மேரி கேப்ரியேல் எழுதிய “காதல் - மூலதனம்: கார்ல் மற்றும் ஜென்னி மார்க்ஸ், ஒரு புரட்சியின் பிறப்பு” என்ற நூல் அறிமுகம்
அறிமுகம்
நவீன உலகின் வரலாற்றை மாற்றியமைத்த சிந்தனைகளுக்குச் சொந்தக்காரர் மார்க்ஸ். மார்க்சின் புரட்சிகரக் கருத்துநிலைகள் எவ்வாறு உருப்பெற்றன? அவை நூலகத்தில் தனித்தொதுங்கிய மேதையினால் உருவாக்கப்பட்டனவா? அல்லது கார்ல் மார்க்சைச் சூழ்ந்திருந்து அவரை நேசித்த, அவரைப் பாதுகாத்த, அவரால் நேசிக்கப்பட்ட பெண்களின் போராட்டங்களுக்கும் அரசியல் செயல்பாடுகளுக்கும் மத்தியில் அவை உருவாயினவா?
கார்ல் மார்க்ஸ் வாழ்ந்து மறைந்த 35 ஆண்டுகளுக்குள், மார்க்சியம் ஐரோப்பாவின் மிகப் பெரிய, மிகப் பிற்போக்கான நாடான ரசியாவில் முதலாளிகளின் ஆட்சியைத் தூக்கி எறிவதற்கு வழிகாட்டியது. மார்க்சின் கருத்துநிலைகளைப் பற்றிக் கொண்டு ரசியாவில் பாட்டாளிகளின் அரசை நிறுவினர், ரசியத் தொழிலாளர்கள். அதற்கடுத்த 35 ஆண்டுகளில், அதாவது மார்க்ஸ் மறைந்த 70 ஆண்டுகளுக்குள், உலகின் மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தன. அவை, கார்ல் மார்க்சின் அறிவியல் சோசலிசத்தைத் தமது பதாகையில் பொறித்தவை. உலகெங்கும் மார்க்சியக் கருத்தியல் தொழிலாளி வர்க்கத்தின் கருத்தியலாக ஆகியிருந்தது.
அந்தப் பரபரப்பான, எழுச்சியூட்டும் ஆண்டுகளில் இருந்து இரண்டு தலைமுறைகளுக்குப் பின்னர் வாழ்கின்றனர், இன்றைய ஜென் சி தலைமுறையினர். இந்த இளைய தலைமுறையினருக்கு மார்க்ஸ் யார்? மானிடத்தின் மகத்தான புதல்வர் கார்ல் மார்க்சின் வாழ்நாள் பணியை அவர்கள் எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்? இந்தியாவில், கடந்த 100 ஆண்டுகளாக உழைக்கும் மக்களுக்காகப் போராடி மார்க்சியத்தையும் கம்யூனிசக் கனவையும் உயிர்ப்போடு வைத்திருக்கும் மூத்தத் தலைமுறை தோழர்கள் மார்க்சை அணுகிய அதே முறையில் இன்றைய இளைய தலைமுறையினர் அணுகுவார்களா? மார்க்ஸ் என்ற மனிதரின் வாழ்வும் வளர்ச்சியும் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் கோபமும் கவலையும் வருத்தமும் அச்சமும் என்ற பின்புலத்தில் மார்க்சின் வரலாற்றுப் பணியைப் புரிந்து கொள்ள அவர்கள் விரும்புவார்களா?
அத்தகைய ஒரு வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறார் மேரி கேப்ரியேல். 21 ஆம் நூற்றாண்டில் வாழும் அமெரிக்கப் பெண்ணின் பார்வையில் இருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டில் மார்க்சும் அவரது வாழ்க்கைத் துணையராகவும் சக அரசியல் போராளியாகவும் புரட்சிகரத் தோழராகவும் வாழ்ந்த ஜென்னியும் நடத்திய போராட்டங்களைப் பற்றி எழுதியிருக்கிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் புரட்சிகர வரலாற்றை மார்க்ஸ் பெண்களின் வாழ்க்கையின் ஊடாக பெண்களின் பார்வையில் முன் வைக்கிறார் மேரி கேப்ரியேல். அந்த வகையில், மார்க்சின் வரலாற்றைப் பேசும் மரபில் இது ஒரு புதிய முயற்சி எனலாம்.
