அண்ணல் அம்பேத்கர் (1891-1956) தமது இருபத்தைந்தாம் அகவை முதல் (1916), சாதி குறித்த ஆய்வில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். சாதியின் அடையாளமாகத் தீண்டாமை எனும் கொடுமை நடைமுறையில் செயல்படுவதைக் கண்டார். சாதி - தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடும் நோக்கத்தோடு அமைப்புகளை உருவாக்கத் தொடங்கினார். இதழ்களை நடத்தத் தொடங்கினார். குரலற்றவர்களின் தலைவன் (மூக்நாயக்-1919) எனும் இதழ், பகிஷ்கிரித் ஹித்தகரணி (1927) எனும் அமைப்பு ஆகியவை தீண்டாமைக் கொடுமையிலிருந்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை முன்னெடுப்பதற்காக உருவானவைதான். ஒடுக்கப்பட்டோருக்கான மாநாடு (1920, 1927, 1929), கோயில் நுழைவுப் போராட்டம், குளத்தில் நீர் எடுத்தல், மனு ஸ்மிருதியை எரித்தல் (1927) முதலிய அறப்போராட்டங்களையும் முன்னெடுத்தார். தீண்டாமை ஒழிப்பை முதன்மைப்படுத்திச் செயல்படுவதற்கு சமதா (1929) எனும் இதழை நடத்தினார். இவ்வகையில், ஒடுக்கப்பட்ட மக்கள் தீண்டாமைக் கொடுமையிலிருந்து விடுதலை பெறப் பல்வேறு அணுகுமுறைகளை முன்னெடுத்தார். இதில் ஒடுக்கப்பட்ட மக்கள் மதம் மாறுவது குறித்தும் பேசத் தொடங்கினார்.
1929 இல் 12 மகர் மக்கள் இந்து மதத்திலிருந்து பௌத்தத்திற்கு மாறினர். இதனை அம்பேத்கர் வரவேற்றார். 1929 முதல் பௌத்தம் குறித்த சிந்தனைகளை முன்னெடுத்துப் பேசும் மனநிலை அவருக்கு உருவாயிற்று. தொடர்ந்து தாம் நடத்திய மாநாடுகள், அறப் போராட்டங்கள், வட்டமேசை மாநாடுகள் அனைத்திலும் சாதி ஒழிப்பு குறித்தும் அதன் மூலமாக இருக்கும் தீண்டாமை ஒழிப்பு குறித்தும் பேசினார். அவற்றை கட்டுரைகளாகவும் நூல்களாகவும் வெளியிடத் தொடங்கினார். இந்து மதத்திற்குள் இருந்து கொண்டே சாதி - தீண்டாமையை ஒழிக்க முடியாது என்பதை ஆய்வுகள் மூலமும் நடைமுறை போராட்டங்கள் மூலமும் உணர்ந்த அவர் இவ்வகையான செயல்பாட்டிற்கு ஒடுக்கப்பட்ட மக்கள் மதம் மாறுவது ஒரு தீர்வாக இருக்க முடியும் எனும் கருத்துநிலையை படிப்படியாக வெளிப்படுத்தத் தொடங்கினார். இதன் உச்சமாக, 1935 அக்டோபர் 13 இல் நடந்த இயோலா மாநாட்டில் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். தான் இந்து மதத்திலிருந்து விலகி வேறு மதத்தில் சேரப் போகிறேன் என்பது அந்த அறிவிப்பு. “தீண்டாமை என்னும் கறையுடன் நான் பிறந்து விட்டேன்; அது என் தவறன்று. ஆனால், நான் இந்துவாக இறக்க மாட்டேன். இவ்வாறு செய்வது எனது சக்திக்கு உட்பட்டதாகும்” என்று அறிவித்தார். இவ்வகையில் இந்து மதத்திலிருந்து வெளியேறுவது எனும் மனநிலை அவருக்கு உறுதியாக உருவாகிவிட்டது (1929-1935).
1936 ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்ட மக்கள் சீக்கிய மதத்திற்கு மாறலாம் என்ற கருத்துருவை முன்னெடுத்தார். தனது மகன், தனது அண்ணன் மகன் மற்றும் 16 மகர் மக்களை சீக்கிய மதப் பயிற்சிக்காக அமிர்தசரசில் உள்ள சீக்கிய குருத்துவாராவிற்கு அனுப்பிவைத்தார். 1936 இல் இலண்டன் சென்று, ஒடுக்கப்பட்ட மக்கள் மதம் மாறுவதன் மூலம் ஏற்படும் சட்டச் சிக்கல்களை அங்குள்ள வழக்கறிஞர்களிடம் விவாதித்தார். காந்தியார், காங்கிரஸ் கட்சி ஆகியவை ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்குத் தீர்வு காண்பர் எனும் நம்பிக்கை படிப்படியாக, அம்பேத்கரிடம் இல்லாமல் போயிற்று. வட்டமேசை மாநாடுகள், பூனா ஒப்பந்தம் ஆகிய நிகழ்வுகள் இதனை உறுதிப்படுத்தின.
இந்திய அரசியலில், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலையின் ஓர் அங்கமாக, மதம் மாறுதல் என்ற திட்டத்தை மனத்தளவில் ஏற்றுக் கொண்டவராக, அவர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். 1946 இல் அவர் நிறுவிய கல்லூரிக்கு ‘சித்தார்த்தா கல்லூரி’ எனப் பெயரிட்டார். 1950 இல் புது டில்லியில் நடைபெற்ற பௌத்தப் பேரணி ஒன்றில் கலந்துகொண்டார். 1951 இல் பாரதிய பௌத்த ஜன சங்கத்தை உருவாக்கினார். 1954 இல் சென்னை வந்தபோது, பேராசிரியர் இலட்சுமி நரசு எழுதிய பௌத்தம் குறித்த நூலின் கையெழுத்துப் படியை வெளியிடுவதற்காக வாங்கிச் சென்றார். 1954 இல் பாரதிய பௌத்த மகாசபா எனும் அமைப்பை உருவாக்கினார்.
1955 ஜனவரி 5 ஆம் நாள், தந்தை பெரியார் ஈ.வெ.ராவை இரங்கூனில் சந்தித்துப் பேசினார். இரங்கூனில் நடந்த பௌத்த மாநாட்டில் கலந்துகொள்ள இருவரும் சென்றிருந்தனர். அம்பேத்கர் பௌத்தத்தைத் தழுவப்போகிறார் என்பது பெரியாரைச் சந்தித்த சூழலில் உறுதியானது. பெரியார் அதனை ஆதரித்தார் என்றும் அறிகிறோம். 1956 அக்டோபர் மாதத்தில் தாம் பௌத்தத்திற்கு மாறப் போவதை 1955 மே 24 ஆம் நாள் அறிவித்தார்.
பௌத்தம் குறித்த விரிவான ஆய்வில் ஈடுபட்டிருந்த அம்பேத்கர், 1955 ஆம் ஆண்டில் புத்தர் - அவருடைய தம்மம், இந்தியா: புரட்சி - எதிர்ப்புரட்சி, புத்தரா? கார்ல் மார்க்சா? முதலிய ஆய்வு நூல்களை எழுதி வெளியிடும் பணியில் தீவிரமாக இருந்தார். 1956 மே முதல் நாள், நான் ஏன் பௌத்தத்தை விரும்புகிறேன் எனும் உரையை பி.பி.சி வானொலியில் நிகழ்த்தினார். 1956 அக்டோபர் 14 ஆம் நாள், தம் துணைவியார் மற்றும் 75,000 பேருடன் பௌத்தத்தைத் தழுவினார். தாம் மறைவதற்கு 52 நாட்களுக்கு முன்பு பௌத்தத்தைத் தமது மதமாக ஏற்றுக்கொண்டார்.
இவ்வகையில், 1929 முதல் பௌத்தம் பற்றிய உரையாடலில் இருந்தாலும் 1956 இல்தான் தன்னை பௌத்தராக அறிவித்தார். அவரது கடைசி ஐந்தாண்டுகளில் பௌத்தம் சார்ந்த கருத்துநிலைக்கு தீவிரமாக உட்பட்டிருந்தார். இக்காலங்களில் அவர் உருவாக்கிய பௌத்தம் குறித்தவற்றை இப்பகுதியில் உரையாடலுக்கு உட்படுத்துவோம். அவரது பௌத்தம் குறித்த ஈடுபாடுகளையும் செயல்பாடுகளையும் புரிந்துகொள்ள கீழ்க்காணும் வகையில் தொகுத்துக்கொள்ள முடியும். பௌத்தம் குறித்த அம்பேத்கரின் செயல்களை அடிப்படையில் இரண்டு பிரிவுகளுக்குள் பார்க்கலாம்:
அ. பௌத்தம் எனும் கருத்துநிலையைப் பல்வேறு பொருண்மைகள் சார்ந்து உரையாடலுக்கு உட்படுத்துவது
ஆ. பௌத்தக் கருத்தியலைச் சட்டமாகக் காட்டும் வகையில் அடிப்படையான கோட்பாட்டு நூலை உருவாக்குவது.
