நூல் அறிமுகம்

செயல் வழிக் கல்வி, சமச்சீர் கல்வி பற்றிய விவாதங்கள் கல்வியாளர்கள் மத்தியில் நடைபெற்று வருகிறது. ஒரு புறம் செயல்வழிக்கல்வி, சமச்சீர் கல்வி என்று பேசிக் கொண்டே கல்வியை முற்றிலும் தனியாரிடம் தாரைவார்த்துக் கொடுக்கும் வேலையையும் அரசு செய்து வருகிறது. மாநிலப் பட்டியலில் இருந்து கல்வி இப்போது சத்தமின்றி மத்திய அரசுப் பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இம்மாதிரியான நிலைகள் பற்றிக் கல்வியாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் யாரிடமும் விழிப்புணர்வோ செயல்பாடுகளோ இல்லாத ஒரு சூழலில் நாம் இருக்கிறோம்.

கல்வி, மருத்துவம், வாழிடம் இன்ன பிற அடிப்படைத்தேவைகளை நிறைவு செய்வது அரசின் கடமை. முதலாளிய வடிவிலான சேமநல அரசுகளுக்கே கூட இந்தப் பொறுப்புக்கள் இருக்க வேண்டும். ஆனால் இன்றைய அரசுகள் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கிற, இயந்திர அடிப்படையில் இயங்குகிற ஒரு அடக்குமுறைக் கருவியாகி விட்டது.

கல்விக் கூடங்கள் இந்த அரசை, நிலவுகிற சமூக அமைப்பைப் பாதுகாக்கிற குடி மக்களை அச்சில் வார்க்கிற பட்டறைகளாக உள்ளன. நிலவுகிற சமூக அமைப்பைக் கேள்விக்கு உள்ளாக்காத, கைகட்டி வாய்பொத்தி அப்படியே ஏற்றுக்கொள்கிற குடிமக்களே இந்த அரசுக்குத் தேவை. அரசமைப்போடும் அதிகாரத்தோடும் இணைந்து, எதிர்வினையாற்றாது இருக்கும் குடிமகனே தேச பக்தன் - இப்படிப் பட்டவர்களை உருவாக்குவதே கல்விக்கூடங்களின் வேலை - நீதி மன்றங்களின் நிலையும் இதுவே.

நிலவுகிற சமூக அமைப்புக்கு - அரசமைப்புக்கு மாற்றுகளைத்தேடிப் போராடுகிறவர்களுக்கு, புரட்சியாளர்களுக்குக் கையேடாய், செயலுக்கு வழிகாட்டியாய் இருக்கும் ஒரு அரிய நூலைப் பாரதி புத்தகாலயத்தினர் இந்திய மாணவர் சங்கத்துடன் இணைந்து வெளியிட்டுள்ளார்கள்.

1968- பிரேசிலைச் சேர்ந்த பாவ்லோ எனும் கல்வியாளரால் போர்ச்சுக்கீசிய மொழியில் எழுதப்பட்டுப் பின்னர் 1978-ல் ஸ்பானிய மொழியிலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்ட THE PEDAGOGY OF OPPRESSED எனும் நூலின் தமிழாக்கம் தான் இப்போது பாரதி புத்தகாலம் வெளியிட்டுள்ள நூல் -தமிழில் “ ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறை” எனும் பெயரில் வெளியாகியுள்ளது. மொழியாக்கம் இரா. நடராசன்.

ஃப்ரையிரே கோட்பாடுகளை மாற்றுக் கல்விக்கான தளத்தில் மட்டுமே பார்க்க வேண்டும்.... மார்க்சீயமும் கிறிஸ்தவமும் அவரிடம் முரணில்லாமல் இணைந்துள்ளது” என்பது போன்ற விமர்சனங்கள் ஃப்ரையிரே பற்றி இருந்த போதிலும் சமூக மாற்றத்தை வேண்டிப் போராடுபவர்களுக்கு ஃப்ரையிரே கருத்துக்கள் வலிமையைக் கொடுக்கின்றன.

