(K. Rajan& V. P. Yathees Kumar 2014: Archaeology of Amaravathi River - porunthal Excavations, Indira Gandhi Rashtriya Manav Sangrahalaya, BHOPAL & Sharda publishing House, New Delhi 110 085).

பொதுவாக 1970 களிலும் அதற்கு முன்பாகவும் சங்க இலக்கியத்தை ஆய்வு செய்த அறிஞர்கள் தமிழக வரலாற்றை மீள் உருவாக்கம் செய்வதிலேயே தமது கவனத்தைச் செலுத்தியுள்ளனர். சமூகம், பொருளாதாரம், அரசியல் மற்றும் பண்பாட்டுக் கூறுகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை என்று பார்க்காமல் இவற்றைத் தனித்தனியே ஆய்வு செய்தனர் (ராஜன். கா. 2010 :4).

Archaeology of Amaravathi Riverஒரு நாட்டின் அல்லது ஒரு வட்டாரத்தின் வரலாற்று வரைவுக்குப் பல்வேறு அறிவுத் துறைகளின் துணை தேவைப்படுகிறது. இவற்றுள் கடந்த காலம் குறித்த ஆய்வுக்குப் பெரிதும் துணைபுரிவது தொல்லியல் ஆகும். நம் நாட்டைப் பொருத்த அளவில் ஆங்கிலக் காலனிய ஆட்சியின் போது சில ஆங்கில உயர் அதிகாரிகள், கிறித்தவ மறைப்பணியாளர்கள் ஆகியோர் தனிப்பட்ட ஆர்வத்தின் அடிப்படையில் தொல்லியல் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர், தமிழ்நாட்டில் செயல்பட்ட கால்டுவெல் கொற்கையில் சிறிய அளவில் அகழ் ஆய்வுகள் நடத்தி சில பொருள்களைச் சேகரித்துள்ளார். ஜகோர் என்ற செர்மானியர் ஆதிச்சநல்லூரில் 1876 இல் அகழ்ஆய்வு செய்து சில தொல்லியல் சான்றுகளைச் சேகரித்துள்ளார். இவை ஈமத்தாழிகள், மனித மண்டை ஓடுகள், எலும்புக் கூடுகள், இரும்புக் கருவிகள், மட்பாண்டச் சிதறல்கள், உலோகத்தாலான சிறிய அளவு கடவுள் உருவங்கள், தானிய உமி, தவிடு, தானியம் எனப் பலதரத்தவை. இவர் சேகரித்த தொல்பொருள்கள் சில செர்மன் நாட்டின் அருங்காட்சியகம் ஒன்றில் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு தனிமனிதர்களின் முயற்சியை அடுத்து காலனிய அரசும் தன் பார்வையை இந்தியத் தொல்லியல் ஆய்வில் செலுத்தத் தொடங்கியது.

தொல்லியல் துறை ஒன்று 1861இல் Archeologycal survay of India என்ற பெயரில் ஆங்கில அரசால் இந்தியாவில் உருவாக்கப்பட்டது. இதன் வளச்ச்சிநிலையாக உயர் கல்வியில் குறிப்பாகப் பல்கலைக் கழகங்கள் சிலவற்றில் தனித்துறையாக, தொல்லியல் துறை உருவானது.

தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் தொல்லியல் என்ற பரந்துபட்ட சமூக அறிவியலின் ஒரு கூறான கல்வெட்டியல் மட்டுமே இத் துறையால் முன்னெடுக்கப்பட்டது. அதிக அளவுக் கல்வெட்டுக்களைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குவதும் இதற்குக் காரணம். தென் இந்தியாவில் ஐம்பத்தையாயிரம் கல்வெட்டுக்கள் உள்ளதாகவும் அவற்றில் இருபத்தேழாயிரம் கல்வெட்டுக்கள் தமிழ்நாட்டில் உள்ளதாகவும் வரலாற்றறிஞர் ஏ. சுப்பராயலு (2021: 76) குறிப்பிட்டுள்ளார். தொடக்கத்தில் இந்திய ஒன்றிய அரசின் தொல்லியல் துறை தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிக் கல்வெட்டுக்களைப் படியெடுத்து தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் என்ற தலைப்பில் வெளியிடத் தொடங்கியது. இவற்றுள் பெரும்பாலானவை மொழி அடிப்படையில் தனித்தனித் தொகுதிகளாகவும், ஒருசில இந்நான்கு மொழிக் கல்வெட்டுக்களையும் ஒரு சேரக்கொண்டதாகவும் வெளிவந்துள்ளன. 1961 ஆவது ஆண்டில் தமிழ்நாடு அரசு மாநிலத்துக்கான தொல்லியல் துறை ஒன்றைத் தொடங்கியது (சுப்பராயலு: மேலது78).

