இந்திய குடிமைப் பணித் தேர்வு எழுதி வெற்றி பெற்று அரசாங்க உயர் பதவி வகிப்பவர்கள் பற்றி நாம் எப்பொழுதும் உயர்வு நவிற்சியாக நினைத்துக் கொண்டிருப்போம். அவர்கள் தொடக்கப் பள்ளியிலிருந்தே ஆங்கில வழிப்பள்ளிகளில் படித்து, தனியார் கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி பயின்றவர்களாக, சிறு வயதிலிருந்தே எப்பொழுதும் பாடப் புத்தகமும் கையுமாக இருப்பவர்களாக, அவர்களுடைய தாய் தந்தையர்கள் உயர் பதவி வகிப்பவர்களாக, சிறு வயதிலிருந்தே ஆங்கிலம் பேசிப் பழக்கப்பட்ட நல்ல கல்விப் பின்புலம் மிக்க குடும்பத்திலிருந்து வந்தவர்களாக, விளையாட்டுகளிலோ பொழுதுபோக்குகளிலோ ஈடுபடாதவர்களாக, படிப்பில் மட்டும் கருத்தாக இருந்தவர்களாக நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.

குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்று திருப்பதி வெங்கடசாமி IAAS அதிகாரியாக (Director General of Audit) உயர் பதவி வகிக்கும் அவர், இலக்கையடைந்த பாதை முற்றிலும் வேறுபட்டது.

meippaadugal 378x519சிப்பிப்பாறை என்னும் அவரது கிராமத்தின் அரசுப் பள்ளிக்கூடத்தில் பன்னிரண்டாம் வகுப்பு வரையில், அதுவும் தமிழ் வழியில் பயின்று, அரசு வேளாண்மைக் கல்லூரிகளில் மேற்படிப்பு வரையில் படித்து, குடிமைப் பணித் தேர்விலும் பட்டயக் கணக்காயர் தேர்விலும் வென்று சாதனை நிகழ்த்தியவர் திருப்பதி. இவர் ஒரு சாதாரண வேளாண்மைக் குடும்பத்தைச் சேர்ந்த முதல் தலைமுறைப் பட்டதாரி. பொருளாதார வளமற்ற குடும்பப் பின்னணி. சிறு வயதில் குளம், ஊருணி, கிணறு என அந்தக் கிராமத்தின் எல்லா நீர்நிலைகளிலும் அவருடைய நண்பர்களோடு சேர்ந்து கொண்டு நீச்சலடித்திருக்கிறார், எருமையின் முதுகில் அமர்ந்து சவாரி செய்திருக்கிறார், நண்பர்களோடு அடுத்தவர் மாந்தோட்டத்தில் திருட்டு மாங்காய் அடித்திருக்கிறார், கார்த்திகைத் திருநாளில் ஊர்ப் பொது மந்தையில் மற்றவர்களோடு சேர்ந்து மாம்பளி சுற்றியிருக்கிறார், தீபாவளி நாட்களில் தெருக்களில் திரிந்து ஓலை வெடி வெடித்திருக்கிறார், லெட்சுமி வெடி வாங்குவதற்காக அப்பாவின் சட்டைப் பையிலிருந்து அவருக்குத் தெரியாமல் சில்லறைக் காசுகள் எடுத்திருக்கிறார், பள்ளி விடுமுறை நாட்களில் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் மற்ற நண்பர்களோடு இணைந்து தீப்பெட்டிகளுக்கு லேபில் ஒட்டி, டஜன் மடித்திருக்கிறார்.

முற்றிலும் இயல்பான கிராமச் சூழல் வாழ்க்கைப் பின்னணியிலிருந்து விரிவுகொள்ளும் அவரது சிகரத்தை நோக்கிய பயணத்தின் மிக இன்றியமையாத தருணங்களை ‘மெய்ப்பாடுகள்’ என்னும் நூலாகத் தொகுத்தளித்திருக்கிறார். நிகழ்வுகளைக் கால வரிசைப்படி அல்லாமல், Non-Linear உத்தியில், தன்னியல்பான மனவோட்டமாக அவர் கோத்துத் தந்திருப்பது வழியாக இந்த நூல் ஒரு செம்மையான இலக்கியப் பிரதியாக ஆக்கம் பெற்று விடுகிறது. அவரது வாழ்க்கை அனுபவங்களை தொல்காப்பியர் உரைத்த மெய்ப்பாடுகளுக்கு இயைந்த விதத்தில் அமைந்த நான்கு பாவனைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தொகுத்துத் தந்திருக்கிறார். அச்சம், நகை, வெகுளி, பெருமிதம் என்னும் சரடுகளில் கோக்கப்பட்டவைகளாகக் காட்சிகளாகி நகர்கிறது இவரது நினைவுகளின் அருங்காட்சியகம்.

’மெய்ப்பாடுகள்’ என்னும் இந்த உணர்வுகள் தொகுப்பில் அச்சத்தை முதன்மையாக வைத்திருக்கிறார் ஆசிரியர். வாழ்க்கையின் தொடக்க பருவத்திலிருந்தே, அதுவும் கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஒருவருக்கு, அவரது உள்ளத்தில் மிக மிக ஆழப்பதிந்த உணர்வு அனுபவமாக இருப்பது அச்சம்தான். சிரிப்பு, அழுகை, பெருமிதம், இகழ்தல், வியப்பு ஆகிய பிற உணர்வுகள் அச்சம் உருவாக்கும் அதிர்வு போல மனதிற்குள் அந்தளவு ஆழமாக ஊடுறுவிச் செல்வதில்லை. அச்சம் ஒருவரின் உள்ளுணர்வின் ஆழம்வரை சென்று அவரது சிந்தனையைச் சில கணங்கள் நிறுத்திவிடும் வல்லமை பெற்றது. அவரது பெயர், சமூகப் பின்புலம், புகழ், அவரது பெருமைகள் ஆகிய அனைத்தையும் ஒரு கணம் உறையச் செய்து அவரை எண்ணங்களிலிருந்து விடுதலை செய்து, அவருக்குள் என்றென்றும் இருந்து கொண்டிருக்கும் வெற்று வெளியைத் தர்சனப்படுத்துகிறது. தியானத்தின் இறுதி இலக்கும் இதுதான் என்கிறார்கள் நம் ஆன்மிக குருமார்கள்.