மேரி கேப்ரியேல்
மேரி கேப்ரியேல் ஓர் அமெரிக்கப் பத்திரிகையாளர். ஐரோப்பாவில் பல நாடுகளில் பணி புரிந்தவர். பெண்களுக்கு வாக்குரிமை கோரும் இயக்கத்துக்குத் தலைமை வகித்து 1872 ஆம் ஆண்டு அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட விக்டோரியா வுட்ஹல் பற்றிய நூலையும் (Notorious Victoria - 1998) ஆண்கள் ஆதிக்கம் செலுத்திய கலையுலகில் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய அமெரிக்காவில் தமது முத்திரை பதித்த ஐந்து பெண் ஓவியர்களைப் பற்றியும் (Ninth Street Women - 2018) நவீன காலத்தின் மாபெரும் ஆளுமையான பாடகி மடோனாவைப் பற்றியும் (Madonna: A Rebel Life - 2023) நூல்களை எழுதியுள்ளார்.
ஒரு பத்திரிகைக் குறிப்பில், மார்க்சின் மூன்று மகள்களில் இருவர் தற்கொலை செய்து கொண்டனர் என்று படித்திருக்கிறார், மேரி கேப்ரியேல். ஹைகேட் கல்லறையில் கல் உருவமாகப் பொறிக்கப்பட்டுள்ள தத்துவப் பேரறிஞர் மார்க்சின் வாழ்க்கையில் இடம்பெற்ற பெண்களைப் பற்றிய இந்தத் தகவல் அவரது ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. அவர், மார்க்ஸ் குடும்பத்தினர் தொடர்புடைய நூற்றுக்கணக்கான அரசியல் கடிதங்களையும் குடும்பக் கடிதப் போக்குவரத்துகளையும் தேடிப் பிடித்து ஆய்வு செய்து ஒரு வரலாற்றை எழுதியிருக்கிறார்.
மார்க்ஸ் குடும்பத்துப் பெண்களைப் பற்றி
மார்க்சின் வாழ்க்கைத் துணைவி ஜென்னியும் அவர்களது மூன்று மகள்களும் மார்க்சின் புரட்சிகர வாழ்க்கையில் இரண்டறக் கலந்தவர்கள். அவர்கள் எதிர்கொண்ட போராட்டங்களைப் பற்றியும் மார்க்சையும் அவரது அறிவுப் பணியையும் பாதுகாத்து முன்னெடுத்துச் செல்வதற்கு இவர்கள் ஆற்றிய பணிகளைப் பற்றியும் விவரிக்கிறது மேரி கேப்ரியேலின் நூல். மார்க்ஸ் குடும்பப் பெண்கள் கார்ல் மார்க்சுக்குச் செயலாளர்களாகவும் உதவி ஆராய்ச்சியாளர்களாகவும் அவரது அரசியல் பிரதிநிதிகளாகவும் பணியாற்றினர். அது மட்டுமின்றி, தம்மளவில் அரசியல் செயல்பாட்டாளர்களாகவும் எழுத்தாளர்களாகவும் பங்களிப்பு செய்துள்ளனர்.
யார் இந்த ஜென்னி? மார்க்ஸ் என்ற முரட்டுக் குதிரையைக் கைப்பிடித்து வாழ்நாள் முழுவதும் அவரோடு இணைபிரியாமல் வாழ்ந்த அந்தப் பெண்மணி யார்? ஜென்னி வான் வெஸ்ட்ஃபாலென் கார்ல் மார்க்சின் குழந்தைப் பருவத் தோழி. அவர்கள் இருவரும் பிறந்த டிரையர் நகரில் ஒரு பிரபுக்குலக் குடும்பத்தின் மகள். ஜென்னியின் தந்தை வெஸ்ட்ஃபாலன் மார்க்சின் ஞானத்தந்தை. மார்க்சை விட நான்கு வயது மூத்தவரான ஜென்னி, டிரையர் நகரில் புகழ்பெற்ற அழகிய இளம்பெண். அவர் மார்க்சின் அறிவாற்றலையும் புரட்சிகர உணர்வையும் நேசித்து அவரைத் திருமணம் புரிந்து கொண்டார்.
