நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் ஆகிய இருவேறு வர்க்கங்களின் தீய பண்புகளை எதிர்த்துத் தமிழ் மக்கள் போராடிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் அவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு இலக்கியம் படைப்பவன் என்ற முறையிலும் புதிய சமுதாய அமைப்பைக் காணப்போராடும் சிந்தனையாளன் என்ற முறையிலும் இவ்வறிக்கையை நான் வெளியிடுகிறேன். பணமோ, பக்கபலமோ அற்ற நிலையில், சமூகத்தின் தாழ்ந்த படியிலே வளர்ந்து, தலைநிமிர்ந்த என்னை, நிலப்பிரபுத்துவப் பிற்போக்கும், முதலாளித்துவ 'முற்போக்கும்,' இருட்டடிப்புச் செய்துள்ளன! அதன் காரணமாகவே, மக்கள் மன்றத்தின் முன் மறைக்கப்பட்டிருந்த என்னை, நானே அறிமுகப்படுத்திக்கொள்ள முன்வந்தேன். (2025:6:407)

தான் யார்? தன் சமூக நிலைப்பாடு என்ன? என்பதை 1961 இல் தெளிவாகவே வெளியிட்டிருக்கிறார் தோழர் தமிழ்ஒளி (1925-1965); இப்பதிவில் இவர் முன்வைத்திருக்கும் சிக்கல்களைக் கவனிக்கும்போது இன்றும் இந்த ஒளியின் தேவையைச் சமூகம் வேண்டி நிற்பதே கசப்பான உண்மையாக இருக்கிறது. பாரதியை அடுத்து பாரதிதாசன் தொடங்கிவைத்த கவிதைப் பரம்பரையிலும் திராவிட இயக்க வரலாற்றிலும் பொதுவுடைமை இயக்கத்தின் பரவலாக்கத்திலும் மட்டுமல்ல, தர்க்கபூர்வமாகச் சிந்திக்கின்ற தமிழ் ஆய்வுலகிலும் தமிழ்ஒளிக்குக் கணிசமான இடமுண்டு. அறிவின் விகசிப்பு வியப்பை ஏற்படுத்துகிறது. ஆனால், அது முறையாகக் கவனப்படுத்தப் பட்டிருக்கிறதா என்பது கேள்வியே! நாற்பதாண்டுகள் மட்டுமே வாழ்ந்த இந்த ஆளுமையின் எழுத்துக்கள் பன்முகத் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. கவிஞர் என்பது இவர் விரும்பியேற்ற அடையாளம்; பாரதிக்கு அடுத்துச் சமூகத்தின் சலனங்களைக் கூர்மையாக அவதானித்துச் சிறுகதைகளாகவும் கட்டுரைகளாகவும் நாடகங்களாகவும் எழுதிய ஆளுமையாகத் தமிழ்ஒளி இருப்பது கவனத்திற்குரியது. இவருடைய எழுத்துக்கள் அனைத்தையும் ஆறுதொகுதிகளாகப் பேராசிரியர் வீ.அரசு தொகுத்துப் பதிப்பித்து இருக்கிறார். தொகுப்பின் அரசியலை அதன் தர்க்கத்தைத் தெளிவாக முன்வைக்கின்ற பேராசிரியரின் கையளிப்பில் ஏற்கெனவே வ.உ.சி. நூல் திரட்டு (2002), ப.ஜீவானந்தம் ஆக்கங்கள் (2007), சங்கரதாஸ் சுவாமிகள் நாடகத்திரட்டு (2009), மயிலை சீனி வேங்கடசாமி தொகுதிகள் (2013), அத்திப்பாக்கம் வேங்கடாசலனார் ஆக்கங்கள் (2013), சென்னை லௌகிக சங்கம், The Thinker (6 தொகுதிகள்) (2014) ஆகியவை வெளிவந்துள்ளன. அந்த வரிசையில் தமிழ்ஒளியின் ஆக்கங்களும் அதன் கனபரிமாணத்தோடு வெளிவந்துள்ளன.

