முன்குறிப்பு

இக்கட்டுரை 1974-ஆம் ஆண்டு மார்க்சிய ஒளி 2-ஆம் இதழில் வெளியானது.  இதழ் அந்த ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு வெளியாகி இருக்கலாம்.  இந்தக் கட்டுரை வெளியான காலத்திற்குச் சற்று முன்னர்,

1971-72-ஆம் ஆண்டுகளில் மதுரைப் பல்கலைக் கழகத்தில் கதைப்பாடல்களைப் பதிப்பிக்கும் பணியை அப்போதைய பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெ.பொ.மீ. அவர்களின் அழைப்பின் பேரில் பேராசிரியர்  மேற்கொண்டிருந்தார்.  இக்கட்டுரையில் அக்காலத்தில் மார்க்சியப் பட்டயப் படிப்பைத் தொடங்க மேற்கொண்ட முயற்சிகளையும் அதற்கு ஏற்பட்ட தடைகளையும் பற்றி பேராசிரியர் எடுத்துக்கூறுகிறார்.  இதுவரை முறையாக மார்க்சியத்தைப் போதிக்கும் கல்வி நிறுவனங்களை உருவாக்குதல் என்ற பேராசிரியரின் கனவு நிறைவேற வில்லை என்பது மனதில் கொள்ளத்தக்கது. அதைப் பற்றிய சிறு பேச்சுக்கூட இப்போது நம்மிடம் இல்லை...

மார்க்சியப் பயிற்சிக்கு ஒரு டிப்ளமா படிப்பும், ஒரு பரீட்சையும் நடத்துவதென்று மதுரைப் பல்கலைக்கழகம் முடிவு செய்து விட்டதாகச் சில மாதங்களுக்கு முன் பத்திரிகைகளில் செய்தி வந்தது.

ஜனசக்தியிலும் ஒரு செய்திக் குறிப்பு வெளிவந்தது.  ஆயினும் இந்தப் படிப்பு எந்தக் கல்லூரியிலும் துவக்கப்படவில்லை.  பல்கலைக்கழகத்திலும் ஆரம்பிக்கப்படவில்லை.  இது ஏன் என்று அறிய இப் பயிற்சி பற்றி நடந்துள்ள விவாதப் போராட்டத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

மதுரைப் பல்கலைக்கழகம் முழு உருவம் பெற்று ஐந்து ஆண்டுகள்தான் முடிந்துள்ளன.  பழைய சென்னைப் பல்கலைக்கழகத்தின் வாரிசுதான் இது.  இதன் நிருவாக அமைப்புக்களில் செனட், அகாடெமிக் கௌன்சில், சிண்டிகேட் என்ற மூன்று உறுப்புகள் உள்ளன.  இவற்றுள் செனட் கொள்கை வகுக்கும் அமைப்பு.  இதனைப் பட்ட தாரிகள், ஸ்தல ஸ்தாபனங்கள், சட்டமன்றம், இன்னும் பல தொகுதிகள் தேர்ந்தெடுக்கிறார்கள்.  அகாடெமிக் கௌன்சிலில் பெரும்பான்மையான வர்கள் கல்லூரி ஆசிரியர்களிலிருந்து அவ்வக் கல்லூரியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.  சிண்டிகேட்தான் நிருவாக சபை, மந்திரி சபை போல அது நிருவாக அதிகாரம் உடையது.  இதற்குப் பானல் ((Panel)களுள் 3 உறுப்பினர் தயாரிக்கிறார்கள்.  கவர்னர் அவர்களுள் ஒருவரை துணைவேந்தராக நியமிக்கிறார்.

இந்த அமைப்பு விதிகளை நான் குறிப்பிட்ட தற்குக் காரணத்தை வாசகர்கள் ஊகித்திருக்கக் கூடும்.  இதற்கும் மக்களுக்கும் எந்தவிதத் தொடர்பு மில்லை.  மிகவும் குறுகிய வாக்குத் தொகுதிகளி லிருந்து, சில அதிகார வட்டங்களின் செல்வாக்கில் இந்த நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று வாசகர்கள் ஊகித்திருப்பார்கள்.  அகாடெமிக் கௌன்சில் ஓரளவு பரந்த பிரதிநிதித்துவம் உடையது.  அதில் பெரும்பான்மை கல்லூரி ஆசிரியர்கள், முதல்வர்கள் உள்ளார்கள்.

