sivasubramainiam book 450மாடம் ஓங்கிய மல்லல் மூதூர் (நெடு. 29) என்னும் பாடல் அடியும் குப்பை வேளை உப்பிலி வெந்ததை / மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து (சிறு: 136-137) என்னும் அடிகளும் பழந்தமிழர் தம் பெருமையை உணர்த்தும் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.

ஒரு நாட்டின் பெருமை மாட, மாளிகை, கூட, கோபுரங்களால் தீர்மானிக்கப்படும். அந்த வகையில் நெடுநல்வாடை குறிப்பிடும் அந்த மூதூராகிய நகரத்தில் மிக உயர்ந்த மாடங்கள் நிறைந்துள்ளன.

சிறுபாணாற்றுப் படையில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பாடல் அடிகளின் முன்னும் பின்னுமாக உள்ள அடிகளில் படிமமாக ஒரு காட்சி விளக்கப்பட்டுள்ளது. அப்போதுதான் ஈனப்பட்ட நாய்க்குட்டி தன் தாயின் மார்க் காம்பில் பால்குடிக்க முயல்கிறது. பசியால் வாடும் நாய் பால் கொடுக்க இயலாமையால் குரைக்கின்றது. அஃறிணையாகிய பிறந்த குட்டியும் ஈன்ற தாயும் பசியால் வருந்துவது அந்தக் குடிசையின் ஒருபுறம்.

அந்தக் குடிசை சீர்கெட்டுப்போய்க் கழிகள் அவிழ்ந்து தொங்குகின்றன. சுவர் சிதைந்து தரையில் காளான் பூத்திருக்கிறது. அக்குடிசையில் வாழும் பாண்மகள் குப்பையில் கிடக்கும் வேளைச் செடியில் ஏற்கனவே பலமுறை கிள்ளி எடுத்து மறுபடியும் துளிர்த்ததைக் கிள்ளி வருகிறாள். அதைச் சுண்டுவதற்கு உப்புக்கூட அந்தக் குடிசையில் இல்லை. உப்பில்லாமல் வெந்த அந்தக் கீரையை மற்றவர்களின் பழிப்புக்கு அஞ்சிப் படலைச் சார்த்திக்கொண்டு உறவுகளுக்குக் கொடுக்கின்றாள்.

அஃறிணை, உயர்திணை என்னும் வேறுபாடில்லாமல் வறுமையில் வாடுவதைச் சங்க இலக்கியங்களில் நிறையக் காணலாம். நாணயத்தின் ஒருபக்கம் பெருமையாக - போற்றத்தக்க புனிதமாகத் தெரிகின்றது. இன்னொரு பக்கத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் போற்றப்படும் புனிதம் கேள்விக்குறி ஆகின்றது.

பட்டினப் பாலையில் சோழநாட்டின் சிறப்பு விளக்கப்பட்டுள்ளது. காவிரிப் பூம்பட்டினத்தில் சோறாக்கும்போது வடிக்கப்படும் கஞ்சி ஆறுபோலப் பரவும். காளைகள் மிதிப்பதால் எங்கும் சேறாகும். சோறு ஆக்கிய கொழுங்கஞ்சி யாறு போலப் பரந்து ஒழுகி / ஏறு பொரச் சேறாகி (பட். 44-46). சோழ நாடு சோறுடைத்து ஆலயங்கள் நிறைந்த பகுதி, ஆயகலைகளை வளர்த்த பகுதி எனப் பெருமையாகப் பேசப்படும் இம்மண்ணில் இன்னொரு வகையான பதிவும் காணப்படுகின்றது. கதிரோன் தோன்றினான் / கவலை கொண்டு ஏங்கினோம் / உடையோ கோவணம் / உணவோ நீராகாரம். இதனைப் பெரும் புலவர்கள் எழுதவில்லை. காலங்காலமாக ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் கீழ்த் தஞ்சையில் - தற்போதைய திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில், அதாவது நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் பகுதியில் பண்ணைத் தொழிலாளர்கள் பாடும் பாடல்.

சோழநாட்டைப் பற்றிய ஒரு பெரிய பிம்பம் இந்தப் பாடலைக் கேட்கும் போது மெல்ல மெல்லக் கரைவது போல உள்ளது. சங்க இலக்கியங்களில் குறிக்கப்படும் பாலை நிலம், இக்காலத்தில் சொல்லப்படும் வானம் பார்த்த பூமியில் வறுமையால் வாடுவது இயல்பு. ஆனால் காவிரி பாயும் சோழநாட்டில் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் வறுமையில் வாடினால் காலங்காலமாகப் பெருமையாகப் பேசப்படும் சோழநாடு கேள்விக் குறி பெறுவதில் வியப்பில்லை.

உழைப்பவன் - உழைக்காதவன் என்றில்லை; யாரும் பசியால் வாடக்கூடாது. இப்போது தீவிரவாதம், பயங்கரவாதம் என்னும் சொற்கள் அதிகமாகப் புழக்கத்தில் உள்ளன. இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து / கெடுக உலகியற்றி யான் (திருக்.1062) என்னும் உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரையும் தனியருவனுக்கு உணவில்லை எனில் / ஜகத்தினை அழித்திடுவோம் (பார.பாட.1829) என்னும் மகாகவியையும் எந்த வாதிகளில் அடக்குவது?

இமயமலையில் உற்பத்தி ஆகி வரும் கங்கை நதி இந்தியாவில் புனிதமான நதியாகப் போற்றப்படுகிறது. சங்க இலக்கியங்களிலேயே கங்கையைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. கங்கையில் நீராடுவதும் காசியில் உயிர் பிரிவதும் இன்றும் புனிதமாகக் கருதப்படுகின்றன. தீபாவளி அன்று கங்கா ஸ்நானம் ஆச்சா? என்று பார்ப்பனர் மட்டும் அல்லாமல் மற்றவர்களும் தமிழகத்தில் கேட்பது காதில் விழும்.

காவிரியும் புனிதமான ஒன்றாகவே கருதப்படுகின்றது. நாற்பது - ஐம்பது ஆண்டுகளாகத் தொழிற்சாலைக் கழிவுகள், மருத்துவமனைக் கழிவுகள், கரை ஓரத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளின் கழிப்பறைக் கழிவுகள் எல்லாம் காவிரி ஆற்றில்தான் விடப்படுகின்றன. எல்லா ஆறுகளின் நிலையும் இதுதான். அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் நீர்நிலைகளில் குளிக்க மாட்டார்கள். ஓடுகின்ற நீரில் ஒன்றுக்கு விட்டால் வெள்ளத்தோடு வெள்ளம் என்றொரு சொலவச் சொல் உள்ளது. இதை நினைத்துக் கொண்டுதான் சிலர் ஆற்று நீரைப் பயன்படுத்துகின்றார்கள். இருந்தாலும் கிடக்கும் நீர் காட்டிக் கொடுத்துவிடும். பல லட்சம் பேர் புனித நீராடியும் கும்பகோணம் மகாமகக் குளத்தில் நீர் மட்டும் குறையவில்லையாம். நீரில் கரிப்புத் தன்மை அதிகம் இருந்ததாம்.

தாலி, மணியை மஞ்சள் கயிற்றில் கோத்துப் போட்டுக் கொள்வதை மகளிர் விரும்புவதில்லை. சங்கிலியில்தான் அணிகிறார்கள். அது தங்கமாகவும் இருக்கலாம்; கவரிங்காகவும் இருக்கலாம். சில மகளிரின் கழுத்தில் மஞ்சள் கயிறு கிடக்கிறது. மஞ்சள் கயிற்றின் மகிமையைப் புரிந்து கொண்டு விட்டார்கள் போலும் என்று நினைத்தால் கதை வேறொன்றாக இருக்கிறது.

இரயிலில் திருட்டுப் பயம். கங்கையில் குளிக்கும்போது நீருக்குள் நீந்தி வந்து சங்கிலியை அறுத்துக் கொண்டுபோய் விடுவார்களாம். ஆளுக்கு ஆள் ஒவ்வொன்றைச் சொல்லிச் சொல்லிப் பயமுறுத்தி விடுவார்கள்.

அங்கு மட்டுமில்லை; இங்கு மட்டும் என்ன வாழ்கிறதாம்? வடக்கத்திச் சீமையில் இருந்து சோழநாட்டுப் பகுதிக்குக் கூலி வேலைக்கு வரும் மகளிரின் கழுத்து வெறுமையாக இருக்கும். திருமணம் ஆனவர்களா? ஆகாதவர்களா? கைம்பெண்ணா? புரிந்துகொள்ள முடியாது. கேட்கும்போதுதான் காரணம் புரிந்தது. கழற்றிப் பெட்டி, அடுக்குப் பானையில் வைத்துவிட்டு வேலைக்கு வருவார்களாம். தாலி, சங்கிலிப் பறிப்பு இந்திய வேற்றுமையில் ஒற்றுமையாக நிகழ்வதை அறியமுடிகிறது.

