ஊர்வசி என்ற சொல் உருப்பசி என்றும் பர்வதம் என்ற சொல் பருப்பதம் என்றும் சதுர்வேதம் என்ற சொல் சதுப்பேதம் என்றும் பழந்தமிழில் வழங்குகின்றன. இப்பழந்தமிழ்ச் சொற்கள் தற்காலத் தமிழில் இல்லை. இவற்றைச் சாதாரண மக்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மாறாக ஊர்வசி,பர்வதம், சதுர்வேதம் ஆகியவை சற்று பிரபலமானவை.

இம்மூன்று சொற்களுள் சதுர்வேதம் என்பது வைதீக சமயம் சார்ந்த சொல் என்று சொல்லி விடலாம். ஊர்வசி என்பது இந்திரன் தொன்மத்தோடு தொடர்புடைய சொல். பர்வதம்(மலை)என்பது இயற்கையைக் குறிக்கும்.

மலை, ஆறு, கடல், வானம் இவையாவும் இயற்கை அன்றோ? இவற்றுள் ஊர்வசி பர்வதம் போன்ற பெயர்கள் இன்றும் பண்களுக்குச் சூட்டப் படுகின்றன. அந்த அளவு தமிழில் வேரூன்றி விட்டன. சதுர்வேதி என்ற பெயர் வட இந்தியாவில் காணலாம். இச் சொற்கள் கடனாகப் பெற்றுத் தமிழில் பயன்படுத்தப்பட்ட பண்பாட்டுச் சூழலையும் சொல் கட்டமைப்பில் ஏற்பட்ட வடிவ மாற்றங்களையும் குறித்து இனி, இக்கட்டுரையில் காண்போம். முதலில் ஊர்வசி என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம்.

1). ஊர்வசி > உருப்பசி

ஊர்வசி என்ற சமஸ்கிருதச் சொல் உருப்பசியாக மாற்றம் பெற்றது. சிலம்பில் கடலாடு காதையில் உருப்பசி என்ற வடிவம் வந்துள்ளது.

"ஆயிரம் கண்ணோன் செவியகம் நிறைய/ நாடகம் உருப்பசி நல்காள் ஆகி / மங்கலம் இழப்ப வீணை,மண்மிசைத் / தங்குக இவள்" என்ற வரிகள் ஊர்வசி தான் மாதவியாகப் பிறந்தாள் என்ற கருத்துபட இச்சொல் எடுத்தாளப் பட்டுள்ளது.

உருப்பசி என்ற வடிவம் (சொல்) மணிமேகலையிலும் வந்துள்ளது. அந்த எடுத்துக்காட்டு கீழே தரப்படுகின்றது. "திருக்கிளர் மணிமுடித் தேவர்கோன் தம்முன் உருப்பசி முனிந்த என் குலத்து ஒருத்தியும்" (மணிமேகலை-ஆபுத்திரன் நாடு அடைந்த காதை-15) இந்திரன் அவையில் அகத்தியர் முன்னிலையில் ஊர்வசி நடனமிடும்போது இந்திரன் மகனான செயந்தனைக் காமக் குறிப்போடு பார்த்தாளாம். அதனால் அவளது ஆடலில் பிழை ஏற்பட்டது.

விளைவாக, ஊர்வசி சாபம் பெற்று மண்ணுலகில் மாதவியாகத் தோன்றினாள். பிற்கால இலக்கியங்களிலும் உருப்பசி என்ற வடிவம் கிடைக்கிறது. கம்ப ராமாயணத்தில்"மெல்லென் தேன்நகு மழலை இன்சொல் உருப்பசி" (களியாட்டு- 8821) இங்கு உருப்பசி என்ற சொல் வருவதைக் காண்கிறோம். சிலம்பில் வானவர் மகளிர் என்ற தொடர் வருகிறது.இதற்குப் பதிலாக 'தெய்வ மகளிர்' என்ற தொடர் கம்பரால் கையாளப்படுகிறது.

