தொடர்புடைய படைப்புகள்

அண்மைக் காலமாகக் கல்விப் புலங்களிலும் சமூகக் களங்களிலும் முறையான பழைய கலைச் சொற்களைப் புறந்தள்ளிவிட்டு, அவற்றிற்கு மாற்றாக, முறையற்ற, புதுப் புதுக் கலைச் சொற்களைப் பயன்படுத்தும் போக்கைக் காண நேர்கிறது. இத்தகைய மாற்றுக் கலைச் சொற்களைப் பயன்படுத்தும் போக்கில் ஒளிந்திருக்கும் நுண் அரசியலை வெளிச்சம் போட்டுக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.tribes artகளம்-1 : மண்ணின் மைந்தரான பழங்குடியினரைக் குறிக்கும் புதுப், புதுக் கலைச் சொற்களுக்குள் ஊடாடும் நுண் அரசியல்1:-

மண்ணின் மைந்தருள் ஒரு வகைமையினரான ‘பழங்குடியினரைத்' (Tribes) "தொன்மைசார் வாழுநர்” எனப் பொருள்பட ‘Adivasi' என்று குறிப்பிட்ட தொடக்க கால நிலையிலிருந்து, முதலில் ‘Girijan' ("மலை மக்கள்”) என்றும், பின்னர் ‘Van(a)vasi' ("காடு வாழுநர்”) என்றும் குறிப்பிட்டு வந்த நிலைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, மிக அண்மைக் காலத்தில் ‘Janjati' என்கிற புதுக் கலைச் சொல்லைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ள போக்கு தோன்றியுள்ளது. 'Janjati' எனும் கலைச் சொல்லின் 'நேர்ப் பொருள்' (Literal Meaning) "மக்கள் சாதி” என்பதே. 'பழங்குடிக் குழு'வைச் (Tribal Group) 'சாதிக் குழு'வாகக் (Caste Group) காட்ட முனையும் நுண் அரசியலே இது. மேற்படிச் சொல்லாடலைப் பழங்குடிப் போராளியான 'பிர்சா முண்டா'வைப் (Birsa Munda) பெருமைப்படுத்துகிறோம் என்கிற போர்வையில் ‘Janjatiya Gaurav Diwas' என்னும் பெயரில் - சிறுமைப்படுத்தப்பட்டுள்ளமையை ஒரு போதும் ஏற்கவே இயலாது. இதற்கெல்லாம் தக்க எதிர்வினை ஆற்றும் வகையில், வட இந்தியப் பழங்குடிச் சமூகங்களைச் சார்ந்தோர் தங்களை “Original Inhabitant” என்று பொருள்படும் வகையில் 'Moolnivas' என்னும் கலைச் சொல்லால் குறிப்பிட்டுக்கொள்ளத் தொடங்கியுள்ளளனர்.

களம் 2 : தொன்மை சான்ற மண்ணின் மரபான ‘திணைசார் அறிவு அமைப்பொழுங்கை' ஒட்டுமொத்த ‘இந்திய அறிவு அமைப்பொழுங்கா'கக் காட்டும் முயற்சி தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளமை :-

மண்ணின் மைந்தராம் பழங்குடியினர் உள்ளிட்ட 'திணைக் குடிகளு’டைய (Indigenous Peoples) 'அறிவு அமைப்பொழுங்கை' (Knowledge System) 'Indigenous Knowledge System' (IKS) என மானிடவியல் குறிப்பிடும். 'மரபு சார்ந்த அனைத்துச் சமூகங்களையும் உள்ளடக்கும் வகையில் இக்கலைச் சொல்லை விரிவுபடுத்துகிறோம்’ என்கிற போர்வையில், இது முதலில் ‘Traditional Knowledge System' (TKS) என்று மாற்றம் செய்யப்பட்டது. இதற்குத் தற்போது "இந்திய அறிவு அமைப்பொழுங்கு” எனப் பொருள்படும்படி, 'Indian Knowledge System' (IKS) என்கிற கலைச் சொல்லை இந்திய ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது; இப்புதுக் கலைச் சொல்லும் ‘IKS' என்று அதே முந்தைய சுருக்க எழுத்துகளில் குறிப்பிடப்பட்டாலும். அது பழைய ‘IKS' (Indigenous Knowledge System) அல்ல2. இக்கலைச் சொல் மாற்றத்தில் அடங்கியுள்ள நுண் அரசியலைப் புரிந்துகொள்ளாத நம் மக்களும் "இது நம் இந்தியத் திருநாட்டைப் பெருமைப்படுத்தும் செயல்தானே?” என வாதிடுகின்றனர்; உண்மையில். மண்ணிற்கு இயல்பான அறிவு அமைப்பொழுங்கைப் புறந்தள்ளிவிட்டு, 'வேத மரபு' (Vedic Tradition), ‘வேதக் கணிதம்' (Vedic Mathematics) என்பனவற்றை ஒட்டுமொத்த இந்தியாவின் அறிவு அமைப்பொழுங்காகக் காட்டிட முனையும் நுண் அரசியலே இது.

