(முந்தைய இதழில் "படித்துப் பாருங்கள்" பிரிவில் வெளியான நூல் அறிமுகத்தின் இறுதிப் பகுதி)
ஏகாதிபத்தியத்தின் கூறுகளைக் கொண்டுள்ள ஒரு பொருளாதாரம் ஏகாதிபத்தியத்தைத் தகர்ப்பதாக இருக்க முடியுமா? பொதுவுடைமையை இலட்சியமாகக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியில் தனியார் முதலாளிகளை உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ள முடியுமா?
இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்கும் “உலகிற்கு சீனா ஏன் தேவை – வளர்ச்சி, சூழலியல், தகராறு தீர்ப்பு, பொதுவான வளம்” என்ற கைலே ஃபெர்ரனா எழுதிய நூல் அறிமுகத்தின் முதல் பகுதியில் இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியிலும் இருபத்தியொன்றாம் நூற்றாண்டிலும் சீனா எதிர்கொண்ட ஏகாதிபத்தியக் கட்டமைப்பு பற்றிய விவரிப்பைப் பார்த்தோம்.
ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கான சமனற்ற பரிவர்த்தனை பற்றியும் அதைப் பேணுவதற்கு ஏகாதிபத்தியங்கள் பயன்படுத்தும் இரண்டாம் நிலைப் பொறியமைவுகளில் முதலாவதான "கட்டமைப்புச் சீர்திருத்தம்" பற்றியும் பார்த்தோம்.
கட்டுரையின் இந்த இறுதிப் பகுதியில் ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கான, பிற இரண்டாம் நிலைப் பொறியமைவுகளில் இருந்து தொடங்குவோம்.
2. பொருளாதாரத் தனிமைப்படுத்தல்
சில புதிய காலனிய நாடுகளில், ஏகாதிபத்தியக் கட்டமைவின் தலைமை சக்தியான அமெரிக்கப் பேரரசுக்குக் கட்டுப்படாத ஆட்சியாளர்கள் அதிகாரத்துக்கு வருகின்றனர். அவர்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுகின்றன. ஏகாதிபத்திய நிதி நிறுவனங்கள் மூலம் பன்னாட்டு பணப் பரிவர்த்தனைகள் மறுக்கப்படுகின்றன. பிற நாடுகள் அவற்றுடன் வணிகம் செய்வது தடுக்கப்படுகிறது.
தென் அமெரிக்காவில் உள்ள வெனிசுலா, கரீபியன் தீவான கியூபா, வட கொரியா, ஈரான் முதலிய நாடுகள் இவ்வாறு உலகப் பொருளாதாரத்தில் இருந்து ஏகாதிபத்தியத் தடைகள் மூலம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக இந்த நாடுகளின் பொருளாதாரம் நலிவடைகிறது. நாட்டில் உணவுப் பாதுகாப்பு, மருத்துவ வசதிகள், தொழில்நுட்ப முன்னேற்றம் தடுக்கப்படுகிறது.
இதனை எதிர்த்து மக்கள் கலகம் செய்து ஆட்சியாளர்களை மாற்ற வேண்டும், புதிய ஆட்சியாளர்கள் மேற்கத்திய ஏகாதிபத்தியக் கட்டமைப்புக்கு உகந்தவர்களாக அமைய வேண்டும் என்பது இந்தத் தனிமைப்படுத்தலின் நோக்கம்.
3. இராணுவத் தலையீடு
சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும்போது இராணுவத் தாக்குதல்கள் மூலம் அடம் பிடிக்கும் நாடுகளின் ஆட்சியாளர்களை அகற்றும் செயல்பாடு கடந்த 30 ஆண்டுகளில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 1989ஐத் தொடர்ந்த 25 ஆண்டுகளில் அமெரிக்க இராணுவம் பனாமா, சோமாலியா, ஹைத்தி, போஸ்னியா, கோசோவோ, ஆப்கானிஸ்தான், சூடான், ஈராக், யேமன், பாகிஸ்தான், லிபியா, சிரியா நாடுகளில் நேரடியாக தாக்குதல் நடத்தியுள்ளது.
4. மென் அதிகாரம்
புதிய காலனிய நாடுகளின் அரசியல், பண்பாடு இவற்றை ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கு (சமனற்ற பரிவர்த்தனை) உகந்ததாக மாற்றி அமைக்கும் வகையில் ஊடகங்கள், திரைப்படங்கள், 21 ஆம் நூற்றாண்டில் சமூக வலைத்தளங்கள், அரசுசார் தொண்டு நிறுவனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
புதிய தாராளவாதக் கொள்கைகளை செயல்படுத்தியதால் இந்த நாடுகளில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, வேலையின்மை அதிகரிக்கும்போது போராட்டங்கள் வெடிக்கின்றன. போராடும் குழுக்களுக்கு நிதி உதவி அளித்து அவர்களுக்கு வழிகாட்டி ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவான ஆட்சியாளர்களை அதிகாரத்துக்குக் கொண்டு வருவதற்கு வழி வகுக்கின்றன. பல நேரங்களில் ஒரு தரப்பைச் சேர்ந்த ஏகாதிபத்தியத் தரகு ஆட்சியாளரை நீக்கிவிட்டு இன்னொரு தரப்பைச் சேர்ந்த ஆட்சியாளரைக் கொண்டு வருவதற்கும் தயங்குவதில்லை. எகிப்தில், 1981 முதல் 2011 வரை ஆட்சி செய்த ஹோஸ்னி முபாரக் என்ற நீண்ட கால அமெரிக்கக் கூட்டாளி, அங்கு நடந்த மக்கள் எழுச்சியின் மூலம் நீக்கப்பட்டு அமெரிக்காவுக்கு ஆதரவான ஆட்சியாளர்கள் (இப்போதைய நாட்டுத் தலைவர் எல் சிசி 2014 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றவர்) அமர்த்தப்பட்டனர்.
