நீலகிரி இருளர் தமது வாழ்விடப் பகுதியில் உள்ள தாவர வளங்களையே மருத்துவத்துக்கு உரியனவாக இனங்கண்டு அவற்றைப் பயன்கொள்வதுடன், மந்திர ஆற்றலையும் (Supernatural prowess) பயன்படுத்தித் தமக்கு நேரிடும் நோய் நொடிகளைத் தீர்ப்பதை இக்கட்டுரை ஆராய்கிறது.

இனக்குழுசார் மருத்துவம்

ஓர் இனக்குழுவின் ‘உடலியக்கம்’, ‘உணவுமுறை’, ‘நோய்கள்’, ‘மருத்துவம்’ உள்ளிட்டவற்றை முழுமையாக ஆய்வு செய்யும் பல்துறைசார் ஆய்வு அணுகுமுறையே இனக்குழுசார் மருத்துவம் என வரையறுக்கலாம். இவ்வாறாக ‘நோய்’,’ நோயாளி’,’ மருத்துவர்’,’ மருந்து’,’ இயற்கை’,’ மீயியற்கை ஆற்றல்’ உள்ளிட்டவை வரிசை முறையில் அமைக்கப்பட்டு வேறுபட்ட தளங்களில் வினையாற்றுவதை இனக்குழுசார் மருத்துவம் விளக்குகிறது. இத்தகைய இனக்குழுசார் மருத்துவத்தை, இயற்கைசார் இனக்குழுசார் மருத்துவம் மற்றும் மந்திரம்சார் இனக்குழுசார் மருத்துவம் என இருமைப் போக்குகளில் காணலாம்.[1]

1.      மூலிகை மருத்துவம்

2.      மந்திர மருத்துவம்

3.      மந்திரம் மற்றும் மூலிகை இரண்டும் இணைந்த மருத்துவம்

ஆகிய மூன்று முறைகளில் செய்யப்பட்டு வருகிறது.tribes 467மூலிகை மருத்துவம்

இருளர்களின் வாழ்வில் மூலிகை மருத்துவம் என்பது முக்கிய இடத்தை வகிக்கின்றது. இருளர்களின் மருத்துவ முறை என்பது; மூலிகைகள் மற்றும் மூலப் பொருட்கள் ஆகியவற்றைச் சேர்த்து, மருந்துகள் செய்து, நோயுற்றவருக்குக் கொடுத்து நோய் குணமடையச் செய்வது மூலிகை மருத்துவ முறையாகும். மூலிகை மருத்துவத்தில் தாவரங்களின் மருத்துவ குணம் மிக்க பகுதிகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. மூலிகை என்பது மருத்துவ குணம் கொண்ட தாவரங்கள். இவை பெரும்பாலும் இருளர்களின் இருப்பிடங்களின் அருகில் கிடைக்கக்கூடிய இலை, தழை, செடி, கொடி போன்ற தாவரங்களின் பகுதிகளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகின்றன. இவ்வாறான மருத்துவ முறை தொடர்ந்து வழி,வழியாகப் பின்பற்றப்பட்டுவருகிறது. மூலிகை மருத்துவம் என்பது இருளர்களின் அனுபவ அறிவால் ஏற்பட்டது என்பதை இதன்மூலம் அறிந்து கொள்ளலாம். மூலிகை மருத்துவத்தின் அனைத்து மருந்துகளையும் அல்லது மருத்துவமுறைகளையும் அனைத்து இருளப் பழங்குடியினரும் அறிந்து வைத்திருப்பதில்லை. இருளர்களின் மூலிகை மருத்துவமுறை என்பது ஒருவருக்கு தெரிந்த ஒரு வகையான மருத்துவம் பிறருக்கு தெரிந்திருப்பது இல்லை. ஒருசில மருத்துவ முறையும் மருந்துகள் மட்டுமே பெரும்பாலான மருத்துவர்கள் தெரிந்து வைத்திருக்கின்றனர். இதற்குக் காரணம் அவருடைய மூதாதையர்கள் வழி,வழியாகத் தங்களுடைய வழித்தோன்றல்களுக்கு மட்டும் மருத்துவ முறைகளைப் பயிற்றுவித்ததே ஆகும். நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் காணப்படும் ஏறத்தாழ 3000 வகையான தாவரங்களில் 1500 - க்கும் மேற்பட்ட தாவரங்கள் மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகள் ஆகும். இருளர் பழங்குடியினர் 168 வகை மூலிகைகளைக்கொண்டு 216 வகையான நோய்களைக் குணப்படுத்துகின்றனர். 10 வகையான மூலிகைத் தாவரங்களைப் பயன்படுத்திப் பாம்புக்கடியின் நச்சு முறிவு சிகிச்சையை மேற்கொள்கின்றனர். சளி, இருமல், தலைவலி மற்றும் காய்ச்சல் போன்ற பொதுவான நோய்களுக்கு அவர்களின் வசிப்பிடங்களில் கிடைக்கும் மூலிகைகளைக்கொண்டு குணப்படுத்துகின்றனர். இருளர்கள் இன்றும் தங்களுடைய மூதாதையர்களின் மருத்துவ முறைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்கின்றனர்.[2]

