education at colony india1616-ஆம் ஆண்டு டேனிஷ் மன்னர் நான்காம் கிறிஸ்டியன் (Christian IV) இந்தியாவுடன் பிற நாடுகளுடன் வணிகம் செய்வதற்காக டேனிஷ் வணிகக்குழுமத்தை உருவாக்கினார். டேனிஷ் வணிகர்கள் இலங்கைப் பகுதியின் கடற்கரைப் பகுதிகளில் முதலில் வணிகம் செய்து வந்தனர். பிறகு, தமிழகக் கடற்கரைப்பகுதியான தரங்கம்பாடியை, 1620-ஆம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் விலைக்கு வாங்கினர். அது முதல் டேனிஷ் வணிகர்கள் தரங்கம்பாடியில் குடியேறினர். கிழக்கிந்திய பகுதிகளில் கிறித்தவச் சமயத்தைப் பரப்ப விரும்பிய டென்மார்க் அரசர் நான்காம் பிரெடிரிக் (Fredrick IV) ஆணையின் பேரில் தமிழகத்திற்குச் சமயப்பணி ஆற்ற சீகன்பால்கு (Ziegenbalg), ஹென்ரிச் புளம்சௌ (Heinrich Plutschau) ஆகிய இருவரும் அனுப்பப்பட்டனர். அவர்கள் 09.07.1706இல் அன்று தரங்கம்பாடிக்கு வந்தனர்.

ஐரோப்பியர் தொடங்கிய முதல் பள்ளி

தரங்கம்பாடிக்கு வந்த சீகன்பால்கு, தமிழ் மொழியைக் கற்றுக் கிறித்தவ சமயக் கருத்துக்களைப் பரப்பி வந்தார். அவர் சுதேசிகளின் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க விரும்பி, பள்ளி ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டார். பள்ளியைப் பற்றிய குறிப்புகளை அவர் எழுதிய கடிதம் மூலம் அறியமுடிகிறது. பள்ளிக்காக 1709-ஆம் ஆண்டு இடம் ஒன்றை விலை கொடுத்து வாங்கினார். கல்வி நிலையம் தொடர்பாக 19.10.1709இல் அவர் எழுதிய கடிதத்தில், “இக்கட்டிடத்திற்கு வந்தபின் ஆதரிப்பு சாலையிலிருந்து பிள்ளைகள் 44, தமிழ்ப்பள்ளிக்கூடத்தில் 3 கிருத்தவ உபாத்திமார்களிடம் 25 பிள்ளைகள் படித்தார்கள். போர்த்துகிஸ் பள்ளிக்கூடத்தில் 2 உபாத்திமார்களிடம் 16 பிள்ளைகள் படித்தார்கள். சில பிள்ளைகள் தையல் வேலையைக் கற்றுக்கொண்டார்கள். அச்சுப் புத்தகங்கள் இல்லாமையால் கோயிலுக்கும் பள்ளிக்கூடங்களுக்கும் வேண்டிய நூல்களைப் பிரதி செய்வதற்கு 7 கணக்குப் பிள்ளைகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார். சீகன்பால்கு குறிப்பிடும் இப்பள்ளியே ஐரோப்பிய கிறித்தவ சமயப்பணியாளர்களால் தமிழகத்தில் தொடங்கப் பட்ட முதல் பள்ளியாகும்.

பாடநூல்கள்

தமிழகத்தில் அமைந்த முதல் பள்ளிக்கூடத்தில் தமிழ் வகுப்புகளும், போர்த்துகீசிய வகுப்புக்களும் இயங்கியுள்ளன. தையல் வேலை சுதேசிகளின் மொழியிலேயே கற்பிக்கப்பட்டது. தரங்கம்பாடியில் 1713-ஆம் ஆண்டுதான் அச்சகம் தோற்றுவிக்கப்பட்டது. இப்பள்ளிகளுக்குத் தேவையான நூல்கள் அச்சிடப்படவில்லை. அதனால் சுவடிகளே நூல்களாகப் பயன்படுத்தப்பட்டன. ஆகவே, கணக்குப் பிள்ளைகள் என சீகன்பால்குவால் குறிக்கப்படுவோர் சுவடிகளைப் படியெடுக்கும் பணிக்காக அமர்த்தப்பட்டவராவார்கள்.

