கணித்தமிழில் முன்னோடியான சிங்கப்பூர் நா.கோவிந்தசாமி 1997இல் கணித்தமிழுக்கான முதல் மாநாட்டை நடத்தியபோது, அப்போதைய முக்கியமான பிரச்சினைகளுள் ஒன்று, இணையத்தில் தமிழில் தட்டச்சு செய்வது. அப்போது எழுத்துரு, குறியாக்கம் ஆகிய முயற்சிகளை மயிலை கல்யாணசுந்தரம், கண்ணன், முத்து நெடுமாறன், சிங்கப்பூர் கோவிந்தசாமி என ஒருசிலர்தான் மேற்கொண்டு வந்தார்கள். அந்த நேரத்தில், முத்து நெடுமாறன் தமிழ். நெட் என்ற இணையதளத்தைத் தொடங்கினார். ஸ்டூடன்ட் ஜெராக்ஸில் இந்தாம்.காம் என்ற இணையதளத்தைத் தொடங்கினார்கள். அவற்றையெல்லாம் இணையப் பத்திரிகைகள் என்று சொல்ல முடியாது. நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள், கேட்டு வாங்கிய கட்டுரைகள் அடங்கிய தளம் என்று சொல்லலாம். தமிழ் குறித்த நல்ல கட்டுரைகள், படைப்புகளை இணையத்தில் தொகுக்கும் பணி என்று கூறலாம். இதற்காக நிறையப் புத்தகங்களைப் படித்து, தமிழ் சார்ந்த விஷயங்களைத் தொகுத்து அவற்றைத் தட்டச்சு செய்து இணையத்தில் ஏற்றினார்கள். இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவை என்ற எண்ணத்தோடு மதுரைத் திட்டமும் கல்யாணசுந்தரத்தால் தொடங்கப்பட்டது. தமிழின் பண்டைய இலக்கியங்கள் முதல் நவீன இலக்கியங்கள் வரை இணையத்தில் தொகுக்கும் திட்டம். உலகின் பல பாகங்களில் வாழும் தமிழர்கள் தன்னார்வலர்களாக முன்வந்து இப்பணியை மேற்கொண்டனர். ஒருவர் தட்டச்சு செய்து தருவார், இன்னொருவர் மெய்ப்புத் திருத்தித் தருவார். இப்படி அத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.tamil99 keyboardஅதையடுத்து இணையதளம் ஒன்றை ஆண்டோ பீட்டர் ஆரம்பித்தார். அவரது தளத்தில் சினிமா சார்ந்த தகவல்கள் வெளிவந்தன. இப்படியொரு சூழலில்தான் 1998இல் ‘ஆறாம் திணை’ ஆரம்பிக்கப்பட்டது. ஏற்கெனவே ‘சென்னை ஆன்லைன்’ என்ற பெயரில் சென்னை தொடர்பான தளம் ஒன்று ஆங்கிலத்தில் நடத்தப்பட்டு வந்தது. அவர்களுக்குத் தமிழில் ஓர் இணைய இதழைக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அப்படித் தொடங்கப்பட்டதுதான் ‘ஆறாம் திணை.’ கணித்தமிழ் பெரியளவில் வளர்ச்சி பெற்றிராத, மின்னஞ்சல் என்பதே ஆச்சரியமாகப் பார்க்கப்பட்ட காலத்தில் நடத்தப்பட்ட இதழ் அது. தமிழில் ஐந்து திணைகள் உண்டு. மெய்நிகர் வெளி எனப்படும் இணையவெளியை ஆறாம் திணை என்று குறிக்கும் வகையில் அந்தப் பெயரைச் சூட்டினோம். உலகத் தமிழர்களை இணைக்கும் உறவுப்பாலம் என்று துணைத்தலைப்பு வைத்தோம்.

