தமிழ் இந்து பத்திரிகையில் (17- 2 - 2017) "சென்னை பல்கலைக்கழகம் முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவர் திலீபன் என்பவர் (வயது 22) அவதானம் செய்கிறார். ஒரே சமயத்தில் பதினாறு விஷயங்களைக் கவனப்படுத்துகிறார்; திருக்குறளை மனப்பாடமாக ஒப்பிக்கிறார். இவரது குரு ராம கனக சுப்புரத்தினம் இவருக்கு நல்ல பயிற்சியளித்திருக்கிறார். திலீபன் 140க்கும் மேற்பட்ட இடங்களில் தன் திறமையை நிரூபித்துள்ளார்" என்னும் செய்தி வந்தது. ஆனால் அப்போது அது பரவலாக பேசப்படவில்லை. திலீபன் தன் திறமையைத் தொடர்ந்து செய்தாரா என்பதும் தெரியவில்லை.

அவதானம்

அவதானம் என்ற சொல்லுக்குக் கவனம், மறதியின்மை, மேன்மையான செயல் என்றெல்லாம் பொருள் கொள்ளுகின்றனர். தமிழ் கலைக்களஞ்சியம் மிக வேகமாக வேறு வேறு பொறிகள் வழி அறிவைப் பெறுதல்; இது பயிற்சியால் வருவது என்று கூறும் அவதானம் என்ற சமஸ்கிருத சொல்லுக்குக் கவனம் (attention) எனப் பொருள் கூறினாலும் இது முழுமையான விளக்கம் என்று கூற முடியாது. அவதானம் என்னும் கலை தொடர்பான செயல்பாடுகள் பயிற்சி மூலம் தான் பெற முடியும் என்று முந்திய அவதானிகள் கூறியிருக்கின்றனர்.

அவதானிகள்

ஒரே சமயத்தில் ஆறு முதல் நூறு விஷயங்களைச் செய்து காட்டியவர்கள் அவதானிகள் எனப்பட்டனர். அவதானம் தொடர்பான சொற்கள் எல்லாம் சமஸ்கிருத மொழி தொடர்பாக உள்ளன. மரபுடன் அவதானப் பயிற்சியை தொடர்பு படுத்தும் வழக்கமும் உள்ளது.

சித்தர்கள், மனம் பற்றி கூறிய கருத்திலிருந்து அவதானங்கள் ஆரம்பித்திருக்கலாம் என்று சொல்லுகின்றனர். கட்டுப்படுத்துவது என்ற சக்தி அவதானத்திற்கு அவசியமாக இருந்தது. இவர்கள் இதை வேறு வகையில் கொண்டிருக்கலாம். இந்த நினைவுக் கலையில் கவிதை பாடுவது, தமிழ் இலக்கிய, இலக்கண அறிவு பெற்றிருப்பது முக்கியமாகக் கருதப்பட்டது.

ஒரே சமயத்தில் பல செயல்கள்

ஒரே சமயத்தில் பல செயல்களைச் செய்வது அவதானம். இந்தக் கலையை அல்லது திறமையைப் பயிற்சி மூலம் பெற்ற எல்லோரும் தமிழ் இலக்கிய இலக்கணங்களை முழுமையாக கற்றவர்கள், கடவுள் நம்பிக்கை உடையவர்கள், செய்யுளை இயற்றுவதில் வல்லவர்கள், ஆசுகவிகள் எந்தத் தலைப்பிலும் பாடும் திறமை உடையவர்கள்.

ஒரு பாடலின் முதல் எழுத்து அல்லது சொல்லையும் பாடலின் இறுதி எழுத்து அல்லது சொல்லையும் சொன்னால் முழு பாடலையும் உடனே பாடுவார்கள், பாடலின் மையம் அல்லது பொருளைக் கேட்ட அவர்களின் விருப்பப்படி அமைத்து இப்படி பாடல் புனையும்போது வேறு காரியங்களைச் செய்து கொண்டே இருப்பார்கள். அவற்றை முடித்த பின்பு பாடலைச் சொல்லுவார்கள். பாடலின் மையம் தொடக்கம் இறுதி எல்லாம் நினைவில் இருக்க வேண்டும்.