பெரும்பாலும் வடநாட்டவர் இராமேஸ்வரம் செல்லவேண்டும் என்று நினைப்பது போலத் தென்னாட்டவர் காசியில் ஒரு முழுக்குப் போடவேண்டும் என நினைப்பார்கள். ஒரு கோடையில் காசியை ஒட்டி ஓடும் கங்கையின் நீரைவிட, நகரின் சாக்கடைக் குழாய்கள் வழியாக ஆற்றில் ஊற்றுவதே கண்ணில் பட்டது. சிலர் குளிக்கவே அச்சப்பட்டுக் காசிக்கு வந்து விட்டோமே என்று விரலால் தொட்டுத் தலையில் தெளித்துக் கொண்டனர்.

காசியில் இறந்தால் கைலாசம் போகலாம் என்று வந்தவர்கள், ஆதரவு அற்றவர்களின் சடலங்கள் எரிந்தும் எரியாமலும், கங்கைக்குள் தள்ளிவிட்டுக் கொண்டிருந்தார்கள். கர்மத்தைத் தொலைக்க காசிக்குப் போனால் அங்கே இரண்டு தலையை விரித்துப்போட்டுக் கொண்டு ஆடியதாம் என்னும் சொலவச் சொல்தான் நினைவிற்கு வந்தது.

இவை எல்லாம் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனின் நேர்காணல் அடங்கிய தனித்து ஒலிக்கும் குரல் என்னும் நூலைப் படிக்கும்போது நினைவிற்கு வந்தன. ஒன்றைத் தனித்துப் பார்ப்பதைவிட இன்னொன்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இரண்டிற்கும் உள்ள நல்லது கெட்டது தெரியும். மரபு சார்ந்த மொழியாய்வு, இலக்கிய ஆய்வுகளை விட மொழியியல், ஒப்பிலக்கியம் வழி செய்யப்படும் ஆய்வுகள் பார்வையை விரிவடையச் செய்கின்றன.

இந்தியாவில் திராவிடம், ஆரியம் சார்ந்த வரலாறுகள் எழுதப்படுகின்றன. தொன்மை, மொழி, இலக்கியம், நாகரிகம், பண்பாடு, வரலாறு என அனைத்தும் ஆரியரிடம் இருந்து திராவிடர் பெற்றனர் என்னும் கருத்து தொடக்கம் முதல் மேலோங்கி இருந்தது. தொல்லியல், கல்வெட்டியல், மானுடவியல், சமுதாயவியல், மொழியியல் போன்ற பல்துறை ஆய்வுகள் வளர வளரத் திராவிடம் பற்றிய புரிதலும் தொன்மையும் மேலோங்குகின்றன. இந்தியாவின் தொன்மைக் குடியினர் திராவிடர் என்பதும் சிந்துவெளி நாகரிகம் திராவிடரது என்பதும் உறுதி செய்யப்படுகின்றன.

இவ்வாறு ஒப்பிட்டுப் பார்க்கும்போது தொன்மை தெரியும்; காலங்காலமாகப் படிந்திருக்கும் அறியாமை, மூடநம்பிக்கை போன்றவை வெளிப்படும். போற்றப்படும் புனிதங்கள் கேள்விக் குறியாகிவிடும்.

பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் தொடக்கத்தில் தமிழில் புலவர் பட்டம் பெற்றவர். நாட்டுப்புறவியலில் மிகுந்த ஈடுபாடும் கொண்டவர். பேராசிரியரின் நூல்களில் ஒரு செய்தியைப் படிக்கும்போது அது தொடர்பாக ஒரு கேள்வி எழும். செய்தி புதுமையாகத் தெரிவதோடு அது தொடர்பான ஐயமும் எழும்.

பேராசிரியரைப் பற்றியே முதலில் ஐயம் எழுந்தது. புலவருக்குப் படித்தவரால் எப்படி நாட்டார் வழக்காற்றியல் எனப்படும் நாட்டுப்புறவியலில் முத்திரை பதிக்க முடிந்தது என்பதுதான். அந்தக் காலத்தில் புலவருக்குப் படித்தவர்கள் நிறைய மனப்பாடம் செய்திருப்பார்கள். நன்றாகப் பேசுவார்கள். தமிழ் இலக்கணம், இலக்கியங்களைப் பகுத்துப் பார்ப்பதை விரும்ப மாட்டார்கள்.

பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் நாட்டுப்புறவியலில் ஈடுபாடு கொண்டதற்கு பேராசிரியர் நா.வானமாமலையும் இளமையில் இருந்து கற்ற மார்க்சியச் சித்தாந்தமும் காரணம் என்பதை நூல்வழி அறியமுடிகின்றது. மார்க்சியச் சிந்தனை எந்த வகையான ஆய்வுக்கும் தெளிவைக் கொடுக்கும். பல்கலைக்கழகங்களில் இருந்த ரொமிலா தாப்பர், ஆர்.எஸ். சர்மா இவங்களும் எந்தக் கம்யூனிஸ்ட் கட்சியிலயும் உறுப்பினர் கிடையாது. ஆனா மார்க்ஸியச் சிந்தனையை உள்வாங்கினவங்க. அதனால் பல்கலைக்கழகங்களுக்கு உள்ள இருக்காங்களா, வெளிய இருக்காங்களா அப்படிங்கிறது பிரச்சனையில்ல. அவங்களோட தத்துவச் சார்பு என்ன? அப்படிங்கிறது தான் முக்கியம் (தனித்து. ப.32) எனக் கூறுவது வழியும் பேராசிரியரின் சிந்தனைப் போக்கின் மூலத்தை அறிந்து கொள்ளலாம்.

தனித்து ஒலிக்கும் குரல் என்னும் நூல் பேராசிரியரின் நேர்காணல்களின் தொகுப்பாகும். ஆய்வாளர் க.காமராசன் தொகுத்து, பதிப்பித்துள்ள இந்நூலை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமிழரின் தொன்மை, பொதுவான இலக்கியங்கள், சமுதாயம், நாட்டுப் புறவியல், மார்க்சியச் சிந்தனை என எதனையும் விட்டு விடாமல் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் நேர்காணலில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடை அளித்துள்ளார். பேராசிரியர் இரா.காமராசு, பதிப்பாசிரியர் க.காமராசன் இருவரும் நேர்காணலின் சாரத்தைப் பிழிந்து கொடுப்பது போல அணிந்துரையும் குறிப்புரையும் தந்துள்ளனர்.

மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிது என்பது போலப் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனின் ‘பிராமண போஜனமும் சட்டிச் சோறும்’ என்னும் நூலைச் சொல்லலாம். பேராசிரியரின் பெரும்பாலான நூல்களும் கட்டுரைகளும் தமிழரின் தொன்மையை மீட்டுருவாக்கம் செய்வதிலும் திரித்துக் கூறப்படுபவற்றைச் சுட்டிக் காட்டுவதிலும் குவிந்திருக்கும். இவற்றை மீட்டுக் காட்ட மார்க்சிய சித்தாந்தமும் நாட்டுப்புறவியலும் கல்வெட்டுகளும் பேராசிரியருக்கு வழித்துணையாக வருகின்றன.

உங்கள் நூலகத்தில் படித்துப் பாருங்களேன் என்னும் தலைப்பில் வெளிவரும் நூலாய்வுகளை ஒவ்வொருவரும் படிக்க வேண்டும். தன் குஞ்சுகளுக்கு இரை தேடிக் கொண்டு வந்து ஊட்டும் தாய்ப்பறவை போலக் காலத்துக்கு ஏற்ற நல்ல நூல்களை அறிமுகம் செய்கின்றார். நூல் அறிமுகம் என்பது நுனிப்புல் மேய்ந்தது போல இருக்கக்கூடாது என்பதற்கு அண்மையில் பேராசிரியர் எழுதியுள்ள கட்டுரை சிறந்த சான்றாகும்.

கருத்துமுதல்வாதத்தை ஒலிபெருக்கியில் முழங்கிக் கொண்டு பொருள்முதல்வாதத்தில் மூழ்கிக் கிடப்பதே மதங்களின் கட்டமைப்பு என்பது இந்து மதத்திற்கு மட்டுமன்று, எல்லா மதங்களுக்கும் பொருந்தும். சுரண்டல், ஊழல் சட்டியில் இருப்பதற்கு ஏற்ப அகப்பையில் வருவதுதான் வேறுபாடு.

ஜோசப் வடக்கன் என்னும் பாதிரியார் கிறித்துவ மதத்தின் நடப்பியலை வெளிப்படுத்தியுள்ள நூல் (A Priest’s Encounter with Revolution An Introduction, செப் - நவம். 2019) பற்றிய பேராசிரியரின் மதிப்புரை உங்கள் நூலகம் இதழில் வெளிவந்துள்ளது.

தற்போது திருக்கோயில்கள் புனரமைப்பு என்னும் பெயரில் சைவம், வைணவம் என்னும் வேறுபாடில்லாமல் சிலைகள், தூண்கள், விலைமதிப்பற்ற பொருள்கள் காணாமல் போவதாகவும் மாற்றி வைக்கப்படுவதாகவும் வைணவர் ராமானுஜம் நரசிம்மன் வழக்குத் தொடுத்துப் பெரும் அதிர்ச்சி தரும் கருத்துக்களைக் கூறுவதை ஊடகங்கள்வழி அறியலாம்.

