21 ஆம் நூற்றாண்டு உலகில் சீனாவின் வகிபாகம் பற்றி
ஏகாதிபத்தியத்தின் கூறுகளைக் கொண்டுள்ள ஒரு பொருளாதாரம் ஏகாதிபத்தியத்தைத் தகர்ப்பதாக இருக்க முடியுமா? பொதுவுடைமையை இலட்சியமாகக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியில் தனியார் முதலாளிகளை உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ள முடியுமா?
1979இல் சீனாவின் சீர்திருத்தம் – திறந்து விடுதல் கொள்கைகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் மேற்குலகிலும் செயல்படும் பல மார்க்சிய லெனினியக் குழுக்கள் சீனா முதலாளித்துவப் பாதைக்குத் திரும்பி விட்டது என்று முடிவு செய்தன.
2013இல் சீனா, அயல்நாடுகளில் சாலைகள், இருப்புப் பாதைகள், துறைமுகங்கள் முதலிய கட்டுமானங்களை உருவாக்கும் பெல்ட்-ரோட் முன்முயற்சியைத் (Belt Road Initiative) தொடங்கியது. சீன அரசு நிறுவனங்கள் பின்தங்கிய ஆப்பிரிக்காவிலும் ஆசிய நாடுகளிலும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் பெருமளவு முதலீடுகளைச் செய்யத் தொடங்கின. இதைத் தொடர்ந்து, "மூலதனத்தை ஏற்றுமதி செய்யும் நாடு என்ற வகையில் சீனா ஏகாதிபத்திய நாடாக மாறி விட்டதா?" என்று கேள்வி எழுப்பப்பட்டு, அதற்கு ஆம் என்று பதில் அளிக்கப்படுகிறது.
சீனா ஓர் ஏகாதிபத்திய நாடா? கருதுதல்களும் ஆதாரங்களும் என்ற தலைப்பில் என்.பி.டர்னர் என்பவர் எழுதிய நூல் இதனை முழுமையாக தொகுத்து முன்வைக்கிறது. அந்த நூல் 2015 ஆம் ஆண்டு வெளியானது.
ஏகபோகங்களின் உருவாக்கம், வங்கி மூலதனமும் தொழில்துறை மூலதனமும் இணைந்து நிதி மூலதனத்தின் உருவாக்கம், பொருட்களின் ஏற்றுமதியிலிருந்து வேறுபட்ட மூலதன ஏற்றுமதி, உலகத்தைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளும் பன்னாட்டு ஏகபோக முதலாளித்துவக் கூட்டுகளின் உருவாக்கம், மிகப்பெரிய முதலாளித்துவ நாடுகளுக்கிடையே ஒட்டுமொத்த உலகமும் பங்கிடப்படுதல் என்ற லெனினின் ஏகாதிபத்தியம் பற்றிய கோட்பாட்டைப் பயன்படுத்தி இந்த முடிவு நியாயப்படுத்தப்படுகிறது.
கைலே ஃபெர்ரனா - நூல், நூலாசிரியர் பற்றி
இன்றைய உலகில் சீனா வகிக்கும் பாத்திரம் என்ன? அது ஓர் ஏகாதிபத்திய நாடாக ஆப்பிரிக்க, ஆசிய, லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சுரண்டுகிறதா? அப்படிச் சுரண்டினால் அதன் பலன்களும் சீனாவின் வியத்தகு பொருளாதார வளர்ச்சியின் பலன்களும் யாரைச் சென்றடைகின்றன? சீனாவில் அரசியல் அதிகாரம் யார் கையில் உள்ளது? முதலாளித்துவ வர்க்கத்தின் கையிலா அல்லது பாட்டாளி வர்க்கத்தின் கையிலா?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையளிக்கிறது உலகிற்கு சீனா ஏன் தேவை – வளர்ச்சி, சூழலியல், தகராறு தீர்ப்பு, பொதுவான வளம் என்ற கைலே ஃபெர்ரானா எழுதிய நூல்.
கைலே ஃபெர்ரானா, அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தில் உள்ள போர்ட்லாந்து நகரத்தைச் சேர்ந்தவர்; எழுத்தாளர், மென்பொருள் பொறியாளர், வாடகைதாரர் அமைப்பாளர்.