அவதானம் என்பது உணர்வுகளையும் நினைவுகளையும் ஒரே சமயத்தில் ஒழுங்குபடுத்தி வைத்திருப்பது. என்னென்ன விஷயங்களை இவர்கள் செய்தார்கள் என்பதில் ஒரு ஒழுங்கு முறை இருக்க வேண்டும்.

ஒவ்வொரு அவதானிகளும் வேறு வேறுபட்ட செயல்களைச் செய்தார்கள். அது பயிற்சியைப் பொறுத்தது. சரவணப் பெருமாள் கவிராயர் என்ற புலவர் எட்டு அவதாரங்களை ஒரு பாடலில் வகைப்படுத்துகிறார் பாடல் வருமாறு;

மாறாமல் வாய் வேலும் மயிலும் எனச் சொல்ல வாசகம் கைகள் எழுத

வரு கணக்கு ஒருபுறம் தீர மற்றொருபுறம் வரைந்திடும் இலக்கம் மாற

வளை திரைக்குச் சிறிது கல்லணி வகுக்கின்ற வன் கணக்கு இனிது பகர

மருவு சொக்கட்டானும் விளையாட மறைவாக வைத்த சதுரங்கத்தை

கூறாக ஏட்டு எழுத்தாணி எழுதும் படிக்கு கவிதை பகர அதிலோர்

கூற எழுத்தாணி சதுரங்கமும் முதுகும் புறம் குதிரை யடி வெண்பாவாக

கூறு புலவோர் சபையில் அட்டாவதானம் உலகோர் புகழ் நடத்த காலம்

அவதானக் கலை பற்றிய செய்திகள் கி.பி.17 ஆம் நூற்றாண்டுக்கு முன் கிடைக்கவில்லை என்று கூறுகிறார் அவதானம் பற்றி விரிவாக ஆராய்ந்த நாகராஜன். தமிழ் இலக்கிய வரலாறு நூலை ஆங்கிலத்தில் எழுதிய எம் எஸ் பூர்ணலிங்கம் பிள்ளை விறலி விடு தூது ஆசிரியர் சுப்புர தீப கவிராயரை அஷ்டாவதானி என்கிறார். இந்தக் கவிராயரை 17 ஆம் நூற்றாண்டினர் என்கின்றனர். இதனால் 17 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு அவதானக் கலை உருவாகவில்லை என்று கூறுகின்றனர்.

அவதான வகை

அவதானங்கள் ஆறு முதல் நூறுவரை என்று சொல்வது ஒரு மரபு. இவற்றைச் செய்தவர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. ஒரே சமயத்தில் ஆறு முதல் நூறு வரை அவதாரங்களைச் செய்தவர்களைப் பற்றிய செய்திகளில் இருந்து அவதான வகைகளைக் கணக்கிடுகின்றனர்.

இந்த அவதானங்கள் 6, 8, 10, 16, 32, 100 என இரட்டை படையில் உள்ளன. ஆரம்ப காலத்தில் 6, 8, 10 என்னும் எண்ணிக்கையில் உள்ள அவதானங்கள் மட்டும் செய்யப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டின் பாதியில் இந்த எண்ணிக்கை அதிகமானது. அவதானம் என்பது பரம்பரையாக வருவதல்ல பயிற்சியால் வருவது குரு வழியும் வருவது என்றாலும் தந்தை மகன் என்ற மரபில் வந்த அவதானிகளும் உள்ளனர்.

ஆறு அவதானம்

இது சஷ்டவதானம் எனப்பட்டது. ஒரே சமயத்தில் ஆறு செயல்களைச் செய்வது. இந்த அவதானம் செய்தவர்களின் இரண்டு பெயர்கள் கிடைத்துள்ளன சென்னை தே. , கங்காதர பால தேசிகர் (20 ஆம் நூற்) இவர் பஜனை மடத்தில் திண்ணைப் பள்ளிக்கூடம் நடத்தியவர். இன்னொருவர் சென்னை வைரக்கண் வேலாயுதப் புலவர் (19 ஆம் நூற்). காசிமேடு திண்ணைப் பள்ளி ஆசிரியர், சிற்றிலக்கியங்கள் படைத்தவர்.

