அறுபத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு... 1962இல் காரைக்குடியில் ‘பாரதியும் பட்டுக்கோட்டையும்’ என்ற தலைப்பில் ஒரு நீண்ட சொற்பொழிவை நிகழ்த்தியுள்ளார் பேராசிரியர் சாலமன் பாப்பையா. அப்போது அவருக்கு வயது 26. அவ்வுரை மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இவ்வுரையின் வெற்றி இதே தலைப்பிலும், ‘பாரதிதாசனும் பட்டுக்கோட்டையும்’ என்ற தலைப்பிலும் தமிழகத்தின் பல முக்கிய நகரங்களில் அடுத்தடுத்துப் பேச வழிவகை செய்தது.
பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் தொகுத்து நூலாக வெளிவருவதற்கு முன்பு அவரின் பாட்டின் மீதிருந்த ஈர்ப்பின் காரணமாக பட்டுக்கோட்டையார் பாட்டெழுதி வெளிவந்திருந்த சினிமாப் பாட்டுப் புத்தகங்களைச் சேகரித்து ஆய்வு செய்து இவ்வுரைகளை நிகழ்த்தி, உழைக்கும் மக்களின் உரிமைக் குரலாக விளங்கிய பட்டுக்கோட்டையாரின் கம்பீரப் பாடல்களுக்கு உயிர் கொடுத்தவர் பாப்பையா.
அவரது தொடர் ஆய்வின் விளைவாக, 1976 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், அன்றைய கல்லூரி ஆசிரியர்களின் போராட்டத்தில் பங்கேற்று, மதுரை சிறையில் பதினாறு நாட்கள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் சிறைக்குள்ளேயே தனது ‘பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு பார்வை’ என்ற நூலை சிறப்பு அனுமதி பெற்று, அச்சிறையின் கடைநிலை ஊழியர் ஒருவர் வெளியிடவும், அப்போது ஐயாவுடன் சிறையில் இருந்த பேராசிரியர் தமிழ்க் குடிமகன் நூல் திறனாய்வுரை நிகழ்த்துவதுமாக அந்நிகழ்வு, கைதாகி சிறையிலிருந்த எண்ணூறுக்கும் மேற்பட்ட கல்லூரி ஆசிரியர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
பாட்டாளிகளின் பாவலரான பட்டுக் கோட்டையைப் பற்றிய அரிய ஆய்வு நூலொன்றைப் போராட்டச் சூழலில் சிறைச்சாலைக்குள், அதுவும் ஒரு கடைநிலைத் தொழிலாளி வெளியிடுவதே பொருத்தம் என்று எண்ணிச் செயல்பட்டவர் ஐயா. அந்நூலுக்குத் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அணிந்துரை எழுதியிருந்தார். அந்நூலே சாலமன் பாப்பையா எழுதி வெளியிட்ட முதல் நூல்.
பாப்பையா பிறந்தது மதுரையாக இருப்பினும், அவரது பெற்றோர் வாழ்ந்தது திருமங்கலத்திற்கு அருகிலுள்ள சாத்தங்குடி எனும் கிராமம். மதுரையிலிருந்த ஹார்வி மில் தொழிலாளிகளாகச் சேர்ந்து கொடும் வறுமையிலிருந்து விடுபடும் நோக்கில், சாத்தங்குடியிலிருந்து குடிபெயர்ந்து மதுரை வந்த குடும்பம். பாப்பையாவுடன் பிறந்தவர்கள் மொத்தம் பத்துப் பேர். இறந்துபோன இரண்டுபேர் போக எஞ்சியிருந்த எட்டுப் பேரில் இவர்தான் கடைசி. வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத வறுமை. மூன்று வேளைகள் சாதாரண உணவே அரிதாகக் கிடைத்தது. பல சிக்கல்களும் பிரச்சினைகளும் நிறைந்த குடும்பம். கல்வி குறித்து மட்டுமல்லாது, வேறு எவ்வித விழிப்புணர்வும் இல்லாத நிலை. தொடக்கப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்ட காலத்திலிருந்து முதுகலைப் பட்டப்படிப்பு முடிக்கிற வரை தடைகளையும் சோதனைகளையும் மட்டுமே சந்தித்து வளர்ந்தவர் பாப்பையா.