இந்திய ஒன்றிய அரசும் இத்திரிபுவாதக் கருத்தியலைப் பரப்பும் நோக்கில், ‘இந்திய அறிவு அமைப்பொழுங்கு' தொடர்பாகக் கருத்தரங்குகளையும் மாநாடுகளையும் கல்வி நிறுவனங்களில் நடத்துவதற்குத் 'தாராள நிதி நல்கைகளை'த் (Generous Financial Grants) தனது நிருவாக அமைவகமான ‘இந்தியச் சமூக அறிவியல் ஆய்வுக் குழு' (Indian Council of Social Science Research) வழியே அளித்து வருகிறது.

களம் - 3 குடித்தொகை கணக்கெடுப்புப் படிவத்தில் 'சமயம்' என்பதன் கீழே ‘பிறர்’ என்கிற ‘களத்’தை நீக்கியுள்ளமை :-

‘நிறுவனப்படுத்தப்பட்ட சமயங்களான' (Institutionalized Religions) 'இந்து', ‘இசுலாம்', ‘கிறித்தவம்', 'சீக்கியம்', 'புத்தம்', 'சமணம்' உள்ளிட்டவற்றைக் 'குடித்தொகைக் கணக்கெடுப்புப் படிவத்’தில் (Form of Census Enumeration) 'சமயம்' (Religion) என்பதன் கீழே, பழங்குடியினர்க்கான ‘வழிபாட்டு முறைகள்' (Worship Patterns), ‘நம்பிக்கை அமைப்பொழுங்கு' (Belief System) உள்ளிட்டனவற்றிற்கு உரிய இடம் அளிக்கும் வகையில், கடந்த 2001 வரை “பிறர்” என்பதைக் குறித்திடும் 'Others' என்னும் சொல் நீக்கப்பட்டது. இதனால், ‘இசுலாம்' உள்ளிட்ட பிற சமயங்களுடன் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பாத பழங்குடிச் சமூகத்தினர் வேறு வழி இல்லாமல் 'இந்து' என்றே தங்களைக் குறித்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்3.

இத்தகைய சூழலில், 'நடு இந்தியப் பழங்குடி குழுக்களை'ச் (Central Indian Tribal Groups) சார்ந்தோர் தங்களுடைய 'இயற்கை வழிபாடு' (Nature Worship) சார்ந்த நம்பிக்கை அமைப்பொழுங்கான 'சர்ணா' (Sarna) என்பதையே தங்கள் பொதுச் சமயமாக அறிந்தேற்பு செய்து, அதனையே குடித்தொகைக் கணக்கீட்டுப் படிவத்தில் உரியவாறு இடம் பெற்றிட வழிவகை செய்திட வேண்டும் என்கிற தங்கள் நியாயமான கோரிக்கையை இந்திய ஒன்றிய அரசிடம் முன் வைத்துள்ளனர்4.