எட்டு அவதானம்

இது அஷ்டாவதானம் எனப்பட்டது. ஒரே சமயத்தில் எட்டு செயல்களை செய்தவர்களாக 55 பெயர்கள் கிடைத்துள்ளன. சுப்ர தீப கவிராயர் (17 ஆம் நூற்) தமிழகத்தின் முதல் அவதானியாகக் கருதப்படுகிறார். இவர் எழுதிய விறலி விடு தூது முக்கியமான நூல். இவர் சதுரங்கம் ஆடிக்கொண்டே அவதானம் செய்தார் என்ற கதை உண்டு.

இன்னொருவர் பனைக்குளம் அப்துல் காதர் (18 ஆம் நூற்) இவர் சீறாப்புராணம் ஆசிரியர் உமறுப் புலவரின் மகன் என்கின்றனர் (பேரன் என்ற கருத்தும் உண்டு) இவர் எழுதியது மதீனத்து அந்தாதி. இவர் முருகக் கடவுள் பற்றி சில தனிப்பாடல்களையும் எழுதியுள்ளார்.

 பூவை கல்யாண சுந்தர முதலியார் (1854 - 1918) கவிஞர், புராணங்களை உரைநடையில் எழுதியவர் இவர் 96 நூல்கள் எழுதியுள்ளார். சென்னை சபாபதி முதலியார் (19 நூற்)சென்னை வீராசாமி செட்டியார் (19 நூற்) வினோதரச மஞ்சுரி நூலின் ஆசிரியர் சென்னை ராஜதானி கல்லூரியில் பேராசிரியர்.

யாழ்ப்பாணம் ந.கதிரைவேல் பிள்ளை (19 நூற்) சமஸ்கிருதம் அறிந்தவர் பழனி தல புராணம் பதிப்பாசிரியர்.

பத்து அவதானங்கள்

தசாவதானம் ஒரே சமயத்தில் 10 செயல்களில் ஈடுபடுவது. இதைச் செய்தவர்களின் ஆறு பெயர்கள் கிடைத்துள்ளன. நாஞ்சில் நாட்டு பெ ஆறுமுகம் (1892 - 1958) தசாவதானிகளில் முக்கியமானவர். ஆசுகவி திருவாவடுதுறை ஆதின வித்துவான் தமிழகத்திலும் கேரளத்திலும் நூற்றுக்கு மேல் அவதான நிகழ்ச்சி நடத்தியவர். சென்னையில் முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தலைமையில் நிகழ்ச்சி நடத்தி பெரும் பாராட்டைப் பெற்றவர்.

பதினாறு அவதானங்கள்

சோடாவதானம் ஒரே சமயத்தில் 16 செயல்களைச் செய்வது. இந்த அவதானங்களைச் செய்தவர்களாக சுப்பராய செட்டியார் உட்பட நாலு பேர்களின் பெயர்கள் கிடைத்துள்ளன (18, 19 நூற்).

முப்பத்திரெண்டு அவதாரம்

துவாதிரீம் தசாவதானம் இதைச் செய்தவர்களின் பெயர்கள் கிடைக்கவில்லை

நூறு அவதானம்

சதாவதானம் ஒரே நேரத்தில் நூறு செயல்களைச் செய்து காட்டுவது. செய்குத் தம்பி பாவலர், தஞ்சை சுப்பிரமணிய ஐயர், கதிர்வேல் பிள்ளை என பத்து சதாவதானிகளின் பெயர்கள் கிடைத்துள்ளன. செய்குத் தம்பி பாவலர் (1867 - 1950) நாகர்கோவில் கோட்டாறு பகுதியைச் சார்ந்தவர் சிற்றிலக்கியங்கள் பல இயற்றியவர். சீறாப்புராணம் உரை எழுதியவர்.