தொழிலாளர்களை அமைப்பாக்குவதைப் போல வாடகைக்குக் குடியிருப்பவர்களை அமைப்பாக்கும் பணியில் அவர் ஈடுபடுகிறார். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்வது போல வாடகைதாரர்கள் தமது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி வாடகை கொடுப்பதை நிறுத்தி வைத்துப் போராடுகின்றனர்.
அமெரிக்காவில் வீடற்றவர்களின் எண்ணிக்கை 6.5 இலட்சமாக உள்ளது. 6.3 இலட்சம் மக்கள் தொகை கொண்ட போர்ட்லாந்தில் மட்டுமே 4000 முதல் 5000 வீடற்ற மக்கள் உள்ளனர். அதே நேரம், 2.1 கோடி மக்கள் தொகை கொண்ட சீனாவின் பெய்ஜிங் நகரத்தில் வீடற்றவர்களின் எண்ணிக்கை சில நூறு என்று மேற்கத்திய பத்திரிகையான எகனாமிஸ்ட் 2019இல் செய்தி வெளியிட்டிருந்தது. இது தனது கவனத்தை ஈர்த்ததாக கைலே ஃபெர்ரனா பதிவு செய்கிறார்.
மேலும், இன்றைய உலக அரசியலில் சீனா தவிர்க்க முடியாத ஒரு பெரிய நாடாக உள்ளது. 193 நாடுகளில் 120 நாடுகளின் முதன்மை வணிகப் பங்காளியாக உள்ளது. சந்தைச் செலாவணி விகிதங்களில் கணக்கிடும்போது அமெரிக்காவுக்கு ($26.94 இலட்சம் கோடி) அடுத்தபடியாக இரண்டாவது பெரிய பொருளாதாரமாக ($17.70 இலட்சம் கோடி) உள்ளது. வாங்கும் திறன் அடிப்படையில் கணக்கிடும்போது ஏற்கனவே உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக ($32.89 இலட்சம் கோடி) ஆகி விட்டிருக்கிறது.
குறிப்பாக, மின்சார வாகன உற்பத்தியிலும் பயன்பாட்டிலும், வாகன உற்பத்தித் துறையில் முன்னணி வகித்த அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் நாடுகளை முந்தியிருக்கிறது, சீனா. இந்த நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் ஜப்பானின் டொயோடா நிறுவனம் பிரியஸ் என்ற கலப்பு மின்சார வாகனம் ஒன்றை முதன்முதலாக பன்னாட்டுச் சந்தையில் அறிமுகப்படுத்தியது. ஆனால், உலகின் மிகப்பெரிய அமெரிக்கச் சந்தையில் மின்சார வாகனங்களின் பயன்பாடு மிகவும் மெதுவாகவே அதிகரித்தது. 2021 இல் அமெரிக்காவில் விற்கப்பட்ட வாகனங்களில் 5% மட்டுமே மின்சார வாகனங்களாக இருந்தன. அதாவது, சுமார் 5 இலட்சம் மின்சார வாகனங்கள் விற்கப்பட்டன. சீனாவில், 2021 ஆம் ஆண்டில் மொத்த வாகன விற்பனையில் 16% அதாவது 30 இலட்சத்துக்கும் அதிகம் மின்சார வாகனங்கள்.
இன்றைக்கு உலக மின்சார வாகனங்கள் உற்பத்தியில் 70% க்கும் அதிகமாக சீனாவில் நடைபெறுகிறது. 2024 ஆம் ஆண்டில் உலக அளவில் 1.7 கோடி புதிய மின்சார வாகனங்கள் விற்பனையாகின. அது அனைத்து புதிய வாகனங்களிலும் 20%. சீனாவில் 1.1 கோடி மின்சார வாகனங்கள் விற்பனையாகின. இது மொத்த வாகன விற்பனையில் 50%. அந்த ஆண்டில் சீனா 12.5 இலட்சம் மின்சார வாகனங்களை ஏற்றுமதி செய்தது (இது அமெரிக்கச் சந்தையில் விற்பனையாகும் மொத்த மின்சார வாகனங்களின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகம்).
