26.10.87

இன்று காலை 10 மணியளவில் பொன்னாலைப் பாலத்தில் இந்திய கெலிகாப்டர் புதிய வகை ராக்கட் மோட்டார்களை வீசித் தாக்கியது. தமது உடைமைகளை இழந்து அகதிகளாக வெளியேறிய பொது மக்கள் மீது இந்திய கெலிகாப்டர் 5 ராக்கட் மோட்டார்களை வீசியதில் ஒரு சிறுவன் உட்பட5 பொது மக்கள் கொல்லப்பட்டனர். 15 பேர் காய மடைந்தனர். இரண்டு பேர் கால்களை இழந்தனர். இரு மினி பஸ்களும் சேதமடைந்தன.

காலை கொக்குவில் சந்தி, பரமேஸ்வராச் சந்தி ஆகிய இடங்களில் இந்தியப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே நடந்த கடும் சண்டையில் விடுதலைப் புலிகளால் 2 எல்.எம்.ஜீ.,

4 எஸ்.எல்.ஆர்., 4 எஸ்.எம்.ஜீ., ஒரு பசூக்கா ராக்கட் லோஞ்சர் என்ற இந்தியப் படையினரிடமிருந்து கைப்பற்றப்பட்டன.

கொக்குவில் சந்தியில் பீரங்கி பூட்டிய இராணுவ டிரக் ஒன்றிலிருந்து விடுதலைப் புலிகள் ராக்கட் லோஞ்சர் கொண்டு தாக்கியதில் அந்த வாகனம் முற்றாகச் சேதடைந்தது. அதில் வந்த இந்தியப் படையினர் அனைவரும் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள பேராறு என்னும் இடத்தில் இருந்த விடுதலைப் புலிகளது முகாமொன்றை சிங்கள இராணுவத்தினர் சுற்றி வளைத்துத் தாக்கினர். காலை 11 மணியளவில் நடைபெற்ற இத் தாக்குதலில் விடுதலைப் புலிகள் தரப்பில் ஆயுத இழப்பு ஏதும் ஏற்படவில்லை.

இந்திய இராணுவத்தின் கைதுகள்

இலண்டனைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ‘ஆம்னஸ்டி இன்டர் நேஷனல்’ என்ற சர்வதேச மனித உரிமை அமைப்பு, இலங்கையில் தமிழ் பகுதிக்கு ராஜீவ் காந்தி, ‘இந்திய அமைதிப் படை’ என்ற பெயரில் அனுப்பி வைத்த ராணுவம் நடத்திய அத்துமீறல்கள், போர்க் குற்றங்களை நேரில் சென்று ஆய்வு நடத்தி, 1989 ஆம் ஆண்டு மே மாதம் அறிக்கையாக வெளியிட்டது. அந்த அறிக்கையிலிருந்து சில பகுதிகள்:

வடக்கு-கிழக்கில் நூற்றுக்கணக்கான மக்களை இந்திய அமைதிப் படை கைது செய்து, அவர் களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே உள்ள உறவு பற்றி விசாரித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் என்று சந்தேகப்படுபவர்கள் நூற்றுக்கணக்கிலும் மற்ற தமிழ் இயக்கங்களைச் சேர்ந்த சிலரும் இன்றும் இந்திய அமைதிப் படையின் காவலில்தான் இருக்கிறார்கள். இவர்கள் இந்திய சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்களா அல்லது சிறீலங்கா சட்டத்தின் கீழா என்று இந்திய அதிகாரிகள் இதைப் பற்றி ஏதும் கூறவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் மீது எந்தவிதமான குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை. எவ்வித விசாரணையும் நடக்கவில்லையெனக் கூறப்படுகிறது.