களம் - 4 : பழங்குடி வழிபாட்டு மரபில் இந்துக் கடவுளர் பெயர்களுக்கான பின்னொட்டுகளை நுழைத்துள்ளமை :-

பழங்குடியினர் வழிபாட்டு மரபில் உள்ள கடவுளர் பெயர்களில் - ஈஸ்வரன், - ஈஸ்வரி என்னும் இந்துக் கடவுளர்க்கான பின்னொட்டுகளை நுழைத்துள்ளமையையும் காண்கிறோம். சான்றாக, நீலகிரி மாவட்டம் வாழ் கோத்தர் பழங்குடியினர் தங்கள் இனக்குழுத் தெய்வ இணையரான ‘அய்னோர்-அம்னோர்' என்பதைக் 'கம்பட்ராயன்-கம்பட்ராயி' என்றே முன்னர் குறிப்பிட்டு வந்த நிலையில், இந்துத்துவச் செல்வாக்கால் தற்போது கம்பட்டீஸ்வரன்- ‘கம்பட்டீஸ்வரி' எனக் கோத்தர் குறிப்பிடத் தொடங்கிவிட்டனர். அது மட்டும் அல்லாமல், தங்களுடைய ‘அய்னோர்-அம்னோர்’க்கான தனித் தனிக் ‘குட்ய்' (<*குடி) என்னும் திருக்கோவில்களுக்கு அருகிலேயே ‘மாரியம்மன்', 'விநாயகர்' என இந்துக் கடவுளர்க்கும் தற்போது தனிக் கோவில்களைக் கட்டி, வழிபடத் தொடங்கியுள்ளனர்.

இது போன்றே, நீலகிரித் தொதவர் பழங்குடியினர் தங்களுடைய வீட்டின் உள்ளே இடம் அளித்துள்ள 'போலி எருமைத் தலை'க்கு (Imitation Buffalo Head) அருகே மாலை நேரத்தில் விளக்கு ஏற்றி வழிபடும் தமது மரபார்ந்த வழிபாட்டு முறையுடன், தற்போது பொது வெளியில் ‘108 திருவிளக்குப் பூசை' என்கிற இந்துத்துவ மரபைப் பின்பற்றுராகவும் தற்போது மாறியுள்ளனர் 5.

களம் - 5 : 'காலனிய நீக்கம்' என்பதற்குத் திரிபுவாதப் பொருள் கற்பிக்கப்படுதல் :-

ஆங்கிலேயக் காலனியம் கற்பித்த சில சமன்பாடற்ற போக்குகளை நீக்கி, அனைவருக்குமான சமத்துவத்தை முன்னெடுத்தல்” என்கிற நேர்ப் பொருளில் ‘Decolonising' என்கிற கலைச் சொல்லை மானிடவியல் அண்மைக் காலத்தில் அறிமுகப்படுத்தி வருகிறது; அதாவது, ‘ஆண்-பெண்', 'நில உடமையாளர் - கூலித் தொழிலாளர்' என ஆங்கிலேய அரசு சமன்பாடற்ற போக்குகளை முன்னிலைப்படுத்தி ஆண்டுவந்த நிலையில், மக்கள் சமூகங்களுக்கு இடையே நிலவிய ஏற்றத் தாழ்வுகள் மேலோங்கத் தொடங்கின. எனவே, நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகளைக் கடந்துள்ள இன்றைய நிலையில் இத்தகைய சமன்பாடற்ற போக்குகளைப் புறந்தள்ளிடும் வகையில், அவற்றைக் 'காலனிய நீக்கம்' செய்திட வேண்டும் என மானிடவியல் முன்மொழிகிறது. அதை அப்படியே தடம் மாற்றி-இந்துத்துவக் கொள்கைகளைக் கடை விரித்திடும் வகையில், ‘காலனிய நீக்கம்' என்கிற சொல்லாடலுக்குத் - தற்போது 'திரிபுப் பொருள்' (Distorted Meaning) கற்பிக்கப்படுகிறது. 'காலனிய நீக்கம்' என்பதன் வழியே மானிடவியல் முன்னிறுத்தி வலியுறுத்துவதோ 'மாந்தர்க்கு இடையேயான சமத்துவம்'; மாறாக, இந்துத்துவம் முன்னிறுத்த முனைவதோ ‘வைதீக மேலாதிக்கம்' (Vedic Supremacy)6 என்பதைக் கவனமாக வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.