நோய்களும் அவற்றை குணப்படுத்தும் மூலிகைகளும்

வ எண்

நோய்கள்

மூலிகைகள்

1

தலைவலி

அப்பாத்தளை, அரப்புஇலை

2

ஒற்றைத் தலைவலி

அப்பாத்தளை

3

குடல் புண், கண்நோய்கள்

அருகம் புல்

4

மலக் கட்டு

உருக்குப் புல்

5

காய்ச்சல், தலைவலி

காட்டுத் துளசி

6

தொண்டை வலி

கறிவேப்பிலை

7

மஞ்சள்காமாலை

கீழாநெல்லி

8

உடல்வலி

குப்பைக் கீரை

9

சளி, இருமல்

கருந்துளசி

10

காது வலி

புனித துளசி

11

வயிற்றுப் புண்

கற்றாழை

12

சர்க்கரைநோய்

சர்க்கரைக் கொடி

13

உடல் சூடு

சோற்றுக் கற்றாழை

14

வாய்ப் புண்

மணத் தக்காளி

15

தேமல்

சொரிசல்இலை

16

முடிஉதிர்தல்

செம்பருத்தி

17

விசக்கடிவீக்கம்

தொட்டவாடிஇலை

18

அஜீரணம், வாயுத்தொல்லை

பிரண்டை

19

சேற்றுப் புண்

புளியமரஇலை

20

வெட்டுக் காயம்

மூங்கில் கொழுந்து

21

மூலக் குரு

துருத்தி இலை

22

தலை வலி, வயிற்று வலி

வெற்றிலை

23

அம்மை, வயிற்றுப் பூச்சி

வேப்ப இலை

24

நெஞ்சு வலி

ஆவரம் பூ

25

பல் வலி

கிராம்பு

26

குடல் புண், மலக் கட்டு

கடுக்காய்

27

மூட்டுவலி

ஆமணக்குவிதை

28

தொண்டை வலி, சளி

மிளகு

29

பல் வலி

நாவல் பட்டை

30

முடி உதிர்தல்

இலவங்கப் பட்டை

31

பல் வலி

கண்டங்கத்திரி

32

சளி, இருமல்

வசம்பு

33

புண்

காட்டு வெங்காயம்

34

புண், அம்மை

மஞ்சள்

35

கண்வலி, சூடு

விளக்கெண்ணைய்

36

மூக்கடைப்பு

நல்லெண்ணெய்

37

விசக் கடி

சுண்ணாம்பு

38

ஒற்றைத் தலைவலி

பூண்டு

39

மலக் கட்டு

சேம்பு

40

பாம்புக் கடி, விசக் கடி

நாகதாளி

41

நாய்க் கடி

நாய்ப் புல்

42

பல் வலி

வேலம் பட்டை

43

தொண்டை வலி

தூதுவளை

44

தலைவலி, சளி

தும்பை

45

முடிஉதிர்தல்

மந்தாரைஇலை

46

இருமல்

சுக்கு

47

புண்

நாயுருவி

48

நெஞ்சு வலி

மாசிக்காய்

49

சூடு

கருஞ் சீரகம்

50

ஆஸ்த்துமா

நித்யகல்யாணி

மந்திர மருத்துவம்