வெறுமனே செய்திகளையும் படைப்புகளையும் அடுக்கித் தருவதல்ல தொகுப்புப் பணி; ஓர் ஆளுமையின் ஆக்கங்களைத் தொகுக்கும்போது அவர்குறித்த முழுப்புரிதலையும் இச்சமூகம் தெளிவாக உள்வாங்க வேண்டும்; அதற்கான நேர்த்தியை அத்தொகுப்பு தாங்கியிருக்க வேண்டும். இத்தன்மை எளிதில் வாய்ப்பது இல்லை. சமூக வரலாற்றை அறிந்து அதன் போக்கினை அசைவியக்கத்தை எதிர்காலத்தைப் புரிந்து கொள்ளும் பக்குவம் தேவைப்படும். பேராசிரியர் தொகுத்துப் பதித்துள்ள தமிழ்ஒளியின் ஆக்கங்களை வாசிக்கும்போது இத்தன்மையை உணர முடிகின்றது. கவிதைகள், காவியங்கள், சிறார் பாடல்கள் - கதைகள், சிறுகதைகள் - ஓரங்க நாடகங்கள், ஆய்வுகள் - கட்டுரைகள்- தன் வரலாறு என வகைமை அடிப்படையிலும் கால வரிசையிலும் தமிழ் ஒளியின் ஆக்கங்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. ஒவ்வொரு தொகுப்பின் தொடக்கத்திலும் ‘தோழர் தமிழ்ஒளி எனது பயணம்’, தோழர் தமிழ்ஒளி காலம்-கருத்து, தோழர் தமிழ் ஒளி ஆய்வுப் பயணம், கவிதைகள் உருவாக்கப் பின்புலம்... ஆகிய பதிவுகள் தரப்பட்டிருக்கின்றன. இவை ‘தமிழ்ஒளி’ என்ற ஆளுமை குறித்த அறிதலே இல்லாதவருக்கும் அவர்பற்றிய ஒரு சரியான அவதானிப்பை வழங்கக் கூடியவை. இப்பதிவுகளைத் தொடர்ந்து தமிழ்ஒளியின் எழுத்துக்களுக்குள் பயணித்தோமானால் அவற்றின் வீரியத்தை நம்மால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.

இந்த ஆறு தொகுதிகளினூடாகப் பெற்ற மன அவசங்களைக் கீழ்க்கண்ட வகையில் தொகுத்துக் கொள்வோம்.

-     தமிழ்ஒளி எழுதத் தொடங்கிய காலத்தில் தமிழ்நாடு - தமிழ் (1944-1947) உள்ளிட்ட உணர்வுகள் கொந்தளிப்பை அடைந்திருந்தன. பாரதிதாசனின் கவிதைகள், குறுங்காவியங்களின் மீதான இளைய சமூகத்தின் ஈர்ப்பு மிகுந்திருந்தது. தமிழ்ஒளியும் அதற்கு விதிவிலக்கில்லை. ஒடுக்கப்பட்ட பின்புலத்தில் இருந்து வந்த விஜயரங்கத்திற்குச் சமூக விடுதலை மீதான ஈடுபாடு; இயல்பாக திராவிட இயக்க செல்நெறியில் பாதை அமைத்துக் கொடுத்துள்ளது. 1944 முதல் திராவிட நாடு, குடியரசு, பிரசண்ட விகடன் தமழ் முரசு, கவிமலர், புதுவாழ்வு ஆகிய திராவிட இயக்கச் சார்பான இதழ்களில் இவருடைய கவிதைகள் வெளிவந்தன. தொடர்ச்சியாக மரபுப் பாவடிவங்களில் சமூகநீதிக் கருத்துகளைப் பெரும் வீச்சுடன் எழுதியுள்ளார்.

