பேராசிரியர் இரா. காமராசு அவர்களால் எழுதப்பட்டு 2025ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி நிறுவனத்தின் வெளியீடாக இலக்கியச் சிற்பிகள் நூல் வரிசையில் தமிழ் ஆய்வுலகத்திற்குக் கிடைக்கப்பெற்றுள்ள நூல் 'இந்திய இலக்கியச் சிற்பிகள் - கே.ஏ. குணசேகரன்' என்னும் நூல்.

book on k a gunasekaranஇந்நூலாசிரியர் பேராசிரியர் இரா. காமராசு அவர்கள் பேராசிரியர் நா.வானமாமலை குறித்து முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டவர். தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறையில் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றிக் கொண்டிருப்பவர். நாட்டுப்புறவியல், படைப்பிலக்கியம், இலக்கியத் திறனாய்வு, சமூகப் பண்பாட்டியல், இதழியல், கல்வி, சமூக வரலாறு சார்ந்து நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளவர். இவரின் நூல்கள் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பாடநூல்களாக உள்ளன. தமிழ் இலக்கியம் சார்ந்த வாசிப்பிலும் ஆழங்கால் பட்டவர். தமிழில் தொடர்ச்சியாக உரையாற்றியும் எழுதியும் வரக்கூடியவர். கலை இலக்கியப் பெருமன்றத்தின் செயல்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருபவர். இத்தகைய முற்போக்கு நிலையிலான செயல்பாட்டின் தொடர்ச்சிக்கு இடதுசாரிய சிந்தனையாளர்கள் குழுமிய சூழலில் வளர்ந்ததும்/வாழ்ந்து வருவதும் மிக முக்கியக் காரணம் எனலாம். தமிழ்ச் சமூகம் குறித்த அடையாளங்களை மீட்டெடுத்தலுக்கான முறையியலாக: யூகங்களை முன்வைத்த கற்பனாவாத கருத்தியலைத் தவிர்த்து மக்களின் வாழ்வியல் அடிப்படையில் யதார்த்தவாத பின்புலத்தோடு அணுகுதல் என்பது பேராசிரியரின் ஆய்வு அணுகுமுறையாக உள்ளதை பேராசிரியரின் ஆய்வு நூல்கள் வழி அறியலாம். தமிழ்ச் சமூக அடையாள மீட்டுருவாக்கத்திலும், புதிய தலைமுறையினர் முன்னெடுக்க வேண்டிய ஆய்வு முறைக்கான வழிகாட்டியாகவும் தம் ஆய்வு நூல்களைக் கொண்டுவருவதில் சிரத்தையான செயல்களை மேற்கொண்டு செயல்படக்கூடிய செயல்பாட்டாளர்.

சாகித்ய அகாதெமி நிறுவனம் தமிழ் மொழிக்கு தம்முடைய படைப்புகளால் பங்களிப்புச் செய்த அறிஞர்களின் பெரும் உழைப்பை அங்கீகரிக்கும் நிலையாக இலக்கியச் சிற்பிகள் வரிசையில் பல அறிஞர்களின் வாழ்வியலை ஆவணப்படுத்தியுள்ளது. அவ்வகையில் தமிழ் மொழிக்கு தம்முடைய அயராத செயல்பாட்டினால் பெருமை சேர்த்திருக்கும் பேரா கே.ஏ.ஜி. அவர்களுடைய வாழ்க்கையையும் படைப்புசார் பங்களிப்பையும் சிறப்பாக ஆவணப்படுத்தியிருப்பது பெருமைக்குரிய செயலாகும்.