இந்த எழுச்சிகள் அனைத்தும் பொதுவாக வண்ணப் புரட்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. செர்பியாவில் (2000) ஸ்லோபோடான் மிலோசவிச்சுக்கு எதிரான புல்டோசர் புரட்சி, ஜார்ஜியாவில் (2003) எடுவர்டோ ஷெவர்நாட்சேவுக்கு எதிரான ரோஸ் புரட்சி, செக்கோஸ்லோவாகியாவில் (1989) வெல்வெட் புரட்சி, உக்ரைனில் (2004) விக்டர் யானுகோவிச்சுக்கு எதிரான ஆரஞ்சுப் புரட்சி, கிர்கிஸ்தானில் (2005) அஸ்கர் அக்கயேவுக்கு எதிரான துலிப் அல்லது பிங்க் புரட்சி, லெபனானில் (2005) செடார் புரட்சி, மியன்மாரில் (2007) செடார் புரட்சி, எகிப்து, துனீசியா, ஜோர்டான், மொராக்கோ முதலிய நாடுகளில் அரபு வசந்தம் (2010 முதல் 2012 வரை), 2014 இல் உக்ரைனில் யூரோ மைதான் போராட்டங்கள், ஹாங்காங்கில் 2019-20 இல் சனநாயக ஆதரவுப் போராட்டங்கள் எனப்படுபவை என்று இவை தொடர்ந்து நடத்தப்படுகின்றன.
இதே முறையில் நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாளம் முதலிய நாடுகளில் கடந்த சில ஆண்டுகளில் ஆட்சி மாற்றங்கள் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இவற்றில் சனநாயகத்துக்கான தேசிய அறக்கட்டளை (National Endowment for Democracy) என்ற அமெரிக்க நிதி அமைப்பு தீவிரமாகப் பங்கேற்கிறது. போராட்டக் குழுக்களுக்கு நிதி வழங்குகிறது. USAID என்ற அமைப்பும் தனது அரசுசாரா அமைப்புகள் மூலம் இந்த வண்ணப் புரட்சிகளை ஊக்குவித்து வழிநடத்துகிறது.
ஏகாதிபத்திய எதிர்ப்பு நாடுகள்
ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக பல்வேறு உலக நாடுகள் செயல்படுகின்றன. "விவசாயிகள் – பாட்டாளிகளின் ஏகாதிபத்திய எதிர்ப்பு" என்ற இயல் 3 இல் வெனிசுலா, கியூபா நாடுகளில் விவசாயிகள் – தொழிலாளர் கூட்டணி அதிகாரத்துக்கு வந்து ஏகாதிபத்தியத்துக்கு எதிராக நடத்திய போராட்டங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆயுதம் தாங்கிய போராட்டம் என்ற தலைப்பில் கொரியா, வியட்நாம், மியன்மார் முதலிய நாடுகளின் போராட்டங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஆனால், ஒரு சோசலிச முகாம் இல்லாத நிலையில் ஆயுதம் தாங்கிய போராட்டத்துக்கான வெளி வெகுவாகக் குறைந்திருக்கிறது.
இயல் 4 இல் முதலாளித்துவ ஏகாதிபத்திய எதிர்ப்பைக் கொண்ட நாடுகளைப் பற்றிப் பேசப்படுகிறது. இதில் 1979 இல் இஸ்லாமியப் புரட்சி என்ற வடிவில் முதலாளிகள் அதிகாரத்தைக் கைப்பற்றிய ஈரானையும் 1991 இல் சோவியத் ஒன்றியத்தின் உடைவில் தோன்றிய ரசியாவையும் எடுத்துக் கொள்கிறார், ஆசிரியர். இந்த இரண்டு நாடுகளின் மீதும் பொருளாதாரத் தடைகள், பதிலிப் போர்கள், ஊடக அவதூறுகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. ஆனால், இந்த நாடுகளின் முதலாளித்துவ வர்க்கம் ஏகாதிபத்தியச் சுரண்டலை எதிர்த்து தமது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது. ஆனால், தொழிலாளர்களும் சிறுவுடைமையாளர்களும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகின்றனர்.