சூரிய மின்சக்தி, 5ஜி தொழில்நுட்பம், அதிவேக இரயில் போக்குவரத்து முதலியவற்றிலும் சீனா முன்னணி வகிக்கிறது.
எனவே, சீனாவையும் அதன் அரசமைப்பின் தன்மையையும் புரிந்து கொள்வது உலகத்தின் எதிர்காலத்துக்கு இன்றியமையாததாக உள்ளது என்கிறார் கைலே ஃபெர்ரனா.
“இன்று நாம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட ஓர் உலகில் வாழ்கிறோம். அது சமமற்றதாகவும், நமது மூதாதையர்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு நாடுகள் ஒன்றையொன்று சார்ந்தனவாகவும் இருக்கிறது. மற்ற அனைத்து நாடுகளையும் போலவே, மக்கள் சீனத்தையும் இந்த உலக அமைப்புடன் இணைத்து மட்டுமே புரிந்துகொள்ள முடியும். உலக அமைப்பின் தன்மையைத் துல்லியமாகப் புரிந்து கொள்ளாமல் சீனாவுக்கும் பிற நாடுகளுக்கும் இடையிலான உறவைப் புரிந்து கொள்ள முடியாது” என்கிறார்.
நூலின் அமைப்பு
இவ்வாறு இணைக்கப்பட்ட உலகம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எவ்வாறு இருந்தது? நாம் வாழும் இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் முதல் பாதியில் இருக்கும் உலக நிலைமை அதிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முதல் உலகப் போரின் போது, ஏகாதிபத்தியங்கள் பற்றி லெனின் உருவாக்கிய கோட்பாட்டை அப்படியே இன்றைய உலக நிலைமைகளுக்குப் பொருத்த முடியுமா? என்ற கேள்விக்கு பதிலளிப்பதிலிருந்து தனது நூலைத் தொடங்குகிறார் கைலே ஃபெர்ரனா.
இந்நூலில் 12 இயல்களும் நான்கு பின்னிணைப்புகளும் இடம் பெறுகின்றன.
இயல்கள் 1, 2, 3, 4, 5 உலக ஏகாதிபத்தியக் கட்டமைவு பற்றியும் அதன் மேலாதிக்கப் பொறியமைவுகள் குறித்தும் உலக நாடுகளின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்ட வரலாற்றைப் பற்றியும் பேசுகின்றன.
இயல் 6 "சீனாவும் உலகமும்", இயல் 7 "சீனாவில் அரசு அதிகாரத்தை யார் கையில் வைத்திருக்கிறார்கள்" ஆகியவை பன்னாட்டு உறவுகளிலும் உள்நாட்டு செயல்பாடுகளிலும் சீன அரசின் வர்க்கத் தன்மையை ஆய்வு செய்கின்றன. இயல் 8 சீனாவின் மீது ஏகாதிபத்தியக் கட்டமைவு நடத்தும் பரப்புரை முற்றுகையைப் பற்றிப் பேசுகிறது.
இறுதியாக இயல் 9 இல் குடியேற்றக் காலனியம் பற்றிய ஒப்பீட்டு பகுப்பாய்வு செய்யப்படுகிறது. இயல் 10, சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு சீனா எடுத்து வரும் முயற்சிகள் பற்றியும் இயல் 11 பல்துருவ உலகம் ஒன்று உருவாகி வருகிறதா என்ற கேள்வி பற்றியும் இயல் 12 புதிய பனிப்போர் பற்றியும் பேசுகிறது. பின்னிணைப்புகளில் கானாவின் தங்கச் சுரங்கத் தொழிலும் சமனற்ற பரிவர்த்தனையும், ஆப்பிரிக்க – சீனா சமனற்ற பரிவர்த்தனை, போல்ஷ்விக் புரட்சி எவ்வாறு வெல்லப்பட்டது, ஷின்ஜியாங் தன்னாட்சி மண்டலத்தில் வேலையின்மை முதலியவை இடம் பெறுகின்றன. இந்நூலை எழுதுவதற்கு ஆசிரியர் பயன்படுத்திய 200க்கும் மேற்பட்ட நூல்களின் விரிவான பட்டியல் சுமார் 20 பக்கங்களில் தரப்பட்டுள்ளது.