பகுதி அ
அம்பேத்கர் பௌத்தக் கருத்துநிலை சார்ந்து உரையாடலுக்கு உட்படுத்தியவை பின்கண்டவை:
- இந்தியச் சூழலில் பௌத்தம் என்ற கருத்துநிலை சார்ந்து அம்பேத்கர் உருவாக்கிய அமைப்புகளும் அவற்றின் செயல்பாடுகளும் எவ்வகையில் இருந்தன என்பது குறித்த பதிவுகள்
- பௌத்தக் கருத்துநிலைகளுக்கும் இந்து மதத்திற்குமான தொடர்புகள் எத்தகையவை; அவற்றை எப்படிப் புரிந்து கொள்வது என்ற உரையாடல்
- பௌத்தம், பெண் என்ற பாலினம் பற்றிக்கொண்டிருந்த நிலைப்பாடுகள், பௌத்தப் பிக்குணிகளின் செயல்கள் குறித்த உரையாடல்கள்.
- பௌத்தத்திற்கும் மார்க்சியத்திற்குமான உறவுகள், முரண்கள் குறித்த பதிவுகள்
வரலாற்றுக்கு முந்தைய இந்தியச் சூழலில் பௌத்தம் எவ்வாறு செயல்பட்டது? பார்ப்பனர்கள் பௌத்தத்தை எவ்வாறு எதிர்கொண்டனர்? அதன் விளைவுகள் எவை? இந்தியாவில் பௌத்த எழுச்சியை உருவாக்க என்னென்ன செய்ய வேண்டும்? அம்பேத்கர் அவ்வகையான நடைமுறைகளை எல்லாம் எவ்வாறு மேற்கொண்டார்? ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுக் கால இந்தியப் பௌத்த மரபு; அதனை அம்பேத்கர் எதிர்கொண்ட முறைமைகள் முதலியவை குறித்த புரிதல்களைத் தொகுதி 16 இல் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் நமக்குச் சொல்கின்றன. இந்தியச் சூழல் – பௌத்தம் – அம்பேத்கர் என்ற முறையியலில் இதனைப் புரிந்துகொள்ள முடியும்.
இந்தியாவில் பௌத்தம் செயல்பட்ட முறைமை பற்றிய அம்பேத்கரின் பதிவு பின்வருமாறு அமைகிறது.
“இந்தியா பௌத்தத்தின் பிறப்பிடம். பொ.ஆ.மு 543 இல் இருந்து பொ.ஆ 1400 வரை ஏறத்தாழ 2000 ஆண்டுக் காலம் அது அங்கு செழித்து வளர்ந்தது. அங்கு பௌத்தம் மறைந்துபோனாலும் புத்தரின் திருப்பெயர் தொடர்ந்து எல்லையற்ற மதிப்போடு போற்றப்படுகிறது. அவரது சமயம் பற்றிய நினைவுச் சின்னமும் பசுமையாக இருக்கிறது. இந்தியாவில் பௌத்தம் பட்டுப்போன ஒரு தாவரமாக இருக்கக்கூடும். ஆனால், அது தனது வேர்களை இழந்து மடிந்துபோய்விட்டதாக எவரும் கூற முடியாது. புத்தர் விஷ்ணுவின் அவதாரமாக இந்துக்களால் கருதப்படுகிறார்” (தொ. 20, பக். 197).
இந்தியச் சமூகம் பழங்குடி மக்களின் ஆட்சியின் கீழ் ஒரு காலத்தில் இருந்தது; அவர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தனர். பின்னர் உருவான வருண (வர்க்க) முரண்பாடுகள், சாதி முரண்பாடுகள், பல்வேறு படிநிலைப் பாகுபாடுகள் எதுவும் அச்சமூகத்தில் இருக்கவில்லை. பகுத்தறிவைப் பேணும் சமூகமாக அது இருந்தது. அங்கு பிற்கால மதங்களில் இருந்தது போன்ற கடவுள் இருக்கவில்லை; வேள்விகள் போன்ற சடங்குகள் இல்லை. இதன் தொடர்ச்சியாகவே புத்தர் பௌத்தக் கருத்துகளைப் போதிக்கத் தொடங்கினார். புத்தரின் கருத்துகளுக்கு மிகுந்த செல்வாக்கு உருவானது. சடங்குகள், கடவுள் வழிபாடு ஆகியவற்றை புத்தர் மறுத்தார். நடைமுறைச் சமூக நிகழ்வுகளில் மனிதனே முதன்மைப் பாத்திரம் எனும் கருத்துநிலை வெகுமக்களிடத்தில் வெகுவாகப் பரவிற்று.
சமூக முரண்களை மறுத்து அனைவரும் சமம் எனும் கோட்பாட்டை புத்தர் முன்னிறுத்தியபோது, பார்ப்பனர்கள் வருணம், சாதி முரண்பாடுகளைக் கொண்டிருந்தனர். வேள்விகளை வளர்த்து உயிர்க்கொலை செய்தனர். இறைச்சியை முக்கியமான உணவாகக் கொண்டிருந்தனர். பசுக்களைக் கொன்று உண்பதில் ஆர்வம் காட்டினர். இந்தத் தருணத்தில், புத்தர் உயிர்க் கொலையைத் தவிர்க்கும் அகிம்சைக் கோட்பாட்டைப் போதிக்கத் தொடங்கினார். எளிய மக்கள் அலைஅலையாய் பௌத்தத்தில் இணைந்தனர். இதனைக் கண்ட பார்ப்பனர்கள், தங்கள் செல்வாக்கு அழிந்துவிடுமோ என்ற மனநிலைக்கு ஆளாயினர். இதனால், உயிர்க்கொலை தவிர்க்கும் கோட்பாட்டை அவர்கள் பின்பற்றத் தொடங்கினர். ஆனால், வருண முரண்பாடுகள், பிற சமூக முரண்பாடுகளை அவர்கள் பின்பற்றியே வந்தனர். பசுக்கொலை தவிர்க்கப்பட்டதால் கிராமங்களுக்கு வெளியில் வசித்து வந்த சிதறுண்ட மக்களுக்கு உணவுத் தட்டுப்பாடு உருவானது. இறைச்சி கிடைக்காமையால், இறந்துபோன பசுக்களை உண்பதை அவர்கள் தொடர்ந்தனர். இதனைக் காரணமாக வைத்து, அம்மக்களில் ஒரு பிரிவினரை தீண்டப்படாதோர் என்று பார்ப்பனர்கள் வகைப்படுத்தினர்.
மேற்குறித்தவாறு இந்தியச் சமூகத்தில் பௌத்தம்-பார்ப்பனர் உறவுகள் சார்ந்து ஒடுக்கப்படும் தீண்டப்படாதோரின் உருவாக்கம் நிகழ்ந்தது. ஒடுக்கப்படும் மக்கள் பௌத்த ஈடுபாடு கொண்டு பௌத்தத்தில் தொடர்ந்தனர். பார்ப்பனர்கள் அவர்களை பௌத்த ஈடுபாட்டிலிருந்து விடுவிக்க முடியவில்லை. இதனால் இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளமாக பௌத்தம் இன்றும் தொடருகிறது என்று அம்பேத்கர் பதிவுசெய்கிறார்.
ஐரோப்பாவிலிருந்து வந்த கிறித்தவர்கள் 100 ஆண்டுகளுக்கு மேலாகப் பார்ப்பனர்களைக் கிறித்தவத்திற்கு மாற்ற முற்பட்டனர். அதில் அவர்கள் தோல்வி அடைந்தனர். அதற்குப் பிறகுதான் ஒடுக்கப்பட்ட மக்களைக் கிறித்தவத்துக்கு மாற்றும் பணியினைத் தொடங்கினர் என்று அம்பேத்கர் பதிவுசெய்கிறார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் மதமான பௌத்தம் மீண்டும் புத்தெழுச்சி பெற வேண்டும் என்னும் விருப்பத்தினை அம்பேத்கர் முன்வைத்தார். அதற்கான பல்வேறு திட்டங்களை அவர் 1944 ஆம் ஆண்டு முதல் பேசிவந்தார். 1950 ஆம் ஆண்டுகளில் நேரடி நடவடிக்கைகளில் இறங்கினார். அந்தத் தகவல்களைக் கீழ்க்காணும் வகையில் தொகுத்துக்கொள்ள முடியும்:
- இந்து மதம், அந்த மதத்திலேயே உள்ள மக்களை தீண்டப்படாதோர் என்று பாகுபடுத்துகிறது. அறிவுத்துறை பெரிதும் வளர்ச்சியடைந்துள்ள இன்றைய சூழலில் அந்த மக்கள், இந்து மதத்தில் தொடர்ந்து இருக்க விரும்பவில்லை. இந்து மதத்திற்கு எதிராகப் போர்க்கொடி தூக்குகின்றனர். இவர்கள், கிறித்தவத்திற்கு மதம் மாறுவதைவிட பௌத்தத்திற்கு மாறுவதையே விரும்புகின்றனர். கிறித்தவம் போல பௌத்தம் அந்நியமானது இல்லை. பௌத்தம் முதன்மையாகச் சமத்துவத்தைப் பேசுகிறது. பகுத்தறிவு சமயமாக உள்ளது. எனவே, கீழ்த்தட்டு மக்களின் விருப்பம் நிறைவேறும் வகையில் பௌத்த எழுச்சியை உருவாக்க வேண்டும்.
