porunai nadhi karaiyinilae“ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ்” என்பார்கள். திருநெல்வேலிக்கு அழகு சேர்க்கும் புண்ணிய நதியாக பொருநை நதி அமைகிறது. இத்தகு சிறப்பு வாய்ந்த பொருநையானது தற்போது அழகை இழந்து வருவதை உணராது இருப்பதை பொருநை நதிக்கரையினிலே என்னும் நாவல் வழியாக ஆசிரியர் கன்யூட்ராஜ் எடுத்துரைத்துள்ளார். நாவலானது பொருநை நதி தவழும் திருநெல்வேலி மாவட்டத்தின் காத்தானூர் என்னும் ஊரிலும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலும் நடைபெறும் மணற்கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. காத்தானூரைச் சுற்றி மேற்கிலும் வடக்கிலும் ஊரின் எல்லையாக அரவணைத்து ஓடுகிறது, தாமிரபரணி. “ட” வடிவில் ஆறு வளைந்து திரும்பும் மூலையில் அமைந்திருக்கும் காத்தபெருமாள் கோவிலின் பெயராலே இவ்வூர் இப்பெயர் பெற்றுள்ளது. இந்நாவலாசிரியர் திருநெல்வேலியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது நல்லக்கண்ணு தாமிரபரணியைப் பாதுகாக்கப் போராட்டங்கள் நடத்துவதைக் கண்டு தன்னுடைய சிறு பங்களிப்பை நல்கும் வகையில் இந்நாவலை எழுதியிருப்பதாக நாவலின் முன்னுரையில் கூறியிருப்பதன் வாயிலாக அறிய முடிகிறது. இந்நாவல் காட்டும் சமூகப் பார்வையை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.

பொருநை நதிக்கரையினிலே சமூகப்பார்வை

சமூகப் பார்வை என்பது சமூக சூழ்நிலையில் மற்றவர்களின் எண்ணங்கள், உணர்வுகள், நடத்தைகள் போன்றவற்றிற்கு மதிப்பு அளித்து செயல்படுத்துவது எனலாம். இந்நாவலில் மணற்கொள்ளைக்கு எதிராகப் போராடுவது, இயற்கை விவசாயம், வீடுகட்டும் புதிய திட்டமுறை, தாமிரபரணியைப் பாதுகாக்க இயக்கங்கள் உருவாக்குதல் போன்ற சமூகச் செயல்பாடுகளை எடுத்துக்காட்டியுள்ளார். தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்நாட்டில் வளர்ந்து தமிழ்நாட்டில் கடலில் கலக்கும் சிறப்புக்குரிய வற்றாத ஜீவநதி, அழிவின் விளிம்பில் இருந்து என்னைக் காப்பாற்றுங்கள், என அபயக் குரலை எழுப்புவது போன்ற உணர்வை இந்நாவல் ஏற்படுத்துகிறது. பொருநை நதிக்கரையில் நடைபெறும் உண்மை அவலங்களைப் புனைக்கதாபாத்திரங்களின் வழியே வலியோடு எடுத்துக் காட்டியுள்ளார். “வேர்வை சிந்தி சேர்க்கிற காசு மிஞ்சிவிட்டால் கத்தரிக்காய் செடி போல வளரும், ஊரை ஏமாற்றி சேர்க்கிற காசு மிஞ்சிவிட்டால் மருதமரம் போல வளரும்”1 போன்ற வரிகளில் முதலாளி-தொழிலாளி வேறுபாட்டைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