பழங்காலத்திலிருந்தே மக்கள் சமுதாயங்களில் வழக்கமாக மந்திரங்கள் இருந்து வருகின்றன. இயற்கை ஆற்றலை உணர்ந்துகொள்ளமுடியாத பழங்கால மனிதன் குறிப்பிடத்தக்க செயல்களை செய்வதன் மூலம் இயற்கையைக் கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை தன்னுள் கொண்டிருந்தான். அதன் தொடர்ச்சியாக, அடுத்த கட்ட நிலையில், மனிதனுக்கு, தீமை விளைவிக்கும் நோய்களை மந்திரங்களால் நீக்கமுடியும் என்ற நம்பிக்கை ஆதி மனிதனிடம் ஏற்பட்டது. அந்த நம்பிக்கை கிராமப்புற மக்களிடம் இன்றும் காணப்படுகிறது. மந்திரச் செயல்பாடுகளை செய்பவர்கள் நல்ல மற்றும் தீய மந்திரங்கள் செய்வதில் சிறந்து காணப்படுகின்றனர். மந்திர மருத்துவத்தில் மூலிகைகளுக்கு மாறாக, நம்பிக்கை மந்திர செயல்கள் மட்டுமே காணப்படுகின்றன. நெடுங்கால நோய் உடையவர்கள் கூட இவர்களிடம் நல்ல மந்திரம் செய்து குணமடைந்துள்ளனர்.

இருளர்களின் மந்திர மருத்துவ முறைகளில் மந்திரித்தல் முறை இன்றியமையாதது ஆகும். இருளர்கள் மூன்று முறைகளில் மந்திரித்தல் முறைகளை மேற்கொள்கின்றனர். அவை

1.      தண்ணீர் மந்திரித்தல்

2.      துணியில் மந்திரித்தல்

3.      கயிறு மந்திரித்தல்

ஆகியவை ஆகும்

தண்ணீர் மந்திரித்தல்

நோயால் பாதிக்கப்பட்டவரை நேராக நிற்க வைத்து மந்திரம் செய்பவர் சிறிது தண்ணீரை எடுத்து தனது மார்பில் கை வைத்து கண்ணை மூடிக்கொண்டு மந்திரங்களை தனக்குள் முணுமுணுக்கிறார். சிறிது நேரம் கழித்து கண் திறந்து தனது கையில் இருக்கக்கூடிய தண்ணீரை நோயாளியின் முகத்தில் தெளித்துவிடுவார். இதே போன்று மூன்று முறை தொடர்ந்து செய்கிறார். பிறகு, நோயாளியை வேறுஇடத்தில் நிற்கச்சொல்லித் திருநீற்றை எடுத்து நெற்றியில் பூசுகிறார். பிறகு நோயாளியின் வாயில் தான் வைத்திருக்கக்கூடிய தண்ணீரை ஊற்றுகிறார். இவ்வாறு செய்வதன் மூலம் பேய் பிடித்தல் போன்ற நோய்கள் குணமடைவதாக இவர்கள் நம்புகிறார்கள்.

