அந்த நாள்களில், தொண்டை மண்டல முதலியார் சமூகத்தினரை ஒன்றரைப் பிராமணர்கள் என்றே மக்கள் எண்ணுவர்; அழைப்பர். அவர்கள் வைதிக, சாதி, மத, சம்பிரதாய ஆசாரங்களைப், பிராமணர்களைவிட அரை மடங்கு அதிகமாகக் கடைப்பிடித்தார்கள் என்பதால் அவ்விதம் எண்ணப்பட்டனர்; அழைக்கப்பட்டனர்.

அத்தகைய சைவமரபில் தோன்றிய ஒருவர், சிறுவயது முதல் சைவத் திருமேனியாகத் தலையில் கட்டுக்குடுமியுடனும், நெற்றியில் திரு நீற்றுப்பட்டையுடனும், கழுத்தில் உருத்திராட்சக் கொட்டையுடனும் தோற்றமளித்தார். சைவத் தமிழ் கற்று, சைவமும் தமிழும் இணைந்து வளர்ந்தவர்,கல்லூரியில் கால் பதித்தபோதும் அதே சைவக் கோலத்தோடும் கையில் தேவார, திருவாசக ஏடுகளுடனும் காட்சியளித்தார். பழுத்த வைதிக ராகவும், கதர் அணியும் காந்தியவாதியாகவும் கல்லூரி மாணவப் பருவத்தைத் தொடங்கிய அந்த இளைஞர், மெல்ல மெல்லப் பகுத்தறிவாளராக, சுயமரியாதை இயக்கத்தின்மீது பற்றுக் கொண்டவராகக் கல்லூரியைவிட்டு வெளியேறினார். அந்த இளைஞர் யார்?அவர்தான் தோழர் குத்தூசி சா.குருசாமி. அந்த மறக்கப்பட்ட சுயமரியாதைச் சுடரின் வரலாறு இது.

kuthoosi gurusamyபிறந்த மண்

தஞ்சை மாவட்டம்,பட்டுக்கோட்டை வட்டத்திலுள்ள, குருவிக்கரம்பை என்னும் சிற்றூரில், சாமிநாத முதலியார், குப்பு அம்மாள் இணையருக்கு, 1906 ஆம் ஆண்டு, ஏப்ரல் திங்கள் 23 ஆம் நாள் குருசாமி பிறந்தார்.

குருவிக்கரம்பையில், சிவன் கோயில் ஒன்றும்,மாரியம்மன் கோயில் ஒன்றும் இருந்தன; இன்றும் இருக்கின்றன. கூரைவேய்ந்த ஒரு ஆரம்பப்பள்ளி ஒன்றும் இருந்தது.

தந்தை சாமிநாத முதலியார், பழுத்த சைவர். அவர் அவ்வூரின் கர்ணமாக இருந்தவர். ஊர்ப் பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துபவர். அவர் தமிழில் நல்ல புலமை பெற்றவராகவும், சைவத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராகவும் விளங்கினார். அவர் ஊர்மக்களின் ஒத்துழைப்போடு சைவமடம் ஒன்றினை 1912 ஆம் ஆண்டில் கட்டிமுடித்தார். அந்த மடத்தில் எந்நாளும் தேவார-திருவாசகப் பாடல்கள் இசைக்கப்பட்டன.

இத்தகைய சூழலில் பிறந்த குருசாமி சைவக் குழந்தை யாக, தேவார-திருவாசகப் பாடல்களை இசைப்பவராக வளர்ந்து வந்தார். 1911 ஆம் ஆண்டு அகவை ஐந்தில் தொடக்கப்பள்ளியில் சேர்ந்தார்.அவரின் ஆசிரியர் தாச்சியப்பன்-சிறந்த தமிழறிஞர். கடவுள், மதம், சாதி சம்பிரதாயங்கள் மூடப்பழக்க வழக்கங்களைச் சித்திரிக்கும் கதைகளே அன்றைய பாடத்திட்டங்களாக அமைந்திருந்தன. சிறுவன் குருசாமிக்கு இனிமையான குரல்-நன்றாகப் பாடுவான்.ஆகையால் தேவார இசைக்குழுவில் இணைந்து பாடுவான்.

நாகை-திருவாரூர் வாசம்

நாகப்பட்டினத்திற்கருகில் குறிச்சி என்ற சிற்றூரில் 20 ஏக்கர் நஞ்சை நிலம்,குருசாமியின் தந்தையார் சாமிநாதமுதலியார்க்கு உரித்தாயிருந்தது. தந்தையாரின் நெருங்கிய உறவினர் ஒருவர் மேற்பார்வையில் அந்த நிலங்கள் இருந்தன. நெருங்கிய உறவினர், என்ற போதும், நிலத்திலிருந்து பெற்ற வருவாயை ஒழுங்காகக் கொடுப்பதில்லை. எனவே, சாமிநாதமுதலியார் தானே நிலத்தின் பொறுப்பை ஏற்று, உழவுத் தொழிலில் ஈடுபடவும், தன் ஒரே மகன் குருசாமி,மகள்கள் சவுந்தரவல்லி, சுப்புரத்தினம் ஆகியோரின் படிப்பு கருதியும் நாகப்பட்டினத்தை வாழ்விடமாகக் கொண்டார். ஆனால், குருசாமியின் தந்தை சில திங்களில் நோயுற்று, மண்ணுலகை நீத்தார். அவர் மனைவி யும், சிறுவன் குருசாமியும், தங்கையர் இருவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

இந்நிலையில் அவர்களது அத்தை மங்களம் அம்மையார், அவர்களை வளர்க்கும் பொறுப்பை ஏற்று, திருவாரூருக்கு அழைத்துச் சென்றார். அவர்கள் திருவாரூரில் தொடக்கப் பள்ளியில் கல்வியைத் தொடர்ந்தனர். பின் குருசாமி உயர்நிலைப் படிப்பை திருவாரூர் கழக உயர் நிலைப் பள்ளியில் தொடர்ந்தார். (அந்தப் பள்ளி இன்று வடபாதிமங்கலம் சோம சுந்தரம் உயர்நிலைப்பள்ளி என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. (அந்தக் கழக உயர்நிலைப்பள்ளியில் தான் இக்கட்டு ரையாளர் பயின்றுள்ளார். கட்டுரையாளரின் தந்தையார் கமலத் தியாகராஜனும், குருசாமியும் அதே பள்ளியில் பயின்றுள்ளனர். இருவரும் நெருங்கிய நண்பர்களாய் இருந்துள்ளனர்.) எட்டாம் வகுப்பில் குருசாமி படித்துக் கொண்டிருக்கும் போது அன்னையை இழந்தார். அத்தை மங்களம் அம்மையார், குருசாமிக்குத் தாயும் தந்தையுமானார்.

திருவாரூர் சைவத் திருத்தலம்; ஆதலால் அவ்வூரில் நாள் தவறாமல் பன்னிருதிருமுறைச் சொற்பொழிவுகள் நடைபெற்ற வண்ணமிருக்கும்; தேவாரப் பண்கள் இசைக்கப்பட்ட வண்ண மிருக்கும். தேவார இசைக்குழுவில் குருசாமியும் கலந்து கொண்டு தேவாரப் பண்களை இசைப்பார். ஆதலால் குருசாமி யின் உள்ளத்தில் சைவசமயக் கோட்பாடுகள் ஆழமாக வேர் விட்டுப் பதிந்திருந்தன. திருவாரூரில் எண்கண் வெங்கடாசல முதலியார் என்பவர் கம்பராமாயணத்தில் ஆழங்காற்பட்ட புலமை மிக்கவர்; கம்பராமாயண இசைச் சொற்பொழிவுகள் அடிக்கடி நிகழ்த்துவார். அந்த உரைகளைக் கேட்டு, குருசாமியும் கம்பராமாயணத்தில் நன்கு தேர்ச்சி பெற்றார்.

