சங்க இலக்கியங்கள் படைக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை தனித்த நிலையிலான வாசிப்பு மரபைக் கொண்டிருப்பதற்குக் காரணம், மனனம் கொள்ளுதல், படியெடுத்தல், அச்சாக்கம் செய்தல் முதலான பதிப்பியல் சார்ந்த ஆவண முயற்சிகளாகும். அதன் பின்னர்ச் சங்க இலக்கியங்களுக்குக் கூற்றுக்குறிப்பு அளித்தல், கருத்துரை அளித்தல், உரை எழுதுதுல் போன்ற முயற்சிகளால் அவை பொதுமைப்படுத்தப்பட்டன. பதம் பிரித்துப் பதிப்பித்தல், எளிய உரை அமைத்தல் ஆகிய முயற்சிகளால் பரவலாக்கம் பெற்றன. இத்தகைய செயல்பாடுகள் தமிழ் இலக்கியச் சூழலில் தொடர்ச்சியாக இடைவிடாமல் நடந்தன என்று கூறுவதற்கில்லை. கால இடைவெளி, சமூகப் பண்பாட்டுச் சூழலால் கண்டுகொள்ளப் பெறாமை, சமயப் பூசல்களால் கிடப்பில் கிடத்தியமை, ஆட்சி மாற்றக் குழப்பங்கள், காலனிய ஆதிக்கம் ஆகியவற்றால் சங்க இலக்கிய வாசிப்பு மரபு நீரோட்டமான தொடர்ச்சியைக் கொண்டிருக்கவில்லை என்பதை மனத்துள் கொள்ள வேண்டியதாகிறது. இத்தகைய இடைவெளிகளைப் புரிந்துகொள்வதற்கு பாடவிமர்சனவியலும் மூலபாடத் திறனாய்வும் இன்றியமையாததாகின்றன. இவைகுறித்த புரிதல்களை விளக்குவதாக இவ்வாய்வுரை அமைகின்றது.
மூலபாடத் திறனாய்வு மேலைநாட்டைப் போன்று இந்தியச் சூழலிலும் மிக முக்கிய வினையாற்றி வருகின்றது. ஒரு பழமையான நூலுக்கு அதன் மூலபாடம் நம்பகத்தன்மை மிக்கதாக இருத்தல் வேண்டும். ஆனால் இந்திய மரபில் அவ்வாறு உறுதிப்பட இயலவில்லை
பனுவல்கள் எழுதப்பட்டிருக்கும் நமது இந்தியச் சுவடிகள் கி.பி.பத்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்டவை அல்ல. மேலும், அவற்றில் பெரும்பான்மையானவை உறுதியாக 13 ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவையாகும் என்பதிலிருந்து எழுத்து ஆவணங்களின் அழியுந்தன்மையுடைய இயல்பை நாம் புரிந்து கொள்ளலாம் (எஸ்.எம்.கத்ரே, 2025:41).
தாய்ப்பிரதியோ அண்மைப்பிரதியோ கிடைக்கப்பெறாத சூழலில் பழமையான இலக்கியங்களின் பாடம் மீதான விமர்சனமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இவரோ (சி.வை.தா.) அல்லது உ.வே.சா.வோ ஒரு நூலின் பதிப்புக்கென தாம் பயன்படுத்தும் ஏடுகளுள் எதனைப் பிரதான பிரதியாகக் (Master Copy) கொண்டனர் என்பதற்கான தடயம் எதுவுமில்லை. ஆனால், பிரதான பிரதியிலிருந்து காணப்படும் வேறுபாடுகளை பிரதிபேதங்களாக, குறிப்பாக உ.வே.சா.காட்டுவார்.
