siru theivangal

தமிழக மக்கள் தம் அன்றாட வாழ்வினில் பல்வேறு நம்பிக்கைகளையும் சடங்குகளையும் கடைபிடித்துவருவது கண்கூடு. இவ்வாறான செயல்கள் கண்மூடித்தனமான மூடப்பழக்கங்கள் என்று வாதிடுவது ஒருபுறம் இருந்தாலும், நம்பிக்கைகளும் சடங்குகளும் தற்செயலாக ஒருவருக்கு ஏற்படும் இன்ப துன்ப நிகழ்வுகளைக் காரண காரியத்துடன் பொருத்தி, அது மற்றவர்க்குப் பாடமாக அறிவுறுத்தப்படுவது என்றே நாம் கருதவேண்டியுள்ளது. இந்நடவடிக்கைகள் உளவியல் சார்ந்த செயலாகவும் அமைகின்றன. அதாவது இவை ஒருவகையான முன்னறிவிப்பு உக்திகளாகும். இவற்றை அறிவியல் பூர்வமான உண்மைத்தன்மை கொண்டவையா? என்ற நோக்கில் ஆராய்வதை விட, சமூகவியல் கண்ணோட்டத்தில் ஆராய்வது பொருத்தமானதாகும்.

தனக்கு நேர்ந்த ஒன்று அடுத்தவருக்கு நேர்ந்துவிடக் கூடாது அல்லது தமக்கு ஏற்பட்ட நல்நிகழ்வுகள் குறித்து மற்றவருக்கு ஆற்றுப்படுத்தும் சமூகவியல் பார்வை கொண்ட செயல்களாகவே நம்பிக்கைகளும் சடங்குமுறைகளும் அமைகின்றன. ஆதித் தமிழர்களின் உயரிய மனப்பாங்கினையே இச்செயல்கள் காட்டுகின்றன. உலகின் தொல்குடிச் சமூகக் குழுக்களிடம் இவ்விதமான நம்பிக்கைகளும் சடங்குகள் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். குறிப்பாக இலெமூரியாவுடன் தொடர்புபடுத்திப் பேசப்படும் ஆப்பிரிக்கப் பழங்குடியினரிடம் இவ்வழக்கங்கள் வேரூன்றிக்காணப்படுகின்றன. சங்ககால மக்களிடம் வழக்கிலிருந்த நம்பிக்கைகளையும் சடங்குகளையும் விவரிப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.  

நம்பிக்கைகள் குறித்த சொல்லாடல்கள் 

எதார்த்த வாழ்க்கையில், பின்னர் நிகழவிருப்பனவற்றை முன்கூட்டியே அறிந்திட மக்கள் பெரிய அளவில் ஆவல் கொண்டிருப்பதனை இன்றளவும் காணமுடிகின்றது. இன்றைக்கு வழக்கத்தில் இருக்கும் 'சகுனம்'   என்ற சொல்லானது சங்ககாலத்தில் புள்’, ‘நிமித்தம்’ (குறுந் 140:1-3), (தொல் பொருள் 39:1-4) என வழங்கப்பட்டது. சிற்றூர்களில் குறிகேட்டல் , சகுனம் பார்த்தல், மந்திரித்தல், நேர்த்திக்கடன் செலுத்துதல் போன்ற செயல்கள் யாவும் காலங்காலமாக நம்பிக்கைகளால் உருப்பெற்றவையேயாகும். சமயம், சடங்கு, நம்பிக்கைகள், அவை சார்ந்த கருத்தாடல்களையும், விரிந்த நிகழ்வுக் களத்தையும் தன்னகத்துக் கொண்டுள்ளது சங்க இலக்கியம். மனிதன் தோன்றிய காலந்தொட்டு, மனித மனதில் நம்பிக்கைகள் மிக ஆழமாக வேரூன்றிக் கூட்டு நனவிழியாக, சமூகத்தை வழிநடத்தும் காரணியாக வளர்த்தெடுக்கப்பட்டு வந்துள்ளன என்பதற்குச் சங்க இலக்கியம் கட்டியம் கூறுகின்றது"1 என்ற கருத்தினடிப்படையில் பார்க்கும் போது, சங்ககாலச் சிற்றூர்களில் வாழ்ந்த மக்களிடம் பல்வேறு நம்பிக்கைகளும் அவை சார்ந்த சடங்குகளும் வழக்கத்தில் இருந்ததைக் காணமுடிகிறது.