பேரா கே.ஏ.ஜி. அவர்களின் வாழ்வியலை ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட்ட பேரா இரா. காமராசு அவர்கள் இப்பணிக்கு மிகப் பொருத்தமானவர். பேரா கே.ஏ. குணசேகரன் அவர்களும், பேரா இரா. காமராசு அவர்களும் பெரும் பொருத்தப்பாடுடையவர்கள். இருவரும் கலை இலக்கியப் பெருமன்றச் செயல்பாட்டாளர்கள், நாட்டுப்புறவியலில் விருப்பமுடையவர்கள், இடதுசாரியச் சிந்தனைகளை உள்வாங்கியவர்கள், உழைக்கும் மக்களின்பால் கவனம் கொண்டவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடும் குணம் உடையவர்கள். இவ்வாறு இருவருக்குமான பல பொருத்தப்பாடுகளைப் பட்டியலிடலாம். இத்தகைய பொருத்தப்பாட்டின் வெளிப்பாடாகத்தான் பேரா கே.ஏ.ஜி. அவர்களின் வாழ்வியலைப் பதிவு செய்தலில் நுட்பமான திட்டமிடலை பேரா இரா.காமராசு கைக்கொண்டுள்ளார். இத்தகையப் பதிவிற்கான திட்டமிடல் ஒரு அறிஞர் குறித்த ஆவணப்பதிவிற்கான முன்னுதாரணமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பேரா கே.ஏ.ஜி. அவர்களின் காத்திரமான பங்களிப்பைப் பதிவு செய்வதற்கான திட்டமிடலைப் பொருளடக்கத்தின் தலைப்புகளைக் கொண்டே அறிந்துகொள்ளலாம். வந்தனம்னா வந்தனம், நாக்குச் சிவந்த குரல், அட்ரா சக்கே, வன்மங்களின் ஆறா வடு, தொட்டில் தொடங்கித் தொடுவானம் வரை, தொட்டுக் கொள்ளலாம் வாங்க, கலிகெழு துணங்கை ஆடிய மருங்கு, மனுசங்கடா… நாங்க மனுசங்கடா ஆகிய தலைப்புகளோடு, வாழ்க்கைக் குறிப்பு, வெளியிட்ட நூல்கள், எழுதிய நாடகங்கள், இயக்கிய நாடகங்கள், வெளிவந்துள்ள ஒலி நாடாக்கள், பெற்ற விருதுகள் என 128 பக்கங்களில் மிக விரிவான பதிவைச் செய்திருப்பது பேரா இரா. காமராசு அவர்களின் கூர்மையான தேடலையும் தாம் எடுத்துக்கொண்ட பணியில் செலுத்திய அர்ப்பணிப்பையும் அறிந்து கொள்ள முடிகிறது.

இந்த நூல் தமிழ்ச் சூழலில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்கள், கலை இலக்கியப் படைப்பாளிகள் என அனைத்து தரப்பினரும் வாசிக்க வேண்டிய மிக முக்கியமான நூலாகும். பேரா கே.ஏ.ஜி. அவர்களின் ஒரு பக்கம் மட்டும் அனைவருக்கும் தெரியும். அதாவது கல்விப் புலத்தில் பேராசிரியர் பணிக்கு வந்த பிறகு அவரின் செயல்பாடுகளைப் பலரும் அறிந்திருப்பர். ஆனால், அதற்கு முந்தைய அவரின் குடும்பப் பின்புலம், அந்தக் குடும்பப் பின்புலத்திலிருந்து தன்னைப் படிப்படியாக உருவாக்கிக் கொண்ட முறையியல் முதலான தகவல்களெல்லாம் அவரோடு நெருங்கியிருந்தவர்களே அறிந்திருப்பர். இந்த நூல் அந்த மறுபக்கத்தை மிகக் கூர்மையாக வெளிப்படுத்துகின்றது. பேரா கே.ஏ.ஜி. அவர்கள் தன்னை உருவாக்கிக் கொண்ட தன்மையை, கே.ஏ.ஜி. தானே முகிழ்த்த காட்டுச்செடி என்ற அடர்த்தியான சொற்களால் பேரா இரா. காமராசு அவர்கள் இந்நூலில் குறிப்பிட்டிருப்பது பொருத்தமானதாகும்.

பேரா கே.ஏ.ஜி. அவர்களைப் பற்றி நாம் அனைவரும் அறிந்த செய்தி, சிவகங்கை மாவட்டம் இளையான்குடிக்கு அருகில் மாரந்தை எனும் சிற்றூரில் 12.05.1955 இல் பிறந்து 17.01.2016ஆம் ஆண்டு இறந்தவர். நாட்டுப்புற மக்களிசைக் கலைஞர். நாட்டுப்புற மண்ணையும் மக்களையும் தம் கம்பீரக் குரலால் தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதும் கொண்டு சேர்த்தவர். நாட்டுப்புறக் கலைகள் குறித்தும் ஆய்வுகள் செய்தவர். தமிழ் தலித் நாடக அரங்கின் முன்னோடி. பல நூல்களையும், ஒலி-ஒளிப் பேழைகளையும் வெளியிட்டுள்ளார். ஆட்காட்டி ஆட்காட்டி என்ற பாடலின் மூலம் துயரத்தையும் அந்தத் துயரத்தைப் போக்குவதற்கான தீர்வையும் அளித்தவர். புதுவைப் பல்கலைக்கழக சங்கரதாஸ் சுவாமிகளின் நிகழ்கலைப் பள்ளியின் பேராசிரியராகவும், தலைவராகவும் பணிபுரிந்தவர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராகவும் பணியாற்றியவர். கலைமாமணி விருது உட்பட பல விருதுகள், பட்டங்கள், பரிசுகள் பெற்றவர். கவிஞர், பாடகர், நடிகர், இயக்குநர், எழுத்தாளர், திரைக்கலைஞர், கல்வியாளர் எனப் பன்முக ஆளுமை கொண்டவர். இவை அனைத்தும் அவரின் கல்விப்புலம் சார்ந்து பெரும்பான்மையோர் அறிந்த செய்தி. இத்தகைய சிறப்புகளையெல்லாம் அடைவதற்கு கே.ஏ.ஜி. அவர்கள் தன்னை செதுக்கிக் கொண்ட செயல்பாடுகள் ஏராளம்.

ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியராக இருந்தவர் தந்தை. சினிமா கொட்டகையில் பெண்கள் பகுதியில் நுழைவுச்சீட்டுப் பரிசோதகராகப் பணியாற்றிய தாய். உடன்பிறந்தவர்கள் ஐவர். சாதி, வர்க்கம் ஆகிய இரட்டை ஒடுக்குமுறைக்கு உள்ளான சமூகப் பின்புலம். வறுமையின் கோரப்பிடியும், உக்கிரமும் விட்டுவைக்காத வாழ்க்கைச் சூழல். இத்தகைய சூழலைகளையெல்லாம் கடந்துதான் இலக்கியச் சிற்பிகள் வரிசையில் இடம்பெறும் அங்கீகாரத்தை கே.ஏ.ஜி. பெற்றிருக்கிறார்.

கே.ஏ.ஜி. தன்னுடைய ஏழ்மையின் உக்கிரத்தைப் பற்றி ‘வடு’ எனும் நூலில் பதிவு செய்திருப்பதை,

“சாயந்தரம் வரைக்கும் மீன் புடிப்போம். அப்புறம் புடிச்ச மீனை நான் இளையான்குடி தெருக்களிலும், புதூர்ச் சாலைகளிலும் கூவிக் கூவி விப்பேன். நாலணா, அம்பதுகாசு, முக்கா ரூபாய்னு பேரம் பேசி வித்து ரெண்டு ரூபாயிலிருந்து அஞ்சாறு ரூபா வரைக்கும் வீட்டுக்குக் கொண்டு வருவேன். அந்தப் பணத்துல அரிசி வாங்கிச் சோறாக்கிச் சாப்புடறது வழக்கம்.”

“அம்மாவும் தன் பங்குக்குக் கருவை மரங்களை வெட்டி, விறகு கட்டி, அதை முஸ்லிம் வூடுகளில் வித்து எங்களைக் காப்பாத்தும். கிரின் டாக்கீஸ்ல பஸ்ட் ஷோ, செகண்ட் ஷோ விட்ட ராத்திரிகளில் என்னைத் தொணைக்கிக் கூட்டிப் போயி, கிராமத்திலிருந்து சினிமா பார்க்க வண்டியில வந்தவங்களோட மாடுங்க போட்ட சாணியை யாருக்கும் தெரியாம கூடையில அள்ளிக்கிட்டு வரும் அதைக் காலையில ஏறாட்டடியாத் தட்டும். காஞ்ச ஏறாட்டிய வித்து எங்களைக் காப்பாத்தும்”

“எங்க வூட்ல இட்லி, தோசை போட்டாங்கன்னா அன்னக்கி தீபாவளி இல்ல கிறிஸ்துமஸா இருக்கும்”

“வறுமையினால் எங்க தங்கச்சிங்க கலாவதி, மாலதி, ஜோதி இவுங்களுக்குக் காதுகுத்தல் சடங்கு இல்லை. ஒரு நாள் எங்கம்மா என் தங்கச்சிய சனிக்கிழமைச் சந்தைக்குக் கூட்டிட்டுப்போயி ஐம்பதுகாசு குடுத்துக் காது குத்திட்டு ஒரு ரூபாய்க்கு ஒன்னப்புத்தட்டு வாங்கி மாட்டிவுட்டுக் கூட்டியாந்துச்சி. காதுகுத்தல் கல்யாணத்தை விதவிதமாகக் கொண்டாடி நடத்துற வேடிக்கைகளைப் பார்க்கையில் எங்க தங்கச்சிகளுக்குக் காதுகுத்துச் சடங்கு செய்யாததை நெனச்சு வேதனையா இருக்கு.”