பிரான்சிலும் ஜெர்மனியிலும் பிரஸ்ஸல்சிலும் நிகழ்ந்த 1848-49 புரட்சிகர எழுச்சிகளின் போது மார்க்சின் சக போராளியாக உடன் நின்றார், ஜென்னி. மார்க்ஸ் உருவாக்கிய கம்யூனிஸ்ட் லீக்கின் பிரஸ்ஸல்ஸ் கிளையின் முதல் உறுப்பினர் ஜென்னி. மார்க்சின் அரசியல் ஆய்வுப் பணியில் அவரது உதவியாளராகவும் அவரது கருத்துகளை விமர்சித்து உரையாடும் துணையராகவும் விளங்கினார் ஜென்னி. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை முதலான மார்க்சின் சகாப்தகரமான ஆக்கங்களைப் படியெடுத்து அச்சுக்கு அனுப்பும் பணியாற்றினார் ஜென்னி.
1844 ஆம் ஆண்டில் பிரஷ்ய மன்னர் மீது ஒரு கொலை முயற்சி நடந்தது. அப்போது பிரஷ்யாவில் பயணம் மேற்கொண்டிருந்த ஜென்னி, கொலை முயற்சி செய்தவரின் சமூகப் பின்னணி பற்றியும் கொலைக்கான சமூகக் காரணங்கள் பற்றியும் மார்க்சுக்குக் கடிதம் எழுதினார். மார்க்ஸ் அந்தக் கடிதத்தைப் பத்திரிகையில் வெளியிட்டார். 1870களில் இலண்டனில் வசித்தபோது ஆங்கில நாடகத் துறை குறித்தும் பண்பாட்டு வாழ்க்கைக் குறித்தும் ஜென்னி கட்டுரைகள் எழுதினார். மார்க்சின் குடும்பம் இலண்டனில் கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்த போதும் பிற்காலத்தில் குறிப்பாக பாரிஸ் கம்யூனின் வீழ்ச்சிக்குப் பிறகும் சோசலிஸ்டு ஏதிலிகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டினார் ஜென்னி. ஐரோப்பாவின் புரட்சிகரப் போராளிகள் மார்க்சின் அரசியல் புகலிடத்தை மட்டுமின்றி அவரது குடும்பத்தின் பரிவான பேணுதலையும் பெற்றார்கள். மார்க்ஸ் இறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஜென்னி காலமானார்.
முதல் குழந்தை, மூத்தக் குழந்தை பெற்றோருக்கு நெருக்கமானது. ஜென்னி - மார்க்ஸின் மூத்த மகள், ஜென்னி கரோலின் மார்க்ஸ், ஜென்னிச்சென் என்று அழைக்கப்பட்டார். அவர் மார்க்ஸ்-ஜென்னியின் தொடக்கக் கால அரசியல் போராட்டங்கள் தொடங்கி பாரிஸ் கம்யூன் வரையிலும் அதற்குப் பின்னரும் தனது குடும்பத்தின் புரட்சிகர அரசியல் சூழலில் வாழ்ந்தார். அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அவர் மார்க்சின் அரசியல் பணிகளில் செயலாளராக உதவினார். பன்னாட்டு உழைப்பாளர் சங்கத்தின் (IWMA) உதவியாளராகப் பணியாற்றினார்.
1870 இல் “ஜே. வில்லியம்ஸ்” என்ற புனைப்பெயரில் அவர் எழுதிய கட்டுரைகள், ஆங்கிலச் சிறைகளில் அயர்லாந்து விடுதலைப் போராட்டக் கைதிகள் அனுபவித்த கொடுமைகளை உலகிற்கு அம்பலப்படுத்தியது. அவை ஏற்படுத்திய தாக்கத்தினால் பிரித்தானிய அரசாங்கம் ஒரு நாடாளுமன்றக் குழுவின் விசாரணைக்கு ஆணையிட்டது. அதன் விளைவாக, அந்தக் கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.