உதவி செய்வதற்கான உறவினர்கள் இல்லை. உடன் படித்த, பழகிய நண்பர்களின் உதவிகள் ஆங்காங்கு இவரின் கல்விக்குக் கைகொடுத்துள்ளன. கல்லூரிப் படிப்பின் போதுகூட மைல் கணக்கில் காலில் செருப்பில்லாமல் நடந்து செல்கிற சூழல். முதுகலைப் படிப்பையும் முடித்து வேலூர் ஊரிஸ் கல்லூரியில் பயிற்றுநர் (டியூட்டர்) தற்காலிக வேலை; மாதம் ரூ 120/- சம்பளத்துடன் கிடைத்த போதுகூட அணிந்து கொள்வதற்கு ஒரே பேண்ட் மட்டுமே இருந்தது. வேலூருக்குச் செல்ல பேருந்துக் கட்டணத்திற்கே பிரச்சினை.
வேலூர் ஊரிஸ் கல்லூரியில் தமிழ்த்துறையில் சேர்ந்த பிறகு, தான் படித்த அமெரிக்கன் கல்லூரியில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வந்த ‘முத்தமிழ்க் கலை விழா’ போன்று ஊரிஸ் கல்லூரியிலும் நடத்த முன்முயற்சி எடுத்தார் பாப்பையா. பல இடையூறுகளுக்குப் பிறகு முதல்வரிடம் அனுமதி பெற்றார். ஊரிஸ் கல்லூரியில் அப்போது தா. பாண்டியன் அவர்களின் மூத்த சகோதரர் பேராசிரியர் தா. செல்லப்பா பொருளாதாரத் துறைத் தலைவராக விளங்கினார். தா. பாண்டியனின் தம்பி பொன்னிவளவன் அக்கல்லூரியில் படித்து வந்தார். இவர்களெல்லாம் பாப்பையாவின் முத்தமிழ் விழா முயற்சிக்கு முழு ஆதரவை வழங்கினர். முத்தமிழ் விழா சிறப்பாக நடந்து விடக்கூடாது என்றும், பாப்பையாவின் முயற்சி வெற்றி பெற்று விடக்கூடாது என்றும் அக்கல்லூரியில் ஓர் ஆசிரியர் குழுவினர் பல மறைமுக முயற்சிகளை மேற்கொண்டனர்.
விழா நிகழ்ச்சி நிரலை வடிவமைப்பதற்காகக் கூடிப் பேசினர். பேராசிரியர் தா. செல்லப்பா ஓர் ஆலோசனையை முன் வைத்தார். மாதிரி ஐநா சபைபோல் ஒன்றினை அமைத்து உலக அளவிலான முக்கியப் பிரச்சினை ஒன்றைப் பொருண்மையாகக் கொண்டு ஆளுக்கு ஒரு தலைப்பை எடுத்து கருத்துரை வழங்கலாம்.வாதிடலாம் என்பதே செல்லப்பா முன்வைத்த ஆலோசனை. அப்போது அமெரிக்கா - கியூபா பிரச்சினை உலகின் கவனத்தை ஈர்த்திருந்தது.
‘கியூபாவில் அமெரிக்காவின் தலையீடு சரியே! தவறே!’ என்பதே தேர்வு செய்யப்பட்ட தலைப்பு. ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு பிரதிநிதியைத் தேர்வு செய்தனர். சாலமன் பாப்பையா இந்தியாவின் பிரதிநிதியாகவும் சோவியத் நாட்டின் பிரதிநிதியாக தா. செல்லப்பாவும் களம் இறங்கினர். தொடக்கத்தில் இந்த விவாத வடிவத்தை செல்லப்பா முன்மொழிந்தபோது தனக்கு ஒன்றும் விளங்கவில்லை என்றும், தெற்கே ‘பட்டிமன்றம்’ என்று ஒரு நிகழ்வு நடத்துகிறார்களே அது போல்தான் இது என்று செல்லப்பா விளக்கியதாகவும் பதிவு செய்துள்ளார் பாப்பையா. அணிகளாகப் பிரிந்து விவாதிப்போம். நடுவர் இரண்டு தரப்புகளின் வாதங்களையும் உள்வாங்கி விளக்கி கடைசியாக தீர்ப்புரை வழங்குவார் என்று செல்லப்பா எடுத்துரைத்ததாகத் தெரிவித்துள்ளார் பாப்பையா.