கல்லூரி வாழ்க்கை

திருவாரூர் உயர் நிலைப் பள்ளிப் படிப்பு முடிவுற்றதும், 1924 ஆம் ஆண்டு, திருச்சி தேசியக் கல்லூரியில் இடை நிலை வகுப்பில் சேர்ந்து பயின்றார். கல்லூரியிலும் அவர் சைவத்திருக் கோலத்துடன் வாழ்ந்தார்.

திருச்சி தேசியக் கல்லூரியில் பயின்ற காலம், காங்கிரஸ் இயக்கம் ஆங்கில அரசை எதிர்த்துப் போரிட்டகாலம்; வைக்கம் போராட்டம் நிகழ்ந்த காலம் ஆகும். அந்த வரலாற்று நிகழ்வுகள் குருசாமியின் உள்ளத்தில் புதிய சிந்தனைகளை ஊட்டின; வைதிக குருசாமியைக் காந்தியவாதியாக மாற்றின. குருசாமி மாணவர் தேசிய இயக்கத்தில் இணைந்தார். காந்தியடிகள், பெரியார், திரு.வி.க. போன்றோரின் சொற்பொழிவுகளும், திரு.வி.க.வின் எழுத்து நடையும் குருசாமியின் கருத்தைக் கவர்ந்தன, அதே போன்று மேட்டூர் அணை கட்டுதற்குத் தக்க இடத்தைத் தேர்ந் தெடுத்துக் கொடுத்த பொறியியல் அறிஞர் பா.வே. மாணிக்க நாயக்கர் பேச்சும் எழுத்தும் அவரை மிகவும் கவர்ந்தன.

கல்லூரியில் காந்தியடிகளுக்கு வரவேற்பு

1925 ஆம் ஆண்டு காந்தியடிகள், தமிழ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். குருசாமி மேற்கொண்ட முயற்சியின் பயனாய் காந்தியடிகள் தேசியக் கல்லூரிக்கு வந்துற்றார். கல்லூரி நிருவாகத்தின் சார்பில் வரவேற்பளிக் கப்பட்டது. வரவேற்புரை சமஸ்கிருதத்தில் அமைந்திருந்தது. காந்தியடிகள் ஏற்புரை வழங்கியபோது, தனக்குச் சமஸ்கிருதத்தில் வரவேற்புரை வழங்கியதை வன்மையாகக் கண்டித்தார். எனக்குப் படித்த வரவேற்புரையை எத்தனை பேர் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்? கை தூக்குங்கள். பார்க்கலாம்! என்றார். அந்த வரவேற்புரையை எழுதிக் கொடுத்த சமஸ்கிருதப் பண்டிதர் ஒருவரே கை தூக்கினார். அதைக் கண்ட காந்தியடிகள், உங்களுக்கு வெட்கமாக இல்லை? உங்கள் தாய்மொழி தமிழில் ஏன் வரவேற்புரையை அளித்திருக்கக் கூடாது? என்று கேட்டார். அருகில் அமர்ந்திருந்த குருசாமி ஹியர், ஹியர் என்று உரக்கக் கத்தினார். காந்தியடிகள் சினத்துடன் குருசாமியை நோக்கி, இது அதைவிட மோசமானது,என்று புகன்றார். இந்நிகழ்வு, குருசாமி யின் துணிவிற்கும், மொழி உணர்வுக்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

இந்தக் காலத்தில், தமிழ் நாட்டுக் காங்கிரசு இயக்கத்தில் பிராமணர், பிராமணரல்லாதார் என்ற உணர்வு தலை தூக்கியிருந்தது. அதற்குக் காரணமாகக் காங்கிரசில் அந்நாளில் பிராமணர் ஆதிக்கமே நிலை கொண்டிருந்தது. இந்நிலையினைப் பெரியார் கடுமையாக எதிர்த்து வந்துள்ளார். சேரன்மாதேவி குருகுலத்தில் வ.வே.சு.ஐயர் வர்ண வேறுபாட்டிற்குத் துணை யாக, ஆதரவாக இருந்துள்ளார். குருகுலத்தின் வருணாசிரம ஆதரவுப் போக்கினைப் பெரியார் வன்மையாக எதிர்த்தார்.

இவற்றின் விளைவாக 1925, நவம்பர் திங்களில் காஞ்சி புரத்தில் நடைபெற்ற மாநாட்டில் பெரும் பிளவு ஏற்பட்டது. பெரியார், எஸ். இராமநாதன் ஆகிய இருவருடன் பலர் காங்கிரசை விட்டு விலகினர்.

சுயமரியாதைச் சங்கம் தோற்றம்

பெரியாரும், எஸ்.இராமநாதனும், தமிழரின் வளர்ச்சிக்காகப் போராடுவது, சமுதாயச் சீர்திருத்தம் செய்வது, சாதி-மத வேறுபாட்டை நீக்குவது, மூடப்பழக்க வழக்கங்களை ஒழிப்பது போன்ற பல கொள்கைகளைக் கொண்ட சுயமரியாதைச் சங்கத்தைத் தோற்றுவித்தனர். இந்தக் கொள்கைகளைப் பரப்புதற்கென்று குடி அரசு இதழைத் தொடங்கினார் பெரியார்.

கல்லூரி மாணவர் குருசாமி, தமிழகத்தின் அரசியல், சமுதாய நிகழ்ச்சிகளைக் கூர்ந்து கவனிக்கலானார். குடி அரசு இதழின் தொடர் வாசகரானார். வைதிகக் குருசாமி மெல்ல மெல்ல பகுத் தறிவாளர் குருசாமியாக மாறினார். பூவாளூர் பொன்னம்பல னாரின் நட்பும் கிட்டியது. குருசாமி சுயமரியாதை இயக்கத்தில் இணைந்தார்.

பெரியார் சந்திப்பு

1928 மே பிற்பகுதியில், பூவாளூர் பொன்னம்பலனார், குருசாமியை, ஈரோட்டில் பெரியாருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

பெரியார்         :           வாங்க. (இளைஞனாக உள்ள தன்னை வா என்று ஒருமையில் அழைக்காமல் வாங்க என்று மரியா தையுடன் அழைத்த பெரியாரின் பண்பு, குருசாமி யின் உள்ளத்தை மிகவும் கவர்ந்து விட்டது)

பெரியார்         :           நீங்க எதுவரை படிச்சிருக்கீங்க?

குருசாமி          :           பி.ஏபொருளாதாரம்; இறுதித்தேர்வு எழுதியுள்ளேன்.

பெரியார்         :           இப்போ என்ன செய்றீங்க?

குருசாமி          :           சும்மாதான் இருக்கேன்.

பெரியார்         :           அப்பா அம்மா என்ன செய்றாங்க?

குருசாமி          :           இருவரும் இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பே காலமாகிவிட்டார்கள்.

பெரியார்         :           அப்போ எப்படிப் படிச்சிங்க?

குருசாமி          :           அத்தை படிக்க வச்சாங்க.

பெரியார்         :           குடி அரசு எவ்வளவு நாளா படிக்கிறீங்க?