இவர்கள் இருவரும் எழுதுகின்ற முறையினை நோக்கும் பொழுது ஏட்டின் எழுத்தின் தெளிவை முதன்மைக் காரணமாகக் கொண்டார்களோ என்ற சந்தேகமே மேற்கிளம்புகின்றது. உ.வே.சா.வின் பதிப்பு முயற்சியின்போது காணப்படாத தவறுகள் பற்றிய ஒப்புதல் சி.வை.தா.விடம் நிறைய காணப்படுகிறது. ஒரு பதிப்பிற் காணப்படும் பிழைகளைத் திருத்துவதற்கு உதவினோர்க்கு நூலின் பிரதி ஒன்றினை இலவசமாக வழங்கத் தயார் என்ற அவரது முன்னுரைக் குறிப்பு இதனைக் காட்டுகின்றது. (கா.சிவத்தம்பி, 2007: 130)
முதற்கட்ட பதிப்பாசிரியர்கள் தங்களின் பாடத்தேர்வுக்கு முதன்மைப் பாடமாக எதனைக் கொண்டனர் என்பதில் சிக்கல் இருக்கிறது என்கிறார் கா. சிவத்தம்பி. அதாவது எளிமை, சிதைவின்மை, காலத்தால் முந்தியது என்கிற அளவுகோல்களால் அதனை முதற்பதிப்பாகக் கொண்டு மூலபாட ஆராய்ச்சியில் ஈடுபடலாமா? எனும் கேள்வி எழுப்பப்படுகின்றது.
நூற்பதிப்பில் ஈடுபடுபவர் தமக்குக் கிடைத்துள்ள ஏடுகளை ஒன்றற்கொன்று ஒப்பிட்டுப் பார்த்து, அவற்றுள் பிழைகளின் எண்ணிக்கையில் குறைந்தும், ஏட்டின் பழமையில் முதிர்ந்தும் சொல் அமைப்பில் தெளிவுபட்டும் தோன்றும் ஏதேனும் ஒரு பிரதியை ஆதாரப் பிரதியாகக் கொள்ள வேண்டும். பின்பு அதனுடன் மற்றப் பிரதிகளைத் தனித்தனியே வைத்து ஒப்பு நோக்கிப் பாடவேறுபாடுகளைக் குறித்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஆசிரியருடைய கருத்திற்கு ஒத்த பாடம் எது எனச் சிந்தித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதுவல்லாது மற்றைய பாடங்களைப் ‘பாடவேறுபாடு’ என்ற பகுதியில் தரவேண்டும். (அ.விநாயகமூர்த்தி, 1978: 76)
இன்றைய காலகட்டத்தில் தாய்ப்பிரதி பற்றிய சிந்தனைக்குத் தீர்வு கிடைப்பது அரிதாகும். ஆனால், கிடைக்கப்பட்ட ஏட்டுச்சுவடிகளுள் எதனைத் தாய்ப்பிரதியாகக் கொண்டனர்? எவற்றை ஒப்பீட்டுச் சுவடிகளாகப் பதிப்பாசிரியர்கள் கொண்டனர் என்பதைப் பற்றிய குறிப்புகள் விரிவாக முன்னுரையில் பேசப்படுதல் வேண்டும். அ.விநாயகமூர்த்தியின் மேற்கண்ட குறிப்பினைக் கா.சிவத்தம்பி மறுத்துரைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கிடைத்த பிரதிகளுள் எதனைத் தாய்ப்பிரதியாகக் கொண்டார் (உ.வே.சா.) என்பதோ தாய்ப்பிரதியாகக் கொண்டதற்கான காரணங்கள் பற்றியோ எதுவும் இவரது முகவுரைகளில் கூறப்படவில்லை. எழுத்துத்தெளிவும் அதனால் வாசிப்புச் சுலபமும் கொண்ட ஒரு பிரதியை தாய்ப்பிரதியாகக் கொண்டு மற்றவற்றை அதனுடன் இணைத்து வாசித்தார் என்ற எண்ணமே என் சரித்திரத்தையும் முகவுரைகளையும் வாசிக்கும்போது மேலோங்கி நிற்கின்றது. ஆனால் இந்த முறைமை பாடபேதங்களைத் தீர்மானிப்பதில் பல சிக்கல்களை உருவாக்கும் தமிழில் உள்ள உரைப்பாரம்பரியம் ஓரளவுக்கு நூலாசிரியரின் பாடத்தை அறிவதற்குதவுமெனினும் உரைசாராது வருகின்ற பாடப்பிரதிகளில் எது உண்மையான நூற்பாடம் என்று கண்டறிவதில் சிக்கல்களை ஏற்படுத்தும் (கா.சிவத்தம்பி, 2007:121-122)
பதிப்பாசிரியர்கள் தங்களிடம் கிடைக்கப் பெற்ற ஏடுகளில் செப்பமானவற்றையோ பழையன வற்றையோ பொருள் விளங்குவனவற்றையோ முதன்மைப் பிரதியாகக் கொண்டிருக்க வாய்ப்புண்டு. அப்பிரதிகளின் நம்பகத் தன்மையை மேலும் உறுதிப்படுத்த உரையாசிரியர்கள் கையாண்ட பிரதிகளுக்கு (மேற்கோள் பாடல்களுக்கு) வரலாம். அல்லது உரையாசிரியர்களின் உரையின்வழியாகப் பாடத்தை அறிந்து கொள்ளலாம். அதிலும் தொல்காப்பிய ஓலைச்சுவடிகளைக் கொண்டே மேலும் ஆராய்ந்து உறுதிப்படுத்த இயலும். இன்றைய சூழலில் இது பெரும் சவாலான பணியாகும்.
