கலை இலக்கியங்கள் சமூகத்தின் மனச்சான்றுகளாகத் திகழ்பவை. எனவேதான் இலக்கியத்தைச் சமூகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்றனர். இதனை நேர்கோட்டில் தட்டையாகப் பார்க்க வேண்டியதில்லை. நடப்பு அரசியல், சமூக, பண்பாட்டுச் சிக்கல்களை கலை இலக்கியப் படைப்புகளாக்குவது மிகுந்த பொறுப்புணர்வைக் கோரக்கூடியது. கத்தி மேல் நடப்பது போன்றது. இதில் படைப்பாளியின் கருத்தியல் சார்பும், சமூகப் பார்வையும் முக்கியமானவை.
எழுத்தாளர் க. ஆத்மநாதன் எழுதிய ‘வளவு’ நாவல் அண்மையில் வெளிவந்துள்ளது. இது 1997 மேலவளவு படுகொலைகளைப் பின்புலமாகக் கொண்டுள்ளது. பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி உள்ளாட்சிகளில் ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக இடைநிலை ஆதிக்கச் சாதியினரின் பல்வேறு வடிவங்களில் நிகழ்த்தப்பட்ட எதிர்ப்புகளின் வன்குறியீடு மேலவளவு.
மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி ஒன்றியம், மேலூருக்கும் மேற்கே பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மேலவளவு ஊராட்சி. இவ்வூராட்சியில் மந்திப்பிச்சான் பட்டி, ஓட்டக்கோவில், அழகாபுரிபட்டி, காந்திநகர், கைலம்பட்டி, சேமகிரிபட்டி, கண்மாய்பட்டி, ராசினாம் பட்டி, வி. எஸ். நகரம், செல்லிக்கரைப்பட்டி ஆகிய பகுதிகள் அடக்கம். மேலூர் சட்டமன்றத் தொகுதியிலும், மதுரை மக்களவைத் தொகுதியிலும் மேலவளவு இருக்கிறது.
மேலவளவு ஊராட்சித் தலைவர் பட்டியல் இனத்தவருக்கானது என்பதை எதிர்த்து பல்வேறுப் போராட்டங்கள் நடைபெறுகின்றன. தேர்தலில் புறக்கணிப்பு, வாக்குச்சாவடிக் கலவரம், பதவியேற்பைச் சிக்கலுக்குள்ளாக்குதல் போன்ற பலவும் நடக்கிறது. ஒரு வழியாக 31.12.1996 இல் தேர்தல் நடைபெற்று, 01.01. 97 ல் முருகேசன் என்பவர் ஊராட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்படுகிறார். ஊராட்சி அலுவலகம் பூட்டு போடப்படுகிறது. ஊர்த் தொலைக்காட்சிப் பெட்டி அறையில் முருகேசன் தன் பணிகளைத் தொடர்கிறார். பிரச்சனைகளும் தொடர்கின்றன. மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்தித்து முறையீடு செய்து திரும்பும் வழியில்
30.06.1997ல் ஊராட்சி தலைவர் முருகேசன் உட்பட ஆறு பேர் ஆதிக்கச்சாதியினரால் படுகொலை செய்யப்படுகின்றனர். தமிழ்ச் சமூகத்தின் சாதிய வன்ம வெறியின் ஆறாத வடு இது. ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கி போலி அரசியல் அதிகாரம் தன் கோரப் பற்களை எளிய மக்களுக்கு உணர்த்திய கொடும் சாட்சியம் இது.