1872 ஆம் ஆண்டு ஜென்னிச்சென் பிரெஞ்சு சோசலிஸ்டான சார்லஸ் லொங்கேவைத் திருமணம் செய்து கொண்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் தனது 38ஆவது வயதில், மார்க்ஸ் இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர், பிரான்சில் காலமானார். அவரது மகன் ஜான் (ஜானி), பிரெஞ்சு சோசலிச இயக்கத்தின் முக்கியத் தலைவராக விளங்கினார். மற்றொரு மகனான மார்செலும் சோசலிசக் கட்சியில் தீவிரமாகப் பணியாற்றினார். மகள் மெமே ஒரு ஓபரா பாடகியாகத் திகழ்ந்தார்.
மார்க்ஸ் - ஜென்னியின் இரண்டாவது மகள் லாரா அழகுணர்ச்சி மிக்கவர். அவர் இளம் வயதிலேயே லாரா மார்க்சின் ஆய்வு உதவியாளராகச் செயல்படத் தொடங்கினார். இலண்டன் அருங்காட்சியக நூலகத்தில் தனது தந்தைக்கு முழுநேர ஆய்வு உதவியாளராகப் பணிபுரிந்தார். 1868 ஆம் ஆண்டு லாரா, பிரெஞ்சு சோசலிஸ்டு பால் லஃபார்கைத் திருமணம் செய்து கொண்டார். லாராவும் பால் லஃபார்கும், மார்க்சியத்தை பிரான்சிலும் ஸ்பெயினிலும் பரப்புவதில் முக்கியப் பங்கு வகித்தனர். மார்க்சிய இலக்கியத்தை பிரெஞ்சு மொழிக்கு பெயர்ப்பதில் தலைசிறந்தவர் லாரா என்று எங்கெல்ஸ் கருதினார். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் முதலியவற்றை லாரா பிரெஞ்சு மொழிக்குப் பெயர்த்தார். மூலதனம் நூலின் முன்னுரையை பிரெஞ்சு மொழிக்கு மொழிபெயர்ப்பதில் தனது கணவருடன் இணைந்து பணியாற்றினார். 1887 இல் பாரிஸில் சோசலிசம் குறித்து ஒரு முக்கியக் கட்டுரையை எழுதினார்.
லாரா, பால் லஃபார்க் இணையர் 1911 ஆம் ஆண்டு பாரிசில் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களது இறுதி ஊர்வலத்தில் ஐரோப்பா முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான சோசலிஸ்டுகள் கலந்து கொண்டனர். அஞ்சலி நிகழ்ச்சியில் ரசியாவின் போல்ஷ்விக் கட்சித் தலைவர் உரையாற்றினார்.
மார்க்ஸ்-ஜென்னி இணையரின் மூத்த மகள் ஜென்னியும் இரண்டாவது மகள் லாராவும் இலக்கிய, கலைப் பணிகளில் ஈடுபட்டனர் என்றால் அவர்களது இளைய மகள் எலியனார் “டுஸ்ஸி” தெருப் போராட்டங்களிலும் கூட தனது முத்திரையைப் பதித்தார். 1884 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் சோசலிச லீக் அமைப்பை உருவாக்கிய உறுப்பினர்களில் ஒருவராக அவர் இருந்தார். பிரிட்டிஷ் தொழிற்சங்க இயக்கத்தில் முக்கியப் பங்காற்றினார். 1886 ஆம் ஆண்டில், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 12 வாரங்கள் பயணம் செய்து மார்க்சிய சோசலிசத்தைப் பரப்புரை செய்தார். 1889-இல் நடந்த இலண்டன் துறைமுகத் தொழிலாளர் வேலைநிறுத்தத்தை ஒருங்கிணைப்பதில் பெரும் பங்குவகித்தார். 1890-இல் ஹைட் பூங்காவில் நடந்த முதல் மே நாள் பேரணியில் உரையாற்றினார்.