பள்ளியின் செயல்பாடுகள்

சீகன்பால்கு 1713-ஆம் ஆண்டு ஏப்ரலில் கடிதமொன்றில் தரங்கம்பாடியில் செயல்பட்ட கல்விநிலையங்கள் பற்றிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. 1713-ஆம் ஆண்டில் தரங்கம்பாடியில் ஐந்து பள்ளிகள் செயல்பட்டன. அப்பள்ளிகளில் பயின்ற மாணவர்கள், பணியாற்றிய ஆசிரியர்கள் எண்ணிக்கை வருமாறு:

school in colonial india

வகுப்புகள் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலையில் 2 மணி முதல் 6 மணி வரையிலும் நடத்தப்பட்டுள்ளன. வெள்ளிக் கிழமைகளில் மாலை 6 மணி முதல் 7 மணி வரை, ஆசிரியர்கள், உபதேசிமார், கணக்குப்பிள்ளைகள்(பாடநூல் படியெடுப்பவர்கள்) பங்கேற்கும் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இக் கூட்டங்களில் சமயப் பணியாளர்கள் ஆசிரியர்களுக்குக் கல்வி தொடர்பான ஆலோசனைகளை வழங்கினர். தரங்கம்பாடியைத் தொடர்ந்து சென்னையிலும் பள்ளிகளைத் தொடங்க சீகன்பால்கு முயன்றார்.

சென்னையில் பள்ளிகள்

தரங்கம்பாடியில் செயல்பட்டு வந்த சீகன்பால்கு கிறித்தவ அறிவு பரப்பும் சங்கம் (Society for Promotion of Christian Knowledge) என்ற அமைப்பை 1710-ஆம் ஆண்டு தொடங்கினார். இவ்வமைப்பின் சார்பில் சென்னையில் 1711-இல் இரு கல்விநிலையங்களைத் தொடங்க, கிழக்கிந்திய வணிகக்குழுமத்திடம் அனுமதி வேண்டப்பட்டது. இக்காலக்கட்டத்தில் கிழக்கிந்திய வணிகக் குழுமம் பழைய பிரிவு, புதிய பிரிவு என இரு பிரிவுகளாகச் செயல்பட்டு வந்தது. இந்தப் பிரிவுகள் இணைக்கப்பட்டு 1711-ஆம் ஆண்டு ஐக்கியக் கிழக்கிந்திய வணிகக்குழுமம் (United Company of Merchants Trading to East India) தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் விதிகளில் கொத்தளங்களிலும் (Garrisons) தொழிற்சாலைகளிலும் பள்ளி ஆசிரியர்களை இணைத்துக் கொள்வது என்ற புதிய விதி சேர்க்கப்பட்டது. இயக்குநர்கள் இவ்விதியை 1712-ஆம் ஆண்டு முதல் ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்தனர்.

பள்ளிகளைத் தொடங்க கி.அ.ப.சங்கம் 1711-ஆம் ஆண்டு இசைவு வேண்டியதைக் கிழக்கிந்திய வணிகக்குழுமம் தனது புதிய விதியின்படி ஏற்றுக்கொண்டது. மேலும் பள்ளி தொடங்க அனைத்து உதவிகளையும் செய்வதாக 1713-ஆம் ஆண்டு உறுதியளித்தது. இதற்கிடையில் அக்டோபர் 1715-ஆம் ஆண்டு சென்னையில் குடியேறிய ஆங்கிலேயர்களின் கூட்டத்தில் அவர்களுக்கென ஒரு பள்ளி தொடங்க முடிவு எடுக்கப்பட்டது. அக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு வருமாறு:

“ஆண்குழந்தைகளுக்கு எழுதவும் படிக்கவும் (To read) கணக்குகள் (Accounts) மற்றும் அவர்கள் எந்தத் துறை கல்வி கற்பதில் ஆர்வமாக இருக்கிறார்களோ, அந்தத் துறையில் கல்வி அளிக்கலாம். பெண் குழந்தைகளுக்குப் படிக்கவும், வீட்டுவேலைகள் தொடர்பான கல்வி வழங்கலாம்.”