- அனைவரும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் பௌத்தம் தொடர்பான தத்துவ நூலை உருவாக்க வேண்டும் (இது குறித்து அடுத்த பகுதியில் விரிவாகப் பேசலாம்).
- கிறித்தவ மதத்தில் செய்வதைப் போல் திருமுழுக்கு நடத்த வேண்டும். கிறித்தவத்தில் உள்ளது போன்று சமய குருவாகப் பதவியேற்கும் சடங்கு ஒன்றை பௌத்தத்துக்கு மாறுபவர்களுக்குச் செய்ய வேண்டும்.
- ஏராளமான மத போதகர்களை அமர்த்த வேண்டும். இவர்கள் அடித்தட்டு மக்களிடம் சென்று பௌத்தப் பரப்புரையை முன்னெடுக்க வேண்டும். இவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். திருமணம் செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும்.
- பௌத்த சமயக் கல்விக்கூடங்களை உருவாக்க வேண்டும். இவ்வகையான கல்விக்கூடங்களை முதன்நிலையாக சென்னை, நாகபுரி, கல்கத்தா மற்றும் டில்லி நகரங்களில் உருவாக்க வேண்டும்.
- பம்பாய், சென்னை, நாகபுரி, டெல்லி ஆகிய இடங்களில் மிகப்பெரிய கோயில்களையும் விகாரைகளையும் கட்ட வேண்டும். இந்துக் கோயில்களைப் போல் பிரமாண்டமான அமைப்பில் இவை அமைய வேண்டும்.
அம்பேத்கர் மேலே கூறியவாறு தமது வாழ்க்கையில் செயல்படுத்தத் தொடங்கினார். இந்த அறிவிப்பு பின்வருமாறு அமைகிறது.
மக்கள்திரள் மதமாற்றம்
“1956 அக்டோபர் 14, ஞாயிற்றுக்கிழமை, விஜயதசமி நாள் காலை 8 மணியளவில், நாகபுரியில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் இந்தியப் பௌத்த கழகத்தின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பௌத்தத்தைத் தழுவுவார். பர்மாவைச் சேர்ந்தவரும் இப்போது இந்தியாவில் இருப்பவருமான வணக்கத்திற்குரிய பிக்கு சந்திரமணி மகாதேரா இந்த நிகழ்ச்சியை நடத்திவைப்பார்” (தொ. 20, பக். 230).
இவ்வகையில் அம்பேத்கர் இதனை வெறுமனே பேசவில்லை; தமது நடைமுறை வாழ்க்கையில் பின்பற்றினார். அவர் இந்துவாகச் சாக மாட்டேன் என்று கூறியதைச் செய்துகாட்டினார். 1955 ஆம் ஆண்டு பௌத்த சங்கம் ஒன்றை உருவாக்கினார். 1956 ஆம் ஆண்டில் பௌத்தத்தில் தம்மை இணைத்துக்கொண்டார். இதே ஆண்டு, புத்தர் - அவரது தம்மம் என்ற அடிப்படை பௌத்த நெறி மற்றும் தத்துவம் குறித்த நூலை உருவாக்கினார். பௌத்தத்தில் தன்னை இணைத்துக்கொண்டபோது, இருபத்திரண்டு உறுதிமொழிகளை வெளிப்படுத்தினார். அதில் குறிப்பிடத்தக்க சில கீழ்வருமாறு:
- பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரனிடம் எனக்கு நம்பிக்கை இல்லை. அவர்களைத் தொழுது வழிபடவும் மாட்டேன்.
- இராமன், கிருஷ்ணனிடம் எனக்கு நம்பிக்கை இல்லை. அவர்களைத் தொழுது வழிபடவும் மாட்டேன்.
- கடவுள்களின் அவதாரக் கோட்பாட்டில் எனக்கு நம்பிக்கையில்லை.
- பார்ப்பனர்களைக் கொண்டு, எந்த மதச் சடங்குகளையும் செய்ய மாட்டேன்.
- மனிதகுலத்தின் சமத்துவத்தில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.
- சமத்துவத்தை நிலைநாட்டப் பாடுபடுவேன்.
- மனிதகுல வாழ்வுக்கும் வளத்துக்கும் அழிவை விளைவிக்கும், மனிதர்களைப் பாகுபடுத்திப் பார்த்து, அவர்களைக் கீழ்த்தரமாக நடத்தும், எனது பழைய இந்து மதத்தை விட்டு பௌத்தத்தை இப்போது தழுவுகிறேன்” (தொ. 16. பக். 239-240)
இவ்வகையில் அம்பேத்கர் இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் பௌத்தத்தில் புதிய மறுமலர்ச்சியை உருவாக்கினார். இது இந்தியாவில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான வடிவமாகவும் அமைந்திருப்பதைக் காண்கிறோம்.
அண்ணல் அம்பேத்கர், அவருக்கு விவரம் விளங்கக் கூடிய சிறுவயதிலிருந்து சாதிக் கொடுமையின் அனைத்துப் பரிமாணங்களையும் புரிந்துகொண்டார். அதனை நேரடியாக உணர்ந்தார்; அதன் விளைவுகளைப் பட்டறிவாகவே பெற்றார். அமெரிக்க, ஐரோப்பியப் பின்புலங்களில் செயல்படும் நவீன கல்வி சார்ந்த புரிதல் அவருக்கு நல்வாய்ப்பாக வாய்த்தது. அந்தப் பயிற்சியின் மூலம், இந்திய சமூகத்தின் அடிப்படையான முரண்பாடாக, சாதி, வருணம் இதனை நடைமுறைப்படுத்தும் இந்து மதம் ஆகியவை குறித்த விரிவான ஆய்வுகளை மேற்கொண்டார். அவற்றைக் கட்டுரைகளாக, நூல்களாக எழுதினார். இதில், ஒடுக்கப்படும் மக்கள் மீது சுமத்தப்பட்ட தீண்டாமை போன்ற கொடுமைகளுக்கான காரணங்களை உரையாடலுக்குட்படுத்தினார். அந்தக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடும் அமைப்புகளை உருவாக்கி, களப் போராளியாகச் செயல்பட்டார். ஆளும் பிரித்தானியர்களிடம் தமது மக்களுக்கான கொடுமைகளைக் களைவதற்கான பல்வேறு வழிமுறைகளை முன்னெடுத்துப் பேசினார். ஒடுக்கப்படும் மக்களுக்கான விடுதலையைப் பௌத்தத்தின் மூலம் பெற முடியும் என்று அவர் கருதினார். தமது வாழ்வின் இறுதிக் காலத்தில் (1944-1956) பௌத்த அமைப்பு உருவாக்கம், பௌத்தராக மாறுதல், பௌத்த தத்துவ வரையறை செய்தல் முதலியவற்றைச் செய்தார். அவரது பௌத்த வாழ்முறையைப் புரிந்துகொள்ளும் தேவை நமக்குண்டு.
ooo
இந்தியாவில் பெரும்பான்மை மக்களால் இன்று நம்பப்படும் இந்து மதத்தின் பல்வேறு கூறுகளை பௌத்த மதத்தின் கோட்பாடுகளோடு ஒப்பிட்டுப் பேசுகிறார், அம்பேத்கர். இதன் மூலம் எதிர்காலத்தில் பௌத்தமே மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் மதமாக இருக்க முடியும் என்று அம்பேத்கர் சொல்கிறார். கிறித்தவம், இஸ்லாம் ஆகியவை இயேசு கிறிஸ்து, முகமது நபி ஆகியவர்கள் கடவுளால் அனுப்பப்பட்ட சீடர்கள் என்று நம்புகின்றன. இந்து மதம் கிருஷ்ணன் வகுத்தளிக்கும் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டது. கிருஷ்ணன் கடவுள் கூட. ஆனால், புத்தர் கடவுள் என்பதே இல்லை என்கிறார். மாறாக, பௌத்தம் ‘ஒழுக்கம்’ என்ற சட்டகத்தின்மீது கட்டப்பட்டுள்ளது. இந்து மதத்தில் இப்படியான சட்டகங்கள் எதுவும் கூறப்படுவதில்லை. பௌத்தத்தில் பேசப்படும் ‘ஒழுக்கநெறி’ எனும் கோட்பாட்டை, ஒருவகையில் தந்தை பெரியார் முன்னிறுத்தும் ‘சுயமரியாதை’ என்பதோடு இணைத்துப்பார்க்கலாம். இந்தப் பின்புலத்தில் வேறு மதங்களுக்கு இல்லாத தனித்தன்மை பௌத்தத்தில் இருப்பதாக அம்பேத்கர், புத்தரின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டு பின்வருமாறு பதிவுசெய்கிறார்.