புதுஉலகை அடைய புதுப்பார்வை தேவை

நீர் இருப்பதே ஆற்றின் இலக்கணம். ஆறு அழிந்து விட்டால் அதோடு இணைந்துள்ள வாழ்வும், கலாசாரமும் அழிந்து போய்விடும். இந்த அழிவில் இருந்து உலகைக் காப்பது பொதுமக்களாகிய ஒவ்வொருவரின் கடமை என அறிந்து அதற்கான பார்வையை நோக்கிச் செல்ல வேண்டும். அவ்வகையில் நாவலின் முக்கிய கதாபாத்திரமாக முகிலன் என்பவன் அமைகிறான். “தப்பை ஒருநாளும் தப்பால் சரி செய்துவிட முடியாது”2 என்ற வாக்கினை அறமாகக் கொண்டு திகழ்பவன். செய்யாத குற்றத்திற்காக ஐந்து வருட சிறைத் தண்டனை பெற்று சிறையிலே பட்டப்படிப்புடன் சிறை அனுபவங்களையும் பெற்று பொருநை நதியில் நடைபெறும் மணற்கொள்ளையைத் தடுப்பதற்காக தன்னுடைய உயிரையே பணயம் வைத்து உண்ணாவிரதம் மேற்கொண்டு போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவன். மணற்கொள்ளையைத் தடுக்கும் போராட்டத்தில் இவனுடன் இணைந்து போராடிய தாடிக்கார அண்ணாச்சி, மனைவி வைதேகி, கோமதி, லூயிஸ், பெருமாள், குருக்கள் மாமி, வேணு போன்ற கதாபாத்திரங்களின் வாயிலாக உணர்வு, வலி, தியாகம் போன்றவற்றைக் கண்முன் காட்டியுள்ளார்.

மணற்கொள்ளையும் அரசியல்வாதிகளும்

காத்தானூரிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தீர்த்தாரப்பன் என்பவன் மணற்கொள்ளையில் ஈடுபடுகிறான். அவனைக் கொன்று அவ்விடத்திற்கு வரும் எம்.எல்.ஏ. கொழுந்துமணியால் இக்கிராமம் பல்வேறு இன்னல்களை அடைகிறது. “இந்த உலகம் மனிதனுடையது இல்லை. மனிதன் இயற்கையின் ஓர் அங்கமே. அவன் இயற்கையை சார்ந்துதான் வாழமுடியும். பூமித்தாய்க்கு என்னவெல்லாம் நிகழ்கின்றனவோ அவையனைத்தும் அவள் குழந்தைகளுக்கு நிகழுமல்லவா! இந்த வாழ்க்கை வலைக்கு எதிராக அவன் எது செய்தாலும் அவற்றை தனக்கு எதிராகவே செய்து கொள்கிறான்.”3 என்பதை உணராத சமுதாயமாக இருப்பதை எண்ணி வருத்தமுற்ற வரிகளாக இவற்றைக் காண முடிகிறது. பணத்தால் ஊர் வாயை அடைத்து விட முடியும் என எண்ணும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் என்றும் கேள்வி கேட்கும் துணிவு இன்றி ஊர்மக்கள் அனைவரும் மனதிற்குள் போராடும் மனநிலையை எக்காலத்திற்கும் பொருந்தும் சூழ்நிலையைத் தெளிவுறக் காட்டியுள்ளார்.

அரசு அதிகாரிகளும் அடக்குமுறைகளும்

பொதுமக்களின் உற்ற தோழன் காவலன் என்னும் கூற்றைப் பொய்ப்பிக்கும் வகையில் இந்நாவலில் இடம்பெறும் காவலர்களும் அரசு அதிகாரிகளும் காணப்படுகின்றனர். பொதுமக்களுக்குத் தோழர்களாக இருக்க வேண்டிய இவர்கள் “நல்லது செய்கிறவன் கடவுள் இல்லை; பணம் தருபவனே கடவுள் என்று” ஊர் மக்களையும், பொதுமக்களையும் தங்களின் அடக்குமுறைகளால் பல இன்னல்களுக்கு ஆளாக்குகின்றனர். இவர்களின் அடக்கு முறையால் வைதேகியின் கரு கலைகிறது, மூன்று மாணவர்கள் ஆற்றில் மூழ்கி இறந்து விடுகின்றனர், 15 பேர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்படுகின்றனர். “யூதர்களைக் கொன்றார்கள்; எதிர்க்கவில்லை. கம்யூனிஸ்டுகளைக் கொன்றார்கள்; ஏன் என்று கேட்கவில்லை. வேற்று நாட்டவன் என்று கொன்றார்கள்; நான் கேட்கவில்லை. என்னைக் கொல்ல வரும்போது ஏனென்று கேட்க யாருமில்லை”4 இந்தநிலை எப்போது வேண்டுமானாலும் தமிழ்நாட்டிற்கு நேரிடும் என்பதை ஆணித்தரமாகப் பதிவு செய்துள்ளார். இத்தகைய அசுரர்களுக்கு மத்தியில் மாவட்ட ஆட்சியர் சுதாகர், நீதிபதி வெங்கடாச்சாரி போன்ற நல்ல உள்ளங்களும் மக்களுக்கு உதவுவதைக் காண முடிகிறது.