மேலவளவு படுகொலை நிகழ்ந்து இருபத்தைந்து ஆண்டுகள் கழிந்து இந்த ‘வளவு’ நாவல் வெளிவந்துள்ளது. இதைப் ‘பின் மேலே வளவு’ எனலாம். வீரமும் காதலும் என வாழ்ந்த தமிழ்ச் சமூகம், சமயமற்ற, சாதியற்ற ஆதிப் பழங்குடிச் சமூகமாக திகழ்ந்த சமூகம், அவைதீக, சநாதன, சாதி வெறிச் சமூகமாக எப்படி, எதனால், யாரால் மாறிற்று என்ற வினாக்களை இப்பிரதி எழுப்புகிறது. குடிமைச் சமூகத்தில் திறந்த உரையாடலை நடத்த முயல்கிறது. உரையாடல்கள் தான் ஜனநாயகத் திறப்புகள். இச்சிறு நாவல் கற்பிதமாகக் (உட்டோப்பியா) கூட இருக்கலாம். இது காரியக் கற்பிதம். தமிழ்ச் சமூகம் சாதி எனும் சதியின் கேடுகளைக் கடக்க வேண்டிய அவசியத்தை எளிய விவாதமாக்கியிருக்கிறது எனலாம்.
‘வளவு’ எனும் இந்நாவல் நிகழ்வுகளை முன்பின்னாக கால நிரலைப் பிரித்துப் போட்டு புனைவாக்கப்பட்டுள்ளது. கடைசி இரவுச் சாப்பாடு, மோர்ப்பெண், தீர்ப்பு, கீழடி, கவியரங்கம், தியாக மண்டபம், கறுப்புச் சட்டை, மின்மினிப் பூச்சிகள், பொங்கல், விடிவெள்ளி எனும் பத்து பிரிவுகளில் கதை நகர்த்தப்பட்டுள்ளது.
கடைசி இரவுச் சாப்பாடு, தீர்ப்பு, தியாக மண்டபம் ஆகிய மூன்றும் மேலவளவு படுகொலையையும் குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட தண்டனையையும், அங்கு அமைக்கப்பட்ட மண்டபத்தையும் நினைவு கூர்தலாக இடம், பெயர், கால மாறுபாட்டுடன் புனைவாக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் பாதிக்கப்பட்ட பகுதியைச் சார்ந்த காலனி செல்வராசுவின் மகன் இனியன் கல்லூரியில் தமிழ் படிக்கிறான். அதே கல்லூரியில் அதே வகுப்பில் எதிர் தரப்பைச் சார்ந்த அரும்பும் படிக்கிறாள். இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்து, நட்பாகின்றனர். இலக்கியம், சமூகம் குறித்த கருத்து ஓர்மை இவர்களுக்குள் உண்டாகிறது. அரும்புவின் தகப்பன் மாயழகு. அரும்புவின் தாய்மாமன் பாண்டித்துரைக்குத் தன் மகளைத் தத்து கொடுத்து விடுகிறார். பாண்டித்துரை வளவு கொலையில் ‘சம்பந்தப்படாத போதும்’ குற்றவாளியாகி சிறைத் தண்டனை அனுபவித்தவர். சிறையில் பொதுவுடைமை இயக்கத் தலைவர்களுடன் உறவு ஏற்பட்டு சாதி கடந்து வாழத் தலைப்படுகிறார். இச்சூழலில், இனியன், அரும்பு நட்பு ‘அலராக’ வெளிப்படுகிறது. மாயழகு தன் பரிவாரங்களுடன் ஆதிக்கச் சாதி மனப்பான்மையில் சிக்கலை உருவாக்குகிறான். இனியனைக் குறி வைக்கின்றனர். இச்சூழலில் பாண்டித்துரை தலையிட்டு அரும்புக்கு பொறுப்பேற்று சிக்கலைத் தவிர்க்கிறார். இனியனையும் அவன் அப்பா செல்வராசுவையும் அழைத்து அரும்புவையும் அழைத்து வந்து இருவரின் விருப்பத்தையும் நிறைவேற்ற உறுதியளிக்கிறார். இருவரையும் உயர்கல்விக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கிறார். இதுதான் கதை. இது கற்பனைதான். நடக்க வேண்டியது. இரு தரப்புகளும் உரையாடலுக்கான வாய்ப்பை இப்பிரதி வழி எழுத்தாளர் உருவாக்கி விடுகிறார்.
