gandhi thirumurugan lena

• நடைமுறையில் உள்ள சந்தைப் பொருளாதாரக் கொளகைக்கு ஏற்ப , இந்தியா உலக வர்த்தக அமைப்பில் உறுப்பு நாடாகவுள்ளது. இதில் 164 நாடுகள் உள்ளன. நாடுகளின் எல்லையில்லாது ஒரே உலக சந்தையாக மாற்றுவதுதான் இந்த அமைப்பின் நோக்கம் என்று சொல்லலாம்.

• 2001ல், உலக வர்த்தக அமைப்பு கத்தாரில் உள்ள தோகா நகரில் கூடியது. விவசாயப் பொருட்களுக்கான சந்தையை உலக அளவில் விரிவுபடுத்த வளர்ந்த நாடுகள் ( US,EU,JAPAN) ஒப்பந்தம் கொண்டுவர முயற்சித்தன. அன்று வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகள் இந்தியா உட்பட, ஒரு பொதுத் திட்டத்தினை கொண்டுவந்தன. இது தோகா டெவலப்மெண்ட் அஜண்டா (DDA) என்று அழைக்கப்படுகிறது. இது ஏழைநாடுகளின் உணவுப் பிரச்சனையை மையப்படுத்தியிருந்தது. ஏழை எளிய மக்களின் உணவுத் தேவையை அந்தந்த நாடுகளின் அரசுகள் பாதுகாப்பது குறித்த அக்கறையை வளரும்-ஏழை நாடுகள் முன்வைத்தன. வளர்ந்த நாடுகள் இதனை ஏற்கவில்லை.

• உலக வர்த்தக அமைப்பில், ஒரு பொருளின் உற்பத்திக்கு அரசு மானியமோ, நிதி உதவியோ செய்தால் அது வர்த்தக சமநிலையை பாதிக்கும் என்றும், சந்தை போட்டிக்கு குந்தகம் ஆகுமென்றும் சொல்லப்பட்டு வருகிறது. இதுவே ஒப்பந்த பேச்சுவார்த்தையின் மையப் பொருளாகும். ஆகவே எது மானியம், எது நிதி உதவி என்பது குறித்து பல விளக்கங்கள் முன்வைக்கப்பட்டும் பலவாக பிரிக்கப்பட்டும் உள்ளன. எனவே 2001ம் ஆண்டிலிருந்து தோகா அஜண்டா முடிவு எட்டப்படாமல் இருந்து வந்தது.

• இந்தியா, சீனா போன்ற வளரும் மற்றும் ஏழை நாடுகளில் வறுமையில் வாடும் மக்களுக்காகவும், விவசாயிகளின் வாழ்வுக்காகவும் , விவசாயப் பொருட்களின் விலையை அரசே நிர்ணயித்து கொள்முதல் செய்கின்றன. இந்தப் பொருட்களை குறைந்த விலையிலோ, விலையில்லாமலோ வறுமையில் வாடும் மக்களுக்குக் கொடுத்து வருகிறது. இதற்கு FOOD STOCK HOLDING என்று பெயரிடப்பட்டுள்ளது.

• இந்த FOOD STOCK HOLDING உள் நாட்டு நிதி உதவி (DOMESTIC SUPPORT)என்று சொல்லி, வளர்ந்த நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பா ஒன்றியம் ஒப்பந்தத்தினை ஏற்க மறுத்து வந்தன. அதாவது உணவு தானியங்களை அரசே சேமித்து மக்களுக்கு விநியோகம் செய்ய பயன்படுத்துவதையும், விவசாயிகளுக்கு மானியம் கொடுத்து விவசாயத்தினை வலுப்படுத்துவதன் மூலம் விளைபொருட்களை அரசே விலைக்கு வாங்குவதையும் வளர்ந்த நாடுகள் ஏற்க மறுத்தன. ஆனால், அதே சமயத்தில் தங்கள் நாடுகளில் விவசாயத்திற்கான மானியத்தை அதிகப்படுத்தியும் வந்தன. இந்த ஒரு திட்டம் பற்றிய கருத்து வேறுபாடே DDAவின் முடிவு எட்டபடாமல் நீடித்து வந்தது.

