thiruma budhaviharசில தினங்களுக்கு முன்னால் திருமாவளவன் அவர்கள் "பட்டியலின, பழங்குடி மக்கள் மதமும், சாதியுமில்லாத மண்ணின் மைந்தர்கள், ஆனால், இந்து பெரும்பான்மை எனக் காட்டுவதற்காக அவர்களை இந்து பட்டியலில் இணைத்து, சான்றிதழ் வழங்கி வருகிறோம். இதுவே அவர்களுக்கு செய்யப்படும் மிகப் பெரிய துரோகம். எனவே, இவர்கள் அனைவரையும் பூர்வ பவுத்தர்கள் என அறிவிக்க அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்" என்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். உத்தரப் பிரதேசத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்களை எஸ்டி பட்டியலில் சேர்ப்பது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போது திருமாவளவன் அவர்கள் இந்தக் கருத்தை பதிவு செய்தார்.

மேலும் எனவே, அம்பேத்கர், அயோத்திதாச பண்டிதர் விரும்பியபடி இவர்கள் இந்துக்கள் இல்லை என்பதை பிரகடனப்படுத்த வேண்டும் அல்லது இவர்கள் அனைவரையும் பூர்வ பவுத்தர்கள் என அறிவிக்க அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

பெளத்தம் பற்றிய அம்பேத்கரின் கருத்துக்கும், அயோத்திதாச பண்டிதரின் கருத்துக்கும் பெரிய வித்தியாசமில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே போல அவர்கள் யாரை பூர்வ பெளத்தர்கள் என்று அடையாளப்படுத்தினார்கள் என்பதிலும் பெரிய வித்தியாசமில்லை.

அம்பேத்கரின் நோக்கம் இந்தியாவில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலை தானேயொழிய பழங்குடியின மக்களின் விடுதலையாக எப்போதுமே இருந்தது இல்லை. அதுமட்டுமல்ல பழங்குடியின மக்கள் பற்றிய அவரது பார்வையும் மோசமானதாகவே இருந்தது.

“ஒரு கோடியே முப்பது லட்சம் மக்கள் நாகரீகத்தின் நடுவே வாழ்ந்தாலும் இன்னமும் காட்டுமிராண்டித்தனமான நிலையிலேயே பரம்பரைக் குற்றவாளிகளாக வாழ்ந்து வருகின்றனர்… இந்துக்கள் பழங்குடி மக்களின் இந்த காட்டுமிராண்டி நிலைக்கு அவர்களின் பிறவி முட்டாள்தனத்தைக் குற்றம் சாட்டக்கூடும். அவர்களுக்கு பழங்குடியின மக்கள் காட்டுமிராண்டிகளாய் வாழ்வதற்குக் காரணம் அவர்களை யாரும் சென்று நாகரீகப்படுத்த முயலவில்லை, அவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்கவில்லை, அவர்களைச் சீர்திருத்தவில்லை, நல்ல குடிமக்களாக ஆக்கவில்லை என்பது ஏற்றுக் கொள்ள முடியாது… பழங்குடிகளை நாகரீகப்படுத்துவது என்றால் அவர்களைத் தம்மவர்களாக ஏற்றுக் கொள்வது, அவர்களுடன் கூடி வாழ்வது, அவர்களுடனான சகமனித உணர்வை வளர்த்தெடுப்பது - சுருக்கமாக சொன்னால் அவர்களை நேசிப்பது.

இந்தப் பழங்குடிகள் ஓர் அபாயத்திற்கான சாத்தியப்பாடு என்பது இந்துக்களுக்கு இன்னும் தெரியவில்லை. இந்தக் காட்டுமிராண்டிகள் காட்டுமிராண்டிகளாகவே இருந்தால் அவர்கள் சக இந்துக்களுக்கு எந்தத் தீங்கும் இழைக்க மாட்டார்கள். ஆனால் அவர்களை இந்து அல்லாதவர்கள் வசப்படுத்தி தங்கள் மதங்களுக்கு மாற்றினார்கள் என்றால் அவர்கள் இந்துக்களின் எதிரி முகாமைப் பலப்படுத்துவார்கள்” என்றார்.