குருசாமி          :           ஆரம்பத்திலிருந்தே படிக்கிறேன்.

பெரியார்         :           கொள்கை பிடிச்சிருக்குங்களா?

குருசாமி          :           பிடிச்சிருக்குங்க.

பெரியார்         :           இங்கேயே தங்கி நம்ப வேலையைக் கவனிக் கிறிங்களா?

குருசாமி          :           கவனிக்கிறேங்க.

இதன்பின் குருசாமி ஈரோட்டில் தங்கி இயக்கப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். பெரியாரைச் சந்தித்தது குறித்துக் குருசாமி பிற்காலத்தில், பாஸ்வெல் ஜான்சனைச் சந்தித்தபோது, பாஸ்வெல்லுக்கு ஏற்பட்ட உணர்வு தனக்கும் ஏற்பட்டது, என்று கூறியுள்ளார். குடி அரசு அலுவலகத்தில் பணியாற்றும் போது அலுவலக ஊழியர்கள், அனைவரும் குருசாமியிடம் அன்பு பாராட்டினார்கள்; தலைவர்கள், தொண்டர்கள் அனைவரின் நட்பையும் அன்பையும் பெற்றார். அன்னை நாகம்மையாரின் அன்புக்கு உரியவரானார். குடி அரசில் தொடர்ந்து கட்டுரைகளும் தலையங்கங்களும் எழுதினார்.

ரிவோல்ட் ஆங்கில இதழ் தொடக்கம்

ஆங்கில வார ஏடு தேவை என எஸ்.இராமநாதனும், குருசாமியும் எண்ணினர்; பெரியாரிடம் தங்கள் எண்ணத்தைத் தெரிவித்தனர்; பெரியாரும் ஒப்புதல் தந்தார். 1928, நவம்பர் 7ஆம் நாள் ரிவோல்ட் ஈரோட்டிலிருந்து வெளியாயிற்று. பெரியாரும்,இராமநாதனும் ஆசிரியர்கள், குருசாமி துணை ஆசிரியர். முழுப்பொறுப்பும் குருசாமியிடமே இருந்தது. 16-6-1929 முதல் குடி அரசும் ரிவோல்ட்டும் சென்னையிலிருந்து வெளியாயிற்று. அதற்கான ஏற்பாடுகளைச் செய்தவர் குருசாமி.

டபிள்யு.பி.ஏ.சௌந்திரபாண்டியன் தலைமையில், செங்கல்பட்டில் முதல் சுயமரியாதை மாநாடு 1929 பிப்ரவரி 17, 18 தேதிகளில் நடைபெற்றது. அம்மா நாட்டில் குருசாமி ஆற்றிய உரை அவையோர் உள்ளத்து உணர்வுகளைத் தட்டியெழுப்பிச் செயல்படச் செய்திடும் ஆற்றல் மிக்கதாய் அமைந்திருந்தது.

ஈரோட்டில் ஆதித் திரவிடத் தோழர்கள் கோயில் நுழைவு

ஈரோடு ஈஸ்வரன் கோயில் தேவஸ்தானக் கமிட்டியின் தலைவராகப் பெரியார் இருந்தார். 1929 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 4ஆம் நாள் ஈஸ்வரன் கோயிலுக்குள் ஆதித் திராவிடத் தோழர்களையும் அனுமதிக்க, ஆலய தேவஸ்தானக் கமிட்டி முடிவெடுத்தது. இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியவர் பெரியாரே.

தீர்மானம் நிறைவேற்றிய மறு நாளே பெரியார் கோயம்புத்தூர் சென்றுவிட்டார். தான் திரும்பிவரும் வரை இத்தீர்மானத்தின் மீது நடவடிக்கை வேண்டாமென்று தோழர் குருசாமியிடம் கூறிவிட்டே சென்றார்.

பெரியார் கோவை சென்ற அன்று மாலையே, குருசாமியும், மாயவரம் நடராஜனும் இணைந்து, குடிஅரசு அலுவலகத்தில் பணிபுரிந்துவந்த ஆதித்திராவிடத் தோழர்கள் பசுபதி, கருப்பன் ஆகியோரை அழைத்துக்கொண்டு கோயிலில் வழிபாடு செய்வோர் போன்று கோயிலுக்குள் நுழைந்துவிட்டனர். இவர்கள் கோயிலில் கலகம் விளைவிக்க ஊடுருவியுள்ளனர் என்று சந்தேகங்கொண்டு, கோயில் ஊழியர்கள் கோயில் கதவுகளைத் தாளிட்டுவிட்டனர். இரண்டு தினங்கள் கோயிலில் குருசாமியும் தோழர்களும் அடைபட்டுக்கிடந்தனர். அன்னை நாகம்மையார் அவர்களுக்கு உணவினைக் கோயில் சுற்றுச் சுவர் வழியாக அனுப்பிவைத்தார். பெரியார் வந்தபின்னரே கதவுகள் திறக்கப்பட்டுத் தோழர்கள் விடுவிக்கப்பட்டனர். இதன் விளைவாக அந்நாள்களில், தமிழகத்தில், எந்த ஊரில் சுயமரியாதை இயக்கத்தின் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றாலும், அவ்வூர் கோயில் கதவுகள் தாளிடப்பட்டிருக்கும். கூட்டம் நிறைவுற்ற பின்னர், சு.ம இயக்கத் தோழர்கள் ஊரைவிட்டு வெளியேறிய பின்னரே கோயில் நடை திறக்கப்படும். கோயில் நிர்வாகிகளுக்குச் சு.ம.இயக்கத் தோழர்கள் ஆதி திராவிடத் தோழர்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்றுவிடுவர் என்ற ஐயம், அச்சம் இருந்ததே அதற்குக் காரணமாகும்.

பட்டுக்கோட்டையில் முதல் சுயமரியாதைத் தொண்டர்கள் மாநாடு 1929 ஆம் ஆண்டு மே-25 இல் தோழர் குருசாமியின் தலைமையில் நடைபெற்றது. பெரியார், மாநாட்டுத் தலைவராகத் தோழர் குருசாமியின் பெயரை முன்மொழிந்து பேசியபொழுது,எண்ணத்தில், எழுத்தில், பேச்சில் செய்கையில், எல்லாவற்றிலும் ஒரேமாதிரியான கொள்கையுள்ள ஒரு பெரியார் நமக்குக் கிடைத்தது, நமது இயக்கத்தின் முற்போக்கிற்கு ஒரு நல்ல அறிகுறியும், தொண்டர்களுக்கு வழிகாட்டியுமாகும், என்று கூறினார். (குடியரசு-2-6-1929) மிகுந்த இடைவிடாத கையொலி களுக்கிடையே, அகவை 23 நிரம்பிய இளைஞர்-பெரியாரால் பெரியார் என்றழைக்கப்பட்ட பெருஞ்சிறப்பினைப் பெற்ற குருசாமி, தன் தலைமை உரையை நிகழ்த்தினார்.

சுயமரியாதை இயக்கம் எதிர்ப்புகளுக்கிடையே வளர்ந்து பீடு நடைபோட்டது. பிராமணர்களும், பிராமணரல்லாத உயர் ஜாதி இந்துக்களும் சுயமரியாதை இயக்கத்தை எதிர்த்து வந்தனர். அவர்களுக்குத் துணைபுரிபவர்களாகத் தமிழ்ப் புலவர்களும் சேர்ந்து கொண்டனர்.