சமயப் பணியாளர்களின் பள்ளிகள்

கிழக்கிந்திய வணிகக்குழுமம் அனுமதியளித்ததன் விளைவாக, கிரண்டலர் (Grundler) என்ற சமயப் பணியாளர் சென்னையில் பள்ளிகளைத் தொடங்குவதற்கான திட்டவரைவை 1717-ஆம் ஆண்டு கிழக்கிந்திய வணிகக்குழுமத்திடம் அளித்தார். அவர் அளித்த திட்டவரைவின் அடிப்படையில் ஆங்கிலேயர் வசிக்கும் பகுதிகளில் போர்த்துக்கீசிய பள்ளி ஒன்றையும், சுதேசிகள் வசிக்கும் பகுதிகளில் தமிழ்ப்பள்ளி ஒன்றையும் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுவே சுதேசிகளான தமிழர்களுக்குக் கிறித்தவச் சமயப் பணியாளர்களால் சென்னையில் தொடங்கப்பட்ட முதல் கல்வி நிலையமாகும். அதே ஆண்டு கடலூரில் கிரண்டலர் இன்னொரு பள்ளியையும் தொடங்கியுள்ளார்.

கல்விமுறை

தரங்கம்பாடியைத் தொடர்ந்து, சென்னையிலும், கடலூரிலும் பள்ளிகளைத் தொடங்கிய கிறித்தவச் சமயப் பணியாளர்கள், மொழிப்பாடம், தமிழ் இலக்கியம், நிகண்டுகள், ஐரோப்பியக் கணிதம் ஆகியவற்றைக் கற்பித்துள்ளனர்.

இப்பள்ளிகளில் குழந்தைகளின் தாய் மொழியிலேயே கல்வி அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் தமிழும் பயிற்றுமொழியாக இடம் பெற்றது.

பள்ளியில் முதன் முதலில் விலையற்ற உணவு

சீகன்பால்கு காலத்தில் 2 விழுக்காட்டினரே எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தனர். அக்காலக்கட்டத்தில் கோயில்களில் திண்ணைப் பள்ளிகள் இயங்கி வந்தன. 1707-ஆம் ஆண்டில் போர்த்துக்கீசியருக்கு ஒரு பள்ளி, புளேச்சோவின் மேற்பார்வையில், மற்றொரு பள்ளி சுதேசி ஆசிரியரைக் கொண்டு சீகன்பால்கு மேற்பார்வையில் தமிழர்களுக்கான ஒரு பள்ளியும் ஆரம்பிக்கப்பட்டது. இது 28.12.1707இல் தொடங்கப்பட்டது. இரண்டு பள்ளிகளில் படித்தவர்களுக்கும் உணவு, உடை, குடிநீர் மற்றும் நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டன. சொல்லப் போனால் முதன்முதலில் விலையற்ற உணவளித்து கல்வி போதித்தது இதுவே என்று எண்ண இடமுண்டு.

