‘வீழ்ச்சி என்பது எழுச்சிக்கான பதுங்குநிலை’ என்பதை நம்பிக்கையுடனான வேதனை உணர்வில் ஆசிரியர் இயக்க எழுச்சி வரலாற்றை வெகு இயல்பான நடையில், ஒரு அருமையான புதினமாக படைத்தளித்துள்ளார் பன்முக எழுத்தாளரான ஆசிரியர் சுகுமாரன்.

sugamaran novelஆசிரியர் இயக்கச் செயல்பாடுகளை, அதன் வளர்ச்சிப் போக்கினை, அதன்வழி ஆசிரியர் சமூகத்திற்குப் பெற்றுத் தரப்பட்டுள்ள பொருளாதாரப் பலன்களை எல்லாம் கதைப்போக்கில் சொல்லிச் செல்கிறார். அந்த பலன்களை பெறுவதற்காக ஆசிரியர் சமூகம் இழந்திட்டவைகளை, பலியிட்டுள்ள உயிர்களை, உடைமைகளை, உறவுகளைப் பற்றியும் எடுத்துரைக்கின்றார்.

இயக்க மேன்மைக்காக மேற்கொண்ட கூட்டு இயக்கச் செயல்பாடுகளை, அவற்றின் தாக்கங்களை, இயக்கவியல் சார்ந்த அதன் வீழ்ச்சியினை, அதன் பின்னணியில் இருந்த எழுச்சி உணர்வின் நம்பிக் கையை வெறும் இயக்க வரலாற்றுப் பதிவாக அல்லாமல், புதின இலக்கிய வடிவத்தின் வழியாக மிக மிக எளிமையான வார்த்தைப் பிரயோகங் களால் வெளிப்படுத்தியிருக்கும் நேர்த்தியை இப் புதினத்தைப் படித்திடும் அனைவரும் பாராட்டத் தவறமாட்டார்கள்.

தனது முப்பதாண்டுகால ஆசிரியப் பணியின் ஊடாக, தன்னை ஒரு சமூக மனிதனாகவும் வெளிப் படுத்திக் கொண்டிருக்கிறார். லட்சக்கணக்கான ஆசிரியப் பணியாளர்களின் முன்னத்தி ஏர் ஆகி, தன்னலமற்றவராக தன்னை முன்னிறுத்திக் கொண்டு உள்ளார்.

குடும்ப உறவுகளை, நட்பு வட்டத்தை, சக ஆசிரியத் தோழமையை சீரான பழக்கவழக்கங் களால் தக்கவைத்துக் கொண்டும், அதே சமயத்தில் ஆசிரியர் இயக்கப் போராட்டங்கள் அனைத்திலும் பங்கேற்று, இயக்க வளர்ச்சிக்கான உந்து சக்தி யாகவும் திகழ்ந்திருக்கிறார்.

ஆசிரியர் இயக்க மேம்பாட்டுக்காக உடன் நின்று, அவ்வப்போதைய சூழல் தாக்கத்தின் சிறுமை களால் வேதனைப்பட்டு, மனம் தளர்ந்த தனது நிலைப்பாட்டை தங்கதுரை என்ற கதாபாத்திரம் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

ஆசிரியர் பணி சூழ்ந்த கல்வி உலகத்தை, தனியார்மய நிர்வாகத்தை, அரசு அதிகார அராஜகங்களை அவைகளின் தாக்கத்தால் ஏற்பட்ட உயர்வு தாழ்வுகளை, பெருமை சிறுமைகளை வெகு சிறப்பான முறையில் புதினமாக முன்வைத்திருக் கிறார்.

இயக்கச் செயல்பாடுகளிலும், அமைப்பு ரீதியான தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபாடு கொண்டுள்ள அனைவருக்குமான கற்பிதத்தை முன்னிலைப்படுத்துவதாகவும் இந்தப் பதிவுகள் அமைந்திருக்கின்றன.

