கொஞ்ச நாளைக்கு முன்பு ஒரு நூல் சந்தாதாரர், தன் கைப்பட நூற்று நூற்போர் சங்கத்திற்கு அனுப்பிவரும் நூல்களை தனக்கு திருப்பி அனுப்பினால் அதன் கிரையத்தை கொடுத்துவிடுவதாகவும், அந்த நூலைக்கொண்டு நெய்த துணியை அணிய தான் ஆசைப்படுவதாகவும் எழுதியிருந்தாராம். அதற்கு மகாத்மா பதில் எழுதுகையில் அவரவர்கள் நூலை அவரவர்களுக்கு திருப்பி அனுப்பிவிட்டால் மறுபடியும் அந்த நூலையே சந்தாவுக்கு அனுப்பி விடுவார்கள் ஆதலால், அந்த நூலை சலவை செய்து அனுப்பக்கூடும் என்று எழுதினாராம். தினம் நூற்று, மாதாமாதம் நூல் அனுப்புகிறோம் என்று பிரமாணம் செய்து உறுதிமொழியில் கையொப்பமிட்ட நூல் சந்தாதாரரிடமே இவ்வளவு அவநம்பிக்கை இருக்குமானால் மற்றவர்களிடம் எவ்வளவு நம்பிக்கை இருக்கும்? இதிலிருந்து கொஞ்ச காலத்திற்கு முன் மகாத்மாவுக்கு வெறும் ஆள்களிடம் இருந்த நம்பிக்கைக்கூட, உறுதிமொழி கொடுத்தவர்களிடம் இல்லைபோல் இருக்கிறது. தன்னிடம் இருக்கும் உறுதி, ஆட்டம் கொடுத்தவுடன் எல்லாரிடமும் சந்தேகப்படுவது இயற்கைதான்.

(குடி அரசு - செய்தி விளக்கம் - 18.04.1926)

Pin It