இதன் பிறகே அமெரிக்காவைச் சேர்ந்த கர்னல் ஆல்காட் என்பவரால் 1902-ஆம் ஆண்டு சென்னை அடையாறில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் தொடங்கப்பட்ட ஆல்காட் பள்ளியில்தான் மதிய உணவு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. வரலாற்றை மேலும் பார்க்கும்போது குறிஞ்சி ரெங்கசாமி ஐயங்கார் என்ற ஆசிரியர் 1918-ஆம் ஆண்டில் ஏழைப் பிள்ளைகளுக்காக சென்னை தியாலாஜிகல் கல்லுரியில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பிறகு மதுரையில் சௌராஷ்டிரா சமுதாயம் நடத்திய ஒரு பள்ளியில் 1920-ஆம் ஆண்டில் மதிய உணவு அறிமுகப்படுத்தப்பட்டது. 1951-ஆம் ஆண்டு கல்வி வள்ளல் காமராசர் ஆட்சிக்காலத்தில் சுதந்திரத்திற்குப் பிறகு மதிய உணவுத் திட்டம் தமிழக ஏழை மாணவர்களுக்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்தது. பிறகு வந்த ஆட்சியாளர்களும் இதைத் தொடர்ந்தனர்.

கட்டணம் இல்லாப் பள்ளி

சீகன்பால்கு பள்ளிகளைப் பற்றி 1717 ஆகஸ்ட் 16-ஆம் நாள் எழுதிய அறிக்கையில் சீகன்பால்குவிற்குப் பின்னர் மதபோதனை மேற்கொண்ட கிரண்டலர் என்ற பாதிரியார், “எழுதவும் படிக்கவும் கணக்குச் செய்யவும் இங்குக் கற்றுக் கொடுத்தனர். அத்துடன் தமிழ்க் கவிதைகள், விவிலியம், கிறித்தவ இறையியல், போர்த்துக்கீசிய மொழி ஆகியனவும் இங்குக் கற்றுக் கொடுக்கப்பட்டன. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குக் கட்டணம் ஏதும் கிடையாது. ஐரோப்பிய கிழக்கிந்தியக் கம்பெனிகளிலும், ஐரோப்பிய வணிகர்களிடமும் வேலைவாய்ப்பு பெற இது உதவியது” என்று குறிப்பிட்டுள்ளார்.

கந்தல் பள்ளி

இந்நிலையில் தியாசபிகல் சொசைட்டி அன்னிபெசண்ட் கொண்டிருந்த கருத்தைக் கவனத்தில் கொள்வது அன்றைய சீகன்பால்குவின் தொண்டை சீர்தூக்கிப் பார்க்க உதவும்.

“இங்கிலாந்தில் ஏழை மக்களுக்கான ‘கந்தல் பள்ளிகள்’ போன்று இங்கும் உருவாக்கி அதில் ஒடுக்கப்பட்டவர்களின் பிள்ளைகளைப் பயிலச் செய்ய வேண்டும்.” இக்கருத்திற்கும் சீகன்பால்குவின் சமூகப் பார்வைக்கும் சமத்துவக் கருத்தில் எவ்வளவு மாறுபாடு?

பள்ளியில் புகுந்தது அறிவியல்

1725-ஆம் ஆண்டுவாக்கில் தரங்கம்பாடியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இருபத்தோரு பள்ளிக்கூடங்கள் இருந்தன. இவற்றில் 500 மாணவர்கள் கல்வி பயின்றனர். இப்பள்ளிகளில் முந்தைய தமிழ்ப் பள்ளிக் கூடங்களைப்போல் இல்லாது வேறுபட்டு புவியியல், வரலாறு, நவீன கணிதம், அறிவியல் என்று புதிய அறிவுத் துறைகளில் பாடங்கள் முதன் முதலாகக் கற்றுக்கொடுக்கப்பட்டன. மொழி, சமயம் என்ற எல்லைகளைத் தாண்டிய கல்வி மக்களுக்குக் கிடைத்தது. இதனடிப்படையில் புதிய அறிவுத்துறை தொடர்பான பாடநூல்களும் உருவாயின.

கிறித்தவர்கள் நடத்திய பள்ளிகளில் ஜாதித்தடை ஏதுமில்லை. மேலும், ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி முன்னேற்றத்தைக் குறிக்கோளாகக் கொண்ட பள்ளிகள் சிலவற்றையும் தோற்றுவித்தனர்.

