இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்ந்திருக்கும் ஒரு இளைஞனின் பதின்ம பருவத்தின் காவியத்தைச் சித்திரமாக தனது கவிதைகளில் வடித்தெடுத்திருக்கிறார் கவிஞர் வெய்யில்.
தான் எதிர்கொண்ட கொடுந்துயரங்கள், கவலைகள், அழுகைகள், கம்பலங்கள் படைப்புருவாக்கம் பெற்று ஒப்பாரிகளாய்ப் பாடுகின்றன. பெண்கள் உளவியல் சார்ந்த சமூக உரையாடல்களாய் கவிதைகள் அமையப் பெற்றுள்ளன. சமூகத்தில் அனுதினமும் அரங்கேறும் அடிமைத்தனங்களும் அதிகாரப் போக்குகளும் கவிதைகளில் வினாக்களை யெழுப்பி ஆழ்மனதைத் துளைக்கின்றன. நரம்புகள் கொதித்தெழுந்து சிந்தும் வெது வெதுப்பான குருதிகளின் ஊற்று சிற்றோடையாய் ஓடிச் செல்கின்றன.
தனது கடந்தகால வாழ்வியலின் காட்சியை நிகழ்கால அசலாகக் கச்சிதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். நிரை மரக்காலில் நிறைந்திருக்கும் நெல்மணிகளாய் சொற்கள் நிறைந்தவையாகக் கவிதைகள் காணப்படுகின்றன. தலைப்பே கொஞ்சம் வித்தியாசமாகத் தானிருக்கின்றன 'குற்றத்தின் நறுமணம்' என்று. குற்றத்தினை பல்வேறு வகையான கோணங்களில் வகைப்படுத்தலாம். தன்னால் அறிந்தோ, அறியாமலே செய்த குற்றங்களால் கூனிக் குறுகி தினந்தினம் செத்துக் கொண்டிருக்கும் மனிதர்கள் ஒரு வகையைச் சார்ந்தவர்கள். மனசாட்சிக்கு விரோதமாகப் பொருளீட்டுவதற்காக குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மற்றொரு வகையினர். சூழ்நிலைக்கேற்றவாறு குற்றங்கள் மாறுபடலாம். யாரோ ஒரு பணமுதலைகளின் வாரிசுகள் எங்கே செய்திருக்கும் தவறுகளுக்காக அப்பாவி ஏழை எளிய மக்களின் மீது குற்றம் சாட்டி அவர்களை குற்றச்சாட்டுக்குட்படுத்தி பழிவாங்கும் அரசியல்கட்சிகள் மூவர்ணக் கொடியை நெஞ்சிலேந்தி உரக்கப் பாடுகின்றன கீதங்கள். இக்கவிதைத் தொகுப்பு முழுவதும் மறைமுக நுண் சமூக அரசியலையும் அனுபவத்தையும் எடுத்துரைக்கின்றன. உலகில் உற்பத்தியைப் பல்கிப் பெருக்கிய முதன்னைச் சமூகமாக பெண்கள் திகழ்ந்து வருவதைக் கவிதைகளில் பார்க்க முடிகிறது. தொப்பூழ்க்கொடி உறவினைப் பற்றியும் பேசுகின்றன. நிலம் இழந்த சம்சாரிகளின் வலியைப் பேசும் கவிதைகள் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன.
உப்புக்குறவர்கள் வழிப்பறி கொல்லையர்களாக மாறியதைப் பற்றிய கவிதைகளினூடே பதிவு செய்திருக்கிறார். முலைவரிக் கட்ட முடியாமல் தனது முலைகளை அறுத்து வீசிய சாணாத்தியின் துயரத்தைப் பாடுகின்றன. ஈழத்தமிழர்களின் வலியைப் பேசுகின்ற கவிதைகளைச் சுட்டுகிறார். நாட்டார் தெய்வங்களின் பல்வேறு சம்பிரதாயங்களும் வழக்காறுகளும், பண்பாட்டு விழுமியங்களும் உயிர்ப்பித்துப் பாடுகின்றன இக்கவிதைத் தொகுப்பு முழுவதும்.
பெருங்காமம், ஏக்கம், தாகம், அப்பழுக்கற்ற வெள்ளந்தியான அன்பு போன்ற உணர்ச்சிகளின் வெளிப்பாட்டை கூறும் பாங்கில் பரிணமிக்கின்றன கவிதைகள்.
நெல்அவித்த தாழிப்பானைகளில் சோமாறும் போது மணக்கும் நெல்மணிகளாய் எனது நாசிக்களம் ரசித்து ஈர்த்த சில கவிதைகள் இங்கே
ஞாபகப்படுத்துங்கள்
குறியில் மின்சாரம் பாய்ச்சுவது
ஆசனவாயில் பனிக்கத்தியைச் செருகுவது
இமைகளைப் பிளந்து மிளகாய்த்தூள் தேய்ப்பதென
சித்ரவதைகள் யாவுமே
அவனுக்கு ருசி மிகுந்த தண்டனைகள்தான்
நிஜமாகவே அவனைத் துன்புறுத்த வேண்டுமெனில்
நீங்களவன்
முகத்தில் தண்ணீர் தெளித்து அவனின் மொழியையும்
ஊரின் பெயரையும்
ஞாபகப்படுத்துங்கள் (பக்கம் 23)
இக்கவிதையை வாசித்தவுடன் நிறைய சம்பவங்கள் வந்து போயின. மிகக் குறிப்பாக தமிழ்நாட்டில் இது போன்ற ஏராளமான சம்பவங்களால் பாதிக்கப்பட்டு உயிர் மாண்டப் பெருமக்கள் கட்டற்ற வெளியில் தாங்கிக்கொள்ள முடியாத பெருத்த வலியோடு எலும்புக் கூடுகளாகி விட்டனர். விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று படுகொலை செய்யும் அதிகாரத் திமிர் எக்காளமிட்டுக் கொண்டிருப்பதை சமகாலத்தில் ஒப்பிட்டுப் பார்க்கலாம். அதிகார மமதைக்கு அப்பாவிகளின் உயிர்கள் பலியாவதை நேர்படப் புலப்படுத்தியிருக்கிறார் இந்நூலாசிரியர் கவிஞர் வெய்யில்.
