பார்வையாளர்களில் ஒருவனாக இவ்வாண்டு நடைபெற்ற சிந்தனையாளன் பொங்கல் மலர்-2023 வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டேன். ஒரு விழா எவ்வாறு நடக்க வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக இவ்விழா நடைபெற்றது எனக் கூறுவதில் எள்ளளவும் மிகையில்லை. பொதுவாக மலர்களில் வரும் அனைத்துக் கட்டுரைகளையும் ஒரே நேரத்தில் படித்து முடிப்பது என்பது இயலாத செயல். அதிலும், சிந்தனையாளன் கட்டுரைகளை முழுவதுமாகக் குறுகிய கால இடை வெளியில் படித்து முடிப்பதென்பது என்னைப் பொறுத்த வரை இதுதான் முதல்முறை. விழா ஏற்படுத்திய தாக்கம் அல்லது மலர் வெளியீட்டுக் குழுவின் அறிவிக் கையாக வாலாசா வல்லவன் வெளியிட்ட கருத்துகள் காரணமாகவும் இது நிகழ்ந்திருக்கக் கூடும். எப்படியா யினும் மலர் குறித்த என்னுடைய மதிப்புரைக்கு நான் எழுத வேண்டிய முன்னுரையாக இதனைப் பதிவு செய்ய விழைகிறேன்.

பொருளடக்கத்தில் கூறப்பட்டுள்ள 33 எண்களில், நான்கு கவிதைகளைத் தவிர மற்றவையனைத்தும் கட்டுரைகளே! இடையிடையில், சிறு சிறு கட்டங்களில், நறுக்குத் தெறித்தாற்போல் அரிய தகவல்கள் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

திராவிடர் இயக்கம் எதிர்கொள்ளும் சிக்கல்கள், தமிழரின் பண்பாட்டு மீட்சி, பா.ச.க. என்னும் அபாயம் ஆகியவை குறித்தும், பெரியாரியம், அம்பேத்கரியம் மற்றும் மார்க்சியம் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டிய தேவை குறித்தும் கட்டுரைகள் விளக்குவ தாக வாலாசா வல்லவன் முகப்புரையில் குறிப்பிடுவது முற்றிலும் உண்மை.

குறளும் நானும் என்னும் தலைப்பில் குறளைப் பற்றிய பெரியாரின் திறனாய்வு இன்றைக்கும் அப்படியே பொருந்துகிறதே என வியப்படையாமல் இருக்க முடியவில்லை. பரிமேலழகரின் உரை காரணமாகப் பெரியார் திருக்குறள் பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்ற கருத்து கொண்டிருந்ததனையும், அதன் பின்னர் “பொது அறிவுள்ள மக்களோடு” பழகியதின் காரண மாகத் திருக்குறளை ஏற்றுக் கொண்டதனையும் பெரியார் மிகவும் நேர்மையாகப் பதிவு செய்துள்ளார். அஞ்சாமையும், நேர்மையும்தானே அவரின் படைக்கலன்கள்! கடவுள் வாழ்த்து குறித்தும் மனிதன் எப்படியிருக்க வேண்டும் என்பது குறித்தும் 1950-இல் பெரியார் எழுதியது இன்றும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

400 உள்சாதிகளாகப் பிளவுபட்டுக் கிடக்கும் தமிழர்களை ஒரு செயல் திட்டத்தின் மூலம் ஒருங்கிணைக்க வேண்டிய தேவையை ஐயா ஆனைமுத்து அவர்களின் தமிழ்த்தேசத் தன்னுரிமை கட்டுரை விரிவாக எடுத்து ரைக்கிறது. மொழிவழித் தேசிய இனப் போராட்டத்தை முன்னெடுக்கும் உத்திகளாக மா.பெ.பொ.க. தோழர் களுக்கு அவர் வைக்கும் கருத்துகள் மார்க்சியத்தை முன்னிறுத்தும் அனைவருக்குமே தேவையானவை.

பார்ப்பனீயத்தின் ஒடுக்குமுறை என்ற தலைப்பில் அம்பேத்கர் பிராமணர்களது சித்தாந்தத்தின் அடிப்படை களைப் பட்டியலிடுகிறார். குறிப்பாகப் படிநிலையில் அமைந்த ஏற்றத்தாழ்வு, சூத்திரர்களை நிராயுதபாணி களாக்கிய தந்திரம், கல்வி, ஆட்சியதிகாரம், சொத்துரி மைகளை மறுத்தல், பெண் அடிமைத்தனம் ஆகிய நிலைத்த கோட்பாடுகளின் அடிப்படையில் கட்டமைக் கப்பட்ட பிராமணீய ஒடுக்குமுறை மனிதகுல உயர்வை மறுக்கிறது என்பது முன்னெப்போதையும்விட தற்போது அதிகம் உணரப்படுகிறது.