ஒவ்வொரு உயிரினமும் தன்னைப் பாதுகாக்கும் உணர்வுடனே நாளும் வாழ்ந்து வருகின்றன. அப்படியிருக்கையில் ஆறறிவு கொண்ட மனிதன், தன் இறப்பு குறித்த அச்ச உணர்வு அதிகம் கொண்டவனாகவே வாழ்கின்றான். ஆகவே இறப்பு குறித்த விழிப்பு அவனுள் பிறப்பு முதலே குடிகொண்டுவிடுகின்றது. அதன்பொருட்டு ஒவ்வொரு செயலிலும் ஒரு நம்பிக்கைக் குறியீட்டினைக் காலங்காலமாக மனிதன் பயன்படுத்தி வருகின்றான். சங்ககால இனக்குழு மக்கள் இவ்வாறான நம்பிக்கைகள் பலவற்றைக் கொண்டிருந்தனர் என்பதைச் சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். 

வேதின வெரிநின் ஓதி முதுபோத்து 

  ஆறுசெல் மாக்கள் புள்கொள பொருந்தும்… " (குறுந் 140:1-2) 

இப்பாடலில் பாலை நிலத்தில் வழி செல்வோர் அங்கு மரங்களில் காணப்படும் ஓதி (ஓதி: ஓணான் எனப்படும் பல்லிவகை–( பச்சோந்தி)) குறித்த ஒரு நம்பிக்கையினைக் கொண்டிருந்ந்தனர். அதாவது தான் செல்லும் பயணத்தின் இடையில் ஆண் ஓதியைக் காணின் அது தீய நிமித்தம் என நம்பினர். அதன்பொருட்டுத் தம் பயணத்தைத் தவிர்ப்பர். அதனை மீறி பயணம் மேற்கொண்டால், அது தீமையில் முடியும் என்பது அவர்களது நம்பிக்கையாகும். இவ்வாறாக உயினங்களை வைத்துப் பல நம்பிக்கைகள் மக்கள் மத்தியில் உலாவந்தன. பின்வரும் பாடலும் அதற்குத் தக்க சான்றாகும்;

     “இடூஉ ஊங்கண் இனிய படூஉம் 

     நெடுங்சுவர்ப் பல்லியும் பாங்கில் தோற்றும் 

     மனைமா நொச்சி மீமிசை மாச் சினை 

     வினைமான் இருங்குயில் பயிற்றலும் பயிற்றும்..." (நற் 246:1-4) 

பல்லி எழுப்பும் ஒலியும், குயில் கூவும் ஒலியும் நல்ல நிகழ்வு வரப்போவதனை அறிவிக்கும் நிமித்தம் எனக் கருதினர். கண்கள் துடிப்பதை வைத்து நன்மை தீமை நிகழப்போவதை உணர்ந்தனர். பெண்களின் இடக்கண் துடிப்பின் (ஐங்-218 , பாலைக்கலி-10) அது நல்ல நிகழ்வின் அறிகுறியாகக் கருதப்பட்டது. பிறர் தற்செயலாகப் பேசிக்கொள்ளும் பேச்சினை வைத்துக் கணிப்பது 'விரிச்சி' எனப்பட்டது. பயணத்தின் போது இடையில் தற்செயலாக நிகழும் காட்சிகளைக் காண நேரும் போது, அந்நிகழ்வுகளைக் கொண்டு கணிப்பது நிமித்தங்கள் எனச்சுட்டப்படுகிறது. இதில் நல்நிமித்தமும்(நல்ல சகுனம்), தீநிமித்தமும் உண்டு(கெட்ட சகுனம்). 