வையாபுரிப்பிள்ளையின் பாட்டும் தொகையும் (1940), மர்ரே எஸ்.ராஜம் பதிப்புகள் (1947) ஆகிய முயற்சிகள் மூலத்தை முதன்மை ஆதாரமாகக் கொண்டு அதன்வழி வாசகர் வட்டத்தை உருவாக்கியமை மிக முக்கியமான சமூகப் பங்களிப்பாகும். உரையாசிரியர்களின் வழிநடத்துதலின்றி இயன்றவரை மூலத்தை அணுகிப்பார்க்கும்பொழுது அம்மூலநூலாசிரியரின் அறிவுப்புலமையுடன் நடத்துகின்ற விமர்சன வாசிப்பாக மாறுகின்றது. இம்முறைமை தமிழ்ச்சூழலில் நிகழ்த்தப்பெறாமல் போய்விட்டது எனலாம். அதாவது நவீன இலக்கியக் கவிதைகளைப் புரிந்துகொள்வதற்கு நிகழ்த்துகின்ற வாசிப்பைப் போன்று சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து வாசிப்பதின் வழியாக மூல நுலாசிரியரின் கருத்தை ஓரளவேனும் சுயமாக உள்வாங்கிக் கொள்ள இயலும். முதன்மைப் பதிப்பாசிரியர்களுக்கு மூலம் மட்டுமான ஓலைச்சுவடிகளும் காகிதப்பிரதிகளும் ஏராளமாகக் கிடைத்திருக்கின்றன (ஐங்குறுநூற்றுக்குத் திருவாவடுதுறையாதீனத்துப் பிரதி, ஜே.எம்.வேலுப்பிள்ளையவர்கள் பிரதி, திருமயிலை வித்துவான் ஸ்ரீ சண்முகம்பிள்ளை பிரதி என்று உ.வே.சா. குறிப்பிடுகின்றார்) எனும்பொழுது பண்டைக் காலத்திலிருந்து உரையாசிரியர்கள் காலத்தைக் கடந்தும் மூலத்தை மட்டும் வாசித்துப் பொருள்கொள்கின்ற புலமைமரபு நம்மிடையே ஆழ்ந்திருந்து இடையே விடுபட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பேரரசுகளுக்கிடையிலான போர், நிலவுடைமைச் சூழல், சமயப்பூசல் (வைதீக அவைதீக ஏற்பும் எதிர்ப்பும்), தொடர்நிலைச் செய்யுள்களின் வாசிப்பு, காலனிய ஆதிக்கம் ஆகிய காரணங்களால் சங்க இலக்கியச் சுவடிகள் நீண்ட ஆண்டுகள் கவனிப்பாரற்றுக் கிடப்பில் இருந்துவிட்டன; அவற்றுள் பல அழிந்துவிட்டன. இச்சூழலைக் கடந்துதான் பதிப்பாசிரியர்களுக்குக் கிடைக்கப் பெற்ற முதன்மைப் பிரதிகள் குறித்தும் அப்பதிப்புகளிலிருந்து ‘செம்பதிப்பு’ குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது.