கொன்று பழகுங்கள்
கொலை செய்வதற்கான காரணங்களை
பசியும் காமமும் உருவாக்கித் தரும்
பயிற்சிக்கு வேண்டுமாயின்
நீங்கள் மிகவும் நேசிக்கும்
வளர்ப்புப் பிராணியொன்றை கொன்று பழகலாம்
குற்ற உணர்ச்சியற்று
வாழ்வதற்கான ஒரே வழி நம்பிக்கையோடு
உங்கள் மடியில் கண்ணயரும் பொழுது
அறத்தின் கழுத்தை அறுத்துவிடுங்கள்
(பக்கம் 24)
கொலை செய்வதற்கு மூலக் காரணமே பசியும் காமமும் என்கிறார் கவிஞர் வெய்யில். கொலை செய்வது கூட பயிற்சி பெற்று செய்யுங்கள்.அதுவும் தனது வளர்ப்புப் பிராணிகளை என்று குறிப்பிடுகிறார்.
அறத்தின் கழுத்தை அறுத்து விடுங்கள் என்று முடிக்கிறார். கொலையென்று வந்தப்பிறகே அறமெங்கே செல்லும். அவ்வறம் மெய்யாலவே செத்துவிடும்.
மீன் கொத்திப் பறவையே
அழிந்து கொண்டிருக்கும் தாமிரபரணிக்கு
இரைதேடச் செல்லென்று மன்னித்துவிடு நீலப்பட்சியே
நஞ்சூட்டி
மண்புழுக்களைக் கொன்றது நான்தான்.
(பக்கம் 25)
வருடம் முழுவதும் சங்கமித்து ஓடிக் கொண்டிருக்கும் தாமிரபரணி ஆறு அழிந்து வருவதை மிகுந்த மனவலியோடு காட்சிப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர் வெய்யில்.
மழைச் சொற்கள்
எல்லோரையும் முத்தமிட்டுக் கொண்டிருக்கிறது
மழை
வெகுதூரத்திலிருக்கும் காட்டில் தாவரங்களின்
வேர்களோடு மகிழ்ந்திருக்கும்
என் தகப்பனின் எலும்புக்கூடு (பக்கம் 61)
இவ்வரிகளை வாசிக்கும் போது என்னிரு பூங்கண்கள் நீர்ச் சொட்டுகளைத் திரட்டிக் குமித்து விட்டன. கவிஞர் வெய்யில் மட்டுமல்ல ,மழையோடு சேர்ந்து ஒவ்வொரு மனிதர்களும் இழந்த தத்தமது தகப்பன்களை வாஞ்சையோடு முத்தமிடுதலை வழிந்தோடும் மழைநீரோடு மிக இயல்பாக காட்சிப்படுத்தியிருப்பதைக் காணமுடிகிறது.
கொக்கரிப்பற்ற தலை
பெரும்பூடத்தின் படையலில் விழ
மகுடயிசையதிரும் காற்றில்
குருதிபீய்ச்சி பறந்தாடும்
கருஞ்சேவலில் கமழும்
பலிக்குருதி மணம்
கொடைபார்க்க வந்த நிறைசூலியின் நரம்புகளில்
சன்னதத்தின் துடியேற்றி விடுகிறது.
கருக்குழிக்குள் அசையும் கால்களுக்கு மணிவைத்த வேட்டைச் செறுப்பை காணிக்கை தருவதாய்
கன்னிமார்கள் குலவையிட்டு வேண்ட அலையடங்கி ஓய்கிறது பனிக்குடம்.
(பக்கம் 74)
ஒவ்வொரு சொற்களும் குலவை மணிகளாய்த் தெறிக்கின்றன.
நிறைசூலி தனது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நேமிக்கம் செலுத்தி காணிக்கை தருவதைத் துடியேற்றி ஆட வைக்கின்றன இவ்வரிகள்.
எனினும் இந்நூல் முழுவதும் செங்குருதிப் பிசுபிசுப்புகள், மனிதர்களின் பெருங்காமம், இயற்கை மணம் கமழும் பச்சைகள், பூக்கள் மற்றும் பறவைகள் மனதின் அடியாளத்தை எதுக்களிக்கச் செய்கின்றன. 'குற்றத்தின் நறுமணம்' மறுபதிப்பு வந்திருப்பது மிகப் பெரிய வெற்றி. இன்னும் கூடுதல் மகிழ்ச்சி.
குற்றத்தின் நறுமணம் / வெய்யில் / வெளியீடு: கொம்பு /விலை: ரூ. 110/-
- அய்யனார் ஈடாடி