சுயமரியாதைக் கருத்துகள் தமிழை அழித்துவிடும் என்று பொய்யான பரப்புரையில் தமிழ்ப் புலவர்கள் ஈடுபட்டனர். தோழர் குருசாமி வெகுண்டு குடி அரசு 1929, ஜூலை 7 இதழில் தமிழ் மொழி வளர்ச்சியைக் கெடுப்பவர்கள் தமிழ்ப் பண்டிதர்களே, என்று நெடிய கட்டுரை எழுதினார். அந்தக் கட்டுரைக்குப் பின்னர் தமிழ்ப் புலவர்கள் பலர் சுயமரியாதை இயக்கத்தை நோக்கி வரத் தொடங்கினர். உண்மையான தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபடவும் முனைந்தனர்.

கலப்புத் திருமணம்

1929, சூலை 20, 21 தேதிகளில் நடைபெற்ற நெல்லை மாவட்ட இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில், மதம்,கடவுள், ஆகியவற்றை எதிர்த்து நாத்திகப் பரப்புரை நிகழ்த்தத் தீர்மானிக்கப் பெற்றது.

அந்த நெல்லை மாவட்ட இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில் பேசிய தோழர் குருசாமி, சாதியை ஒழிப்பதற்குக் கலப்புத் திருமணம் ஒன்றுதான் வழி என்றும், கலப்புத் திருமணத்தைத் தவிர வேறு எந்த முறையினாலும் சாதி ஒழியாது என்றும் உரைத்தார். சாதிக்கொடுமையை எதிர்த்துப் போராடும் சமூகச் சீர்திருத்தவாதியே அரசியல்வாதியைவிட ஆயிரம் பங்கு துணிச்சல் உள்ளவர், என்றும் பேசினார்.

பேசிவிட்டுப், பேசிய பேச்சினை அடுத்த விநாடியே மறந்துவிடும் மனிதரல்லர் தோழர் குருசாமி. கலப்புத் திருமணம் என்பது அவருக்கு உயிர்க் கோட்பாடாயிற்று, அக்கொள்கையில் உறுதியாய் நின்றார்.

உற்றார் உறவினர்கள் கலப்புத் திருமணம் வேண்டா மென்று வலியுறுத்தினார்கள்; தடுத்தார்கள்; பயமுறுத்தினார்கள் எனினும் தோழர் குருசாமி கலப்புத் திருமணம் புரிந்து கொள்வதில் உறுதியாக இருந்தார்.

இதனை அறிந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், சென்னை ஜியார்ஜ் டவுனில் வசித்துவந்த (ஃபிடில்) வயலின் இசைக் கலைஞர், திருவாரூர் டி.சுப்ரமணியபிள்ளையின் முதல் மகள் குஞ்சிதத்தைத், தோழர் குருசாமிக்கு மணமுடிக்கலாம் என்று பெரியாரிடம் தெரிவித்தார். அப்பொழுது தோழர் குஞ்சிதம் இராணிமேரி கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தார்.

பின்னர், 1929 டிசம்பர் 8ஆம் நாள் ஈரோட்டில் பெரியார் இல்லத்தில் குருசாமி-குஞ்சிதம் கலப்புத் திருமணம் நடைபெற்றது.

இந்தத் திருமணத்தைத் தடுத்து நிறுத்திட விரும்பிய குருசாமியின் இரண்டாவது தங்கை-சுப்புரத்தினத்தின் கணவர், திருச்சியிலிருந்து தந்தி அனுப்பினார். தந்தியில், குருசாமியின் தங்கை கிணற்றில் விழுந்து இறந்து விட்டார் என்று கண்டிருந்தது. பெரியாரும் மற்றவர் களும் அதிர்ச்சியுற்றனர்.

தோழர் குருசாமி, என் இருதங்கைகளில் இந்தத் தங்கை தான் நல்ல திடமனம் படைத்தவர், நிச்சயம் அவர் உயிருடன் இருப்பார், என்று மிக நிதானமாகக் கூறினார். தோழரின் கூற்றே உண்மையாயிற்று.

பெட்ரண்டு ரஸ்ஸல் கணவன்-மனைவி குறித்து

குஞ்சிதம்-குருசாமி இருவரும் கற்றறிந்தவர்கள்; மன தாலும் கொள்கையாலும் ஒன்றுபட்டவர்கள். பகுத்தறிவாளர் பெட்ரண்டு ரஸ்ஸல், கணவன் மனைவி உறவு பற்றிக் கூறியதற்கிணங்க இவ்விருவரும் செம்மையுடன் வாழ்ந்தனர்.

இருவருக்குமிடையே முழுமையான சமத்துவ உணர்ச்சி யிருக்கவேண்டும். ஒருவர் உரிமையில் ஒருவர் தலையிடக் கூடாது. அப்பழுக்கில்லாத நெருக்கமும், உள்ள ஒருமைப்பாடும் இருக்கவேண்டும். வாழ்க்கையில் ஒரேதன்மைத்தான குறிக்கோள் இருக்கவேண்டும். இத்தன்மைத்தானதுதான் குஞ்சிதம்-குருசாமி வாழ்வியல் அறம்.

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை, என்ற முதுமொழியை அறிந்துணர்ந்திருந்த தோழர் குருசாமி, தன்னை எதிர்த்துச் சுடுசொற்களை வீசிய சுற்றத்தார் இல்லங்களுக்கு, மனைவியுடன் சென்றுவந்தார்; சுற்றம் தழுவி நின்றார்.

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலருடன் நட்பு

இந்தியாவின் முதல் பொதுவுடைமை இயக்கத்தோழர், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர். 1923 இல் சென்னையில் விவசாயத் தொழிலாளர் இயக்கத்தைத் தோற்றுவித்து, முதன்முறையாக மேநாளைக் கொண்டாடியபோது, இளைஞர் குருசாமியும் அதில் பங்கேற்றார். 1928 இல் சிங்காரவேலர் தலைமையில் தென்னிந்தியத் தொடர்வண்டித் தொழிலாளர் பொதுவேலை நிறுத்தம் நடைபெற்றது. சிங்காரவேலர் சிறைத் தண்டனை பெற்றார். விடுதலை பெற்றுவந்த பின்னர், குருசாமியுடன் அவர் நெருங்கியதொடர்பு கொண்டார். அவரின் தோழமையால் குருசாமியின்பால் மார்க்சியப் பொதுவுடைமை கருத்துகள் ஆக்கம் பெற்றன. குடி அரசு இதழ்களில் சிங்கார வேலரின் கட்டுரைகள் குருசாமியால் தொடர்ந்து வெளியிடப் பட்டன; அவரின் கட்டுரைகள் சுயமரியாதை இயக்கக் கொள்கை களுக்கு உரம் ஊட்டின; வளம்சேர்த்தன. குஞ்சிதம்-குருசாமி இருவரும்,சிங்காரவேலரின் இல்லத்தில் அமைந்திருந்த மார்க்ஸிஸ்டு-லெனினிஸ்ட்நூலகத்தை முழுமையாகப் பயன் படுத்திக் கொண்டனர். அவ்விருவர் மீதும், மிகுந்த பற்றும் பாசமும் கொண்டிருந்தார் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்;1935 ஆம் ஆண்டுகுருசாமி முன்மொழிந்த தமிழ் மொழி எழுத்துச் சீர்திருத்தத்தை மிகவும் வரவேற்றுப் பாராட்டினார்.