இணையம் என்பதே அப்போது புதிய சொல். இன்டர்நெட் என்பதற்கான தமிழ்ச் சொல் குறித்து பெரும் விவாதம் நடந்தது. இணையம், வலையம், இணையப் பக்கம், வலைப்பின்னல், வலைப்பக்கம், இணைய இணைப்பு எனப் பல பெயர்கள் உலாவி, இறுதியாக வெகுமக்கள் ஏற்றுக் கொண்டது இணையம். அதேபோல இணையத்தில் வெளியாகும் இதழுக்கு வலையிதழ், மின்னிதழ், மின் சஞ்சிகை, மிஞ்சிகை எனப் பெயர்கள் உலாவி, கடைசியில் இணைய இதழ் என்பதையே மக்கள் பெருவாரியாகப் பயன்படுத்தினர். இந்தக் காலகட்டத்தில்தான் நாங்கள் தொடங்கிய இணைய இதழுக்கு ஆறாம் திணை என்று பெயர் இட்டோம். ஆறாம் திணை என்பது தமிழுக்கு நாங்கள் சேர்த்த புதிய சொல்.

இணைய இதழாக ‘ஆறாம் திணை’யைத் தொடங்கியபோது அப்போதைய ஊடக நிலைமைகளை ஆராய்ந்து உலகளாவிய பொதுவெளியைப் பயன்படுத்தி ஒரு மாற்று இதழாகக் கொண்டு வர முயன்றேன். ஏற்கெனவே இருந்த வெகுஜன இதழ்கள், சிற்றிதழ்கள் ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட இதழாக அதைக் கொண்டு வர முயன்றோம். இலக்கியம் மட்டுமல்லாது செய்திகளையும் கொடுக்கத் தீர்மானித்தோம். மேலும், தமிழ் மொழியில் நவீனத் தொழில்நுட்ப சாத்தியங்களைத் முயன்று பார்ப்பதுதான் எங்களது முதன்மை நோக்கமாக இருந்தது. இணையம் என்பதையே தமிழ் எழுத்தாளர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். சென்னையில் தட்டச்சு செய்து பதிவேற்றினால் அமெரிக்காவில் பார்க்க முடியும் என்பது அவர்களுக்கு நம்ப முடியாத வியப்பாக இருந்தது.

அப்போது, எழுத்துருக்களைப் பயன்படுத்து வதுதான் பெரிய பிரச்சினை. நோட்பேடில்தான் தட்டச்சு செய்ய வேண்டியிருந்தது. காற்புள்ளி, இடைவெளி, அடைப்புக்குறி என்று இவற்றைக் கையாள்வதுகூடச் சவாலாக இருக்கும். அதற்கான கணினி மொழி (Morpin Language) தெரிந்தவர்கள்தான் அதைப் பதிவேற்றவே முடியும்.256 எம்.பி. அளவில்தான் கணினி இருக்கும். இணைய வசதிக்கு டயல்-அப் இணைப்பு வேண்டும். இணையத்தைப் பயன்படுத்துவதற்காகவே தனித் தொலைபேசி இணைப்பு தேவைப்பட்ட காலம் அது. அந்த எண்ணில் யாரும் அழைத்தால் எடுக்கக் கூடாது. எடுத்து விட்டால் இணையத் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிடும். கணினியை வேகமாகப் பயன்படுத்த முடியாது, எழுத்துருக்களை அப்படியே பதிவேற்ற முடியாது என்பன போன்ற சூழலில்தான் இணைய இதழைக் கொண்டு வரும் முயற்சி நடந்தது.