களம் - 6 : 'சிந்து வெளி நாகரிகம்' என்கிற சொல்லாடலை மாற்ற முற்பட்டுள்ளமை :-

இந்தியத் துணைக் கண்டத்தின் முன்னோடி நாகரிகமான சிந்து வெளி நாகரிகம் திராவிடர்க்கு உரியது- என்று அறிவியல் வழிப்பட்ட ஆய்வுகள் மெய்ப்பித்துள்ள நிலையில், சிந்து வெளி நாகரிகத்தைத் தமதாக்கிக் கொள்ளும் முயற்சியில், கண்ணுக்கே தெரியாத 'சரஸ்வதி' என்கிற ஆற்றின் பெயரை அதனுடன் இணைத்து, முதலில் ‘சிந்து-சரஸ்வதி நாகரிகம்' எனக் கூறத் தொடங்கிய ஆரியக் கருத்தியலாளர்கள் இன்று இன்னும் ஒரு படி மேலே சென்று, அதனைச் 'சரஸ்வதி நாகரிகம்' என்றே பெயரிட்டு அழைக்கத் துணிந்துவிட்டனர்7.

களம் - 7 : இந்தியச் சட்டப் பிரிவுகளைச் சமத்கிருதப்படுத்திப் புதுச் சொல்லாட்சியால் குறித்துள்ளமை :-

‘இந்தியத் தண்டனைச் சட்டம்' (Indian Penal Code) என்பதைச் சமத்கிருதப்படுத்தி ‘Bharatiya Nyaya Sanhita' (BNS) என்று இந்திய ஒன்றிய அரசின் நீதித் துறை தற்போது மாற்றியுள்ளது. ‘தண்டனை வழங்கும் முறை' என்பதிலிருந்து 'நீதி வழங்கும் முறை' என்று மாற்றியுள்ளமை பொருத்தமானதுதானே என வாதிடுவோர், "உள்ளடக்கம் ஆங்கிலத்திலேயே இன்று வரை தொடரும்போது, சட்டத்தின் பெயரை மட்டும் சமத்கிருதத்தில் மாற்ற வேண்டிய தேவை என்ன?” என்கிற கேள்விக்கு இன்று வரை விடை அளிக்க இயலாமல் தடுமாறுகின்றனர். சமத்கிருத மொழியை முன்னிலைப்படுத்தும் போக்கே இதன் பின்னணியில் உள்ள நுண் அரசியல் ஆகும்8.

களம் - 8 : 'பாரதீய பாஷா பரிவார்' என்கிற அமைவகத்தின் வாயிலாக இந்தியா முழுவதற்கும் ஓர் ஒற்றை மொழியே தொடக்கப் புள்ளி எனக் கூற முனைந்துள்ளமை :-

ஒரு குறிப்பிட்ட நிலப் பரப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட 'மொழிக் குடும்பங்களை'ச் (Language Families) சார்ந்த மொழிகள் தங்களுக்குள் தொடர்புகொள்ள நேரிடும்போது, ஒரு மொழியின் கூறு, பிறிதொரு மொழியினுள் புக நேரிடும்; இத்தகைய நேர்வுகளைக்கொண்டு, அக்குறிப்பிட்ட மொழிகள் ஊடாடும் நிலப் பரப்பினை ‘ஒரு மொழியியல் பரப்பு' (A Linguistic Area) என்று 'ஒப்பீட்டு மொழியியலாளர்கள்' (Comparative Linguists) கூறுவர். இதனால், பல்வேறு மொழிக் குடும்பங்களைச் சார்ந்த பல்வேறுபட்ட மொழிகளுக்குள் ‘பொது மொழியியல் கூறுகள்' (Common Linguistic Features) இடம்பெறுதல் இயல்பாக நிகழ்ந்தவண்ணம் உள்ளன. இத்தகைய பொது மொழியியல் கூறுகளையே ‘Areal Linguistic Features' என ஒப்பீட்டு மொழியியலாளர்கள் இனங்காண்கின்றனர்.

