“தற்போதுள்ள நமது கல்விமுறை குழந்தை களுக்கு நியாயம் வழங்குவதாக இல்லை. ஏனெனில் அவர்களுக்கு உரிய வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. நடைமுறையில் அறிவியல் உண்மைகள் மாணவர்களுக்கு மனிதநேயக் கண்ணோட்டத்தில் கற்பிக்கப் படுவதில்லை. அசையாமல் இருக்கும் பொருட்கள் அல்லது சீராக நகரும் பொருட்களை வைத்து அறிவியல் கற்பித்தலை தொடங்கக் கூடாது. மனித உடலை வைத்து அதுவும் மூன்றாம் வயதிலிருந்தே அறிவியல் கற்பித்தல் தொடர வேண்டும்” என்று அப்போதிருந்த கல்விமுறை குறித்து அறிவித்தார் ஹால்டேன்.
மனித குல நல்வாழ்வில் மிகுந்த அக்கறை கொண்ட அறிவியல் அறிஞர் ஜான் பர்சன் காண்டர் சன் ஹால்டேன் இங்கிலாந்தில் 05-11-1892 அன்று பிறந்தார். அவரது தந்தை ஜான் ஸ்காட் ஹால்டேன். தாய் லூசியா காத்தலின் ஹால்டேன். அவரது தந்தை மனித சுவாசம் குறித்த ஆய்வை மேற் கொண்டு, இரத்தத்தில் உள்ள கரியமில வாயுவின் அளவே சுவாசத்தின் வேகத்தைத் தீர்மானிக்கிறது என்பதைக் கண்டுபிடித்தார்.
ஹால்டேன் சிறுவனாக இருந்த போதே, அவரது தந்தையார் ஆய்வுக் கூடத்தில் அவருக்கு உதவியதன் மூலம் தொடக்க நிலை அறிவியல் பயிற்சியைப் பெற்றார். “எனது தந்தைக்கு உதவு வதற்காக, அவரது ஆய்வுக் கூடத்தில் பயிற்சி யாளராக இருந்தபோது, எனது எட்டாவது வயதிலிருந்தே நான் அறிவியல் கற்றேன். எனது பல்கலைக்கழகப் பட்டம் இலக்கியத்திற்கானது; அறிவியலுக்கானது அல்ல” என்று கூறினார்.
பள்ளியில் வேதியியல், இயற்பியல், வரலாறு, உயிரியல் முதலிய பாடங்களை விரும்பிக் கற்றார். அவரது மாணவப் பருவத்திலேயே இலத்தீன், கிரேக்க இலக்கியங்களையும், ஆங்கில இலக்கியங் களையும் விரும்பிப் படித்தார்.
ஹால்டேன், ஈடனிலும், ஆக்ஸ்போர்டில் உள்ள புதுக்கல்லூரியிலும் பயின்றார். தமது 19-ஆம் வயதில், 1911ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் கணித விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார்.
விலங்கியல் மாணவர்களுக்கான கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு, முதுகெலும்புள்ள உயிரி களின் மரபணுக்களுக்கிடையேயான தொடர்புகள் குறித்து தமது கண்டுபிடிப்பை அறிவித்தார்.
முதல் உலகப் போரில் 1914 ஆம் ஆண்டு தாமாகவே முன்வந்து ஆங்கிலப் படையில் சேர்ந்து கருப்புக்காவல் படைப்பிரிவில் பணியாற்றினார். உலகப் போர் முடிந்ததும், தமது சொந்த நகரமான ஆக்ஸ்போர்டுக்குத் திரும்பி, அங்கு உள்ள புதுக் கல்லூரியில் 1919 முதல் 1922 வரை உடல் இயங்கியல் மற்றும் மரபியலில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்குச் சென்று டிரினிட்டி கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றினார். மேலும் நொதி மற்றும் மரபியல் குறித்த ஆய்வை மேற்கொண்டு புகழ்பெற்ற முக்கிய கட்டுரைகளை எழுதினார். அவை பின்னர் 1927ஆம் ஆண்டு ‘சாத்தியமான உலகம்” (Possible World) எனும் தலைப்பில் வெளி யானது.
ஹால்டேனின் அறிவியல் பங்களிப்பு உயிர் வேதியியல், உடல் இயங்கியல், மரபியல் ஆகிய மூன்று வேறுபட்ட துறைகளில் இருந்தது. அவர் மனித உடல் இயங்கியலின் பல்வேறு பண்புக் கூறுகளை ஆராய்ந்தார். ஹால்டேனின் மற்றொரு முக்கிய பங்களிப்பு அவர் ‘மரபியல்’ இதழுக்கு பதிப்பாசிரியராய் இருந்து ஆற்றிய பணியாகும்.
ஹால்டேன், 1956இல் இலண்டன் பல்கலைக் கழகக் கல்லூரியை விட்டு, இந்தியாவில் குடியேறினார். அவர் இங்கிலாந்தை விட்டு வெளியேறியதற்குக் காரணம் “சூயஸ் கால்வாய் நெருக்கடியால் இங்கிலாந்து எடுத்த முடிவை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாததால் நான் இங்கிலாந்து குடி யுரிமையைத் துறக்கிறேன்” என்று அறிவித்தார். அப்போது, இந்தியாவின் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு அழைத்ததால் இந்தியாவிற்கு வந்து குடியேறினார்.