பெரும்பான்மையான மக்கள் அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் வழிபாட்டு இடங்களைப் புனிதமாக எண்ணுகின்றார்கள். ஆனால் அவற்றோடு தொடர்புடையவர்கள் செய்யும் ஊழல்களை அறியும்போது கடவுள் இல்லை என்று சொல்லிக் கொள்பவர்கள் பரவாயில்லை என்று எண்ணத் தோன்றுகின்றது.

அரசியல், அலுவலகங்கள் என்று மட்டுமில்லாமல் வழிபாட்டு இடங்களிலும் ஊழல் நடக்கின்றது. சமூக ஆர்வலர்கள் ஆன்மீகவாதியாகவும் இருக்கலாம்; பகுத்தறிவுவாதியாகவும் இருக்கலாம். ஒன்றுக்காக வரிந்து கட்டிக்கொண்டு பேசுபவர்கள் இன்னொன்றையும் பேசவேண்டும். கோயில்களுக்கான நிலங்களை முழுமையாக ஆக்கிரமித்துப் பட்டா போட்டுக் கொண்டவர்கள் ஒரு பக்கம். இருக்க இடம் இல்லாமல் கோயில் நிலத்தில் காலங்காலமாகக் குடி இருப்பவர்களை வெளியேற்ற வேண்டும் என்கின்றார்கள். இப்படிப் பேசுகின்றவர்கள் ஆலயங்களில் நடக்கும் ஊழல்களைப் பேச மறுக்கின்றார்கள்.

தமிழகக் கோயில்களில் இருக்கக்கூடிய பெரும்பான்மையான சிலைகள் மாற்றப்பட்டுவிட்டன. களவு போய்விட்டன. வெளிநாடுகளுக்கும் கடத்தப்பட்டுவிட்டன என்னும் செய்திகளைப் படிக்கும்போது அதிர்ச்சியாக இருக்கின்றது. வெளிநாட்டில் உள்ள கருப்புப் பணத்தை மீட்க முயற்சி செய்வது போலக் கடத்தப்பட்ட சிலைகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

படை எடுத்து வரும் மன்னர்கள் கோயில்களைச் சூறையாடிச் சிலை, அணிகலன் போன்ற செல்வங்களைக் கொள்ளை அடித்துச் சென்றார்கள் என்பதை இந்திய வரலாற்று நூல்கள் குறிப்பிடும். குறிப்பாக, மொகலாய மன்னர்கள் செல்வங்களைக் கொண்டதோடு கோயில்களை இடித்தார்கள் என்னும் செய்திகளையும் வரலாற்று நூல்கள் விளக்கும்.

பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன், வாய்ப்புக் கிடைக்கும்போது அனைத்து மதம் சார்ந்த மன்னர்களும் கொள்ளை அடிப்பார்கள் என்பதைப் பதிவு செய்துள்ளார். இஸ்லாமியர் படையெடுப்பு என்ற பெயரில் கோயிலைக் கொள்ளையடித்தார்கள், பெண்களை வல்லுறவு செய்தனர். அதிக வரிகளை விதித்தார்கள் என்று எவ்வளவு உண்மையோ அதே அளவுக்கு அதே காரியங்களை இந்து மன்னர்களும் செய்தார்கள். இதிலிருந்து நமக்குத் தெரிவது என்னவென்றால் இதற்கெல்லாம் அடிப்படையாக மதம் காரணமாக இல்லை என்பதுதான். நிலவுடைமைக் கொடுமையின் விளைவுகள், நிலவுடைமைக்கென்று சில குணங்கள் உண்டு. அந்தக் குணங்களின் வெளிப்பாடுதான் இவையெல்லாம். (தனித்து.பக். 87-88)

அந்நியர்கள் இந்தியாவில் கொள்ளை அடித்துச் சென்றதைவிட இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப்பணம் அதிகமாக இருக்கும் போலத் தெரிகிறது. வேற்று நாட்டு மன்னர்கள் கோயில் சொத்துக்களைக் கொள்ளை அடித்ததற்கு எந்த வகையிலும் நம்மவர்கள் குறையில்லாமல் செய்திருப்பார்கள் போலத் தெரிகிறது. பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் மகாகவியின் கோவிற் பூசை செய்வோர் சிலையைக் கொண்டு விற்றல் போலும் என்னும் அடியைச் சுட்டிக் காட்டுவது நோக்கத் தக்கது.

ஆலயங்களில் நடக்கும் ஊழல்கள் அவற்றோடு தொடர்புடையவர்களுக்குத் தெரியாமல் நடப்பதற்கு வாய்ப்பில்லை. கடவுள் உண்டு; இல்லை என்று கூறுவதில் கருத்து வேறுபாடு உண்டு. உலகின் பேரதிசயங்களாகப் போற்றப்படுபவை பற்றியே வினாக்கள் எழுகின்றன. போற்றப்படும் அந்தப் புனிதங்கள் எல்லாம் உழைக்கும் மக்களின் எலும்பாலும் குருதியாலும் எழுப்பப் பட்டவை.

வழிபாடு என்பது தனி உரிமை. அந்த உரிமைப்படி வழிபட வேண்டும் என்றால் உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பே ஆலயம் (திருமந். 1823) எனத் திருமூலம் கூறுவதுபோல் எண்ண வேண்டும். கருத்துமுதல்வாதத்தைப் பேசிக் கொண்டு பொருளை இறைவன் பெயரால் குவித்துக் கொண்டு வாழ்வதால்தான் சமுதாயச் சிக்கல் எழுகின்றது.

இந்து மதத்தில் மட்டும் இவ்வகையான சிக்கல் இல்லை; உற்பத்தி உறவுடன் கலக்கும்போது பெரும்பான்மையான மதங்களில் பல சிக்கல்கள் எழுகின்றன. திருமூலர் கருதியது போலவே தேவதூதர் இயேசு பெருமானும் கருதியதை ஆ.சிவசுப்பிரமணியன் படித்துப் பாருங்களேன் என்னும் தலைப்பில் கத்தோலிக்கக் குரு ஜோசப் வடக்கன் எழுதிய நூல் பற்றிய ஆய்வில் பதிவு செய்துள்ளார்.

பொருள் இல்லாமையை மட்டுமே ஒரு பாவமாக இவர் கருதவில்லை. ஏழ்மை என்பதற்கு விரிவான முறையில் அவரது விளக்கம் இருந்தது. அறிவின்மை - பண்பாடின்மை - அறம் இன்மை என்பவையும் ஏழ்மையே என்பது அவரது கருத்தாக இருந்தது. ஏழ்மையானது அறியாமை - பசி - நோய் - வசிக்க இடமின்மை என்பவற்றை உருவாக்குகிறது என்பதை வெளிப்படுத்தினார். இதன் அடிப்படையில் ஏழ்மையே மிகப்பெரும் பாவம் என்று சுவரில் எழுதி வைத்தார். பங்குக் குரு பொறுப்பிலிருந்து இவரை வெளியேற்றிய பின் ஆயரின் அறிவுறுத்தலின்படி புதிய பங்குக்கு இதை அழித்து விட்டார். தேவாலயத்தின் சுவர்களில் இவ்வாறு எழுதுவது மிகப்பெரிய பாவம் என்று ஆயர் எண்ணியிருக்கலாம் என்று இந்நிகழ்வு குறித்து ஃபாதர் வடக்கன் குறிப்பிட்டுள்ளார் (உங்.நூல.ப.7).

மக்களுக்குக் கல்வியைக் கொடுக்கும் வழியை அடைத்து விட்டால்போதும் - அறியாமை, ஏழ்மை என ஒட்டுமொத்த இழிவுகளும் அவர்களை ஒட்டிக்கொள்ளும். கல்வி அறிவில்லா மக்களும் காயடித்த காளைகளும் ஒரே தன்மையில் இயங்குவதைக் காணலாம்.

இந்துமதம் மட்டும் இல்லை எல்லா மதங்களுமே உழைக்கும் மக்களை அறியாமையிலும் வறுமையிலும் மட்டுமே வாழ வைக்க எல்லாக் காலத்திலும் இருந்துள்ளன. கத்தோலிக்க குரு ஜோசப் வடக்கனைப் போன்று தேவாலயத்தோடு தொடர்புடைய அருட் சகோதரிகளின் மதிப்பீடுகளும் அண்மையில் பேசப்பட்டுள்ளன.