-     கரந்தைக் கல்லூரியிலிருந்து வெளிவந்த பிறகு சாதிய முரண்களோடு வர்க்க முரண்பாடும் முதலாளித்துவச் சுரண்டலும் மிகப்பெரிய வன்முறையை மக்களின் மீது நடத்தப்படுவதை விமர்சிக்கிறார். இதற்குப் பொதுவுடைமை இயக்கம் அவருக்கு விரிவான களத்தைத் தருகிறது. மேலும் திராவிட இயக்கத்தோடு நேர்ந்த சில கருத்து முரண்களும் அவரைப் பொதுவுடைமை இயக்கத்திற்குள் இணைத்துக் கொள்ள காரணமாகின. மேதினக் கவிதையொன்று எழுதித் தருமாறு பாரதிதாசனைக் கேட்டபோது குயில் நினைத்தபோதெல்லாம் கூவாது என்று அவர் கூறியதாகச் செவிவழிச் செய்தி ஒன்று உண்டு. அவர் தொடர்ச்சியில் வந்த தமிழ்ஒளி மேதினக் கவிதை எழுதுகிறார். எண்ணிக்கை அடிப்படையில் திராவிடக் கருத்தியலோடு பொதுவுடைமை சார்ந்த பதிவுகள் தமிழ் ஒளியின் எழுத்துக்களில் மிகுந்திருக்கின்றன. இந்தியாவில் இடதுசாரி இயக்கம் எவ்வாறு கால்கொண்டது என்ற வரலாற்றுப் பின்புலத்தையெல்லாம் கவிதையாக வடிவத்த ஒரே கவிஞர் தமிழ்ஒளிதான். இவருடைய பல கவிதைத் தொகுதிகள், குறுங்காவியங்களை வெளியிட்ட பெருமை இடதுசாரி இயக்கத்தையே சாரும்.

-     1955 - 1965 காலம் தமிழ் ஒளி மிகச் சுதந்திரமாக எழுதிய காலமாக வீ.அரசு அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். உண்மையில் திராவிடக் கருத்தியலோடு வளர்ந்து இடதுசாரி இயக்கத்தில் கிளைவிட்டதால் சமூகப் பிரச்சினைகள் குறித்த தீர்க்கமான தெளிவு தமிழ்ஒளிக்கு ஏற்பட்டிருக்கிறது. இத்தன்மை குறிப்பிடத்தக்கது. அந்தத் தெளிவு படைப்புகளிலும் வெளிப்படுகிறது. மனிதனின் பரிணாம வளர்ச்சிக் கொள்கை, சமசுகிருதம் - தமிழ் தொடர்பான கட்டுரை, சிலப்பதிகாரம், திருக்குறள் எனப் பலதளங்களில் தர்க்கபூர்வமான ஆய்வுகளைத் தமிழ்ஒளி செய்திருக்கிறார். இவை இத்துறை சார்ந்த முன்னோடி ஆய்வுகளாக இருக்கின்றன. மேலும் சமகால நிகழ்வுகள் குறித்தும் அவ்வப்போது பல்வேறு கட்டுரைகள் எழுதியுள்ளார்.

-     தமிழ்ஒளியின் ஆக்கங்களில் வெளிப்படும் மிக முக்கியமான கூறு அதன் மொழி; பாரதிதாசனின் தாக்கம் கவிதைகளில் இருந்தாலும் மாறுபட்ட சிந்தனை மரபு அக்கவிதைகளில் தனித்தன்மையைக் கொண்டு வந்து விடுகின்றன. அடுத்து, இதழ்வழி உருப்பெற்ற சிறுகதைப் படைப்புகள்; முற்போக்கு மரபு சார்ந்த கருத்துகளைக் கொண்டிருந்தன. இதில் யாருடைய தாக்கமும் இன்றி இயல்பாகத் தமிழ்ஒளிக்கே உரித்தான மொழியை அடையாளங் காணமுடிகின்றது. பிற்காலத்தில் சிறுகதைகளுக்காகக் கொண்டாடப்பட்ட பல ஆளுமைகளும் குறிப்பிட்ட காலகட்டத்தில் இடதுசாரிக் கருத்துநிலைகளைக் கொண்டவர்களாகவே இருந்திருக்கின்றனர். அவர்களுள் தமிழ் ஒளியும் இருக்கிறார். அவருடைய சிறுகதை மொழி தனித்த ஆய்விற்கு உரியது. கவிதை, குறுங்காவியம், ஓரங்க நாடகம், ஆய்வு, தன் வரலாறு, சிறுகதை என வகைமை எதுவாக இருந்தாலும் அதில் தமிழ்ஒளியின் முத்திரை தனித்துத் தெரிவதை மொழியினூடாக உணர முடிகின்றது.