“தனது சமயம் (மதம்) கடந்த காலத்தின் காலாவதியாகிப் போனவற்றால் கட்டுப்படுத்தப்படக் கூடாது என்று அவர் (புத்தர்) விழைந்தார். அது என்றும் பசுமையாயிருக்க வேண்டுமென்றும் எல்லாக் காலங்களிலும் பயன்படக்கூடியதாயிருக்க வேண்டும் என்றும் அவர் விரும்பினார். அதனால்தான், தனது சமயம் துண்டாக்கப்படுவதற்கும் வெட்டிக் குறைக்கப்படுவதற்கும் தன்னைப் பின்பற்றுவோருக்குச் சுதந்திரம் அளித்தார். வேறு எந்தச் சமய போதனையாளரும் இத்தகைய துணிவைக் காட்டியதில்லை. பழுது பார்க்கப்படுவதை அனுமதிப்பதற்கே அவர்கள் பயப்பட்டனர். பழுது பார்ப்பதற்கு அளிக்கும் உரிமை, தாங்கள் பேணி வளர்த்த கட்டுமானத்தை அழிப்பதற்கும் பயன்படலாம் என்று அவர்கள் (பிற மதத்தினர்) அஞ்சினர். புத்தருக்கு அத்தகைய அச்சம் ஏதும் இருக்கவில்லை. தனது அடித்தளம் குறித்து அவருக்கு நம்பிக்கையிருந்தது” (தொ. 20: பக். 164)
இவ்வகையில், பௌத்தம் பிற சமயங்களிலிருந்து, குறிப்பாக இந்து மதத்திலிருந்து வேறான அடிப்படைகளைக் கொண்டிருப்பதை அம்பேத்கர் விரிவாகப் பதிவுசெய்கிறார். பௌத்தத்தின் கடவுள் இன்மை, சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் ஆகிய பண்புகள் இன்றும் நவீனத்துவ மரபாக இருப்பதை அம்பேத்கர் பதிவு செய்கிறார். புத்தர் உருவாக்கிக் கொடுத்த மதம் குறித்த இந்த மரபு, பின்னர் பல்வேறு பௌத்தப் பிரிவுகள் உருவாகக் காரணமாக அமைந்திருக்கிறது. அதில் சில பிரிவுகள் எதிர்விளைவுகளையும் பௌத்தத்தில் உருவாக்கியுள்ளன. இன்றைக்கு இலங்கையில் ஆட்சிபுரியும் பௌத்தம் கொண்டிருக்கக்கூடிய அதிகார மற்றும் மக்கள் அடக்குமுறைச் செயல்களை இதன் எதிர்விளைவுகளாகப் புரிந்துகொள்ள முடியும்.
உலகிற்குத் தேவையான புதிய சமயமாக பௌத்தத்தை புத்தர் உருவாக்கியுள்ளதாக அம்பேத்கர் கருதுகிறார். உலகில் உள்ள வேறு சமயங்கள் அனைத்தும் காலப்போக்கில் மறைந்துவிடும் என்றும் உண்மையான கம்யூனிசம் பௌத்தம்தான் என்றும் அம்பேத்கர் பதிவுசெய்கிறார். இந்தப் பின்புலத்தில் பௌத்தம் குறித்த வரையறையை அம்பேத்கர் பின்வருமாறு செய்துள்ளார்:
“ஏற்கெனவே இருந்துவரும் மதங்களில் ஒன்று இந்தச் சோதனைகளில் (மதம் மக்களுக்குத் தேவை என்ற சோதனை) ஒன்றில் தேறலாம். சில மதங்கள் இரண்டில் தேறலாம். ஆனால், இத்தகைய நல்ல கோட்பாட்டை முழுமையாகக் கொண்ட மதம் ஏதாவது இருக்கிறதா? இந்தப் போதனைகளில் எல்லாம் தேறும் ஒரே மதம், எனக்குத் தெரிந்தவரை பௌத்தம்தான். வேறு வகையில் கூறினால், உலகம் ஏற்றிருக்கவேண்டிய ஒரே மதம் பௌத்தம்தான். பழைய உலகிலிருந்து பெரிதும் வேறுபட்ட ஒரு புதிய உலகம் பிறந்தால், பழைய உலகைவிட அதற்கு மதம் கட்டாயம் தேவை. அப்போது, பௌத்தம்தான் இந்தத் தேவையை நிறைவு செய்யக்கூடியது.
இவ்வாறு கூறுவது மிகவும் விந்தையாகத் தோன்றக்கூடும். அகிம்சையைப் போதித்ததே புத்தர் செய்த ஒரே செயல் என்று புத்தரைப் பற்றி எழுதியவர்களில் பெரும்பாலோர் குறிப்பிட்டிருப்பதே இதற்குக் காரணம். இது மிகவும் பெரிய தவறாகும். புத்தர் அகிம்சையைப் போதித்தார் என்பது உண்மை. இதன் சிறப்பைக் குறைத்துக் கூற நான் விரும்பவில்லை. ஏனென்றால், இது ஒரு மாபெரும் கருத்தியலாகும். இந்தக் கருத்தியலைப் பின்பற்றினாலொழிய உலகத்தைக் காப்பாற்ற முடியாது. அகிம்சையைத் தவிர வேறு பல கருத்துநிலைகளையும் புத்தர் போதித்தார் என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். அவர் தமது சமயப் பரப்புரையின் ஒரு பகுதியாக சமூக சுதந்திரம், அறிவுத்துறை சுதந்திரம், அரசியல் சுதந்திரம் முதலியவற்றையும் போதித்தார். அவர், மனிதனுக்கும் மனிதனுக்குமிடையே சமத்துவத்தையும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே சமத்துவத்தையும் வலியுறுத்தினார். புத்தருடன் ஒப்பிடக் கூடிய சமயப் பரப்புரையாளர் எவரையும் காணமுடியாது. அவரது போதனைகள் மக்களது சமூக வாழ்க்கையின் பல்வேறு கூறுகளையும் எடுத்துரைப்பவையாக இருந்தன. அவரது கருத்தியல்கள் மிகவும் நவீனமானவையாக இருந்தன. மனிதன் இறந்தபிறகு, அவனுக்கு மேலுலகம் கிட்டச் செய்வதாக அவர் உறுதி கூறவில்லை. மாறாக, இந்தப் பூவுலக வாழ்க்கையிலேயே அவன் உய்வும் உயர்வும் பெற வழிசெய்வதே அவரது போதனையின் அடிப்படைக் கூறாக இருந்தது.” (தொ. 20, பக். 175).
இவ்வகையில் அம்பேத்கர் பௌத்தத்தின் வரலாறு, அடிப்படை நோக்கங்கள் ஆகியவற்றை முன் வைக்கிறார். உலகில் உள்ள பிற மதங்கள் பெண் ஒடுக்குமுறை, சமத்துவமின்மை ஆகிய பிறவற்றைக் கொண்டுள்ளன. இந்து மதம், இந்த வகையில் குறிப்பிடத்தக்கது. இந்தத் தன்மைகளுக்கு எதிரான ஒரே மதம் பௌத்தம் என்பதாக அம்பேத்கர் தமது சொந்த அனுபவம், தாம் செய்த ஆய்வுகள் சார்ந்து உறுதிபட பேசுவதைக் காண முடிகிறது.
ooo
மனித சமூக வரலாற்றில் பெண்-ஆண் என்ற பாலின வேறுபாடு என்பது, சமூகத் தளத்தில் கொடுமையான முரண்பாடாகவே செயல்படுகிறது. நிலவுடைமை என்னும் சொத்துடைமைச் சமூகம் உருவாக்கிய கழிசடைக் கூறுகளில் இதுவும் ஒன்று. இருபதாம் நூற்றாண்டில் தொடங்கி, பெண் எனும் உயிரியின் சமத்துவம் கோரும் உரையாடல்கள் வலுப்பெற்றுவருகின்றன. இதில் தந்தை பெரியாரின் இடம் முதன்மையானது. அவர் அளவுக்கு எவரும் பெண் விடுதலை பேசியவர்கள் இல்லை. இந்தப் பின்புலத்தில் அண்ணல் அம்பேத்கர் பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான செயல்பாட்டில் எவ்வாறு இருந்தார் என்ற உரையாடல் அண்மைக் காலத்தில் விரிவாகவே முன்னெடுக்கப்படுகிறது. பொதுவான பெண் விடுதலை என்ற உரையாடல் இங்கு மேற்கொள்ளப்பெறவில்லை. மாறாக, பௌத்த மரபோடு சார்ந்த பெண் பாலின முரண்கள் குறித்த உரையாடலை இப்பகுதியில் பேசலாம்.