சிஸ்டர் ஜெஸ்மி எழுதிய ஆமென் என்னும் நூலைப் படிக்கும் போது மத நிறுவனங்கள் எவையும் ஒன்றுக்கொன்று சளைத்தவை இல்லை என்பதையே அறிய முடிகின்றது. நூலின் பின் அட்டையில் இருபத்து நான்கு வருடங்களுக்கும் மேலாக நடத்தி வந்த வாழ்க்கையில் இருந்து வெளியேற அவரைத் தூண்டியவை மதத்தின் பெயரால் செய்யப்படும் ஆன்மீக மீறல்கள், மடங்களுக்குள் நிகழும் ரகசியக் கொடுமைகள், வழியும் உண்மையும் ஒளியுமான மீட்பரிடம் இருந்து கிறித்துவம் விலகுகிறது என்னும் பகுத்தறிவு என்னும் பதிவைப் படிக்கும் போது இலங்கையில் புத்த பெருமானுக்குத் தமிழரின் குருதியைக் காணிக்கை ஆக்குவதும் நினைவுக்கு வந்தது.

மதத்தைத் தோற்றுவித்தவர்களிடம் நல்ல சிந்தனைகள் நிறைந்திருக்கும். வழித்தோன்றல்களால்தான், வரவர மாமியாள் கழுதைபோல் ஆனாள் என்னும் நிலைக்கு வளர்ந்து விட்டன. உலகம் உருண்டை என்ற உண்மையைச் சொன்ன கலிலியோ பட்ட பாடு அவருக்குத்தான் தெரியும். அந்நிகழ்வுக்காகப் பல நூற்றாண்டுகள் கழித்து இப்போது வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பைபிள் கூறியபடி உலகம் தட்டையாக இல்லை; கலிலியோ கூறியபடி உருண்டையாகத்தான் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

பேசப்படும் மதப்பெருமைகள், அரசுகள் பற்றிய பார்வை ஒருபுறம் இருந்தாலும் அவற்றால் பாதிக்கப்படும் மக்களே பெருவாரியாக இருந்தார்கள். இடைக்காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் பெருமைகளை மட்டும் கூறவில்லை; அந்தக் கால நிலைமைகளையும் கூறுகின்றன.

சோழர் காலத்திற்கு முன்னர் இனப்பாகுபாடு இருந்தாலும் தாழ்த்தப்பட்ட இனமக்களும் உடைமையாளர்களாக இருந்துள்ளார்கள் என்பதைப் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் சுட்டிக்காட்டி, சோழர்காலத்தில் பெரும்பான்மையான மக்கள் எவ்வாறு எல்லாநிலைகளிலும் பின்னுக்குத் தள்ளப்பட்டார்கள் என்பதைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

ஏதோ சில காரணங்களால் இவர்களில் ஒரு பகுதியினர், புல்லறுத்து விற்கும் அல்லது குதிரைகளைப் பராமரிக்கும் தொழிலுக்குத் தள்ளப்பட்டனர். ‘தேவதானம், பிரமதேயம்’ என்ற பெயர்களில் ஏற்கனவே பயிரிட்டு வந்த குடிகளை நீக்கி, முறையே கோவில்களுக்கும் பிராமணர்களுக்கும் விளைநிலங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. இவ்வுண்மையை ‘குடி நீக்கிய தேவதானம்’, ‘குடி நீக்கிய பிரம்மதேயம்’ என்ற கல்வெட்டுச் சொல்லாட்சிகள் உணர்த்தி நிற்கின்றன. இக்காரணங்களால் தம் நில உரிமையை இழந்தோர் ‘குதிரைக்குப் புல்லிடும்’ பணியை மேற்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று கருத இடமுள்ளது. மேலும் சோழர் கால நிலவுடைமை வளர்ச்சியில் உருவான பிராமணர், வேளாளர் கூட்டு, இம்மக்களைப் பாதித்திருக்கும் வாய்ப்பும் உள்ளது (பிராமண. ப. 70).

sivasubramanian muthumohan 450போற்றப்படும் புனிதங்களை ஆ.சிவசுப்பிரமணியனின் நூல்கள் கேள்விக்கு உள்ளாக்குகின்றன. கல்வெட்டு, வழக்காற்றுச் சான்றுகளைப் போன்று இடைக்காலத்தில் தோன்றிய சிற்றிலக்கியங்களும் உழைக்கும் மக்களை ஆளும் வர்க்கமும் நிலப்பிரபுத்துவமும் உழைக்கும் மக்களைப் படுத்தும் கொடுமைகளை விவரிக்கின்றன.

பள்ளு இலக்கியங்கள் வழி மரபுசார்ந்த வேளாண்மை அதற்குப் பயன்படுத்தப்பட்ட வித்துகள், மாட்டு வகைகளை அறிந்துகொள்ள முடியும். நிலக்கிழார்களின் பெருமையை வெளிப்படுத்த அவர்கள் தொழிலாளர்களுக்குக் கொடுக்கும் தண்டனைகளையும் புலவர்கள் குறிப்பார்கள்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில், அதாவது மராட்டிய மன்னரான சரபோஜியின் ஆட்சிக் காலத்தில் ஓர் இராமாயணக் கும்மி சோழ நாட்டில் வீரபத்திர வாத்தியாரால் எழுதப்பட்டுள்ளது. கம்பருக்கு சடையப்ப வள்ளல் இராமகாதையை எழுத உதவியதைப்போன்று மதுக்கூர் நிலக்கிழார் துரைச்சாமி கோபாலகர் வீரபத்திரருக்கு இராமாயணக் கும்மியை எழுத உதவி செய்துள்ளார்.

செஞ்சோற்றுக் கடனாக வீரபத்திரர் எட்டுக் கண்ணிகளில் நிலக்கிழாரின் பெருமைகளைக் குறிப்பிடுகின்றார். அவற்றில் இரண்டு கண்ணிகள் சோழநாட்டின் ஒரு பகுதியாகிய கீழத் தஞ்சையில் உழைக்கும் பண்ணைத் தொழிலாளர்கள் எவ்வாறெல்லாம் கொடுமைப் படுத்தப்பட்டார்கள் என்பதற்குச் சாட்சியங்களாக உள்ளன.

காவிரிப் பாசனப் பகுதியில் பல லட்சம் ஏக்கர் நன்செய் நிலங்கள் கோயில், பார்ப்பனர்களுக்கே உரியவை. அவற்றில் உழைக்கும் மக்கள் பெரும்பாலும் தலித்து மக்கள்; பண்ணையார் எள் என்றால் கார்வாரிகள் எண்ணெயுடன் நிற்பார்கள். சாட்டையடி, சாணிப்பால், கீழ்ப்பாய்ச்சிப் போடுதல் என்னும் தண்டனை முறைகளைத் தனிநூலாகவே எழுதலாம்.

இவ்வளவிற்கும் பெரும்பான்மையான பண்ணை முதலாளிகளும் கார்வாரிகளும் பண்ணைத் தொழிலாளர்களும் இந்து மதத்தினர். அதாவது மதத்தில் ஒன்றுபட்டுச் சாதியால் வேறுபட்டவர்கள். மதத்தைவிடச் சாதி எவ்வளவு கொடுமையானது என்பதை வேளாண்மைத் தொழிலின் படிநிலையைக் கொண்டே அறிந்துகொள்ளலாம்.

அனுமன் சீதையைத் தேடிக்கொண்டு இலங்கைக்குச் செல்கின்றான். இருட்டி விட்டது. கும்மிருட்டு என்று சொல்லும் அளவில் இருட்டு. அந்த இருட்டு எவ்வாறு இருந்தது என்பதை வீரபத்திரர் ஓர் உவமைவழிக் குறிப்பிடுகின்றார்.

துரைச்சாமி கோபாலகர் பண்ணையில் வேலை செய்யும் ஆட்கள் தப்புச் செய்தால் அடைத்து வைக்கும் இருட்டறையைப் போல இலங்கையின்மீது இருட்டு அப்பி இருந்ததாம். போசன் துரைச்சாமி தென்மதுக்கூர் - மிகப் பூபதி கோபாலப் புண்ணியவான் / தேசத்தில் குற்றமிட்டாரை - அறைச் செய்கை போலானது மையிருட்டு (வீர. 2121).

சீதையைத் தேடிவரும் அனுமனைக் கொல்ல இராவணன் படையை அனுப்புகின்றான். அனைவரும் அனுமனால் கொல்லப்பட, சம்புமாலி என்பவன் போரிட வருகின்றான். தோரணவாயிலில் அமர்ந்திருந்த அனுமன் அவனை வாலால் சுருக்கு மாட்டி இழுத்துக் கொல்கின்றான்.

பண்ணையாரின் பண்ணையில் குற்றம் புரிவோரைத் தூக்கில் தொங்கவிடுவதைப் போல அனுமனின் செயல் இருந்ததாம். கோபால ராச துரந்தரவான் - மதுக்கூரன் துரைச்சாமி தீரனெனும் / பூபாலனுக்கினை துக்கதுபோல் - மிகப் போதவும் தூக்கினார் மேலனுமான் (வீர.2305).

கோயில், நிலம், பண்ணை எனப் பெருமையாகப் பேசப்படுபவற்றை அவற்றோடு தொடர்புடைய தொண்டு செய்யும் உழைக்கும் மக்களையும் உரசிப்பார்த்தால்தான் புனிதங்கள் கேள்விக்குறியாகும்.