இந்த ஆறுதொகுதிகளும் இதுபோன்ற மேலும் பல திறப்புகளைத் தருகின்றன. இன்றளவும் பேசத் தயங்கும் பல சமூகப் பிரச்சினைகளை எளிதாகப் பகடி மொழியில் எழுதிச் சென்றிருக்கிறார் தமிழ் ஒளி. அவருடைய பிக்ஷுவுக்குக் கல்யாணம் என்ற கவிதை, மேல்நாடு சென்றிருந்த பிக்ஷுவுக்குக் கல்யாணம் / தோல் உணர்ச்சி பிக்ஷுதனைத் தூண்டி விடுகிறது. என்று தொடங்குகிறது. அக்கவிதையில்,

காவியுடை போர்த்திருந்தும் காமவுடல் சாகவில்லை / மேவும் ஜெயம் எங்கே / ஆசைவென்ற நோன் பெங்கே /... போலந்து தேசத்தில் மக்கள் புதுவாழ்வைக் / காலால் மிதித்துவிக் காதகர்கள் கூடிநின்றார் / கூடிநின்ற காதமின் கூட்டத்தில் ஓர் பெண்ணின் / ஜோடி கிடைத்ததினால் சொக்கிவிட்டார் பிக்ஷு மகான் / இந்து தருமமெல்லாம் எங்கேயோ விற்றுவிட்டார்/ அந்த இன்பம் யார் தருவார்?/ ஆதிசிவன் கொடுப்பானோ/... சோவியத்தைத் திட்டுவதே தன்தொழிலாய்க் கொண்டிருந்த/ காவி உடைக் காரனுக்குக் கல்யாணம் இப்பொழுது/ ‘மூத்துநரைத்து விட்டான்; மூப்பு வந்து நிற்குங்கால் / கூத்தோ இதுவென்று கூட்டம் சிரிக்கிறது... (2025:1:161)

இன்றைய சூழலில் கவிந்துகிடக்கும் காவி அதிகாரத்திற்கு எதிரான குரலாகவும் தமிழ்ஒளியின் இக்கவிதையை நாம் கொள்ளமுடியும். இப்படிப் பாடிய பிறிதொரு கவிஞனை அவர் சமகாலத்திலும் காண முடியவில்லை. அவன் அமரன் என்ற சிறுகதையின் பகுதியொன்று வருமாறு,

பழைய சம்பிரதாயங்கள், பண்புகள் என்ற மூடு திரையினுள் மக்களின் கழுத்தை நெரித்துக் கொல்லும் ஏகாதிபத்தியவாதிகள் அமரனைக் கண்டு சீற்றங் கொண்டனர். பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்றதற்காக அவனைக் குற்றவாளியென்று தீர்ப்பளித்தனர். அமரன் தலைமையில் தேசத்தொண்டு புரிந்து வந்த புரட்சி இயக்கம் சட்ட விரோதம் ஆக்கப்பட்டது. அமரனை சிறைப்படுத்த வேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது’ (2025:5:95).

இறுதியில் அரச வன்முறையால் இறந்தாலும் அமரன் அமரனாகவே இருக்கிறான். மக்கள்மனதில் என்று முடிகிறது இக்கதை. ஆண்டாண்டு காலமாகச் சமூகத்தின் நலம் விரும்பும் அமரன்கள் தேசத் துரோகிகளாகவே சித்திரிக்கப்படுகின்றனர். படுகொலை செய்யப்படுகின்றனர். அதையேதான் இச்சிறுகதையும் காட்சிப்படுத்துகின்றது. இறுதியாக இன்றளவும் பொருந்தும் மனிதாபிமானம் குறித்த தமிழ்ஒளியின் கருத்தோடு இப்பதிவை நிறைவு செய்யலாம்.

மனிதாபிமானம் மரக்கறி வாதமல்ல; மலட்டுத்தனமான அஹிம்சா வாதமல்ல; அது சுரண்டலைப் பற்றி ஒப்பாரி வைப்பதில்லை. சுரண்டலை ஒழிக்கும் போராட்டத்தின் பேராயுதமாக விளங்குகிறது. அது யுத்தத்தைப் பற்றித் தார்மீகக் கண்டனம் செய்வதில்லை; யுத்த வெறியர்களை அழிப்பதற்கான போராட்ட ஆயுதமாக விளங்குகிறது. மனிதனை மனிதன் சுரண்டும் முறையையும் யுத்தத்தையும் ஒழிக்கும் போராட்டத்தில் வெற்றியடைவதே மனிதாபிமானத்தின் வெற்றியாகும். (2025:6:453)

தோழர் தமிழ்ஒளி ஆக்கங்கள்

விலை: ரூ.2200 | வெளியீடு: என்சிபிஎச், சென்னை

- முனைவர் அ.மோகனா, உதவிப் பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.