ஏகாதிபத்தியக் கட்டமைவு – மீ ஏகாதிபத்தியம்
இருபதாம் நூற்றாண்டில், முதலாளித்துவத்தின் உச்சகட்டமான ஏகாதிபத்திய சகாப்தத்துக்குள் உலகம் நுழைந்து விட்டது என்று 1917 இல் வகுத்துரைத்தார் ரசியப் புரட்சியை வழிநடத்திய கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் லெனின். எனவே, வரலாற்றில், ஏகாதிபத்தியங்களின் அடுத்தடுத்த வடிவங்களைப் பற்றிய பகுப்பாய்வுடன் கைலே ஃபெர்ரனா தனது நூலைத் தொடங்குகிறார்.
காலனிகளின் தோற்றம்
18, 19 ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், நெதர்லாந்து முதலிய நாட்டு வணிகச் செயல்பாடுகள் காலனிகளின் உருவாக்கத்துக்கு வழிவகுத்தன.
அமெரிக்காவில் ஐரோப்பியர்கள் குடியேற்றக் காலனிகளை அமைத்தனர். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, அல்ஜீரியா, கென்யா இன்றைய ஜிம்பாப்வே நாடுகளிலும் குடியேற்றக் காலனிகள் உருவாக்கப்பட்டன.
இந்தியாவில் போர்ச்சுகீசிய, டச்சு (நெதர்லாந்து), பிரெஞ்சு, ஆங்கிலேய காலனியாதிக்க சக்திகளுக்கு இடையேயான மோதலின் இறுதியில் பிரித்தானியப் பேரரசின் ஆட்சி நிலைபெற்றது. சீனாவில் பெயரளவில் மன்னராட்சி நீடித்த போதே பல்வேறு ஏகாதிபத்தியங்கள் தமது ஆதிக்கத் தளங்களை நிறுவிக் கொண்டன.
உலகளாவிய வணிகத்தின் துரிதமான வளர்ச்சியால் தூண்டப்பட்டு அதற்கு இணையாக இங்கிலாந்தில் முதலாளித்துவ உற்பத்தி முறை அதாவது தொழில் துறை மூலதனம் தோன்றி வளர்ந்தது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் நடந்த தொழிற்புரட்சி இங்கிலாந்தை உலகின் உற்பத்தி மையமாக்கியது. இங்கிலாந்தின் உற்பத்திப் பொருட்கள் கண்டத்து ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் இந்தியா, சீனா முதலிய நாடுகளிலும் விற்கப்பட்டன. அதே நேரம், இந்த நாடுகள் இங்கிலாந்துக்கு வேளாண் விளைபொருட்களையும் கனிம வளங்களையும் ஏற்றுமதி செய்யும் நாடுகளாக இருந்தன.
இதனை "காலனிகளின் தோற்றம்" என்று கைலே ஃபெர்ரானா குறிப்பிடுகிறார்.
காலனியமும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையே பகைநிலையும்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கிலாந்துடன் போட்டி போடும் வகையில் பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஜப்பான் முதலிய நாடுகளும் துரிதமான முதலாளித்துவ வளர்ச்சியைக் கண்டன. அவை உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்து வேளாண் பொருட்களையும் சுரங்க எடுபொருட்களையும் இறக்குமதி செய்வது என்பதிலிருந்து மூலதனத்தை ஏற்றுமதி செய்வது என்ற கட்டத்தை அடைந்தன.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி உலகம் இந்த ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையே பங்கிடப்பட்டது. இந்தப் பங்கிடலும் மறுபங்கிடலும் போர்களுக்கு வழிவகுத்தன என்று லெனின் வகுத்து முன்வைத்தார். முதல் உலகப் போர் உலகை மறுபங்கீடு செய்வதற்காக ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கும் ஜெர்மன் ஏகாதிபத்தியத்துக்கும் இடையிலான போட்டியின் விளைவே என்று வகுத்துரைத்தார்.