முதலான பதிவுகளை பேரா இரா. காமராசு அவர்கள் இந்நூலில் எடுத்துக்காட்டியிருப்பது கே.ஏ.ஜி. யின் வலி நிறைந்த மறுபக்கத்தை உணர்த்துகின்றது. மேலும், கே.ஏ.ஜி. ஒரு கலைஞராக உருவானதைப் பற்றி அவரின் அண்ணன் கே.ஏ. கருணாநிதி அவர்கள் குறிப்பிடும்போது,

“நாள்தோறும் வீட்டுப்பாடம் முடித்ததும் ஓடிடும் குதிரையின் குளம்பொலியை ‘டக்டக்’ என்று வாயால் எழுப்பியவாறே இருவரும் வீட்டிலிருந்து சினிமா கொட்டகையை 6.30 மணியளவில் ஓடிச் சென்றடைவோம். இருவரும் இயன்றவரை திரைப்படங்களை முழுமையாகவோ, இடையிடையிலோ தூங்காமல் அரைத்தூக்கத்திலும் விழிப்பிலும் பார்ப்போம். ரசிப்போம். சிரிப்போம். சில காட்சிகளில் அழுவோம். கொட்டகையிலேயே தூங்கி விடுவோம். மறுநாள் விடிந்ததும் விழித்ததும் எங்கள் வாய் ஓரம் நீர் ஒழுக்குப் படிவுகளோடு நடந்தே வீடு வந்தடைவோம்.

ஏனெனில், இரண்டு காட்சிகளும் முடிந்த பிறகோ எங்களைத் தூக்கிக்கொண்டே, தூக்கக் கலக்கத்தோடோ, எங்களை நடைபோடச் சொல்லியோ அழைத்துச் செல்ல இயலாத நிலை எங்க அம்மாவுக்கு. திரையிடப்பட்ட வசனங்களும் நடிப்புகளும் பாடலின் இசை வடிவங்களும் எங்களுக்கு அத்துபுடி; மனப்பதிவுதான். முழுப்படத்தையும் நடையோட்டம் பிசிராமல் அசைபோட்டு, வசனம் பேசி, நடித்தும் பாடியும் காட்டுவோம். இதை எங்கள் ஊர் மக்கள் பாராட்டுவர். அப்போதெல்லாம் இசுலாமிய மகளிரை சினிமா பார்க்க மார்க்கம் (மதம்) அனுமதிக்காததால் எங்கள் வழியாக (படத்தின் நடிப்பு, வசனம், பாடல்) ஒளி-ஒலிக் காட்சியாய்ப் பார்த்த திருப்தி அடைவர். அதுவே குணசேகரனின் பிற்கால வாழ்வில் நாடக - நடிப்பு - இசை வளர்ச்சியில் திறைமையுற முதற்படியாயிற்று.”

என்ற பதிவு கலைஞராக உருவான பின்புலத்தை உணர்த்துகிறது.

இந்த நூல் கே.ஏ.ஜி.யை உருவாக்கிய சூழல் மட்டுமல்லாமல், கே.ஏ.ஜி. தன்னுடைய இசை, பாடல், நாடகம் முதலான கலைக்கூறுகளை ஒடுக்குமுறைக்கு எதிரான ஆயுதமாக எடுத்தப் பாங்கையும் வெளிப்படுத்துகிறது. இவர் அனுபவித்த ஏழ்மை, மேற்கொண்ட தொடர்ச்சியான பயணம், கம்யூனிச புத்தகங்களின் வாசிப்பு முதலான செயல்பாடுகள் சமூக ஒடுக்குமுறை, சாதிய இழிவுகள் சாதி ஒழிப்பு இயக்கங்களை நோக்கியும், அடுத்த நிலையில் தலித் அரசியல் - தலித் இலக்கியம், தலித் அரங்கியல் நோக்கியும் கே.ஏ.ஜி.யைக் கொண்டு செலுத்தியுள்ளது.

இந்த நூலை முழுமையாக வாசித்தபோது நான் நினைத்ததைப் போன்று,

“இப்படியும் ஒருவர் வாழ்ந்திருக்கிறாரா? என்ற எண்ணமும் தோன்றலாம் இரக்கமும் படலாம் வியப்பும் அடையலாம் பொய்யாகத்தான் இருக்கும் என்று சந்தேகமும் கொள்ளலாம் ஆனாலும் அனைத்தும் உண்மைதான்”

என்று நீங்களும் நினைக்கலாம். இதற்கு மேலுமான உணர்வையும் அனுபவத்தையும் பெறலாம்.

இந்திய இலக்கியச் சிற்பிகள் - கே.ஏ. குணசேகரன்
இரா. காமராசு | முதற்பதிப்பு 2025
சாகித்ய அகாதெமி | விலை 100

- முனைவர் மு. ஏழுமலை, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர், உதவிப் பேராசிரியர், துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரி, அரும்பாக்கம், சென்னை.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.