இதற்குப் பாடத்திட்டம், பரீட்சைகள், புதிய பயிற்சிகள் பற்றி முடிவு செய்ய அதிகாரம்  உண்டு.  செனட் கொள்கை வகுக்கும் நிறுவனம்.  இதில் கல்லூரி நிருவாகங்களின் பிரதிநிதிகள், அந்நிருவாகங்களின் செல்வாக்குக்குப் பணிகிற கல்லூரி முதல்வர்கள்.  அரசின் செல்வாக்குக்குட் பட்ட, ஸ்தல ஸ்தாபன, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.  இப்பொழுது துணைவேந்தர் நியமனத்தை, தாம் அமைக்கும் தேர்வுக்குழு மூலம் அரசு கட்டுப் படுத்துகிறது.  கிறிஸ்தவ மிஷன்கள், கத்தோலிக்க மடங்கள், சாதிச் சங்கங்கள், முதலாளிகள், மிராசு தார்கள், வட்டிக்கடைக்காரர்கள், பத்திரிகை முதலாளிகள், கறுப்புப்பணத்தை வெள்ளைப் பணமாக்க வழி காணும், சுதந்திர யுகப் புதுப்பணக் காரர்கள் பிடிப்பில்தான் தமிழக முழுவதும் கல்லூரி நிருவாகங்கள் உள்ளன.  இப்பொழுது சில சிவன் கோயில்களும், சமண சமய சங்கங்களும், வைஷ்ணவ சமய சங்கமும் சென்னை, மாயூரம், பாபநாசம் முதலிய நகர்களில் கல்லூரிகளை நிறுவியுள்ளன. 

மதுரைப் பல்கலைக்கழக எல்லையிலும் நிருவாகங்கள், இப்பகுதியினரின் செல்வாக்கிலேயே உள்ளன.  இவர்களனைவரும் பழமைப் பற்றுடைய வர்கள்.  தங்கள் அதிகாரத்திற்கு இடையூறான எந்த மாறுதலையும் எதிர்க்கக் கூடியவர்கள்.  பழைய ஏகாதிபத்தியக் கல்வி முறையில் அடிப்படை மாறுதல்களை விரும்பாதவர்கள் பட்டம் பெற்று வருகிறவர்களைத் தங்கள் பணத்திற்கு அடிமை யாக்க விரும்புகிறவர்கள்.

பரீட்சைகளுக்குரிய மொழிகள், விஞ்ஞானம், சமூக விஞ்ஞானங்கள் தவிர, பகுதி நேரடிப் படிப்பிற்குச் சில டிப்ளமா பயிற்சிகளை இப் பல்கலைக்கழகம் நடத்துகிறது.  அவற்றுள் ‘காந்தீய சிந்தனை’ என்பதும் ஒன்று.  இதனைப் பல கல்லூரிகள் பகுதிநேரப் படிப்பாக வைத்துள்ளன.  இதில் எஸ்.எஸ்.எல்.ஸி தேறியவர்கள் சேரலாம்.  எனவே கல்லூரியில் படிக்கும் பி.யூ.சி., பட்டப் படிப்பு மாணவர்கள் சேர முடியும்.  ஓராண்டு படிப்பிற்குப் பின் பரீட்சை நடத்தி ஸெர்ட்டிபிகேட் கொடுக்கிறார்கள். அதன் பின் இப்படிப்புப் படித்தவர்கள் ஓராண்டு படித்து டிப்ளமா பெறலாம்.  பல்கலைக்கழகத்தில், கல்லூரிகளில் நடத்தப்படும் இப்பயிற்சிக்கு ஊக்கமளிக்கவும், தேர்வு நடத்தவும் ஒரு இயக்குநரை நியமித்து உள்ளார்கள்.  சில முதலாளிகள், இப்பயிற்சிக்குத் தேவையான நிதியை அளிக்கிறார்கள்.