புதுவை முரசும் புரட்சிப்பாவேந்தர் நட்பும்

புதுவை நோயல் என்ற புதுவை சுயமரியாதை இயக்கத் தோழர், 1930 ஆம் ஆண்டு குத்தூசி குருசாமியை ஆசிரியராகக் கொண்டு புதுவை முரசு என்ற வார இதழைத் தொடங்கினார், பெரியார் புதுவை முரசிற்கும் அதன் ஆசிரியர் குத்தூசி அவர்களுக்கும் தன் வாழ்த்தினைத் தெரிவித்தார்.

1931, ஆகஸ்டு மாத இதழ் ஒன்றில் ஆசிரியர் குத்தூசி எழுதிய “அறிவிருக்கிறதா?” என்ற தலையங்கத்தில் கிறித்துவப் பாதிரிமார்களின் குற்றங்குறைகளைச் சுட்டிக் காட்டிக் கண்டித்து எழுதியிருந்தார். அதனால் வெகுண்ட பாதிரிமார்கள், பதிப்பாசிரியர் நோயல் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தனர். 1934 மார்ச் 4ஆம் நாள், புதுவை கீழ்மை நீதிமன்றம், பதிப்பா சிரியர் நோயலுக்கு உருபாய் ஐநூறு அபராதமும், ஒரு மாதச் சிறைத்தண்டனையும் விதித்துத் தீர்ப்பு வழங்கியது இத்தீர்ப் பினை எதிர்த்து பாரிசிலுள்ள உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. வழக்கு சம்பந்தப்பட்ட குருசாமியின் கட்டுரைகள் ஃபிரஞ்சுமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு பாரிஸ் வழக்காடு மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. பாரிஸ் மேலமை நீதிமன்றம், புதுவை தீர்ப்பு முறையற்றது என்று, நோயலுக்கு வழங்கிய தண்டனையையும் அபராதத் தொகையையும் நீக்கி நீதி வழங்கியது.

புதுவை முரசில், புரட்சிப்பாவேந்தர் பாரதிதாசன், கவிதை கள், கட்டுரைகள் தொடர்ந்து எழுதி வந்துள்ளார். இதனால் குருசாமியும் பாவேந்தரும் நெருங்கிய நண்பர்களாயினர். குருசாமியின் கொள்கை உறுதியையும், அறிவாற்றலையும் அறிந்திருந்த பாவேந்தர் 1930 இல் சுயமரியாதைச்சுடர் என்ற ஒரு சிறு கவிதை நூலை எழுதி வெளியிட்டார். அச்சிறு நூலை, புதுவை முரசு ஆசிரியர் திரு.எஸ்.குருசாமி, பி.ஏ., அவர்களுக்குச் சமர்ப்பணம் என்று காணிக்கையாக்கினார். பாரதிதாசனுடனான ஆழ்ந்த நட்பின் விளைவாக அவரின் முதல் கவிதைத் தொகுதியைப் பதிப்பிக்கும் பொறுப்பைக் குருசாமி ஏற்றார். குருசாமியின் மனைவி குஞ்சிதம் அம்மையார், முதல் கவிதைத் தொகுப்பினை 1938 சனவரி 1ஆம் நாள் வெளியிட்டார்.

சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி

சோ.இலட்சிமிதரன் பாரதியார் முயற்சியில் இராமநாதபுரம் மாவட்டம், திருப்பத்தூர் தாலுகாவில் 1930 இல் சுயமரியாதை மாநாடு நடைபெற்றது. மாநாடு நடைபெறும் நகரம் முழுதும் வரவேற்பு வளைவுகள் நிறுவப்பட்டிருந்தன. பல வளைவுகளில், சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி என்று எழுதப் பட்டிருந்தது. இந்த வாசகங்கள் கலகத்திற்கு வழிவகுக்கும் என்று அச்சமுற்ற காவல் துறைத் துணைக் கண்காணிப்பாளர், துணைக் குற்றவியல் நீதிபதியிடம், மாநாட்டிற்குத் தடை விதிக்குமாறு வேண்டினார். துணைக் குற்றவியல் நீதிபதி மாநாடு நடைபெறும் இடத்திற்கே நேரில் வந்தாய்வு செய்தார்.

நீதிபதி, துணைக் கண்காணிப்பாளரை நோக்கி, மாநாடு அமைதியாகத்தானே நடைபெறுகின்றது? இதற்கு ஏன் தடை யாணை வேண்டும் என்று கேட்கின்றீர்கள்? என்று கேட்டார்.

கண்காணிப்பாளர், “சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு” அடி என்று எழுதியுள்ளனர்.அதனால் கலகம் விளையும், என்றார். அதற்கு குருசாமி, ஆமாம். அதில் தவறென்ன? நீங்கள் சூத்திரன் என்று சொல்ல விரும்புகிறீர்களா? என்று கேட்டார். கண்காணிப்பாளர், இல்லை,என்றார். குருசாமி, அப்படியென்றால் உங்களை எவரும் அடிக்கமாட்டார்கள். தமிழர்களைப் பார்த்து, சூத்திரன் என்று சொல்பவர்கள் எவரா னாலும் அடிக்கப்படுவார்கள், என்று கூறினார்

நீதிபதியிடம், சோ.இலட்சுமிதரன் பாரதியாரும், தோழர் குருசாமியும் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை விளக்கிப் பேசிய பின்னர், நீதிபதி புன்னகைத்தபடி ஏதும் கூறாது சென்றுவிட்டார்.

சுயமரியாதை இயக்கத்தைக் கடுமையாகத் தாக்கிப்பேசி வந்த சத்தியமூர்த்தியைக் கண்டித்து, 1932 இல் குடிஅரசு இதழில் ஒரு கட்டுரை எழுதினார். அழுகிய முட்டை அரை அணாவுக்கு ஆறு'' என முட்டையால் அடிப்பதால் மனிதன் செத்துவிடம hட்டான். அதற்காக இயக்கத்தவர்கள் எவரையும் முட்டையால் அடித்துவிட வேண்டாம். நான் சொன்னால் நீங்கள் கேட்கவா செய்வீர்கள்? நீங்கள் செய்வீர்களாச்சே? சத்திய மூர்த்தி இயக்க வளர்ச்சியைக் கண்டு பயத்தில் ஏதோ உளறுகிறார், பாவம் அவர், அவரை ஏதும் செய்துவிடாதீர்கள்'' என்று எழுதினார்.

அடுத்த இரண்டு நாள்களிலேயே புதுக்கோட்டையில் சத்தியமூர்த்தி பேசும்போது இயக்கத்தவர்கள் அழுகிய முட்டை யால் அடித்தேவிட்டார்கள் ஐயரை. செய்தி அறிந்த குருசாமி அண்ணா முதுகு எப்படி இருக்கிறது?'' என்று மீண்டும் கிண்டலாக ஒரு கட்டுரையை வெளியிட்டார்.