குஸ்டாவ் ஃபிளாபர்ட்டின் ‘மேடம் போவரி’ (Madame Bovary) நாவலையும் ஹென்ரிக் இப்சனின் நாடகங்களையும் அவர் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தார். ‘பெண்கள் சிக்கல்’ (The Woman Question - 1886), ‘அமெரிக்காவில் உழைக்கும் வர்க்க இயக்கம்’ (1888) ஆகிய நூல்களை, எட்வர்ட் எவ்லிங்குடன் இணைந்து எழுதினார். மார்க்ஸ், எங்கெல்ஸின் மறைவுக்குப் பிறகு, தந்தையின் கையெழுத்துப் படிகளைப் பதிப்பிக்கும் பொறுப்பை ஏற்றார். மார்க்ஸின் ‘கூலி, விலை, இலாபம்’ (Value, Price and Profit) போன்ற பல ஆக்கங்களைத் தொகுத்துப் பதிப்பித்தார். 1898 ஆம் ஆண்டு, எட்வர்ட் எவ்லிங்குடன் ஏற்பட்ட மனப் பிணக்கு காரணமாக, தனது 43 ஆவது வயதில் தற்கொலை செய்து கொண்டார்.
நூலுக்கான ஆதாரங்கள்
இவ்வாறு, மார்க்சின் புரட்சிகர அரசியல் வரலாற்றின் பின்புலமாகவும் உறுதுணையாகவும் இருந்த அவரது குடும்பத்தின் முழுமையான கதையை மேரி கேப்ரியேல் சொல்கிறார்.
மார்க்ஸ் குடும்பத்தினரும் அவர்களுடன் தொடர்புடையவர்களும் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிய ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்ட கடிதங்களை கேப்ரியேல் திரட்டினார். இந்த ஆவணங்கள் மூலம் “அவர்களது அன்றாட உரையாடல்களுக்குச் செவிமடுக்க” அவரால் முடிந்தது. நிகழ்வுகளைக் காலவரிசைப்படி மீள்கட்டமைக்க முடிந்தது. ரசியாவில் உள்ள “அரசு சமூக மற்றும் அரசியல் வரலாற்றுக் காப்பகத்திலிருந்து” (RGASPI) ஆவணங்களைப் பெறுவதற்கு அவர் அனுமதி பெற்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பக்கங்களைக் கொண்ட குடும்பக் கடிதங்களை அவர் படித்துப் பார்த்திருக்கிறார். அவற்றில் பல ஆங்கிலத்தில் இதுவரை வெளியிடப்படாதவை. மேலும், குண்டு துளைக்காத பெட்டகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த மூல ஆவணங்களை அவர் பார்வையிட்டார்.
நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள “பன்னாட்டு சமூக வரலாற்றுக் கழகத்திலிருந்து” (IISG) குடும்பக் கடிதங்கள் மற்றும் புகைப்படங்களின் மற்றொரு குறிப்பிடத்தக்க தொகுப்பை அவர் பெற்றார். ஜென்னி மார்க்சுக்கும் அவரது சகோதரர்களுக்கும் இடையிலான உறவை நன்கு புரிந்துகொள்ள, ஜெர்மனியில் உள்ள ஹாம்பர்க்கின் அரசுக் காப்பகம், சாக்சனி-அன்ஹால்ட் முதன்மை தேசியக் காப்பகம், டெசாவ் முதலியவற்றில் உள்ள கோப்புகளை அவர் பயன்படுத்தினார்
இங்கிலாந்தின் இலண்டனில் உள்ள மார்க்ஸ் நினைவு நூலகம், பிரிட்டிஷ் செய்தித்தாள் நூலகம், பிரிட்டிஷ் நூலகம் (குறிப்பாக ஜார்ஜ் பெர்னாட் ஷா, ஹேவ்லாக் எல்லிஸ் ஆகியோரின் ஆவணங்கள்) முதலியவற்றை அவர் பயன்படுத்தினார். கார்ல் மார்க்ஸ், ஃபிரெட்ரிக் எங்கெல்ஸின் தொகுதி நூல்களை பெரிதும் சார்ந்திருந்தார். டேவிட் மக்லெல்லன் (மார்க்ஸ்), டெரெல் கார்வர் (எங்கெல்ஸ்), யுவோன் காப் (எலியனார் மார்க்ஸ்), லெஸ்லி டெர்ஃப்லர் (பால் லஃபார்க்) போன்ற அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்களையும் அவர் பயன்படுத்தினார்.