ஏனென்று சொல்லவேண்டாம்.  சொல்லா மலே நமது தோழர்களுக்கு விளங்கும் ‘காந்தீய சிந்தனை’ ‘பழமை உயிர்ப்பு’ (Revivalism) ‘மன மாற்றத்தால் புரட்சி’ ‘பலாத்காரத்தால் வரும் கம்யூனிஸ எதிர்ப்பு’ ‘உடைமையாளர்களை தர்மகர்த்தாக்களாகக் கொண்ட சர்வோதய சமுதாயம்’ முதலிய முதலாளித்துவத்திற்குச் சிறிதும் ஆபத்தில்லாத, சிந்தனைகள் கொண்டது.  எனவே இன்று புரட்சிக் காற்று மாணவர் உள்ளங்களில் நுழைந்துவிடாமல் தடுக்க இக்காந்தீய சிந்தனைச் சுவரை சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் எழுப்ப விரும்புகிறார்கள்.  எனவேதான் முதலாளிகள், சாமியார்கள், பாதிரிகள், கத்தோலிக்க குருமார்கள் எல்லோரும் இக்காந்தீய சிந்தனைப் படிப்பை ஆதரிக்கிறார்கள் பணம் கொடுக்கிறார்கள் பல மாணவர்களிடம் பரவுவதற்குரிய வழியில் இப் படிப்பிற்குரிய சட்ட திட்டங்களை வகுக்கச் செய் கிறார்கள்.

இச்சூழ்நிலையில் தான் ‘மார்க்ஸீயப் பயிற்சி’யை பல்கலைக்கழக டிப்ளமாப் படிப்பாகக் கொணர நண்பர் சங்கரநாராயணன் செய்த முயற்சிகளையும் அதன் விளைவாகத் திரண்ட முற்போக்கான அணியின் செயல்களையும் அவற்றிற்கு ஆதிக்க வட்டங்கள் கொடுத்த நேரடியாகவும், மறைமுகமானவுமான எதிர்ப்புகளையும் சூழ்ச்சிகளையும் கவனிக்க வேண்டும்.

நண்பர் சங்கர நாராயணன் மதுரையில் எஸ் டி.ஸி. என்ற பெரிய டியூடோரில் கல்லூரியின் முதல்வர், முற்போக்கான கல்விக் கொள்கையுடை யவர்.  பல படிப்புகளை சாதாரண மக்கள் பயில் வதற்காகக் கல்லூரியில் பயிலாமல் பிரைவேட்டாக பரீட்சைகள் எழுத அனுமதிக்கவேண்டுமெனப் போராடி வெற்றிபெற்றவர்.  முற்போக்காளர் களான பட்டதாரிகளது ஆதரவால் மதுரைப் பல்கலைக்கழக நிருவாக உறுப்புகளுக்குத் தேர்ந் தெடுக்கப்பட்டவர். தமிழ்ப் பயிற்சி மொழி இயக்கத்தின் குரலை பல்கலைக்கழக அவைகளில் ஒலித்தவர்.  இவர் “மார்க்ஸீய டிப்ளமாப் பயிற்சி”யை “காந்தீய சிந்தனை”ப் பயிற்சியைப் போலவே பல்கலைக்கழகம் துவங்க வேண்டுமென செனட் சபையில் தீர்மானம் கொண்டு வந்தார்.

பொருளாதாரச் சுரண்டல்காரர்கள், மதவாதச் சுரண்டல்காரர்கள் ஆகிய ஆதிக்கக் கும்பல்களின் சூத்திரக்கயிற்றால் இயங்கும் பல்கலைக்கழக அவைகளில் அங்கம் வகிக்கும் கூத்துப்பாவைகள், ‘மார்க்சியப் பயிற்சி வந்தால் வானம் பிளந்து பூமியில் விழுந்துவிடும்; நமது புராதனமான இந்திய நாகரிகமும் ஒழுக்கமும் பாழாகிப் போகும்; நமது சுதந்திரம், ரஷியாவிற்கும், சீனாவிற்கும் அடிமைப் பட்டுப் போகும்; இந்தியாவின் தபோ பலம் குறைந்து மனிதனது ஆத்மீக சக்தி அழிந்து போகும்’ என் றெல்லாம் கூச்சலிட்டார்கள். 

அமெரிக்க செய்தி நிறுவனங்களின் உதவியாலும் தூண்டுதலாலும் பல “அறிவாளிகள்” மார்க்ஸீயத்தைக் கற்பதால் ஏற்படக்கூடிய பேராபத்துக்களை விளக்கி, இந்திய முதலாளித்துவப் பத்திரிகைகளில் எழுதினார்கள்.  விடியவிடியக் கூத்தாடுவதற்கு வசனங்களை டாலர் நாட்டு நாடகாசிரியர்கள் தயாரித்துக் கொடுத் தார்கள்.  உள்நாட்டுச் சுரண்டல்காரர்கள் கூத்து நடத்த அரங்கம் அமைத்து பக்கமேளக்காரர்களை ஏற்பாடு செய்து, நமது நாட்டில் “மக்கள் மதிக்கக் கூடிய எல்லாப் பண்பாடுகளும், ஒழுக்க மதிப்பு களும் கெட்டுப்போகும்” என்று பல சுருதிகளில் லாவணிகளும் ஒப்பாரிகளும் பாட வைத்தார்கள்.

