21ஆம் ஆண்டாக ஈரோடு புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 1 முதல் 12 வரை பன்னிரண்டு நாள்களுக்கு நடைபெற்று முடிந்துள்ளது. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் ஐம்பது புதிய நூல்களை இப்புத்தகத் திருவிழாவிலுள்ள புத்தக வெளியீட்டுச் சிறப்பரங்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் சில பதிப்பகங்களும், நூலாசிரியர்களும் தங்களது புதிய நூல்களை வெளியிட்டுள்ளனர். ‘உங்கள் நூலகம்’ இதழ் ஈரோடு புத்தகத் திருவிழாவை முன்னிட்டு பல ஆண்டுகளாகவே ஆண்டுதோறும் சிறப்பிதழ் வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டின் ‘உங்கள் நூலகம்’ சிறப்பிதழ் மாலை நேர சிந்தனை அரங்க நிகழ்வில் தனித்துவத்துடன் வெளியிடப்பட்டது.
ஈரோடு புத்தகத்திருவிழா தொடக்க ஆண்டிலிருந்தே புத்தகச் சந்தையாக மட்டுமல்லாது புத்தக வாசிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வாகவும் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிறது.
‘இல்லந்தோறும் நூலகம்’ என்ற முழக்கத்தை தாரக மந்திரமாக முன்வைத்து கடந்த இருபத்தொரு ஆண்டுகளாக ஈரோடு புத்தகத் திருவிழாவை முன்னிட்டு இடைவிடாது வலுவான பல்வகைப் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக...
இந்த ஆண்டு புதிதாக ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ச.கந்தசாமி ஐஏஎஸ் அவர்கள் புத்தகத் திருவிழாவின் தொடக்க நாளில் காலை 9.30 மணியிலிருந்து 9.51 மணி வரை 21 நிமிடங்கள் அனைத்துப் பள்ளி, கல்லூரிகளிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் வகுப்பறைகளிலோ, மரத்தடிகளிலோ அல்லது தங்களுக்குப் பிடித்தமான இடங்களிலோ தனித்தனியாகவோ கூட்டமாகவோ அமர்ந்து பாடப் புத்தகங்களல்லாமல் பொதுப் புத்தகம் ஒன்றை வாசிக்க வேண்டுமென சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.
மாவட்டம் முழுவதும் சுமார் இரண்டு லட்சம் மாணவர்களும் பல்லாயிரம் ஆசிரியர்களும் இவ்வாசிப்பு இயக்கத்தில் பங்கேற்றனர். சமூக ஆர்வலர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என அனைவரும் அந்தந்தப் பகுதியிலுள்ள கல்வி நிலையங்களில் நடைபெறும் வாசிப்பு இயக்கத்தில் பங்கேற்கலாம் எனவும் வேண்டுகோள் விட்டிருந்தார். அத்தகையோர் பலரும் ஆங்காங்கு பங்கேற்றிருந்தனர்.
21ஆம் ஆண்டாக நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவை அனைவருக்கும் நினைவூட்டும் விதத்தில்தான் 21 நிமிடங்கள் வாசிப்பு எனக் குறிப்பிட்டிருந்தார்.
அத்தோடு புத்தகத் திருவிழா நடைபெறுகிற பன்னிரண்டு நாள்களும் மாவட்டம் முழுவதும் புத்தகங்களைப் பற்றியும், வாசிப்பு குறித்தும் அனைவராலும் பரவலாகப் பேசப்பட வேண்டும், விவாதிக்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும் அவர் எழுதிய நூல் ஒன்றையும் எளிமையாக அந்நூல் வெளியீட்டு அரங்கில் வெளியிட்டார்.
தமிழகத்திலுள்ள பல மாவட்டங்களில் புத்தக வாசிப்பு சார்ந்த விழிப்புணர்வு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதை உணரமுடிகிறது.
புத்தக விற்பனை சிறப்பான விதத்தில் இருந்தால் மட்டும்தான் பதிப்பகங்களும், புத்தக விற்பனையகங்களும் இன்றைய பதிப்புலகச் சவால்களை எதிர்கொள்ள இயலும். அதிக விற்பனையாகிற போதுதானே அதிகமான அடுத்தடுத்த தலைமுறையினர் கரங்களில் நல்ல நல்ல நூல்கள் சென்றடைய வழி பிறக்கும்.
விற்பனை என்பது மையப்புள்ளியாக இருப்பினும் விழிப்புணர்வு இல்லாமல் விற்பனை சாத்தியமில்லை. புத்தகத் திருவிழாக்கள், பதிப்பகங்கள் தங்கள் கையில் வைத்திருக்கிற – தேங்கிக் கிடக்கிற – சரக்குகளைக் காலி செய்யும் இடமல்ல. புத்தம் புதிய நூல்களை, மக்களுக்கு அறிவையும் ஆற்றலையும் ஆளுமையையும் அள்ளி அள்ளித் தருகிற அரிய நூல்களை அழகிய வடிவத்தில் புதிது புதிதாக அச்சடித்து மக்களுக்கு மகிழ்வுடன் வழங்கும் இடங்களே புத்தகத் திருவிழாக்கள்.
இத்தகைய புத்தகத் திருவிழாக்கள் சமூக முன்னேற்றத்திற்கும் மாற்றத்திற்கும் அடித்தளமிடுகிற அரிய நிகழ்வாக அமைய வேண்டும். அவை ஒரு சடங்காகவோ சம்பிரதாயமாகவோ நிகழாமல் சமூக உணர்வுடனும் உயிரோட்டத்துடனும் நடைபெறுதல் வேண்டும்.
- உங்கள் நூலகம் ஆசிரியர் குழு