‘மகா பரிநிப்பான சுத்தா (இயல் v)’ என்பது புத்தர் ‘ஆனந்தா’ எனும் பௌத்த பிக்குவுக்கு அளித்த பதில்களில் ஒன்று. புத்தர், பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான செயல்பாட்டாளர் என்று கூற முடியாது எனும் குற்றச்சாட்டை அம்பேத்கர் மறுக்கிறார். வாய்மொழி மரபில் தொடர்ந்து வந்த புத்தரின் கருத்துகள், பிறழ்ந்து, பதிவுசெய்யும்போது இடைச் செருகலாக அமைந்துவிட்டது என்று அம்பேத்கர் கருதுகிறார். பௌத்த பிக்குணிகளைப் பௌத்த மடங்கள் முழு உரிமையோடு நடத்தினவா என்ற பொதுவெளி உரையாடல் உள்ளது. இதற்குப் பதில் சொல்லும் வகையில் அம்பேத்கரின் உரையாடல் அமைந்துள்ளது. புத்தர், பெண்களை நடத்திய முறை தொடர்பான அம்பேத்கர் பதிவு கீழ்க்கண்டவாறு அமைகிறது:
“ஒரு பெண் குழந்தை பிறப்பதானது துயரமடை வதற்கான நேர்வல்ல, மகிழ்ச்சியடைவதற்கான நேர்வு என்று கருதியவரை, தங்களுடைய செயல்பாடுகளுக்கு ஒரு பெண்ணை அதிகாரத்தில் அமர்த்திய குடும்பங்கள் வீழ்ச்சியடைவதில் இருந்து காப்பாற்றப்பட்டன என்று எண்ணியவரை, பெண்ணை ஏழு செல்வங்களில் ஒருவர் என்று தயக்கமின்றி விவரித்தவரை, பெண் ஆக உயர்ந்த மதிப்புடைய பொருள் என்று கூறியவரை, பெண்களை வெறுப்பவர் என்றும் ஏளனமாகக் கருதுபவர் என்றும் எவ்வாறு கூறமுடியும்?” (தொ. 20: பக்.53)
என்று அம்பேத்கர் கேள்விகளை எழுப்புகிறார். புத்தர் பெண்கள் துறவிகளாக உருவானதைப் போற்றியவர். புத்தர் மனு ஸ்மிருதியைப் போல பெண்களை இழிவுபடுத்தியவர் இல்லை. இதனை நிலைநாட்ட பெண்களை இழிவுபடுத்தும் மனுஸ்மிருதியின் பகுதிகளை அம்பேத்கர் விரிவாக மேற்கோள் காட்டியுள்ளார். இவ்வகையில், பௌத்தம் பெண்களை இழிவாக நடத்தவில்லை. மாறாக, இந்து மதத்திலுள்ள மனுஸ்மிருதிதான் பெண்களை இழிவாக நடத்துகிறது என்று அம்பேத்கர் வாதிடுகிறார்.
பௌத்தம் பெண்களை இழிவாக நடத்துகிறது என்ற கட்டுரை ஒன்றுக்குப் பதில் எழுதிய அம்பேத்கர், மனுஸ்மிருதி போன்ற பிரதிகள், பெண்களை அடிமையாக நடத்திய முறைக்கு மாற்றாக, பெண் விடுதலைக்கு அடித்தளமிட்டவர் புத்தர்தான். ஆண்களைப் போல பெண்களும் துறவு வாழ்வை மேற்கொள்ளலாம் என்று அறிவித்தவர் புத்தர். புத்தருக்கு சிற்றரசர்கள் விருந்துக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் புத்தர் அதை ஏற்காமல், அதே நேரத்தில் அமரபாலி எனும் கணிகையின் அழைப்பை ஏற்று, அவரது இல்லத்திற்கு உணவருந்தச் சென்றார். அமரபாலி புத்தரின் முக்கியமான சீடர்களில் ஒருவர். இவ்வாறு பெண்கள் மீதான புத்தரின் செயல்களை அம்பேத்கர் பதிவுசெய்துள்ளார்.
மதங்கள் என்பவை ஆணாதிக்க மரபை முதன்மையாகக் கொண்டவை, பெண்களை ஒடுக்குபவை என்பது பொதுவெளியில் பரவலாக உள்ள கருத்து. இந்து மதத்தைப் பொறுத்தவரையில் அது சரியே. ஆனால், பௌத்த நாடுகளான இலங்கை, பர்மா ஆகியவற்றில் அந்த நிலை இல்லை என்று அம்பேத்கர் பதிவு செய்கின்றார். இந்து மதத்தில் உள்ள பெண் ஒடுக்குமுறைகளை விரிவான உரையாடலுக்குட்படுத்துகிறார், அம்பேத்கர். பௌத்தத்தில் அத்தன்மை இல்லை என்பது அவரது முடிபாக இருப்பதைக் காண முடிகிறது.
ooo
மார்க்சியத்திற்கும் பௌத்தத்திற்கும் இடையிலான பல்வேறு கூறுகளையும் அம்பேத்கர் விரிவாகப் பதிவு செய்துள்ளார். தமது மார்க்சிய வாசிப்பு முறை குறித்துப் பின்வருமாறு பதிவுசெய்கிறார்.
“நான் அரசியல் துறை மாணாக்கனாக இருந்துள்ளேன். பொருளாதாரத் துறை மாணவனாக இருந்துள்ளேன். பொருளாதாரத் துறைப் பேராசிரியராக இருந்துள்ளேன். கார்ல் மார்க்சையும் கம்யூனிசத்தையும் பற்றி ஆராய்வதில் நான் நிறைய நேரத்தைச் செலவிட்டுள்ளேன். அதே நேரம், புத்தரின் தம்மத்தைப் படிப்பதிலும் பெரிதும் ஆழ்ந்து ஈடுபட்டுள்ளேன். இரண்டையும் ஒப்பிட்டுப்பார்த்த பிறகு ஒரு திட்டவட்டமான, தீர்மானமான முடிவுக்கு வந்தேன். உலகை இன்று ஒரு மாபெரும் சிக்கல் எதிர்நோக்குகிறது. உலகில் துக்கம் நிலவுகிறது. அந்தத் துக்கம் அகற்றப்பட வேண்டும் என்பதே அந்தச் சிக்கல். இதற்குப் புத்தர் தெரிவித்துள்ள கருத்துகள்தான், தீர்வுதான் மிகவும் பாதுகாப்பானது, சிறப்பானது. இதுவே சிறந்தது என்ற திட்டவட்டமான முடிவுக்கு வந்தேன்” (தொ.20 ப.144)
இந்தியச் சமூகம் என்பது பல்வேறு பார்ப்பனியக் கருத்து நிலைகளைக் கொண்டு செயல்பட்டுவந்தது. அந்தக் கருத்து நிலைகளைச் சட்டமாக ஆக்கியதுதான் மனு தருமம். பௌத்தத்துக்கு எதிரான எதிர்ப்புரட்சியில் உருவாக்கப்பட்ட மனு தருமத்தை எதிர்த்து பௌத்தம் போராடியது. இதுதான் இந்தியாவின் பழைய வரலாறு என்று அம்பேத்கர் பதிவுசெய்கிறார். இந்த வரலாற்றைப் புரிந்து கொள்வதும் அதனை நடைமுறைப்படுத்துவதும் இன்றைய தேவை என்று அம்பேத்கர் கருதுகிறார். இந்தப் பின்புலத்தில் மார்க்சியம் என்பது மக்கள் சமூகம் பற்றிய முதன்மையான, சிறந்த தத்துவம் என்பதை மறுக்கவில்லை. ஆனால், இந்தியாவிற்கும் இன்றைய உலகத்திற்கும் உண்மையான மார்க்சியம் பௌத்தம்தான் என்று பல நிலைகளில் அம்பேத்கர் உரையாடலுக்குட்படுத்துகிறார். இரண்டு தத்துவத்திற்கும் பொதுவான குறிக்கோள் ஒன்றுதான். நடைமுறைப்படுத்தும் வழிமுறைகள் வேறுபடுகின்றன என்கிறார்.