அப்போது நான்கைந்து தமிழ் எழுத்துருக்கள் பயன்பாட்டில் இருந்தன. அவற்றில் முத்து நெடுமாறனின் முரசு அஞ்சல் எழுத்துருவை நாங்கள் பயன்படுத்தினோம். முத்து நெடுமாறன் எங்களுக்கான தொழில்நுட்ப உதவிகளைச் செய்தார். அவருக்கு உதவியாக டி.என்.சி.வெங்கட்ரங்கன் இருந்தார். அப்போது எழுத்துருக்களில் பொதுவான ஒரு சிக்கல் என்னவென்றால் எந்த கோடிங் என்றாலும் ஏதாவது ஒரு எழுத்து வராது. எங்கள் இணையதளத்தில் இ என்ற எழுத்து வராது. இ என்று வருகிற இடங்களிலெல்லாம் ஒரு கட்டம் இருக்கும். இப்போதுபோல அன்று உயர் அடர்த்திப் புகைப்படங்களைத் தரவிறக்கம் செய்யவியலாது. ஒரு இணையப் பக்கத்தின் அதிகபட்சக் கொள்ளளவு என்பதே 40 கே.பி. என்ற அளவுக்குள்தான் இருக்கும். எனவே, வெப் கேமராவில் புகைப்படங்கள் எடுத்தால் மட்டுமே இணையத்தில் பதிவேற்ற முடியும். அந்தப் புகைப்படத்தை அச்செடுத்தால் தெளிவாக இருக்காது. கணினித் திரையால் மட்டுமே நன்றாகப் பார்க்க முடியும்.

இணையதளங்களைப் பற்றித் தமிழில் அறிமுகம் இல்லை என்பதால், அதைப் பிரபலப்படுத்த வேண்டிய தேவையும் இருந்தது. முதலமைச்சரிடம் ஒரு வாழ்த்துச் செய்தி கேட்கலாம் என்று எண்ணி அவரது உதவியாளர் சண்முகநாதனிடம் ஒரு கடிதம் கொடுத்தோம். உடனடியாக அவரிடமிருந்து வாழ்த்துச் செய்தியும் கிடைக்கப்பெற்றோம். அவரது வாழ்த்துச் செய்தியுடன்தான் ‘ஆறாம் திணை’ இணைய இதழைத் தொடங்கினோம். பின்பு, அவரிடம் கணினியைக் கொண்டுசென்று, இணையதளத்தைக் காட்டினோம். மிகுந்த ஆர்வத்துடன் அதைக் குறித்துக் கேட்டார்.

பாரதி பிறந்த நாளான டிசம்பர் 11 அன்று ஆறாம் திணை தொடங்கியது. அதுவும் பெரியாரின் பொன்மொழிகளுடன் தொடங்கியது. உலகம் முழுவதுமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. 2001 வரைக்கும் ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் இணைப்புப் பாலமாக விளங்கியதோடு வெகுஜனப் பத்திரிகை உலகுக்கும் ஒரு சவாலாக இருந்தது. உள்ளடக்கத்தைப் பொறுத்தவரையில் ஆங்கிலத்தில் ‘தி இந்து’, ‘ப்ரன்ட்லைன்’, தமிழில் ‘தினத்தந்தி’, ‘சுபமங்களா’ என்று நான்கும் சேர்ந்த கலவையாகச் செய்திகளையும் கட்டுரைகளையும் கொண்டதாக அது அமைந்திருந்தது. புத்தக அறிமுகங்களுக்குச் சிறப்புக் கவனம் கொடுத்தோம். ‘தி இந்து’ நாளிதழ்களின் இணைப்பிதழ்களைப் போல விளையாட்டு, பெண்கள், சிறுவர்கள், இலக்கியம் என்று ஒவ்வொரு நாளும் ஒரு துறைக்குச் சிறப்புப் பக்கங்களை ஒதுக்கினோம். ஆன்மிகச் செய்திகள் வெளிவந்தாலும் ஜோதிடம் போடவில்லை. கல்கிக்கு நூற்றாண்டு விழா மலரைக் கொண்டு வந்தோம். பண்டிகைகளுக்கென்று தனி மலரை வெளியிட்டோம். தமிழ் இதழ்களின் உள்ளடக்கத்தை மேம்படுத்தியதிலும் தமிழ்ப் பத்திரிகையாளர்களின் ஊதியங்களை உயர்த்தியதிலும் ‘ஆறாம் திணை’ மிக முக்கியமான பங்களிப்பை அளித்துள்ளது.