நாகரீகத்தின் உச்சத்தில் வாழ்ந்துவருவதாகக் கருதிக்கொண்டிருக்கும் இன்றைய சமூகத்திலும் இவ்வாறான நம்பிக்கைகள் இருப்பதனைப் பார்க்கும் போது நம்பிக்கைகள் எந்த அளவிற்கு மக்களிடையே தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன என்பதனை உணரமுடிகின்றது. ஒருசில நிகழ்ச்சிகள் பரம்பரை வழக்கமாக வழிவழி வந்து, சடங்குகளாகவும் மாறிவிட்டன. முதியோர்களும் சான்றோர்களும் நடைமுறை வழக்கங்களை மக்களுக்கு அறிவித்தனர்"2 இக்கருத்து நம்பிக்கைகள் மற்றும் சடங்குகள் வளர்ந்த விதம் குறித்து விளக்குவதாக அமைகின்றது. ஆரம்ப காலத்தில் இயற்கையினைக் கண்டு பெரிதும் பயந்த மனிதன், அவற்றால் தன் உயிருக்குத் தீங்கு நேருமோ என அஞ்சி, என்னை ஒன்றும் செய்து விடாதே , என்னை காப்பாற்று என்று அவற்றைப் பணிந்து தொழுது வணங்கினான். தவிர, ஆபத்து விளைவிக்கும் கொடிய காட்டு விலங்குகளான சிங்கம், புலி, யானை, கொடிய நச்சுப் பாம்புகள் முதலியவற்றையும் அச்சத்தால் வணங்கினான். ஆகவேதான் சிறு தெய்வங்களை விலங்குகளோடு சேர்த்து (கருப்பசாமி-நாய்) வணங்கினான். இது இனக்குழு வாழ்வினின்று பெறப்பட்ட எச்சமாகவே கருதமுடிகிறது. சங்ககாலத்திலும் இவ்வாறான வழிபாட்டு முறைகள் நிலவியதனைக் காணமுடிகின்றது.  

கரந்து பாம்பு ஒடுங்கும் பயம்புமார் உளவே 

     குறிக் கொண்டு மரங் கொட்டி நோக்கி 

     செறிதொடி விறலியர் கைதொழுஉப் பழிச்ச 

     வறிது நெறிஒரி வலம்செயாக் கழிமின்"  (மலை: 199-202) 

பரலையுடைய பள்ள நிலத்தின் பரப்பிலே பாம்புகள் மறைந்து கிடக்கும் குழிகள் உள்ளன. அவற்றை மனத்தாலே குறித்துக் கொண்டு, அப்பாம்பு மனம் மகிழும்படி கையால் தொழுது வணங்கிச் செல்வீர்களாக, என்ற பாணனின் கூற்று இங்கு நோக்கத்தக்கதாகும். அச்சத்தை உண்டாக்கும் எதையும் மனிதன் தன்னினும் மேலான சக்கியாக எண்ணினான். காலப்போக்கில் அவற்றைத் தம்மைவிட உயர்ந்த ஆற்றல் படைத்தவை (தெய்வம்) என்று கருதி வணங்கினான். அணங்கு என்னும் சொல் சங்க இலக்கியங்களில் ஆங்காங்கே கையாளப்பட்டுள்ளன. அணங்கு என்பதற்கு, வருத்தம், அச்சம், ஆசை, மோகினி, அழகு, பெண், பேய்மகள், கொல்லிப்பாவை என்னும் விளக்கங்களை அகராதிகள் சுட்டுகின்றன.  

      “அணங்கெனும் பெயரே ஆசையும் அழகும் 

              வருத்தமும் கொலையும் ஐய னோயும் 

              தெய்வமும் தெய்வத்து வமைசொல் மாதுமாம்" ( வடமலைநிகண்டு, நூற்-10) 

காட்டுமிராண்டி நிலையில் இருந்து வளர்ந்து முன்னேறி நாகரிக நிலையை அடைந்த காலகட்டத்தில் மனிதன் அருவிகள், ஆறுகள், கடல்கள், காடுகள், மரங்கள், மலைகள் முதலிய இடங்களில் தெய்வம் உறைவதாக (வாழ்வதாக) நம்பினான். சங்க இலக்கியங்களில் ஆங்காங்கே அணங்குடைச் சிலம்பு, அணங்குடைச் சாரல், அணங்குடை நெடுங்கோடு, அணங்குடை நெடுவரை, சூருடைச் சிலம்பு. சூர்உறை வெற்பு போன்ற தொடர்கள் மலைகளில் தெய்வம் உறைவதாக மனிதன் நம்பியதைக் காட்டுகின்றன.  

