‘புரியாதவை எல்லாம் உயர்வானவை’ என நினைப்பது அடிமை மனத்தின் இயல்பு. அடிமை மனநிலை அதிகமாய்க் காணப்படுவது, படிப்பறிவு உள்ள தமிழர்களிடம் என்பது அருவருப்பான உண்மை.

படிப்பாளி (Learner) வேறு! அறிவாளி (Intelectual) வேறு! அண்ணல் அம்பேத்கர் இப்படித்தான் வகைப்படுத்திக் காட்டுகிறார்.

மதிப்பெண்ணுக்காகப் படித்து, வாழ்க்கை வசதிகளைப் பெருக்குவதே நோக்கமாகக் கொண்டோர் படிப்பாளி!

மனிதவாழ்வைப் புரிந்து கொள்வதற்காகக் கற்று, சமூக நலத்தை உயர்த்துவதை இலக்காகக் கொண்டோர் அறிவாளி!

உருவத்தால் தமிழராக இருந்தாலும் உள்ளத்தால் மற்ற மொழிகளிடம் மண்டியிட்டுக் கிடக்கும் படிப்பாளிகள் எண்ணிக் கையே தமிழினத்தில் மேலோங்கி நிற்கிறது.

அடிமைச் சிந்தனைக்கு மூளையைப் பழக்கப்படுத்திவிட்ட வர்கள், தமது மொழியைத் தாழ்வாய் நினைப்பார்கள்! தமிழ்நாட்டுச் சமூக வாழ்விலும் குடும்ப வாழ்விலும் பெருமைப்படுத்தப்படுவது எந்தமொழி என்று பார்த்தால், இந்த உண்மை விளங்கும்.

தமிழ்நாட்டில் ஆங்கிலமும் சமற்கிருதமும் மேட்டுக்குடி வாழ்வின் அடையாளம் என்ற போதை ஏற்றப்படுகிறது.

குழந்தைகளுக்கு வடமொழியில் பெயர் வைப்பதும், அந்நிய மொழிக் கல்வியை அவர்கள் மூளையில் திணிப்பதும், உயர்ந்த வாழ்வை எட்டிவிட்டதன் அறிகுறிகளாக நம்ப வைக்கப்படுகின்றன.

ஆங்கில வழியில் படிப்பதால் அறிவு வருகிறதோ இல்லையோ, ‘ஆங்கிலம் தெரியும்’ என்ற தலைக்கனம் வரும். மற்றவர்களைத் தாழ்வாகப் பார்த்துத் தனக்கு மட்டும் சிம்மாசனம் தேடும் உயர்வு மனப்பான்மை வரும். வசதியைப் பறைசாற்றும் கருவியாகக் கல்வி மாறுவது சமுதாயக் கேடுகளுக்கு வழிவகுக்கும்.

வீட்டில் பேசப்படும் மொழியோ, வீதியில் பேசப்படும் மொழியோ, வகுப்பறை மொழியாக இருந்தால் மட்டுமே படிக்கும் குழந்தைக்குத் தெளிவுவரும். இரண்டும் அல்லாத மயக்க மொழியில் வகுப்பு நடப்பது, இயந்திர மனிதர்களையே பிதுக்கித் தள்ளும். வெற்றுப் படிப்பாளிகளின் எண் ணிக்கை மட்டுமே அதனால் பெருகும்.

மக்கள் மொழியை நேசிக்காத எவரும் மக்களை நேசிப்பது கடினம்.

மக்கள் நலத்தையும் மனித சமத்துவத் தையும் நேசிப்பவர்களால் மட்டுமே, மந்தை மனப்பான்மையிலிருந்து விலகி நின்று சிந்திக்க முடியும்.

தமிழினம் முன்பு வருணாச்சிரமத்தால் பிளக்கப்பட்டது. இப்போது கல்வி முறையால் பிளவுபட்டு நிற்கிறது. வசதியானவரா? வறுமையானவரா? என்பதைப் பள்ளியை வைத்தே வேறுபடுத்திப் பார்க்கும் அவலநிலை வந்துவிட்டது.

மக்கள் மொழியில் கல்வி புகட்டப்படும் போது, அறிவு அனைவருக்குமான பொதுச் சொத்து ஆகிவிடும்.

கல்வியில் பிறமொழியைத் திணிப்பது கேடு! பெயரில் பிறமொழியைத் திணிப்பது பெருங்கேடு.

பிறந்த இனத்தின் அடையாளத்தைப் பெயரில் புலப்படுத்துவது அறிவு நாகரிகம்.

அறிவைக் கல்வி முறையிலும் அறிவு நாகரிகத்தைப் பெயரிடுவதிலும் இழந்து கொண்டிருக்கிறது இன்றைய தமிழினம்.

அக்ஷய்          ஷ்யாம்          அனன்யா      ஸ்ரீநிதி

அபிலாஷ்     ஸ்ரீவர்தன்      அனுஷா       ஸ்ரீமதி

ஆகாஷ்         க்ருஷ்            அமிர்தாஸ்ரீ    ஸ்நேகா

ரூபேஷ்         கிஷோர்        அபர்ணாஸ்ரீ   ஸ்ரேயா

ப்ரணவ்          ராகவ்         ஆஷிகா         ரித்திகா

யஷ்வந்த்      தனுஷ்           வர்ஷா           ஷ்ருதி

நிதிஷ்            ஹர்ஷத்       வர்ஷின்        ரக்ஷா

நீரஜ்    ஷரிஷ்           ஜனனி           ரேஷ்மா

தமிழர் வீட்டுக் குழந்தைகளின் பெயர்கள் இவை என்றால் நம்புவார்களா? விளங்காத பெயர்களைச் சுமந்து நிற்போரைச் சுமந்து நிற்கிறது தமிழ்நாடு!

அரசியல் தலைமை தமிழரிடம் வந்திருக்க லாம். மதத்திற்கும் சடங்கிற்கும் தலைமை தாங்கும் பண்பாட்டு அதிகாரம் பார்ப்பனர் வசத்தில்தான் இன்றும் உள்ளது. செத்த வடமொழியை, உயிருள்ள தமிழர்கள் பெயரில் சுமக்குமாறு செய்து விடுகிறார்கள்.

பெற்ற குழந்தைக்குப் பெயர் வைக்குமாறு சோதிடர்களிடம் கையேந்தும் அடிமை நிலைக்கு வெட்கப்படுவதில்லை நம் படிப்பாளிக் கூட்டம்!

தமிழ் அல்லாத பெயர்களைத் தமிழர் வீட்டுக் குழந்தைகளுக்குச் சூட்டுவது இன அழிப்பின் தொடக்கம்.

தமிழரைத் தாழ்த்த விரும்பும் எவரும் தமிழைத் தாழ்த்துவதே முதற்படி!

தமிழைப் பெயரில் நீக்குவதைத் தொடங்குகிறார்கள்; கல்வியில் நீக்குவதைத் தொடர்கிறார்கள். வருமுன் காக்கும் விழிப்புணர்ச்சி மிகுதியானால், விளைச்சலுக்கு வழியுண்டு.

செந்தலை ந.கவுதமன், சூலூர் பாவேந்தர் பேரவை

Pin It