சரி, ஏகாதிபத்திய நாடுகளுக்கு வெளியே விவசாயிகள்-தொழிலாளர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பு அல்லது முதலாளித்துவ ஏகாதிபத்திய எதிர்ப்பு இருந்தால் ஏகாதிபத்திய நாடுகளுக்கு உள்ளே எத்தகைய எதிர்ப்பு இயக்கங்கள் நிலவுகின்றன என்று இயல் 5 இல் ஆய்வு செய்யப்படுகிறது.
அமெரிக்காவில் பெர்னி சாண்டர்ஸ் என்ற மேலவை உறுப்பினர், பிரிட்டனில் தொழிலாளர் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட ஜெரமி கோர்பின் முதலியோர் அரசியல் அதிகாரத்துக்கு வரமுடியவில்லை. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் முதலிய ஏகாதிபத்திய நாடுகளில் சமூக ஜனநாயகக் கட்சிகள் சீர்திருத்தங்கள் மூலமாக மாற்றங்களைக் கொண்டு வருவது என்ற பாதைக்குள் நுழைந்தன. பன்னாட்டு அளவில் தத்தமது நாட்டின் ஏகாதிபத்திய அரசுகளின் வெளியுறவுக் கொள்கையை ஆதரிக்கின்றனர். போர் எதிர்ப்பு, ஆதிக்க மறுப்பு என்ற அடிப்படையில் ஈராக் போரையும் பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் இனவழிப்பையும் சொல்லளவுக்கு எதிர்த்தாலும் நடைமுறையில் அது அந்நாட்டு அரசுகளின் கொள்கைகளிலும் செயல்பாடுகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.
உலக நிலைமை - தொகுப்பாக
21 ஆம் நூற்றாண்டின் உலக ஏகாதிபத்தியக் கட்டமைப்பில் ஏகாதிபத்தியச் சுரண்டலை எதிர்க்கும் அல்லது மறுக்கும் நாடுகளில்
- மக்கள் போராட்டங்களின் மூலம் ஆட்சியாளர்கள் மாற்றப்படுகின்றனர்.
- அல்லது நேரடி இராணுவத் தலையீடு மூலம் ஆட்சியாளர்கள் மாற்றப்படுகின்றனர்.
- இரண்டும் நடக்காத நிலையில் பொருளாதாரத் தடையால் அவை தனிமைப்படுத்தப்படுகின்றன. ஊடக அவதூறு பரப்புரையால் வில்லனாக்கப்படுகின்றன.
வெனிசுலா, கியூபா, வடகொரியா தொடங்கி ஈரான், ரசியா முதலிய நாடுகள் தனிமைப்படுத்தப்பட்டு உலகப் பொருளாதாரத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுகின்றன. லிபியா, சிரியா, ஈராக், செர்பியா போன்ற நாடுகளில் ஏகாதிபத்திய இராணுவத் தலையீடு மூலம் ஆட்சியாளர்கள் மாற்றப்பட்டு கீழ்ப்படுத்தப்பட்டன. இலங்கை, பாகிஸ்தான், வங்க தேசம், உக்ரைன், எகிப்து, போலந்து, செக்கோஸ்லோவோகியா முதலிய நாடுகளில் மக்களின் எழுச்சியைப் பயன்படுத்தி ஏகாதிபத்திய ஆதரவு ஆட்சியாளர்கள் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளன. இதற்கு அமெரிக்காவின் நிதி வலிமையும் உலகளாவிய தொண்டு நிறுவனங்களின் கட்டமைப்பும் கருவிகளாகப் பயன்படுகின்றன.
இவ்வாறு உலகின் பெரும்பாலான நாடுகள் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியக் கட்டமைவின் சுரண்டலுக்கு உட்படுத்தப்பட்டு புதிய காலனிகளாகவே தொடர்கின்றன.
ஏகாதிபத்திய நாடுகளுக்குள் ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கு எதிராகவும் பிற நாடுகளின் மீது ஏகாதிபத்திய அரசியல் இராணுவத் தாக்குதல்களுக்கு எதிராகவும் செயல்படும் கட்சிகளும் போராட்டங்களும் விளிம்பு நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளன.
சீனா - மாற்றுப் பாதை உண்டா?
இந்த உலகச் சூழ்நிலையில் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி தனது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஏகாதிபத்திய கட்டமைப்பு சீர்திருத்தம், தனிமைப்படுத்தல், இராணுவத் தாக்குதல், மென்அதிகாரம் இவற்றை எதிர்கொண்டு தாக்குப்பிடித்திருக்கிறது.
சீனா தனது சீர்திருத்தம் – திறந்து விடுதல் பாதையைப் பின்பற்றாமல் இருந்திருந்தால், அதாவது "முதலாளித்துவப் பாதை" என்று அழைக்கப்படுவதை தவிர்த்திருந்தால் என்ன நடந்திருக்கும்?
- சீனாவின் மகத்தான பண்பாட்டுப் புரட்சியின் இறுதியில் மாவோவின் இறுதிக்காலத்தில் அதிகாரத்துக்கு வந்த நால்வர் கும்பலின் பாதையில் பயணித்து 1989இல் பிற சோசலிச நாடுகளைப் போல கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி வீழ்த்தப்பட்டிருக்கலாம். சீனா பல நாடுகளாகச் சிதைவுண்டு 1990களில் ரசியாவைப் போல கடும் புதிய தாராளவாதக் கொள்கைக்கு உள்ளாகியிருக்கலாம்.