இயற்கையை விலங்குகள் இருக்கின்ற நிலையிலேயே ஏற்றுக் கொள்கின்றன. மனிதன் இயற்கையைத் தனக்கேற்ற வகையில் மாற்றப் போராடுகிறான். இயற்கையோடு மனிதன் நடத்தும் இடைவிடாத போராட்டத்தில் பொருளுற்பத்தியில் ஈடுபடும் மனிதன் சக மனிதனோடு திட்டவட்டமான சில உறவுகளைப் பெறுகின்றான். இந்த உறவுகளின் அடிப்படையிலேயே நீதி நியதிகள் கட்டமைக்கப்படுகின்றன.

இந்த நீதி நியதிகள் எல்லாமே நிலவுகிற சமூக அமைப்பைக் காப்பதாக இருக்கின்றன. நிலவுகிற புறநிலை யதார்த்தம் தனக்கு அந்நியமானதாய் கொடுமையானதாய் இருப்பதை அறியா வண்ணம் இருக்க இப்போதைய மனிதன் கற்பிக்கப்படுகிறான். உருவாக்கப்படுகிறான். இந்தப் பணியை அரசும் ஆதிக்கச் சக்திகளும் கல்விக் கூடங்கள். நீதிமன்றங்கள் மூலம் செவ்வனே செய்து வருகின்றன.

இன்றைய ஆசிரியர்கள் சேமிப்புக் கிடங்குகள் - மாணவர்கள் சேமிப்புக் கிடங்கில் இருந்து எடுக்கப்பட்ட பொருளால் நிரப்பப்படும் பெட்டகங்கள் அ)ஆசிரியர் பாடம் நடத்துபவர்; மாணவர் நடத்தப்படுபவர் ஆ) ஆசிரியருக்கு எல்லாம் தெரியும்; மாணவருக்கு ஏதும் தெரியாது. இ) ஆசிரியர் சிந்திப்பார்; மாணவர்கள் சிந்திக்க வைக்கப்படுவார்கள். ஈ) ஆசிரியர் பேசுவார்; மாணவர்கள் கவனிப்பார்கள் ஊ) ஆசிரியர் ஒழுக்கத்தைப் போதிப்பவர்; மாணவர்கள் நல்லொழுக்கம் அடைய வைக்கப்படுபவர்கள். ஊ) ஆசிரியர் தனது முன்மொழிகளைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கொண்டவர்; மாணவர்கள் அதை அப்படியே ஏற்க வேண்டும். எ) திட்டத்தின் உள்ளடக்கத்தை - நிகழ்ச்சிப் போக்கை ஆசிரியர் தீர்மானிப்பார்; மாணவர்கள் (ஆலோசிக்கப்படுதல் கூட கிடையாது) அதற்கேற்ப தங்களை வடிவமைத்துக் கொள்ள வேண்டும். ஏ) ஆசிரியர்தான் செயல்படுவார்; ஆசிரியரின் செயல்பாடுகள் மூலம் தான் செயல்பட்டுவிட்டதாக மாணவர்கள் மாயத்தோற்றம் கொள்கின்றனர். ஐ) ஆசிரியர் என்பவர் தனது தொழில் அதிகாரத்தால் அறிவின் அதிகாரம் செலுத்தி அதை மாணவர்களின் சுதந்திரத்திற்கு எதிரான அதிகாரமாக முன்வைக்கிறார்கள் ஒ) கல்வி முறையின் மனிதக்கூறு ஆசிரியரே; மாணவர்களோடு பொருட் கூறுகளாய் சுருக்கம் பெறுகிறார். ஆசிரியர் - மாணவர் உறவுகள் இவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளதை ஃப்ரையிரே தெளிவாகப் பல உதாரணங்கள் மூலம் எடுத்துக்காட்டுகிறார். தொல்காப்பியர், பவணந்தி முனிவர் காலத்தில் இருந்த ஆசிரியர் - மாணவர் உறவு இவ்வாறுதான் உள்ளது என்பதை நாமறிவோம். மாணவர் என்பவர் ஒரு உயிரி என்பதை மறந்து வெறும் சடப்பொருளாகக் கருதி வினையாற்றும் இந்தக் கல்வி முறையை அடிமைக்கல்விமுறை; ஆதிக்கச் சக்திகளின் - இந்த அரசமைப்பைக் காப்பாற்று கிறவர்களின் கல்வி முறை என்கிறார். ஃப்ரையிரே.