முதல் தடவை சங்கர நாராயணனது தீர் மானத்தை ஆதரிக்க ஒருகைகூட உயரவில்லை.  ஆனால் சங்கர நாராயணனும், நானும் இன்னும் சில பெயர் குறிப்பிட்டால் வேலையிழக்கும் ஆபத்திலுள்ள நண்பர்களும் இவ்வளவு பெரிய கூத்தின் உட்பொருளை, விடாப்பிடியாக அவை உறுப்பினர்களில் மனச்சாட்சி உடையவர்களுக்கும், துவேஷமற்றவர்களுக்கும் விளக்கினோம்.  சமீப காலத்தில் “மதுரைப் பல்கலைக்கழக - ஆசிரியர் சங்கம்” தோன்றி வளர்ச்சிபெற்றது; சங்க உணர்வு பரவிற்று.  கல்லூரி ஆசிரியர்கள் டெல்லி கல்லூரி ஆசிரியர்களின் போராட்டங்களால் நம்பிக்கை பெற்றார்கள்.  அவர்களில் பலர் மார்க்சிய டிப்ளமா பயிற்சி- போராட்டத்தில் முற்போக்கு அணியாக உருவாயினர்.

இதன் பின்னர் இந்தோ- சோவியத் ஒப்பந்தம் கையெழுத்தாகியது.  அதன் முக்கியத்துவத்தை முதலாளித்துவ முரசுகளால்கூட மறைக்க முடிய வில்லை.  சோவியத் யூனியனைப் பற்றியும், கம்யூனிஸம் பற்றியும் மார்க்சிய தத்துவம் பற்றியும் அறியும் ஆர்வம் அளவற்றதாகப் பெருகியது.  லட்சக் கணக்கான மார்க்ஸீய சித்தாந்த நூல்கள் விற்பனை யாயின.  நூல் நிலையங்கள் இந்நூல்களை வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.  சோவியத் வெளியீட்டு நிறுவனங்கள் வெளியிட்ட நூல்கள் நூல் கண்காட்சிகளில் பல லட்சங்கள் விற்பனை யாயின.  நியூசெஞ்சுரி நிறுவனத்தார் வெளியிட்ட தமிழ் நூல்கள் முன்னெப்பொழுதையும்விட அதிக மாக விலை போயின.  இது சிந்தனைகளை மாற்றியது.

இந்நிலையில் செனட் தேர்தலின்பொழுது துவேஷமற்ற, சங்க உணர்வுடைய பல கல்லூரி ஆசிரியர்கள் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

மறுபடியும் சங்கரநாராயணன் செனட்டில் தீர்மானம் கொண்டு வந்தார்.  எதிர்ப்பாளர்கள் மாறிவிட்ட சூழ்நிலையில் மௌனமாயினர்.  எதிர்ப் பின்றித் தீர்மானம் நிறைவேறிவிட்டது: பின், “இந்த அவைக்கு புதிய பயிற்சியைத் துவங்க முடிவுசெய்ய அதிகாரமில்லை, அகாடெமிக் கௌன்சில்தான் இதை முடிவுசெய்ய வேண்டு”மென்று சில சிண்டிகேட் சட்ட நிபுணர்கள் சொன்னார்கள்.  டாக்டர் மு.வ. எல்லாவற்றிலும் ‘நடுநிலைமை”.  ஆனால் தைரியமாக அப்படியொரு தீர்மானத்தை எந்தவொரு அவையிலும் கொண்டுவர அவர் களால் முடியவில்லை.  இனி அடுத்துக்கெடுக்க முடிவு செய்திருக்கவேண்டும்.