போதிய நிதிநல்கை இல்லாமையாலும், பணியாளர்கள் போதாமையாலும் கல்வெட்டுக்களைப் படியெடுத்தல், அவற்றை வெளியிடுதல் என்ற பணிகளையே இது தொடக்கத்தில் பெரிதும் மேற்கொண்டது. தொல்லியல் என்ற சமூக அறிவியல் துறையின் சிறப்பான ஓர் உறுப்புதான் கல்வெட்டியல். ஆனால் கல்வெட்டுக்களே தொல்லியல் என்ற எண்ணம் உருவாகி விட்டது.

இருப்பினும் சிறிய அளவிலான அகழ்ஆய்வுகளை இத்துறை குறைந்த நிதிநல்கையுடன் மேற்கொண்டது. இவ்வகையில் பூம்புகார், அழகன்குளம், பாஞ்சாலங்குறிச்சி, கொற்கை, மாங்குடி, கரூர், பட்டறைப் பெரும்புதூர் என்பன குறிப்பிடத்தக்கன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான சில புதிய சான்றுகளை வெளிக்கொணர்ந்தன (தகவல்: கல்வெட்டியல் அறிஞர் முனைவர் சாந்தலிங்கம்).

என்றாலும் பரந்து பட்ட தமிழ்நாட்டின் தொன்மையான வரலாற்றை வெளிப்படுத்தும் வகையிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. இக் குறையைக் கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை ஆகிய ஊர்களில் இப்போதைய மாநில அரசின்ஆர்வத்துடன் கூடிய ஒத்துழைப்புடன் மேற்கொண்ட அண்மைக்கால அகழ்ஆய்வுகள் போக்கி விட்டன. இவை தமிழரின் நாகரீகம் பண்பாடு, தமிழ்மொழியின் தொன்மை என்பனவற்றை வெளிக்கொணர்வதில் முக்கிய பங்காற்றியுள்ளன.

இச்செய்திகளின் பின்புலத்தில் அமராவதி ஆற்றங்கரைப் பகுதியில் பேராசிரியர் கா. ராஜன் 2009, 2010 ஆவது ஆண்டுகளில் தம் தலைமையிலான குழுவினருடன் நிகழ்த்திய அகழாய்வின் கண்டுபிடிப்புக்களை இந்நூலின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.

நூல் ஆசிரியர்கள்

இந்நூலின் ஆசிரியரான கா. ராஜன், புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். தென்இந்தியாவின் குறிப்பிடத்தக்க தொல்லியலாளர்களில் ஒருவர். சென்னைப் பல்கலைக் கழகத்தில் பண்டைய வரலாறு, மற்றும் தொல்லியலில் முதுகலைப் பட்டத்தையும், தில்லியிலுள்ள தொல்லியல் பள்ளியில் தொல்லியலில் முதுகலைப் பட்டயத்தையும் மைசூர்ப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றவர். தென் இந்தியாவின் வரலாற்று வரைபட நூல் (அட்லஸ்) உருவாக்கும் குழுவின் தலைவர்களில் ஒருவராகப் பணியாற்றியுள்ளார். வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொடங்கி வரலாற்றின் தொடக்ககாலம் வரையிலான 1500க்கும் மேற்பட்ட தொல்லியல் ஆய்வுக்கான களங்களை இவர் கண்டறிந்துள்ளார். இவ்வகையில் இவர் தொகுத்து வெளியிட்டுள்ள இக்களங்களின் பட்டியல் Catalogue of Archaeological Sites in Tamilnadu என்ற பெயரில் இரண்டு தொகுதிகளாக வெளியாகியுள்ளது.

இவற்றுள் மயிலாடும்பாறை, தாண்டிக்குடி, பொருந்தல், கொடைக்கானல் ஆகிய நான்கு ஊர்களிலும் இவர் மேற்கொண்ட அகழ்ஆய்வுகள் குறிப்பிடத் தக்கவையாகும். இருபத்தியைந்து பெரும் ஆய்வுத்திட்டங்களை (Major research projects) மேற்கொண்டு எண்பத்தியைந்து ஆய்வுக் கட்டுரைகளையும் பத்து ஆய்வு நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.