கணினியே புழக்கத்தில் இல்லாத அந்தக் காலகட்டத்தில் இணைய இதழுக்குப் பேட்டி கொடுக்கவே அப்போது யோசிப்பார்கள். ப்ரவுசிங் சென்டரில் ஒரு மணி நேரத்திற்கு ஐம்பது ரூபாய் வரையில் கொடுக்க வேண்டியிருந்த காலகட்டம் அது. எனவே, ஒவ்வொரு இலக்கியக் கூட்டத்துக்கும் இணையப் பக்கங்களை அச்செடுத்துக் கொண்டுபோய்க் காட்டி பேட்டிகளை எடுத்தோம். ஏறக்குறைய, இணையதளங்களைப் பற்றிய பிரச்சாரமாகவே அது அமைந்திருந்தது.

முதலில் டிஅய்சி என்ற எழுத்துருவைப் பயன்படுத்தினோம். அது டிஸ்கி என்று மாறியது. அதன் பிறகு முரசு அஞ்சல் எழுத்துருவைப் பயன்படுத்தினோம். அது மற்ற எழுத்துருவைப் பயன்படுத்தும் கணினிகளில் வேலைசெய்யாது. பழைய குறியாக்கத்தில் தட்டச்சு செய்யப்பட்ட கோப்புகளை மீட்டு, புதிய எழுத்துருக்களுக்கு மாற்ற முடியாது. ‘ஆறாம் திணை’யில் வெளியிட்டிருந்த 40 ஆயிரம் பக்கங்களில் ஒரு பக்கத்தைக்கூடப் புதிய வடிவங்களுக்கு மீட்கவில்லை. டிஸ்கியில் இருந்த எழுத்துருக்களை ஒருங்குறி முறைக்கு மாற்றவில்லை.

இப்படிப் பல சிரமங்களோடு இணைய இதழை நடத்திக்கொண்டிருந்த சூழலில்தான் 1999 மார்ச் மாதத்தில் தமிழிணையம் 99 மாநாடு நடைபெற்றது. நிறையக் குறியாக்கங்கள், நிறைய எழுத்துருக்கள், நிறைய விசைப்பலகைகள் என்றிருந்த நிலையில் அவற்றை எப்படித் தரப்படுத்த வேண்டும் என்பதுதான் அந்த மாநாட்டின் முக்கியமான நோக்கம். கணித்தமிழ் வளர்ச்சியில் அடுத்தடுத்த வளர்ச்சிகளை நோக்கி எப்படிப் பயணிப்பது என்று அந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. பேராசிரியர் ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அந்த மாநாட்டுப் பணிகள் நடைபெற்றன. அதன் பிறகே, கணித்தமிழ் தரப்படுத்தப்பட்டது. எழுத்துருக்களை உருவாக்கியவர்கள் யாரும் உடனடியாக என்றாலும், அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்த முடியவில்லை. விசைப்பலகையில் தரப்படுத்தல் நடந்து விட்டது. ஆனால், குறியாக்க விஷயத்தில் இன்றும்கூடப் பிரச்சினை தொடரத்தான் செய்கிறது.

இந்த வேறுபாடுகள் இருந்தாலும் இணையம், கைபேசி இரண்டின் எதிர்காலம் குறித்து முன்னோடிகள் அனைவருக்கும் ஒரு தெளிவான பார்வை இருந்தது. அவை குரலை அறிந்துகொள்ளும், முகங்களை அறிந்து கொள்ளும், சொன்னால் எழுதும், எழுதியதைப் பேசும் என்ற சாத்தியங்களை அவர்கள் அன்றே அறிந்திருந்தார்கள். அந்தச் சாத்தியங்கள் அனைத்தையும் தமிழில் நிகழ்த்திப் பார்க்க வேண்டும் என்ற தெளிவான பார்வை அவர்களுக்கு இருந்தது. தமிழினி 2000 மாநாட்டில் இலக்கியமும் இணையமும் என்ற தலைப்பில் நான் இது குறித்துப் பேசியிருக்கிறேன்.