கம்பருக்கு முன்னதாக நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் "உம்பருலகாண்டு ஒருகுடைக்கீழ் உருப்பசிதன்/அம்பொற் கலையல்குல் பெற்றாலும் ஆதரியேன்" என்ற சூழலில் உருப்பசி வருகிறது. மணிமேகலை பௌத்த சமயக் காப்பியம் என்பதால் இச்சொல் பாலி மொழி வழியாக வந்தது என்று நம்பலாம்.தொடர்ந்து பிற்காலத்திலும் கம்பர் போன்ற தமிழ்ப் பற்றாளர்களால் (ஊர்வசி) நேரான சமஸ்கிருதச் சொல் தவிர்க்கப்பட்டது.பின்னர் உருவசி என்ற வடிவம் கூட மச்சபுராணத்தில் வருகிறது."உருவசி என்னும் பேரால் ஒப்பிலா அழகு வாய்ந்த"(காண்க: சென்னைப் பல்கலைக்கழக பேரகராதிபக்.449)

ஊர்வசி என்ற சமஸ்கிருதச் சொல்லில் ரகர வகர வேற்றுநிலை மெய்மயக்கம் வருகிறது. மெய்மயக்கத்திற்கு முன்னால் வருகிற நெடில் குறிலாகும். பிராகிருதத்தில் இம்மாற்றத்தைக் காணமுடிகிறது. அடுத்த நிலையில் மெய்மயக்கத்துக்கு இடையில் உகரம் சேர்க்கப்படுகிறது.

ஊர்வசி > உர்வசி

உர்வசி > உருவசி

இன்னொரு வகையில் மொழி முதல் நெடில் குறிலாகி (மேலே சுட்டப்பட்ட விதிப்படி) ரகர வகர மயக்கம் -ருப்ப்- என்று மாறுகிறது.

ஊர்வசி > உருப்பசி

இதனை வைத்தியநாதனும் விளக்கியுள்ளார். (காண்க:வைத்தியநாதன்,1965) இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் -ர்வ்- என்ற வேற்றுநிலை மெய்மயக்கம் தமிழில் அனுமதிக்கப் பட்டதே.'பகர்வர்' போன்ற பழைய சொற்களில் -ர்வ்- வேற்றுநிலை மெய்மயக்கத்தைக் காண்கிறோம்.

ஊர்வசியை அப்படியே பெற்றுப் பயன்படுத்தியிருக்கலாம்; ஆனால் இல்லை.ஏன் சமஸ்கிருத வடிவம் என்பதாலா? அடுத்து பர்வதத்தைப் பார்க்கலாம்.

2) பர்வத > பருப்பதம்

பர்வத அல்லது பர்வதம் என்ற சமஸ்கிருதச் சொல் பருப்பதம் என்றே தமிழில் வருகிறது. பழந்தமிழில், வரை,மலை,அடுக்கம் போன்ற சில சொற்கள் இருக்கவே பர்வதம் இறக்குமதி செய்யப்படுகிறது. இச்சொல் இடைக்காலத்தில் தான் கையாளப்படுகிறது. நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் "உதயப் பருப்பதத்தின் மேல் விரியும் கதிரே போல்வானை/விருந்தாவனத்தே கண்டோமே"என்ற பாடலில் உவமையில்தான் பருப்பதம் என்ற சொல் வருகிறது. (நாலா-642). இதே பிரபந்தத்தில் இமயமலையைச் சுட்ட பருப்பதம் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. பாடல் வருமாறு:

"பருப்பதத்துக் கயல்பொறித்த

பாண்டியர் குலபதி போல்".

இங்கு பாண்டியன் இமயத்தில் மீன் கொடியைப் பறக்கவிட்ட செய்தியைப் பெருமைபட பெரியாழ்வார் புகழ்கிறார். இங்கே பருப்பதம் வட இமயத்தைக் குறிக்க பயன்பட்டது. இன்னொரு பாசுரத்திலும், "அட்டுக்குவி சோற்றுப் பருப்பதமும்/தயிர்வாவியும் நெய் அளறும் அடங்கப் பொட்டத் துற்றி" (நாலா.264) என்று வந்துள்ளது.

சமைத்துக் குவித்த மலை போன்ற சோற்றையும் தயிர்,நெய் ஆகியவற்றைச் சேர்த்து திருமால் உண்டாராம்.சோற்றுப் பருப்பதம் என்று உருவகமாக வந்துள்ளது.

இங்குச் செய்யுள் நடையியல் நோக்கியே பருப்பதம் எடுத்தாளப்பட்டுள்ளது. தேவாரத்தில் பருப்பதம் என்ற சொல் சில பதிகங்களில் வந்துள்ளது. திருசைலம் (Srisailam) என்ற தலத்தைப் பருப்பதம் என்று அழைத்தனர்.இத்தலம் ஆந்திர மாநிலத்தில் உள்ளது.தமிழகத்துக்கு வடக்கேயுள்ள மலையைக் குறிக்க பருப்பதம் பயன்படுத்தப்பட்டது. பர்வத என்கிற சமஸ்கிருதச் சொல்லின் ரகர வகர மெய்மயக்கம் தமிழில் -ருப்ப்- என்று ஒலிமாற்றம் பெற்று ‘பருப்பதம்' என்று மாறுவதை இங்கேயும் காண்கிறோம்.

parvat > paruppat-am

அடுத்து பர்வதத்தோடு தொடர்புடைய பார்வதி என்ற சொல்லைக் காண்போம்.