 இந் நூலின் இணையாசிரியரான யதிஷ்குமார் வரலாற்றிலும் தொல்லியலிலும் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமி்ழ்ப்பல்கலைக்கழகத்தில் சுவடியியலில் முதுநிலை பட்டயப்பயிற்சியும் புதுவைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். இந்திய அரசின் தொல்லியல் துறையில் உதவித் தொல்லியலாளராகப் பணிபுரிகிறார். பவானி, வைகை, அமராவதி ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட தொல்லியல் ஆய்வுக்குரிய களங்களைக் கண்டறிந்துள்ளார். தென் இந்தியாவின் வரலாற்று வரைபட நூல் உருவாக்கத்திலும், தாண்டிக்குடி, கொடுமணல், கொடைக்கானல் அகழ்ஆய்வுகளிலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்காற்றியுள்ளார். மேலே குறிப்பிட்ட தொல்லியல் ஆய்வுக் களங்கள் பட்டியல் நூலின் இணையாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

நூலின் உள்ளடக்கம்:

A4 அளவிலான இந்நூல் பதினான்கு இயல்களைக் கொண்டதாய் 600க்கும் மேற்பட்ட பக்கங்களுடனும் மிகுதியான ஒளிப்படங்களுடனும் இரு தொகுதிகளாக வெளிவந்துள்ளது. முதல் தொகுதி பதினான்கு இயல்களுடன் முந்நூற்று அறுபது பக்கங்களில் அமைந்து அகழ்ஆய்வுக் களமான பொருந்தல் கிராமத்திற்குள் மட்டுமின்றி கடந்த காலத் தமிழ் நாட்டின் இரும்புக் காலம், புதிய கற்காலம் என நூற்றாண்டுகளைக் கடந்து பின்னோக்கி அழைத்துச் செல்கிறது.

இரண்டாவது தொகுதியில் ஏழு பின்னிணைப்புகள் இடம் பெற்றுள்ளன. (1) அமராவதி ஆற்றுப் பள்ளத்தாக்கின் முக்கிய தாவரவகைகள். (2) இப்பகுதியின் தொல்லியல் களங்களின் பட்டியல். (3) இக்களங்கள் குறித்த செய்திகள். (4) இப்பகுதியின் கல்வெட்டுக்கள் (5)) தென் இந்தியாவின் கண்ணாடி குறித்த புதிய ஆய்வுகள் january 2012 (6) பொருந்தலின் phytolith ,palynological ஆய்வுகள் (7) பொருந்தல் அகழ்ஆய்வகளில் கிட்டிய மட்கலங்களின் தாதுக்கள் குறித்த ஆய்வு.

இவற்றுடன் ஆய்வில் துணை நின்ற நூல்களின் விரிவான பட்டியலும், பொருள் சுட்டியும் இடம் பெற்றுள்ளன. உள்ளடக்கத்துடன் மட்டுமின்றி தெளிவான ஒளிப்படங்களுக்கும் குறைவில்லை. சுருங்கக்கூறின் ஆழமான உள்ளடக்கத்திற்கு ஏற்ப நூலின் வடிவமைப்பும் சிறப்பான முறையில் அமைந்துள்ளது

இந் நூலைப் படித்துமுடித்தவுடன் ஒருவகையான பெருமித உணர்வு நம்மிடையே தோன்றுவதைத் தவிர்க்க இயலாது. ஆனால் வெறும் உணர்ச்சி சார்ந்த ஒன்றாக இன்றி அறிவியல் சார்ந்த ஒன்றாக நூலாசிரியர்கள். உருவாக்கியுள்ளனர். கட்டுரையின் பக்க நீட்சியைத் தவிர்க்கும் வழிமுறையாக இந்நூலின் முதல் தொகுதியின் உள்ளடக்கம் மட்டுமே இங்கு சுருக்கமாக அறிமுகமாகிறது.