இந்திய ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகக் கிளை அமைப்பாக மிக அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்ட ‘Bharatiya Bhasha Pariwar' (BBP) இப்போது மொழியியல் கூறுகளை ‘இந்திய மொழிகளின் பொதுப் பண்புகள்' (Pan-Indian Linguistic Features) எனக் காட்டுவதுடன் நிற்காமல், இன்னும் ஒரு படி மேலே சென்று, 'இவற்றிற்கு மூல காரணமே 'சமத்கிருதம்'தான் என இந்தியாவிற்கான ஒற்றை மூல மொழியாக - சமத்கிருதத்தை முன்னிறுத்த முயல்கிறது.

நிறைவுரை

திரிபுவாத அரசியல் அணுகுமுறையையே தங்களுடைய முதன்மை ஆயுதமாக இந்துத்துவவாதிகள் ஏந்தியுள்ள நிலையில், அதற்குள்ளாக நுண் அரசியல் ஒளிந்திருப்பதை அறிவுலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டிடும் முழு முதற் கடமை இன்றைய அறிவர் பெருமக்களுக்கு உள்ளது. அவ்வகையிலேயே, மத மாற்றம் அடைந்த பழங்குடியினர் "தாய் சமயத்திற்குத் திரும்புதல்” என்கிற பொருள்பட ‘Gar Vapsi' என்னும் சொல்லாடலைப் பொது வெளியில் இந்துத்துவவாதிகள் பயன்படுத்தியபோது, "பழங்குடியினர் இந்து சமயத்தைச் சார்ந்தோர் அல்லர்” என அழுத்தந்திருத்தமாக அறிவர் பெருமக்களால் அறிவுறுத்தப்பட்டது.

தமிழ்நாட்டின் "கீழடி நாகரிகம் இந்தியாவின் தொன்மை நாகரிகம்” - என்று தமிழ்நாட்டில் தக்க தொல்லியல்சார் அறிவியல் சான்றுகளுடன் எடுத்துரைத்துள்ள நிலையிலும், அதன் 'காலத் தொன்மை' (Antiquity) இன்று வரை இந்திய அரசால் ஏற்கப்படவே இல்லை; மாறாகத், தொன்மை வாய்ந்த கீழடியின் ‘மணலூர்' எனும் பகுதியை ‘மகாபாரத மணிப்புரம்' எனக் காட்டிடும் 'போலி அறிவியல்' (Pseudoscience) முன்னெடுப்பினை அண்ணா பல்கலைக்கழகச் சூழலியல் அறிவியலாளர் அரங்கேற்றிட, அதனுள் பொதிந்துள்ள நுண் அரசியலையும் அறிவர் பெருமக்கள் அடையாளம் காட்ட வேண்டியுள்ளது.

அடிக் குறிப்புகள்

விரிவான தகவலுக்குக் காண்க : மகேசுவரன், சி. 2024 a. "பழங்குடிகள்” உங்கள் நூலகம் (ஜனவரி, 2024). 53-54.

“திணைசார் அறிவு அமைப்பொழுங்கே அடிப்படையானது; அதிலிருந்தே ஏனைய அறிவு அமைப்பொழுங்குகள் தோற்றம் பெற்றன.” என்பதே பண்பாட்டு மானிடவியல் பறை சாற்றும் உண்மை ஆகும். இந்நிலையில், இந்தியாவிற்கெனத் தனித்தோர் அறிவு அமைப்பொழுங்கு உள்ளது என்றும், அது வேதத்தை அடிப்படையாகக்கொண்டது என்றும் கட்டமைக்க முயல்வதை ஏற்கவே இயலாது.

‘Others' ("பிறர்”) என்கிற 'களத்'தை (Column) 2011 குடித்தொகைக் கணக்கெடுப்புக் கால கட்டத்தின்போது, உரிய குடித்தொகைக் கணக்கீட்டுப் படிவத்திலிருந்து நீக்கியமை குடித்தொகை எண்ணிக்கையில் ‘இந்துக்களே மிகுதி' என்று காட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட நுண் அரசியலே - என்பது இங்கே சொல்லாமலேயே விளங்கும்.