முதல் உலகப் போரின் இறுதியில் பின்தங்கிய நாடான ரசியாவில் பாட்டாளி வர்க்கப் புரட்சி நடந்தது. இது ஏகாதிபத்தியக் கட்டமைப்பில் ஓர் உடைப்பை ஏற்படுத்தியது. 1917 ரசியாவில் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குப் பிறகு தோன்றிய சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் அளித்த உந்துதலும் ஆதரவும் காலனிய நாடுகளில் தேச விடுதலைப் போராட்டங்களை தீவிரமடையச் செய்தன.
இந்தக் காலகட்டத்தை "காலனியமும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையே பகைநிலையும்" என்று கைலே ஃபெர்ரானா வரையறுக்கிறார்.
புதிய காலனியம் [நவ காலனியம்] – ஏகாதிபத்தியங்களுக்கிடையே கூட்டு
இரண்டாம் உலகப் போருக்குப் பின் பல காலனிய நாடுகள் அரசியல் சுதந்திரம் பெற்றன. அவற்றில் இந்தியாவும் ஒன்று.
சீனாவிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் யூகோஸ்லேவியாவிலும் பிற்காலத்தில் வட கொரியாவிலும் கியூபாவிலும் வியட்நாமிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றின. சோவியத் ஒன்றியத்தின் தலைமையிலான சோசலிச முகாம் ஒன்று உருவானது.
பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் முதலிய ஏகாதிபத்திய நாடுகள் அமெரிக்கா தலைமையில் சோவியத் ஒன்றியத்தையும் சோசலிச நாடுகளையும் எதிர்ப்பதற்கு ஒன்றுபட்டன. நேட்டோ என்ற இராணுவக் கூட்டையும் உலக வங்கி, பன்னாட்டு பணவியல் நிதியம் (ஐ.எம்.எஃப்) முதலிய பொருளாதார அமைப்புகளையும் வணிகம் மற்றும் வரிகள் தொடர்பான பொது ஒப்பந்தம் (காட்) என்ற தடையிலா வணிகத்துக்கான கட்டமைப்பையும் உருவாக்கிக் கொண்டன.
அரசியல் அடிப்படையில் சுதந்திரமடைந்த முன்னாள் காலனிய நாடுகள் பொருளாதார அடிப்படையில் ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கு உட்பட்டிருந்தன. எனினும் சோவியத் ஒன்றியத்தின் முன்மாதிரியையும் உதவியையும் கொண்டு தமது உள்நாட்டுப் பொருளாதாரத்தையும் பொதுத்துறை நிறுவனங்களையும் பொதுச் சேவைகளையும் ஓரளவு கட்டியமைத்தன. தொழிலாளர்களின் உரிமைகளும் தொழிற்சங்கங்களும் உலகெங்கும் வலுவடைந்திருந்தன.
இவ்வாறாக இரண்டாம் உலகப் போருக்குப் பின், ஏகாதிபத்தியச் சுரண்டல் புதிய காலனியம் என்ற வடிவத்தை எடுத்தது. இதனை "புதிய காலனியம் [நவ காலனியம்] – ஏகாதிபத்தியங்களுக்கிடையே கூட்டு" என்று கைலே ஃபெர்ரானா வரையறுக்கிறார்.
கானாவின் முதல் தலைமை அமைச்சரும் குடியரசுத் தலைவரும் ஆன டாக்டர் குவாமே நக்ருமா புதிய காலனியத்தை இவ்வாறு வரையறுக்கிறார்.
"நவ காலனியத்தின் சாராம்சம் என்னவென்றால், அதற்கு உட்பட்ட அரசு கோட்பாட்டளவில் சுதந்திரமானது. பன்னாட்டு இறையாண்மைக்கான அனைத்து புறத்தோற்றங்களையும் கொண்டுள்ளது. நடைமுறையில் அதன் பொருளாதார அமைப்பும் எனவே அதன் அரசியல் கொள்கையும் வெளியிலிருந்து இயக்கப்படுகின்றன…. நவ-காலனியத்தின் விளைவாக அயல்நாட்டு மூலதனம் சுரண்டலுக்குப் பயன்படுத்தப்படுகிறதே தவிர குறை வளர்ச்சியடைந்த நாடுகளின் முன்னேற்றத்துக்காக அல்ல. புதிய காலனியத்தின் கீழ் முதலீடு பணக்கார நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் இடையிலான இடைவெளியை அதிகரிக்கின்றனவே தவிர குறைக்கவில்லை".