முரண்பட்ட மதங்கள், சாதிகள் கூட உழைக்கும் மக்களை ஒடுக்குவதிலும் சுரண்டுவதிலும் ஒன்று கூடிவிடும். இந்து சமயத்தினரைப் போன்றே கிறித்துவ, முகமதிய மதத்திலும் இருந்தனர் என ஜோசப் வடக்கன் கூறுவதை ஆ.சிவசுப்பிரமணியன் எடுத்துக் காட்டுகின்றார்.

நிலத்தில் சாகுபடி செய்யும் குடியானவரையோ, குடிசை போட்டு இருப்பவரையோ வெளியேற்றும் அதிகாரம் நிலப்பிரபுக்களுக்கு இருந்தது. ஏழையைச் சுரண்டும் உரிமை பணக்காரனுக்கும் தொழிலாளிகளை ஒடுக்கும் உரிமை முதலாளிகளுக்கும் அடித்தள ஜாதியினரை நோகச் செய்யும் உரிமை உயர் ஜாதியினருக்கும் இருந்தது. ஒரு தேங்காய் குறைந்தாலும் கூட ஈவு இரக்கமின்றிக் குடியானவர்களை அடிக்கும் இஸ்லாமிய, கிருஸ்தவ நிலப்பிரபுக்கள் இருந்தனர். (உங்.நூல.11:6, ப.9, 2019).

இவ்வகையான சில பொதுத் தன்மை அடிப்படையில் மாநிலம், மதம் என்னும் வேறுபாடு இல்லாமல் உழைக்கும் மக்களைச் சுரண்டும் நிலையைப் பார்க்கும்போது ஒட்டு மொத்தமான புனிதங்களே கேள்விக்குள்ளாகின்றன.

செம்மறி ஆட்டுக்கூட்டம் போன்ற வாழ்க்கையையும் ஆய்வையும் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் விரும்பவில்லை என்பதைப் பின்வரும் குறிப்பால் அறிந்துகொள்ளலாம். விமர்சனமற்ற பெருமித உணர்வோடு நாம் இருக்கிறோம். இந்தப் போக்கிலிருந்து விடுதலை பெறா விட்டால் நமது வரலாறானது நமது வருங்காலச் சந்ததியினரை ஒரு மத அடிப்படை வாதிகளாக, இன அடிப்படை வாதிகளாக, எதிர்காலம் பற்றித் திட்டமிட இயலாதவர்களாக மாற்றிவிடும் (தனித்து.ப. 88). நாட்டின் வளர்ச்சியை விட மதம், இனம் பற்றிய பேச்சே அதிகமாக இடம்பெறுகின்றது.

கல்வி அறிவு வளர்ச்சி அடைந்து மார்க்சியம், அம்பேத்கரியம், பெரியாரியம் போன்ற கோட்பாடுகள் வளர்ந்த பின்னர் ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டால் ஒவ்வோர் ஆண்டும் பல்லாயிரக் கணக்கானோருக்கு வேலைகள் கிடைத்தன. எந்தவிதமான நேர்மையும் இல்லாமல் அனைத்தையும் அனுபவித்தவர்கள், கொட்டலில் கிடந்தது கொழிக்குது, மிட்டாய் தின்னது முழிக்குது எனக் கூறிப் பெருமூச்சு விடுவதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

தலத்தில் இல்லா நில உடைமையாளர் ஆனமை, முன்போல உழைப்புச் சுரண்டலை நிகழ்த்த முடியாமை, பணவடிவில் ஊதியம் வழங்க வேண்டிய நிலை, உடல் உழைப்பில் இருந்து அந்நியப்பட்டுப் போனமை பிறர் உழைப்பைக் குறைந்த ஊதியத்திற்கு வாங்க முடியாதவாறு நிகழ்ந்த முற்போக்கான சமூக மாறுதல்கள் என்பன வேளாளரின் நிலவுடைமைச் சிதைவுக்குக் காரணமாயின (தனித்து. 172) என்பதைப் பேராசிரியர் நிலவுடைமைச் சிதைவைத் தெளிவாக விளக்குகின்றார். வேளாண்மைச் சிதைவு பசுமைப்புரட்சி, பெருநிறுவனங்களின் தலையீடு, வறட்சி போன்றவற்றால் ஏற்பட்டுள்ளது.

பிராமணன் ஏர் பிடித்து உழக்கூடாது என்று விதிமுறை இருக்கிறது (தனித்து, ப.89). ஆனால் நிலம் அவர்களுக்கே உரிமையாக இருக்கும். இதைவிட இன்னொரு மிகப் பெரிய கொடுமை காலங்காலமாக நிலத்தில் இறங்கி வேளாண்மை செய்தவர்களின் வாரிசுகளே உழுவதில்லை; உழத்தெரிவதில்லை.

பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் நேர்காணலில் கூறியுள்ள செய்திகள் தனித்தனியாகக் காணப்பட்டாலும் தனித்து ஒலிக்கும் குரல் என்னும் நூலின் பெயருக்கு ஏற்றாற்போலப் பலகருத்துகள் காலங்காலமாகப் புனிதமாகப் போற்றப்பட்டவை மீள்பார்வைக்கு உள்ளாகின்றன; அவ்வாறு பார்க்கும்போது புனிதங்கள் கேள்விக்கு உள்ளாகின்றன.

கடவுளின் வாரிசுகள்

தமிழகத்தில், குறிப்பாகச் சோழநாட்டுப் பகுதியிலே கோயில் சார்ந்து அதிகமாக நிலம் இருந்தது. தஞ்சாவூர், திருவாரூர், நாகைப் பகுதிகள் கோவில்கள் மிகுந்த மாவட்டங்கள். ஒரு சிறிய ஊரில் கூட அந்த ஊரின் தகுதியை விடப் பிரமாண்டமான கோவில் இருக்கும் (தனித்து.ப.143).

நீர் வளம் இல்லாத பகுதிகளில் கோயில், மடம், பார்ப்பனருக்கு அதிகமாக நிலம் இருக்காது. பார்ப்பனரும் வறண்ட பகுதிகளில் இருக்க மாட்டார்கள். பேராசிரியர் குறிப்பதைப் போல ஊர் பெரிதாக இருக்கவேண்டும் என்பதில்லை. நிலவளம் இருக்க வேண்டும். தஞ்சாவூர் திருவையாறுக்கு இடைப்பட்ட வெண்ணாற்றங்கரையில் உள்ள சிங்கபெருமாள் கோயில் என்னும் சிற்றூரில் பாடல் பெற்ற மூன்று வைணவத் தலங்கள் உள்ளன. சிவன் கோயில் ஒன்று உள்ளது. வேறு சில கோயில்களும் உள்ளன. பக்தியின் வளர்ச்சி என்பது நிலம் சார்ந்தே இருந்துள்ளதை அறிய முடிகின்றது.

தமிழகத்தில் வளமான பகுதிகளில் உள்ள நிலங்கள் எல்லாம் கோயில், மடம், பார்ப்பனர்களுக்கே உரிமையாக இருந்தன. சிவபெருமானின் நேரடி வாரிசாக ஐயர்களும் திருமாலின் நேரடி வாரிசாக ஐயங்கார்களும் தங்களைக் கூறிக் கொள்வார்கள். பண்ணைகளில் வேலை செய்யும் உழைப்பாளர்கள் பண்ணையார்களை உயர்வாக மதிப்பார்கள். ஆனால் பண்ணையார்களின் ஆட்கள் பயங்கரமான தண்டனைகளைக் கொடுப்பார்கள்.

உழைக்கும் மக்களிடம் விழிப்புணர்வு இல்லாத காலத்தில் கோயில், பண்ணை எல்லாமே புனிதமாகவே கருதப்பட்டன. பொதுவுடைமைக் கட்சி உழைக்கும் மக்களிடம் ஊடுருவ ஆரம்பித்தது. வெண்கலப் பாத்திரக் கடையில் யானை புகுந்ததுபோலப் பண்ணை அமைப்புகள் கலகலக்க ஆரம்பித்தன. கீழத் தஞ்சைப் பகுதிக்குக் களப்பணிக்கு வந்த பி.சீனிவாசராவ் உன்னை அடிப்பவனைத் திருப்பித்தாக்கு என்று ஓர் அணுகுண்டைத் தூக்கிப் போட்டார். பயந்து நடுங்கியவர்கள் பண்ணையார்கள் இல்லை; பண்ணைத் தொழிலாளர். காலங்காலமாக அடிக்குப் பயந்தார்களே தவிர, கனவிலும் கூட அடிக்கத் துணியவில்லை.

சீனிவாசராவ் கூறியது அதிக அளவில் நிகழவில்லை என்றாலும் ஒன்று இரண்டு நிகழ்வுகள் நடந்தேறின. பண்ணையார் பண்ணைத் தொழிலாளரால் தாக்கப்பட்டார். அவங்க ஒரு கட்டத்துல நிலத்தைக் கைவிட்டு, குறைந்த விலைக்கு விற்றுவிட்டு நகரம் சார்ந்தவர்களாக மாறிட்டாங்க. கிராமப் புறத்திலிருந்து நகரத்துக்குப் பிராமணர்கள் இடம் பெயர்ந்தபோது பிராமணியமும் பெயர்ந்தது. எப்படித் தஞ்சாவூர்ல இருந்து இடம்பெயர்ந்து மயிலாப்பூர்ல வழக்கறிஞர்களாக ஆனார்கள்? விடுதலை பெறுவதற்குக் கொஞ்ச காலத்துக்கும் முன்னால் தொடங்கி இது நடந்தது (தனித்து ப.22).