கத்தோலிக்கர்களின் ஆவேசம்

சென்னை செயிண்ட் மேரிஸ் அரங்கில் கத்தோலிக்கர்களின் மாநாடு 1933 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் நாள் சுயமரியாதை இயக்கத்தைத் தாக்குவதற்கென்றேநடைபெற்றது. சென்னை ஆர்ச் பிசப் தலைமை தாங்கினார். பெரியாரையும் குடிஅரசு பத்திரிகை யையும் கடுமையாகத் தாக்கிக் கண்டனத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

இதனைக் கண்டித்து 1933 ஏப்ரல் 30 ஆம்நாள் குடி அரசு இதழில் கத்தோலிக்கர்களின் ஆவேசம்'' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டார். அதில், சுயமரியாதை இயக்கத்திற்கு ஒரு குறிப்பிட்ட மதத்திடமோ அல்லது ஒரு தனி நபரிடமோ எவ்விதமான விரோதமும் கிடையாது. கத்தோலிக்கர்களிடமும் எவ்விதமான சச்சரவும் கிடையாது. ஆனால் சமீபகாலமாகக் கத்தோலிக்கர்கள் மாத்திரம் எங்கு பார்த்தாலும் ஆவேசம் கொண்டு கிளம்புகிறார்களே! அதற்குக் காரணம் என்னவென் றால் அவர்களுடைய மதத்திலுள்ள ஊழல்கள் வெளிப்பட்டு விடும் என்ற பயம்தான். சரக்கு நல்ல சரக்காக இருந்தால் செட்டியா ருக்குக் கோபம் வரக்காரணமில்லை''. என்றும் மேலும் தோழர் பெட்ரண்ட் ரஸ்ஸல் “நான் ஏன் கிறித்துவனல்ல'' என்று ஒரு சிறு புத்தகம் எழுதி இருக்கிறார். நமது கிறித்துவத் தோழர்கள் முக்கியமாகக் கத்தோலிக்கத் தோழர்கள், தாங்களே மேதாவிகள் என்பதை மறந்து, இந்த நூலை ஒரு தரமாவது புரட்டிப் பார்க்கும் படி வேண்டுகிறேன். அதில் ஒரு இடத்தில் அவர் கூறுகிறார்:

“அறிவியலிலாகட்டும், ஒழுக்கத்திலாகட்டும் கிறிஸ்துவை விட புத்தரும், சாக்ரடீசும் எத்தனையோ மடங்கு மேம்பட்டவர்கள் என்பது என் அபிப்பிராயம். சரித்திர சம்பந்தமாகப் பார்க்கப் போனால், கிறிஸ்து என்ற ஒருவர் இருந்தாரா? என்பது முழுச் சந்தேகமாக இருக்கிறது. உலக முன்னேற்றத்திற்கு முக்கியத் தடையாக இருப்பது கிறிஸ்து மதம்தான் என்பதை நிச்சயமாகக் கூறுவேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார், ரஸ்ஸல்

“இன்று நடைமுறையில் இருக்கும் கத்தோலிக்க மதம் எத்தகையது என்று சுருங்கக் கூற வேண்டுமானால் இந்து மதத்திலுள்ள ஊழல்களும் கிறித்து மதத்திலுள்ள ஊழல்களும் சேர்த்துத் திரட்டிய பிண்டமே கத்தோலிக்க மதம் என்று சொல்லலாம்'' என்றார்.

பொது உடைமைக் கட்சிக்குத் தடை

பொது உடைமைக் கட்சி, (கம்யூனிஸ்டு கட்சி) 1949 இல் இந்தியத் துணைக்கண்டத்தில் இயங்கத் தடைசெய்யப்பட்டது. அந்நிலையில்பொது உடைமைக் கட்சித் தலைவர்கள் பலர் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டிருந்தனர். பொது உடைமைக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்த தோழர் குருசாமி. பல கம்யூனிஸ்டு இயக்கத் தலைவர்களுக்குத் தன் இல்லத்தில் மறைந்து வாழ வாய்ப்பளித்துள்ளார். கைதான தலைவர்களைச் சிறைக்கே சென்று சந்தித்து வேண்டும் உதவிகள் நல்கியுள்ளார். அதற்காக அவர்கள் நன்றி தெரிவித்துக் கடிதங்கள் எழுதியுள்ளனர்.

முதல் பொதுத் தேர்தல்

1951, அக்டோபர் திங்கள் 21 ஆம் நாள் ஐக்கிய முற்போக்கு முன்னணி என்ற பொது உடைமைக் கூட்டணி உருவாயிற்று. அந்தத் தேர்தலில் திராவிடர் கழகம், அந்தப் பொது உடைமைக் கூட்டணியினர் வெற்றிபெறவும் காங்கிரஸ் தோல்வியினைத் தழுவிடவுமான சூழலைத் தங்களின் கடுமையான பரப்புரை யின் மூலம் தோற்றுவித்தனர். காங்கிரஸ் தேர்தலில் வீழ்ச்சி யுற்றபோதும், சிறு சிறு அரசியல் அமைப்புகளின் துணை கொண்டு இராஜாஜி ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். இதனைக் கண்டித்து கொல்லைப்புற வழியில் ஆச்சாரியார் என்று கடுமையான விமர்சனத்தை விடுதலையில் குருசாமி எழுதினார். தேர்தலைச் சந்திக்காமல் முதல்வர் பொறுப்பினை ஏற்றிடும் அரசியல் வாதிகளைச் சாடிடும் சொல்லாட்சி யாக கொல்லைப்புற வழி என்ற சொற்கள் பிற்காலத்தில் வழங்கலாயிற்று.

சலவைத் தொழிலாளர் மாநாடு

சென்னை, திருவான் மியூரில் 1952 ஆம் ஆண்டு சூன் 29 அன்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினர் முதல்வர் இராஜாஜி உரையாற்றும்போது, “அவரவர் சாதித் தொழிலை அவரவர் செய்துவரவேண்டும்! எல்லா மக்களுமே படிப்பது என்றால் இத்தனை பேருக்கு உத்தியோகம் எங்கே இருக்கிறது? ஆதலால் சாதி முறை நல்லதுதான்”, என்று வருணாசிரம விஷத்தைக் கக்கினார். குத்தூசி குருசாமி, ஆச்சாரியாரின் இந்தப் பேச்சை எதிர்த்துக் கடுமையாக விடுதலையில் எழுதியதோடு, அவரின் அந்தப் பேச்சினை விடுதலையில் கட்டம் கட்டி நாள்தோறும் வெளியிட்டு வந்தார். ஆச்சாரியார் பேச்சோடு நிற்கவில்லை. 1953 கல்வியாண்டில் செயல்படுத்தத் தொடங்கினார். பள்ளிக்குழந் தைகள் அரை நாள் பள்ளியில் கற்கவும், மீதி அரை நாள் தகப்பனின் தொழிலைக் கற்கவும் வேண்டும் என்பதே இராஜாஜியின் கல்வித் திட்டமாகும்.

குலக்கல்வித் திட்டம்

இந்தக் குலக் கல்வித் திட்டம் நடைமுறைக்கு வந்தவுடன், ஆத்தூரில் 1953 இல் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில், கழகத் தோழர்களே கத்திவைத்துக் கொள்ளுங்கள் என்று பெரியார் சீற்றத்துடன் கூறினார். விருதுநகர் பொதுக்கூட்டத்தில் தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் காமராஜர், பைத்தியக்கார உத்தரவு என்று குலக்கல்வித் திட்டத்தைக் கண்டித்தார். தமிழ்நாட்டி லுள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும், குலக் கல்வித் திட்டத்தை எதிர்த்தன. ஆச்சாரியார், மேலும் அந்தக் கல்வியாண்டில்,பிராமண மாணவர்க்குச் சாதகமாக பொறியியல், மருத்துவக்கல்லூரிகள் சேர்க்கைக்கான நேர்முகத் தேர்வின் மதிப்பெண்களைக் குறைத்தார்.