அந்நிகழ்வில் ‘மாண்டவன் மீண்டான்’ என்ற ஒரு நாடகம் பாப்பையாவின் முன்முயற்சியால் மேடையேறியது. முத்தமிழ் விழாவின் சிறப்பு விருந்தினராக தா. பாண்டியன் பங்கேற்றுச் சொற்பொழிவாற்றியுள்ளார். பாப்பையா அவர்களின் முயற்சியின் விளைவாக நடைபெற்ற ஊரிஸ் கல்லூரி முத்தமிழ் விழா மிகச் சிறப்பாக நடந்தேறியது. பாப்பையாவுக்கு அதன் பொருட்டு கல்லூரியில் நன்மதிப்புக் கிட்டியது. ஊரிஸ் கல்லூரி வகுப்பறைகளில் பாடம் நடத்துவதில் மாணவர்களின் உள்ளத்தை வெகுவாகக் கவர்ந்தவராகிவிட்டார் பாப்பையா.
பேச்சு, பாட்டு, ஓவியம், எழுத்து, நடிப்பு ஆகிய தனித்திறன்கள் இவருக்கு இயற்கையாகவும் இயல்பாகவும் சிறப்பாக அமையப் பெற்றிருந்தன. அவற்றைப் பள்ளிக் காலத்திலேயே இனம் கண்டு அரிதின் முயன்று அவற்றை வளர்த்துக் கொண்டவர் பாப்பையா. இவரே நாடகம் எழுதுவார். முக்கியப் பாத்திரத்தில் நடிப்பார். குரல் வளம் இவருக்கு இயற்கை அளித்த கொடை. இவர் ஐந்தாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு படித்த பள்ளியில் ‘பேச்சு மன்றம்’ செயல்பட்டு வந்தது. அதுதான் ஐயாவுக்குக் கிடைத்த முதல் பேச்சுப் பயிற்சி மேடை. அதில் முதல் பரிசு மெடல் வழங்கிப் பாராட்டப்பட்டவர் பாப்பையா.
பேராசிரியரின் தந்தை சுந்தரம் தீவிர காங்கிரஸ்காரர். காங்கிரஸ் கூட்டங்களுக்கெல்லாம் பள்ளி மாணவன் பாப்பையாவைத் தவறாமல் அழைத்துச் செல்வார். முத்துராமலிங்கத் தேவர் உள்ளிட்ட தேசியத் தலைவர்களின் வீரியம்மிக்க உரைகளைப் பள்ளிப் பருவத்திலேயே கேட்டுப் பரவசப்பட்டவர் பாப்பையா. ஐயாவின் பெரியம்மா மகன் தேவகடாட்சம் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர். அவருடன் சென்று சக்கரைச் செட்டியார், ஜீவா, ராமமூர்த்தி, சீனிவாசராவ், டாங்கே, நம்பூதிரிபாட் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் தலைவர்களின் பேச்சுகளை விரும்பிக் கேட்டுள்ளார் பாப்பையா. இளம் வயதில் இதன் தாக்கத்திற்கு ஆட்பட்டார்.
இவரது பள்ளி ஆசிரியர்கள் சிலர் இவரின் தனித்திறன்களை உணர்ந்து ஊக்குவித்துள்ளனர். அவர்களுள் ஓரிருவர் திராவிடர் இயக்க உணர்வாளர்கள். அத்தகைய ஆசிரியர்கள் மூலம் தந்தை பெரியார், அண்ணா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலரின் உரைகளைக் கேட்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார் பாப்பையா.