பரமேஸ்வரன் கெங்கா என்பவர் 1988 ஏப்ரல் 5 அன்று இந்திய அமைதிப் படையால் கைது செய்யப் பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர் “மாயமாய்” மறைந்து விட்டார். இதைத் தொடர்ந்து அவரது சகோதரி ஒரு ‘ஹாபியஸ் கார்பஸ்’ மனுவை தாக்கல் செய்தார். வவுனியாவில் உள்ள இந்திய அமைதிப் படை முகாமிற்கு பொறுப்பேற்றிருக்கும் இந்திய இராணுவ அதிகாரியை நீதிமன்றத்திற்கு வரும்படி ‘சம்மன்’ பிறப்பிக்கப்பட்டது. பலமுறை ‘சம்மன்’ அனுப்பிய பிறகும் அவர் வரவில்லை. இந்திய அதிகாரிகள் இந்த வழக்கு சம்பந்தமாக எந்தவிதத் தகவல்களையும் தர மறுத்துவிட்டனர்,. நீதிமன்றத்தை உதாசீனப்படுத்தியதாக அந்த அதிகாரி மீது ஒரு வழக்கு தொடரப்பட்டிருந்தாலும் “மாயமாய்” மறைந்துபோனவரைப் பற்றிய எவ்விதத் தடயமும் கிடைக்கவில்லை. ஒப்பந்தத்தை ஆதரிக் கும் ‘த்ரீ ஸ்டார் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எஃப். குழுக்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் என சந்தேகப்படு பவர்களை அடையாளம் காட்ட உதவுவதாகக் கூறப்படுகிறது.

வேறு சில தகவல்கள்படி தமிழீழ விடுதலைப் புலிகள் என சந்தேகப்படுபவர்களை, இந்தக் குழுக்கள் இந்திய அமைதிப் படையின் உதவியுடன் கென்றதாகவும் கூறப்படுகிறது. இந்திய அமைதிப் படையால் தேடப்பட்டுவரும் நபர்களைப் பிடிப் பதற்காக குறிப்பிட்ட நபர்களின் உறவினர்களைப் பிணைக் கைதிகளாக இந்தி யஅமைதிப் படை கைது செய்ததாகவும் கூறப்படுகிறது. காவலுக்கு எடுத்துச் சென்றவுடனேயும், அதன் பிறகும் அவர்கள் அடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வீடுகளில் நடைபெறும் “வழக்கமான விசாரணைகள்” போதும் தேடப்படும் நபர்களின் உறவினர்கள் தாக்கப்பட்டிருக்கின்றனர். கீழ்க்கண்ட வாக்கு மூலம் இதற்கு ஒரு உதாரணம்:

“நான் ஒரு விவசாயி. என்னுடைய சகோதரரின் நிலத்தில் காய்கறி பயிரிட்டு வருகிறேன். என்னுடைய நிலத்தில் பிப்ரவரி 5 ஆம் தேதியன்று, காலை 8.45 மணிக்கு வேலை செய்து கொண்டிருந்தபோது இரண்டு பொது மக்களுடன் நான்கு இந்திய அமைதிப் படையினரும் என்னைச் சூழ்ந்து கொண்டனர். இந்திய அமைதிப் படையினர் சீருடையில் ஆயுதம் ஏந்தி வந்திருந்தனர். இந்திய அமைதிப் படையினரில் ஒருவன், நான் சாகுபடி செய்யும் நிலத்தில், எங்கு ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன என்று கேட்டான்.

எனது தோட்டத்தில் ஆயுதமேதும் இல்லை என கூறியவுடன், இந்திய அமைதிப் படையினர் அவர்களுடன் வந்த இரண்டு பொது மக்களைக் கொண்டு, என்னைத் தாக்கும்படி கடடளை யிட்டனர். இந்திய அமைதிப் படையினர் எனது சகோதரன் எங்கிருக்கிறான் என்று கேட்டனர். உடனிருந்த இரண்டு நபர்களும் தடிகளைக் கொண்டு என்னைத் தாக்க ஆரம்பித்தனர். ‘பம்ப் செட்’ அருகே இருந்த மண்வெட்டியின் பிடியைக் கழற்றி என் வலது காலைத் தாக்கியதால், நான் கீழே விழுந்தேன். இந்திய அமைதிப் படையினரும் அவர்களுடன் வந்த இரண்டு நபர்களும் சென்ற பிறகு, பக்கத்துத் தோட்டத்திலுள்ள விவசாயிகள் மற்றொரு சகோதரனிடம் இதைப் பற்றித் தெரிவித்தனர். அன்றே என்னை அவர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்து, யாழ்ப்பாணம் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்து, யாழ்ப்பாணம் பொது மருத்துவ மனைக்கு, ‘ஆம்புலன்ஸ்’ மூலம் கொண்டுச் செல்லப் பட்டேன். 18 நாட்கள் மருத்துவமனையில் நான் தங்கியிருந்தேன். இந்தத் தாக்குதலால் எனது கால் எலும்பு முறிந்துவிட்டது.”