ஐவகை நிலங்களோடும் அவ்வவற்றிற்குரிய கடவுளரோடும் இணைந்திருந்த தமிழர் வாழ்வை ஆரியப் பார்ப்பனர் தமதாக்கிக் கொண்டு சனாதனச் சட்டங்களை மன்னர்கள் மூலம் நிறைவேற்றி வெகு மக்கள் கல்வியை மறுத்ததனை இரணியனின் கட்டுரை விளக்கிக் கூறுகிறது. ஆரிய அழுக்கைத் துடைப்பதில் வைகுண்டசாமி, நாராயணகுரு ஆகியோரின் பங்கைச் சுட்டிக்காட்டும் கட்டுரையாளர் வள்ளலாரின் பங்கையும் சேர்த்திருக்கவேண்டும் என்பது என் அவா.

தமிழ் அறமும் ஆரியப் பார்ப்பன அறமும் எவ்வாறு வெவ்வேறானவை என்பதனைப் பொழிலன், ஆத்தி சூடியில் தொடங்கித் தொல்காப்பியர் வழியாக விளக்குகிறார். சமற்கிருத அகராதி, இராசாசியின் விளக்கங்கள் எவ்வாறு சமயஞ் சார்ந்த விளக்கமாக அமைந்துள்ளன என்ப தையும் திருக்குறள் கூறும் அறம் தரும் வேறு பொரு ளையும் பாவலரேறு வழியில் விளக்கியுள்ள திறம் பாராட்டுக்குரியது.

பகுத்தறிவு வாதம் சோதிடத்தை எப்படி மறுதலிக் கிறது என்பதனை அறிவியல் பூர்வமாக நிறுவும் பேராசிரியர் நாகநாதன், மேலை நாட்டு அறிஞர்கள் துணையோடு கோள்கள், விண்மீன்கள் பற்றிய அரிய தகவல்களையும் தருகிறார். நெப்போலியன் தோல்விக்கு சோதிட நம்பிக்கையே காரணம் என்பது எனக்குப்புதிய தகவல். எத்தனை காலத்திற்கு முன்னர் நம் மூடச் செயல்களுக்கு நாம்தான் பொறுப்பு என்று ஷேக்ஸ்பியர் கூறியுள்ளார்.

துரை சித்தார்த்தன், இடதுசாரிகளின் சறுக்கல்களைப் பெரியார் கருத்துகளின் வழி நின்று விளக்கும் அதே நேரத்தில் மார்க்சியம்-பெரியாரியம் இணைந்து செயல்பட வேண்டியதின் அவசியத்தை சிறப்பாக விளக்கியுள்ளார்.

சாதி ஒழிக்கப்படாமல் தீண்டாமை ஒழிப்பு என்பது வெற்றுக்கூச்சல் என்பதனைத் தியாகுவின் கட்டுரை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இந்துமத வெறிக்குள் மறைந்திருப்பது சாதிய வெறியே என்றும் தியாகுவின் கருத்து ஆய்விற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றே நான் கருதுகிறேன். தாழ்த்தப்பட்டோர் இந்து சமூகத்திற்கு உள்ளேயா வெளியேயா என்பதும் விடை காணப்பட வேண்டிய வினா.

சாதியக் கட்டமைப்பை எளிய சொற்களில் நீதிபதி து.பரந்தாமன் விளக்கியுள்ளார். அரசமைப்புச் சட்டத்தின் சட்டக் கூறும் எவ்வளவு பெரிய மோசடி என்பதனை இக்கட்டுரை தெளிவாக்கியிருக்கிறது.

புள்ளிவிவரங்கள், தரவுகள் அடிப்படையில் கருத்து களை ஆணித்தரமாக வெளியிடும் வாலாசா வல்லவன் திருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் என்னும் தன்னுடைய கட்டுரையில் சாமி. சிதம்பரனாரில் தொடங்கி ஆனைமுத்து அய்யா ஈறாகக் குறள்நெறி பரப்பித் தொண்டாற்றிய தகவல்களை அகரவரிசைப் படித் தொகுத்தளித்துள்ள திறம் பாராட்டுக்குரியது. புலவர்களின் பரணில் இருந்த திருக்குறள் பொது வெளியில் தெருக்களில் உலவச் செய்தவர் பெரியார் என்பது பொருள் பொதிந்த கூற்று.

வள்ளலார் பரவலாகப் பேசப்பட்டுவரும் இந்நாளில் வேதம், ஆகமம் என்று வீண்வாதம் ஆடும் கூட்டத்தை வெளிக்கொணரும் முகத்தான், விடுதலை இராசேந்திரனின் கட்டுரை அமைந்துள்ளது. பிராமணிய அழிவில்தான் சாதி ஒழிப்பு அடங்கியிருக்கிறது. பெரியாரும் குன்றக் குடியாரும் எப்புள்ளியில் இணைகிறார்களோ, அதே புள்ளியில்தான் வள்ளலாருடன் பெரியாரும் இணை கிறார்கள் என்பது அருமையான பதிவு!