மார்க்ஸின் வழித்தோன்றல்களான ஃப்ரெடெரிக், சிமோன் மற்றும் அன்னே லாங்டே-மார்க்ஸ் முதலியோரை அவர் நேர்முகம் கண்டார். புகழ்பெற்ற மார்க்ஸ் அறிஞர்களுடனான கலந்தாய்வுகள் நடத்தினார். நியூயார்க் டெய்லி டிரிப்யூன், லண்டன் டைம்ஸ், லா மார்சேய்ஸ் உள்ளிட்ட அக்காலத்தியப் பன்னாட்டுச் செய்தித்தாள்களை ஆய்வு செய்தார்.
மார்க்சின் குடும்ப உறவுகளாக 30 பேரும், மார்க்சுடன் செயலாற்றிய அரசியல் தோழர்களும் அவர்களது உறவுகளும் என 66 பேரும் மார்க்சின் வாழ்வில் இடம்பெற்ற பிற மனிதர்கள் 170 பேரும் மார்க்சின் சமகால ஆட்சியாளர்கள் அரசியல்வாதிகள் 50 பேரும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கடந்த காலத்து பாத்திரங்களாக 24 பேரும் என மொத்தம் 353 பேர் இந்த நூலில் இடம்பெறுகின்றனர்.
இந்தப் பரந்து விரிந்த ஆய்வு மூலம் கார்ல் மார்க்சின் பத்திரிகைத் துறைப் பணிகள், ஆய்வுப் பணிகள், தொழிலாளி வர்க்க அமைப்புப் பணிகள், மூலதனம் நூலை எழுதும் பணி முதலியவற்றிலிருந்து பிரிக்க முடியாத அவரது குடும்ப வாழ்வை மேரி கேப்ரியேல் காட்சிப்படுத்துகிறார்.
மார்க்சின் அரசியல் வாழ்வின் பின்புலமாக குடும்ப வாழ்க்கை
மார்க்ஸ் குடும்பத்தைப் பொறுத்தவரை அரசியல் எழுச்சிகளும் புரட்சிகளும் புத்தகங்களிலோ செய்தித் தாள்களிலோ படிப்பவை மட்டும் அல்ல. அவை அவர்களது அன்றாட வாழ்வோடு பின்னிப் பிணைந்தவை. 1848-49 ஐரோப்பியப் புரட்சி எழுச்சிகளின் தோல்விக்குப் பின்னர் ஜெர்மனியில் இருந்தும் பிரான்சில் இருந்தும் பெல்ஜியத்தில் இருந்தும் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டு ஏதிலியாக இலண்டனில் குடியேறியது அந்த இளம் குடும்பம். கிரிமியப் போரும் அமெரிக்க உள்நாட்டுப் போரும் மார்க்சின் பத்திரிகைக் கட்டுரைகளை மட்டுமின்றி, குடும்பத்தின் வருமானத்தையும் பாதித்தன. 1870 இல் பாரிஸ் கம்யூன் மார்க்ஸின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதுவரையில், நெருங்கிய வட்டத்துக்கு வெளியில் அறியப்படாதிருந்தார், மார்க்ஸ். மார்க்ஸ் வழிகாட்டி வந்த பன்னாட்டு உழைக்கும் மக்கள் சங்கம் பாரிஸ் கம்யூனில் முக்கியப் பங்காற்றியது. மார்க்ஸ் பாரிஸ் கம்யூனை ஆதரித்து சங்கத்தில் (பிரான்சில் உள்நாட்டுப் போர் என்ற நூலாக வெளிவந்தது) தொடர் உரையாற்றினார். அவருக்கு “சிவப்பு பயங்கரவாத டாக்டர்” என்று முதலாளித்துவ ஊடகங்கள் பெயர் சூட்டின. இரத்த ஆற்றில் மூழ்கடிக்கப்பட்டு கம்யூன் வீழ்த்தப்பட்டது. ஊடகங்கள் மார்க்ஸை “புரட்சியின் தீய வடிவமைப்பாளர்” என்றும், பாரிஸ் மக்களின் “சூத்திரதாரி” என்றும் அவதூறு செய்தன.
