சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டில் ஒன்றான மதுரைக்காஞ்சியைப் போல சென்னைக் காஞ்சி என்ற நூல் வந்திருக்கிறது. மாங்குடி மருதனாரின் மதுரைக்காஞ்சி 782 வரிகள் கொண்டது. இது பத்துப்பாட்டு நூலில் அதிக வரிகள் கொண்டது. பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு உலகியலை உணர்த்துவதற்காக பாடப்பட்டது. மதுரையின் அழகு, ஐந்து வகை நிலம், நாளங்காடி அல்லங்காடி என எல்லாவற்றையும் வர்ணிப்பது, மதுரையை நாள் முழுக்க ஒருவன் சுற்றி வந்தால் என்ன அனுபவம் கிடைக்கும் என்பதை விவரிப்பது இந்த நூல்.
சென்னைக் காஞ்சி என்ற நூல் மதுரைக்காஞ்சி போன்றது; ஒரு வகையில் அதை முன்னோடியாக வைத்துக் கொண்டு உருவாக்கப்பட்டது சென்னை பட்டினத்தைப் பற்றிய விரிவான வர்ணனையைக் கூறுவது. ஆனால் இந்த நூல் மதுரைக்காஞ்சி போல் காஞ்சித் திணையை (நிலையாமை) கூறுவதற்காக எழுதப்பட்டதல்ல. இதில் நாட்டிற்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்ற ஆதங்கம் கோடிட்டு, காட்டப்படுகிறது.
இங்கிலாந்து அரசனான ஆறாம் ஜார்ஜ் மன்னரின் அரசியல் அதிகாரிகளைப் பார்த்து எங்கள் நாட்டை எங்களுக்கு தந்து விடுங்கள் என்று வேண்டும் தொனியில் நூல் ஆரம்பிக்கிறது.
அரசும் நில்லா ஆட்சியும் நில்லா
அளப்பரு வான்பெரு செல்வமும் நில்லா
உரோமா புரியின் உரை பெறு நிலையும்
சுமேரிய நாட்டின் பழமையும் பெருமையும்
கிரேக்க மாக்களின் நாட்டாண் முறையும்
எகிப்து மக்களின் ஏற்றமும் எழிலும்
எல்லாம் தேய்ந்து மண்ணாகியது அறிவியல்
அதனால் யான் உமக்கு உரைக்க வந்தது
சென்னை தன்னில் முன்னூறு ஆண்டு
முன்பு நீர் நட்ட மூவா மொய்ம்புடை
வித்து முளைத்து மரமாய் காய்த்து
மூத்து பழுத்து முழுமுதல் அசைந்து
நெக்கு விட்டு இனி தரும் நேரம் வாய்த்தது
இக்குறி தன்னை அறிந்து இனி இந்தியர்க்கு
ஈதல் வேண்டும் இந்திய நாட்டை
என்று நூலாசிரியர் வேண்டுகிறார்
இந்நூலின் ஆசிரியர் வித்துவான்
ரா. கிருஷ்ணமூர்த்தி சிந்தாதிரிப்பேட்டை பள்ளி ஆசிரியராக இருந்தவர். இந்த நூல் 1939இல் வெளியாகி இருக்கிறது. விலை இரண்டு, மொத்தம் 26 பக்கங்கள், 402 வரிகள், ஆசிரியப்பா வடிவில் அமைந்த நீண்ட பாடல்.
சூரியன் எப்போதும் அஸ்தமனம் ஆகாத நாடு இங்கிலாந்து. 6000 மைல்களுக்கு அப்பால் இருந்து வந்து இந்திய நாட்டைப் பிடித்து ஆட்சி செய்கின்ற ஆறாம் ஜார்ஜ் அரசே எங்களது அவலத்தைக் கேட்பீராக! உலகில் எந்த அரசும் நிலையானதாக இருக்கவில்லை. பழைய வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். எங்களை நீங்கள் 300 ஆண்டுகளாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்; இனியாவது எங்களுக்கு எங்கள் நாட்டின் உரிமையை தரக் கூடாதா?
கிழக்கு இந்தியக் கம்பெனி அனுப்பிய பிரான்சிஸ் டே என்பவர் கடற்கரை அருகே இருந்த ஒரு ஊரை விஜயநகர அரசர் ஒருவரிடமிருந்து விலைக்கு வாங்கினார். இன்றைக்கு (1939) 300 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி இது அப்போது சென்னையை ஆண்ட பூந்தமல்லி நாயக்கர் என்பவர் பிரான்சிஸ் டே வணிகம் செய்வதற்கு என ஒரு இடத்தைக் கேட்டபோது பெருந்தன்மையாகக் கொடுத்து விட்டார். அவர்கள் கோட்டையையும் கட்டினார்கள்.