- அல்லது பண்பாட்டுப் புரட்சியைத் தாண்டி, எதிர்ப்புரட்சியையும் தவிர்த்து மிக மோசமான வளர்ச்சி குன்றிய வடிவத்தில், மீ-ஏகாதிபத்தியத்தின் பொருளாதாரத் தடைகளையும் தனிமைப்படுத்தலையும் எதிர் கொண்டிருக்கலாம். சீனாவின் பெரும் எண்ணிக்கையிலான நாட்டுப்புற உழவர்கள் தொடர்ந்த பொருளாதார துயரத்தை எதிர்கொண்டிருக்கலாம். இது இன்றைய வட கொரியாவின் நிலையை அல்லது கியூபாவின் நிலையை ஒத்திருக்கும்.
- இத்தகைய கற்பனைகளை ஆய்வு செய்வதற்குப் பதிலாக, சீனாவை ஒத்த நாடான இந்தியாவுடன் ஒப்பிடலாம் என்று சொல்கிறார், ஆசிரியர். இரண்டு நாடுகளுமே 1940களின் இறுதியில் ஏகாதிபத்திய ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரம் பெற்றன. 1980-கள் வரை இரண்டு நாடுகளின் ஜி.டி.பிகளும் கிட்டத்தட்ட சமமாக இருந்தன. 2021 ஆம் ஆண்டில் சீனாவின் ஜி.டி.பி. இந்தியாவின் ஜி.டி.பியை விட ஐந்து மடங்காக ஆகியிருந்தது. இந்தியாவின் கைக்குழந்தை இறப்பு வீதம் சீனாவின் இறப்பு வீதத்தை விட ஐந்து மடங்காக இருந்தது. கல்வியறிவு, குடிமக்களின் வாழ்நாள் எதிர்நோக்கு, பொதுக் கட்டமைப்பு இவற்றில் இந்தியா சீனாவை விட பின்தங்கியுள்ளது. ஒரு நாளைக்கு $6.85 வருவாய்க்கும் குறைவாகப் பெறும் மக்கள் தொகை இந்தியாவில் 84% ஆக உள்ளது, சீனாவில் இது வெறும் 25% ஆகக் குறைந்திருந்தது.
ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளுடனான உறவுகளில் சீனா ஏகாதிபத்தியச் சுரண்டல் தன்மையைக் கொண்டுள்ளதா?
கெர்னாட் க்யோலர் என்ற ஆய்வாளர் வணிக பரிவர்த்தனைகளையும் செலாவணி விகிதங்களையும் ஆய்வு செய்து ஆப்பிரிக்காவுக்கும் "முன்னேறிய நாடுகளுக்கும்" இடையே சமனற்ற பரிவர்த்தனை அந்த நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16% முதல் 20% ஆக இருந்தது என்றும் அதே நேரம் சீனாவுடனான அவற்றின் சமனற்ற பரிவர்த்தனை அவற்றின் ஜி.டி.பியில் 0.5% என்றும் கண்டறிந்தார்.
சீனா ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பெருமளவு கச்சாப் பொருட்களை கறந்தாலும் அது சமனற்ற பரிவர்த்தனையின் ஆதாயத்தை ஏன் குறைவாகப் பெறுகிறது என்ற கேள்வியை எழுப்பும் ஆசிரியர், இதற்குக் காரணம் சீனாவின் உற்பத்திப் பொருட்களின் பெரும்பகுதி ஏகாதிபத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. எடுத்துக்காட்டாக, அங்கு உற்பத்தியாகும் ஆப்பிள் ஐபேட், ஐஃபோன்கள் அனைத்துமே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அந்த உற்பத்தி ஆலைகளை நடத்துவது தைவானைச் சேர்ந்த ஹோன்ஹாய் நிறுவனம். எனவே, இந்த இறுதி சேர்த்துப் பொருத்தலின் பெரும்பகுதி இலாபம் தைவான் நிறுவனத்துக்குச் செல்கிறது. ஒட்டுமொத்த ஐஃபோன்கள், ஐபேட்கள் இலாபம் அமெரிக்க பன்னாட்டு பெரு நிறுவனமாக ஆப்பிள்-க்குச் செல்கிறது.
சீனாவும் மூலதன ஏற்றுமதியும்
2010 முதல் 2018 வரை சீனா தனது அயல்நாட்டு முதலீடுகளில் இருந்து பெற்ற வருவாய் சராசரியாக 3 விழுக்காட்டைத் தாண்டவில்லை. அதே நேரம், சீனாவிற்குள் செய்யப்பட்ட அயல்நாட்டு முதலீடுகளில் இருந்து அந்த முதலீட்டாளர்கள் பெற்ற வருவாய் 5 முதல் 6 விழுக்காடாக இருந்தது. அதாவது, குறிப்பிட்ட அளவு முதலீட்டை எடுத்துக் கொண்டால் சீனாவில் செயல்படும் அயல்நாட்டு மூலதனங்கள் ஈட்டும் இலாபம், சீன முதலீடு பிற நாடுகளில் ஈட்டும் இலாபத்தை விட இரண்டு மடங்கு.