தமிழில் ஐரோப்பிய எண்கணிதம்

ஓலைச்சுவடியில் மரபுசார்ந்த அறிவியலைத் தமிழர்கள் எழுதியது ஒருபுறமிருக்க சீகன்பால்கு பள்ளிக் குழந்தைகளுக்காகத் தாம் தாய்மொழியில் கணித நூலை ஓலைச்சுவடிகளில் எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார் (C.S.Mohanavelu,p. 148).

ஓலைச்சுவடியில் இருந்த இந்நூல் 1863இல் அச்சிடப்பட்டது. தரங்கையில் அச்சிடப்பட்ட இந்த 31 பக்க கணித நூலின் தலைப்பு ‘Tamil First Book of Mental Arithmetic’என்பதாகும். ஐரோப்பிய கணித அறிவியலின் ஒரு பகுதியான எண்கணிதத்தை 31 பக்கத்தில் முதலில் தமிழில் வெளியிட்ட பெருமை சீகன்பால்குவைச் சாரும் (C.S.Mohanavelu,p. 148).

தமிழகத்தில் செயல்பட்டு வந்த கிறித்தவப் பள்ளி மாணவர்களுக்குக் கணிதத்தில் ஒரு பிரிவான வடிவ கணிதத்தைக் கற்பிக்க சமயப் பணியாளர்கள் வடிவ கணிதக் கருவிப் பெட்டிகளை (Geometry Boxes) ஐரோப்பாவிலிருந்து வரவழைத்துள்ளனர். கிறித்தவ சமயப் பணியாளர்களின் குறிப்புகள் வழி பெறப்படும் இத்தகவல்கள் ஐரோப்பிய கணிதத்தின் சில பகுதிகள் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே தமிழ் வழியில் கற்பிக்கப்பட்டதை உறுதி செய்கின்றன.

பெண் கல்வி - முதலாவது பெண்கள் பள்ளிக்கூடம்

“அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு” என்பது தமிழர்களின் முதுமொழி. பெண்களுக்குக் கல்வி அவசியம் இல்லை என்பது இதன் சாரம். ஆனால், இதற்கு மாறாக சீகன்பால்கு, தான் தரங்கை வந்த 6 மாதத்திற்குப் பிறகு தமிழ்ப் பெண்களுக்காகத் தங்கும் வசதியுடன் 28.10.1707இல் பள்ளியை ஆரம்பித்தார். இதுவே இந்தியாவில் தொடங்கப்பட்ட முதலாவது கிறித்தவப் பள்ளி. இவர்களுக்குத் தங்கும் வசதியுடன் உணவு, உடை ஆகியன வழங்கப்பட்டன. இத்துடன் பள்ளியில் தங்காது படித்த பெண்களுக்கும்கூட உணவும் உடையும் வழங்கப்பட்டன. இதே ஆண்டில் பெண்களுக்குத் தையல் பயிற்சியும் குடும்பம் நடத்தும் திறமையும் ஒரு விதவையின் மேற்பார்வையில் போதிக்கப்பட்டன.

பைபிள் உமன்

பெண் கல்வி வரலாற்றைத் தொடர்ந்து பார்க்கும்பொழுது, “விவிலியத்தைப் பெண்களிடம் அறிமுகம் செய்யும் முயற்சியில் இறங்கிய சீர்திருத்தக் கிருத்தவ சபை வேதாகம மாது (பைபிள் உமன்) என்ற பெயரில் சில பெண்களைப் பணியில் நியமித்தது. வீடு வீடாகச் சென்று சிறுமிகள் மற்றும் இளம் பெண்களுக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுப்பது அவர்களின் முதற்பணியாகும். இவர்கள் கல்வியைக் கற்ற பின்னர் அவர்களுக்கு விவிலியத்தை அறிமுகம் செய்வது இவர்களது இரண்டாவது பணியாகும். (ஆ.சிவசுப்பிரமணியன், கிறித்தவமும் தமிழ்ச் சூழலும், ப.39) இதனைப் பார்க்கும்பொழுது சீர்த்திருத்த கிறித்தவம் சமயப் பரப்பலுடன் பெண் கல்விக்குக் கொடுத்த முக்கியத்துவத்தையும் அறிய முடிகிறது.