கொஞ்ச ஆண்டுகள் கழிந்த பின்பு உங்கள் கோட்டையை சுற்றி இருந்த கருப்பு இந்தியர்களை தனி குடியிருப்பில் அமர்த்தினீர்கள்; அதற்கு கருப்பரின் குடியிருப்பு பிளாக்டவுண் எனப் பெயரிட்டீர்கள். ஏற்கெனவே அந்தப் பகுதியில் குடியிருந்த ஆர்மீனியர், பாலஸ்தீனிய யூதர், பாரசீகர் போர்ச்சுக்கீசியர் ஆகியோர்களை விரட்டி விட்டீர்கள்; உங்களது வணிகமும் அரசியலும் நிலை பெறுவதற்கு இப்படியாக எத்தனையோ காரியம் செய்தீர்கள்.
ராபர்ட் கிளைவ் என்ற இளைஞன் உங்களுக்கு வெற்றி தேடித் தந்தான். இதன் பிறகு உங்கள் கோட்டையைச் சுற்றி உள்ள பகுதிகளைக் கொஞ்சம் கொஞ்சமாய் எடுத்துக் கொண்டீர்கள். மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி போன்ற இடங்களில் சில பகுதிகளை நீங்கள் வாடகைக்கு என்று அமர்த்திக் கொண்டீர்கள். உங்களது தந்திரத்தால் உங்கள் நன்மைக்காக சென்னையை நகரத் தன்மையோடு வளர்த்து வந்தீர்கள், நகரமும் வளர்ந்தது.
குளங்கள், சோலைகள், பெரிய தோட்டங்கள் இயற்கை எழிலோடு கொஞ்சிய இடங்கள் எல்லாவற்றிலும் மக்களைக் கொண்டு நிரப்பினீர்கள். எல்லாம் உங்கள் தேவைக்கு. இதனால் எங்கும் நெரிசல், மக்கள் கூட்டம் மோட்டார்களின் ஓலக்குரல், ரேடியோவின் அமைதியான குரல், படித்த பெண்கள் சாலைகளில் சுதந்திரமாகச் செல்லும் நிலையை உருவாக்குனீர்கள்; கல்லூரிகள் பெருகின; பெண்கள் படித்தார்கள்; இப்படி இந்த நகரத்தின் பெருமையை எவ்வளவோ சொல்லிக் கொண்டு போகலாம்.
ஆறாம் சார்ஜ் அரசே எங்களுக்கு "நிலையில்லாத இத்தனை நிலை உள்ளது என்று மலையுறு மதியின் மனமகிழ்ந்து உற்ற ஒரு குடை ஆட்சியை ஒருவி எமக்கு நலம் பெரு நாடு நல்குவீர்" என்று வேண்டுகோள் விடுத்து நூலை முடிக்கிறார் ஆசிரியர். சென்னை நகரைப் பற்றி என். எஸ். ராமசாமி, முத்தையா, ஸ்ரீராம், நரசய்யா என பலரும் விரிவாகவே எழுதியுள்ளனர். திருவிகவின் வாழ்க்கை குறிப்பு உட்பட தனிப்பட்டவர்களின் தன் வரலாற்று நூல்களிலும் சென்னை பற்றிய விரிவான செய்திகள் வருகின்றன. கர்ணல் டி. எம். ரெய்டு எழுதிய புனித ஜார்ஜ் கோட்டையின் வரலாறு (1905), கிளின் பார்லோ எழுதிய சென்னை நகரின் வரலாறு (1921) என எத்தனையோ புத்தகங்கள் வெளிவந்துவிட்டன.
2016 இல் பாரதி புத்தகாலயம் வழி வெளிவந்த சென்னப்பட்டணம் மண்ணும் மக்களும் (இராமச்சந்திர வைத்திய நாத்) என்ற நூல் முந்தைய நூல்களை எல்லாம் ஒருசேர வைத்து விரிவாகச் சொல்லுவது.