துணியில் மந்திரித்தல்

ஒரு சிறிய துணியின் மூலைப்பகுதியில் நோயாளியை லேசாக அடித்து அதன் மூலமாக அவருக்கு இருக்கக்கூடிய நோயைக் குணப்படுத்துவது துணியில் மந்திரித்தல் எனப்படும். நோயால் பாதிக்கப்பட்டவரை கிழக்கு முகமாக நிற்கச் செய்து ஒருசிறிய துணியின் மூலைப் பகுதியை, மந்திரிப்பவர் நோயாளியின் முன்பாக நின்றுகொண்டு நோயாளியின் முகத்திற்கு முன்பாக விசிறி போல் தலை முதல் பாதம் வரை விசிறி விடுவார். அப்போது மந்திரிப்பவர் தனக்குள் சில மந்திரங்களை முணுமுணுப்பது வழக்கமாக உள்ளது. இவ்வாறு மூன்று முறை மந்திரங்களைக் கூறிய பின் மூன்று முறை துப்புகிறார். அதன் பிறகு நோயாளியைச் சிறிது தள்ளி நிற்கச் சொல்லி, அவருக்கு திருநீறிட்டு ஆசிர்வாதம் செய்கிறார். இவ்வாறு செய்வதனால் தூக்கத்தில் ஏற்படக்கூடிய நோய்கள் குணமடைவதாக இவர்கள் நம்புகிறார்கள்.

கயிறு மந்திரித்தல்

மஞ்சள், சிவப்பு, கருப்பு போன்ற வண்ணங்களைக் கொண்ட சிறிய கயிறுகளை மந்திரம் செய்து அவற்றில் பல முடுச்சுகளிட்டு கடவுளின் முன்பாகச் சில நாட்கள் வைத்திருந்து அந்த கயிறுக்கு மந்திர சக்தியைக் கொடுப்பதாக இருளர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்தக் கயிறுகளில் பல முடிச்சுகள் போடப்பட்டிருக்கும். அந்த முடிச்சுகள் பெரும்பாலும் ஒற்றை எண்களில் அமைந்ததாகக் காணப்படுகின்றன. அந்தக் கயிறுகளில் முடிச்சிடும்போது ஒவ்வொரு முடிச்சுக்கும் ஒவ்வொரு மந்திரத்தைக் கூறி முடிச்சுகள் டப்படுவதாக கூறப்படுகிறது. இந்தக் கயிறுகள் நோயாளிகளின் நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கட்டுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதனால் அந்த நோய் முற்றிலும் குணமாகும் என்பது இவர்களுடைய நம்பிக்கை ஆகும்.

மந்திரம் மற்றும் மூலிகை இரண்டும் இணைந்த மருத்துவம்

இருளர்கள் மருத்துவம் செய்யும்போது உடன் சில மந்திரங்களையும் கூறிக்கொண்டே மருத்துவம் செய்கின்றனர். அதனால் இது மந்திரத்துடன் கூடிய மூலிகை மருத்துவம் என்று கூறப்படுகிறது. இந்த மந்திரங்கள் மருத்துவம் செய்யும்போது அவர்கள் மனதிற்குள்ளேயே உச்சரிக்கப்படுகின்றன. கிராமப்புற மருத்துவங்களில் காணப்படும் இந்த மருத்துவ முறை இருளர்களிடமும் காணப்படுகிறது. நோயாளியின் நோயைக் குணப்படுத்தும் விதத்தில் அவர்களிடத்தில் நம்பிக்கையூட்டும் விதமாக மூலிகை மந்திரம் ஆகியவற்றை இணைத்து நோயாளிக்கு மருத்துவமாக அளிக்கப்படுகிறது. இவ்வாறு அளிக்கப்படும் மருத்துவ முறைகளில் விசக்கடிகளும் பசியின்மை, வாய்ப் புண், பேய் பிடித்தல் போன்ற நோய்களும் குணப்படுத்தப்படுகிறது.

முடிவுரை:-

நீலகிரி இருளர் பழங்குடியினரது இனக்குழுசார் மருத்துவம், இனக்குழு சார் தாவரவியல் (Ethno botany ) அறிவை அடியொற்றியது. தாம் வாழும் வாழ்வியல் பரப்பில் இனம் காணலாகும் தாவர வளங்களைக் கொண்டே இம் மக்கள் நோய் நொடிகளைத் தீர்த்துக் கொள்கின்றனர். இருப்பினும் இவர்தம் இனக்குழு சார் மருத்துவத்தில் நம்பிக்கை அமைப்பொழுங்கும் பின்னிப்பிணைந்து காணப்படுதல் சிறப்பாகும்.