அகம், காதல், ஜல்லிக்கட்டு, சங்ககால வாழ்வு, கீழடிப் பெருமிதம்… என காவியப் பண்புகள் ஆங்காங்கே மிளிர்கின்றன. சமகால சமூகத்தின் கொந்தளிப்பு மிக்க நிகழ்வை இலக்கியப் பதிவாக்குவது எளிதல்ல. மிகுந்த சமூகக் கரிசனத்துடன் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
“ஐயா, அவுங்களால கணேசனைத் தலைவரா ஏத்துக்க முடியலீங்க. நீங்க வந்து பேசுனப்ப. சட்டத்தையும், நியாய அநியாயங்களையும் நீங்க தெளிவா எடுத்து சொல்றப்ப சமாதானம் ஆகிப் போறவுங்க, பிறகு சாதியா நின்னு கூட்டம் போட்டு அவங்க நிலையை. மனசை. மாத்திக்கிறாங்கைய்யா” (ப.17) என வளவின் சிக்கலை உணர்த்துவதும், அதற்கு மாவட்ட ஆட்சியர்,
“ஐயா… சாதிங்கிறது ரெண்டாயிரம் வருசமா நம்மகிட்ட இருந்து வர்ற ஒரு தீமை! நாள்பட்ட நோய் மாதிரி. நோயின்னு கூட சொல்ல முடியாது. அதை விட மோசம். குழந்தை பிறந்து கீழே விழறப்ப உடலில் இதயம் மாதிரி உறுப்புகள் அதோட சேர்ந்து வர்ற மாதிரி சாதியும் வருதோன்னு கூட நான் பல சமயம் நினைப்பேன். இரும்புப் பாளம் போல நம்மூர் மனுசங்க நெஞ்சுல இது இறுகிக் கிடக்கு பெரியவரே!” (ப.18) என விளக்கம் தருவதும் கவனிக்கத்தக்கது.
சாதியின் சமூக உளவியலை இனியன் வழி பல இடங்களில் பதிவு செய்கிறார் ஆசிரியர். “ஒவ்வொருத்தருக்கும் ஒரு குணாம்சம். அவரு நம்மூரு காலனியில இருக்கிற ஒரு குடும்பத்தில இருந்து படிக்க வர்றாரு. காலனிக்கும், மற்றவர்களுக்கும் இருக்கிற வேறுபாடு. இணைக்க முடியாத பள்ளம். உனக்குத் தெரியாதா என்ன? அந்தப் பகுதியிலேர்ந்து நம்ம கல்லூரியில படிக்க வந்திருக்கிற ஒரே பையன் இவர்தான்! மனிதர்களுடைய சூழ்நிலைதான் அவங்களோட சிந்தனையையும், வாழ்க்கைப் போக்கையும் தீர்மானிக்கும் சுமதி. அதோட கல்லூரியில பெண்களோட பேசினா பிரச்சினை ஏதும் வருமுன்னும் அவர் நினைச்சிருக்கலாம்.” (ப. 30)
“அரும்பு... நம்ம ஊரில் உங்கத் தெரு வளவுக்கும் எங்க காலனிக்கும் எவ்வளவு வேறுபாடு! எத்தனைப் பெரிய சமூக, பண்பாட்டு மடு நம்மைப் பிரித்து ஆள்கிறது! எங்கள் மக்கள்தான் எத்தனை, எத்தனை இழிவுகளையும், புறக்கணிப்புகளையும், வன்கொடுமைகளையும் சுமந்து நாள்தோறும் அல்லல்படுகிறார்கள்! நம்ம கிராமத்து நிலைமைதான் நம்ம நாடு பூராவும் நிலவுகிறது அரும்பு. இதெல்லாம் சாதியின் பெயராலேதானே நடக்கிறது. அதற்கான. அந்தச் சாதித் தீமைக்கான. எனது வருத்தத்தை, எதிர்ப்பைக் காட்டுகிற வகையில்தான் நான் இந்தக் கருஞ்சட்டையையே எப்போதும் அணிகிறேன்.” (ப. 34)
சாதியைப் புரிதலையும் அதனை எதிர்க்கும் மனப்பக்குவத்தையும் சமத்துவ வேட்கையையும் இதனுள் காண இயலும்.