தியாகத்தின் வெளிப்பாடு

தியாகம் என்பது பிறருக்காக அல்லது குறிக்கோளுக்காக உடல், பொருள், உயிர், சுகம் போன்றவற்றைக் கொடுப்பது எனலாம். வேலுநாச்சியார், ராணிமங்கம்மாள், ஜான்சிராணி போன்ற வீரத் தமிழச்சிகளின் தியாகங்கள் சுதந்திர போராட்டத்திற்கு வலுவூட்டியது போன்று இந்நாவலில் இடம்பெறும் குருக்கள் மாமியின் உயிர்த் தியாகத்தால் போராட்டம் வலுப்பெறுவதைக் காண முடிகிறது. நாவலின் திருப்புமுனையாக, சாமியார் என்னும் கதாபாத்திரம் அமைகிறது. அவர் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் மக்களிடம் அறிவொளி பாய்ச்சி போராட்டத்திற்கு அடித்தளம் இடுகிறார். மேலும், இக்கதாபாத்திரத்தில் எதிர்பாராத சுவாரசியத்தை மறைத்துவைத்து இருப்பதையும் காண முடிகிறது. “தேனீக்கள் ஓயாது உழைக்கும். தன் கூட்டிற்கு ஆபத்து வரும் போது தன் உயிரை விட்டுக் கூட்டைக் காக்கும். அதுபோல நம் தேன்கூடு இந்த ஆறு. அதற்கு இன்று ஆபத்து வந்துள்ளது. தேனீக்களாக நாம் தான் காக்க வேண்டும். அதற்கான தியாகத்தையும் செய்யவேண்டும்.”5 என்று பொதுமக்கள் ஒன்றுகூடி போராடுவது மக்களின் ஒற்றுமையைக் காட்டுகிறது. ஒவ்வொரு தியாகியின் உயிரும் இன்னும் ஆயிரம் தியாகிகளை ஜனிக்க வைக்கும் வீரியம் கொண்டது என்பதை செந்தில், பாரதி போன்ற இளைஞர்களின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.

முடிவுரை

நாவல் ஆசிரியரின் ஒவ்வொரு வார்த்தையும் நம்மை அதில் ஈடுபடுத்திக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. இந்நாவலை வாசிக்கும் போது தாமிரபரணியோடு பயணம் செய்த உணர்வை ஏற்படுத்தியது. இப்போராட்டங்களில் வாசகர்களைப் பங்கு பெறச் செய்வதைப் போல உணர முடிகிறது. மணலைக் கொள்ளை அடிப்பவர்கள்தான் குற்றவாளிகள் என்று எண்ண வேண்டாம்; அதை வாங்கும் நாமும் அக்கொள்ளையில் பங்கு கொண்டிருக்கிறோம் என்பதைப் புலப்படுத்தியுள்ளார். இயற்கை வளங்களை முன்னோர்களிடம் இருந்து பெற்ற பரிசாக கருதாமல் பிள்ளைகளிடம் இருந்து பெற்ற கடனாகக் கருதிச் செயல்பட வேண்டும். தான் வருங்கால சந்ததியினருக்கு செய்யும் நன்மை என்பதை இந்நாவல் தெளிவுபடுத்துகிறது.

மேற்கோள்கள்

1.      கன்யூட்ராஜ், பொருநை நதிக்கரையினிலே (நாவல்), ப-23

2.      மேலது ப-23

3.      முன்னர் கூறியது ப-120

4.      மேற்கூறியது ப-186

5.      மேற்சொன்னது ப-157

- சே. ரீதிகா எம்.ஏ.,எம்.பி.எல்., முழுநேர முனைவர்பட்ட ஆய்வாளர், ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

&

நெறியாளர்: முனைவர் பா.வைடூரியம்மாள், உதவிப்பேராசிரியர், ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.