மன்னர்களுக்கு ஆசிவழங்கி நிலங்களைப் பெற்று வாழ்ந்த கடவுளின் வாரிசுகள் அற்ற குளத்துப் பறவைபோலக் கிளம்பி விட்டார்கள். காலங்காலமாக நிலவுடைமை சமுதாயத்தில் போற்றப்பட்ட புனிதங்கள் எல்லாம் பொதுவுடைமைக் கட்சியின் வரவுக்குப் பிறகு தகர்ந்து விட்டன. எந்தெந்தப் பகுதிகளில் பொதுவுடைமைக் கட்சி கொடுத்த துணிவால் துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு செருப்புடன் நடந்தார்களோ அந்தப் பகுதியில் வாழும் வாரிசுகள் எல்லாம் வரலாற்றைப் படிக்க வேண்டும்.

பொதுவுடைமைக் கட்சியின் வரவு, பெரியாரின் விழிப்புணர்வுப் பயணம், அம்பேத்கர் பற்றிய புரிதல், காமராசரின் கல்விப் பரவலாக்கல் போன்றவற்றால் போற்றப்பட்ட புனிதங்கள் எல்லாம் வேரற்ற மரங்களாக வீழ்ந்தன என்பது உண்மை.

நேரடியாக இல்லாவிட்டாலும் மேலே குறிப்பிட்டவர்கள், குறிக்கப்படாதவர்கள் எனப் பல சான்றோர் பெருமக்களால்தான் ஓரளவு உயர்ந்த நிலையைப் பெற்றுள்ளோம் என்பதையும் மறந்து அரசியல் ஆதாயத்திற்காகச் சமுதாய வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர்களின் சிலைகளை அவமதிப்பதாக நினைத்து தங்களை அவமதித்துக் கொள்கின்றார்கள்.

அரிச்சந்திரன் நிலை

பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் முன்னர் அரிச்சந்திரன் தொடர்பாக எழுதிய இரண்டு கட்டுரைகள் அடிப்படையில் அம்மன்னன் பொருட்டுக் காலங்காலமாகப் பேசப்பட்ட மேன்மையைக் கேள்விக்குள்ளாக்குகின்றார். மகாத்மா காந்தி தம்முடைய வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியவன் அரிச்சந்திரன் எனக் குறிப்பிடுகின்றார். அரிச்சந்திரன் எல்லாவற்றையும் இழந்தாலும் வாய்மை தவறாமல் வாழ்ந்தான்.

தப்புச் செய்தவன் அதனை மறைக்கப் பேசும்போது, அரிச்சந்திரன் மாதிரி பேசுறான்; அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரன் மாதிரி நெனப்பு என்றெல்லாம் மக்களிடம் வழக்கு இருப்பதை அறியலாம். உலகத்திலேயே வாய்மை தவறாதவன் அரிச்சந்திரன்தான் என்று அவன் குலகுரு வசிட்ட முனிவர் அறிவித்ததை விசுவாமித்திரர் அறிவார்.

தவத்தின் வலிமை அறிந்து பேரரசனாக இருந்த கௌசிகன் விசுவாமித்திர முனிவர் ஆனார். திரிசங்கு என்னும் மன்னனின் மகனே வாய்மை தவறாத அரிச்சந்திரன். விசுவாமித்திரருக்கு எதற்கெடுத்தாலும் சினம் பொங்கும். சத்திரியராகிய அவர் சிறுமை கண்டபோது பொங்கி எழுவார்; சாபமிடுவார். எதற்கெடுத்தாலும் சாபமிடுபவரைப் பார்த்து என்ன விசுவாமித்திரர் மாதிரி பிடி சாபத்தைன்னு நிக்கிறே என்பார்கள்.

அரிச்சந்திரனின் தந்தை திரிசங்குவிற்கு இந்தப் பூத உடலுடன் சுவர்க்கம் போக வேண்டும் என்று ஆசை. வசிட்டரிடம் கூறியபோது பூதவுடலுடன் சுவர்க்கம் போக முடியாது என்று கூறிவிடுகிறார். விசுவாமித்திரரிடம் கூற, அவர்தம் தவ வலிமையால் அவனைச் சுவர்க்கத்திற்கு அனுப்புகின்றார்.

பூத உடலுடன் சுவர்க்கம் வரும் திரிசங்குவைத் தேவர்கள் கீழே தள்ளி விடுகின்றனர். விசுவாமித்திரரை நினைத்துக் குரல் கொடுக்க, உடனே சுவர்க்கத்திற்கும் பூமிக்கும் இடைப்பட்ட அகண்ட வெளியில் ஒரு சொர்க்கலோகத்தை அமைத்துக் கொடுத்தார். தந்தைக்குச் சொர்க்கத்தை அமைத்துக் கொடுத்த முனிவர் மகனை சுடுகாடு காக்கும் அளவிற்குக் கொண்டுபோய் விட்டதற்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட வலிமை மிக்க விசுவாமித்திரருக்கு அரிச்சந்திரன் வாய்மை தவறாதவன் என வசிட்டர் கூறியதை நம்ப முடியவில்லை. அவன் வாய்மை தவறியவன், சொன்ன சொல்லைக் காப்பாற்றாதவன் என்பதை நேரடியாகவே அறிந்திருந்தவர். உலகுக்கு அவனின் உண்மையான இயல்பைக் காட்ட விசுவாமித்திரர் முடிவெடுத்து விட்டார். அந்தக் கதையே அரிச்சந்திர புராணம்.

மன்னன் அரிச்சந்திரன் காட்டிற்கு வேட்டையாடச் செல்கின்றான். அங்கே வழிதவறி அலைகின்றான். காட்டில் வாழும் இரண்டு பழங்குடிப் பெண்கள் அரிச்சந்திரனுக்கு உதவுகின்றார்கள். உணவு கொடுத்து, மன அமைதிக்காக ஆடியும், பாடியும் மன்னனை மகிழ்ச்சி அடையச் செய்கின்றார்கள்.

அவர்கள் செய்த உதவிக்கு நன்றி தெரிவிக்க என்ன வேண்டும் என அரிச்சந்திரன் கேட்கிறான். எங்களை மணந்து கொள்ள வேண்டும் என்று மன்னனிடம் கூறுகின்றார்கள். அரிச்சந்திரன் அதற்கு உடன்படவில்லை. என்ன வேண்டும் என்று கேட்டு, அவர்கள் கேட்டதைக் கொடுக்க, அரிச்சந்திரன் மறுத்ததையும் மறுத்ததற்கான காரணத்தையும் விசுவாமித்திரர் அறிகின்றார்.

அரிச்சந்திரனிடம் அந்தப் பெண்கள் இருவரையும் மணந்து கொள்ளுமாறு விசுவாமித்திரர் வற்புறுத்துகின்றார். மன்னன் மறுக்கின்றான். நான் என் நாட்டை வேண்டுமானாலும் இழப்பேன்; மனைவி மக்களைக்கூட இழப்பேன்; ஆனால் இந்தச் சண்டாளப் பெண்களை மணந்து என் குலத்துக்கு இழுக்குச் செய்ய மாட்டேன் என்கிறான் அரிச்சந்திரன். அவன் சத்திரியன். ஆக தனது உயரிய குலத்திற்கு இழுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் நாட்டைத் துறந்தானேயழிய அங்கு வாய்மை இல்லை. எனவே, அரிச்சந்திரனின் இன்னொரு பக்கத்தைப் பார்க்க வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கின்றது (தனித்து. பக். 151-152). பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் அரிச்சந்திரனின் இன்னொரு பக்கத்தைப் பார்க்க வேண்டும் என முத்தாய்ப்பாக முடிகின்றார். அதாவது, புதினமாகப் போற்றப்படும் அரிச்சந்திரனின் வாய்மைதவறாதவன் என்று காலங்காலமாகக் கூறியதைக் கட்டுடைக்கின்றார்.

சநாதன தர்மத்தைப் போற்றி வளர்த்த காலம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் (திருக். 972) உயர்ந்த கோட்பாட்டை வெறுப்பவர்கள் வாழ்ந்த காலம். மனுநீதி இப்படித்தானே சொல்கின்றது. பிராமணன், க்ஷத்திரியன் - இவர்களுக்குத் தன் வருணத்துக் கந்நிகை அகப்படாத ஆபத்துக் காலத்திலும் சூத்திரக் கந்நியை முதலில் விவாகம் செய்யக்கூடாது. (மநு. 3:14), தன் சாதிக்குத் தாழ்ந்த சாதியில் விவாகம் செய்து கொள்ளும் துவிஜர்கள் தன்குலத்தையும் புத்திராளையும் சூத்திரத் தன்மையை அடைவிக்கிறார்கள் (மநு. 3: 15).