சென்னை நகரம் முதலில் உருவாகக் காரணமாக பிரான்சிஸ் டேயைக் கூறினாலும் ஆண்ட்ரு கோகன், பெரிதிம்மப்பா, நாக பத்தன் என்ன வேறு பலருக்கும் இதில் பங்கு உண்டு Madras என்று பொதுவாக அழைக்கப்படும் இந்த நகரத்தின் சில பகுதிகள் மதரஸா என்று அழைக்கப்பட்ட பள்ளிகள் இருந்தன. இஸ்லாமிய அறிஞர்கள் வாழ்ந்த பகுதி என்னும் பெயரில் அழைக்கப்பட்ட மதரசா என்ற பெயர் பிற்காலத்தில் ஆங்கிலேயர்களின் வழக்கில் Madras ஆயிற்று என்று சொல்லுகிறார்கள்.
பிரான்சிஸ் டே 1639 ஆகஸ்ட் 22ஆம் நாளில் விஜயநகரப் பேரரசுக்கு சொந்தமான இடத்தை சந்திரகிரி மன்னரிடமிருந்து ஆண்டு வாடகைக்கு (600 பகோடா), வாங்கினார். 2290 பவுண்ட் செலவு செய்து மூன்றரை ஆண்டுகளில் ஒரு கோட்டையை கட்டினார் கோட்டை சுவர் 6. மீட்டர் உயரமுடையது கோட்டை இதன் பிறகு சென்னை நகரம் கொஞ்சம் கொஞ்சமாகப் பறந்து விரிந்தது.
கோட்டை கட்டப்பட்ட ஆரம்பத்தில் கோட்டையைச் சுற்றி இருந்த மக்கள், கோட்டையைச் சுற்றி இருந்த மண் வெளிகளில் மலம் கழிப்பதற்காக வந்தார்களாம். இது ஆங்கில வணிகருக்கும் அதிகாரிகளுக்கும் வெறுப்பைத் தந்தது. இதனால் அவர்களை வேறு இடங்களில் குடியமர்த்தினார்கள். இப்படி மாற்றிய பின்பு அந்தக் குடியிருப்புகளை பிளாக் டவுண் (கருப்பர்கள் வாழும் இடம்,) என்று அழைத்தார்களாம்.
இப்படி ஒரு நிகழ்ச்சியை சொல்லிவிட்டு நகரும் நூலாசிரியர் சென்னையில் ஒவ்வொரு பகுதிகளும் உருவான காரணத்தையும் அதன் பின்னணியில் உருவான கதைகளையும் மிகச் சுருக்கமாக சொல்லிக் கொண்டே செல்லுகிறார். இப்படி சொல்வதற்குத் தனித்தமிழை அவர் பயன்படுத்தவில்லை; ஆங்கிலச் சொல்லை சர்வ சாதாரணமாக கலந்துவிட்டுச் செல்லுகிறார்.
கம்பெனி வணிகர்கள் தங்களின் சுயலாபத்திற்காக, வசதிக்காக நகரத்தில் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கினார்கள். அதோடு போக்குவரத்து வசதிக்காக சாலைகளைப் போட்டார்கள். ரயிலையும் டிராம் வண்டியையும் கொண்டு வந்தார்கள் என்பதை எல்லாம் விரிவாகவே சொல்லுகிறார்.
ஆரம்பகாலத்தில் மூர் மார்க்கெட்டுக்கு வசதி உள்ளவர்களோ நாகரீகம் உடையவர்களோ செல்லவில்லை, அங்கு எல்லாம் மலிவாகக் கிடைக்கும். தரம் இருக்காது என்ற நம்பிக்கை இருந்ததையும் மேம்போக்காகச் சுட்டிச் செல்கிறார். இந்த நூலைப் படித்ததுமே 1930 - 1940 ஆம் ஆண்டுகளில் இருந்த சென்னையைப் பற்றிய சித்திரம் மனதில் உருவாகிவிடும்.
இந்த நூலில் 1939 ஆம் ஆண்டில் பேச்சு வழக்கில் இருந்த ஆங்கிலச் சொல்லுக்கு வழக்கமாகப் பயன்படுத்திய தமிழ்ச் சொல்லையும் நூலில் கையாளுகிறார். Microphone என்பதை கரிக்கடை என்றும் ரயிலை மரவட்டை வண்டி, தொடர்வண்டி என்றும் General Hospital ஐ சர்வ சிகிச்சை சாலை என்றும், கார் டிரைவரை வலவர் என்றும் Race Course என்பதை பலி விடுபாதை என்றும் பேசப்பட்டதை நூலில் கையாண்டிருப்பதைப் பார்க்கலாம்.
இந்த நூல் வரலாற்று ஆசிரியர்களுக்குக் கொஞ்சம் உதவக்கூடும்.
- அ.கா. பெருமாள், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்.