பொருந்தல்:

அமராவதி ஆற்றின் பள்ளத்தாக்குப் பகுதியில் கரூர், நெடுங்கூர், பொருந்தல், தாண்டிக்குடி என்ற நான்கு முக்கிய தொல்லியல் அகழ்ஆய்வுக் களங்கள். உள்ளன. இவற்றுள் திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்குத்தொடரச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமே பொருந்தல். சங்ககாலக் கவிஞர்களில். ஒருவரான இளங்கீரனார் என்பவர் பொருந்தில் என்ற ஊர்ப்பெயரை அடைமொழி. யாகப் பெற்றுள்ளார். இப் பொருந்தில் இன்று பொருந்தலாக மருவியுள்ளது என்ற கருத்து உள்ளது.

இது திண்டுக்கல் நகரில் இருந்து தென்மேற்கே 56. கி.மீ. தொலைவிலும் பழனி நகருக்குத் தென் மேற்கில் 12. கி.மீ.தொலைவிலும் உள்ளது. பொருந்தலாறு என்ற பெயர் கொண்ட ஆற்றின் கரையில் அமைந்தமையால் இப்பெயரைப் பெற்றுள்ளது. (இதே ஆறு பழனியில் சண்முகா ஆறு என்ற பெயரால் அழைக்கப்படுகிறது).

பொருந்தலைச் சுற்றித் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் உள்ளன (மேற்குறித்த நூல் 2014:43).

பொருந்தல் அகழ்ஆய்வுகள்:

பொருந்தலில் 2009, 2010 ஆண்டுகளில் இருகட்டங்களாக நடந்த அகழாய்வில் வாழ்விடப் பகுதிக்கு மேற்கே உள்ள இடுகாட்டில் இறந்தோரைப் புதைக்கும் நான்கு ஈமக்குழிகள் கண்டறியப்பட்டன. ஆய்வறிக்கையில் அடையாளப்படுத்தும் நோக்கில் இவற்றிற்கு M1, M2, M3, M4, எனத் தனியே அடையாள எண்கள் இடப்பட்டன. இப் பகுதியில் கிடைத்த கண்ணாடிமணிகளும் அவற்றை உருக்கும் உலைகள் காணப்பட்டமையும் இங்கு வாழ்ந்த மக்கள் கண்ணாடி மணிகளை உருவாக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தனர் என்பதை வெளிப்படுத்தின. அடுத்து இப் புதைகுழிகள் நான்கிலும் நெல்மணிகளைக் கொண்ட நான்கு கால்களுடன் கூடிய சுடுமண் கலன்கள் (சாடிகள்) இருந்தன. ஈமக் குழிகளில் சில பொருள்களையும் இறந்தோர் உடலுடன் சேர்த்துப் புதைக்கும் உலகளாவிய மரபு இங்கும் நிலவியுள்ளது.

ஆய்வுக்குழுவில் இடம் பெற்றிருந்த முனைவர் பிரேமலதா(சிரிலங்காவின் பட்டமேற்படிப்புத் தொல்லியல் நிறுவனம்) முனைவர் னுபமா (புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம்) என்ற தொல்லியல் அறிஞர்கள் இருவரும் இந் நெல்மணிகளை ஆய்வு செய்து இவை இயற்கையாக வளர்ந்த நெற்பயிரின் மணிகளல்ல. பயிர்செய்த நெல்லின் மணிகள் என்று அறிவித்தனர்.

 அகழாய்வில் வெளிப்பட்டவை:

 மேற்கண்ட நான்கு ஈமக்குழிகளை அகழ்ந்தெடுத்ததன் வாயிலாகக் கிடைத்த பயன்களை நூலாசிரியர்கள் பின்வருமாறு தொகுத்துரைத்துள்ளனர்:

1.      ஒரே ஈமக்குழியில் 8533 கண்ணாடி மணிகள் கண்டறிந்தமை

2.      ஒரு ஈமக்குழியில் உயர் எண்ணிக்கையில் 328 குவார்ட்ஸ் மணிகளைக் கண்டறிந்தமை

3.      ஒரு ஈமக்குழியில் 7020 steatite மைக்ரோ மணிகள் கண்டறிந்தமை

4.      நான்கு ஈமக்குழிகளிலும் நெல் கண்டறிந்தமை

5.      தமிழ்பிராமி எழுத்துப் பொறிப்புடன் கூடிய இரண்டு மோதிரம் தாங்கிகளை(பிரிமணை) கண்டறிந்தமை. இவை கி. மு. ஐந்தாம் நூற்றாண்டுக் காலத்தவை.