மேற்பார்வை நூல்கள்:

கிருட்டினசாமி, க. (2007). நாட்டுப்புற இலக்கியம் - ஓர் ஆய்வு. கோயம்புத்தூர்: சீதை பதிப்பகம்.

லட்சுமணன், ஒடியன் (2014) சப்பெ கொகாலு. சென்னை : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

குணசேகரன், க. (2008) “இருளர்கள் ஓர் அறிமுகம்” சென்னை : கிழக்குப் பதிப்பகம்

தர்ஸ்டன், எட்கர் & க. ரங்காச்சாரி (1986) “தென்னிந்திய குலங்களும் குடிகளும்” தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகம்.

சிவசுப்பிரமணியன், ஆ. (1988) மந்திரம் சடங்குகள். சென்னை : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

பரமசிவன், தொ. ( 2001) பண்பாட்டு அசைவுகள். நகர்க்கோயில்: காலச்சுவடு பதிப்பகம்.

பெரியாழ்வார், ஆர். (1976) இருளர் வாழ்வியல் மதுரை:தமிழ் நூலகம்

பொற்கோ (1996) ஆராய்ச்சி நெறிமுறைகள் சென்னை: ஐந்திணைப் பதிப்பகம்.

பொற்கோ ( 1997) பொது மொழியியல். சென்னை: ஐந்திணைப் பதிப்பகம்.

பக்தவத்சல பாரதி ( 2007) தமிழகப் பழங்குடிகள். புத்தாநத்தம், திருச்சி: அடையாளம் பதிப்பகம்.

விஜயலட்சுமி, த. ( 2014) இருளர் பழங்குடிகளின் மருத்துவம். சென்னை: காவ்யா பதிப்பகம்

இருளர்களின் வாழ்வும் வரலாற்றுப் பூர்வீகமும் (2017) இலயோலா சமூக அறிவியல் பயிற்சி மற்றும் ஆய்வு மையம் ( லிஸ்டர் ) சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

மகேசுவரன், சி, (2020) இனக்குழுவரைவியல் :ஒரு பன்முகப் பார்வை. சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

மகேசுவரன், சி, (2023). நீலகிரி குறுமர் பழங்குடி ஓவிய மரபு (நீலகிரி ஆலு குறுமர் பழங்குடியினரது திணைசார் வரையோவியக் காலை மரபு) சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

மகேஸ்வரன், சி. (2023). தமிழக இருளர் பழங்குடியினர்: தேவை ஒரு பன்முக ஆய்வு பண்பாட்டு ஆய்வியல் (பண்பாட்டியல் குறித்த முழுதளாவிய பார்வை) சென்னை: பாரதி புத்தகாலயம்.

கண்ணதாசன், க, முனைவர் பட்ட ஆய்வாளர், மொழியியல் துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர், தமிழ்நாடு &

சுந்தரபாலு, சா, இணைப்பேராசிரியர், மொழியியல் துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர், தமிழ்நாடு

 

[1].         இனக்குழுசார் மருத்துவம் எப்போதும் இத்தகைய இருமைப் போக்குகளையே உடையது. இதனால் நம்பிக்கை அமைப்பொழுங்கு (Belief system) உள்ளடக்கம் பெறாமல் இனக்குழு சார் மருத்துவம் அமைவதில்லை என்பதை உணரலாம்.

[2]          மாறிவரும் சமூகப் பண்பாட்டுச் சூழல்களிலும் இருளர் தமது இனக்குழுசார் முறைகளை மாறாமல் தொடர்ந்து கடைபிடித்து வருதல் நினைத்து இன்புறத்தக்கது. இதனையே, “தற்சார்பு வாழ்க்கைப்பாங்கு” என்கின்றனர் மானிடவியலாளர்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.