அவதானிகளைப் பற்றி விரிவாக ஆராய்ந்த நாகராஜன் சிவகங்கை சுப்பிரமணியர் என்பவர் இரு நூறு அவதானம் ( துவி சதாவதானம்) செய்தார் என்கிறார்.

பொதுவான அவதானங்கள் மட்டுமல்ல திருக்குறளை மையமாக வைத்து அவதாரம் செய்தவர்கள் நிறைய இருந்தார்கள். இவர்களின் நிகழ்ச்சியில் திருக்குறள் மட்டுமே மையம்.

வேறுபட்ட செயல்கள்

ஆறு முதல் இருநூறு வரை அவதானங்கள் செய்தவர்கள் பற்றிய விபரங்கள் ஓரளவு கிடைத்தாலும் அவதானத்தின் போது செய்த வேறுபட்ட செயல்பாடுகள் எவை என்பதில் ஒரே மாதிரி கருத்து இல்லை. சரவணப் பெருமாள் கவிராயர் ஒரு பாடலில் இப்பட்டியலை சொன்னாலும் தனித்த பயிற்சியின் காரணமாக சில புதிய அவதானங்களை சிலர் செய்திருக்கின்றன.

ஒருமுறை ஒரு அவதான நிகழ்ச்சியில் அவதானம் செய்தவரிடம் ஒரு பலாப்பழத்தைக் கொடுத்து இதில் எத்தனை சுளைகள் உள்ளன என்று கேட்டாராம் ஒருவர் அதற்கு அவதானி

மாணிக்கம் பிள்ளை மகனாம் பெருமாள் தம்

காணிக்கையாகின் கனித்த --- பாணி கைத்

தின்ன தெவிட்டாத தேனார் பலாப்பழத்தில்

தொண்ணூற்றி ஆறு சுளை

என்று பதில் கொடுத்தாராம்

யாழ்ப்பாணத்தில் சின்ன இப்ராஹிம் மோனி யாதீன் என்ற அஷ்டாவதானி அவதானம் செய்து கொண்டிருந்த போது ஒருவர் அவதானியின் பதிலைத் தவறு என்று கூறினார். உடனே அவதானி, ஆசு கவி பாடி அவரை அமர்த்தினாராம். இப்படியாக அவதானம் பற்றிய செய்திகள் இருந்தாலும் அவதான நிகழ்ச்சிகளின் போது செய்யப்பட்ட வேறுபட்ட செயல்கள் எவை என்பது பற்றிய குறிப்புகள் சில கிடைத்துள்ளன.

நாஞ்சில் நாட்டுப் புலவர் குமரேச பிள்ளை என்பவர் (1922 - 2002) செய்குத்தம்பி பாவலரிடம் கடைசியாகப் படித்தவர். பாவலரின் அவதானத்தை நன்றாக அறிந்தவர். குமரேச பிள்ளை அவதானம் பற்றி எழுதிய சிறிய பிரசுரத்தில் (1955) எல்லா வகை அவதானங்களும் இலக்கியம், இலக்கணம், கவிதை, கணிதம், மன ஒருமைப்பாட்டு திறனாய்வு அடிப்படையில் அமைந்திருக்கும் என்று கூறுகிறார்.

இலக்கியப் பகுதியில் ஒரு நூலில் இருந்து கேள்வி கேட்பது வழக்கம். இலக்கணச் சூத்திரத்தைச் சொல்லி விளக்கம் கேட்பதுமுண்டு. குறிப்பிட்ட தலைப்பில் செய்யுள் இருக்கும்படி சொல்வதுண்டு அவதானியிடம் சோதிடம் பற்றியும் கேட்கலாம்.

மன ஒருமைப்பாட்டு திறன் முக்கியமான பகுதி. அவதானியின் மன ஓட்டத்தை வேறு வேறு திசையில் திருப்பி கேள்வி கேட்பது உண்டு. தொடக்கத்திலிருந்து இறுதிவரை கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் கூறும் நேரம் தவிர மற்ற நேரங்களில் இறை நாமத்தை உச்சரித்துக் கொண்டிருப்பது ஒரு பொதுவான வழக்கம். பொதுவாக அவதானிகள் முருகன் நாமத்தை உச்சரிப்பார்கள் என்கின்றனர்.