“பார்ப்பதற்குச் சிலிர்ப்பூட்டக் கூடியதாக இருந்தாலும், நாம் இன்று வீர விளையாட்டாக நமது பண்பாட்டின் ஒரு பெரும் அடையாளமாகக் கருதும் இந்தச் சல்லிக்கட்டு விழாக்களில் இன்று எனக்குப் பெரிதாய் மதிப்பு கிடையாது. நமது பகுதியில் சாதியம் இந்த விளையாட்டில் மறைமுகமாகக் கலந்து மக்களில் ஒரு சாராருக்கு அச்சத்தையும், விளையாட்டில் ஈடுபடுவதற்கான தயக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.” (ப. 36) என சல்லிக்கட்டு விமர்சனம் ஆகிறது.
“சாதின்னு ஒன்னு இருக்கும் வரை நாம அழுதுகிட்டும், பயந்துகிட்டும்தான் கிடக்கணும் போலிருக்கு! ஆனா, அண்ணி, ஏதோ ஒரு நாள் வரும்! அன்னைக்குச் சாதி துடைத்தெறியப்படும்! இந்த சாதி சமுதாயமும் தன்னை முழுசா திருத்திக்கும்!” (ப. 48) என சாதி ஒரு நாள் உதிரும் என்பதை நம்பிக்கையூட்டுவது மட்டுமின்றி சாதியின் வேரினை,
“உண்மைதானே? ஆரம்பத்தில் தமிழ்க்குடியில் சாதி ஏது? ஆனா, சங்க காலத்திலேயே வைதீகம் வந்து நம்ம மக்களிடையே மெல்ல கலந்திருச்சி. அப்போதே ஏற்றத்தாழ்வான சமூக வர்க்க உருவாக்கம் சாதியின் முன் வடிவங்களை உருவாக்கியிருக்கக் கூடும். பின்னாடி பேரரசுகள் உருவாகி நிலவுடைமை தமிழ்ச் சமூகத்தில் வலுப்பட்டப்பத்தான் தொழில் பிரிவுகள் பிறப்பு வழிப் பட்ட சாதியாய் நல்லா வேரூன்றி ஆழப்பட்டிருச்சி. அந்த சமயத்துல பிராமணீயம், தமிழ் மன்னர்கள் உதவியோட, சாதிங்கிற தீய பண்பாட்டு அம்சத்தை மதச் சடங்கோட இணைச்சி நம்ம தமிழ் மக்களை ஏத்துக்க வைச்சிடுச்சி. அதுதான் இன்னமும் தொடருது” (ப. 67) எனச் சுட்டுவது நோக்கத்தக்கது.
“ஏன் அரும்பு, நீ இப்படி என்கிட்ட பேசிக்கிட்டிருக்குறது உன் உறவுகளுக்குத் தெரிய வந்தால், உன்னைய அவுங்க கோவிச்சுக்கிடமாட்டாங்களா? என்னோட பெரியப்பா கணேசன் கொலையையும், அதனால் கிடைச்ச சிறைத் தண்டனையையும் அவுங்க மறந்திருப்பாங்களா, என்ன?”
“தெரியல. ஆனா, விரும்பமாட்டாங்க. போனவாரம் ஒரு நாள் அப்பாகிட்ட உங்களப் பத்திப் பேசினேன். அவுங்களுக்கு உங்களைப் பத்தித் தெரிஞ்சிருக்கு.”
“என்னையப் பத்தி பேசினியா! என்ன பேசுன?” கையில் பிடித்திருந்த ஸ்பூனை வாயருகே நிறுத்தினான் இனியன்.
“ஏன் பதட்டப்படுறீங்க? நீங்க எங்கூட படிக்கிறவர்னு சொன்னேன். நீங்க கறுப்புச் சட்டை போட்டிருக்கிறதைச் சொன்னேன். ஏன் போட்டிருக்கீங்கன்னு அதையும் கொஞ்சம் விளக்கிச் சொன்னேன். அவ்வளவுதான்.”