இவை அனைத்திலும் ஜென்னியும் அவரது மகள்களும் வெறும் பார்வையாளர்களாக இருக்கவில்லை. அவர்கள் இந்த நிகழ்வுகளில் தீவிரமாகப் பங்கேற்றனர். அவர்கள் மார்க்சின் ஆய்வு உதவியாளர்களாகவும் செயலர்களாகவும் மொழிபெயர்ப்பாளர்களாகவும் அரசியல் செயல்பாட்டாளர்களாகவும் இருந்தனர் என்று ஏற்கெனவே பார்த்தோம்.
எடுத்துக்காட்டாக, பாரிஸ் கம்யூனின் வீழ்ச்சிக்குப் பிறகு பிரான்சில் வாழ்ந்து வந்த லாரா மார்க்சும் அவரது துணைவர் பால் லஃபார்கும் அரசு அதிகாரிகளால் துரத்தப்பட்டனர். அப்போது இலண்டனில் இருந்து பிரான்சுக்குச் சென்றார் மார்க்சின் மூத்த மகள் ஜென்னிச்சென். தனது தங்கை லாராவை மீட்க மாறுவேடத்தில் சென்ற அவர், போலீஸ் அச்சுறுத்தல்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு லாராவை இலண்டனுக்கு அழைத்து வந்தார்.
ஆண்களைப் பற்றிய மேரி கேப்ரியேலின் பெண்ணிய விமர்சனம்
மேரி கேப்ரியேல், போற்றித் துதிபாடும் நோக்கில் இந்த வரலாற்றை எழுதவில்லை. இதன் கதை மாந்தர்கள், குறிப்பாக ஆண்கள் எவ்வாறு வாழ்ந்தனர் என்பது பற்றிய கூர்மையான பெண்ணியப் பார்வையில் ஒட்டுமொத்தக் கதையையும் சொல்கிறார். அதன் போக்கில் இந்த வரலாற்றில் வரும் ஆண்களின் பொறுப்பின்மையையும் பெண்களின் துயரங்களைப் புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்ளும் போக்கையும் கடுமையாகவும் நயமாகவும் சுட்டிக் காட்டுகிறார், மேரி கேப்ரியேல். மார்க்ஸ் மீதும் எங்கெல்ஸ், சார்லஸ் லொங்கே, பால் லஃபார்க், எட்வர்ட் எவ்லிங், ஃபெர்டினாண்ட் லஸ்ஸால், மிகையில் பக்கூனின் என மார்க்சின் வாழ்வில் வரும் அனைத்து ஆண்களின் மீதும் தனது கூர்மையான பெண்ணியப் பார்வையிலான விமர்சனத்தை வைக்கிறார், மேரி கேப்ரியேல்.
மார்க்சின் சொந்த வாழ்க்கையில் ஹெலன் டெமுத் என்ற ஜென்னி-மார்க்ஸ் குடும்பத்தின் நண்பர் பற்றிய ஒரு முக்கியமான குற்றச்சாட்டைப் பதிவு செய்கிறார். மார்க்ஸ் மீதான இந்தத் தனிப்பட்ட குற்றச்சாட்டை நூலின் முதல் பத்தியில் தொடங்கி இறுதி வரை வளர்த்துச் செல்கிறார். ஹெலன் டெமுத் டிரையர் நகரில் ஒரு ரொட்டி தயாரிக்கும் குடும்பத்தில் பிறந்தார். அவர் 11 வயதில் ஜென்னி குடும்பத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்ய அனுப்பி வைக்கப்பட்டார். 1845 ஆம் ஆண்டில் அவர் ஜென்னிக்கு உதவியாக பிரஸ்ஸல்சில் மார்க்ஸ் குடும்பத்துடன் இணைந்தார். ஹெலன் டெமுத்துக்கு 1851 ஆம் ஆண்டில் ஒரு மகன் பிறந்தார் (ஃபிரெடரிக் டெமுத்). குழந்தையின் தந்தை யார் என்பது அறிவிக்கப்படவில்லை. ஃபிரெடரிக் டெமுத்தின் தந்தை யார் என்ற கேள்வியை முன்வைத்து கடந்த 150 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் கிசு கிசு கதையையும் மேரி கேப்ரியேல் பதிவு செய்கிறார்.