பொதுவாக ‘பயிற்சி’யைத் துவங்கவேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் உடனே, அதற் குரிய சட்டதிட்டங்கள், பாடத்திட்டம் தேர்வு விதிகள் எல்லாம் தயாரிக்க பல்கலைக்கழக நிருவாகம் ஏற்பாடு செய்யவேண்டும்.  அப்படி எதனையும் செய்ய அது நடவடிக்கை எடுக்க வில்லை.  சங்கரநாராயணனே பலமுறை ப.க. அதிகாரிகளைக் கண்டு நிர்ப்பந்தித்தார்.  இன்னும் பலர் துணைவேந்தரைச் சந்தித்துப் பேசினார்கள்.  இனிமேல் நடுநிலைமைப் பாத்திரம் பொருத்தமா யில்லை.

மூன்று உறுப்பினர் கொண்ட பாடத்திட்டத் தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் பாடத்திட்டம் தயாரித்து செனட் சபையில் சமர்ப் பித்தனர்.  நூற்றுக்குத் தொண்ணூறு விகிதம் நல்ல பாடத் திட்டமே.  மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் நூல்களே அடிப்படைப் பாடநூல்களாக வைக்கப் பட்டன.  இப்பயிற்சிக்குச் சட்டதிட்டங்களும் தயாரிக்கப்பட்டு செனட் சபையில் சமர்ப்பிக்கப் பட்டன.

சட்டதிட்டங்களை தங்கள் நோக்கத்திற்கேற்ப வகுக்கும் திறமையுடைய குழுவினர், மார்க்ஸீயப் பயிற்சி நடைபெறவிடாமல் தடுக்கும் எல்லாவிதத் தடைச்சுவர்களையும் விதிகள் மூலம் புகுத்தி விட்டனர்.

காந்தீயச் சிந்தனைப் படிப்புக்குச் சேர எஸ்.எஸ்.எல்.சி.  தகுதியே போதும்.  மார்க்சியப் பயிற்சிக்குச் சேர பி.ஏ., பி.எஸ்ஸி.,  போன்ற பட்டம்  பெற்றிருக்க வேண்டும்.  இதனால் பட்டப் படிப்பு முடிய கற்பிக்கும் கல்லூரிகளில் உள்ள மாண வர்கள் இப்பயிற்சியில் சேரமுடியாது.  ஆசிரியர்கள் மட்டுமே சேரமுடியும்.  கல்லூரியில் மாணவ ராகவோ, ஆசிரியராகவோ இல்லாத பட்ட தாரிகள் சேரமுடியும்.  அப்படிச் சேருகிற பட்ட தாரிகள் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்.

காந்தீயச் சிந்தனைப் பயிற்சிக்கு முதலாண்டு முடிந்தவுடன் செர்ட்டிபிகேட் பரீட்சை நடை பெறும்.  அதில் தேறியவர்கள் அடுத்த ஆண்டில் டிப்ளமோ பரீட்சைக்குரிய பயிற்சிக்குப் படிக்கலாம்.  முதலாமாண்டில் சேர எஸ்.எஸ்.எல்.ஸி.  தகுதி போதும்.  ஆகையால், கல்லூரியிலுள்ள எந்த மாணவரும் சேரமுடியும்.  ஆனால் மார்க்சியப் பயிற்சிக்கு முதலாண்டு சேரவே பட்டதாரியாக இருக்கவேண்டும்.  அதனால் கல்லூரி மாணவர்கள் யாரும் சேரமுடியாது.  எம்.ஏ., எம்.எஸ்.ஸி.,  முதலிய பட்ட மேற்படிப்பு ((Post Graduate)) மாணவர்களே சேரமுடியும்.  பொதுவாக அவர்களுக்குப் பரீட்சைக் குரிய படிப்புக்கே நேரம் சரியாயிருக்கும்.  சில கல்லூரிகளிலேயே பட்டமேற்படிப்பு உள்ளது.  இதனால் கல்லூரி மாணவர்களிடையே மார்க்சியப் பயிற்சி பரவாமல் தடுத்துவிடலாம்.

காந்தீயப் பயிற்சியை நடத்த தமிழகத்தின் சத்திய விரதர்களான முதலாளிகள் பணம் கொடுக்கிறார்கள்.  அதைக்கொண்டு பல்கலைக்கழகத்தி லேயே ஒரு துறை அமைத்து, அதற்குப் பொறுப் பாக ஒரு இயக்குநரை நியமித்துள்ளார்கள்.