எனவே, சீனா வெளிநாடுகளில் செய்யும் முதலீடுகளில் இருந்து அதுபெறும் நிகர இலாபம் எதிர் எண் ஆக உள்ளது. 2014 ஆம் ஆண்டில் $1300 கோடி நிகர இலாபம் ஈட்டியதைத் தவிர அனைத்து ஆண்டுகளிலும் அது நிகர இழப்பையே எதிர்கொண்டிருக்கிறது. அதாவது, சீனாவின் முதலீடுகளுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் தொகையை சீனாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் எடுத்துச் செல்லும் தொகையைக் கழித்து வரும் தொகை எப்போதுமே சீனாவுக்கு எதிர்நிலையாகவே உள்ளது.
இதற்கான பொருளாதார அடிப்படை என்ன?
சீனாவின் பெல்ட் ரோட் முன்னெடுப்பு 2013 இல் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து
- அமெரிக்கா அதற்குப் போட்டியாக "புதிய பட்டுப் பாதை"த் (New Silk Road) திட்டத்தை 2017 இல் அறிவித்தது.
- 2022 இல் இந்தோ-பசிபிக் பொருளாதாரச் சட்டகம் (Indo Pacific Economic Framework) என்ற குழப்படியான திட்டத்தை அறிவித்தது. அதில் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகள் இணைக்கப்பட்டன.
- 2021 இல் முன்னணி ஏகாதிபத்திய நாடுகளின் கூட்டமைப்பான G7 "உலகை மேம்பட்டதாக மீட்டமைப்பதற்கான கூட்டணி" (Build Back Better World Partnership) ஒன்றை அறிவித்தது.
- 2021 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியம் "உலக நுழைவாயில்" (Global Gateway) என்ற திட்டம் $30,000 கோடி செலவில் உள்கட்டமைப்புகளை உருவாக்கப் போவதாக அறிவித்தது.
இந்தத் திட்டங்கள் எதுவுமே ஒரு கட்டமைப்பைக் கூட உருவாக்கவில்லை என்கிறார் கைலே ஃபெர்ரனா. இவை இனிமேலாவது நடைமுறைக்கு வருமா என்பதும் கேள்விக்குரியதே!
அப்படியானால் இந்த நாடுகளின் மூலதன ஏற்றுமதி எங்குச் செல்கிறது? 2018-2021 OECD தரவுகளின்படி, ஜி7 உறுப்பினர்களில் முதலீட்டில் அதிக அளவு கட்டுமானத்துறையில் செய்திருப்பது இத்தாலி. அந்நாட்டின் மொத்த வெளிநாட்டு முதலீட்டில் 7.7% கட்டுமானத் துறைக்குப் போகிறது. மற்ற ஜி7 நாடுகள் ஒவ்வொன்றிலும் நிதித்துறை, காப்பீட்டில் 20% முதலீடு செல்கிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை நிதித்துறை முதலீடு 64.8% ஆகவும் கட்டுமானத் துறையில் 0.1% ஆகவும் உள்ளது.
மேற்கத்திய நிதி மூலதன உடைமையாளர்கள் இலாபத்தின் மீது குறியாக உள்ளனர். மேலும், விளிம்புநிலை நாடுகளை வளர்ச்சியடையாத நிலையில் வைத்திருப்பது அவர்களது சுரண்டலுக்கு உகந்ததாக உள்ளது. ஓர் ஏழை ஆப்பிரிக்க நாட்டில் ஒரு தொடர்வண்டி பாதை அல்லது மின்உற்பத்தி நிலையத்தை கட்டுவது அபாயம் நிறைந்த முயற்சியாகக் கருதப்படுகிறது. மேலும் அவற்றில் இருந்து இலாபம் ஈட்டுவது இயலாத வேலை என்றும் கருதப்படுகிறது.
லாபம் குறைவான உள்கட்டமைப்புத் திட்டங்கள்
ஆனால், மக்கள் சீனாவைப் பொறுத்தவரையில் $50,000 கோடிக்கும் அதிகமான அயல் முதலீடுகள் கட்டுமானம் தொடர்பானவை. இது $83,800 கோடி பெல்ட் அண்ட் ரோட் முன்னெடுப்பில் 60 விழுக்காடு ஆகும். அதன் மொத்த வெளிநாட்டு முதலீடான $2.2 இலட்சம் கோடியில் 22.7 விழுக்காடு ஆகும்.
2000 ஆண்டுக்கும் 2020க்கும் இடைப்பட்ட காலத்தில் சீன மக்கள் குடியரசு ஆப்பிரிக்க நாடுகளில் 13,000 கிலோமீட்டர் தொடர் வண்டி பாதைகளையும் 1 இலட்சம் கிலோமீட்டர் நெடுஞ்சாலைகளையும் 1000 பாலங்களையும் 100 துறைமுகங்களையும் அமைக்க உதவியுள்ளது என்று சீன செய்தி நிறுவனம் ஷின்ஹுவா பதிவு செய்கிறது.