சூருடைச் சிலம்பில் சுடர்ப்பூ வேய்ந்து 

                        தாம் வேண்டு உருவின் அணங்குமார் வருமே       

                        நனவின் வாயே போல துஞ்சுநர்க்  

                        கனவுஆண்டு மருட்டலும் உண்டே...."  (அகம் 158: 8-11)  

இப்பாடலில் தான் நினைத்தபடி உருமாறக்கூடிய பெண் தெய்வம் மலைதனில் உறையும் என்றும், அது கனவில் தோன்றி நிஜத்தில் நடப்பது போன்ற நிகழ்வுகளைக் காட்டி மயக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவைத்தவிர, ஆலமர கடவுள், எரிமருள் வேங்கை கடவுள், கடவுள் மரத்த முள், கடவுள் முதுமரம், கடம்பமர் நெடுவேள், நெடுவீழ் இட்ட கடவுள் ஆலம் முதலான சங்க இலக்கியத் தொடர்கள் யாவும் மரங்களில் தெய்வங்கள் (அச்சம் தரும் ஆவிகள் , குறிப்பாகப் பெண் ஆவிகள்) உறைவதாக மனிதர்கள் நம்பியதைக் கூறுகின்றன. அணங்குடை முந்நீர், சூருடை நனந்தலைச் சுனை, நிலைத்துறைக் கடவுள், நிறை சுனை உறையும் சூர்மகள் போன்ற தொடர்கள் அருவிகள், ஆறுகள், கடல்கள் முதலிய நீர்துறைகளிலும் தெய்வம் உறையும் என்று சங்ககால மக்கள் நம்பியதைக் குறிப்பனவாகும். 

பெருவரை அடுக்கம் பொற்பச் சூர்மகள் 

                        அருவிஇன் இனியத்து ஆடும்..."  (நற் 34:4-5)  

மேற்காணும் இப்பாடல் நீர் நிலையான அருவியில் சூர்மகள் எனும் தெய்வம் உறையும் என்று சங்ககால மக்கள் கருதியதை விவரிக்கின்றது. அணங்கு, சூர், சூர்மகள் முதலிய பெயர்களால் பெண்தெய்வங்கள் குறிக்கப்படுகிறன. சங்ககாலத்திற்குச் சற்று முந்தைய காலத்தில் இனக்குழு மரபு இருந்தது. எனவேதான் தெய்வங்கள் தனித்தனிப் பெயர்களால் குறிக்கப்படாமல் அணங்கு, சூர் முதலான பொதுப் பெயர்களால் குறிக்கப்பட்டன. அக்காலக்கட்டத்தில் நிலவிய சமூக அமைப்பே இதற்குக் காரணமாகும். இப்பெயர்கள் அனைத்தும் பெண்பாற் பெயர்களாக உள்ளன என்பது நம் கவனத்துக்குரியதாகும். ஆதிப் பொதுவுடமைச் சமூகம் பெண்ணின் தலைமையில் இயங்கியது என்பதற்கு இது சான்றாகும். பெண்ணே தலைவியாக இருந்து சமூகத்தை நிர்வகித்து வந்தாள். தாய் வழியாகவே வம்சாவளி குறிப்பிடப்பட்டது. அக்காரணத்தால் தான் தெய்வங்களின் பெயர்கள் பெண்பாற் பெயர்களால் குறிக்கப்பட்டன. பெண் சிறுதெய்வங்களின் கரங்களில் வைத்திருக்கும் திரிசூலம் எனும் ஆயுதம் வேளாண்மைக் கருவியே என்பதை மானிடவியலாளர்கள் விவரிக்கின்றனர். எனவே பயிர்த்தொழிலைக் கண்டறிந்தது பெண்கள்தான் என்று அறியமுடிகிறது.  

            மழைப்பொழிவு குறைந்து அருவிகளிலும் ஆறுகளிலும் நீர் வற்றி வறட்சி ஏற்பட்ட காலங்களில் நீரின் தேவைக்காக மழைபெய்வதாக | என்று மலைவாழ் குறவர்கள் மலையுறை தெய்வத்தை வேண்டுவர். மழை மிகுதியாக பெய்ததும் மழை போதும்;;; இ மேகம் மேலே போவதாக| என்றும் வேண்டிக்கொண்டார்கள். இதனை,

            மலை வான் கொள்க! என உயர் பலிதூஉய் 

            மாரி ஆன்றுமழை மேக்கு உயர்க! எனக் 

            கடவுட் பேணிய குறவர் மாக்கள் 

            பெயல் கண் மாறிய உவகையர் சாரற் 

            புனத்தினை அயிலும் நாட!..."  (புறம் 143: 1-5) 