பல்கலைக்கழகம் மார்க்சியச் சிந்தனைப் படிப்புக்கு, தான் தனது நிர்வாகத்தில் ஏற்பாடு செய்யப்போவதில்லை என்று அறிவித்துவிட்டது.  எந்த இணைக்கப்பட்ட கல்லூரியாவது (Affiliate College) விண்ணப்பித்தால் இப்பயிற்சி நடத்த அனுமதியளிக்கப்படும் என்று சுற்றறிக்கை அனுப்பப் பட்டது.  கல்லூரி நிருவாகங்களின் வர்க்கத் தன்மையைத் தோழர்கள் அறிவார்கள்.  எந்தச் சுரண்டல் கும்பலுக்கு இந்தப் பயிற்சியை தமது கல்லூரிகளில் பாடமாக வைக்க ரௌத்திரம் இருக்கும்? ஒரு கல்லூரியும் முன்வராது.  பயிற்சியைக் கை விடத் தீர்மானிக்கலாம் என்று பல்கலைக்கழக ஆதிக்கக் கும்பல் நினைத்தது.

என்னுடைய முயற்சியால் ஒரே ஒரு கல்லூரி இப் பயிற்சிக்கு விண்ணப்பித்தது.  இப்பயிற்சி துவங்கத் தீர்மானித்தது மார்ச்சு மாதம், விண்ணப்பித்தது ஏப்ரலில்.  ஒவ்வொரு பயிற்சிக்கும் “அக்டோபர் மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.  காலம் தாழ்த்தி விண்ணப்பம் அனுப்பியதால் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதில் அனுப்பப் பட்டது.  பயிற்சி துவங்க முடிவு செய்வதற்கு முன் 5 மாதங்களுக்கு முன்னரே எப்படி விண்ணப்பிக்க முடியும்.  பயிற்சி இந்த ஆண்டே துவங்குவதாக முடிவு செய்யப்பட்டிருப்பதால், ஜூன் வரை விண்ணப்பிக்க அனுமதியளித்து காலவரை யறையை நீடிக்க வேண்டும் என்று அக்கல்லூரி முதல்வர் எழுதினார்.

பக்கத்திலுள்ள ஒரு சாமியார் கல்லூரி முதல்வர், இக்கல்லூரிக்குக் கட்டிடங்கள் போதாது என்று பல்கலைக்கழகத்திற்குக் கோள் மூட்டினார்.  இப்பொழுது ‘கட்டிடம் காணாது’ என்று சாக்குக் கூறி விண்ணப்பம் மறுக்கப்படும் நிலையிலுள்ளது.  கல்லூரிக்கு அவர்கள் வைத்துள்ள பயிற்சிகளுக் கேற்ற கட்டிட வசதி, தேவைக்கு மேலுள்ளது.  ஆயினும் இப்பயிற்சியை வைக்க முன்வந்துள்ள கல்லூரிக்கும் பாடம் கற்பிக்கவே பொய்ச் சாக்குகள் கூறி அனுமதி மறுத்தார்கள்.

காந்தீய சிந்தனைப் பயிற்சிகளை கல்லூரிகள் நடத்துவது மட்டுமல்லாமல், மதுரை காந்தி மியூஸியத்தின் ஆதரவில் தனியார் கழகம் ஒன்று ((Registered Society) அமைத்து இரண்டு (அல்லது மூன்று) இடங்களில் காந்தீயச் சிந்தனைப் பயிற்சி நடத்துகிறார்கள்.  அவர்களுக்கு எல்லாவிதமான ஆதரவும் அளிக்கப்பட்டுள்ளது.

அதுபோல இரண்டு தனியார் கழகங்களை ஆரம்பித்து மதுரையிலும், திருநெல்வேலியிலும், அதன் ஆதரவில் மார்க்சிய டிப்ளமா பயிற்சி நடத்த, நான் முயன்று வருகிறேன்.  மதுரையில் பேராசிரியர் சங்கரநாராயணனும், நெல்லையில் நானும் இப்பயிற்சிகளை நடத்தும் சொஸைட்டி களுக்குப் பொறுப்பாயிருப்போம்.  காந்தீய சிந்தனைப் பயிற்சியை நடத்த காந்தி மியூசியம் தனியார் சொஸைட்டிக்கு அனுமதி (affiliation) அளித்தது போல இந்தப் பயிற்சிக்கு எங்களுக்கு அனுமதி யளிக்க விண்ணப்பிக்கப் போகிறோம்.