கடன் பொறியா?
ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளை சீனா கடன் பொறியில் சிக்க வைக்கிறது என்ற குற்றச்சாட்டை அடுத்து எடுத்துக் கொள்கிறார், ஆசிரியர். இது தொடர்பான புள்ளிவிவரங்களை ஆராய்ந்து சீனா தனது கடன்களை சரியான நேரத்தில் வசூலிப்பதில்லை. கடன் செலுத்தத் தவறும்போது கடன்களை மறுசீரமைப்பது புதிய கடன்களைக் கொடுப்பது என்ற அணுகுமுறையைக் கையாள்கிறது.
- 2019 இல் வெனிசுலா, 2015 இல் பாகிஸ்தான், 2006 இல் ஜிம்பாப்வே, 2010களில் சாட், மொசாம்பிக், எத்தியோப்பியா, காங்கோ குடியரசு மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளில் கடன் காலத்தை நீட்டித்து வட்டி வீதத்தைக் குறைத்திருக்கிறது. 2016 இல் அங்கோலாவுக்கு சீன ஏற்றுமதி இறக்குமதி வங்கி வழங்கிய $750 கோடி கடன் மறுசீரமைக்கப்பட்டது.
- தான்சானியா – ஜாம்பியா தொடர்வண்டி பாதைத் திட்டத்துக்கான கடனைத் திருப்பிச் செலுத்துவது பத்து ஆண்டுகளுக்குத் தள்ளிப் போடப்பட்டது.
- கானா, நைஜர் இரண்டு நாடுகளின் கடன்கள் பதினைந்து ஆண்டுகளுக்குப் பதிலாக இருபது ஆண்டுகளில் செலுத்துவதாக மாற்றப்பட்டன.
- 2022இல் சீனாவின் அமைச்சர், 17 ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழங்கப்பட்ட 23 வட்டியில்லாக் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். அவை முந்தைய ஆண்டில் முதிர்ச்சியடைந்திருந்தன.
இலங்கை
இலங்கையில் ஹம்பன் தோட்டா துறைமுகத்தைக் கட்டுவதற்கு சீன நிறுவனங்கள் கடன் கொடுத்திருந்தன. இலங்கை அரசாங்கம் கடனை அடைக்க முடியாத நிலையில் 2017 ஆம் ஆண்டு அந்தத் துறைமுகம் சீன அரசு நிறுவனம் ஒன்றுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டது.
ஆனால், "இலங்கையின் கடன் நெருக்கடி சீனக் கடனுடன் தொடர்பற்றது, அது மேற்கத்திய மூலதனச் சந்தைகளில் இருந்து பெறப்பட்ட கடன்களாலும் இலங்கையின் பொருளாதார முறையினாலும் தூண்டப்பட்டது. உண்மையில் சீன நிறுவனம் கடனுக்குப் பதிலாக துறைமுக குத்தகையைப் பெறவில்லை. கடுமையான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு $110 கோடி கொடுத்து சீன அரசு நிறுவனம் துறைமுகத்தைக் குத்தகைக்கு எடுத்தது. இந்தத் தொகையைப் பயன்படுத்தி இலங்கை அரசு மற்ற கடன்களை அடைக்கவும் தனது அன்னியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்கவும் செய்தது" என்று சாத்தம் ஹவுஸ் ஆய்வுக் கட்டுரை ஒன்று கூறியது.
சீன முதலீடுகள் - தொகுப்பாக
புதிய காலனிய நாடுகளுடன் வணிகம் நடத்துவதன் மூலம் சீனா உலக ஏகாதிபத்தியக் கட்டமைப்புக்குள் செயல்படுகிறது. அதே நேரம் அந்த நாடுகளின் உள்நாட்டுப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் ஏகாதிபத்தியச் சுரண்டலை பலவீனப்படுத்துகிறது.
சீனா, இந்த நாடுகளில் செய்யும் முதலீடுகள் உள் கட்டமைப்புகளிலும் பிற மாறா மூலதனக் கூறுகளிலும் செய்யப்படுகிறது. எடுத்துக்காட்டாக, 2019 ஆம் ஆண்டு கானாவுடன் போடப்பட்ட $200 கோடி ஒப்பந்தத்தை எடுத்துக் கொள்வோம். இது அந்நாட்டில் சாலைகள், தொடர்வண்டி பாதைகள், மற்றும் பிற போக்குவரத்துக் கட்டமைப்பை உருவாக்குகிறது. இது கானாவின் தங்கச் சுரங்கத்தில் இருந்து எடுக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் தங்கத்தின் விலையை நேரடியாக உயர்த்தாது. ஆனால், அது கானாவில் அதிக கூலி தரக்கூடிய மேம்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இது தொழிலாளர்களின் சுதந்திரத்திலும் இடம் பெயர்வதிலும் உள்ள தடைகளை நீக்கும். சமனற்ற பரிவர்த்தனைக்கான அடித்தளத்தை பலவீனப்படுத்தும்.