அமெரிக்கன் கல்லூரியில் பிஏ இறுதி ஆண்டு படித்தபோது பல்திறன்களில் சிறந்து விளங்கிய பாப்பையாவை அக்கல்லூரியில் செயல்பட்டு வந்த முக்கிய மாணவர் அமைப்பான திருவள்ளுவர் கழகத்தின் தலைவராகத் தேர்வு செய்தனர். மிகச்சிறந்த தமிழ் ஆளுமைகள் பலரைத் திருவள்ளுவர் கழகத்தின் சார்பில் அக்கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு அழைத்துள்ளார் ஐயா.
1961-62இல் இலக்கியப் பேராசான் ஜீவா தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தொடங்கியிருந்த காலகட்டத்தில் தமிழ்நாடெங்கும் பாரதியை முன்னிறுத்தி கருத்தரங்கம், பட்டிமன்றம் என்று ஏராளமான நிகழ்ச்சிகளை உயிரோட்டமாக நடத்தினர். அத்தகைய ஒரு விழா புதுக்கோட்டையில் கலை இலக்கியப் பெருமன்றக் கிளையான புதுகை இலக்கிய மன்றத்தால் நடத்தப்பட்டது. ஏற்கெனவே ஊரிஸ் கல்லூரியில் தா. பாண்டியன் பாப்பையாவின் உரை கேட்டிருந்த காரணத்தினால் அவருடைய உரைத்திறனும் எடுத்துரைக்கும் பாணியும் பிடித்துப்போய் பாப்பையாவை புதுக்கோட்டை விழாவில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் பேச அழைத்துள்ளார் தா.பா.
அப்போது பாப்பையாவுக்கு பட்டிமன்றத்தில் பேசிய அனுபவமில்லை. அப்போதெல்லாம் பாப்பையாவின் உரை ஆவேசம் மிக்கதாக இருந்தது. நகைச்சுவைக்கு இடமில்லை. பாரதி ‘வேதாந்தக் கவிஞனே!’ ‘புதுமைக் கவிஞனே!’ என்பதே பட்டிமன்றத் தலைப்பு. புதுமைக் கவிஞன் என்ற தலைப்பில் வாதிட்டார் பாப்பையா. அதுதான் பாப்பையாவுக்கு முதல் பட்டிமன்ற மேடை.
பட்டிமன்ற நடுவர் எம்.எஸ். நாடார். புதுமைக் கவிஞனே அணியில் தொ.மு.சி. ரகுநாதன், சிவகாம சுந்தரி, பாப்பையா, அரவாண்டி ஆகியோர் பேசியுள்ளனர். எதிர் வரிசையில் பேராசிரியர் குழந்தைநாதன், ப. நமச்சிவாயம், கே. சரஸ்வதி, புலவர் அரசப்பனார் ஆகியோர் வாதிட்டனர்.
அந்நிகழ்வில் ஜீவா, ஜெயகாந்தன் உள்ளிட்டோர் சொற்பொழிவாற்றினர். பட்டிமன்றத்தில் பாப்பையாவின் உரை ஜீவாவைக் கவர்ந்தது. அடுத்தடுத்து பாப்பையா தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மேடைகளில் பேச அழைக்கப்பட்டார். 1962 செப்டம்பரில் எட்டையபுரம் பாரதி விழாவில் இரண்டு நாள் நிகழ்விலும் பேசியுள்ளார் பாப்பையா. முதல் நாள் ‘பாரதியின் பார்வையில் மனிதன்’ என்கிற தலைப்பிலான தனிச் சொற்பொழிவு. நாற்பது நிமிடங்கள் பேசியுள்ளார். அடுத்த நாள் பட்டிமன்றம். தா.பாண்டியன், சிவகாம சுந்தரியுடன் பேசியுள்ளார்.
இவ்வாறு ஏராளமான கலை இலக்கியப் பெருமன்ற மேடைகளில் தொடர்ந்து பேசியுள்ளார் பாப்பையா. ‘உண்மையைச் சொல்லணும்னா, கலை இலக்கியப் பெருமன்ற மேடைகளில்தான் நிறைவான பேச்சாளராக நான் அங்கீகரிக்கப்பட்டேன். என்னை முழுமைப்படுத்தியது அந்த மேடைகள்தான்’ என்று பதிவு செய்துள்ளார் பாப்பையா.
