நாகேஸ்வரி (20.6.1940 - 1.8.2025) என்னும் எழுத்தாளரை தமிழில் அரசியல் நூல்களை வாசிக்கும் பழக்கமுடையவர்களே அறிந்திருக்க முடியும். 60 வயதுக்கு மேல் எழுதத் தொடங்கிய நாகேஸ்வரி, தன் இறுதிக்காலம் வரை தொடர்ந்து எழுதி பல நூல்களை வெளியிட்டு இருக்கிறார். இவர், தான் பயணம் செய்த நாடுகளைப் பற்றிய ஒரு ஆழமான சமூகவியல் பார்வையைப் பதிவு செய்திருப்பதே இவரது நூல்களின் சிறப்பு. அதுவும் பொதுவாக சுற்றுலாவுக்காக அல்லாமல், பல நாடுகளுக்குச் சென்றுள்ள இவர், அங்குள்ள மக்கள் நிலைமைகளை ஆராய்ந்து அரசியல் சமூக பொருளாதார கண்ணோட்டத்துடன் தனது கருத்துக்களைப் பதிவு செய்திருக்கிறார். இத்தனைக்கும் அவர் நீண்ட காலம் வாழ்ந்திருந்தது வடஅமெரிக்காவில் தான். அந்தப் படாடோபத்திற்கு மனதைப் பறிகொடுத்து விடாமல் ஏழை உழைக்கும் மக்களின், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமை எவ்வாறு துயரமானதாக முதலாளித்துவக் கொள்கைகளால் மாற்றப்பட்டிருக்கிறது என்பதை ஆராய்ந்து இந்த நூல்கள் எழுதப்பட்டுள்ளன.nageshwari annamalai(வட) அமெரிக்காவின் மறுபக்கம் - ஒரு சமூகப் பொருளாதாரப் பார்வை - 2009.

பாலஸ்தீன இஸ்ரேல் போர் - ஒரு வரலாற்றுப் பார்வை - 2014.

போப் பிரான்சிஸ் - நம்பிக்கையின் புதிய பரிமாணம், 2017.

கியூபாவின் விடுதலை - அன்று முதல் இன்றுவரை, 2020.

வியட்நாமில் வட அமெரிக்கப் போர்: வென்றது யார்? 2021.

அமெரிக்க ஜனநாயகத்திற்கு ஆபத்தா? 2023.

பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்காத காலகட்டத்தில், அதற்கு எதிரான ஒரு சமூகத்தில் பிறந்த நாகேஸ்வரி, தந்தையுடன் போராடி பட்டப்படிப்பை முடித்துள்ளார். திருமணத்திற்குப் பின் வட அமெரிக்கா செல்லும் வாய்ப்பைப் பெற்றவர் அங்கே தங்கி இருந்த ஐந்தாண்டுகளில் ஒரு கணினிப் பயன்பாடு டிப்ளொமா மட்டுமே படிக்க முடிந்திருக்கிறது. இரு பெண் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி, 45 வயதில் மீண்டும் பட்டமேற்படிப்பு படித்து, சமூகவியலில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். இளம் பருவத்திலேயே நிறம், தோற்றம், செல்வம், சமூக உயர்நிலை போன்றவற்றின் அடிப்படையில் பாரபட்சமாக மக்கள் நடத்தப்படுவதை அறிந்து நாகேஸ்வரி மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகி இருக்கிறார். அதன் நீட்சியாகவே அவரது உயர் கல்வியும் அவர் படைத்த நூல்களும் அமைந்துள்ளன.

அனைவரும் அறிந்த வட அமெரிக்காவின் உண்மை நிலையை (வட) அமெரிக்காவின் மறுபக்கம், (வட) அமெரிக்க அனுபவங்கள் : ஒரு சமூகவியல் பார்வை ஆகிய நூல்களில், முன் வைத்திருக்கிறார். கியூபா, வியட்நாம் ஆகிய நாடுகள் வட அமெரிக்க ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறப் போராடிய வரலாற்றை அவர் பதிவு செய்திருக்கிறார். 50 வயதுக்கு மேல் இந்த நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு, தங்கி இருந்து, ஆய்வு செய்தபிறகு, தனது 60-வது வயது முதல் அவர் எழுதத் தொடங்கி இருக்கிறார். மொத்தம் 9 நூல்களை அவர் எழுதி இருக்கிறார். ஆர்.கே.நாராயணனின் 'மால்குடி டேஸ்' நூலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். 'ஐந்து தலைமுறை நாடார் பெண்களின் கதை' (2016) என்கிற இவரது நூலும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இன வரைவியல் நூலாகும்.