எதிர்ப்பற்ற ஏகாதிபத்திய ஒற்றுமை அல்லது மீ ஏகாதிபத்தியக் கட்டம்
1990களில் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்தது. சோவியத் சோசலிசக் குடியரசுகள் 15 தனித்தனி நாடுகளாகப் பிரிக்கப்பட்டன. அவற்றிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் முதலாளித்துவ அரசுகள் நிறுவப்பட்டன. 1990களில் பல்தேசிய நாடான யூகோஸ்லேவியாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி வீழ்த்தப்பட்டு அந்நாடு செர்பியா, கிரோஷியா, போஸ்னியா, ஸ்லோவேனியா, வடக்கு மாசிடோனியா, மான்டிநீக்ரோ, கோசவோ என்று பிரிக்கப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் உலகில் மொத்தம் 34 புதிய நாடுகள் உருவாக்கப்பட்டன.
இந்தியா முதலிய புதிய காலனிய நாடுகளில் தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற புதிய தாராளவாதக் கொள்கைகள் செயல்படுத்தப்பட்டன.
சீனா, வட கொரியா, வியட்நாம், லாவோஸ், கியூபா முதலிய ஐந்து நாடுகளில் மட்டுமே மார்க்சிய லெனினியத்தைப் பின்பற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தமது ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டிருந்தன.
இவ்வாறாக, ஏகாதிபத்தியக் கட்டமைவுக்கு எதிரான சக்திகள் கணிசமாக பலவீனமடைந்திருந்தன.
ஆனால், நேட்டோ இராணுவக் கூட்டமைப்பு சோவியத் ஒன்றியத்தின் மறைவுக்குப் பின்னும் தொடர்ந்தது. காட் ஒப்பந்தம் உலக வர்த்தகக் கழகமாக மாற்றப்பட்டது. உலகத்தை ஒற்றை ஏகாதிபத்தியக் கட்டமைப்பாக மாற்றும் செயல்முறை தொடங்கியது. உலக வங்கியும் பன்னாட்டு நாணய நிதியமும் இதற்கான கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டன.
இதனை "எதிர்ப்பற்ற ஏகாதிபத்திய ஒற்றுமை அல்லது மீ ஏகாதிபத்தியம்" (Super Imperialism) என்று கைலே ஃபெரானா வரையறுக்கிறார்.
அமெரிக்கக் கண்டம் முழுவதும் மேலாண்மை, ஐரோப்பாவில் நேட்டோ கூட்டணி மூலம் இராணுவ ஆதிக்கம், அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து முதலிய நாடுகளைக் கொண்ட ஐந்து கண்கள் கூட்டு (Five Eyes Alliance) என்ற உளவுத் துறை ஒருங்கிணைப்பு, தென் கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் மூலம் ஆசியா பசிபிக் மீது ஆதிக்கம் என்ற ஏகாதிபத்தியக் கட்டமைவு உலகளாவிய மேலாதிக்க வலைப்பின்னலை பின்னியிருந்தது. பிற உலக அமைப்புகளான இணையம், நிதித்துறை, வணிகம் முதலியவற்றையும் கட்டுப்படுத்துகிறது.
"எனவே, அமெரிக்க-சீனா உறவு என்பது புதிதாக வளர்ந்து வரும் இறையாண்மை கொண்ட அரசு ஒன்று, அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் உலகப் பேரரசு அல்லது உலக அமைப்பை எதிர் கொள்வதாக இருந்தது. இரண்டு இறையாண்மை கொண்டு அரசுகளுக்கு இடையிலான உறவு பற்றிய சிக்கல் இல்லை, இது. சீனா அமெரிக்க மேலாதிக்கம் நிலவும் உலகப் பேரரசை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதைப் பற்றிய சிக்கல்" என்கிறார் சீன அரசியல் கோட்பாட்டாளர் பேராசிரியர் ஜியாங் ஷுகொங்.
ஏகாதிபத்தியச் சுரண்டல் கட்டமைவு
இவ்வாறு, 1980களுக்குப் பின்னர் ஏகாதிபத்திய உலகத்தின் கட்டமைப்பையும் அதில் சீனாவின் இடத்தையும் வரையறுக்கிறார் ஆசிரியர். அதைத் தொடர்ந்து அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியக் கட்டமைவில் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் எவ்வாறு பன்னாட்டுச் சுரண்டலை நடத்துகின்றன என்ற நிகழ்முறையை விளக்குகிறார்.