இந்துக்களின் எதிரி என்று அவர் யாரை குறிப்பிடுகின்றார்? முஸ்லிம்களையும், கிருஸ்தவர்களையுமா? பழங்குடியின மக்களை காட்டுமிராண்டிகள் என்று குறிப்பிடும் அளவுக்குத்தான் பழங்குடியின மக்களைப் பற்றிய அவரின் பார்வை இருந்தது. ஆனால் உண்மை என்ன?

1920 இல் இருந்தே இந்து மகாசபா போன்ற இயக்கங்கள் ஆதிவாசி மக்களை மதமாற்றும் பணியைச் செய்தே வந்தன. ஆனால் அதில் அவர்களால் பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை என்பதே உண்மை.

அதுமட்டுமல்ல ஹோ, ஓரான், கோல்கள், சந்தால்கள், முண்டாக்கள், கோண்டுகள் ஆகியோர் ஆங்கில அரசுக்கு எதிராகப் போராடினார்கள். ஜமீன்தார்களையும், பனியாக்களையும் எதிர்த்து தங்கள் நிலங்களையும் பண்பாட்டையும் காக்கப் போராடினார்கள். இதில் பல ஆயிரம் பழங்குடியின மக்கள் கொல்லப்பட்டார்கள். இன்றும் அந்த மக்கள் கட்டுமான மற்றும் சுரங்க நிறுவனங்களுக்கு எதிராகப் போராடி வருகின்றார்கள். இந்திய அரசு நடத்திவரும் பசுமை வேட்டையை நேரடியாக எதிர்கொண்டு போராடிக் கொண்டு இருக்கின்றார்கள்.

அம்பேத்கர் பழங்குடியின மக்கள் மீது வைத்திருந்த கருத்தால் ஆதிவாசி மக்களின் வாழ்வதாரமே நிர்மூலமாக்கப்பட்டது என்பதுதான் உண்மை.

ஆதிவாசிகளின் நிலங்களுக்கு அரசைப் பாதுகாவலராக ஆக்கியதோடு அல்லாமல் ஆங்கிலேயே காலனியக் கொள்கையையும் சட்டம் உறுதி செய்தது. ஆதிவாசி மக்கள் தங்கள் சொந்த நிலங்களிலேயே ஆக்கிரமிப்பாளர்களானார்கள். காட்டுப்பொருட்கள் மீதான அவர்களின் மரவுவழி உரிமைகள் மறுக்கப்பட்டன. இதன் மூலம் அவர்களின் பழங்குடியின வாழ்க்கை முறையே குற்றமாக்கப்பட்டது. அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை சட்டம் அளித்தாலும் அவர்களின் வாழ்வாதாரமும், மாண்பும் பறிக்கப்பட்டன.

அம்பேத்கர் மதமாற்றத்துக்கு பெளத்தத்தை தேர்ந்தெடுத்ததற்குப் பின்னால் பல்வேறு காரணங்கள் இருந்தன. தலித் மக்களை ஐக்கியப்படுத்துவது அதாவது தலித்துகள் – சூத்திரர்கள் அடங்கிய பகுஜன் சமாஜைக் கட்டியமைப்பது, அவர்கள் அனைவருக்கும் தனியொரு அடையாளத்தை உருவாக்குவது இதைத்தான் நாற்பதாண்டு கால பொதுவாழ்வில் அம்பேத்கர் நடைமுறைப்படுத்தினார்.

