்படாத பண்பாடு பற்றிய ஆய்வுகளின் திட்ட நிரல்களில் இனக்குழுக்கள் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் (Sc.Dube 1993: V).

சமூகவியலறிஞர் எஸ்.சி.துபே வலியுறுத்தியுள்ள சாமானிய மக்களின் பண்பாடு பற்றிய ஆய்வுகளை முன்னெடுத்துச் சென்ற தமிழக முன்னோடி அறிஞர்களில் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் குறிப்பிடத்தக்கவர். விவசாயிகள், கூலித்தொழிலாளிகள், தலித்துகள், வண்ணார், ஆதிவாசிகள், மீனவர்கள், மகளிர், வண்ணார் என்று ஒருவகையில் புறக்கணிக்கப்பட்டவர்களாக விளங்கிய மக்களின் படைப்புகளான வாய்மொழி வழக்காறுகளையும் ஏனைய மரபுகளையும் அடிப்படையாகக் கொண்டு அந்தந்தச் சமூகங்களையும், சமூகப் பிரச்சினைகளையும் பண்பாட்டையும் ஆராய்ந்தார். அவருடைய எழுத்துகள் அறிவுத்தேடலை மட்டுமே முதன்மையாகக் கொண்டிராமல் ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றிய அக்கறையை வெளிப்படுத்துவனவாகவும் அமைந்தன.

ஒருவகையில் இச்சார்புநிலைதான், எழுத்தறிவு மரபினரால் புறக்கணிக்கப்பட்ட அடித்தள மக்களின் வாய்மொழி வழக்காறுகள், அவர்களுடைய ஏனைய மரபுகள் போன்றவை பற்றிய நேர்மறைக் கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்ள காரணமாயிற்று. தங்களுக்கு என்று வரலாறு ஏதுமற்றவர்கள் என்று மேட்டுக்குடி அறிவாளர்களால் கருதப்பட்ட அடித்தள மக்களின் வரலாற்றையும் பண்பாட்டையும் இனம் கண்டு வெளிப்படுத்துவதற்கு உரிய முறையியல்களைக் கண்டறிந்து தம்முடைய ஆய்வில் பின்பற்றினார். அவற்றுள் முதன்மையாது, வாய்மொழி வரலாறு.

வாய்மொழி வரலாறு : குரலற்றவர்களின் குரல்

“கடந்த காலத்தின் அல்லது நிகழ்காலத்தின் சம்பவங்கள் பற்றிய எழுத்து வழியிலான ஆவணமே வரலாறாகும்” என்று வரலாற்றை வரையறுத்த ஹோமர் சி.ஹாக்கெட் என்பவர், “நாட்டார் வழக்காறுகள் பற்றி அவை எதற்கும் இலாயக்கற்றவை” என்று முற்றிலும் நிராகரிக்கும் கருத்தினை வெளிப்படுத்தினார். அதாவது, “மக்களுடைய பழமரபுக்கதைகள், மரபுகள் போன்றவை முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை.

ஏனென்றால், அவை தம்மளவில் சாதகமான மதிப்பு எதனையும் கொண்டிருக்கவில்லை. ஆதலால், வரலாற்றியலர் அவற்றைக் கொண்டு பயன்படுமாறு எதனையும் செய்ய இயலாது” என்றார். இதனை ஒத்த கருத்துக்களையே மேலும் பல வரலாற்றியலர்கள் முன்வைத்தனர். மக்களின் வாய்மொழிபுகளை, வரலாற்றிற்கான மூலாதாரங்களாகக் கொள்ள முடியாது என்ற நிலைப்பாட்டினை கொண்டிருந்த வரலாற்றியலர்களுடைய கண்மூடித்தனமான கருத்தை மறுக்கும் வகையில், “நாட்டார் வழக்காறு என்பது வரலாற்றுக் கண்ணாடியாகும்.

அதாவது, நாட்டார் வழக்காறுகளின் வாயிலாக வரலாற்றைக் காண முடியும்” என்னும் நிலைப்பாட்டினை அஸ்லன் நெவின்ஸ் உள்ளிட்ட வரலாற்றியலர்கள் முன்வைத்தனர். மற்றொரு தரப்பைச் சேர்ந்தவர்கள், “நாட்டார் கதைகள், பாடல்கள் போன்றவை வரலாற்றுண்மை என்னும் பின்புலத்தில் வேரூன்றியிருப்பவையாகும்” என்னும் நிலைப்பாட்டை முன்வைத்தனர்.