மூலபாட ஆராய்ச்சியை மேற்கொண்ட அறிஞர்கள் சரியான மூலபாடத் தேர்வுக்காகச் சில அளவுகோல்களை வைத்துக் கொண்டு செயல்பட வலியுறுத்தியுள்ளனர். திருக்குறளைப் பாடவேறுபாட்டு நிலையில் ஆராய்ச்சி செய்த பதிப்பாசிரியர்கள் மூலபாட வேறுபாட்டுக்கான காரணிகளைக் கீழ்க்கண்டவாறு முன்வைத்துள்ளனர்.
1. ஒலி ஒப்புமையால் புகுந்த வேறுபாடுகள்
2. வடிவ ஒப்புமையால் வந்தவை
3. எழுதுங்கால் இடமாற்றம் பெற்றவை
4. இடைச்சொல் ஆட்சியில் பொருட்சார்பால் ஏற்பட்டவை
5. கற்றாராலும் பாடமாறுபாடு வந்து புகுதல்
6. இலக்கண வகையால் ஏற்பட்ட மாற்றங்கள் (மு.வரதராசனார், 1971: 121-135)
மூலபாட ஆய்வியல் நோக்கில் ஐங்குறுநூற்றுப் பதிப்பு எனும் தலைப்பில் ஆராய்ந்த அ.விநாயகமூர்த்தி பாடவேறுபாடு தோன்றுவதற்கான காரணங்களைக் கீழ்க்கண்டவாறு முன்வைத்துள்ளார்.
தோற்றத்து ஒற்றுமை, அசை கெடல், சுருக்கமும் பெருக்கமும், திணை வேறுபாடு, ஒருமை-பன்மை, படித்தலும் கேட்டலும், தொடை அமைப்பு, இலக்கண மாறுபாடு, எளிய பிழைகள் (அ.விநாயகமூர்த்தி,1978: 73-85).
இரா.அறவேந்தன், இரா.மோரிஸ் ஜாய், அ. செல்வராசு, க.பாலாஜி, மு.முனீஸ்மூர்த்தி, மா.பரமசிவன், ம.லோகேஸ்வரன் ஆகியோர் எட்டுத்தொகை இலக்கியங்களுக்கான பதிப்பு வரலாற்று நூல்களிலும் (2010) சங்க இலக்கிய உரைவேறுபாட்டுக் களஞ்சியமாகக் கொண்டுவந்த உரைவேறுபாட்டு நூல்களிலும் (2024) பாடவேறுபாடு, உரைவேறுபாடு குறித்த விவாதங்களை முன்வைத்துள்ளனர். இவ்வாறு பாடவேறுபாடு, உரைவேறுபாடு தோன்றுகின்ற இடங்களைக் கண்டறிந்து, குறிப்பிட்ட சொல், தொடர் பொருத்தப்பாடுகளை ஆராய்ந்து நிறுவுகின்ற பொழுது பழந்தமிழ் இலக்கியங்கள் உணர்த்த முனைகின்ற சமூகப் பண்பாட்டை மீட்டெடுக்கவியலும்.
மூலபாடத் திறனாய்வு குறிப்பிட்ட பனுவலுக்கான செம்பதிப்பாக்கமாக மாற்றம் பெறும். அவ்வாறு செம்பதிப்பு முயற்சியில் ஈடுபடுகின்ற பொழுது அதன் நோக்கம் கூர்மைத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும். பலதரப்பினரையும் கருத்திற்கொண்டு தொழிற்பட வேண்டும். பதிப்பு, உரை ஆகிய இருநிலைகளில் உண்மைத்தன்மையைத் துல்லியமாகக் கடைபிடித்தல் வேண்டும். இதன் மையத்தைக் கீழ்க்காணும் நான்கு நிலைகளில் பகுத்து விளக்கலாம்.