இதற்கும் சட்டம், விட்டம், கட்டிடம், ஆசிரியர் நிதி என்றெல்லாம் தடையெழுப்ப ஆதிக்கக் கும்பல்கள் முயற்சிக்கும்.

பல்கலைக்கழக அவைகளில் முற்போக்காளர் பெற்ற வெற்றியை நிலைநாட்ட எல்லாக் கட்சி களையும் சேர்ந்த முற்போக்காளர் அணி உருவாகி இத்தடைகளையெல்லாம் மீறி, ஆதிக்கக் கும்பல் களின் நிருவாகங்களின் கீழுள்ள கல்லூரிகளுக்கு வெளியே தனியார் சொஸைட்டிகளின் நிருவாகத் திற்கும், மார்க்ஸீய சிந்தனைப் பயிற்சியை நடத்து வதற்கு அனுமதி பெறப் போராட வேண்டும்.

இச்சமயத்தில்தான் மார்க்ஸீய பயிற்சியால் விளையும் தீமைகளைப் பற்றியும், மதுரைப் பல்கலைக் கழகத்தின் கற்பு, மார்க்ஸீயப் பயிற்சியால் குலைந்து விடக்கூடாதென்றும், தமிழ்ப் பத்திரிகைகளும், ஆங்கிலப் பத்திரிகைகளும் எழுதுகின்றன.  பிற் போக்காளர்கள் மார்க்ஸீயத்தை எதிர்ப்பது எதிர் பார்க்கக்கூடியதே.

இந்தக் கூக்குரலில், இடதுசாரிச் சொற்களால் எதிர்ப்பு முழக்கம் செய்யும் தீக்கதிரின் பரிதாப மான ஊளையையும் கேட்கிறோம்.  ஓநாய்க் கூட்டத்தின் மத்தியில் தன்னை வேறாகக் காட்டிக் கொள்ள சிவப்புச் சாயம் பூசிக்கொண்ட குள்ள நரியின் கதையாக இருக்கிறது மார்க்சிஸ்ட் கட்சியின் ஓலம்.

அவர்கள் மார்க்சிஸ்ட் சிந்தனைப் பயிற்சியை பல்கலைக்கழகமும், கல்லூரிகளும் நடத்தக் கூடாதென்பதற்குக் கூறும் காரணங்கள் எவை?

முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ தத்து வார்த்த நிலையமான பல்கலைக்கழக நிழலில் புரட்சித் தத்துவமான மார்க்சியத்தை நேர்மை யாகக் கற்பிக்க முடியுமா?

முதலாளித்துவத்தோடு சமரசம் செய்து கொண்டு விட்ட திருத்தல்வாதிகளால் புரட்சித் தத்துவமான மார்க்சியத்தை அதன் புரட்சித் தன்மை விளங்க கற்பிக்க முடியுமா?

புரட்சியில் ஈடுபடுகிறவர்களுக்குப் படித்துப் பட்டம்பெற்று மார்க்சியப் பண்டிதர் என்று சொல்லிக்கொள்ள அவசியம் உண்டா?

எந்த வகையில் பார்த்தாலும் இப்படிப்பு அவசியமில்லை.

முடிவு புரட்சியின் பெயரால், திருத்தல் வாதத்தின் பெயரால் இவர்கள் கோயங்காவுடனும், சோவுடனும், சிவராமனோடும், ஆனந்த விகடன் ஆசிரியரோடும், ஆதித்தனோடும், பல்கலைக்கழக கும்பல்களுக்கு துணைபோவதுதான், பயிற்சியில் இந்நூல்களைப் படித்து அறிவுபெறும் திறன் மாணவர்களுக்கு இல்லையென்பது தீக்கதிரின் முடிவா?

ஏகாதிபத்திய, முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ நிழலில்கூட மார்க்சிய நூல்களின் சிந்தனை ஒளி மாணவர்களின் உள்ளத்தில் சுடர் விட முடியாதா? உலகமெங்கும் ஒளிபரப்பி விண்ணகத்தின் உச்சத்தில் ஏறி நிற்கும் மார்க்சியச் சூரியனை முறத்தால் மறைக்கிறார்கள் ஆதிக்கக்காரர்கள்.  நீங்களும் அந்த நிழலில் மார்க்சிய ஒளி பரவக்கூடாதென்று சொல்லுகிறீர்களா?