தீண்டத்தகாதவர்களுக்கு மண்ணின் மைந்தர்கள் என்ற அடையாளத்தை உருவாக்கினால், அவர்கள் சாதிகள் அடிப்படையில் அல்லாத ஒரு மாற்று அடையாளத்தைப் பெறுவார்கள் என்று அம்பேத்கர் நம்பினார். தீண்டத்தகாதவர்கள் பூர்வீகத்தில் பௌத்தர்கள், இந்த மண்ணின் மைந்தர்கள் என்றார்

“நமக்குத் தேவை சமூக சமத்துவம்; முடிந்தவரை இந்து அமைப்புக்குள் அதைப் பெறுவோம்; இல்லையானால் பயனற்ற இந்து அடையாளத்தைத் தூக்கியெறிவோம்; இந்துத்துவத்தை விட்டொழிக்க வேண்டுவது அவசியமானால், இந்துக் கோவில்கள் பற்றி எங்களுக்குக் கவலையில்லை” என்று 1927 ஒடுக்கப்பட்ட வகுப்புகளின் மாநாட்டுக்குத் தலைமையேற்று பேசினார்.

1935 இயோலா மாநாட்டில், "இந்து மதத்தில் இருப்பதால்தான் நாம் இழிவுகளையும் வேதனைகளையும் அனுபவிக்கிறோம்; இந்துத்துவத்துடனான எல்லாத் தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டு நிபந்தனையற்ற சமத்துவம், தகுதி, வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் வேறெந்த மதத்துக்கும் மாறிப் போய் விடுங்கள்” என்று தீண்டத்தகாதோருக்கு அம்பேத்கர் அறைகூவல் விடுத்தார்.

வெவ்வேறு மதங்களை ஒப்பீடு செய்து, தாழ்த்தப்பட்டோருக்கு அம்மதத் தலைவர்களிடையே உள்ள வரவேற்பையும் ஆய்வு செய்தார். பிறகு 1936-இல் சீக்கிய மதத்திற்கு மதம் மாறுவதைத் தெரிவு செய்தார்.

அதன்படி சீக்கியராக மதம் மாறும் தீண்டத்தகாதோருக்கு இடஒதுக்கீடு வழங்குமாறு புதிய அரசியல் சட்டம் இயற்றும்படி ஆங்கிலேயரிடம் அம்பேத்கர் கோரினார். பஞ்சாபிலுள்ள சீக்கியருக்கு மட்டுமே அது பொருந்தும் என்று ஆங்கிலேயத் தலைவர்கள் நிராகரித்தனர்.

பஞ்சாபிலிருந்த சீக்கியத் தலித்துகள், அங்கு ஜாட் சாதியினரால் தங்களுக்கு இழைக்கப்படும் தீண்டாமைக் கொடுமை பற்றி அவரிடம் எடுத்துச் சொன்னார்கள். சீக்கியர்களின் அரசியல் தலைமையான அகாலிகள் மதமாற்றத்தை எதிர்த்தனர். சாதி இந்துக்களின் சமூகப் புறக்கணிப்பு மற்றும் திருப்பித் தாக்கும் நடவடிக்கைகளை நேரில் பார்த்து அஞ்சிய அம்பேத்கர், மதமாற்ற முயற்சிகளை அப்போதைக்குக் கைவிட்டார்.

தீண்டாமை மற்றும் சாதி ஆதிக்கத்துக்கு எதிரான தனது முயற்சிகள் தோல்வியடைந்ததை தான் வாழ்நாளிலேயே கண்ட அம்பேத்கர் இறப்பதற்குச் சில வாரங்கள் முன்பாக 1956 அக். 14 அன்று மிகப் பெரிய விழாவொன்றில் நாகபுரியில் பல ஆயிரக்கணக்கான மகர் சாதியினருடன் புத்த மதத்தைத் தழுவினார். புத்த மதத்தை இந்து மதத்தின் ஒரு பிரிவாகவே சட்டமும் சாதி இந்துத் தலைமையும் கருதுவதால் கடும் எதிர்ப்பு எதுவும் கிளம்பவில்லை.