இதனையறிந்த குருசாமி, பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள பிராமண மாணவர்களின் எண் ணிக்கையைக் கணக்கெடுத்தார். குருசாமி எந்த நோக்கத்தோடு புள்ளிவிவரங்களைச் சேகரித்தாரோ, அதே நோக்கத்தோடு காமராஜரும், குருசாமிக்கு முன்பே புள்ளிவிவரங்களைச் சேகரித்திருந்தார். அதனையறிந்த குருசாமி, காமராஜரிடம் நெருக்கமான நட்புறவு பாராட்டினார். அந்தக் கல்வியாண்டோடு, குலக்கல்வித் திட்டடத்தைக் கைவிடும்படி இராஜாஜியிடம் காமராஜர் கூறினார்.ஆனால் ஆச்சாரியார் பிடிவாதத்துடன் குலக்கல்வித் திட்டத்தைத் தொடர்ந்தார்.

சாதி ஒழிப்பு மாநாடு

இந்தச் சூழலில் 1953 ஆம்ஆண்டு மார்ச் திங்கள் 22ஆம் நாள்சென்னைசெயிண்ட்மேரிஸ்அரங்கில் சாதிஒழிப்புமாநாடு'' நடத்திடஏற்பாடுசெய்தார் குருசாமி. அந்த மாநாட்டில் கலந்து கொள்ளுகிறவர்கள் சாதி ஒழிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்றும் கருதினார். தனது மகளைக் காந்தியார் மகனுக்குக் கலப்பு மணம் செய்து கொடுத்த இராசாஜி அவர்களை மாநாட்டுக்குத் தலைமை தாங்கக் கோரிக் கடிதம் எழுதினார். குருசாமியின் அரசியல் நோக்கத்தைப் புரிந்துகொண்ட ஆச்சாரியார் “மாநாட்டில் கலந்துகொள்ள இயலவில்லை'' என்று பதில் அனுப்பினார். தோழர் குருசாமி உடனே காமராசர் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாநாட்டுக்குத் தலைமை தாங்கக் கோரினார். காமராசரும் ஒப்புதல் தந்தார்; மாநாட்டைத் தலைமை தாங்கி நடத்தித் தந்தார். அந்த மாநாட்டிற்குப் பிறகு குருசாமி காமராசர் இடையே நட்பு மிகவும் நெருக்கம் அடைந்ததோடு குருசாமியின் கருத்துகளைக் காமராசர் முழுக்க முழுக்க ஆதரிக்கவும் செய்தார். ஆச்சாரியரின் குலக்கல்வித் திட்டத்தைக் காமராசர் எதிர்த்து அதன்மூலம் முதலமைச்சர் ஆனதற்குப் பெரிதும் காரணமாக இருந்தவர் தோழர் குருசாமி அவர்களே. 1954 இல் இராஜாஜி முதல்வர் பதவியிலிருந்து விலகிக் கொண்டார்

1952 முதல் 1960 வரை திராவிடர்கழகம் மேற் கொண்ட போராட்டங்களில் குருசாமி கலந்து கொண் டார்; 13 முறைகள் சிறைத் தண்டனையும் பெற்றார்.

தோழர் குருசாமியின் எண்ணத்தோடும் உணர் வோடும் ஒட்டி உறவாடிய அவரது வாழ்க்கைத்துணை, தோழர் குஞ்சிதம் அம்மையார் 30-7-1961 பகல் 12 மணியளவில் சென்னை பொதுமருத்துவமனையில் காலமானார். தோழர் குருசாமி சிறகொடிந்த பறவை யன்ன முடங்கிக் கிடந்தார்; உளம் நொந்து வாடினார்; ஆயினும் கொள்கை மறந்தாரில்லை.

தோழர் குருசாமிக்கு, பெரியாரிடமிருந்து05-10-1961 அன்று கடிதம் ஒன்று வந்தது. குருசாமி வகித்து வந்த, மத்திய திராவிடர்கழகத் தலைவர் பதவியையும், பெரியார் சுயமரியாதை இயக்கப் பிரச்சார நிறுவன அறங்காவலர் (டிரஸ்டி) பதவியையும் ராஜினாமா செய்யக் கோரியிருந்தார். தலைவர் பெரியாரின் ஆணையை ஏற்று, 6-10-1961 அன்று இரண்டு பதவிகளையும் துறந்தார் தோழர் குருசாமி.

சென்னை பெரியார் திடலில், 1962, சனவரித் திங்களில் வாக்காளர் மாநாடு நடைபெறுதற்கு வேண்டிய ஏற்பாடுகளைத் தோழர்குருசாமி, முன்னின்று செய்து கொண்டிருந்தார். தோழர்குருசாமி, காதல் மனைவியை இழந்து நெஞ்சம் நிறைய கவலை கொண்டிருந்த போதும், உற்சாகத்துடன் மாநாட்டுப் பணிகளைக் குறையேதுமின்றி செவ்வனே செய்துமுடித்தார். இம்மாநாடுதான் பெரியாரும், தோழர் குருசாமியும் இணைந்து கலந்து கொண்ட கடைசி மாநாடாகும்.

இம்மாநாட்டில், பொதுத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பது என்று முடிவாகியது. ஆதலால், தோழர் குருசாமி காங்கிரஸை ஆதரித்துப் பேசியும் எழுதியும் பரப்புரை செய்தார்.

இதே தேர்தலில், தோழர் ஈ.வெ,கி.சம்பத், தி.மு.க.விலிருந்து விலகித், தமிழ் தேசியக் கட்சி என்ற புதியக்கட்சியைத் தோற்று வித்துத் தென்சென்னை வேட்பாளராகப் போட்டியிட்டார்.

விடுதலையில், ஆசிரியர் குருசாமி தென்சென்னை காங்கிரஸ் வேட்பாளர் டி.டி.கிருஷ்ணமாச்சாரியாரை ஆதரித்துத் தலையங்கம் எழுதினார்.

விடுதலை அலுவலக நிர்வாகி, ஈ.வெ.கி.சம்பத்தின் மைத்துனர். அவர் ஆசிரியர் எழுதிய தலையங்கம், சம்பத்தின் வெற்றியைப் பாதிக்கும் என்று கருதி அத்தலையங்கத்தை வெளியிடாதவாறு தடுத்துவிட்டார். அன்று மாலை இதனை யறிந்த ஆசிரியர் குருசாமி அதிர்ச்சியடைந்தார். உடன் தலைவர் பெரியாருக்குக் கடிதம் எழுதினார்.

நான் 16 ஆண்டுகளாக விடுதலையில் எழுதி வந்துள்ளேன். இது நாள் வரை தாங்கள் உட்பட எவரும் குறுக்கீடு செய்ததில்லை. இன்று நான் எழுதிய தலை யங்கத்தை வெளியிடாமல், ஒரு அலுவலக நிர்வாகி தடுத்துவிட்டார். இது எனக்குப் பெருத்த அவமான மாகும். ஆகவே நான் இன்றிலிருந்து விடுதலையில் எழுதுவதை நிறுத்திக் கொள்கிறேன். இதற்குப்பின் ஆசிரியர் குருசாமி விடுதலையில் எழுதுவதில்லை.

விடுதலையிலிருந்து குருசாமி விலகிய செய்தியை உறுதிப்படுத்திக் கொண்ட கருமுத்து தியாகராசச் செட்டியார், தமது தமிழ் நாடு இதழில் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் ஆசிரியர் குருசாமி அவருடைய கோரிக்கையை ஏற்காமல், பெரியாருக்காக பெரியாரின் கொள்கைகளை எழுதிய கை வேறு எவர்க்காகவும் எழுதாது, என்று மறுத்துவிட்டார்.