• வளரும் நாடுகளின் முதன்மைப் பிரதிநிதியாகவும் (GROUP33..G33) இந்தியா செயல்பட்டு வந்தது என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

• 2009 ல் DDAவில் இல்லாத வர்த்தக உதவி ஒப்பந்தம் (TRADE FACILITATION AGREEMENT –TFA) என்ற திட்டத்தினை வளர்ந்த நாடுகள் , குறிப்பாக அமெரிக்கா கொண்டு வந்தது. அதன் படி அனைத்து நாடுகளின் சுங்கவரி மற்றும் இறக்குமதி செயல்பாடுகள் வளர்ந்த நாடுகளில் உள்ளது போலவே மாற்றப்பட வேண்டும் என்பதாகும். எந்தத் தடையுமின்றி , எந்த நாட்டிலும் பொருட்களை சுலபமாக இறக்குமதி செய்து வணிகம் செய்ய வேண்டும் என்பது வளர்ந்த நாடுகளின் திட்டமாகும்.

• 2013 ல் இந்தோனேசியாவில் 'பாலி'யில் நடந்த உலக வர்த்தக அமைச்சர்கள் மாநாட்டில் TFA ஒப்பந்தமாக கையெழுத்தாக முடிவானது. 2001 தொடங்கி 2013 வரையிலும் FOOD STOCK HOLDING, SSM முடிவாகாத நிலையில் 2009ல் கொண்டுவரப்பட்ட TFA தீர்வைக் கண்டது. வளரும் மற்றும் ஏழை நாடுகளின் FOOD STOCK HOLDING மற்றும் SPECIAL SAFE GUARD MECHANISM---(SSM) பிரச்சனைகளுக்கு ஆறுதல் உறுதிமொழியை மட்டும் தந்தது. அதாவது, 2017ம் ஆண்டு வரை இந்த இரு பிரச்சனைகளுக்காக வழக்கு தொடுக்க மாட்டோம் என்பது மட்டும் தான்

• 2014 ல் பதவியேற்ற மோடி தலைமையிலான நடுவண் அரசு, பாலி ஒப்பந்தத்தில் FOOD STOCK HOLDING பற்றி நிரந்தரத் தீர்வு காணப்படாமல் TFA ஒப்பளிக்க முடியாது என்ற உறுதியான நல்ல முடிவை எடுத்தது. இந்தியாவின் முடிவுக்கு சீனா உட்பட 100 நாடுகள் ஆதரவளித்தன. ஆனால் இதே உறுதியில் இந்தியா நிற்கவில்லை என்பது அடுத்து வந்த நிகழ்வுகள் காட்டின.

• நவம்பர் 2014 ல் ஒபாமா—மோடி சந்திப்பிற்குப் பின் ஏனைய நாடுகளைப் பற்றியோ, இந்தியாவில் உள்ள ஏழைமக்கள் பற்றியோ ஏழை மக்கள் உணவு பற்றியோ கவலைபடாமல், அமெரிக்கா உறவு என்ற ஒன்றிற்காக மட்டும் TFA ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது இந்தியா. அதாவது உணவு சேமிப்பு பற்றியோ, விவசாய மானியம் குறித்தோ எந்த முடிவெடுக்காமல் , மேற்குலகின் கோரிக்கைக்கு ஏற்ப இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது இந்தியா.

• ஆனால், ஏமாற்றியது அமெரிக்கா. டிசம்பர் 2015 ல் கென்யாவின் நைரோபியில் நடந்த அமைச்சர்கள் மாநாட்டில், அமெரிக்காவிற்கு சாதகமான ஏற்றுமதி மானியம் பற்றியே முடிவெடுக்கப்பட்டது. அத்துடன் பருத்திக்கான மானியம் 01 ஜனவரி 2017 வுடன் இந்தியா போன்ற நாடுகளில் நிறுத்தப்பட வேண்டும் என முடிவானது. ஆனால் FOOD STOCK HOLDING, SSM பற்றியும் அடுத்து பேசலாம்; ஆனால் ஒப்பந்தமாக ஏற்க முடியாது என்றானது.

நைரோபியில் இந்தியாவின் நடவடிக்கைகள் அமெரிக்காவிற்கு சாதகமாகவே இருந்ததை செய்திகள் வெளிப்படுத்துகின்றன.