ஆந்திர முதல்வராகத் திருமிகு இராஜசேகர ரெட்டி - அவர்கள் செயல்பட்டபோது, தமது மாநிலக் கணக்கீடுகளில் ‘Tribal Religion' என்று ஒரு 'களம்' இருக்கும் எனத் துணிந்து நடைமுறைப்படுத்த முனைந்தமையை இங்குக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் பழங்குடிக் குழுக்கள் இடையேயும் இத்தகைய 'இந்துத்துவ உள்ளிணைக்கும் போக்கு' இனங்காணப்படுகின்றன என்பதை இங்கே கருத்தில்கொள்ள வேண்டும்.

இந்நிலைக்கு மாறாக, ‘ஆங்கிலேயக் காலனி ஆட்சியாளர்களைப் போல, எதற்கெடுத்தாலும் நீலகிரிப் பகுதியை மட்டுமே முன்னிலைப்படுத்தும் நோக்கும் போக்கும் இன்றைய ஆய்வாளர்கள் இடையேயும் இனங்காணப்படுகிறது' - என்னும் அடிப்படையில் காலனிய நீக்கம் செய்யப்பட வேண்டியது இத்தகைய போக்கையே எனக் கருதுவோரும் உள்ளனர்.

‘புவியியல் வரைவு’ (Geo-Mapping) வழியே புலப்பட்ட 'கக்கார்' (Gaggar) ஆறுதான் ‘சரஸ்வதி' என்று வாதிடுவோர் ஒரு புறம் இருக்க, 'சரஸ்வதிக்கும் ‘கக்கார்’க்கும் எவ்வகையான தொடர்போ, உறவோ இல்லை எனக் கருதுவோரும் மறு புறம் காணப்படுகின்றனர் - என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

எதற்கெடுத்தாலும் சமத்கிருதத்தை முன்னிலைப்படுத்தும் இத்தகைய போக்கு நடுநிலையாளர்களைப் பெரிதும் கவலை கொள்ளச் செய்கிறது.

விரிவான தகவல்களுக்குக் காண்க: அண்ணாமலை, 2026 மற்றும் பாலசுப்ரமணியன், கோ.2026.

நோக்கீட்டு ஏடுகள்

தமிழில்

அண்ணாமலை, இ. 2026. "ஒரே நாடு, ஒரே மொழிக் குடும்பம் : பரப்புரையும் யதார்த்தமும்”. காலச்சுவடு (மார்ச், 2026). 48-52.

பாலசுப்ரமணியன், கோ. 2026. ‘பாரதீய மொழிக் குடும்பம்’ எனும் மொழி அடையாள அழிப்புச் செயல்திட்டம்”. காக்கைச் சிறகினிலே
(மார்ச், 2026). 5-11.

மகேசுவரன், சி. 2024 a. பழங்குடிகள்”, உங்கள் நூலகம் (ஜனவரி, 2024) 53-54.

மகேசுவரன், சி. 2024 b.தமிழ்நாட்டுப் பழங்குடிக் குழுக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள். சென்னை: பாரதி புத்தகாலயம்.

மகேசுவரன், சி. 2025 a. "பழங்குடி மக்களைக் குறிக்கும் சொல்லாடல்கள் : ஒரு பார்வை”. பழங்குடி இனக்குழு வரைவியல் சென்னை : பாரதி புத்தகாலயம், ஜனவரி, 2024

மகேசுவரன், சி. 2025 b. பழங்குடி இனக்குழு வரைவியல் சென்னை பாரதி புத்தகாலயம்.

ஆங்கிலத்தில்

Behera, M.C. (Ed.) 2025 a. The Rouledge Handbook of Contemporary Readings on Tribes and Religions in India : Emerging Negotiations. London & New York, Rouledge.

Maheswaran, C.2025 "Tribal Religion is a Reality (Furnishing of Certain Clinching Evidences from the Tribal Nilgiris)". In. M.C. Behera (Ed.). The Rouledge Handbook of Contemporary Readings on Tribes and Religions in India: Emerging Negotiations. London & New York. Rouledge. 419-428.

- முனைவர் சி. மகேசுவரன், மேனாள் இயக்குநர், பழங்குடியினர் ஆய்வு நடுவம், தமிழ்நாடு அரசு

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.