ஜனநாயகத்தின் தூண்களாக விளங்கி வருகின்ற இராணுவம், காவல்துறையினரின் நலன்களை, தேசப் பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு, அரசு ஆட்சி அமைப்பு தானாகவே முன்வந்து நிறைவேற்றித் தருகிறது. ஆனால் அரசு ஆட்சி நிர்வாகத்திற்கு உறுதுணையாகவுள்ள அரசு ஊழியர்கள், அமைச்சுப்பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருடைய நலன்களை எல்லாம் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் கூட்டாகப் போராடிப் பெறு வதே நடைமுறையாக உள்ளது.

நீதித்துறை வழக்கறிஞர்களும், பத்திரிகை ஊடகவியலாளர்களும், திரைப்படத்துறையினரும் கூட கூட்டு நடிவடிக்கைகளை மேற்கொண்டே தங்களுடைய உரிமைகளை நலன்களை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆக கூட்டு இயக்கச் செயல்பாடுகளின் காலமாகத் திகழும் இன்றைய சூழலின் அத்தியாவசியத் தன்மைக்கு ‘வீழ்ச்சி’ புதினத்தின் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும் ஆசிரியர்- அரசு ஊழியர் கூட்டு இயக்கச் செயல்பாட்டு வடிவப் போராட்ட முறைப் படிப்பினைகள் ஒரு முன் மாதிரியானதாக அமைந்திருக்கிறது.

தங்கதுரை கதாபாத்திரத்தின் மூலமாக சுகுமாரன் குறிப்பிடுவதைப்போல, லட்சக்கணக்கான ஆயிரக்கணக்கானவர்களைக் கொண்ட இயக்கச் செயல்பாட்டில், அதன் போராட்டங்களில் பங்கேற் பவர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் தான் என்பதே இயக்கத்தின் வீழ்ச்சி நிலையை உணர்த்துகிறது. அதிலும் அந்த போராட்டங்களில் பங்கேற்காத பலர் அந்தப் போராட்டத்தின் பலன்களைப் பெற முண்டியடித்து முன்நிற்பதும் வேதனையளிக்கிறது என்பதெல்லாம், எல்லா இயக்கச் செயல்பாடுகளின் நிலைப்பாடாகவே இருந்து வருகிறது.

அதுபோல, “போராட்டம் இல்லாமல் எந்த ஒரு இயக்கமும் செயல்பட முடியாது. ஒவ்வொரு போராட்டமும் நமக்கு ஒரு படிப்பினையாகிறது. போராட்டங்களிலிருந்து கற்றுக்கொள்வதுதான் முன்னேற்றத்துக்கான அறிகுறியாக இருக்கிறது” என்பது போன்ற கருத்துக்களும் தெளிவான உண்மையாயிருக்கிறது.

‘வெற்றி பெறுவதல்ல பங்கேற்பதே முக்கிய’ என்பதுதான் ஒலிம்பிக் போட்டிகளின் தாரக மந்திர மாக அனுசரிக்கப்படுகிறது. அதைப்போன்று, பல போராட்டங்களின் பங்கேற்புச் செயல்பாட்டின் நீட்சியே இயக்க வளர்ச்சியின் வெற்றியாக அமைந்து விடுகிறது என்பதை உணரவேண்டியதாக இருக்கிறது.

எட்டு மணிநேர உழைப்பு, எட்டுமணிநேர ஓய்வு, எட்டுமணிநேர உறக்கம் என்ற தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகள் எல்லாம் நூற்றாண்டு கால மேதினப் போராட்டங்களால் கிடைக்கப் பெற்றதுவே!

மாஸ்டர் இராமுண்ணி தலைமையிலான ஆசிரியர் இயக்கப் போராட்டத்தின் விளைவுகளே, ஆசிரியர்களுக்கு பல சலுகைகளை உரிமைகளை பெற்றுத் தந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியான பல கூட்டுச் செயல்பாட்டுப் போராட்டங்களே ஆசிரியப் பெருமக்களுக்கு ஒரு மதிப்பான நிம்மதி யான வாழ்க்கையை அமைத்துத் தந்திருக்கிறது.