பௌத்தத்தோடு மார்க்சியத்தை ஒப்பிட்டு, மார்க்சியத்தில் பேசப்படும் கருத்துகள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் பேசியதன் நவீன வடிவம்தான் என்கிறார். மார்க்சியம் முதன்மைப்படுத்தும் ‘சுரண்டல்’, ‘தனிச்சொத்துரிமை’ ஆகியவற்றை பௌத்தம் அன்றே பேசியுள்ளது என்கிறார். ‘துக்கம்’ என்ற சொல்லின் இன்றைய வடிவம்தான் ‘சுரண்டல்’ என்கிறார். பௌத்தத் துறவிகளின் வாழ்முறை சொத்துடைமைக்கு எதிரானது. பௌத்தம் பிக்குகளுக்குச் சொத்துடைமையை மறுக்கின்றது என்பதைப் பதிவுசெய்கிறார். கம்யூனிசம் முன்னிறுத்தும் கட்சி அமைப்பு என்பதைத்தான் பௌத்தம் ‘சங்கம்’ என்று வடிவமைத்துள்ளது என்றும் பேசுகிறார்.
புத்தரா, கார்ல் மார்க்சா? என்று கண்டெடுக்கப்பட்ட அம்பேத்கர் கையெழுத்துப் படியும் காட்மாண்டில் பௌத்த மாநாட்டில் இதே தலைப்பில் அம்பேத்கர் பேசியதும் நம்முன் உள்ளன. இவற்றைப் பற்றி அம்பேத்கர் உரையாடலுக்குட்படுத்தும்போது, இரண்டையும் முரண்பட்ட தத்துவங்களாக முன்வைக்கவில்லை. புத்தர் தமது காலத்தில் முன்வைத்த சமூகத்துக்கான தொடர்ச்சிதான் கார்ல் மார்க்சின் கருத்துகள் என்கிறார். ஆனால், நடைமுறைப்படுத்துவதில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறுகிறார். புத்தர் கூறும் பஞ்சசீலம், அதன் விரிவாக அமைந்துள்ள எண்வழிப்பாதை, அப்பாதைகளை நடைமுறைப்படுத்தத் தடைகளாக அமைந்துள்ள பத்து நிப்பானங்கள், அவற்றை வெற்றிகொள்ள கைக்கொள்ளவேண்டிய பத்து ஒழுக்கங்கள் என்பதை விரிவாகப் பேசும் அம்பேத்கர், இவைதான் பௌத்த தத்துவம் முன்வைக்கும் பொதுவுடைமைத் தத்துவம் என்கிறார். பௌத்தம் முன்மொழியும் கம்யூனிசம் இதுதான் என்பது அவரது வாதம். கம்யூனிசம் முன்வைக்கும் “வன்முறை”; “பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம்” ஆகியவற்றை மட்டும் பௌத்தம் உடன்பாடாகக் கொள்ள இயலவில்லை என்கிறார். இது குறித்த அம்பேத்கரின் பதிவு பின்வருமாறு அமைகிறது.
“என்னுடைய கம்யூனிஸ்ட் நண்பர்களைச் சந்திக்கும்போது, இரண்டு அல்லது மூன்று கேள்விகளுக்கு விடையளிக்கும்படி எப்போதும் அவர்களைக் கேட்டுக்கொள்வேன். ஆனால், அவர்களால் என் கேள்விகளுக்கு விடையளிக்க முடியாது என்பதை வெளிப்படையாக நான் கூறியாக வேண்டும். பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் எனப்படுவதை வன்முறை மூலம்தான் அவர்கள் உருவாக்குகின்றனர். செல்வம் படைத்த அனைவரையும் அவர்கள் ஓட்டாண்டியாக்குகின்றனர். அவர்களது அரசியல் உரிமையைப் பறிக்கின்றனர். சட்டமன்றத்தில் அவர்கள் இடம்பெற முடியாது; வாக்களிக்கும் உரிமை அவர்களுக்கு இருக்காது. அவர்கள் நாட்டின் இரண்டாந்தர குடிமக்களாகவே இருப்பார்கள். ஆளப்படுபவர்களாக இருப்பார்கள்; ஆட்சியில் அல்லது அதிகாரத்தில் பங்குகொள்ளக்கூடியவர்களாக இருக்க மாட்டார்கள்.
‘சர்வாதிகாரம் என்பது மக்களை ஆள்வதற்கு ஒரு சரியான முறை என்று நீங்கள் நினைக்கிறீர்களா?’ என நான் கேட்கும்போது, அவர்கள் என்ன விடை சொல்லுகிறார்கள் தெரியுமா? ‘இல்லை நாங்கள் அப்படி நினைக்கவில்லை; சர்வாதிகாரத்தை நாங்கள் விரும்பவில்லை.’ ‘அப்படியானால் நீங்கள் எப்படி அதை அனுமதிக்கிறீர்கள்’ என்று நாம் கேட்டால், அதற்கு அவர்கள் என்ன விடை கூறுகிறார்கள் என்று நினைக்கிறீர்கள். “இது இடைக்கால கட்டம், இதில் சர்வாதிகாரம் இருந்தாக வேண்டும்” என்கின்றனர். நாம் தொடர்ந்து, “அது சரி, இந்த இடைக்கால கட்டம் என்பது எத்தனை ஆண்டுகள்? இருபது ஆண்டுகளா? நாற்பது ஆண்டுகளா, ஐம்பது ஆண்டுகளா?” என்று கேட்கிறோம். விடை இல்லை. “பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் எப்படியோ தானாகவே மறைந்துவிடும்” என்று அரைத்தமாவையே அரைப்பதுபோல் விடையளிக்கின்றனர்.
நல்லது. அவர்கள் கூறுவது போல் சர்வாதிகாரம் மறைந்துவிடும் என்றே வைத்துக்கொள்வோம். இங்கு நான் ஒரு கேள்வி கேட்கிறேன். “சர்வாதிகாரம் மறைந்துவிடும்போது என்ன நடைபெறும்? அதனிடத்தில் எது இடம்பெறும்? மக்களுக்கு ஏதேனும் ஒரு வகையான அரசாங்கம் தேவையில்லையா?” இதற்கு அவர்களிடமிருந்து விடை இல்லை.
பிறகு, மீண்டும் புத்தரிடம் செல்லுகிறோம். அவருடைய தம்மம் பற்றிய இந்தக் கேள்வியைக் கேட்கிறோம். அவர் என்ன கூறுகிறார்? ‘மனிதனது மனத்தையும் உலகத்தின் மனத்தையும் மாற்றினாலொழிய உலகத்தைச் சீர்ப்படுத்த முடியாது’ என்று புத்தர் உலகுக்குக் கூறியது மிகப் பெரிய செய்தியாகும். மனம் மாறினால், கம்யூனிச அமைப்புமுறையை மனம் ஏற்றுக்கொண்டால், அதனை நம்பிக்கையோடு நேசித்தால், அது நிரந்தரமாகிவிடுகிறது. மனிதனைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு ஒரு படைவீரனோ அல்லது காவல் துறை அதிகாரியோ தேவையில்லை. ஏன்? இதற்கான விடை இதுதான். புத்தர் மனச்சான்றை ஊக்குவித்து, நீங்கள் சரியான வழியில் செல்லுவதற்கு வழிகாட்டும் காவலாளியாக அதை மாற்றியிருக்கிறார்.” (தொகுதி 20: பக் 142-43)
அம்பேத்கரை, மார்க்சியத்துக்கு நேரெதிர் கருத்துநிலை கொண்ட சித்தாந்தவாதியாகக் காணமுடியவில்லை. அவர் பௌத்தம் பேசும் பொதுவுடைமையை முன்னிறுத்துகிறார். சமூக அமைப்பு, அதில் செயல்படும் சக்திகள், அதற்கென உருவாகும் சமூக மாற்றத்திற்கான செயல்பாடுகள், காலம், இடம்சார்ந்த சூழல்கள் எனப் பல பரிமாணங்களில் உரையாடல்கள் இதற்குத் தேவை. இதை அம்பேத்கரின் உரையாடலாகப் புரிந்துகொள்ள முடிகிறது. அம்பேத்கருக்கு மார்க்சியத்துடன் பகைமுரண் இல்லை. நட்பு முரணாகவே மார்க்சியத்தை எதிர்கொள்கிறார் என்று கருத முடிகிறது
ooo
பகுதி ஆ
பௌத்தக் கருத்தியல் சார்ந்து இந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகளையும் பதிவுசெய்த அம்பேத்கர், தனது சொந்த வாழ்க்கையில் பௌத்தத்தின் இடம் குறித்தும், அது தொடர்பான அவரது செயல்கள் குறித்தும் விரிவாகப் பதிவுசெய்துள்ளார். பௌத்தத்திற்கு மாறியதன் மூலம், தனது வாழ்க்கை இலட்சியம் முழுமையுற்றதாகவும் அம்பேத்கர் கருதினார். இந்தப் பின்புலத்தில், பௌத்தக் கோட்பாடுகள் குறித்து அடிப்படையான நூல் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று அவர் திட்டமிட்டார். அதனைத் தமது இறுதிக்கால பணியாகவும் செய்து முடித்தார். அவ்வாறு அவர் உருவாக்கிய நூலே, புத்தர் - அவரது தம்மம் என்னும் நூல். இந்நூல் உருவாக்கத்திற்கான தமது நோக்கம் குறித்து அவரது பதிவு கீழ்க்கண்டவாறு அமைகிறது:
“இந்தியாவில் பௌத்தத்துக்குப் புத்துயிர் ஊட்டுவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய முதன்மை நடவடிக்கைகள் என்பதற்கு இப்போது வருவோம். இது தொடர்பாக, என் மனத்தில் தோன்றியதை இங்குக் கூறுகிறேன்.