“மானுட விடுதலையை முழு மனத்துடன் ஆதரிப்பவர்கள் வங்கி முறைக் கல்வியை முழுதுமாய்ப் புறக்கணிக்க வேண்டும். அதற்கு மாற்றாக மனிதர்களை உள்ளுணர்வு சார்ந்த உலகை ஒரு அங்கமாய்க் கருதி உணர்வடிப்படையில் சிந்திப்பவர்களாகப் பாவிக்கும் ஒரு கல்விமுறையைக் கண்டடைய வேண்டும். பொருள் சேமிப்பு போல அறிவுச் செய்தியைத் திணிக்கும் முறையைக் கைவிட்டு அதனிடத்தில் மனிதப் பிரச்சனை களை முன் வைத்து விவாதித்து தங்களுக்கு அதிலுள்ள தொடர்பை உணர்ந்தறியும் ஒரு மாற்று வழியை அவர்கள் முன்வைக்க வேண்டும். பிரச்சனைகளை முன் வைக்கும் கல்வி, உள்ளுணர்வு சார்ந்த எதிர்வினை புரியும் ஒன்றாகி, மன விருப்போடு செயல்படுகிறபோது அதிகார அறிக்கை வாசிப்புகளாக இல்லாமல் உண்மையான தகவல் பரிமாற்றமாக ஆகிறது......விடுதலைக்கான கல்வி புலனுணர்தலைக் கூறாகக் கொண்டது ஆகும். தகவல் சேகரிப்பை அல்ல.... (பக்கம் 55)

விடுதலைக்கான கல்விமுறையில் மிகத் துல்லியமாக வரையறை செய்யும் ஃப்ரையிரே இது உரையாடல் வழியாக ஆசிரியரிடமிருந்து மாணவருக்கும் மாணவர்களிடமிருந்து ஆசிரியருக்கும் போகும் இருவழிப்பாதையாகிறது என்கிறார்.

“ அன்பின் வழியில், பணிவின் நம்பிக்கையின் நிலை சார்ந்து கண்டடையப்படும் உரையாடல் பக்கவாட்டு உறவின் நீட்சியாகி பரஸ்பர உறவில் மனிதனுக்கு மனிதன் நெருக்கத்தை நம்பிக்கையை விதைப்பதை ஒரு தர்க்கமில்லாத விளைவைக் கொண்டது ஆகும்..... உரையாடலுக்கு எதிராளிகளான வங்கி முறைக் கல்வியாளரிடம் இத்தகைய சூழல் இல்லாததைப் பார்க்கிறோம்.... பொய்யான அன்பும், போலியான தன்னடக்கமும் பலவீனமான நம்பிக்கையும் மனிதர்களிடையே பரஸ்பர உறுதிப்பாட்டை ஏற்படுத்த முடியாது... (பக்கம் 71) இவ்வாறு உரையாடல் வழியிலான கல்வியென்பது அதிகாரம் - ஆதிக்கம் - அறிவுரீதியான வன்முறை என்பதையெல்லாம் கடந்து அன்பு வழியிலானது; முற்றிலும் ஜனநாயகமானது. புறநிலை யதார்த்தத்தைப் பொதுநிலையில் பொருளைப் புரிந்து கொள்ளக்கூடியது, மாற்றக்கூடியது என்பதை விளக்கும் ஃப்ரையிரே விடுதலைக்கான கல்வி இவ்வடிவில் நிகழ்ந்தால் ஆதிக்கச் சக்திகளும் அரசும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு மாற்றத்தைச் சந்திக்க நேரிடும் என்பதால் வங்கி முறைக் கல்வியே நீடிக்க எல்லாவகையிலும் முயற்சிக்கிறார்கள் என்பதையும் தெளிவாக்குகிறார்.