“சரி அதுக்கு அவுங்க என்ன சொன்னாங்க?”
“தெரியும். நம்ம காலனி செல்வராசுவோட பையன்தானே அவன். ‘ரொம்ப நல்ல பையன், நல்லா படிப்பான்னு கேள்விப்பட்டிருக்கேன்’ அப்படின்னாங்க.” (பக் 82-83)
இந்த உரையாடல் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இனியனின் சமூக உளவியலைப் பதிவு செய்கிறது.
“அந்தக் காலனி செல்வராசுவோட பையனைத் தூக்கிட வேண்டியதுதான். அரும்பு அவனுக்கு சட்டை வாங்கிக் கொடுத்திருக்கா. அதை அவன் போட்டுக்கிட்டு பெருமை புடிச்சி வெளியில திரியிரானாம். காலேஜி கேண்டீன்ல வேலை செய்யுற எங்க ஊரு பெண்ணை விசாரிச்சோம். அவ எல்லா விவரத்தையும் சொல்றா. வேற சில பேரும் அரும்பையும், அந்தப் பையனையும் அங்க இங்க பார்த்ததா சொல்றாங்க. நம்மால இதை யெல்லாம் தாங்கிக்கிட்டு இருக்க முடியாதுப்பா. எம் மச்சான் வீட்டுக்கு எம் பொண்ண தத்துக்கொடுத்தது தான் இப்ப தப்பாத் தெரியுது. அங்க வளர்ப்பு சரியில்ல.” (பக். 89) என அரும்புவின் உண்மை அப்பா மாயழகு கருவுகிறார்.
“மூன்றாண்டுகள் ஒன்றாய்ப் படித்தாலும் ஓரிரு மாதங்களாகத்தான் நாம் இனியனுடன் சற்றுக் கூடுதலாய் அன்பாய்ப் பழகி வருகிறோம் என நினைத்த அரும்பு அதற்குள்ளாகவே இப்படி எதிர்ப்பு வெடித்து வெளிவருவதை நினைத்து வியப்படைந்தாள். என்ன இப்போது தவறு நிகழ்ந்து விட்டது என்பதும் அவளது மனதுக்குப் பிடிபடவில்லை. இனியன் சொல்வதைப் போல் சாதியம் இவ்வளவு கொடூரமானதா? தான் இனியனிடம் நெருங்கிச் சென்ற போதெல்லாம் அவன் தயங்கியதும், விலகி நின்றதும் இதன் பொருட்டுத்தானா?” (பக் 92) இதில் அரும்புவின் பார்வை யதார்த்தத்தைச் சித்திரிக்கிறது.
மேல வளவு சம்பவத்தினைப் போன்ற தொரு பழிவாங்கும் மோதலை. பேருந்து வழி அரங்கேற்றத் துடிக்கிறது ஆதிக்கத்தரப்பு. அன்று முருகேசனும் தோழர்களும் நிராயுத பாணிகள். இன்று,
செல்வராசு பதட்டமின்றி அமைதியாய் மாயழகை நோக்கிப் பேசினார்:
“ஐயா வேண்டாம். நாங்களும் ஆயுதம் எடுத்துக்கிட்டுத்தான் வந்திருக்கோம். அறிவழகன் ‘சுமித் அண்ட் வெஸன்’ கைத்துப்பாக்கி வச்சிருக்கான். மோதல்னா அவன் சுட்டுடுவான். வேற வழியில்லை. இரண்டுப் பக்கமும் சேதமாயிடும். உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கிறேன். வேண்டாம்.” (பக்.108)
காலமாற்றம், அடித்தால் திருப்பி அடிப்போம் எனும் வளர்ச்சி நிலை உருவாகி விட்டது. எதிர்த் தரப்பு அரிவாள், ஆயுதங்கள் வைத்திருக்க, இங்கு துப்பாக்கி. படைப்பாளி துல்லியமான சமூக எதிர்ப்பைப் பதிவாக்குகிறார்.