** விவசாயம் பேச்சுவார்தை குறித்து நாடுகளின் கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய அமைச்சர் FOOD STOCK HOLDING நிரந்தரத் தீர்வு குறித்து பேசவேயில்லை.

** அதுபோன்றே SSM குறித்த கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்கவேயில்லை

** இந்த இரு பிரச்சனைகள் குறித்து தன் நிலைப்பாட்டினை வெளிப்படையாக மற்ற ஆதரவு நாடுகளுக்கு அறிவிக்கவில்லை. அதன்மூலம் இந்தியா நிலைப்பாட்டினை வலுப்படுத்திக் கொள்ளவில்லை.

** 18 டிசம்பர் 2015ல் நடந்த GREEN ROOM கூட்டம், இப் பிரச்சனைகள் பற்றியது. ஆனால் ஐந்து நாடுகள் கூட்டமாகவே சுருக்கப்பட்டது. இதில் சீனாவைத் தவிர்த்து மற்றவைகள் அமெரிக்க ஆதரவு நாடுகள் ஆகும். இதில் கலந்து கொண்ட இந்தியா, எந்த தயாரிப்புமின்றியே இருந்ததுமல்லாமல், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளையும் சேர்க்க வலியுறுத்தவில்லை.

**நைரோபி மாநாட்டிற்குப் பிறகான செயல் திட்டம் வகுக்கும் ஐவர் கூட்டத்தில் DDA முடிந்து போனதாக அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் போரே நடத்தின. இதனை சீனா கடுமையாக எதிர்த்த போது, இந்தியா மௌனமே காத்தது.

• 19/10/2015 ல் டெல்லியில் நடந்த ஆப்பிரிக்க - இந்திய கூட்டமைப்பில ,பிரதமர் மோடி நைரோபி கூட்டத்தில் DDA அதன் கொள்கையை எட்டாமல் முடிந்து போகாது என்று உறுதியளித்திருந்தார். இப்படி 100 கோடி நம் விவசாயிகளையும், ஏழைமக்களையும். உலகம் முழுவதுமான 150 கோடி குறு விவசாயிகளின் வாழ்வையும், இந்தியாவை ஏமாற்றும் அமெரிக்காவின் உறவுக்காக பலியிட்டுள்ள காரணத்தை நடுவண் அரசும், இதனை கண்டும் காணாமல் இருக்கும் மாநில அரசும் மக்களுக்கு விளக்க வலியுறுத்துகின்றோம்.

இந்தக் கையெழுத்தின் காரணமாக விளைபொருளை அரசு கொள்முதல் செய்யாது. அரசினால் விளைபொருள்-தானியங்கள் கொள்முதல் செய்ய இயலாமல் போகிறதெனில், ரேசன் கடைகள் எனும் நியாய விலைக் கடைகளில் பொருட்களை மானிய விலையில் அரசு விநியோகம் செய்ய இயலாது. மேலும், தடையற்ற அளவில் உணவுத் தானியங்களை எந்த நாடும் இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யும். இதன் படி உணவு தானியங்களின் விலையை பன்னாட்டு கம்பெனிகள், வெளி நாடுகள் முடிவு செய்வதுடன், நியாய விலையில்-மானிய விலையில் தானியங்கள் மக்களுக்குக் கிடைக்காது போகும். இந்த நிலையே மிக மோசமான நிலையாகும், இதனால் உள்நாட்டு விவசாயம் அழியும், விவசாயிகள் அழிவார்கள், ஏழை எளிய மக்களுக்கு மானிய விலையில் உணவு தானியங்கள் கிடைக்காது, சில்லரை வர்த்தகமும் இதனால் முடக்கப்படும்.

ஏழைநாடுகளையும், வளரும் நாடுகளையும் ஏமாற்றி , வளர்ந்த நாடுகளின் அடியாளாக மாறிவிட்ட உலக வர்த்தக அமைப்பிலிருந்து இந்தியா வெளியேற வேண்டுமென வலியுறுத்துகின்றோம்

மின் துறை பொறியாளர் அமைப்பு
மூத்த பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கம்
தந்தைப் பெரியார் திராவிடர் கழகம்
தமிழக மக்கள் முன்னனி
தற்சார்பு விவசாயிகள் சங்கம்
மே பதினேழு இயக்கம்

Pin It