முடியரசனார் குறித்த செந்தலை கௌதமனின் கட்டுரை. “சீரங்கநாதனையும் தில்லை நடராசனையும்” என்னும் பாடலை எழுதியவர் முடியரசன் என்று சொல்லும் போது வியப்பு மேலிடுகிறது. முடியரசனின் கொள்கை உறுதிப்பாடு நமக்கெல்லாம் வழிகாட்டி.

இந்திய அரசியலில் வரலாற்றுத் திரிபுகள்தான் எத்துணை! எத்துணை! பேராசிரியர் கருணானந்தம் பல்கலைக்கழக நல்கைக் குழுவை அவருக்கே உரிய பாணியில் நையாண்டி செய்து அத்துடன் ‘விழிப்புணர் வுக்கான வரலாற்றுக் கல்வி’ என்னும் சொல்லாடல் மூலம் சமத்துவம் நோக்கி அவருடன் நம்மை அழைத்துச் செல்கிறார்.

பாரதிய சனதாக் கட்சி ஆட்சியில் பறிக்கப்படும் உரிமைகளைக் கண. குறிஞ்சி பட்டியலிடும் போது நெஞ்சம் பதைக்கிறது. அநியாயத்தைத் தடுக்காமல் அமைதி காத்தலும் ஒரு குற்றமே என்னும் அவரின் கூற்றுக்கு மறுப்பேது? தோழர் ஓவியா என்னும் பெண் விடுதலைப் போராளியின் அடுக்கடுக்கான வினாக்கள், பறிபோகும் இடஒதுக்கீடு உரிமை குறித்த இராமியாவின் எச்சரிக்கை, பெரியாரை மறுவாசிப்புச் செய்ய வேண்டுவதின் அவசியத்தை வலியுறுத்தும் திருமாவேலன் என இன்றைய காலகட்டத்திற்குப் பொருந்தி வரும் கட்டுரைகள் மலரை அலங்கரிக்கின்றன.

மோடியின் பாசிச முகத்தைத் திருமுருகன் காந்தி விளக்கும் போது நமக்கெல்லாம் தோன்றுவது இதுதான்: “சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்!”

மார்க்சிய மெய்யியலின் இன்றைய தேவை குறித்த கோச்சடையின் கட்டுரை கார்ப்பரேட்டுகளின் (கூட்டாண்மை) கைகளில் உலகப் பொருளாதாரமே சீரழிவதை உணர்த்துகிறது. கோச்சடையின் தமிழ்ச் சொற்கள் பயன்பாடு மிகச் சிறப்பாக உள்ளது.

இப்படியெல்லாமா மூடநம்பிக்கைகள் உள்ளன என்று பதறும் வகையில் அமைந்துள்ளது வந்தியத் தேவனின் கட்டுரை. அதிகாரத்தில் உள்ளவர்களால் பரப்பப்படும் தொற்றுநோய்க் கிருமிகள் மூடநம்பிக்கைகள்.

திரித்துக் கூறும் வரலாற்றுத் திரிபுகளிடையே ஆதித்த கரிகாலன் குறித்த முனைவர் ப.வெங்கடேசனின் நேர்த்தியான பதிவு பொன்னியின் செல்வன் திரைப் படம் மற்றும் நூல்கள் மறுபதிப்பு வந்துள்ள நிலையில் மிகவும் தேவையான ஒன்று.

மாநில உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும்; கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்; மதச்சார்பின்மை என்பதன் உண்மையான பொருள் என வலியுறுத்தப்படும் கருத்துகள் இன்றைய சூழலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை.

சுபவீயும் நானும், தாம்பரம் சுப்பிரமணி, பொன் னம்பலனாரின் மகள் செந்தமிழ்க்கொற்றி ஆகிய இரு கட்டுரைகளும் உணர்வுபூர்வமான மலரும் நினைவுகள்!

கவிதைகள் தேர்வு மிக அருமை.

இறுதிப் போர், கூவாய் கருங்குயிலே எழுச்சியூட்டும் கவிதைகள். பெருஞ்சித்திரனாரும் பாவேந்தரும் நம் கண்முன்னே நிற்கிறார்கள்.

அம்பேத்கர் குறித்த தமிழேந்தியின் கவிதைகள் தமிழேந்தியின் நினைவுகளை அலைமோதவிடுகிறது. நாம் வாழும் இரட்டை வாழ்க்கை சோதிவாணனின் கவிதையில் வெளிப்பட்டுக் கிடக்கிறது.

இந்தப் பொங்கல் மலர் அனைவரும் வைத்துப் பாதுகாக்க வேண்டிய கருத்துக் கருவூலம். எதிரிகளைக் கொள்கை வழியாக எதிர்க்கத் தேவையான வாளும் கேடயமும்!

மலரைப் படித்துக் கருத்துகளை உள்வாங்கிக் கொள்வீராக என்பதே தமிழ்க்குலத்திற்கு நான் விடுக்கும் வேண்டுகோள்.

பேரா. இர. நடராசன்

Pin It