1. பதிப்பாசிரியர்கள், பதிப்பகங்கள் நோக்குநிலை
2. ஆய்வாளர்கள், ஆசிரியர்கள் நோக்குநிலை
3. மாணவர் நோக்குநிலை
4. பொதுவான வாசகர் நோக்கு நிலை
பதிப்பாசிரியர்கள், பதிப்பகங்கள் நோக்குநிலை
தற்காலத்தில் உள்ள பதிப்பகங்களும் அறிவியல்பூர்வமாக அணுகக்கூய தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டிருக்கின்றன. பதிப்பாசிரியர்கள் முதற்கட்ட பதிப்புகளின் பாடவேறுபாடு, உரைவேறுபாடுகளைக் பகுத்தளித்து அவற்றிற்கு முதன்மையளிக்கும் வகையில் ஒப்பீட்டு ஆராய்ச்சியை நிகழ்த்த வேண்டும். இதற்காக மீண்டும் ஓலைச்சுவடிகள், காகிதப்பிரதிகளைச் சேகரித்து மூலபாடம், பாடவேறுபாடுகளை விடுபடாமல் குறிப்பிட்ட பாடலுக்குக் கீழே அளிக்கும் முறைமை பின்பற்றப்பட வேண்டும். ஐங்குறுநூற்றுக்கு எழுந்துள்ள அனைத்து உரைகளையும் தொகுத்தளித்து உரைக்களஞ்சியமாகக் கொடுப்பதில் ஏராளமான சிக்கல் இருக்கிறது. ஆனால், வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டிப் புதிய கருதுகோளை வெளிப்படுத்துகின்ற பொழுது புதிய கோணத்திலான ஆராய்ச்சிகள் எழுவதற்குச் சாத்தியம் இருக்கின்றது. விரிவாக எழுதுவதன் அர்த்தம் விடுபடாமல் எழுதுவது என்பதைப் பதிப்பகங்கள் புரிந்துகொண்டு, சுதந்திரமாகப் பக்க வரையறையைக் கருத்தில் கொள்ளாமல் அதேசமயம், வணிக நோக்கும் பாதிக்கப்படாமல் பதிப்பித்து வெளியிட முன்வர வேண்டும்.
ஆய்வாளர்கள், ஆசிரியர்கள் நோக்கு நிலை
உயர்கல்வி பயிலும் ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் பாடல், தெளிவுரை என்ற வாசிப்புத்தளத்தில் நின்றுவிடக் கூடாது. பாடவேறுபாடு பொருத்தம், உரைவேறுபாடு பொருத்தம், மேற்கோள் பாடல்கள் பொருத்தம், அருஞ்சொற்பொருள் ஏற்பு, இலக்கணக் குறிப்பு, யாப்பியல் சிந்தனைகள், உள்ளுறை, இறைச்சி ஆய்வு என்று அனைத்தையும் எடுத்துரைக்கின்ற விதமாகச் செம்பதிப்பு அமைய வேண்டும். ஒரு பாடலுக்கு வெவ்வேறு பாடங்கள் குறிப்பிடப்பட வேண்டியதன் தேவையை ஆய்வாளர்களும் ஆசிரியர்களும் புரிந்துகொண்டு, சங்க இலக்கிய வாசிப்புப் பயிற்சியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
மாணவர் நோக்குநிலை
பொழிப்புரையின் வழியாக முதலில் பாடலைப் புரிந்துகொள்ள வேண்டும். பாடல் உணர்த்தும் பொருள் பற்றிய அறிவு முதலில் தேவை (செ.வை.சண்முகம், 2004:81). எளிய பதப்பிரிப்பு மூலம் சொற்சிதைவு ஏற்படாதவாறு பதிப்பித்து வெளியிடலாம். மாணவர்களுக்கான பதிப்புகளில் உரை அதிக கவனத்துடன் எழுதப்பட வேண்டும். எளிமை என்பதற்காகப் பொருள் மயக்கம் வராதவாறு பாடத்துடன் தொடர்புபடுத்தி விளக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்குப் புரியவைக்கும் பொருட்டு, பிரபாகரபாபு எழுதிய கவிதை வடிவம், ந.சி.கந்தசாமிப்பிள்ளையின் வசன நடை, காண்டிகையுரை, புலியூர்க்கேசிகன் போன்றோரின் எளிமை உரை போன்ற முயற்சிகளை ஒப்புநோக்கி, அவற்றிலிருந்து மாற்று வடிவத்தையோ அவற்றையோ மீண்டும் கூர்மையாக்கி வெளியிடல் வேண்டும்.