அதே போல பிராமணர்களை வேஷ பிராமணர்கள் என்றழைத்த அயோத்திதாசர் பறையர்களை பூர்வ பிராமணர் என்றே அழைத்தார். இதற்கெல்லாம் அவர் ஆதாரமாக முன்வைத்தது ‘இந்திரர் தேச சரித்திரம்’ மற்றும் ‘நாரதிய புராண சங்கைத் தெளிவு’ போன்ற புராண கட்டுக்கதைகளைத்தான்.

இந்தியாவில் 1108 பட்டியல் சாதிகளும் 744 பழங்குடியின சாதிகளும் இருப்பதாக இந்திய அரசியலமைப்பு ஆணை 1950 குறிப்பிடுகின்றது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பட்டியல் பழங்குடியினரில் 36 சாதிகளும் பட்டியல் சாதிகளில் 76ம் உள்ளது. இதில் அம்பேத்கரும் அயோத்திதாசப் பண்டிதரும் யாருக்காக குரல் கொடுத்தார்கள் என்பது அவர்களின் எழுத்துக்களின் மூலமே நம்மால் தெரிந்துகொள்ள முடியும்.

அம்பேத்கருக்கு தாழ்த்தப்பட்ட மக்களின் நலனில் பெரிய அக்கறை இருந்தாலும் பழங்குடியின மக்கள் பற்றிய அவரின் பார்வை பழுதாகவே இருந்தது. அதே போல அயோத்திதாசர் பண்டிதருக்கு பறையர்களின் முன்னேற்றமே முக்கியமானதாக இருந்தது.

இருவருமே அதற்கான தீர்வாக பெளத்தத்தை தேர்ந்தெடுத்தனர். ஆனால் பெளத்தம் சாதியை எதிர்க்கின்றதா சமத்துவத்தைப் போதிக்கின்றதா என்பதெல்லாம் பெரிய விவாதமாகும். இன்றிருக்கும் பெளத்தம் புத்தர் காலத்து பெளத்தமல்ல.

இன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படும் பெளத்த தத்துவ மரபுகளாக அறியப்படும் மகாயானம், வஜ்ரயானம், தேரவாதம் போன்றவை கடைந்ததெடுத்த பிற்போக்குத்தனங்கள் நிறைந்தவை ஆகும். இவற்றுக்கும் புத்தரின் பூர்வ பெளத்தக் கருத்துகளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

இந்தியாவில் வெறும் 0.7 சதவீத மக்கள் மட்டுமே பெளத்தத்தை கடைபிடிக்கின்றார்கள். இவர்களின் வாழ்வியல் கூட எந்த வகையிலும் பழங்குடியின மக்களின் வாழ்வியலையோ, தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வியலையோ பிரதிபலிக்கவில்லை.

உண்மையில் திருமாவளவன் அவர்களின் கோரிக்கை என்பது இந்திய பெளத்த மதத்தினரின் கோரிக்கையாக இருந்திருந்தால் அந்த மதம் இவ்வளவு கீழ்நிலைக்குச் சென்று அழியும் தருவாயில் இருந்திருக்காது.

அது மட்டுமல்ல இங்கிருக்கும் பழங்குடியின மக்கள் யாருமே தன்னை சமூகத்தில் அழுத்தப்பட்ட சாதியாக உணர்வதில்லை. அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுடன் திருமண உறவைக்கூட ஏற்படுத்திக் கொள்ள விரும்புவதில்லை.

பெரும்பாலான சாதி ஆணவக் கொலைகள் சூத்திரசாதிப் பெண்ணை பட்டியல் சாதி ஆண்கள் திருமணம் செய்து கொள்வதாலேயே நடக்கின்றது. ஆனால் பழங்குடியினப் பெண்களையோ, ஆண்களையோ சூத்திர சாதி ஆண்களோ, பெண்களோ திருமணம் செய்து கொள்வதால் நடப்பதில்லை.

எனவே திருமாவளவன் அவர்கள் இப்படியான கோரிக்கையை வைக்க காரணமாக இருந்த தூண்டுதலைப் பற்றி விரிவாக ஆராய்ந்து முடிவெடிக்க வேண்டும்.