3). பார்வதி > பருப்பதி, பார்ப்பதி

பார்வதி என்பதற்கு மாற்று வடிவமாக' பார்ப்பதி ' என்பது இடைக்கால இலக்கியங்களில் அதிகம் வருகிறது."பக்க நுந்தமைப் பார்ப்பதி ஏத்தி முன் பாவிக்கும்" (சம்பந்-தேவா)" "பாடுவன் பாடுவன் பார்ப்பதி தன்னடி பற்றி ஓர் நான்"(சுந்தர- தேவா).

"பார்ப்பதியை பகைசாற்றிய தக்கனை" (திருவா- திருவுந்தியார்). இங்கு - ர்வ்- என்ற மெய்மயக்கம் -ர்ப்ப்- என்றாகிறது.

பார்வதி> பார்ப்பதி

பருவதி, பருப்பதி ஆகிய வடிவங்கள் இருப்பதும் அகராதிகளால் அறிந்து கொள்ள முடிகிறது. பார்வதி என்ற வடிவம் பிற்காலத்தில் பெற்ற கடன் வழக்காகலாம். பார்வதியில் மொழி முதல் நெடில் குறிலாகிறது. ஆனால் பார்ப்பதியில் மெய்மக்கத்துக்கு முன்னர் வருகிறநெடில் குறிலாகவில்லை. பார்ப்பு (இளமைப் பெயர்) பார்ப்பான் போன்ற பழைய சொற்களில் இத்தகைய ஒலிகட்டமைப்பைக் காணமுடிகிறது. பார்வதி என்ற வடிவத்தில் மொழி முதல் நெடில் குறிலாகி உகரம் சுரபத்தியாகச் சேர்க்கப்பட்டது. 'பருவதி' இப்படித் தான் விவரிக்க முடியும்.

பருவதி என்ற சொல்லை அகராதிகளில் காண முடிகிறது. பார்வதி பர்வதத்தோடு தொடர்புடையது. ‘பருவரை மங்கை' (திருவா. திருபாண்டிப்பதிகம்) என்ற சொல்லைத் திருவாசகத்தில் காண முடிகிறது. பர்வத ராஜனுடைய மகள்தான் பார்வதி. பர்வதராஜகுலம் என்ற சொல் இன்றும் வழங்கி வருகிறது. பார்வதி என்ற பெயரும் பிரபலம். இது நமக்குத் தெரிந்ததே. ஆனால் பார்ப்பதியும் பருப்பதமும் இன்று வழக்கில் இல்லை. அடுத்து சதுர்வேதம் என்ற சொல்லைக் காண்போம்.

4) சதுர்வேதம் > சதுப்பேதம்

மறை என்ற சொல் பழைய நூல்களில் தொடக்கத்தில் வருகிறது. அச்சொல் தமிழுக்குரிய சொல்.தமிழ்ப் பொருளைக் குறித்தது. மறை என்பது மறைந்து ஒழுகும் காதல் உறவைக் குறித்தது. களவொழுக்கம் என்றும் கூறுவர். 'மறையோர்' என்பது அந்தணரைக் குறித்தது.(காண்க: க.பாலசுப்பிரமணியன்,2016:பக்-319).

அந்தணர் என்போர் யார் எனத் தெளிவில்லை. ‘நான்மறை' என்ற சொல்பழந்தமிழில் சில இடங்களில் வருகிறது. அதனைத் தொடர்ந்து பக்தி இலக்கியங்களிலும் பல இடங்களில் வருகின்றது. ஆனால் இதே காலகட்டத்தில் தான் 'சதுர்வேதம்' என்ற வடசொல் (சமஸ்கிருதம்) நுழைகிறது. நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் சதுப்பேதிமார் என்ற வடிவம் வருகிறது. இச்சொல் சதுர்வேதம் அறிந்த வேதியர்களைக் குறித்தது.

"பழுதிலா ஒழுகலாற்றுப் பல சதுப்பேதிமார்கள்!" (நாலா-913).