சாதி ஒழிப்பின் முதல் நிலை சொந்த சாதி அபிமானத்தை விடுவது. தன்னைக் கீழிறக்கம் செய்து கொள்வது. இதனை, ஆதிக்க இடைநிலை சாதியினரான பாண்டித்துரையார் வழி நிறுவுகிறார் ஆசிரியர்.
"வாங்கடா என்னைய முதல்ல வெட்டிப்போட்டுட்டு அப்புறம் இந்த செல்வராசு குடும்பத்தை வெட்டுங்கடா. யேய்… சுந்தரபாண்டி, உன் வீடு என் தெருவிலாதனே இருக்கு. என்ன மயிருக்கு என்னைய கேட்காம இங்க வந்தே? உன் அப்பன் கிழவனுக்குத் தெரியுமா நீ இங்க வந்தது? எல்லோருக்கும் செயிலுக்குப் போயி புளுத்த அரிசிச்சாதம் திங்கணுமுன்னு ஆசையாயிருக்கு போலிருக்கு! ஜெயில் வாழ்க்கைன்னா என்னான்னு தெரியுமாடா உங்களுக்கு?” (ப.109) எனப் பேசுவதுடன், செல்வராசு தரப்புக்கு ஆதரவாக நிற்கவும் செய்கிறார்.
மேலும், தன் மைத்துனனும், அரும்புவின் மெய்யான தந்தையுமான மாயழகை, அவனின் சுயத்தை இப்படி கேள்விக்குள்ளாக்குகிறார் பாண்டித்துரை:
"என்ன மசுரு விசயம் கேட்கப்போற? சரி நான் உன்னைய ஒண்ணு கேட்கறேன். அதுக்கு மட்டும் நீ நெஞ்சில கையை வச்சி உண்மையச் சொல்லு. எதுக்கு நீ மூணு நாளைக்கு ஒரு தரம் சென்னம்பட்டி காலனிக்குள்ள ராத்திரி ராத்திரி போயிட்டு வாறே! அப்ப மட்டும் ஒஞ்சாதி சடங்கெல்லாம் உனக்கு ஞாபகம் வர்றதில்லையா?”.. (ப 110)
பாண்டித்துரை, செல்வராசுவிடம் இணக்கமாகவும், அதே நேரத்தில் இனியன், அரும்பு வாழ்வு குறித்த பாதுகாப்புணர்வுடன் பேசிச் சம்மதம் தந்து, சம்மதத்தைப் பெறுகிறார். மேலும் தன் குடும்பத்தின் பாரம்பரிய வைர மோதிரத்தை அரும்புவிடம் தந்து இனியனுக்கு அணிவிக்கச் செய்கிறார். இனியனின் தாய் பூவாயியின் காது தோட்டினை அரும்புவுக்கு அணியச் செய்கிறார்.
சாதிப் பகைமைக்குக் காரணமான ஊர்ப்புறத்தை விடுத்து சென்னை நகருக்கு, உயர் படிப்புக்கு அனுப்புவதும் கூட இயல்பான அவசியமான தீர்வாகவே அமைகிறது.
காதலின் பொருட்டு சாதி ஆணவக் கொலைகள் நடக்கும் காலத்தில், நாகரிகச் சமூகத்தின் வெளிப்பாடாக இந்நாவல் அமைவது சிறப்பு.
‘வளவு’ தன் இலக்கில் வெற்றி பெறுகிறது. சங்கப்பாடல்கள், காதல், கவியரங்கம், கீழடி, தூய்மையான உரையாடல் மொழி… என நேர்க்கோட்டைக் கலைத்துப் போட்டு விளையாடி உள்ளார் க. ஆத்மநாதன், கலை இலக்கிய அழகியல், ஓர்மைகள் தாண்டி நடப்பு சமூக நிலைமை குறித்து கலைப் படைப்பு வழியான ஓர் உரையாடலை அவர் தந்ததற்குப் பாராட்டுக்கள். ஆசிரியரின் கருத்தியல் சார்பு மெச்சத்தக்கது.
- இரா. காமராசு, பேராசிரியர், தலைவர், நாட்டுப்புறவியல் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.