இந்திய அமைதிப்படை பொது மக்களை ஒன்று திரட்டி, முகமூடி யணிந்தருந்த அல்லது மறைத்து வைக்கப்பட்ட, ‘காட்டிக் கொடுப்பவர்’களுக்கு முன்னால் வரும்படி செய்தனர். இந்தக் ‘காட்டிக் கொடுப்பவர்கள்’ விடுதலைப் புலிகளுடன் உறவு வைத்திருப்பவர்கள் என்று கருதப்படுபவர்களை அடையாளம் காட்டுகின்றனர். இந்த அடையாளம் காட்டும் நடவடிக்கையைப் பார்த்த ஒருவர் அதனை விவரிக்கிறார்.

“நான் ‘ஒய்’யின் மனைவி. 8.9.1988 அன்று இந்திய அமைதிப்படையால் கைது செய்யப்பட்ட என் கணவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. செப்டம்பர் 7 ஆம் தேதியன்று என் கணவர் வீட்டிற்கு 200 மீட்டர் தொலைவில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் இந்திய அமைதிப் படையின் இரு சிப்பாய்கள் சுட்டுக் கொல்லப் பட்டதாகக் கூறப்படுகிறது. மறுநாள் இந்திய அமைதிப்படை இந்தப் பகுதியில் இருந்த எல்லா வீடுகளையும் சோதனை போட்டு, திடகாத்திரமான எல்லா ஆண்களையும் கைது செய்ய ஆரம்பித்தனர். 8.9.1988 அன்று எங்கள் வீட்டிலிருந்த இரண்டு ஆண்களும் (என் கணவரும், அவரின் மைத்துனரும்) கைது செய்யப்பட்டனர். நானும் என் மாமியாரும் அவரது ஏழு மகள்களும் அவர்கள் கைதானதைப் பார்த்த சாட்சிகள். இந்திய அமைதிப் படையினர் அன்றைய தினம் காலை பத்து மணிக்குள் கைது செய்தவர்களை விடுவித்து விடுவோம் என்ற கூறினர். பகல் ஆகியும் என் கணவரும் அவர் மைத்துனரும் வராததால், மற்ற பெண்களுடன் சேர்ந்து இந்திய அமைதிப்படை முகாமிற்கு சென்றேன்.

அங்கு சென்ட்ரி அறையிலிருந்து ஒருவர் முன்னால், கைது செய்யப்பட்ட அனைவரும் அணி வகுத்து செல்லும்படி செய்யப்பட்டனர். சென்ட்ரி அறையிலிருந்தவர் சந்தேகத்துக்குரியவர்களை அடையாளம் காட்டிக் கொண்டு இருந்தார். கிட்டத்தட்ட 2000 ஆண்கள் அங்கு இருந்தனர். சுமார் பகல் 1.45 க்கு, என் கணவர் உடபட 15 பேர்கள் தனியாகப் பிரிக்கப்பட்டு 500 இந்திய அமைதிப் படையினரின் பாதுகாப்பில் இந்திய அமைதிப் படையின் பிரதான முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்திய அமைதிப் படை சென்ட்ரி எங்களை ராணுவ முகாமிற்குள்விட மறுத்ததால், நான் வீட்டிற்குத் திரும்பினேன்.” அன்றிலிருந்து இப்பெண்ணின் கணவர் “மாயமாய்” மறைந்து விட்டார். இந்திய அமைதிப்படை அவரைக் கைது செய்யவில்லை என்று கூறிவிட்டது.