மரபு சார்ந்த மருத்துவக் கல்வி

ஐரோப்பிய அறிவியலைப் பள்ளி மாணவர்களுக்குக் கற்பித்த சமயப் பணியாளர்கள் தமிழகத்தில் இருந்த மரபு சார்ந்த மருத்துவத்தையும் கற்பிக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளதை அவர்களின் நிலைய நாட் குறிப்பேடுகள் (Station Diaries) வழி அறிகிறோம். 26.06.1712 நிலைய நாட் குறிப்பில் காணப்படும் பின்வரும் குறிப்பு மரபு சார்ந்த மருத்துவர்களுக்கான பணிகளை விளக்குகிறது.

  1. குழந்தைகள் மற்றும் திருச்சபை உறுப்பினர்களுக்கு (மக்களுக்கு) நாட்டு மூலிகைகளைக் கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும்.
  2. திருச்சபையில் படித்த மூத்த சிறுவர்களுக்கு நாட்டு மருத்துவர் (Native Medical Author) ஒருவரைப் பற்றி தினம் ஒரு மணி நேரம் விளக்கவேண்டும்.
  3. ஒவ்வொரு திங்கட்கிழமையும் திருச்சபைக் குழந்தைகளைக் கிராமப்புறக் காடுகளுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு மூலிகைகளை அறிமுகப்படுத்தவேண்டும். மூலிகைகளை எடுத்து வந்து திருச்சபைக் கட்டடத்திலேயே ஒரு சிறிய அறையில் தாவரப் பாதுகாப்பகம் (Herbarium) ஒன்று அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும். அவசியம் நேரும்போது அந்த மூலிகைகளிலிருந்து மருந்துகளைப் பிழிந்தெடுத்துக் கொள்ளும் வகையில் அவர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும்.
  4. தமிழ் மருத்துவச் சுவடிகளில் குறிப்பிட்டுள்ள மருந்துகளைப் பல்வேறு பகுதிகளிலிருந்து சேகரித்துக் கொண்டு வந்து இந்தத் தாவரப் பாதுகாப்பகத்தில் வைத்து, அவற்றைத் தயாரிக்கும் மற்றும் உபயோகிக்கும் முறைகளை அச்சிறுவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.
  5. ஆசிரியர் தம்முடைய ஓய்வு நேரங்களில் தமிழர்களிடமிருந்து தமிழ் மருத்துவ ஓலைச் சுவடிகளைப் பெற்று அவற்றைப் படி எடுக்க வேண்டும். (C.S.Mohanavelu 1993:132).

கிறித்தவச் சமயப் பணியாளர்கள் மரபுசார்ந்த மருத்துவத்தை அனைத்துப்பிரிவு மாணவர்களுக்கும் கற்பிக்க முயற்சிகள் மேற்கொண்டனர். ஏனெனில் இந்திய, தமிழ்ச்சூழலில் மரபுசார்ந்த அறிவியல் குலவழி, குடும்பவழியாகவே கற்பிக்கப்பட்டு வந்தது. மரபு சார்ந்த அறிவியலை, ஐரோப்பிய அறிவியல் முறைகளுக்கு உட்படுத்தி வளர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை இக்குறிப்புகள் வாயிலாக அறிகிறோம். இம்முயற்சி கீழ்க்காணும் இரு தன்மைகளைக் கொண்டிருந்தது. ஐரோப்பியக் கணித அறிவியலைத் தமிழ்வழியில் கற்பித்தல் மரபுசார்ந்த மருத்துவ முறைகளை ஐரோப்பிய அறிவியல் தொழில்நுட்பங்களின் பயன்பாட்டோடு மேம்படுத்துதல்.