அமெரிக்கா தலைமையிலான இந்த மீ-ஏகாதிபத்தியம் மீ-இலாபங்களைக் (Super Profits) குவிக்கிறது. அதற்குப் பயன்படும் முதன்மையான பொறியமைவு சமனற்ற பரிவர்த்தனை என்பதாகும். அதன்படி ஒரு குறை-வருவாய் கொண்ட நாடு உயர் வருவாய் கொண்ட நாட்டுடன் வணிகம் செய்யும் போது உயர் வருவாய் நாடு உண்மை மதிப்பின் ஒரு தொகையை ஈட்டுகிறது குறை வருவாய் நாடு உண்மை மதிப்பின் ஒரு தொகையை இழக்கிறது. இது எந்த வணிகக் கணக்கீடுகளிலும் வெளிப்படுவதில்லை.
எடுத்துக்காட்டாக, ஆப்பிள் ஐஃபோன் உற்பத்தி காலனிய நாடுகளில் நடக்கிறது. அந்த நாடுகளின் முதலாளிகளின் இலாபம், தொழிலாளர்களின் கூலி உட்பட மொத்த உற்பத்தி விலை $200 ஆக உள்ளது. ஆனால், அது $649 க்கு விற்பனையாகிறது. அதாவது $449 ஆப்பிள் நிறுவனத்துக்கும் ஏகாதிபத்திய நாடுகளின் செயல்படும் பிற வணிக நிறுவனங்களுக்கும் அந்த நாடுகளின் அரசுகளுக்கு வரியாகவும் போகின்றன. ஆப்பிள் $108 இலாபமாக ஈட்டுகிறது.
இவ்வாறு உலகமயமான உற்பத்தியில் மூன்றாம் உலக நாடுகளில் சேர்க்கப்படும் மதிப்பிலும் உபரி-மதிப்பிலும் பெரும்பகுதியை மேற்கத்திய ஏகாதிபத்திய நிறுவனங்களும் நாடுகளும் கைப்பற்றிக் கொள்கின்றன. இந்தச் சமனற்ற பரிவர்த்தனை உலக ஏகாதிபத்தியக் கட்டமைப்பின் முதன்மைச் சுரண்டல் வடிவமாக உள்ளது. ஜான் ஸ்மித் எழுதிய "21 ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியம்" என்ற நூல் உலகளாவிய உற்பத்தி நிகழ்முறையில் புதிய காலனிய நாடுகளில் இருந்து ஏகாதிபத்திய நாடுகளுக்கு மதிப்பு கடத்தப்படும் பொறியமைவுகள் பற்றி விவரிக்கிறது.
இத்துடன் கடன்கள் மீதான வட்டி, அறிவுசார் சொத்துகளுக்கான உரிமத் தொகை போன்றவையும் ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களால் மூன்றாம் உலக நாடுகளிலிருந்து கறக்கப்படுகின்றன.
இந்தப் பொறியமைவை பேணுவதற்கு இரண்டாம் நிலைப் பொறியமைவுகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் ஒன்றோ இரண்டோ அல்லது அனைத்துமோ குறிப்பிட்ட நாடுகளின் பொருளாதார, அரசியல், இராணுவ நிலைமைகளுக்கு ஏற்பப் பயன்படுத்தப்படுகின்றன.