இப்படித்தான் ஒரு சில மாதங்களுக்கு முன்பு மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்களையும் பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் சேர்க்க வேண்டும் என மக்களவையில் கோரிக்கை வைத்திருந்தார்.

அப்படியான ஒரு கோரிக்கை தலித்தாக இருந்து மதம் மாறிய கிறிஸ்தவர்களிடம் எழுவதற்கு முக்கிய காரணம் இந்து மதத்தில் இருந்து மதம் மாறி அங்கு செல்பவர்கள் அங்கு சென்றும் தமது சாதிய மேலாண்மையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என விரும்புவதும், அதற்கு திருச்சபை இடம் கொடுப்பதுமே ஆகும்.

தலித்தாக இருந்து மதம் மாறிய கிறிஸ்தவர்களை பட்டியல் வகுப்பில் சேர்த்து இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் எனச் சொல்வது தலித்களின் எண்ணிக்கையை பெரும்பான்மையாகக் காட்டி அரசியல் பேரம் செய்வதற்கு மட்டும் உதவுமேயொழிய இன இழிவை ஒழிக்க உதவாது என்று அப்போதே இதைப் பற்றி விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால் இப்போது தாழ்த்தப்பட்ட மக்களையும் பழங்குடியின மக்களையும் பெளத்தர்களாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றார் திருமாவளவன் அவர்கள்.

கடந்த 26.09.2021 அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் திருமாவளவன் அவர்களை தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை நிர்வாகிகள் மற்றும் பிக்குகள் அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர்களின் குழு ஒன்று சந்தித்தது.

அந்தக் குழு “சமணம் என்கிற பொதுச் சொல் பௌத்தம், ஆசீவகம் மற்றும் ஜைனம் ஆகிய அமணர் மதங்களைச் குறிக்கும் பொதுச்சொல். இச்சொல்லை ஜைனத்தை மட்டும் குறிக்கும் சொல்லாகப் பயன்டுத்தக் கூடாது என்பதை அரசு அறிவிக்க வேண்டும்” என்றும்

“தமிழக இந்து அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் சமண மதத்தினைக் கொண்டு வந்து பாதுகாத்து உதவிகளைச் செய்வது போல பௌத்த மதத்தையும் கொண்டு வர வேண்டும். அதை அத்துறையின் கீழ் தனியாக பௌத்த அறநிலையப் பிரிவு என அடையாளப்படுத்த வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டது.

அதைத்தான் திருமாவளவன் அவர்கள் பாராளுமன்றத்தில் பேசி இருக்கின்றார். உண்மையில் அவருக்கு இது பற்றி அக்கறை இருக்குமானல் இந்தியா முழுவதும் உள்ள பழங்குடியின மக்களிடமோ அவர்களின் தலைவர்களிடமோ கருத்து கேட்டாரா என்பதை அறிவிக்க வேண்டும். அப்படி இல்லாமல் இப்படியான கருத்தை அவர் பதிவு செய்வது எந்தவித வரலாற்றுப் பார்வை அற்ற செயலாகும்.

திருமாவளவன் அவர்களுக்கு உண்மையிலேயே சாதி ஒழிப்பு என்ற சிந்தனையில் அக்கறை இருக்குமானால் தலித்துகளிடையே இருக்கும் சாதியப் பிரச்சினைக்கு தீர்வு கண்டு முதலில் அவர்களை ஓர் அணியில் திரட்டட்டும்.

அதைச் செய்யாமல் பழங்குடியின மக்களின் எண்ண ஓட்டம் என்னவென்று கூட அறிந்து கொள்ளாமல் அவர்களையும் பெளத்தர்களாக அறிவிக்க வேண்டும் என்று திருமாவளவன் அவர்கள் கோரிக்கை வைப்பது மிகப் பெரிய வரலாற்றுப் பிழையாக அமைந்துவிடும்.

- செ.கார்கி

Pin It