நவீன தமிழ் இலக்கியச் சூழலில் சிறுகதை மற்றும் நாவல் இலக்கியங்கள் முக்கியமானதொரு இடத்தைப் பெற்றுள்ளன. சிறுகதை, குறுங்கதை, நெடுங்கதை, ஒரு பக்கக் கதை, மைக்ரோ கதைகள், நாவல், குறுநாவல், பெருநாவல், வரலாற்று நாவல், துப்பறியும் நாவல் என்ற வரிசையில் திரை நாவல் என்ற புதியதொரு வகைமையையும் சுப்ரபாரதிமணியனின் 'பள்ளிக்கூடம் போகலாமா?' சேர்த்து விடுகிறது. இது ஆசிரியரின் இரண்டாவது திரை நாவல். திரைக்கதை வடிவில் நிகழ்காலத்தில் எழுதப்பட்டுள்ள நாவல் என்பதால் ஆசிரியர் இதனைத் திரை நாவல் என்று வரையறை செய்கிறார். 'முகப்பறவையே எங்கே சென்றாய்' இவருடைய முதல் திரை நாவலாகும்.

தமிழக அரசின் சிறந்த நாவலாசிரியர் விருது, தமிழ்ச்செம்மல் விருது, மொழிபெயர்ப்பாளர் விருது போன்ற பல சிறப்புமிக்க விருதுகளைப் பெற்றுள்ள சுப்ரபாரதிமணியன் சிறந்த சிறுகதையாளருக்கான இந்திய ஜனாதிபதி வழங்கிய கதா விருதினையும் பெற்றவர்.pallikoodam pogalama subrabharathimanianபள்ளிக்கூடம் போகலாமா? என்ற தலைப்பே நாவலின் மையப் பொருளை விளக்கி விடுகிறது. வடமாநிலத்திலிருந்து வயிற்றுப் பிழைப்புக்காக திருப்பூர் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு வருபவர்களின் குழந்தைகளுக்கு அரசு ஆரம்பப் பள்ளிகளில் இடம் கிடைக்காத போது தனிப்பட்ட ஒருவரின் முயற்சியால் அந்தக் குழந்தைகளுக்கென ஒரு பள்ளிக்கூடம் உருவாக்கப்படுவதை திரைப்பட காமிரா பாணியில் இந்நாவல் விவரிக்கிறது.

தமிழ்ப் பள்ளியின் ஆசிரியர்கள் வடமாநிலத்திலிருந்து வருபவர்களுக்கு தமிழ் தெரியாத காரணத்தினால் அவர்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்த்துக் கொள்ள மறுத்து விடுகின்றனர். இந்த விஷயம் கூர்கா பூஷித் மூலம் அந்தப் பகுதியில் சமூக சேவை செய்து வரும் ரவிசங்கர் என்பவருக்குத் தெரிய வருகிறது.

பின்பு அப்படி தமிழ்ப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட வடமாநிலக் குழந்தைகள் முப்பது பேருக்கு ரவிசங்கர் தன் இல்லத்திலேயே பாடம் நடத்துகிறார். பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் போதுதான் இந்தி தெரிந்த ஒரு ஆசிரியரும் உடன் இருந்தால் பிள்ளைகளுக்கு தமிழ் கற்பிப்பது எளிதாகிவிடும் என்பதை அவர் உணர்கிறார்.

அந்த சமயம் வடமாநிலத்தில் இருந்து வேலைக்காக வந்திருந்த வர்ஷாவும் ரவிசங்கரின் வேண்டுகோளுக்கு இணங்க பிள்ளைகளுக்கு இந்தி கற்றுக் கொடுக்கிறார். காலப்போக்கில் இவர்கள் நடத்தும் பள்ளிக்கூடம் தமிழக அளவில் பெயர் பெற்ற பள்ளியாக உருவெடுக்கிறது. பிள்ளைகளுக்கு பாடம் புகட்டுவதற்காக ஒன்று சேர்ந்த ரவிசங்கரும் வர்ஷாவும் வாழ்க்கைப் பயணத்திலும் இணைவது, சிறந்த சமூக சேவகர் மற்றும் மிகச் சிறந்த ஆசிரியைக்கான விருதுகளை ரவிசங்கரும் வர்ஷாவும் பெறுவதுமாக நாவல் நிறைவு பெறுகிறது.

வடமாநிலத்திலிருந்து வந்திருந்தாலும் அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க தானாக முன் வரும் மனிதநேயம் மிக்க ஆசிரியராக ரவிசங்கர் கதாபாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது.

அபிஜித், ராத்யா, பூஷித், இப்ஷிதா, வர்ஷா, உமிகா, ஆயரா போன்ற வடநாட்டுப் பெயர்களை ஆசிரியர் கதாபாத்திரங்களுக்கு சூட்டியிருப்பதன் வழியாக அவர்கள் வடமாநில மக்களாகவே நாவலில் உலா வருகின்றனர்.

வாழ்வதற்காக பிழைப்புத் தேடி வந்திருக்கும் அவர்களின் பிள்ளைகளை ஆங்கிலம் மற்றும் இந்தி கற்றுத் தரும் பள்ளிகளில் சேர்க்கச் சொல்லும் இடங்களில் பணம் இல்லாத அவர்களின் பரிதவிப்புகள் எதார்த்தமாக வெளிப்பட்டுள்ளன. தங்கள் கஷ்டங்களை அறிந்து உதவ வந்த ஆசிரியரிடம் பிள்ளைகளை அனுப்பி வைக்கும் அவர்களின் நம்பிக்கையையும் நாவல் வெளிப்படுத்தியுள்ளது.

பனியன் கம்பெனியில் எழுபத்தைந்து சதவீதம் வடமாநிலத் தொழிலாளர்கள் இருப்பது, பிள்ளைகளை பார்த்துக் கொள்வதற்காக பெண்கள் வேலைக்கு செல்லாத சமயங்களில் குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது, பிள்ளைகளுக்கு பாடம் சொல்லித் தருபவராக மட்டுமில்லாமல் பிள்ளைகளுக்கு பிஸ்கட் தருவது, குட்டிக் கதைகள் சொல்வது, தூங்க வைப்பது என அர்ப்பணிப்புடன் செயல்படும் ஆசிரியராக ரவிசங்கர் இருப்பது, வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஒரே கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்த பிறகு தோழிகளாகும் வர்ஷா, உமிகாவின் நட்புறவு போன்றவற்றையும் இந்நாவல் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.

'பள்ளிக்கூடம் போகலாமா?' நிகழ்வுகளை நிகழ்காலத்தில் கடத்திச் செல்லும் திரை நாவல் மட்டுமல்ல, அரை மணி முதல் ஒரு மணி நேரத்திற்குள் படித்து முடிக்கக்கூடிய குறுநாவல் என்றும் சொல்லலாம்.

பள்ளிக்கூடம் போகலாமா? (திரை நாவல்)
சுப்ரபாரதிமணியன் | வெளியீடு: என்.சி.பி.எச், சென்னை. விலை - ரூபாய் 70

- வெ. சந்தியா, முனைவர் பட்ட ஆய்வாளர், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், சேர்க்காடு, வேலூர்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.