அரிச்சந்திரனிடம் யாகம் செய்வதற்காக விசுவாமித்திரர் பொருள் கேட்டார். ஆட்சி, மனைவி, மக்களை இழக்கும் அளவிற்கு அவர் கேட்ட பொருள் இருந்தது. இடுகாட்டில் வெட்டியான் வேலையும் செய்தான். முனிவருக்கு வாக்குக் கொடுத்தற்காக அனைத்தையும் இழந்து சத்தியம் தவறாதவனாக வாழ்ந்தான் என்பதே பொதுவான செய்தியாகும்.

விசுவாமித்திரருக்கு வாக்குத் தவறாத அரிச்சந்திரன் புலை மகளிர் இருவருக்குக் கொடுத்த வாக்குத் தவறி விட்டான். இதனால் சினங்கொண்டு முனிவர் இவ்வளவு துன்பங்களைக் கொடுத்துள்ளார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது அரிச்சந்திரன் தொடர்பான கட்டுரையைத் தாமரை இதழில் படித்ததாக நினைவு. இதே கருத்துதான். கட்டுரை ஆசிரியர் பெயர் நினைவில் இல்லை. ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் நினைவை விட்டு நீங்காத கருத்து. தனித்து ஒலிக்கும் குரல் என்னும் நூலைப் படிக்கும்போதுதான் அந்தக் கட்டுரையை எழுதியவர், பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ண முடிந்தது.

இந்திய வரலாறு

இந்திய வரலாறு, நாகரிகம் என்று எழுதும் வரலாற்று ஆசிரியா¢கள் ஆரியரைப் பற்றித்தான் அதிகமாக விவரிக்கின்றார்களே தவிர, இன்னும் ஒரு நாகரிகம் - அதுவும் ஆரியர் வருகைக்கு முன்பே இந்தியா முழுவதும் பரவி இருந்ததை எழுத மறுக்கின்றார்கள். மறுக்கின்றார்கள் என்றால் மறைக்கின்றார்கள் என்றுதான் கொள்ளவேண்டும்.

சிந்து வெளியில் ஒரு நாகரிகம் வளர்ந்து அழிந்துள்ளது. தொடக்க காலத் தொல்பொருள் ஆய்வாளர்கள் அது திராவிடர் நாகரிகமாக இருப்பதற்கு வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டார்கள். அதனை ஆரிய நாகரிகமாகக் காட்டச் சிலர் எவ்வளவோ முயற்சி செய்கின்றார்கள்; உரத்துப் பேசுகின்றார்கள். அறிவியல் வழி ஆய்வு என்னும்போது எடுபடவில்லை. ஆய்வு என்று என்று கூறிக் கொண்டு செப்படி வேலைகளை எல்லாம் செய்து பார்க்கிறார்கள் முடியவில்லை.

சரஸ்வதி நாகரிகம் என்ற இல்லாத நாகரிகத்தைச் சிந்து சமவெளி நாகரிகத்துக்கு முந்தை நாகரிகமாக எடுத்துக் கொண்ட முயற்சி, மொஹஞ்சதாரோவில் கிடைத்துள்ள காளை மாட்டுச் சிலையைக் கம்ப்யூட்டர் யுக்தியில் கொம்பைக் காதாக்கிக் குதிரையாக்கியது... (தனித்து. ப.24)

தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் தொல்பொருள் ஆய்வு செய்ய வேண்டிய இடங்கள் நிறைய உள்ளன. வடவிந்தியாவில் தொல்பொருளே அதிகம் கிடைக்காத இடங்களில் கோடிக் கணக்கில் செலவு செய்து ஏதாவது கிடைக்குமா? என்று சல்லடை போட்டுத் தேடுகின்றார்கள். தமிழகத்தில் உள்ளங்கை நெல்லிக்கனிபோல ஏராளமான தொல்பொருட்கள் கிடைக்கின்றன.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஏராளமான பொருட்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. தமிழர்களுக்கு நகர நாகரிகம் கிடையாது; சங்க இலக்கியங்களில் பதிவாகியுள்ளது கற்பனையானது என்று எழுதியவர்கள், பேசியவர்களுக்குக் கீழடி, இதயத்தில் ஓர் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும். இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டு தமிழரின் தொன்மையை மறைக்க முயல்பவர்கள் வடமொழி நூல்களில் கூறப்பட்டுள்ள எல்லா வகை லோகங்களையும் போய்ப் பார்த்து வந்தவர்கள் போல நம்புவார்கள்.

கீழடி மட்டுமல்லாமல் குமரிக்கண்டம், பூம்புகார், கொற்கை போன்ற பகுதிகளில் கடலடி ஆய்வுகள், ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு போன்ற பகுதிகளில் அகழாய்வுகள் பழந்தமிழரின் வரலாறு, தொன்மை, பண்பாடு, நாகரிகம் போன்றவற்றை எல்லாம் வெளிப்படுத்தும். இந்த எல்லா ஆய்வுகளும் சிந்து வெளி நாகரிகத்துடன் ஒன்று சேரும். அஃதாவது, ஒட்டுமொத்த இந்தியாவின் ஆதிக் குடியினர் தமிழரின் முன்னோர் திராவிடர் என்னும் நிலைக்கு மீட்டுருவாக்கம் செய்யப்படும். இந்தியா முழுவதும் பேசப்படும் திராவிட மொழிகள் இப்போதும் சான்றுகளாக உள்ளன.

இந்தியாவின் தொன்மைக் குடியினர் திராவிடர் என மீட்டுருவாக்கம் செய்வதால் ஒரு தனிநாடாக அதனைக் கட்டமைத்து விட முடியாது; இருப்பினும் ஓர் இனத்தின் தொன்மையான, உண்மையான வரலாற்றை அறிந்து கொள்ளமுடியும். அதனை ஆளும் வர்க்கம் விரும்பவில்லை. பி.ஜே.பி. ஜோதிடத்தைப் பாடமாக்கியது. சமஸ்கிருத ஆண்டைக் கொண்டாடியது (தனித்து. ப.24).

இவை மட்டும் அல்லாமல் பொறியியல் படிப்பில் பகவத்கீதை இடம் பெறுகிறதாம். பரந்த அளவில் இளைஞர் மத்தியில் பொதுமைக் கோட்பாட்டைப் பரப்ப வேண்டும் என்றால் உலக அறிஞர்களே ஏற்றுக்கொண்ட உலகப் பொதுமறை எனப்படும் திருக்குறளைப் பாடமாக வைக்கவேண்டும்.

ஆய்வாளர் க.காமராசனின் நேர்காணலில் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் பதிவு செய்துள்ள கருத்துகளில் குறிப்பாகச் சில மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக எவைஎவை காலங்காலமாகப் புனிதமானவையாகப் போற்றப்பட்டனவோ அவை எல்லாம் மறுவாசிப்பில் மீளாய்வுக்கு உட்பட்டுக் கேள்விக் குறியைப் பெற்றுக் கொள்கின்றன.

அவை போன்றே எவை எவை தீண்டத் தகாதவையாகப் பார்க்கப் பட்டனவோ அவை எல்லாம் மறு ஆய்வுக்கு உட்பட்டு உன்னதமானவையாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. சமுதாயத்தில் நிகழ்ந்துள்ள மாற்றங்களையும் பேராசிரியர் சுட்டிக் காட்டுகின்றார்.

கணபதி ஹோமம்

முற்பட்ட இனத்தவர்கள் - குறிப்பாகப் பார்ப்பனர் வாழும் அக்கிரகாரத்தில் தண்ணீர் கேட்டால் குடிக்கக் கொடுப்பார்கள். அதனைப் பழைய நீராக்க ஒரு சொட்டு மோரை விட்டுக் கொடுப்பார்களாம். பாத்திரத்தைக் கீழே வைத்த பிறகு தண்ணீர் தெளித்துத்தான் எடுத்துக் கொண்டு போவார்கள். அதாவது பாத்திரத்தைத் தொட்ட தீட்டை நீரால் நீக்கி விட்டுத்தான் எடுப்பார்கள். 

அவர்களுக்காகவே அல்லும் பகலும் உழைப்பார்கள். மாடு மேய்ப்பார்கள்; சாணி அள்ளுவார்கள்; வயல் வேலை செய்வார்கள். கொல்லைப் பக்கத்தில் மிச்ச மீதியை அவர்களுக்காகவே உள்ள பயன்படாத மரக்கால், படியில்தான் ஊற்றிக் கொடுப்பார்கள். தீட்டு என்பது அவர்களுக்கு முதன்மையானது.

இப்போது ஏற்பட்டுள்ள சமுதாய வளர்ச்சியில் எல்லா இன மக்களும் மனை வாங்கி வீடு கட்டுகின்றார்கள். அவர்கள் முன்னோர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதவற்றை எல்லாம் அனுபவிக்கிறார்கள். எழுபது - அறுபது ஆண்டுகளுக்குப் பின்னர்க் கல்வி, விழிப்புணர்வு, இடஒதுக்கீடு போன்றவற்றால் ஏற்பட்டவைதான் இந்த வளர்ச்சி!