இப்பாசுரம் சதுர் வேதியர்களை விளித்து ‘இழிந்த குலத்தவர்’ என்று கருதப்பட்டவர் களேயாயினும் அரங்கத்தானுக்கு அடியவராயின் அவர்களைத் ‘தொழுமின்நீர்,கொடுமின், கொண்மின்' என்று அறிவுறுத்துவதாக அமைந்துள்ளது. சோழர் காலக் கல்வெட்டுகளில் சதுர்வேதி மங்கலம், சருப்பேதிமங்கலம், சதுப்பேதி மங்கலம் ஆகிய மூன்று வடிவங்கள் வருகின்றன.

சதுர்வேத என்ற சொல்லில் ரகர வகர(- ர்வ்) வேற்றுநிலை மெய்மயக்கம் வருகிறது.இம் மயக்கம்- ருப்ப்-என்று மாறுகிறது. சதுர் என்ற சொல்லில் இடையில் வரும் தகர மெய் கெடுகிறது. இதனால் சருப்பேத என்ற வடிவம் கிடைக்கிறது.

ஊர்வசி உருப்பசி ஆனதைப் போலவும் பார்வதி பருப்பதி ஆனதைப் போலவும் இதனைக் காணலாம். நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் வருகிறசதுப்பேதிமார் என்பதையும் கல்வெட்டுகளில் வரும் சதுப்பேதிமங்கலம் என்ற சொல்லையும்  எவ்வாறு விவரிப்பது?

இதற்குப் பாலி மொழி இலக்கணத்தில் விடை கிடைக்கிறது. ரகர வகர வேற்றுநிலை மெய்மயக்கத்துடன் கூடிய சமஸ்கிருதச் சொற்கள் பாலியிலும் பிராகிருதத்திலிலும் எவ்வாறு திரிகின்றன என்று பார்ப்போம். எ-கா:

சமஸ் பிராகி. பாலி

சர்வ சவ்வ. சப்ப

நிர்வாண. நிவ்வாண நிப்பாண

பர்வத பவ்வய பப்பத

சதுர்வேத சஉவேஅ சதுர்ப்பேத

திவ்ய. திவ்வ திப்ப

இச்சொற்களைச் சிக்காகோ பல்கலைக் கழகத்தின் தெற்காசிய அகராதிகளில் தெரிந்து கொள்ள முடிகிறது. இதன்படி தமிழில் வழங்கும் சதுப்பேதம் என்ற சொல் பாலி மொழியில் சதுர்ப்பேத என்ற சொல்லோடு வடிவ ஒற்றுமை இருப்பதைக் காண முடிகிறது. 'சதுர்ப்பேதி' என்றொரு சொல் கல்வெட்டுகளில் வருவதைப் சென்னைப் பல்கலைக்கழக பேரகராதி சுட்டுகிறது. சமண,புத்த சமயங்கள் தமிழகத்தில் ஓங்கி இருந்த காலத்தில் சதுர்வேதத்திற்கு எதிர்ப்பு இருந்தது. சித்தர்கள் காலத்திலும் இந்த எதிர்ப்பு தொடர்ந்து இருந்தது.‘சதுர்வேதம், ஆறுவகை சாஸ்திரம், புராணங்கள், ஆகமம்' போன்ற நூல்கள் ‘வீணான நூல்கள் என்று ஆடு பாம்பே’ என்று பாம்பாட்டிச் சித்தர் பாடல் கருத்து இவ் வகையான எதிர்ப்பை உணர்த்துகிறது.

இந்நிலையில் சதுர்வேதம், ஊர்வசி, பார்வதி போன்ற சமஸ்கிருத சொற்கள் பிற்காலத்தில் வந்த சொற்கள் என்றும் சதுப்பேதம், உருப்பசி, பருப்பதம் போன்றவை பாலி மொழி வழியாக வந்தவை என்றும் எண்ணத்தோன்றுகிறது.-ர்வ்- என்ற சமஸ்கிருத மெய்மயக்கம்பாலியில்-( ர்)ப்ப்- என்று மாற்றம் அடைகிறது. தமிழில்-ருப்ப்-,-ர்ப்ப்- என்று மாறுகிறது. கடன் சொற்களில் ஏற்படும் ஒலி மாற்றங்களை ஆராய்வது வரலாற்று ஒலியனியல் எனப்படும். இவ் ஆய்வு தமிழில் குறைவாகவே நடைபெற்றிருக்கிறது.

அடிக்குறிப்பு:

  • சதுர்முகன் என்ற சொல் சதுமுகன் என்று சிலப்பதிகாரத்தில் (நாடுகாண் காதை-176-189 176-189) வருகிறது. அது அங்கு சமண சமய அருகனைக் குறித்தது. சதுமுகன் பின்னாளில் நான்முகனைக் குறித்தது.
Pin It