பௌத்தம் பற்றிய நூலை அதாவது, பௌத்தம் பற்றிய சிறு நூலைத் தயாரித்தல், பௌத்தத்துக்கு மாறியவர்களுக்கு இது பெரும் துணையாக இருக்கும். புத்தரின் போதனைகள் அடங்கிய ஒரு சிறு நூல் இல்லாதிருப்பது பௌத்தத்தைப் பரப்புவதற்குப் பெரிதும் இடையூறாக இருக்கிறது. பாலி மொழியிலுள்ள 73 தொகுதிகளை எளிய மனிதர்கள் படிக்க முடியும் என்று எதிர்பார்க்க முடியாது. பௌத்தத்தைவிட, கிறித்துவ மதத்துக்கு ஒரு பெரிய வாய்ப்பு இருக்கிறது. அதாவது, இயேசு கிறிஸ்து மக்களுக்கு விடுத்துச்சென்ற செய்தி, பைபிள் என்னும் ஒரு சிறு நூலில் அடங்கியுள்ளது. ஆனால், பௌத்தத்தைப் பரப்புவதற்கு இத்தகைய நூல் ஏதும் இல்லை. இந்த இடர்பாடு அகற்றப்பட வேண்டும். புத்தரைப் பற்றிய நூல் முதன்மையாக அவரது சமூக மற்றும் அறநெறி போதனைகளை எடுத்துரைப்பதாக இருப்பது கட்டாயம்.” (தொகுதி 20: பக். 201)
மேற்குறித்த பின்புலத்தில், மதம் மனித வாழ்க்கைக்குத் தேவை என்றும், அப்படியான மதம் புத்தரின் தம்மமே என்றும் அம்பேத்கர் கருதினார். அறிவியல் அடிப்படையிலான மதம், புத்தர் உருவாக்கிய தம்மத்தை அடிப்படையாகக் கொண்ட பௌத்தம். தான் தொடர்ந்து முப்பத்தைந்து ஆண்டுகளாக ஆய்வுசெய்து இந்த முடிவுக்கு வந்ததாகவும் அம்பேத்கர் எழுதுகிறார்.
தம்மம் என்ற சொல் பிராகிருதச் சொல். பாலி மொழியிலும் புழக்கத்தில் உள்ளது. தமிழில் உள்ள பிங்கல நிகண்டு, இச்சொல்லுக்கு நற்செயல் என்று பொருள் தருகிறது. உரிச்சொல் நிகண்டு, தரும நூல் மற்றும் விதிகளை உள்ளடக்கிய நூல் என்று பொருள் தருகிறது. இந்தச் சொல்லுக்கு தமிழ் அகராதிகள் நற்செயல், விழி, தம்மம், ஒழுக்கம், கடமை, நீதி, தானம், இயற்கை, அறம் முதலிய பொருள்கள் இருப்பதாகச் சொல்லுகின்றன. எனவே, தம்மம் என்பதை அறநூல் அல்லது தரும நூல் என்று வரையறை செய்யலாம்.
புத்தரின் மறைவுக்குப் பின் அவரது கருத்துகள், ‘முப்பிடகங்கள்’ என்று தொகுக்கப்பெற்றன. புத்தர் மறைந்த ஆறு மாதத்திற்குப் பின் ஏறக்குறைய ஐந்நூறு புத்த பிக்குகள் ஓரிடத்தில் கூடினர். இவர்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து புத்தரின் போதனைகளைத் தொகுத்தனர். அவ்வாறு தொகுக்கப்பட்டவைதான் விநய பிடகம், சுத்த பிடகம், சுபிதம்ம பிடகம் என்னும் முப்பிடகங்கள் ஆகும். ஒவ்வொரு பிடகத்திலும் பல்வேறு உட்பிரிவுகள் உண்டு. சுத்த பிடகத்தில் உள்ள ஐந்து பிரிவுகளில் ஒன்று, குத்தக நியாயம். குத்தக நியாயம் 15 சிறு நூல்களைக் கொண்ட தொகுப்பு. அந்தப் பதினைந்து குறுநூல்களில் ஒன்றாகவே ‘தம்ம பதம்’ என்ற நூல் அமைந்துள்ளது. அந்த நூல் 26 வர்க்கங்களைக் கொண்டுள்ளது.
அம்பேத்கர் தம்ம பதம் நூலை அடிப்படையாகக் கொண்டு புத்தர் - அவரது தம்மம் எனும் நூலை உருவாக்கினார் என்று கூற முடியாது. ‘தம்மம்’ என்ற சொல்லை மட்டும் ‘தம்ம பதம்’ என்ற நூலிலிருந்து எடுத்துக்கொண்டுள்ளார். மற்றபடி தம்ம பதம் நூலுக்கும் அம்பேத்கரின் நூலுக்கும் நெருக்கமான தொடர்புள்ளதாகக் கருத முடியாது.
இந்த நூல் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்த புத்தர் – அவருடைய சமயத்தின் எதிர்காலம் எனும் கட்டுரையில் (பார்க்க: தொ. 20, ப. 162) அம்பேத்கர் விரிவாகப் பேசியுள்ளார். அதனைப் பின்வருமாறு தொகுத்துக்கொள்ளலாம்.
- பௌத்த காவியத்தை உருவாக்க வேண்டும்.
- விரிந்துபரந்துள்ள பௌத்தத்தின் கருப்பொருளைப் பேசுவதாக அது அமைய வேண்டும்.
- பிற மதங்களுக்கு உள்ள, மதத்தை அடையாளப்படுத்தும் தனிநூலாக அமைய வேண்டும். தம்ம பதம் அவ்வகையான அடையாளத்தைக் கொடுக்கவில்லை.
- வெறும் கோட்பாடுகளையும் நம்பிக்கைகளையும் மட்டும் முன்வைக்கக் கூடாது.
- கற்பனையைத் தூண்டும் வகையில் ஒரு கதையைப் போல் எடுத்துரைக்க வேண்டும்.
- கட்டுக்கதைகள், வீர காவியம், நற்செய்திகள் அதில் இடம்பெற வேண்டும்.
- புத்தரின் வாழ்க்கை வரலாறு இடம்பெற வேண்டும்.
- புத்தரின் முதன்மையான உரையாடல்கள் இடம்பெற வேண்டும்.
- சடங்குகள், தீட்சை கொடுத்தல் பற்றிப் பேசும்போது, சமயம் சார்ந்த உயிரோட்டமான மொழியில் அமைய வேண்டும்.
- மந்திரம் சார்ந்த மொழியில் அமைய வேண்டும்
அம்பேத்கர் 1950 ஆம் ஆண்டு, மகாபோதி இதழில் எழுதிய மேற்குறித்தவற்றை 1956 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தியதே அவரது புத்தர் - அவரது தம்மம் எனும் பௌத்தத்தின் கைநூல் அல்லது பௌத்தத்தின் விவிலியம் அல்லது பௌத்த குரான் ஆகும்.