வசதி வாய்ப்புப் பெருகிய பிறகு, முற்பட்ட இனத்தவரிடம் முன்பு எதை எதைக் குறைகளாகக் கருதினார்களோ அவற்றை எல்லாம் மற்றவர்களும் பின்பற்ற ஆரம்பித்து விட்டார்கள். அவற்றுள் முக்கியமானது வரதட்சனை.

சாகுபடியை அடிப்படையாகக் கொண்ட குடும்பத்தினர், வலுத்த இடத்தில் மாட்டை வாங்க வேண்டும்; இளைத்த இடத்தில் பெண்ணை எடுக்க வேண்டும் என்பார்கள். வறுமைப்பட்ட இடத்தில் பிறந்த பெண்ணுக்குக் குடும்பப் பொறுப்பு இயல்பாக இருக்கும்; கூட்டுக் குடும்பத்தில் ஒத்து வாழ்வார் என்பவை முக்கிய நோக்கம். பெண்ணுக்கு நகைபோட்டு, கல்யாணத்திற்குப் பணம், நெல் கொடுத்துக் கட்டிக்கொண்டு வருவார்கள்.

வீடு கட்டிப் புதுமனை புகுவிழா கணபதி ஓமம் இல்லாமல் நிகழ்வதே இல்லை. இதுபற்றிப் பேராசிரியர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ‘கணபதி ஹோமம்’ என்பது பிராமணர்களின் சடங்கு. அதில் அந்த வீட்டைக் கட்டிய சூத்திரர்களால் உண்டான தீட்டுக் கழிக்கப்படுகிறது. இப்போது அந்தத் தீட்டுக்கு உரியவர்கள் என்று கருதப்பட்ட மக்களே அதைச் செய்வது வேடிக்கை அல்லவா? இப்படிச் சடங்குகள் பலவற்றுள்ளும் இருக்கும் மோசமான கருத்துக்களை அம்பலப்படுத்த வேண்டும். வழிபாடு என்பது வேறு; சடங்கு என்பது வேறு. சக மனிதனை இழிவுபடுத்துவதாகவே சடங்குகள் இருக்கின்றன (தனித்து. ப.162).

உழைக்கும் மக்கள் தீட்டானவர்கள்; அவர்களின் இரத்த வியர்வை சிந்திய உழைப்பின் பலனில் தீட்டில்லை. முட்டை அசைவம்; பால் சைவம். தேவையானவற்றுக்கு ஒரு நீதியும் தேவைப்படாதவற்றுக்கு ஒரு நீதியும் வகுக்கப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது அப்பாயிகள், அம்மாயிகள் கூறும் நண்டு வேணாம்; சாற்றினை ஊத்து என்னும் சொலவச் சொல்தான் நினைவில் வருகின்றது.

வளர்ச்சி

விடுதலைக்கு முன்பு, பின்பு எனப் பார்க்கும்போது கல்வி, பொருளாதாரம், வாழ்வியல் முறை, தொழில் என எல்லாவற்றிலும் ஓர் அசுர வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்தியா மட்டுமல்லாமல் உலகெங்கிலும் இந்த வளர்ச்சியைக் காணலாம். மறுபக்கம் பார்க்கும்போது, இந்த வளர்ச்சிக்காக இயற்கை வளங்கள் எவ்வளவு அழிக்கப்பட்டுள்ளன என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஒன்றை அழிக்காமல் ஒன்றைப் பெறமுடியாது எனக் கூறுவது பிற்போக்குச் சிந்தனை. காலங் காலமாக உலகெங்கிலும் வாழ்ந்த பல்லாயிரம் கோடி மக்கள் இயற்கை வளங்களைத் தேவைக்கு ஏற்ப ஆண்டு, அனுபவித்து வருங்காலச் சந்ததியினராகிய நமக்கு விட்டுச் சென்றுள்ளார்கள்.

தொழிற்புரட்சிக்குப் பிறகு உலக மக்களின் இயற்கைப் பயன்பாடு தேவைக்கு என்றில்லாமல் வணிக நோக்கமாக இருந்ததால் ஓசோன் படலத்தையே நாம் வெளியேற்றிய நச்சு வாயுகள் ஓட்டை போட்டு விட்டன. நிலம் மட்டும் இக்கட்டில் மாட்டிக் கொண்டு விழிக்கவில்லை; மக்களும் நோய் நொடியில் மாட்டிக்கொண்டு விழிக்கிறா£¢கள். உலகச் சுற்றுச் சூழல் காற்றில் கலந்த நச்சு வாயுவாலும் கடுமையான வெயிலாலும் மழையாலும் வறட்சியாலும் திணறிக் கொண்டிருக்கிறது.

விடுதலைக்கு முன் அந்நியரின் தொழிற்சாலைகள் இருந்தன. விடுதலைக்குப் பிறகு நேரு காலத்திலிருந்து தொழிற்சாலைகள் அதிகரித்தன. பசுமைப் புரட்சி கொண்டு வரப்பட்டது. ஒருபக்கம் வளர்ச்சி இருந்தாலும் இயற்கை வளங்கள் கண்மூடித் தனமாக அழிக்கப்பட்டன. அரசுக்கு வருவாயை விடத் தனியார்களே பெரும் பணக்காரர் ஆனார்கள்.

கூடங்குளம் மீத்தேன், கெயில், நியுட்டினோ திட்டங்கள், முதலாளித்துவப் பொருளாதார வளர்ச்சிக்குத் துணைபோகும் திட்டங்கள், வட மாநிலங்களில் காடு அழிப்பு, சுரங்கம் வெட்டுதல், ஆதிவாசிகளை வெளியேற்றல் என்பன நிகழ்கின்றன. இவை எல்லாமே பெரும் இந்திய நிறுவனங்களுக்காகவும் பன்னாட்டு நிறுவனங்களுக்காகவும் ஆளுவோரின் துணையுடன் நிகழ்கின்றன. வலியோர் எளியோரை அழிக்கும் இத்திட்டங்கள், மொழி, இன எல்லை கடந்தவை. ஒட்டு மொத்த இந்தியாவும் எதிர்க்க வேண்டிய திட்டங்கள் இவை (தனித்து. ப. 191).

நாட்டின் வளர்ச்சிக்கு என மிகப் பெருமிதத்தோடு பேசப்படுபவற்றை எல்லாம் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் மறுவாசிப்புக்கு உட்படுத்துகின்றார். மொழி, மதம் போன்றவற்றில் பாகுபாடு காட்டி வேற்றுமையை வளர்த்து விடுகின்றார்கள். ஆனால் இயற்கை வளச் சுரண்டலுக்கு ஒட்டுமொத்த இந்தியாவையும் பலி கொடுக்கின்றார்கள். சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுதவேண்டும் என்பார்கள். இந்தியா மட்டுமில்லை, அனைத்து நாடுகளுமே பூமியைக் குட்டிச் சுவராக்கிப் படம் காட்டிக் கொண்டிருக்கின்றன.

வல்லரசு என்றால் ஒரே குண்டால் உலகத்தையே அழிக்கும் வல்லமை பெற்றிருக்க வேண்டும். மழை மேகத்தைவிடப் போர் மேகமே உலகைச் சூழ்ந்து கொண்டிருக்கின்றது. பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனின் நேர்காணல் நூலான தனித்து ஒலிக்கும் குரல் மட்டுமல்லாமல் பேராசிரியர் ந.முத்துமோகன் நேர்காணலில் உருவான தமிழ்ச் சூழல்களில் ஆய்வும் அரசியலும் என்னும் நூலும் விரிந்த பாதையைக் காட்டுகின்றது.

ஒட்டு மொத்தமாகச் சொல்ல வேண்டும் என்றால் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனின் எழுத்துக்கள் நாட்டுப்புறவியல், கல்வெட்டியல், அரசியல், வரலாறு தொடர்பானவை. புலமையையும் இடதுசாரிச் சிந்தனையும் இடம், வலமாகக் கட்டிக் கொண்டதால்தான் அறிவுப் புலத்தில் ஆழமாகவும் அகலமாகவும் உழ முடிகின்றது.

உண்மையை உரத்துப் பேச விரும்புவோர் - குறிப்பாக, இளம் தலைமுறையினர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனின் ஆக்கங்களைத் தேடிப்பிடித்துப் படிக்க வேண்டும்.

அண்மையில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மதிப்புறு முனைவர் பட்டம், கனடா நாட்டின் விளக்கு விருது பெற்றமைக்காகவும் வாழ்த்தி, வணங்குவோம்.

தனித்து ஒலிக்கும் குரல்
ஆ.சிவசுப்பிரமணியனின் நேர்காணல்கள்
தொகுப்பும் பதிப்பும்: க. காமராசன்
` 215/-
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

தமிழ்ச் சூழல்களில்
ஆய்வும் அரசியலும்
பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனுடனான
ந.முத்துமோகனின் நேர்காணல்கள்
` 160/-
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

Pin It