நிலவுகிற சமூக அமைப்பைக் காப்பாற்ற முனைகிற சக்திகளிலும், நிலவுகிற சமூக அமைப்பை இன்றைய கல்விப் புலத்தில் இருப்பதை நாம் காணமுடியும். புதிய மனிதனை உருவாக்க வழி காணும் உரையாடல் வழியான கல்வியை நாம் கொண்டு வர முயற்சிக்க வேண்டும். மேலோட்டமாகப் பார்க்கும் போது இந்நூல் விடுதலைக்கான கல்வி பற்றியது மட்டும் எனச் சொல்லத் தோன்றும். ஆனால் அப்படியில்லை. விடுதலைக்கான கல்வியைக் கற்பிக்க ஆசிரியர்-மாணவர் உறவுநிலை எவ்வாறு ஜனநாயக ரீதியாக அமைய வேண்டும் எனத் தமது நிலையைப் பதிவு செய்யும் போதே சமூக விடுதலையைக் கோருகிற புரட்சிகர அமைப்புகள் தலைவர்கள் உறவுகள் மக்களிடையே எவ்வாறு அமைய வேண்டும் என்பதையும் நன்றாகவே பதிவு செய்திருக்கிறார்.

புரட்சிகர இயக்கங்கள் மக்களிடம் சென்று, மக்களோடு இருந்து, மக்களோடு கலந்து, ஆணவம், அகந்தை இல்லாமல் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை கீழ் கண்டவாறு ஃப்ரையிரே பதிவு செய்திருக்கிறார். (வாசகர்கள் நூலைப் படிக்கும்மாறு செய்ய மேற்கோள்களை மட்டும் சுட்டிக்காட்டுகிறோம்.)

“புரட்சி என்பது மக்களுக்காக தலைவர்கள் செய்வதோ அல்லது தலைவர்களுக்காக மக்கள் நிகழ்த்துவதோ அல்ல; மாறாக இருவரும் ஒருவரோடு ஒருவர் கலந்து அசைக்க முடியாத ஒற்றுமையுடன் நிகழ்த்தும் ஒன்றாகும். இந்த பரஸ்பர நம்பகத்தன்மை என்பது தலைவர்கள் பரிவோடும் பணிவோடும் அன்போடும் மக்களை எதிர் கொள்ள தைரியமாக முன்வரும்போது மட்டுமே சாத்தியம்” ..... பக்கம் 114

“.... ஒரு அர்த்தத்தில் மக்களிடம் கலந்துரையாடல் முறைப்படி அணுகமுடியாத ஒரு புரட்சிகர தலைவர் ஒன்று அதிகார அரசியல்வாதியின் குணங்களையும் பெற்றுவிட்டார். அல்லது அவர் உண்மையில் புரட்சிகர எண்ணமிக்கவர் அல்ல. அல்லது அவர் தனது பங்களிப்பை முற்றிலும் தவறாகப் புரிந்து கொண்ட உட்கட்சி மனப்பான்மையில் வெறிகொண்ட ஒருவர் என்பதால் அத்தகையவோர் புரட்சியாளர் அல்ல... “பக்கம் 111

.... உரையாடல் செயல்முறை கொள்கைகளின் படி புரட்சிகர நோக்கங்கள் ஈடேற மக்களை வென்றடக்குதல் என்பது சாத்தியமே இல்லை. மக்களோடு ஒருவராய் ஒட்டி ஒன்றிப்போவதே ஒரே வழியாகும். உரையாடல் எதையும் திணிப்பதில்லை. எதையும் திரிப்பது இல்லை. எதையும் வசப்படுத்துவதில்லை. கோஷமொழிப்புலவர்களாக ஆக்குவதும் இல்லை...” (பக்கம்: 158)

“.... ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைய வேண்டு மாயின் முதலில் அவர்களை ஒடுக்கப்பட்ட சமூகத்தோடு பிணைத்துள்ள புனைவுகளாலும் மாயங்களாலும் ஆன தொப்புள் கொடிகளை அறுத்தெறிய வேண்டும். அவர்களுக்கு இடையிலான ஒற்றுமையும் பிணைப்பும் வேறுவகையானவைகளால் கட்டமைக்கப்படவேண்டும். இதை யாராலும் பிரிக்க முடியாத பந்தத்தைக் கட்டமைக்க புரட்சிகர செயல்பாடு என்பது ஆரம்பத்திலிருந்தே ஒரு கலாசார நடவடிக்கையாக இருக்க வேண்டும்....(பக்கம் 166)

பாவ்லோ ஃப்ரையிரே எனும் கல்வியாளரால், ஆய்வுகளிலிருந்தும் களப்பணிகளிலிருந்தும் கிடைத்த தரவுகளைக் கொண்டு எழுதப்பட்டுள்ள இந்நூல் விடுதலைக்கான கல்வி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைச் சொல்வதோடு ஒட்டுமொத்த சமூக விடுதலைக்காகப் போராடுபவர்களின் உறவுகள் மக்களிடையே எவ்வாறு நிலவவேண்டும் என்பதையும் விரிவாகப் பதிவு செய்திருக்கிறது.