இந்நூலை எட்டு நூல்களாக அம்பேத்கர் வகைப்படுத்துகிறார். அவை, சித்தார்த்தர் எவ்வாறு புத்தர் ஆனார்? புத்தர் பௌத்தத்தில் யார் யாரை இணைத்தார்? பௌத்தத்தின் கோட்பாடுகளாக எவற்றைப் போதித்தார்? பௌத்த அடிப்படைகள் எவையெவை என்று எவ்வாறு வரையறை செய்தார்? பௌத்தம் எவ்வகையான அமைப்பாக இருக்க வேண்டும்? சமகாலத்தில் உள்ளவர்களை பௌத்தத்தில் எவ்வாறு சேர்ப்பது? புத்தரின் இறுதிக் காலம் எப்படிக் கழிந்தது? புத்தர் எவ்வாறு மாமனிதராகப் போற்றப்படுகிறார்? முதலிய வினாக்களை எழுப்பிக்கொண்டு அதற்கான விடைகளை எழுதுவதாகவே புத்தர் - அவரது தம்மம் என்ற நூல் அமைந்துள்ளது.
“புத்தம் சரணம் கச்சாமி”, “தம்மம் சரணம் கச்சாமி”, “சங்கம் சரணம் கச்சாமி” என்பது “நான் புத்தரைப் பின்பற்றுகிறேன்; நான் தம்மத்தைப் பின்பற்றுகிறேன்; நான் சங்கத்தைப் பின்பற்றுகிறேன்” என்ற பௌத்தத்தின் அடிப்படை மந்திரமாக இருக்கிறது. இத்தன்மையின் உருவாக்கத்தில் முதன்மையாகச் செயல்பட்ட புத்தரின் வாழ்க்கை வரலாறு, முதல் நூலாக அமைகிறது. புத்தர் பிறந்த குலத்தின் பின்புலம், அவருடைய குழந்தைப் பருவம், திருமணம், குடும்பத்தைப் பிரிந்து செல்லுதல் ஆகியவை முதல் நூலின் முதல் பகுதியாக அமைகின்றன. இந்த நூலின் இரண்டாவது பகுதியில், புத்தர் நிரந்தரமாகத் துறவு மேற்கொள்ள முடிவு செய்ததின் விவரங்கள் பேசப்படுகின்றன. உலகத்தில் நிகழும் துன்பங்களைக் கண்டு, அதில் வெறுப்புற்றுத் துறவியானார் என்று வழக்கமான கருத்துக்கு மாறாக, இத்துன்பங்கள் ஏன் வருகின்றன? என்ற தேடலில் தொடங்கி, புதிய புத்தொளியைப் புத்தர் பெறுகிறார் என்பதாக இப்பகுதியை அம்பேத்கர் உருவாக்கியுள்ளார்.
புத்தர் தாம் கண்டறிந்த புத்தொளியைப் பலரிடம் கொண்டுசேர்க்கும் பணியைத் தொடர்கின்றார். அப்பகுதி, இரண்டாம் நூலாக அமைகிறது. இப்பகுதியில், புத்தர் பல்வேறு இடங்களில் நிகழ்த்திய பேருரைகள் குறித்த பதிவுகள் உள்ளன. சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ள மக்கள் பலரும் புத்தரோடு இணைந்து, அவரது பௌத்த மரபை முன்னெடுக்கின்றனர். உரிமை மறுக்கப்பட்டவர்களும் சமூகத்தில் அவமதிக்கப்பட்டவர்களும் பெண்களும் குற்றவாளிகளும் புத்தரோடு எவ்வாறு இணைந்தனர் என்பதை இந்நூல் பகுதி பேசுகிறது. இந்த உரையில், பௌத்தம் விளிம்பு நிலை மக்களையும் இணைத்த ஒரு சமய அமைப்பு என்று அம்பேத்கர் பதிவுசெய்கிறார்.
மூன்றாவது நூல், புத்தர் கற்பித்த அறமரபு. அதாவது தம்மம், தம்மம் அல்லாதது, சத்தம்மம் முதலியவை குறித்த விளக்கமாக அமைகிறது. புத்தர், தான் உருவாக்கியுள்ள இந்த அறநெறி பற்றி தனக்கென எந்த உரிமையும் கோரவில்லை. வாழ்க்கையில் தூய்மை, வாழ்வில் முழுமை, தடைகளைத் தவிர்த்தல், இயற்கை மரபுகளைப் போற்றுதல், கடவுள், வேள்வி போன்ற நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளாமை, மனத்தில் மாசில்லாமல் வாழ்தல், கல்வி பெறுதல், மனித உறவுகளைப் பேணுதல் ஆகியவை குறித்த விரிவான விளக்கங்களை இப்பகுதியில் பெற முடிகிறது.
நான்காவது நூல், ‘மதம்’ என்பதன் வரையறைகளைப் பேசுகிறது. ‘தம்மம்’ என்பது மதமா? அது எவ்வாறு அறநெறியாகச் செயல்படுகிறது? புத்தரின் ஆன்மா இல்லை என்ற கருத்துநிலை, இந்து மதத்தின் ஆன்மா, மறுபிறப்பு, பாவம்-புண்ணியம் முதலியவற்றிலிருந்து முற்றிலும் முரண்பட்டது என்பதை இந்தப் பகுதி வலியுறுத்துகிறது. மறுபிறப்பு, கருமம், அகிம்சை, பௌத்த வாழ்முறை ஆகியவற்றைப் பற்றிய விளக்கமாகவும் இப்பகுதி அமைகிறது. இல்லறத்தார், நல்லொழுக்கம் பேணுதல், நன்னெறி, ஆகியவை குறித்த பேருரைகள் அமைந்த பகுதியாகவும் உள்ளது. பௌத்தம் ஓர் அறநெறி என்பதன் விரிவான விளக்கங்களை இப்பகுதியில் பெற முடிகிறது.
ஐந்தாவது நூல், பௌத்தம் என்பது எவ்வாறு அமைப்பாகச் செயல்பட வேண்டும்? என்று பேசுகிறது. அது சங்கம் ஆகும். இந்தச் சங்கத்தில் பிக்குகள் எவ்வாறு செயலாற்றுவது? பிக்குகளின் வாழ்முறை ஆகிய கூறுகள் பேசப்படுகின்றன. ஆறாவது நூலில், புத்தரின் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் பௌத்தத்திற்கு எவ்வகையில் உதவினர். அதன் மூலம் பௌத்தத்தை எப்படி வளர்த்தெடுக்க முடிந்தது என்பதை அம்பேத்கர் பதிவு செய்கிறார். மேலும், புத்தரின் பகைவர்கள், அவரது கருத்துநிலை மீது விமர்சனம் செய்தவர்கள், நண்பர்கள் முதலிய பல்வேறு கூறுகளையும் பதிவுசெய்திருப்பதைக் காண்கிறோம். நூல் ஏழு மற்றும் எட்டில், புத்தரின் இறுதிக்காலம் பற்றிய செய்திகளின் பதிவு உள்ளது. சித்தார்த்த கௌதமர் எவ்வாறு கௌதம புத்தராக மாறிய மாமனிதர் ஆனார் என்ற விவரங்களை அம்பேத்கர் எழுதுகிறார். புத்தரின் மனிதாபிமானம், விருப்பம், விருப்பமின்மை முதலிய பல்வேறு தன்மைகளும் இப்பகுதியில் இடம்பெற்றுள்ளன.
பௌத்தநெறி எட்டு நூல்களாக உருவாக்கப்பட்டதன் மூலத் தரவுகள், பாலி மொழியில் உள்ளவை இணைப்பாகத் தரப்பட்டுள்ளன. இவ்வகையில், அம்பேத்கர் உருவாக்கிய புத்தர் - அவரது தம்மம் எனும் நூல், பௌத்தத்தின் அடிப்படை நூலாகவும் அடையாள நூலாகவும் அமைந்திருப்பதைக் காண முடிகிறது.
பௌத்தம் முன்னிறுத்தும் அரசியல், பௌத்த வரலாறு, பௌத்த மூலநூலாக, புத்தர் - அவரது தம்மம் உருப்பெற்று வரும் பாங்கு ஆகியவற்றைப் பேசும் தொகுதிகளாக 20 முதல் 23 வரையுள்ள நான்கு தொகுதிகள் அமைகின்றன. அம்பேத்கரின் ஆக்கங்களில் உள்ள இந்தத் தொகுதிகள், இந்திய சமூக வரலாற்றில் பௌத்தம் எவ்வாறெல்லாம் முதன்மை பெறுகிறது, அது எவ்வாறெல்லாம் வளர்ந்துவந்தது, புத்தர் தமது அறநெறி மரபை எவ்வாறு பௌத்தமாக வடிவமைத்தார் முதலிய பலவற்றைக் குறித்த அரிய ஆவண உரையாடலாக அமைகிறது.
முதன்மைச் சான்று அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் தொகுதிகள் 20, 21, 22, 23
- வீ.அரசு