என்னும் சங்கப்பாடல் வாயிலாக அறியமுடிகின்றது. இங்கு மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள் வெளிப்படுகின்றது. சில நேரங்களில் மனிதனது செயல்களில் தோல்வி ஏற்படுகையில் , அதற்கு ஏதேனும் ஒரு காரணம் கற்பிப்பது வழக்கமாக இருக்கும் ஒன்றுதான். குறிப்பாக, சிற்றூர் மக்களிடம் இதனைக் காணலாம். சங்ககாலச் சிற்றூர்களிலும் இது போன்ற நிகழ்வுகளைக் காணமுடிகின்றது. குறிஞ்சி நிலத்தில் மானின் மேல் அம்பெய்கிறான் கானவன். அவன் எய்திய அம்பு குறி தவறுகின்றது. தன் குறி தவறியதற்கு மலையுறை தெய்வத்தின் சினமே காரணம் என்று கருதி, அத்தெய்வத்தின் சினத்தைத் தணிப்பதற்காகப் பலியிட்டதனை அறிய முடிகின்றது. அணங்கு, சூர் என்னும் இப்பெயர்கள் துன்பம், அச்சம் என்னும் பொருள் தருவன ஆகும். அணங்கு என்றாள் துன்பம் தருபவள் என்று பொருள், சூர் என்னும் சொல்லுக்கு அச்சம் தரும் தெய்வப் பெண் என்பது பொருளாகும். பொதுவாக ஆண்களை அணங்கு சூர் போன்ற பெண் தெய்வங்கள் அச்சுறுத்தும் என்றும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. அச்சம் தரும் பெண் தெய்வங்களான அணங்கு, சூர் முதலியவற்றுக்கு பலி கொடுத்து அவற்றின் சினத்தைத் தணிக்க மனிதன் முயற்சி செய்துள்ளான். அதனைப் பின்வரும் பாடல் விவரிக்கின்றது. 

                        அமர்கண் ஆமான் அருநிறம் முள்காது 

                        பணைந்த பகழிப் போக்கு நினைந்து கானவன்  

                        அணங்கொடு நின்றது மலை வான் கொள்க எனக்  

                        கடவுள் ஒங்குவரை பேண்மார் வேட்டு எழுந்து  

                        கிளையோடு மகிழும் குன்ற நாடன்… "  (நற் 165:1-5) 

இவ்வாறு தெய்வத்தின் சினத்தைத் தணிப்பதற்காக அத்தெய்வங்களுக்கு பலியிட்டு வணங்கினர் என்ற செய்தியைச் சங்க இலக்கியங்களின் வாயிலாக அறியமுடிகின்றது. 

வழிபாட்டுக் குறியீடுகள் 

வழிபாடு எனும் போது ஏதேனும் ஒரு குறியீடு அவற்றில் இடம்பெற்றிருக்கும். வழிபடும் தெய்வங்களுக்கு உருவங்களைத் தவிர்த்தோ அல்லது ஏதேனும் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியோ வணங்குவர். சான்றாக, உலக நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்கள் சிலுவையினைத் தம் வழிபாட்டுக் குறியீடாகக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் வேல், சூலாயுதம் இந்து சமய மக்களின் குறியீடாக உள்ளன. சங்ககால மக்கள் நடுகல், சுறாமுள், போன்றவற்றை நட்டு வழிபட்டு வந்தனர் என்பதை அறிய முடிகின்றது. இவ்வழக்கம் இனக்குழுச் சமூகத்தின் தொடர்ச்சியாக அமைகின்றது. இதற்கான காரணங்கள் குறித்து ஆராயும் போது, “புராதன காலத்திய மக்கள் தம்மைச் சூழ்ந்துள்ள இயற்கைப் பொருட்கள் மற்றும் அவற்றின் இயக்கம், நிகழ்வு ஆகியவைப் பற்றிய அறிவுப்பூர்வமான புரிதல் அற்றவர்களாகவே விளங்கினர். ஆனால் அவை ஒவ்வொன்றையும் பற்றித் தம் அறிவுநிலைக்கு எட்டியவாறு காரணம் கற்பித்துக் கொண்டனர். இவ்வாறு காரணம் கற்பித்து, புற உலகப் பொருட்களைத் தம் விருப்பத்திற்கேற்ப இயக்கி, அவற்றின் தன்மைகளைப் பெருவதற்குச் சில உபாயங்களைக் கையாளத் தொடங்கினர்"3 எனும் இக்கருத்தினை ஆழ்ந்து நோக்க வேண்டியுள்ளது. சங்ககாலத்தினைப் பொருத்தமட்டில், மக்கள் தங்கள் வாழ்வியலோடு தொடர்புடைய வேட்டை, ஆகோள் போன்ற நிகழ்வுகளை முன்வைத்துச் சில வழக்கங்களை நடைமுறையில் கையாண்டு வந்ததை அறியமுடிகின்றது. அதாவது நெய்தல், நிலத்தில் மீன்பாடு (அதிகமாக மீன் அகப்படுதல்) வேண்டி நெய்தல் நில மக்கள் சுறா மீனின் கொம்பை நட்டு அதனைத் தெய்வமாக வணங்கினர் என்பதை: 