6.      ஈமக்குழிப் பொருள்களில் ஒன்றாக வைக்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான பானைகள்.

 இப்படிப் பொதுப்படையாகக் கூறிவிட்டு, ஒவ்வோன்றையும் தனித்தனியாக விரிவாக ஆராய்ந்துள்ளனர். இவற்றுள் காலக்கணிப்புடன் இணைந்த மூன்று செய்திகள் மிகவும் ஆழமானவை என்பதுடன் தமிழ்நாட்டின் வரலாற்று வரைவில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்துபவை (பக்கம்:171) இது குறித்த இவர்களது, பங்களிப்பு இவர்கள் கண்டறிந்த நெல் மணிகளில் இருந்தே தொடங்குகிறது.

ஈமக்குழி நெல்லின் காலக்கணிப்பு:

பொருந்தலின் ஈமக்குழிகளில் கண்டெடுக்கப்பட்ட நெல்லின் காலத்தைக் கண்டறிந்தால் அதன் தொன்மை வெளிப்படும் என்பதன் அடிப்படையில் அதன் வகைமாதிரிகளை (சாம்பிள்கள்) அமெரிக்காவிலுள்ள பீட்டா ஆய்வகத்துக்கு அனுப்பினர். அங்கு நெல்லின் வகைமாதிரிகளை ‘ரேடியோ மெட்ரிக் முறையில்’ ஆய்வு செய்து இந் நெல் கி. மு. 490-520 (கி. மு. 5-6 நூற்றாண்டு) காலத்திற்கு உட்பட்டது என்று கண்டறிந்தனர்.

ஆசிரியர்களின் வரலாற்றுப் பார்வை:

இந்நூலின் அறிமுக உரையில் தென் இந்தியாவின் தொல்லியல் ஆய்வுச்சிக்கல்களைத் தொட்டுக்காட்டிவிட்டு மானுடகுல வளரச்சியில் இரும்பு யுகம் தொடங்கி வரலாற்றின் தொடக்க காலம் வரையிலான பண்பாட்டு மாற்றங்களைப் புரிந்து கொள்வதென்பது தென் இந்தியத் தொல்லியலாளர்களுக்கு ஓர் அறைகூவலாக உள்ளது என்கிறார்கள். தம் பயன்பாட்டிற்காக. இயற்கை வளங்களைச் சுரண்டுதல் ஒவ்வொரு நிலப்பகுதியிலும் வகித்த மாறுபாடான நிலைகளைக் குறிப்பிட்டுள்ளதுடன் வாணிபத்தின் பங்களிப்பையும் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

வலுவான அகழ்ஆய்வுத் தரவுகளை வாசகன் முன்வைத்து ஒதுங்கிக் கொள்கிறார்கள். இத்தரவுகளே நூலாசிரியர்களின் வரலாற்று நோக்கை நாம் அறியச் செய்கின்றன. வரலாறு என்பது ஒரு சமூக அமைப்பில் இருந்து மற்றொரு சமூக அமைப்பிற்கு மாறுவதே என்ற ரொமிலா தாப்பரின் கூற்றை நினைவூட்டியுள்ளார்கள்.

தொல்லியல் அகழ் ஆய்வு என்பது முதுமக்கள் தாழி என்றழைக்கப்படும் ஈமத்தாழிகளை மட்டுமே மையமாகக் கொண்டது என்று பரவியுள்ள கருத்துக்கு மாறாகப் பொருந்தல் அகழ் ஆய்வுகள் பாசிமேடு என்ற குடியிருப்புப் பகுதியிலும் பாண்டியன் காடு என்ற இடுகாட்டிலும் நிகழ்த்தப்பட்டுள்ளன. மேலும் ஆய்வுக்களத்தின் பொருள்சார் பண்பாட்டை ஆய்வுசெய்வது குறித்த தொலைநோக்கான குறிக்கோளை அவர்கள் கொண்டிருந்தமையை பின்வருமாறு வெளிப்படுத்தியுள்ளனர்.