கடந்த காலங்களில் அவ்வாறு போராடிப் பெற்ற அந்த உரிமைகளை இழந்திடும் நிலைமையை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்றே புதினத்தின் நாயகர்களாக தங்கதுரையும் மார்ட்டினும் வெகுண்டெழுந்து ஆவேசப்படுகிறார்கள்.

‘எதுவும் நிலையானதல்ல; மாற்றங்களுக்கு உட்பட்டதுதான். கட்டுண்டோம். காத்திருப் போம், காலம் மாற்றத்தினை கொண்டு வந்திடும்’ என்ற நம்பிக்கை உணர்வை விதைத்திடும் பதிவு களே ‘வீழ்ச்சி’ புதினத்தின் வெளிப்பாடாகி நமக்கு உணர்த்தப்படுகிறது.

போராட்டங்களின் மூலம் வெறும் பொருளாதாரப் பலன்களைப் பெற்றுத் தருவது என்ற ஒற்றை நோக்கத்தின் பாற்பட்டதான ஒரு சேவை அமைப்பாக இயக்கம் செயல்படுவதுதான் அதன் வீழ்ச்சிக்குக் காரணம்.

சமூகப் பிரச்சினைகள் மற்றும் மக்கள் வாழ் வாதாரப் பிரச்சினைகள் என்பன பற்றியெல்லாம் கவனப்படுத்திடாமல் அதற்கான இயக்கங்களை மேற்கொள்ளவேண்டிய அரசியல் சமூக உணர் வினை ஊட்டிடாமல் இருப்பதும் ஆன குறை பாடுகள் எல்லாம் கதைமாந்தர்களால் எடுத்துரைக்கப் படுகிறது.

கல்விக்கண் திறந்த காமராசர் ஆட்சிக் காலத்தில் ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர் - இருபது மாண வர்கள் என்கிற முறைமை இருந்து வந்தது. இதனால் ஆசிரியர்கள் நன்றாகப் பாடம் சொல்லிக் கொடுத்தனர். அரசுப்பள்ளிகளில் தரமான கல்வி கிடைத்தது.

ஐம்பது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என 1986ம் ஆண்டு கல்விக் கொள்கைப்படி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அரசுப் பள்ளிகளில் குழந்தை களைப் படிக்க வைக்க பெற்றோர்கள் தயங்கினர். கிராமப்புறப் பள்ளிகளில் ஆசிரியர் இல்லாத நிலை என மக்கள் வெகுண்டெழுந்தனர், அரசுப் பள்ளி களே இல்லாமல் போய்விடும் அபாயநிலை உருவானது.

தரமான கல்வியைக் காசு கொடுத்து வாங்கு வதில் தவறில்லை. கட்டணம் வசூலிக்கப்படும் தனியார் பள்ளிகளில் கல்வி உயர்வாக இருக்கிறது. அரசுப்பள்ளிகளில் கல்வி இலவசமாகத் தரப்படு வதால் கல்வித்தரம் குறைந்திருக்கிறது என்றெல்லாம் கருத்துருவாக்கங்கள் ஊடகங்கள் மூலம் பரப்பு உரைக்கப்பட்டன.

பொதுத் தொண்டாக இருந்த கல்வியை புது வியாபாரமாக மாற்றுவதற்குதான் புதிய கல்விக் கொள்கையா என மக்கள் கல்வி சிந்தனையாளர் களான பேராசிரியர்கள் கோ.கேசவன், அ.மார்க்ஸ், கல்யாணி, மாடசாமி போன்றவர்கள் அதன் கேடுகளைப் பற்றி பேசினார்கள். இவற்றையெல்லாம் ஆசிரிய இயக்கங்கள் கவனப்படுத்திடவில்லை என்பதை தங்கதுரை வாயிலாக ஆசிரியர் இடித் துரைக்கிறார்.