பாப்பையாவின் எட்டையபுரம் பாரதி விழாப் பேச்சில் கவரப்பட்டுத்தான் அங்கு வந்திருந்த கல்கத்தா தமிழ்ச்சங்க மாணவர்கள் பாப்பையாவைக் கல்கத்தாவிற்கு அழைத்துப் பேச வைத்தனர். கல்கத்தாவில் எட்டு நாள் தமிழ் நிகழ்ச்சி. ‘கம்பன் பெரிதும் வலியுறுத்துவது அறத்தையா, கற்பையா, பக்தியையா என்பது தலைப்பு. பாப்பையாதான் நடுவர். இதுதான் பேராசிரியர் நடுவராகப் பங்கேற்ற முதல் பட்டிமன்றம்.
கல்கத்தா அரங்கம் முழுக்க முழுக்க அறிஞர்களாலும் படித்தவர்களாலும் நிரம்பியிருந்தது. அணிகளில் பேசியவர்களும் அற்புதமாகப் பேசினர். தனது தீர்ப்பில் ஓர் ஆய்வுரைபோல் நிகழ்த்தி ‘அறமே’ என்று முடித்தார் பாப்பையா. தொடக்கவுரையும் தீர்ப்புரையும் பெரும் பாராட்டைப் பெற்றன.
இவரின் திருமணத்திற்கு முன்பே 1962இல் இவ்வாறாகத் தொடங்கிய பேராசிரியரின் பேச்சுப் பயணம் அவரின் கடைசிகாலம் வரை தொய்வின்றித் தொடர்ந்தது. ஓய்வொழிச்சலின்றி உழைத்தார் ஐயா. பயணமே வாழ்க்கையானது. தவத்திரு குன்றக்குடி அடிகளாரை நடுவராகக் கொண்டு பேசிய பட்டிமன்றங்கள் ஏராளம். அவராலேயே ‘தகுதிமிக்க நடுவர்’ என்று முன்மொழியப்பட்டவர் ஐயா. எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டிமன்றங்கள். எண்ணிலடங்கா தனிச் சொற்பொழிவுகள்.
உலகில் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் ஓயாமல் பயணித்துப் பயணித்துத் தமிழ் பரப்பிய பெருமைமிகு பேராசிரியப் பெருந்தகை சாலமன் பாப்பையா.
‘சமுதாய முன்னேற்றத்திற்குப் பெரிதும் துணை நிற்பது ஆன்மீகமே! அறிவியலே!’, ‘மெல்லத் தமிழினித் தளரும்! வளரும்!’, ‘கணினித்துறை வளர்ச்சியால் நிகழ்ந்துள்ள சமூக மாற்றம் வருந்தத்தக்கதே! வரவேற்கத்தக்கதே!’, ‘சமுதாய மாற்றத்தை சாதிக்கும் ஆற்றல் பேச்சுக்கா! எழுத்துக்கா!’, ‘கலையும் இலக்கியமும் மக்களின் மன மகிழ்ச்சிக்காகவே! மறுமலர்ச்சிக்காகவே!’ இவை ஈரோடு புத்தகத் திருவிழாவில் பேராசிரியர் தலைமையில் நடைபெற்ற பட்டிமன்றங்கள். இவற்றில் ஐயா முன்வைத்த வாதங்கள், எடுத்துரைத்த விளக்கங்கள் இறுதியில் வழங்கிய தீர்ப்புரைகள் பட்டிமன்ற வரலாற்றின் மைல்கல்கள் என்று உறுதிபடச் சொல்லலாம்.
பல்லாயிரக்கணக்கானோர், சில சமயங் களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையாளர்களாக விளங்கினர். தீர்ப்புரை வழங்கியபோது எண்பது வயதைத் தாண்டியிருந்த நிலையிலும் கிஞ்சிற்றும் கம்பீரம் குறையவில்லை. அனல் பறக்க கருத்தாழம்மிக்க தீர்ப்புரையை மக்கள் அனைவரும் கடைசி நிமிடம் வரை கருத்தூன்றிக் கேட்கும்படி வேட்ப மொழிந்தவர் ஐயா. மக்களை எப்படியேனும் சிந்திக்கத் தூண்ட வேண்டும் என்ற ஆதங்கத்துடன் பேராசிரியர் பேசியதைக் கேட்ட எவராலும் அவற்றையெல்லாம் என்றென்றும் மறக்க இயலாது.