பொதுவான வாசகர் நோக்கு நிலை
இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்ற சங்க இலக்கியப் பாடல்கள் மிக வேகமாக பொதுவாசகர்களைச் சென்றடைகின்றன. அவற்றில் தாராளமாகப் பிழைகள் தென்படுகின்றன. நவீன காலத்துப் பொதுவாசகர்கள் விரைந்து கற்கும் ஆர்வத்தில் இணையத் தேடலையே முதன்மைப் பக்கமாகக் கொண்டுள்ளனர். அவர்கள் மத்தியில் தவறான பாடங்களைக் கடத்துகின்ற ஆபத்தான போக்கு இணையத்தில் நடந்தேறுகின்றது. அவற்றைத் திருத்தம் செய்து வெளியிடுகின்ற கட்டுப்பாடு கொண்டுவர வேண்டும். மேலும், பொது வாசகர்களுக்கான பதிப்பு நூல் என்றாலும் பாடம், உரை ஆகியவற்றை மிகுந்த கவனத்துடன் ஒப்பிட்டு விளக்க வேண்டும். பொதுவாசகர்களுக்குப் புரிய வைக்கும் வண்ணம் விரிவான விளக்கம் அளித்தல், சிறப்புக் குறிப்பு அளித்தல், நாட்டார் வழக்காற்றியலுடன் தொடர்புபடுத்தி விளக்குதல், மேலை நாட்டுக் குறிப்புகளை அளித்தல் என்று பகுத்தளிக்கும் பொழுது சங்க இலக்கிய வாசிப்பை அனைவரிடமும் கொண்டு சேர்க்கவும் மீட்டெடுக்கவும் இயலும்.
பதிப்புகளின் வழியாக மூலபாட மீட்பு, உரை வழியாக பாட மீட்பு, ஓலைச்சுவடிகளை ஒப்பிடுவதன் வழியாகப் பாட மீட்பு என்று முனைப்புடன் தொழிற்படுகின்ற பொழுது செம்பதிப்பு சாத்தியமாகின்றது. மேற்குறிப்பிடப்பட்ட செம்பதிப்பாக்கத்திற்கான வரையறைகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்திட வேண்டும். இதனைப் பெருந்திட்டமாகக் கருதி அரசாங்கமும் நிதி ஒதுக்கிச் செயல்படுத்த வேண்டும்.
தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களைக் கேவலமாக நினைத்த காலம் அது (ஆங்கிலேயர் காலம்). எனவே, சங்க இலக்கியப் பதிப்பு தமிழர்களின் சுய கவுரவத்தை உயர்த்தியது (செ.வை.சண்முகம், 2004: 82)
இத்தகைய ‘அச்சுப்பதிப்பு’ தமிழர்களின் நீண்ட நெடிய வரலாற்றுக்கு நம்பகத்தன்மையையும் உறுதியையும் கொடுத்திருப்பது நினைவில் கொள்ளத்தக்கது. எனவே, அனைவருக்கும் எளிமையாகப் புரியும்படி சந்தி பிரித்துப் பதிப்பித்தலை எழுச்சிமிக்க மாற்றுச்சிந்தனையாக மர்ரே எஸ்.ராஜம் கருதினார்.