2016ம் வருடத்திய புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது, முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய அதே நடைமுறைக் காரணங்களே இதிலும் முன்வைக்கப்பட்டுள்ளன. கல்வி மேம்பாட்டுக்கான எந்த ஒரு பரிந்துரை களும் காணப்படவில்லை என இப்போதும் கல்வியாளர்களான பேராசிரியர் மணி, வசந்தி தேவி, பிரின்ஸ் கஜேந்திர பாபு, ஆயிஷா நடராஜன் போன்றவர்களே எதிர்ப்புக்குரல் கொடுக்கும் நிலைமையே உள்ளது.

பள்ளிப்படிப்புதான் ஒரு மனிதனை முழுமை யாக உருவாக்குகிறது. ஒரு குழந்தை மனிதனாக பரிணமிக்கத் தொடங்குவது தொடக்கப்பள்ளிப் படிப்பின் போதுதான். அவ்வாறான பெரும் பொறுப்பு ஆரம்பப்பள்ளி ஆசிரியரிடம் தான் இருக்கிறது. ஆகவேதான் அனைத்து ஆசிரியர் படிநிலையை விட ஆரம்பப்பள்ளி ஆசிரியர் படி நிலையே முதன்மையான சேவையாகப் பார்க்கப் படுகிறது என ஆசிரியப் பணியை சிறப்பித்துச் சொல்வதுண்டு.

“வேலைக்கு வந்த புதுசில் ஆசிரியர் வேலை குறித்தான இத்தகைய லட்சியக் கனவுகள் இருந்தன. குழந்தைகளின் இதயத்தைத் தொடும் வாய்ப்பாக இருந்த ஆசிரியப்பணி குறித்து பெருமைப்பட்ட துண்டு. ஆனால் கல்விச் சூழலில் நிலவியிருந்த சிறுமைகள் எல்லாம் சோர்வடையச் செய்து விட்டன” என தனது செயல்பாட்டின் ஆற்றாமை வீழ்ச்சியை கதை நாயகன் தங்கதுரை வாயிலாக நயம்பட எடுத்துரைக்கின்றார் நூலாசிரியர் சுகுமாரன்.

கல்வியானது நல்ல மனிதனை, சிறந்த தேசத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்; பண்பாட்டை உருவாக்குவதிலும், நீதியும் சமத்துவமும் வளர்ச்சியும் மனிதமும் கொண்ட மாற்று உலகைக் காட்டும் முயற்சியிலும் துணைநிற்க வேண்டும்.

உலக மயம், தாராளமயம் இந்த சிறப்புகளை யெல்லாம் அழித்துவிட்டன. கல்வியானது இன்றைய சந்தைக்குத் தேவையான மனித எந்திரத்தை தயார் செய்து தருவது என்றாகிவிட்டது. கல்வி வணிக மயமாக தங்குதடையில்லாமல் அனுமதிக்கப் பட்டதால், இந்திய கல்வி அதன் ஆத்மாவை தொலைத்துவிட்டு நிற்கிறது.

கல்வியின் விழுமியங்களையெல்லாம் இவ் வாறான சோக நிலைக்கு உள்ளாக்கப்பட்டிருக் கிறதே என்கிற சமூகக் கவலை புதிய நாயகனான தங்கதுரையை விசனப்படுத்திய அவை சக ஆசிரியர் களை, ஆசிரியர் இயக்கத்தை அக்கறை கொள்ள வைக்கவில்லையே என்ற பின்னடைவு நிலையும், மீண்டும் எழுச்சி கொள்வதற்கான உத்வேக நம்பிக் கையையும் ‘வீழ்ச்சி’யின் படைப்பாக்கமாக்கப் பட்டிருக்கிறது. இந்த இலக்கு நோக்கிய பயணத்தில் இப்படைப்பானது வெற்றி பெற்றிருக்கிறது என்றே கூறவேண்டியிருக்கிறது.

வீழ்ச்சி

சுகுமாரன்

வெளியீடு: பாரதி புத்தகாலயம்

7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை,

சென்னை - 600 018

ரூ.210/-