இந்திய அமைதிப் படைக்குத் தகவல் தருபவர்கள் “மூன்று நட்சத்திரம்” மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பைச் சார்ந்தவர்கள் என்று சில தகவல்கள் கூறுகின்றன. அம்னஸ்டி இன்டர் நேஷனலுக்குக் கிடைத்த சில அறிக்கைகள்படி, எந்த இயக்கத்தையும் சாராத சிலரையும் இந்திய அமைதிப்படை பல வந்தமாக, தான் சந்தேகப்படுபவர்களைக் காட்டிக் கொடுக்கும்படி கட்டாயப்படுத்தியிருக்கிறது. இவர் களுக்குத் தங்களைக் காட்டிக் கொடுப்பவர்களைப் பற்றிய எந்த தகவலும் தெரிவதில்லை. இவர்களின் கருத்துப்படி, அவ்வாறு காட்டிக் கொடுக்கப்பட்டவர்கள் பின்னர் சித்தரவதைகளுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். உதாரணத்திற்கு, யாழ்ப்பாணம் புனித-மேரி கல்லூரியில் படிக்கும் 18 வயது மாணவருக்கு நேர்ந்த கதியைப் பார்ப்போம்:

“1988 மார்ச் 3, அன்று காலை சுமார் 9 மணிக்கு ஒரு ராணுவ வாகனம் எங்கள் வீட்டின் முன் வந்து நின்றது. அதிலிருந்து 6 இந்திய ராணுவத்தினரும் (இராணுவச் சீருடை) முகமூடி அணிந்த ஒருவரும் எங்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். ஒரு சிப்பாய் நான் அமர்ந்திருந்த அறைக்குள் வந்து என் தலைமுடியைப் பிடித்து தூக்கி முகத்தில் மூன்று குத்துக்களை விட்டான். பின்னர் அறையை விட்டுத் தரதரவென்று முகமூடியணிந்த மனிதருக்கு முன்னால் இழுத்து வரப்பட்டேன். அவர் ‘ஆம்’ என்பதுபோல் தலையசைக்க என்னை கல்வியங்காடு இராணுவ முகாமிற்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.

அங்கு ஓர் அறையில் என்னைத் தள்ளிப் பூட்டினர். முகமூடியணிந்த மனிதரும் அதே அறைக்குள் அடைக்கப்பட்டார். அவர் இப்பொழுது முகமூடி அணிந்திருக்கவில்லை. எந்தப் போராளி குழுக் களுடனும் தொடர்பில்லாத என்னை ஏன் காட்டிக் கொடுத்தீர்கள் என அவரிடம் கேட்டபொழுது, இந்தியப் படையினரின் தீவிர அடியுதைகளுக்கு பலியானதால் யாராவது ஒருவரைக் காட்டிக் கொடுக்கும் கட்டாயத்திற்குதான் ஆட்பட்டதாகக் கூறினார். மறுநாள் ஆறு இந்தியப் படையினர் என் அறைக்குள் வந்து அடித்தும் உதைத்தும் கைகளை முறுக்கியும் என் தலையை சுவற்றில் முட்டியும் சித்திரவதை செய்தனர். மயக்கம் போட்டு விழும்வரை இந்த சித்திரவதை தொடர்ந்தது. மயக்கம் தெளிந்தவுடன் மீண்டும் தாக்க ஆரம்பித்தனர். முகமூடி மனிதருக்கு முன்னால் நடந்த இந்தத் தாக்குதல் சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்றது.

மார்ச் 5 ஆம் தேதியன்று என்னுடைய சாதாரண உடைகளைக் களைந்துவிட்டு இராணுவ சீருடையை அணிந்துக் கொள்ளும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டது. நான் இராணுவ சீருடையை அணிந்து கொண்டவுடன் கல்வியங்காடு இந்திய இராணுவ சென்ட்ரி தளத்தில் நிறுத்தப்பட்டு, விடுதலைப் புலிகளையும், அவர்களது ஆதரவாளர் களையும் அடையாளம் காட்டும்படி நிர்ப்பந்திக்கப் பட்டேன். நான் யாரையும் சுட்டிக்காட்டவில்லை.

காவலில் சித்திரவதையும் இறப்புகளும்

ஏராளமான கைதிகள் நீண்டகாலமாக வெளியுலகத் தொடர்பின்றி அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். கைதிகள் மீது சிறீலங்கா இராணுவமும், இந்திய அமைதிப்படையும் கடுமையான சித்திர வதையைப் பிரயோகிப்பதாக பல தகவல்கள் கிடைத்துள்ளன. வடக்கிலும், கிழக்கிலும் காவலில் வைக்கப்பட்ட பலர் சித்திரவதையின் காரணமாக இறந்திருக்க வேண்டும் என்று அம்னஸ்டி இன்டர்நேஷனடல் நம்புகிறது.

Pin It