மேலும், கடந்த 10 ஆண்டுகளில் சீனா ஏகாதிபத்தியக் கட்டமைவின் மிகப்பெரிய பகை சக்திகளான ஈரானிலும் ரசியாவிலும் முதலீடுகளை அதிகரித்துள்ளது. அந்நாடுகளுடனான வணிகத்தை அதிகரித்துள்ளது.
நவம்பர் 2004 இல் கியூபாவின் தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ "அனைத்து மூன்றாம் உலக நாடுகளுக்கும் சீனா மிகவும் உயர் நம்பிக்கை தருவதாகவும் மிகச் சிறந்த முன்மாதிரியாகவும் விளங்குகிறது" என்று கூறியதை மேற்கோள் காட்டி தேசிய விடுதலைக்கான சக்திகள் சீனாவில் இருந்து ஆதரவு பெறுகின்றன என்று பதிவு செய்கிறார், கைலே ஃபெர்ரனா.
சீனா விளிம்பு நாடுகளுக்கு அரசியல்ரீதியாக புரட்சியை ஏற்றுமதி செய்யவில்லை. ஆனால், பொருளாதார, தொழில்நுட்ப வலிமையை வழங்குவதன் மூலம் புதிய காலனியத்துக்கு எதிராக உலகத்தின் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் இறுதி வெற்றிக்குப் பாதை அமைக்கிறது என்கிறார், ஆசிரியர்.
சீனாவில் அரசு அதிகாரம் யாரிடம் உள்ளது?
சீனாவின் வெளிநாட்டு உறவுகள் எந்த வர்க்கத்துக்கு சாதகமானவை? சீனாவில் அரசு அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவது யார்? என்ற கேள்வியை இயல் 7 இல் ஆசிரியர் எடுத்துக் கொள்கிறார்.
இது குறித்து உங்கள் நூலகம் ஜூலை மாத இதழில், “100 ஆவது ஆண்டில் சோசலிசம் – இலக்கு வைத்துப் பயணிக்கும் மக்கள் சீனம்! அதன் அரசியல் பொருளாதாரம் பற்றி” என்ற தலைப்பில் “சீனப் பொருளாதாரம்: அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை” என்ற ஆர்தர் கிரோபர் எழுதிய நூலைப் பற்றிய அறிமுகக் கட்டுரையில் விரிவாகப் பார்த்துள்ளோம்.
இங்கு சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியிலும் அரசு அதிகாரத்திலும் முதலாளிகளின் பங்கு பற்றி மட்டும் சில விவரங்களைப் பார்க்கலாம்.
சீனாவில் முதலாளிகள்
2021 ஆம் ஆண்டில் சீனாவில் 700 பில்லியனர்கள் (அன்றைய மதிப்பில் ரூ 7,000 கோடிக்கும் அதிகமான சொத்துகளை வைத்திருப்பவர்கள்) இருப்பதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை மதிப்பிட்டது.
2002 ஆம் ஆண்டில் சீன முதலாளிகள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக அனுமதிக்கப்பட்டனர். பல பில்லியனர்கள் கட்சியில் சேர ஆர்வம் காட்டினர்.
2012 ஆம் ஆண்டில் இப்போதைய சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஷி ஜின்பிங் அதிகாரத்துக்கு வந்தபிறகு
- 2020 நவம்பரில் அலிபாபா கார்ப்பரேஷனைச் சேர்ந்த ஆன்ட் குழுமத்தின் தொடக்கநிலை பொதுப் பங்கு வெளியீட்டை சீன அரசு தடுத்து நிறுத்தியது. அதன் மதிப்பு $3400 கோடியாக இருந்திருக்கும்.
- 2021 ஆம் ஆண்டில் அலிபாபா நிறுவனத்துக்கு $280 கோடி தண்டம் விதிக்கப்பட்டது. ஏகபோகத்தை உருவாக்குவதற்கு எதிரான சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டது. கட்சி உறுப்பினர் என்ற தகுதி ஜாக்கி மா-வைப் பாதுகாக்கவில்லை. அலிபாபாவின் பங்குச் சந்தை மதிப்பு $20,000 கோடி வீழ்ச்சியடைந்தது. 2023 ஆம் ஆண்டில் அலிபாபா குழுமத்தை ஆறு நிறுவனங்களாகப் பிரிப்பதாக அறிவித்தது.
- 2021 ஜூலை மாதம் தனியார் கல்விப் பயிற்சி நிறுவனங்கள் மீது சட்டம் பாய்ந்தது. $1000 கோடி புரண்டு வந்த இந்தத் துறையில் இலாபத்தை நோக்கமாகக் கொண்ட நிறுவனங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டது.
- திதி (Didi) என்ற கால் டாக்சி நிறுவனத்தின் பங்கு வெளியீட்டை தடை செய்து, அந்த நிறுவனத்தின் செயலிகள் செயலித் தளங்களில் இருந்து நீக்கப்பட்டன.
- ஊழியர்களை மிகைநேரம் வேலை செய்ய அழுத்தம் கொடுக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் செயல்பாடு சட்டத்துக்குப் புறம்பானது என்று உச்சநிலை மக்கள் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
- செப்டம்பர் மாதம் சீன மக்கள் வங்கி கிரிப்டோ நாணயங்களை கணினியில் உற்பத்தி செய்வதைத் தடை செய்தது.