மொழியாக்கத்தைப் பொறுத்தவரை, எளிமைப்படுத்திச் சொல்லவேண்டும் என்பதற்காகச் சிரமப்பட்டிருப்பது தெரிகிறது. இது ஆசிரியர் - மாணவர் மக்கள் இயக்கங்கள் கவனிக்க வேண்டிய நூல்.

வாசிப்பு முகாம் அழைப்பு

ஒடுக்கப்பட்டோரின் மாற்றுக் கல்விக்கான தந்தை என்று அழைக்கப்படுகிற பாவ்லோ ஃப்ரையிரேயின் மாஸ்டர் பீஸ் ‘‘ஒடுக்கப்பட்டவர் களின் விடுதலைக்கான கல்வி முறை.’’ 1968ல் இந்நூல் வெளிவந்தது. பல மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு, உலகையே ஒரு உலுக்கு உலுக்கியது. ஆனால் இதன் சாரம் தமிழில் வெளிவரவே கால் நூற்றாண்டாகிவிட்டது (நிறப்பிரிகை 1992). ஆங்காங்கே கருத்தரங்குகளிலும் ஆய்வுக் கட்டுரைகளிலும் மட்டும் குறிப்பிடப்பட்ட இந்நூல் முழுமையாக மொழியாக்கம் செய்யப்பட சரியாக 40 ஆண்டுகள் (2008) உருண்டோடிவிட்டன. இப்பொழுதேனும் நம் அனைவருக்கும் பாவ்லோ ஃப்ரையிரே அறிமுகமாக வேண்டும். ஒடுக்கப் பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறை நூல் விவாதிக்கப்பட வேண்டும். அதன் சாரத்தை உள்வாங்க வேண்டும். இதற்காக தமிழ்நாடு அறிவியல் இயக்க ஈரோடு மாவட்டக் கிளை இந்நூலின் மீதான இரண்டு நாள் வாசிப்பு முகாமை நடத்திட உள்ளது.

ஆசிரியர் தினத்தையட்டியும் பாவ்லோ ஃப்ரையிரேயின் பிறந்த நாளைத் தழுவியும் (செப்.19) இம்முகாம் நடைபெறுகிறது.

செப்டம்பர் 4, 5 (சனி, ஞாயிறு), பவானி சாகர் அணை.

பதிவுக் கட்டணம்: ரூ.250/---\ DD or MO.

DD: (Tamilnadu Science Forum payable at Erode)

முதலில் பதிவு செய்யும் 30* பேர் மட்டுமே வாசிப்பு முகாமில் பங்கேற்க முடியும். பதிவு செய்வோருக்கு இந்நூல் (இலவசமாக) உடனடியாக அனுப்பி வைக்கப்படும். விவாதத்தில் பங்கு பெற்று தொகுப்புரை வழங்குவோர்: ஜே. கிருஷ்ணமூர்த்தி, இரா. நடராசன்.

பதிவுத் தொடர்பு: பேரா. நா. மணி, 59/1, கே.கே. நகர், சென்னிமலை ரோடு, ஈரோடு - 638009 அலைபேசி : 9443305040 (அ) பாரதி புத்தகாலயம் சென்னை-18

* கல்வித்தளத்தில் இயங்கி வருபவர்கள், இயங்க விழைபவர், ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

 

ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்விமுறை

பாவ்லோ ஃப்ரையிரே

தமிழில்: நடராசன்

வெளியீடு:

இந்திய மாணவர் சங்கத்துடன் இணைந்து புக்ஸ் ஃபார் சில்ரன்

Pin It