உரைகளுடன் வைத்தே பாடமூலங்களை விளங்கி வந்துள்ள நமது பாரம்பரியத்தில் இலக்கிய மாணவர்கள், ஆய்வாளர்கள் பாட மூலத்தை மாத்திரமே பயன்படுத்துவதென்பது முன்னுதாரணமில்லாத ஒரு முயற்சியாகும். உரையாசிரியர்களின் தாக்கங்கட்கு ஆட்படாமல் பாடமூலங்களுடன் ஊடாடுதல் என்பது புதிய கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு வழிமுறையுமாகும் (கா.சிவத்தம்பி, 2007:132)
மர்ரே எஸ்.ராஜம் பதிப்பிற்கு எஸ்.வையாபுரிப்பிள்ளை, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், அ.ச.ஞானசம்பந்தன் ஆகியோர் பெரும்பங்காற்றியுள்ளதாகச் சிவத்தம்பி குறிப்பிடுகிறார். இவ்வறிஞர்களின் தெளிவான திட்டமிடலால் இப்பதிப்பு சமகாலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
நிறைவாக, பதிப்புகளை ஒப்பிட்டு ஆராய்வதைக் கடந்து ஓலைச்சுவடிகளைக் கொண்டு மிக நுட்பமாக முன்னையோரின் நெறியிலிருந்து விலகாமல் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அறிவியல்பூர்வமாக பாடப்பொருத்தங்களை அணுக வேண்டும். அவை பாடிய புலவரின் சிந்தனைச் சிதைவாக இருந்துவிடல் கூடாது என்கிற நேர்மையுடன் இருத்தல் வேண்டும். புதிய ஓலைச்சுவடிகள் இனி கிடைக்குமா? என்கிற வினாவும் அச்சுவடிகளைக் கொண்டு மாற்றுப் பாடங்களை நிறுவ இயலுமா என்கிற வினாவும் எழுகின்றது. ஓலைச்சுவடிகளின் பழமையைக் கருதித்தான் அதைப் பதிப்பாசிரியர்கள் முதன்மைப் பிரதியாகக் கொண்டிருப்பர் என்று கருதினாலும் ஒரு நூற்றாண்டு இடைவெளியில் அதே நிலையில் இனி கிடைப்பது அரிதுதான். பழந்தமிழ் இலக்கியங்களுக்கு இன்றளவில் கிடைத்திருக்கக்கூடிய ஓலைச்சுவடிகளையாவது பாட விமர்சனவியலுக்கு உட்படுத்த முயற்சிக்க வேண்டும்.
துணைநின்றவை
- கத்ரே எஸ்.எம். (மூ.ஆ.), அஜய்சுந்தர் இ.சு. (மொ-ர்), இந்திய மூலபாடத் திறனாய்வு- ஓர் அறிமுகம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,சென்னை, 2025.
- குளோறியா சுந்தரமதி இல. டாக்டர் உ.வே.சா. சங்க இலக்கியப் பதிப்புகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1984.
- சண்முகம் செ.வை(கட்.), நாச்சிமுத்து கி, (மு.ப.) சங்க இலக்கிய ஆய்வுகள் செய்தனவும் செய்ய வேண்டுவனவும் : சங்க இலக்கியக் கல்வி. தமிழ்த்துறை, கேரளப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம், 2004.
- சம்பந்தன் மா.சு. அச்சும் பதிப்பும், மணிவாசகர் பதிப்பகம், சென்னை,1997.
- சிவத்தம்பி கா. (கட்.), பெருமாள்முருகன் (தொ.ஆ.), உ.வே.சா. பன்முக ஆளுமையின் பேருருவம் : தமிழில் இலக்கியப் பாடமீட்பு, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், 2007.
- ……... தமிழ் நூற்பதிப்பும் ஆய்வு முறைகளும், பாரதி புத்தகாலயம், சென்னை, 2009.
- சுந்தரமூர்த்தி இ. பதிப்பியல் சிந்தனைகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,சென்னை, 2010.
- மார்க்ஸ் அ. தமிழில் அச்சுப் பண்பாடு சீர்திருத்த கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும், வம்சி புக்ஸ், திருவண்ணாமலை, 2006.
- வரதராசனார் மு. (பொ.ப.ஆ.), திருக்குறள் ஆராய்ச்சி-1 யாப்பு அமைதியும் பாட வேறுபாடும்), சென்னைப் பல்கலைக்கழகம், 1971.
- விநாயகமூர்த்தி அ. மூலபாட ஆய்வியல், பாலமுருகன் பதிப்பகம், மதுரை, 1978.
- முனைவர் ம.லோகேஸ்வரன், உதவிப் பேராசிரியர், முதுகலைத் தமிழாய்வுத் துறை, -பச்சையப்பன் கல்லூரி, சென்னை-30