(1)   இரும்புக் காலம், வரலாற்றின் தொடக்ககாலம், (சங்க காலம்) மத்தியகாலம் என்பனவற்றை அடையாளப்படுத்தல். (2) வாணிப மையங்கள், வாணிபப் பாதைகளைக் கண்டறிதல். (3)குடியிருப்புகளின் அமைப்புகளையும், அமைப்பொழுங்குகளையும் ஆராய்தல் (4) இரும்புக் காலத்தில் இருந்து வரலாற்றின் தொடக்க காலம் வரை நிகழ்ந்த பண்பாட்டு மாற்றங்களை மதிப்பீடு செய்தல். (5) கண்ணாடித் தொழில் நுட்பத்தை ஆராய்தல்(6) தமிழ்-பிராமி அறிமுகமான காலத்தை உறுதிப்படுத்தல்.

இக்குறிக்கோள்களுடன் இவர்கள் மேற்கொண்ட அகழ்ஆய்வகள் வழி வெளிக்கொணர்ந்த முக்கியவரலாற்று உண்மைகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். (1) இந்தியாவின் பிராமி எழுத்து முறையானது கி.மு.ஐந்தாம் நூற்றாண்டிலேயே அசோகர் காலத்துக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாட்டில் உருவாகிவிட்டது. (2) இந்தியாவின் வரலாற்றுத் தொடக்க காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இருந்துதான் தொடங்கியது என்று இதுவரை நிலவிவந்த கருத்துக்கு மாறாக கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலேயே தொடங்கி விட்டது. (3) நெல் சாகுபடியும். ஐந்தாம் நூற்றாண்டிலேயே அறிமுகமாகி இருந்துள்ளது.(4) இரும்புக் காலத்தில் உருவான பெருங்கற்கால (மெக்காலித்தி) கல்லறைகள் வரலாற்றின் தொடக்க காலத்திலும் தமிழகத்தில் தொடர்ந்துள்ளன.

இவர்கள் முன்வைத்துள்ள தரவுகள் பொருள் உற்பத்திமுறையும் அதன் விநியோகமும் வரலாற்றிலும் பண்பாட்டிலும் வகிக்கும் வகிபாகத்தைக் கண்டறிவதில் கொண்டு சேர்க்கிறது. நூலின் இறுதிப்பகுதியில் முன்வைத்துள்ள பின் வரும் கருத்துக்கள் இவர்களது வரலாற்றுப் பார்வையை வெளிப்படுத்துவதுடன் வரலாற்று வரைவில் ஈடுபடுவோருக்கு வழிகாட்டியாகவும் விளங்குகின்றன. இது, இந் நூலின் வழி அவர்கள் விடுக்கும் அறிவுரை அல்லது செய்தி எனலாம்.

‘தொல்லியல் மற்றும் வரலாற்றியலர்கள் ஒருவர்க்கொருவர் உதவிசெய்தல், விளக்குதல் வழி சமூகமாற்றத்தின் செயல்முறைகளைப் புரிந்து கொள்ளத் தீவிர முயற்சி எடுக்க வேண்டும். ஓர் அமைப்பிலிருந்து இன்னொரு அமைப்பிற்கு மாறும் வரலாற்றுச் செயல்முறையைத் தொடர்ச்சியான ஒன்றாகப் பார்க்க வேண்டும். தொல்லியல், கல்வெட்டு, இலக்கிய மற்றும் நாணயவியல் தரவுகள் அரசியல், சமூக, பொருளாதார, மதச் சூழலுடன் பொருத்தி பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட வகை முதன்மைச் சான்றுகள் ஒரு குறிப்பிட்ட கருத்திற்கு அழுத்தம் தரலாம்.சான்றாக, தமிழ்நாட்டின் தொடக்ககாலத்திய வரலாற்றுச் சான்றுகளான தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள். சமண சமயத்தை முதன்மைப் படுத்துகின்றன.அதேபோழ்து சங்க இலக்கியங்கள் சமண சமயத்தைப் புறக்கணித்துள்ளன. எனவே ஒவ்வொரு சான்றுகளின் தன்மையையும் உள்ளடக்கத்தையும் புரிந்து கொள்ள அது உருவான சூழலைக் கண்டறிய வேண்டும்.’

துணை நூல்கள்

ராஜன் கா. (2010) தொல்லியல் நோக்கில் சங்ககாலம்.

2018, தமிழ் பிராமியின் காலம் - சிக்கல்களும் தீர்வுகளும், ஆவணம் 2018.

Y.Subbarayalu 2012. ‘Tamil Epigraphy Past and present’ South India under The Cholas.

ஆ.சிவசுப்பிரமணியன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.