1. கட்டமைப்புச் சீர்திருத்தம்
ஒரு புதிய காலனிய நாடு, சமனற்ற பரிவர்த்தனையின் காரணமாகவும் கடன் சுமை காரணமாகவும் பன்னாட்டுக் கொடுப்புகளில் பற்றாக்குறையை எதிர்கொள்ளும்போது பன்னாட்டு பணவியல் நிதியம் (ஐ.எம்.எஃப்) அதற்குக் கடன் வழங்குகிறது. அந்தக் கடனுக்கான நிபந்தனையாக பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல், கல்வி, மருத்துவம், சுகாதாரம் முதலிய பொதுச் சேவைகளை தனியார் மயமாக்குதல், இயற்கை வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு திறந்து விடுதல், நிதித்துறைக்கட்டமைப்பை பன்னாட்டு மூலதனத்துக்கு திறந்து விடுதல் ஏற்றுமதி இறக்குமதி வணிகத்தில் தாராளவாதக் கொள்கைகளை செயல்படுத்தல் முதலியவற்றை விதிக்கிறது. இந்த நிபந்தனைகள் கடன் பெறும் நாட்டின் பொருளாதாரத்தை மேலும் பலவீனப்படுத்தி அவை மேலும் ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கு விழுவதாக ஆகிறது. இவை "கட்டமைப்புச் சீர்திருத்தம்" என்ற பெயரில் கடனுக்கு நிபந்தனையாக முன்வைக்கப்படுகின்றன.
மெக்சிகோவிலும் பிற லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் இவை முதலில் சுமத்தப்பட்டன. முன்னாள் யூகோஸ்லேவியாவிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் இவை பின்பற்றப்பட்டன. இந்தியாவும் 1991 இல் பன்னாட்டு பணவியல் நிதியத்தில் கடன் வாங்குவதற்கு நிபந்தனையாக கட்டமைப்புச் சீர்திருத்தம் சுமத்தப்பட்டது. எடுத்துக்காட்டாக தனியார் மயம், தாராளமயம், உலகமயம் என்ற முழக்கத்தின் கீழ் நமது இந்தியப் பொருளாதாரத்தில் புதிய தாராளவாத மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டன.
இந்தியாவின் ஐ.எம்.எப். கடன்கள் – காலவரிசை மற்றும் நிபந்தனைகள்
(செயற்கை நுண்ணறிவு ChatGPT தொகுத்தது)
|
காலம் |
கடன் வகை & தொகை |
முக்கிய நிபந்தனைகள் / குறிப்புகள் |
|
1947–1975 |
~US $10 கோடி (1947–55); US $176 கோடி (1957–75) |
அடிப்படை கொடுப்புச் சமநிலைக்கான (BoP) ஆதரவு; நிபந்தனைகள் எதுவும் பதிவில் இல்லை. |
|
1978–1981 |
SDR 52.9 கோடி (சேமவைப்பு நிதி) |
சலுகைகளுடன்; நிபந்தனைகள் குறிப்பிடப்படவில்லை. |
|
1981–84 |
EFF – US $560 கோடி (பெறப்பட்டது US $390 கோடி) |
இறக்குமதி தாராளமயம்; ரூபாய் மதிப்பிறக்கம் (Devaluation). |
|
ஜூலை 1990 |
சேமவைப்புத் தொகை திரும்பப்பெறுதல் |
குறுகியகால நாணய கையிருப்பு நிலைநிறுத்தல்; புதிய நிபந்தனைகள் இல்லை. |
|
செப். 1990 |
தங்கப் பங்கு (Gold Tranche) – US $55 கோடி |
உள்துறை புழக்கத்துக்கான ஆதரவு; குறைந்த அல்லது எவ்வித நிபந்தனைகளும் இல்லை. |
|
ஜன. 1991 |
SBA (முதல் கடன்) – $77.5 கோடி CCFF – $102 கோடி |
1991 பட்ஜெட்டில் சீர்திருத்தங்களை உறுதி செய்ய வேண்டும் என்ற நிபந்தனை. |
|
நவ. 1991 |
Stand-By Credit – $220 கோடி மொத்தம் $350 கோடி |
முக்கிய சீர்திருத்தங்கள்: ரூபாய் மதிப்பிறக்கம், மானியங்கள் வெட்டு, வணிகமும் முதலீடும் தாராளமயமாக்கப்படுதல் |
அடுத்த இதழில் வெளியாகவிருக்கும் இறுதிப் பகுதியில் பிற இரண்டாம் நிலைப் பொறியமைவுகளைப் பற்றியும் சீனாவின் பன்னாட்டு செயல்பாடுகள் பற்றியும் பார்க்கலாம்.
(WHY THE WORLD NEEDS CHINA
Development, Environmentalism, Conflict Resolution & Common Prosperity
KYLE FERRANA)
- மா.சிவகுமார்