ஹெலன் டெமுத் தொடர்பான இந்தக் குற்றச்சாட்டு உண்மையா இல்லையா என்பதை உறுதி செய்வது இயலாத ஒன்று. இந்தக் குற்றச்சாட்டுக்கு நேரடி ஆதாரம் எதுவும் இல்லை. தொடர்புடைய யாரும் தங்களது வாழ்நாளில் இந்தச் சிக்கலை எழுப்பவில்லை. உலகையே மாற்றியமைத்த கருத்துகளுக்குச் சொந்தக்காரரான மார்க்சின் அரசியல் மரபுக்கு இது போன்ற சிக்கல்கள், அவை எவ்வளவு பரப்பானவையாக இருந்தாலும், தொடர்பற்றவை என்று நாம் வாதிடலாம். மேரி கேப்ரியேல் இதனை நூலில் சேர்த்தது வரலாற்றுக் காரணங்களால் அல்லாமல் வாசகரின் ஆர்வத்தைக் கட்டிப் போடுவதற்கான பரபரப்புக்காகவே என்றும் கூட கூறலாம்.
மார்க்சின் இளைய மகள் எலியனாரின் துணைவராக இருந்த எட்வர்ட் எவ்லிங்கின் நடத்தை மீது மேரி கேப்ரியேல் கடும் தாக்குதல் தொடுக்கிறார். பணத்தைக் கையாளுவதில் அவரது கவனமின்மை, பெண்களுடனான உறவில் அவரது திமிர்த்தனம், அரசியலை தனது சொந்த நோக்கத்துக்காகப் பயன்படுத்துவது, இறுதியில் எலியனாரை இறுதி முடிவுக்குத் தள்ளும் வகையில் நடந்து கொண்ட குற்றச்செயல் என்று எவ்லிங்கை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறார், மேரி கேப்ரியேல்.
தொகுப்பாக,
கார்ல் மார்க்சின் வாழ்க்கையின் புரட்சிகர உள்ளடக்கத்தைச் செறிவாக்கியதும் சாத்தியமாக்கியதும் அவரது வாழ்வில் இடம்பெற்ற பெண்கள். அவர்கள் மார்க்சின் உதவியாளர்களாக மட்டுமின்றி, தம்மளவிலேயே போராளிகளாகவும் இலக்கியப் பங்களிப்பாளர்களாகவும் வாழ்ந்தனர். மார்க்ஸ் கதையில் வரும் மாந்தர்கள் அனைவரும் மானிடக் குறைபாடுகளோடு வாழ்ந்தனர்; அவற்றைத் தாண்டி உலக வரலாற்றைப் படைக்கும் அருஞ்செயல்களைச் செய்தனர். இது மார்க்சுக்கும் எங்கெல்சுக்கும் மட்டுமின்றி, ஜென்னி மார்க்சுக்கும் மார்க்ஸ் இணையரின் மூன்று மகள்களுக்கும் பொருந்தும்.
வரலாறு என்பது அதில் முன்நிறுத்தப்படும் ஆண்களால் மட்டும் ஆனதில்லை; அந்த ஆண்களுக்கு உயிர் கொடுத்து, உருக்கொடுத்து ஆதரிக்கும் பெண்கள் வரலாற்றில் தவிர்க்க முடியாத இடம் பிடிக்கிறார்கள். அவர்களுக்கு உரிய இடத்தைக் கொடுக்கிறது மேரி கேப்ரியேலின் நூல்.
நவீன உலகை வடிவமைத்த மார்க்ஸ் என்ற மாமனிதரைப் பற்றிய மிகவும் மனிதாபிமானமிக்க, முழுமையான புரிதலை கேப்ரியல் வழங்குகிறார். வரலாறு என்பது ‘மகத்தான மனிதர்களால்’ மட்டும் உருவாக்கப்படுவதில்லை; அத்தகைய மனிதர்கள் உலகை மாற்றியமைக்கத் தேவையான சூழலையும் இடத்தையும் அமைத்துக் கொடுத்த குடும்பங்களும், வெளியுலகிற்குத் தெரியாத அவர்களது குடும்பப் பெண்களும் அந்த வரலாற்று உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர் என்பதை அவர் நமக்கு நினைவுபடுத்துகிறார்.
- மா.சிவகுமார்