அவதானம் ஆரம்பித்தது முதல் கடைசி வரை லாட சங்கிலியைப் பூட்டுவது கழற்றுவது என்னும் செயல் நடக்கும். சிலர் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருப்பர். இது ஆரம்பம் முதல் இறுதிவரை நடக்கும். சிலர் அவதான காலத்தில் தலைமை தாங்கியவருடன் குறிப்பிட்ட பொருள் பற்றி உரையாடிக் கொண்டிருப்பர். தசாவதானி ஆறுமுகம் சென்னையில் நடத்திய அவதானத்தில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரிடம் மகாத்மா காந்தி பற்றி பேசிக்கொண்டே இருந்தாராம்.

இப்படியாக அவதானம் நடக்கும்போது ஒருவர் ஒரு பாடலின் இறுதி அடியைக் கொடுத்து பாடச் சொல்லுவார். வெண்பா அல்லது விருத்தப் பாடலை இரண்டு முறை சொல்லிவிட்டு திரும்பிக் கேட்பார் அவதானி சாவகாசமாய் வேறு ஒரு கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டு முதலில் கேட்ட கேள்விக்குப் பதிலை இடையிலோ கடைசியிலோ சொல்லுவார்.

அவதானம் செய்பவர்கள் மேடையில் நிற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கேட்பவரின் அருகே செல்லவும் நின்று பேசவும் செய்யலாம். அப்போது பார்வையாளர்கள் ஒருவர் கூட குறிப்பிட்ட தலைப்பில் அல்லது ஒரு பொருளைக் கூறி வெண்பா பாடக் கேட்கலாம். குறிப்பிட்ட ஆண்டு மாதம் தேதி என்பதை ஒருவர் கூற அந்த நாளுக்குரிய கிழமையைக் கேட்கலாம்.

ஒருவர் அவதானியின் முதுகில் சிறிய கல்லை அல்லது நெல்லை எறிந்து கொண்டே இருப்பார். கல் எறிந்து முடிந்ததும் எத்தனை கல் என்பதை அவதானி சொல்ல வேண்டும். இதை நிகழ்ச்சி முடிவிலும் சொல்லலாம். இன்னொருவர் மணியை அடித்துக் கொண்டிருப்பார் அல்லது பாத்திரத்தைத் தட்டி ஓசை எழுப்புவார். கடைசியில் எத்தனை மணி அடித்தது என்றோ எத்தனை முறை பாத்திரத்தைத் தட்டினார் என்றோ கூற வேண்டும். பெரிய எண்களின் ஒரு பெருக்குத் தொகையைக் கேட்பதும் உண்டு.

ஒரு எண்ணை நினைக்குமாறு கூறி பின் அதனுடன் சில எண்களைக் கூட்டியும் கழித்தும் வரச் செய்து அவர் நினைத்த எண்ணைக் கூறுவது ஒரு முறை. அவதானி நாயும் புலியும் விளையாட்டில் தனக்காக விளையாட ஒருவரை அமர்த்தி காயை நகர்த்துமாறு செய்வார். வேறு செயல்கள் நடக்கும் போது நாயும் புலியும் விளையாட்டில் காயை நகர்த்த ஆலோசனை கூறிக்கொண்டிருப்பார். இறுதியில் அவதானி வெற்றி பெறுவார்.

இப்படியாக உள்ள இந்த அவதானக்கலை இப்போது வழக்கில் இருப்பதாகத் தெரியவில்லை. பயிற்சி அளிப்பவர்களும் இல்லை.

- அ.கா.பெருமாள், ஓய்வுபெற்ற பேராசிரியர். நாட்டார் வழக்காற்றியல் மற்றும் சமூகப் பண்பாட்டு ஆய்வாளர்.

Pin It