2000இல் அன்றைய நிலையில் ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாகத் தமிழ்தான் கணினியில் அதிகம் பயன்படுத்தப்படக் கூடிய மொழியாக இருந்தது. கணித்தமிழில் பெரும் பங்களிப்பு அளித்தது புலம்பெயர்ந்த தமிழர்கள்தான். இன்றைக்குக் கணினிப் பயன்பாடுகளில் தமிழ் எவ்வளவோ வளர்ந்து விட்டாலும் இணைய உள்ளடக்கத்தில் பின்தங்கியிருக்கிறோம். பிரெஞ்சு, தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை ஒரே அளவில் இருக்கிறது. அதே நேரத்தில் இணைய உள்ளடக்கத்தில் பிரெஞ்சு வகிக்கும் பங்கு நான்கு சதவீதமாக இருக்கிறது. தமிழ் உள்ளடக்கங்களோ 0.01 சதவீதமாக இருக்கிறது என்கிறார்கள்.

இணையத்தைப் பயன்படுத்துவதில் பெருமளவு வளர்ந்திருக்கிறோம். இருந்தாலும், இதில் இரண்டு பிரச்சினைகள் இருப்பதாக நான் கருதுகிறேன். ஒன்று டிஜிட்டல் இடைவெளி, இரண்டாவது தலைமுறை இடைவெளி. எல்லோருமே திறன்மிகு கைபேசியைப் பயன்படுத்தக்கூடிய நிலையில் இல்லை. தலைமுறை இடைவெளிக்குப் பதிப்புத் துறை ஓர் உதாரணம். வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்பத் தங்களை மேம்படுத்திக் கொள்ள அவர்கள் தயாராக இல்லை.

தமிழ் மென்பொருள் உற்பத்தியில் இருக்கக்கூடிய மிக முக்கியமான பிரச்சினை அந்த மென்பொருள்களை எல்லோரும் வாங்கிப் பயன்படுத்தும் நிலையில் இருக்கிறார்களா என்பது. பதிப்பகங்கள் வேண்டுமென்றால், பணம் கொடுத்து எழுத்துருக்களை வாங்கிப் பயன்படுத்தலாம். தனது கணினியில் ஒரு நாவலை எழுதும் ஒரு எழுத்தாளனுக்கு அது சாத்தியமா என்ற கேள்வியும் இருக்கிறது. இது போன்ற சூழலில் பைரஸி வருகிறது. அதனால், தமிழ் மென்பொருள் உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ந்து தாக்குப்பிடிக்க முடியாமல் போய் விடுகின்றன. டிஜிட்டல் இடைவெளி, தலைமுறை இடைவெளி இரண்டும் அதிகமாவதற்கு இதுவும் ஒரு காரணம்.

2000இல் டாட்காம் தொழில் துறையில் ஏற்பட்ட சரிவும் இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்விளைவுகளும் வெளிநாட்டு முதலீடுகளைப் பாதித்ததால் ‘ஆறாம் திணை’ முடிவுக்கு வந்தது. இன்றைக்கும் இணைய இதழ்களை ஆரம்பித்து அதிலிருந்து லாபம் பார்ப்பது என்பது வாய்ப்பில்லாததாகத்தான் இருக்கிறது. ஆனால், ஆங்கிலத்தில் மட்டும் அது சாத்தியமாக இருக்கிறது. ‘ஆறாம் திணை’ மேலும் சில ஆண்டுகள் தொடர்ந்திருந்தால் தமிழிலும் அப்படியொரு சூழல் மலர்ந்திருக்குமோ என்று தோன்றுகிறது.

நன்றி: கணினிக் கோவை, கணித்தமிழ் 24, மாநாட்டுக் கட்டுரைகள்

- மூ.அப்பணசாமி

Pin It