மக்கள் சிந்தனைப் பேரவையின் மதுரை மாவட்டத் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஐயா, தமிழை மட்டுமல்ல தமிழ் மக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வையும் ஏற்படுத்த தமிழ் அறிவியலாளரை அழைத்துப் பேச வையுங்கள் என்று ஆலோசனை வழங்கியதோடு அதற்காக ரூபாய் ஒரு லட்சம் பேரவைக்கு நன்கொடையும் வழங்கினார். தமிழ் மக்களிடம் அறிவியல் கண்ணோட்டம் வளர வேண்டுமென உளமார விரும்பிச் செயல்பட்டவர் ஐயா.
கடந்த குடியரசு தினத்தை முன்னிட்டு மதுரையில் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ‘இன்றைய இளைஞர்களின் போக்கு மகிழ்ச்சி தருகிறதா? மனக்கவலை தருகிறதா? என்ற தலைப்பில் ஒரு பட்டிமன்றம் போடுங்கள். நான் நடுவராக வருகிறேன். அணிகளில் முக்கியப் பேச்சாளர்களைப் பேச வைக்கலாம்’ என்றார். அதேபோல் செய்தார். இது நடந்து தற்போது எட்டு மாதங்களே ஆகியிருக்கின்றன. ‘அரங்கத்தில் போட வேண்டாம். வெட்டவெளி மைதானத்தில் போடுங்கள்’ என்றார். வந்தார். அற்புதமான தீர்ப்புரை தந்தார். கூடவே பட்டிமன்றச் செலவுகள் அனைத்தையும் தானே ஏற்பதாகக் கூறி ரூபாய் ஒரு லட்சம் மறுபடியும் பேரவைக்கு நன்கொடையளித்தார். தான் மதிப்பூதியம் வாங்காதது மட்டுமல்ல - பெரும் தொகை நன்கொடையளித்தது ஐயாவின் சமூக நோக்குடனான பேருள்ளத்தை வெளிப்படுத்துகிறது. அந்தப் பட்டிமன்றத்தில் எத்தகைய சமூக அக்கறையோடு, இளைஞர்களைத் தட்டியெழுப்பும் கரிசனத்தோடு, அறச்சீற்றத்தோடு, மனிதநேயத்தை வலியுறுத்தி, மதம் கடந்த மானுடத்தை இளைஞர்களுக்குப் புரியவைக்கும் விதத்தில் துடிப்புடன் பேசினார் என்பதை அருகிலிருந்து பார்த்தும், கேட்டும், உணர்ந்தும் மகிழ்ந்தோம்.
தான் படித்த அமெரிக்கன் கல்லூரியில் 33 ஆண்டுகள் தமிழ்த்துறையில் பேராசிரியராகவும் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றி 1994ஆம் ஆண்டு பணி நிறைவு பெற்றுள்ளார்.
கல்லூரிப் பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும், அவர் தம்முடைய தமிழ்த் தொண்டிலிருந்தும், சமூகத் தொண்டிலிருந்தும் இறுதிவரை ஓய்வுபெறவே இல்லை.
தொண்ணூறு வயதை எட்டிக் கொண்டிருந்தவரா அவ்வாறு பேசினார்? மக்களைச் சிந்திக்க வைப்பதற்காக பேச்சை ஒரு பேராயுதமாக்கியவர் பேராசிரியர். பல நேரங்களில் மக்களைச் சிரிக்க வைத்ததுகூட சிந்திக்கத் தூண்டத்தான். பதிமூன்று ஆண்டுகள் இடைவெளியின்றி சன் டிவியில் தினசரி காலை திருக்குறளை, சங்க இலக்கியங்களை பாமர மக்களும் புரிந்துகொள்ளும் விதத்தில் எளிய உதாரணங்களுடன் எடுத்துரைத்தார். திருக்குறள் ஆய்வு, புறநானூறு, அகநானூறு ஆய்வு நூல்கள் ஐயாவின் தமிழ்க் கொடைதான். கடைசியாக பாரதி ஆய்வுப் பெட்டகமொன்றை நூலாக்கம் செய்யும் நோக்கில் தயாரித்துக் கொண்டிருந்தார். முடிக்கும் முன்னரே விடைபெற்று விட்டார்.