சுதேசிகளின் பள்ளிகள்

கிறித்தவச் சமயப் பணியாளர்கள் தமிழகத்தில் கல்விநிலையங்களைத் தொடங்கியதற்கு முன்பாகச் சுதேசிப் பள்ளிகள் இயங்கிவந்தன. சுதேசிப் பள்ளிகள் என்பவை திண்ணைப் பள்ளிக்கூடங்களே. கிறித்தவச் சமயப் பணியாளர்கள் தங்கள் கல்வி நிலையங்களைத் தொடங்கி நடத்தி வந்த காலகட்டத்திலும் இப்பள்ளிகள் தொடர்ந்து செயல்பட்டு வந்தன. இக்கல்விமுறையின் செயல்பாட்டை சுதேசிக்கல்வி முறை (Native Education) எனலாம். இக்கல்வி நிறுவனங்கள் பற்றிய குறிப்புகள் சமயப் பணியாளர்களின் நாட்குறிப்புக்களில் இடம்பெற்றுள்ளன. சீகன்பால்குவின் 11.04.1708 ஆம் ஆண்டு நாட்குறிப்பில், “சுதேசிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பல்வேறு நூல்களை மனப்பாடம் செய்து கல்வி கற்றனர். இளம்பள்ளிக் குழந்தைகளால் மனப்பாடம் செய்யப்பட்ட நூல் உலக நீதியாகும்.” (C.S.Mohanavelu 1993:170) என்ற செய்தி இடம் பெற்றுள்ளது.

தஞ்சை மராட்டிய மன்னர்களின் காலத்தில் இருந்த கல்விமுறையை மராட்டிய மொழி மோடி ஆவணங்கள் விளக்கி நிற்கின்றன. நவ வித்யாகலாநிதி சாலை என்ற பெயருடைய கல்வி நிலையம் 1785-ஆம் ஆண்டு தஞ்சை அரண்மனையில் இயங்கியுள்ளது.

சுதேசிப் பள்ளிப் பாடநூல்கள்

தமிழகத்தில் இருந்த சுதேசிக் கல்வி நிலையங்களைப் பற்றியும், பாட நூல்களைப் பற்றியும் உ.வே.சாமிநாதையர் கருத்து தெரிவிக்கும்போது, “பண்டையக் காலத்தில் தமிழ்நாட்டில் ஊர்கள்தோறும் பள்ளிக்கூடங்கள் இருந்தன. திண்ணைப் பள்ளிக்கூடங்களென்னும் பெயரால் அவை வழங்கப்பெறும். அங்கே தமிழ் நூல்களைப் படித்து இன்புறுதற்குரிய அறிவு பெறுவதற்குக் கருவிகளாகிய நிகண்டு, நீதிநூல்கள், பிரபந்தங்கள் முதலியன கற்பிக்கப்பட்டன. கணிதத்துக்கு அடிப்படையான எண்சுவடி முதலியவற்றையும் கற்பித்தனர். அவற்றின் உதவியால் மிகச்சிறிய பின்னங்களையும் அமைத்துக் கணக்கிடும் ஆற்றல் மாணாக்கர்களுக்கு உண்டாகும். குடும்பத்துக்கு வேண்டிய வைத்தியமுறைகளும், நாள் பார்த்தல், சாதகம் பார்த்தல் முதலிய சோதிட நூல்வழிகளும், ஆலய வழிபாட்டு முறை, கலாசாரங்கள் முதலியனவும், ஞாபக சக்தியை வளர்ப்பதற்குரிய பயிற்சிகளும் கற்பிக்கப்பட்டன,” (உ.வே.சாமிநாதையர் 1986:5) எனக் குறிப்பிடுகிறார்.