            சினைச் சுறவின் கோடு நட்டு  

            மனைச் சேர்த்திய வல் அணங்கினான்"  (பட்டின 86-87) 

என்ற சங்கப் பாடல் வரிகள் குறிப்பிடுகின்றன. இதனைத் தொழில்சார் மரபு அறிவு என்றும் கூறலாம். கடலில் சக்தி வாய்ந்த உயிரினமாகச் சுறாமீன் விளங்குகின்றது. ஆகவே அதனை வழிபட்டால் பலன் கிடைக்கும் என்று நம்பிக்கையினை இது குறிக்கின்றது. மேலும் கடலில் சுறாவேட்டை மேற்கொள்வது அக்காலத்தைய வழக்கமாக இருந்ததையும் நாம் அறிவோம், அவ்வாறு வேட்டையாடிய சுறாவின் எழும்பினை வணங்கியிருக்கலாம். மீனவர்களின் வாழ்வாதாரம் மீன்களே என்பதால் அதனை வணங்கியிருக்கலாம். தற்காலத்திலும் கூட நாகை மாவட்ட கடலோர மீனவர்களிடம் ஆங்காங்கே சுறாமுள் வழிபாடு தொடர்பான குறைந்தபட்ச எச்சங்கள் காணப்படுகின்றன. மேலும் சிந்துநதி பாயும் மக்ரான் கடற்கரையிலும், அந்தமான் தீவுகளிலும் சுறாமுள் வழிபாடு வாழும் மரபாகக் காணப்படுகிறது"4 என்கிற கூற்று தற்காலத்திலும் இவ்வழக்கம் நடைமுறையில் உள்ளதைக் காட்டுகின்றது. மேய்ச்சல் சமூகத்தவர்களான முல்லை நில மக்கள் பெண் எருமையின் கொம்பை நட்டு தெய்வமாக வணங்கிணர் என்பதையும் சங்க இலக்கியங்கள் சுட்டுகின்றன. பின்வரும் பாடல் அதனை விளக்கியுரைக்கின்றது:  

                        தருமணல் தாழப்பெய்து இல் பூவல் ஊட்டி 

                        எருமைப் பெடையொடு எமர் ஈங்கு அயரும்"  (கலி 114:13-14)  

பெண் எருமையின் கொம்பினை நட்டு அதனைத் தெய்வமாகப் பாவித்து வழிபடும் வழக்கம் முல்லைநில ஆயர்களிடையே இருந்துள்ளதையும் அறியமுடிகிறது. இவ்வழக்கம் காலம்காலமாக மரபுவழிப்பட்ட நம்பிக்கை சார்ந்த செயலாகவே நிகழ்ந்து வந்துள்ளதை உணரமுடிகின்றது. ஆகவே நம்பிக்கை மற்றும் சடங்குகள் சார்ந்த செயற்பாடுகள் ஆதிப்பொதுவுடைமைச் சமூகத்தின் எச்சங்களாக விளங்குபவையாகும். இதனைப் பண்பாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது மானுடவியல் ஆய்வுகளில் ஒன்றாகும்.  

குறிப்புகள்: 

1. பக்தவத்சல பாரதி, நா.செல்வராசு , இரா.சம்பத் (ப.ஆ)  

பண்பாட்டியல் நோக்கில் பண்டைத்தமிழர் சமயமரபுகள், ப-143.  

2.  மு.சண்முகம்பிள்ளை, சங்கத்தமிழர் வாழ்வியல் , ப-155. 

3.  ஆ.தனஞ்செயன், குலக்குறியியலும் மீனவர் வழக்காறும் , ப-189. 

4.  மேலது.,

- முனைவர் ஆ.பிரபு, தமிழ் உதவிப் பேராசிரியர், தூய நெஞ்சக் கல்லூரி, திருப்பத்தூர்