தன்னுடைய உடலை எரியூட்டுமாறு எழுதி வைத்துள்ளதிலிருந்து மதம் கடந்த பொதுப் பண்பாட்டை ஏற்றுக் கொண்டுள்ளார் ஐயா என்பது தெளிவாகிறது.
கடைசியாக பாரதி நினைவு நாளன்று பேரவை சார்பில் பட்டிமன்றம் நடத்தலாம் என்ற கருத்துத் தெரிவித்ததோடு, அந்நிகழ்வில் தான் உரையாற்றுவதாகவும், பட்டிமன்ற ராஜாவை நடுவராக வைத்து ‘மகாகவி பாரதியார் பெரிதும் விரும்பியது புரட்சி வழியா? காந்திய வழியா’ என்ற தலைப்பும் கொடுத்து அந்நிகழ்வை மிகச்சிறப்பாக நடத்த வேண்டும் என்ற முனைப்போடு இருந்தார் பேராசிரியர். எதிர்பாராமல் பட்டிமன்றம் நடக்கும் நாளைக்கு முந்தைய நாள் மாலை இயற்கை எய்திவிட்டார் ஐயா. ஐயா நினைவாக பட்டிமன்றம் அதே தலைப்பில் அதே இடத்தில், அதே அணியினரைக் கொண்டு ஐயா இறந்து ஏழாவது நாளில் மதுரையில் மக்கள் சிந்தனை பேரவை சார்பாக நடத்தப்பட்டது.
2023இல் தான் படித்த தொடக்கப் பள்ளிக்குப் புதிய கட்டடங்கள் கட்டிக் கொள்ள தனது சொந்தப் பொறுப்பில் ரூபாய் இருபது லட்சம் தானாக முன்வந்து நன்கொடையளித்தார். எத்தனையோ மாணவர்களின் கல்விக்குப் பல்லாண்டுகளாக தொடர்ந்து உதவி செய்துகொண்டே இருந்தார் என்பதை நேரில் தெரிந்த, ஐயாவுடன் பல்லாண்டுகள் பட்டிமன்றப் பயணம் செய்த பேராசிரியர் த. ராஜாராம் தெரிவிக்கின்றார்.
1998இல் கோயம்புத்தூரில் நடைபெற்ற எனது முதல் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று உரை நிகழ்த்தினார் ஐயா. 2002இல் ‘விடுதலை வேள்வியில் தமிழகம்’ நூலை ஆயிரம் மாணவர்களுக்குப் பரிசாக அளிக்கும் ஈரோட்டு நிகழ்வில் பங்கேற்று நூல்களை வழங்கிச் சிறப்புரையாற்றினார் ஐயா. நடைபெற்ற நிகழ்வுக்கான மதிப்பூதியம் வழங்கப்பட்ட போது அதனை எவ்வளவு என்று கூட பார்க்காமல், அப்படியே விழாச் செலவுக்காக வைத்துக் கொள்ளுங்கள் என்று வழங்கியவர் ஐயா. 2005இல் முதலாமாண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவில் தனித் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.
சமூக மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் மனதிற்கொண்டு இடைவிடாமல் அறுபதாண்டு களுக்கும் மேல் ஓடி ஓடி தனது பேச்சால், எழுத்தால், ஆய்வால், உழைப்பால் உலகத் தமிழர்களிடையே தமிழ் பரப்பிய, கருத்துகளை விதைத்த மக்கள் பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் குரல் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் என்றென்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
- த.ஸ்டாலின் குணசேகரன், தலைவர், மக்கள் சிந்தனைப் பேரவை & தலைவர், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்