ஹால்டேன், இந்தியாவில் முதலில் கொல் கத்தாவில் உள்ள இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தில் ((Indian statistical Institute) பணியில் சேர்ந்து, உயிரிக் கணக்கியல் ((Biometry) பிரிவுக்குத் தலைமை தாங்கினார். அங்கு மானுடவியல், மனித மரபியல் மற்றும் தாவரவியல் ஆய்வுகளில் கவனம் செலுத்தினார். பின்னர் 1961 ஆம் ஆண்டு ஒடிசாவில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட உயிரித் தொகையியல் நிறுவனத்தில் பணியேற்றார்.
இந்தியா, ஹால்டேனை 1961 ஆம் ஆண்டு இந்தியக் குடிமகனாக ஏற்று அவருக்கு குடியுரிமை வழங்கியது.
ஹால்டேன் ஆங்கிலம், இலத்தீன், கிரேக்கம், பிரெஞ்சு, ஜெர்மன் முதலிய மொழிகளில் மிகுந்த புலமை பெற்றிருந்தார். அரசியல், வரலாறு, வேதியியல், உயிரியல், கணிதம், மரபியல் முதலியவற்றில் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார்.
ஹால்டேன் ராயல் சொசைட்டியின் தகைமை யாளராக 1932இல் தேர்வு செய்யப்பட்டார். தற்போதைய மக்கள் தொகுப்பின் தோற்ற வேறு பாடு குறித்த ஆய்வைத் தொடங்கி வைத்ததை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு 1952 ஆம் ஆண்டு ‘டார்வின் பதக்கம்’ ராயல் சொசைட்டி யால் வழங்கப்பட்டது. 1956இல் அரச மானுட வியல் நிறுவனத்தால் ஹக்ஸி நினைவுப் பதக்கம் வழங்கப்பட்டது.
லண்டன் லின்னேயன் சொசைட்டியால் பெருமைக்குரிய ‘டார்வின் வாலேஸ் பதக்கம்’ அளிக்கப்பட்டது. அவர் பெற்ற பிற பரிசுகள் 1961இல் பெற்ற ‘பெல்ட்டி நெல்லி பரிசு’, அறிவியலுக்கான மதிப்புறு முனைவர் பட்டம், புதுக்கல்லூரியின் ‘மதிப்புறு தகைஞர்’ தகுதி, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தேசிய அறிவியல் அகாடெமி வழங்கிய ‘கிம்பளர் பரிசு’, பிரெஞ்சு அரசு 1937 ஆம் ஆண்டு ‘பிரெஞ்சு நாட்டின் சிறப்பு நிலைக் கௌரவம்’, ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் ‘வெல்டன் நினைவுப் பரிசு’ முதலிய பரிசுகளும், பதக்கங்களும், பாராட்டுகளும் பெற்றார்.
ஹால்டேன் 1932 முதல் 1934 வரை மரபியல் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றினார். ‘டெய்லி ஒர்க்கர்’ என்னும் கம்யூனிஸ்ட் இதழின் இலண்டன் பதிப்பிற்கான பதிப்புக்குழுத் தலைவராக விளங் கினார். கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக 1942 முதல் 1956 வரை செயல் பட்டார்.
‘மார்க்சிய தத்துவமும் அறிவியலும்’, ‘வேதியியல் போர்க்கருவிகளிலிருந்து பாதுகாப்பு’, ‘கடைசித் தீர்ப்பு’, ‘விலங்கு உயிரியல்’, ‘உயிரினத் தொடக்கம்’, ‘அறிவியலும் அறவியலும்’, ‘என்சைம்’, ‘பரிமாணத் திற்கான காரணங்கள்’, ‘உண்மையும் நம்பிக்கை களும்’, ‘அறிவியலும் மனித வாழ்வும்’, ‘அறிவியலும் நீங்களும்’, ‘சந்ததியும் அறிவியலும்’, ‘மரபியலில் புதிய பாதை’, ‘அமைதியிலும் போரிலும்’, ‘அறிவியல் முன்னேற்றம்’, ‘எது வாழ்க்கை’ என இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி இவ்வுலகிற்கு அளித் துள்ளார்.
அறிவியல் வளர்ச்சியை, அறிவியல் கொள்கைகளை சாதாரண மக்களுக்கும் புரியும்படி கூற வேண்டியது அறிவியல் அறிஞர்களின் கடமை யென ஹால்டேன் வலியுறுத்தினார்.
ஹால்டேன் 01-12-1964ஆம் ஆண்டு மறைந்தார். அவரது விருப்பப்படி, அவரது உடல் காக்கி நாடாவில் உள்ள இரங்கராயா மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.
ஹால்டேன், எதையும் சோதனை செய்து தனக்குச் சரியெனப்படும் கருத்துக்களை சுதந்திர மாகவும் துணிச்சலாகவும் வெளிப்படுத்துபவராகவும், பெண்களுக்கும் பாமர மக்களுக்கும் சமஉரிமை அளிப்பவராகவும், பொதுவுடைமைச் சிந்தனையாளராகவும் விளங்கினார். பிறருக்கு உதவுவதைத் தமது வாழ்நாள் குறிக்கோளாய்க் கொண்டு வாழ்ந்தார்.