- எவர் கிராண்டே குழுமம் 2021 இல் திவால் நிலைக்குத் தள்ளப்பட்டது. ஷியூ ஜியாயின் கட்சி உறுப்பினராக இருந்தது எந்தப் பலனையும் அளிக்கவில்லை. அவரது சொத்துகளில் 98% மதிப்பை நிறுவனங்களின் கடனை அடைக்கப் பயன்படுத்தும்படி அரசு கட்டாயப்படுத்தியது. 2023 ஆம் ஆண்டில் அவர் கைது செய்யப்பட்டார்.
- லியாங் 2017 ஆம் ஆண்டில் நடந்த 19 ஆவது கட்சிக் காங்கிரசில் இடம் பெறவில்லை.
- எவர்கிராண்டே ரியல் எஸ்டேட் குழுமம் திவால் ஆனதைத் தொடர்ந்து வீட்டுக் கடன் வாங்கியவர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் இறங்கினர். வீட்டுக் கடன்களை மறுசீரமைக்கும்படி வங்கிகளுக்கு அரசு ஆணையிட்டது. வீட்டுக் கடன் கட்டத் தவறியவர்களின் வீடுகளை பறிமுதல் செய்வதற்குத் தடை விதித்தது. அமெரிக்காவில் 2008 ஆம் ஆண்டு வீட்டுக் கடன் நெருக்கடியில் இலட்சக் கணக்கான வீட்டு உரிமையாளர்கள் தங்களது வீடுகளை இழந்ததுடன் இதனை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
சீர்திருத்தம் – திறந்து விடுதல் கொள்கையின் முதல் கட்டத்தின் போது மூலதனத்திடம் விடப்பட்ட பகுதிகள் சீனப் பொருளாதாரத்தின் தலைமைத் துறைகள் அல்ல. முந்தைய கட்டுரையில் பதிவு செய்தது போல அரசு நிறுவனங்கள் முக்கியமான துறைகளையும் நிதித்துறையையும் கட்டுப்படுத்துகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் தனியார் மூலதனத்தின் பற்கள் மேலும் பிடுங்கப்பட்டுள்ளன.
இன்றைய உலகில் சீனாவின் இடத்தையும் உலகத்தின் எதிர்காலத்தை மாற்றியமைப்பதில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்களிப்பையும் பற்றி கைலே ஃபெர்ரனாவின் நூல் ஒரு பரந்து விரிந்த பார்வையைத் தருகிறது.
இந்நூல் "உலகிற்கு சீனா ஏன் தேவை" என்ற பெயரில் இந்த ஆண்டு தமிழில் வெளியாகியுள்ளது. இதனை வெளியிட்டவர்கள் சிந்தன் புக்ஸ். தமிழாக்கம் செய்தவர் க. மாதவ்.
ரோலண்ட் போயர் எழுதிய சீனப் பண்புகளுடன் கூடிய சோசலிசம்: வெளிநாட்டவர்களுக்கு ஒரு கையேடு (Socialism with Chinese Charecteristics – A Guide for Foreigners by Roland Boer) என்ற நூலில் இடம்பெறும் கீழ்வரும் தொகுப்புரையுடன் இந்த நூல் அறிமுகக் கட்டுரையை நிறைவு செய்யலாம்.
கடந்த 100 ஆண்டுகளின் வரலாறு மார்க்சியத்தினால் வழிகாட்டப்பட்ட தொழிலாளர் வர்க்கப் புரட்சிகளும் காலனிய எதிர்ப்பு தேச விடுதலைப் போராட்டங்களும் என்பதாகவே அமைந்துள்ளது. இன்றைய சீனா "ஏகாதிபத்திய எதிர்ப்பும் பாட்டாளி வர்க்கப் புரட்சியும்" என்ற பணியை முன்னெடுத்துச் செல்கிறது.
- ஆசியாவின் நோயாளியாக இருந்த சீனா, 1949 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் விடுதலை பெற்ற நாடாக மாறிய மகத்தான பாய்ச்சல்
- சீனாவை ஒரு வளமிக்க நாடாக மாற்றிய 1979 இல் தொடங்கிய சீர்திருத்தம்-திறந்து விடுதல் என்ற மகத்தான பாய்ச்சல்
- சீனாவை வலுவான நாடாக ஆக்கிவரும் 2010க்குப் பிந்தைய புதிய சகாப்தத்தின் மகத்தான பாய்ச்சல்
என்று தொகுத்துக் கூறும் ரோலண்ட் போயர் சீனா இன்னும் சிவப்பாகவே உள்ளது என்பதற்கான மார்க்சியக் கோட்பாட்டு அடிப்படைகளை தனது நூலில் வழங்குகிறார். அந்நூலைப் பற்றி அடுத்த ஒரு நூல் அறிமுகத்தில் பார்க்கலாம்.
(WHY THE WORLD NEEDS CHINA
Development, Environmentalism,
Conflict Resolution & Common Prosperity
KYLE FERRANA)
- மா.சிவகுமார்