"லத்தீன் அமெரிக்காவில் இருந்து எப்போது ஒரு பாதிரி வாட்டிகனில் தலைமைப் பதவிக்கு வருகிறாரோ, எப்போது வட அமெரிக்காவில் ஒரு கறுப்பினத்தவர் குடியரசுத் தலைவர் பதவிக்கு வருகிறாரோ, அப்போது வட அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையிலான பிரச்னைகள் இலகு ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது" என்று கியூபா தலைவர் மாவீரன் ஃபிடல் காஸ்ட்ரோ பல ஆண்டுகளுக்கு முன்பு கூறி இருந்தார். அது 2013இல் போப் பிரான்சிஸ் வாடிகன் தலைவராக பதவி ஏற்றபோது பலித்தது. ஆம்... 2016 மார்ச் மாதம் பராக் ஒபாமா கியூபாவுக்கு விஜயம் செய்து ராவுல் காஸ்ட்ரோ உடன் செய்துகொண்ட உடன்படிக்கையால், இரு நாடுகளுக்கும் இடையே நிலவிய பனிப்போர் சற்றே விலகியது.

கியூபாவின் விடுதலை நூலை வாசித்து நான் எழுதிய விமர்சனக் கட்டுரையை, நூலை எழுதிய திருமதி நாகேஸ்வரிக்கு அனுப்பும் வாய்ப்பு எதேச்சையாக எனக்கு வாய்த்தது. கல்பாக்கத்தில் இயங்கும் ரிவார்ட் ட்ரஸ்ட் செலவுகளுக்கு நீண்டகாலமாக நிதி அளித்துவரும் 'ஆஷா ஃபார் எஜூகேஷன்' என்ற வட அமெரிக்காவாழ் தமிழர்களின் அமைப்பைச் சேர்ந்த மெல்லியல் என்பவரை நான் கல்பாக்கத்தில் சந்தித்தேன். ஆண்டுக்கு ஒருமுறை கல்பாக்கம் வந்து ரிவார்ட் ட்ரஸ்ட் நடவடிக்கைகளைக் கவனித்து ஆஷா ஃபார் எஜூகேஷன் உறுப்பினர்கள் அமைப்புக்கு கருத்துப் பதிவு செய்து அனுப்புவது வழக்கம். 2024 ஆம் ஆண்டு இவ்வாறு வட அமெரிக்காவில் இருந்து வந்தவர்தான் மெல்லியல். அவரது இனிமையான பெயரைக் குறித்து அவரிடம் விசாரித்த போது தான், மொழியியல் அறிஞரான தந்தையும் எழுத்தாளரான தாயும் தனக்கு இருப்பதை அவர் கூறினார். எழுத்தாளர் என்றதும் ஆர்வத்தினால் நான் அவரிடம் உங்கள் தாயின் பெயர் என்ன என்று கேட்டேன். நாகேஸ்வரி அண்ணாமலை என்றார். முதல் நாள்தான் புத்தகக் கண்காட்சியில் நாகேஸ்வரி அண்ணாமலை என்பவர் எழுதிய 'கியூபாவின் விடுதலை - அன்று முதல் இன்று வரை' (அடையாளம் பதிப்பகம்) என்ற நூலை நான் வாங்கி இருந்தேன். என்னைத் தவிர கியூபா குறித்து வேறொரு பெண்மணி எழுதுகிறார் என்பதில் வியந்து நான் வாங்கிய நூல்தான் அது என்றேன். அப்படியானால் படித்துவிட்டு ஒரு விமர்சனம் எழுதுங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டார். மகள் மூலம்தான் நான் எழுதிய விமர்சனம் திருமதி நாகேஸ்வரி அண்ணாமலை அவர்களைச் சென்றடைந்தது. பொருத்தமான விரிவான விமர்சனம் என்று திருமதி நாகேஸ்வரி தெரிவித்தாராம். மெல்லியல் எனக்குச் செய்தி அனுப்பி இருந்தார். அடுத்த முறை வட அமெரிக்கப் பயணம் மேற்கொண்டால் திருமதி நாகேஸ்வரியை சந்திக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால், காலம் அவரை நம்மிடம் இருந்து பிரித்துச் சென்றுவிட்டது.

- அமரந்த்தா

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.