இப்படியெல்லாம் நீங்கள் உளறுவதற்குக் காரணம் இம்முயற்சிகளில் எல்லாம் உங்களுக்குப் பங்கில்லை என்பதும், உங்களால் மார்க்ஸீய கல்வி முயற்சிகளில் பங்காற்ற முடியவில்லை என்ற கையாலாகாத் தன்மையும் காரணமா?

மார்க்சியமும், புரட்சியும் இவர்களுக்கேற்ப பரம்பரைக்காணி போலும், அது முதலாளித்துவ- நிலப்பிரபுத்துவ நிழலில், இளம் மாணவர்களுடைய உள்ளங்களில் பதிந்து விடக்கூடாது என்று பிற் போக்காளர் நினைப்பது இயற்கை.  இவர்கள் நினைப்பது ஏனோ? இந்நிழலில் உள்ள நூலகங் களில் மார்க்ஸ், எங்கெல்ஸ் நூல்கள் நுழைந்து விடக்கூடாது.  யார் கற்பித்தாலும், மார்க்சிய மூல நூல்களைப் படிப்பதால், உண்மையான மார்க்சி யத்தை மாணவர்கள் அறிந்து கொள்ளுகிற அறிவில்லாதவர்கள் என்பது தமிழக மாணவர் களைப் பற்றி மார்க்சிஸ்டு கட்சியினர் மதிப்பீடா?

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பயிற்று விக்கப்படும் மார்க்ஸீய எதிர்ப்பு நூல்களை ஆதார மாகக் கொண்ட மார்க்ஸாலஜி போலல்லாமல், மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், பிளெக்கனாவ், உலியனாவ்ஸ்கி முதலியோர் நூல்களையும், மார்க்சிய எதிர்ப்பு நூல்களுக்குப் பதிலளிக்கும் மார்க்சிய வாதிகளின் நூல்களையும், மாவோவின் நூல் ஒன்றையும் சநகநசநnஉந நூல்களாக வைத்துள்ள நிலையில் இந்த வக்கிர நிலையை நீங்கள் கைவிடு வீர்களா? தமிழ்நாட்டு மார்க்சிய ஆர்வலர்கள், மார்க்சியக் கட்சிகள், முற்போக்கு இடதுசாரி மாணவர்கள், சங்க உணர்வு பெற்ற கல்லூரி ஆசிரியர்கள், ஆசிரியர் கூட்டணிச் சங்கங்கள், இவர்களோடு நீங்கள் சேர்ந்து நின்றாலே நீங்கள் பிராக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டுள்ள (மார்க்சிஸ்டு) என்ற பட்டத்துக்கு மதிப்பு இருக்கும்.

இந்நிலையில் உலக வியாபகமான, பல விஞ்ஞானத் துறைகளில் முறையிலாகப் பயன் படுகிற, விஞ்ஞானங்களால் உறுதிப்படுத்துகிற மார்க்சிய தத்துவத்தை டிப்ளமா பயிற்சியாக்கு வதற்கு, எல்லாத் தடைகளையும்.  எதிர்ப்புகளையும் முறியடிக்க தமிழகத்தின் முற்போக்காளர் அனை வரும் ஓரணியில் திரளவேண்டும்.

மார்க்சிய சிந்தனை மாணவரிடையே பரவ, எளிதில் அனுமதியளிக்கவேண்டுமென பல்கலைக் கழகத்தை வற்புறுத்த வேண்டும்.

காந்தீய சிந்தனைப் பயிற்சிக்குரிய விதிகளையே மார்க்சிய சிந்தனைப் பயிற்சிக்கும் அமுலாக்க வேண்டும்.

தனியார் சொஸைட்டிகள் இப் பயிற்சியை நடத்த காந்தீயப் பயிற்சிக்கு அனுமதியளித்திருப்பது போல் அனுமதியளிக்க வேண்டும்.

இக்கோரிக்கைகள் தமிழகத்தின் முற்போக் காளர்கள் அனைவருடைய முழக்கங்களாக மாற வேண்டும்.

முற்போக்காளர்களது தீவிர முயற்சிகளின்றி மார்க்சிய ஒளி பல்கலைக்கழக இருட்டினுள் நுழைய முடியாது, முற்போக்காளர்கள் தங்களது ஒளிவிளக்குகளை ஏந்தி ஒன்று திரளவேண்டும்.

Pin It