1962 அக்டோபர் திங்களில் “குத்தூசி” என்ற இலக்கிய மாத இதழைத் தொடங்கி நடத்திவந்த குருசாமி அவர்கள் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளைப் பரப்பிட “அறிவுப்பாதை” என்ற வார இதழையும் 1964 ஆம்ஆண்டு மே தினத்தன்று தொடங்கி நடத்தினார்.

குத்தூசி குருசாமி அவர்கள் திராவிடர் கழகத்தி லிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கம் என்ற புதிய இயக்கத்தை 1963 மே 19ஆம் நாளன்று தோற்று வித்தார். திருச்சி தி.பொ. வேதாசலம் தலைவராகவும், குருசாமி பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப் பட்டனர்.

சாதியற்ற,மதமற்ற, கடவுள் நம்பிக்கையற்ற, சமதர்ம சமுதாயத்தை உருவாக்கும் பொருட்டு, பகுத்தறிவை அடிப் படையாகக் கொண்டு, சமத்துவம், சகோதரத்துவம் என்ற அடிப்படையில் தமிழ் நாட்டில் இடைவிடாத பரப்புரையாற்றுதல் என்பதைக் கொள்கையாகக் கொண்டு சுயமரியாதை இயக்கம் என்ற பழைய பெயரினால் இயக்கம் தொடங்கப்பட்டிருக்கிறது. இது தொடங்கப்பட்டிருக்கிறது என்பதைவிட தொடர்ந்து பணியாற்றப் புறப்பட்டிருக்கிறது என்பதே சரியானதாகும்.

துணிவு என்பதுதான் பகுத்தறிவியக்கத்தின் கொடி; நேர்மை என்பதுதான் இயக்கத்தின் சட்டை; எங்கும் என்றும் பரப்புரை என்பதுதான் பகுத்தறிவியக்கத்தின் படைக்கருவி. இக்கொள்கைகளைக் கொண்டு, புதிய இயக்கம் தமிழ் நாடெங்கிலும் செயல்படலாயிற்று.

1963 ஆம்ஆண்டுசூன் 28 ஆம்நாள் மதுரை கோயில் குடமுழுக்கு விழாவில் குடிஅரசுத் தலைவர் இராதாகிருஷ்ணன் கலந்துகொள்ள இருந்தார். இதனைக் கண்டித்து “குடியரசுத் தலைவர் நாட்டின் முதல் குடிமகன். நாட்டின் அத்தனை மக்களுக்கும் பொதுவானதொரு ஆட்சித் தலைவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் குடமுழக்குத் திருப்பணிக்காக வருவது ஏற்புடையது அன்று. இந்து மத நம்பிக்கை இல்லாத முஸ்லிம்கள், கிறித்துவர்கள், பவுத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள், பகுத்தறிவாளர்கள், நாத்திகர்கள்ஆகியோர் மக்கள் தொகையில் சரிபாதி ஆவர். அம்மக்கள்வேதனைப்படுவர்; அவர்கள் மனம்புண்படும்'' என்று சென்னை உயர்நீதி மன்றத் தில் நீதிப் பேராணை விண்ணப்பம் (ரிட்மனு) தாக்கல் செய்தார். அதோடு அதனை மீறிக் குடியரசுத் தலைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் சுயமரியாதை இயக்கத்தினர் மறியலில் ஈடுபடுவர், என்று குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதினார் குருசாமி. குருசாமியின் கடிதம் கண்டவுடன் குடியரசுத் தலைவர் மதுரைக்கு வருவதை விலக்கிக் கொண்டார்.

மீண்டும் இந்தி

1965 ஆம் ஆண்டு மீண்டும் தில்லியரசு இந்தி மொழியைத் திணிக்க முற்பட்டது. இந்தித் திணிப்பு நாட்டின் ஒற்றுமைக்குக் கேடு விளைவிக்கும் என்று மொழியும் மதமும் என்ற தலைப்பில், நாட்டின் மீது அக்கறை கொண்ட சான்றோர்கள் சிந்தனையைத் தூண்டும் வகையில் குருசாமி எழுதினார்.

திராவிட முன்னேற்றக் கழகம் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் ஈடுபட்டது. மாணவர்கள் தன்னெழுச்சியுடன் இந்தி எதிர்ப்பில் நேரடியாகக் களத்தில் குதித்தனர். மொழிப்போர் வன்முறையில் முடிந்தது. இந்திஎதிர்ப்புப் போரில் பலர் களப் பலியாயினர். தமிழர் கொந்தளிப்பு என்ற தலைப்பில் குருசாமி கண்ணீரால் கண்டனம் தெரிவித்தார்.

1965 ஏப்ரல் 23 அன்று குருசாமியின் அறுபதாவது பிறந்த நாள். அன்று பெரியாரின் பெருந்தொண்டு என்று அறிவுப் பாதையில் தலையங்கம் எழுதினார். அந்தத் தலையங்கம், அவர் தனது தலைவரின் மீதும் அவரின் கொள்கைகளின் மீதும் கொண்டிருந்த பற்றினை விளக்குவதாக அமைந்திருந்தது. சுய மரியாதை இயக்கத்தின் தலைவர் அறிஞர் தி.பொ. வேதாசலனார் தலமையில் 1965 சூலை 11 இல் 6-வது மாநில சுயமரியாதை மாநாடு, கும்பகோணம் மூர்த்தி அரங்கில் நடை பெற்றது. ஆந்திர நாத்திகச் சங்கத் தலைவர் கோரா மாநாட்டுத் திறப்பாளர். சோவியத் நாட்டைச் சேர்ந்த சுயங்காவ் பொதுவுடைமையும் நாத்திகமும் என்ற தலைப்பில் உரையாற்றினார். கேரளத்தைச் சேர்ந்த எடமருகு கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அவரது மலையாளச் சொற்பொழிவைத் தோழர் குருசாமி மொழிபெயர்த் தார். குத்தூசியாரின் பேச்சு கழகத் தோழர்களுக்கு எழுச்சியும் புத்துணர்வும் ஊட்டியது. காவிரிக் கரையில் நாத்திக மணங் கமழும் மாநாடாக அந்த மாநாடு அமைந்திருந்தது.

மறைவு

இயக்கத்தின் வருங்கால வேலைத் திட்டங்கள் குறித்து விவாதித்து முடிவெடுக்க, 1965 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 11 ஆம் நாள் கடலூரில் சுயமரியாதைக் கழக மத்தியக்குழு கூட்டத்திற்கு தோழர் குருசாமி ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பாராத நிலையில் அந்தக் கொள்கை வேள் பகல் ஒருமணிக்கு, மாரடைப்பால் மரணம் எய்தினார்.

தன் வாழ் நாளில் கண்டதும், கொண்டதும் ஒரே தலைவர்-பெரியார்.அவர் காட்டிய பகுத்தறிவுப் பாதையில் தன் இறுதிவரை இணைந்து பயணித்தவர் தோழர் குத்தூசி குருசாமி ஆவார், பகுத்தறிவுக் கொள்கையை உயிரெனக் கொண்டு வாழ்ந்து மறைந்த அந்த மாத்தமிழரை என்றும் எண்ணுவோம்;அவர் காட்டிய வழியே நல்வழியென்று ஏற்போம்.

வாழ்க கொள்கையாளர் சா.குருசாமி!