இந்தப் பின்புலத்தில், வரலாறு பற்றிய முற்போக்கான வேறு சில அணுகுமுறைகளும் வரலாற்று முறையியல்களும் தோன்றின. அவை எழுத்துவழிஆவணமுறை தழுவிய வரலாற்றியலுக்கு முற்றிலும் நேரெதிராக அமைந்தமையால் மாற்று வரலாறாக கூறப்பட்டன. வாய்மொழி வரலாறு, இனக்குழு வரலாறு, அடித்தள மக்கள் வரலாறு, என்பன உள்ளிட்ட வரலாற்று முறையியல்கள் யாவும் தத்தம் இயல்பில் சாமானிய மக்களின் வரலாற்றை முன்னிறுத்தின. வாய்மொழி வரலாறு பற்றிக் கூறுகையில், “தங்களுக்குத் தாங்களே குரல் கொடுக்கவியலாத மக்களின் குரலாக எதிரொலிப்பது” என்றனர். அத்துடன் “வாய்மொழி வரலாறு என்பது வரலாற்றை மீளப்பெறுவதற்கான கருவியோ ஒரு முறையியலோ மட்டுமன்று; அது ஒரு வரலாற்றுக் கோட்பாடுமாகும். மேலும், அது சாமானிய நாட்டாரும் புறக்கணிக்கப்பட்டவர்களும் தமக்கென வரலாற்றைக் கொண்டுள்ளனர். அவ்வரலாறு கட்டாயம் எழுதப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது” என்றனர்.(Gary Okihiro. 1996: 209)

தமிழகத்தின் நாட்டார் வழக்காற்றியல் புலம் மற்றும் வரலாறு பற்றிய உரையாடலில் வாய்மொழி வரலாறு முதலிய முறையியல்கள் பற்றிய விவாதங்கள் எவையும் அதுவரையில் இடம்பெற்றிராத நிலையில் முதன்முதலில் ஒரு நிலைப்பாட்டுடன் பேசத் தொடங்கியவர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன். வாய்மொழி வரலாறு உள்ளிட்ட மாற்று வரலாற்று வடிவங்கள் பற்றிய அவருடைய விவாதங்களை தொகுப்பாக முன்வைக்கக் கூடிய ஆதாரமாக அமைவது அவருடைய அடித்தள மக்கள் வரலாறு (2002) என்னும் நூலாகும்.

“....மாற்று வரலாறு என்ற ஒன்றை நாம் உருவாக்கும்போது மாற்று வரலாற்றுக்கான சான்றுகளைக் குறித்து கேள்வி உருவாகிறது. ஏனெனில் மரபுவழி வரலாற்றில் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான ஆவணங்களும் ஆளுவோரால் உருவாக்கப்பட்டவை. இவற்றிலிருந்து ஓரளவுக்கே மாற்று வரலாறு தொடர்பான சான்றுகளைப் பெற முடியும். எனவே, மாற்று வரலாற்றை உருவாக்கும் பொழுது மாற்று வரலாற்றுக்கான தரவுகளையும் நாம் தேட வேண்டியுள்ளது. மேலும் இந்தியா போன்ற எழுத்தறிவின்மை மிகுதியாக உள்ள நாட்டில் எழுத்து வடிவிலான சான்றுகளின் வாயிலாக மட்டும் பெரும்பான்மையினரான அடித்தள மக்களை மையப்படுத்தும் வரலாற்றை எழுத முடியாது. இத்தகைய நிலையில் வாய்மொழி வழக்காறுகளே முக்கியச் சான்றுகளாக அமைகின்றன.” (2002: 12)

மரபுவழி வரலாற்றியலர்கள் ஆதாரத்தன்மை அற்றவை என்று நிராகரிக்கும் பல்வேறு வகைப்பட்ட வாய்மொழி வழக்காறுகள், சடங்கியல் மரபுகள், பழக்க - வழக்கங்கள் என்பன எவ்வாறு வரலாற்றைப் பிரதிநிதித்துவம் செய்யும் சான்றுகளாக உள்ளன என்பதை எடுத்துக்காட்டுகள் வாயிலாக விவாதிக்கும் கட்டுரைகளை உள்ளடக்கிய ‘அடித்தள மக்கள் வரலாறு’ நூல், ஜேன்வன்சினாவின் “வாய்மொழி மரபே வரலாறாகும்” என்னும் கருத்தாக்கம், அல்லன் நெவின்சின் வாய்மொழி வரலாறு பற்றிய முறையியல், லின்வுட் மான்டெல், ரிச்சர்ட் எம் டார்சன், வில்லியம் ஐவே ஆகியோர் முன்வைத்த ‘நாட்டார் வரலாறு’ (Folk History) பற்றிய கருத்துருவம், சார்லஸ் ஹட்சன் பேசும் இனக்குழு வரலாறு பற்றிய சிந்தனைகள் ஆகியவற்றின் ஊடாகத் தமிழகப் பண்பாட்டுச் சூழலில் ஆய்வாளர்களிடையே பொருட்செறிவான விவாதங்களைத் தூண்டக்கூடிய முன்னோட்டப் படைப்பாகும்.

Pin It