தமிழகத்தில் இருந்த கல்விநிலையங்களில் தமிழ்மொழி, இலக்கிய இலக்கணங்கள், மரபுசார்ந்த கணிதம், மரபுசார்ந்த மருத்துவம், சோதிடம் ஆகியவை கற்பிக்கப்பட்டன என்ற கருத்து பெறப்படுகிறது. இக்கருத்துக்குத் துணையாகத் தமிழகத் திண்ணைப்பள்ளிகளில் கற்பிக்கப்பட்ட பாடங்களைப் பற்றி சுப்பிரமணியன் தரும் தகவல்கள் வருமாறு.

“திண்ணைப் பள்ளிகளில் திருவள்ளுவரின் திருக்குறள், அவ்வையாரின் ஆத்திசூடி, கிருஷ்ணன் தூது, கம்பனின் ராமாயணம், சீவகசிந்தாமணி ஆகியவையும் நன்னூலின் பகுதிகளும், நிகண்டுகளின் பகுதிகளும் கற்பிக்கப்பட்டுள்ளன.”( P.Subramanian 1993:293)

கல்வியில் பாகுபாடுகள்

சுதேசிகளின் கல்வி அமைப்பில் இந்தியச் சமூகத்துக்கே உரிய சாதியப் பாகுபாடுகள் காணப்பட்டன என்பதை விளக்கும் வகையில் அமைந்துள்ள கருத்து வருமாறு:

“இக்கல்வி நிலையத்தில் வேதம், சமஸ்கிருதம் ஆகியவற்றைப் பிராமணர்களே கற்றனர் என்பதில் ஐயமில்லை. தருக்கம், சோதிடம், மராட்டி, தெலுங்கு, தமிழ், ஆங்கிலம், உடற்பயிற்சி ஆகியவற்றைச் சத்திரியர் பயின்றனர் (கே.எம். வெங்கடராமையா 1984:241).

பதினெட்டாம் நூற்றாண்டில் செயல்பட்ட திண்ணைப் பள்ளிகளில், கல்வி கற்றவர்களில் பெரும்பாலானோர் பிராமணர்களே. இப்பள்ளிகளில் சில அரசு நிலங்களின் வருவாயில் செயல்பட்டு வந்தன. அரசு உதவி பெறாத கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் மாணவர்களிடமிருந்து, தொகையையோ விளைபொருட்களையோ பெற்றுக்கொண்டு, ஆசிரியர்கள் கல்வி கற்பித்தனர்.

ஐரோப்பியர் வருகைக்குப் பின் கல்வி மொழி

அரசர்களால் மத அடிப்படையிலான கட்டமைப்புக்குள்ளும், கருத்தமைவுக்குள்ளும் அமைந்திருந்த நடைமுறைப்படுத்தப்பட்ட கால கட்டத்திற்குப் பிறகு திட்டமிட்ட பள்ளிகள் என்ற நிலையில் ஜனநாயகப் படுத்தப்பட்ட கல்விமுறை ஐரோப்பியர்களால் தமிழகத்தில் உருவெடுத்தது. ஆகையால் கல்வி மக்களுக்கு வந்து சேர்ந்தது. ஏடும் எழுத்தாணியும் கொண்டிருந்த காலம் மறைந்தது, தாளும் எழுதுகோலும் தோன்றின. அச்சிட்ட நூல்கள் பல்கின. மேலைநாட்டின் அறிவியல் வளர்ச்சி இந்தியாவில் புக வழிகோலிற்று.

ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்ட பின்னர் அவர்களின் வசதிக்காக வட்டார மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும் பிற மரபுகள் ஒதுக்கப்பெற்றன. அந்நியர் ஆட்சிக்குட்பட்ட மக்கள், ஆங்கில மொழியைப் புறக்கணிக்க முடியாத கட்டாய நிலைக்குள்ளாயினர்.

தமிழும், வடமொழிச் சொற்களும் கலந்திருந்த ஆட்சிமொழி நிலை அடியோடு மாறியது. முதன்முறையாகத் தமிழகத்தில் ஆங்கில மொழி தமிழை வீழ்த்திவிட்டுத் தனி ஆட்சிமொழியாகியது.

டாக்டர் சு. நரேந்திரன்

Pin It