‘அச்சம்’ சார்ந்த அனுபவத்தில் எல்லாருக்கும் மனத்தில் முதன்மையாக வந்து நிற்பது பாம்பு. திருப்பதி அவர்கள் பாம்பை அச்சம் என்னும் மெய்ப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருந்தாலும் அதைச் சொல்லும் விதம் மிகவும் நகைச்சுவை கலந்த எழுத்து நடை.

அவரது வீட்டின் இடிந்த மண்சுவரின் பின்புறம் மண்டிக் கிடந்த புதருக்கும் அதனையடுத்து இருந்த பாழடைந்த வீட்டிற்கும் இடையில் போய்வந்துகொண்டிருந்த பாம்பைப் பற்றி குறிப்பிடுகையில் அவர் சொல்கிறார்: பாம்புகள் இந்த இரண்டு இடங்களுக்கும் ‘போக்குவரத்து நடத்தும் சாலையாக’ எங்கள் வீட்டின் திறந்த வெளியைப் பயன்படுத்திக் கொண்டிருந்தது.

சத்ய ஜித்ரே-யின் ‘பதேர் பாஞ்சாலி’ திரைப்படத்தின் இறுதிக் காட்சியில், ஒரு கீற்று வீட்டில் வாழ்ந்த குடும்பம் அங்கிருந்து வெளியேறிச் சென்றதும் அந்தச் சிறிய வீட்டிற்குள் ஒரு பாம்பு நெளிந்து நுழையும். அத்துடன் படம் முடிந்து விடும். இருபது ஆண்டுகளுக்கு முன்னால் அந்தப் படத்தைப் பார்த்தபோது அதன் பொருள் புரியவில்லை. திருப்பதி அவர்களது பாம்பு பற்றிய நிகழ்வுகளை வாசித்தபொழுது எனக்கு அது நினைவுக்கு வந்து, அதன் பொருள் விளங்கியது.

அவர் மேலும் பாம்பு பற்றி அச்சம் தவிர்த்து அவரது இயல்பான நகைச்சுவையோடு குறிப்பிடுகிறார்: பாம்புகள் எங்கள் வீட்டின் திறந்த வெளியை மட்டும் பயன்படுத்தவில்லை. வீட்டின் பிற அறைகளையும் ‘வாடகை கொடுக்காமலே’ பயன்படுத்தி வந்தன.

பாம்பு பற்றிய இன்னொரு அனுபவத்தைச் சொல்கையில், அவரது இயல்பில் தானாக அந்த நகைச்சுவை வெளிப்படுகிறது. அவரது கிராமத்து வீட்டின் உள் அறையில் துணிகள் தொங்கவிடும் கட்டையில் துணிகளோடு துணிகளாக பாம்பு ஒன்று தொங்கிக் கொண்டிருக்கும் பதற்றமான சம்பவத்தைக் குறிப்பிடுவதினூடாக திருப்பதி அவர்கள் சொல்வது: ‘தன் பழைய சட்டையை உரித்துவிட்டு, புதுச் சட்டையை அணிய வந்திருக்கலாம்! அல்லது வெள்ளை ஆடையை அணிந்து சலிப்படைந்து, வேறு வண்ண ஆடையைத் தேடி வந்திருக்கலாம்.’

நூலாசிரியருக்கு நேர்ந்த இத்தகைய பாம்புக் கதைகளை அவர் விவரித்துக் காட்டி வாசகர்களுக்கும் அந்த உணர்வனுபவத்தை ஏற்படுத்துவதில் வெற்றியடைகிறார் என்பதோடு மட்டுமல்லாமல், அவருக்கிருக்கும் பரந்த நூல் வாசிப்பு அனுபவத்தோடு அதைத் தொடர்புபடுத்துகையில், கட்டுரைகள் விண்ணேற்றமடைகின்றன.

அவர் பத்து வயது சிறுவனாக இருந்தபொழுது அம்மா, அப்பா, பாட்டியோடு பக்கத்து ஊரிலிருக்கும் உறவினர் வீட்டுக்குச் சென்று திரும்பிய பொழுது, அவர் வீட்டு வாசலில் குத்தப்பட்டுக் கிடந்த ஏழு அடி நல்ல பாம்பைப் பற்றி குறிப்பிடுகையில், அவர் நற்றிணையின் பூதனார் பாடலில் இடம்பெற்ற பாம்பை காட்சிப்படுத்தி பிரமாண்டப்படுத்துகிறார்: “களிறு அகப்படுத்த பெருஞ் சின மாசுணம்”

மரத்தில் தொங்கிக்கொண்டு பெரிய யானையை வளைத்து விழுங்க முயலும் மலைப் பாம்பு உடைய மலைமீது ஏறி தலைவன் தன்னைப் பார்க்க வருகிறானெனத் தலைவி தோழியிடம் சொல்வதாக அமைந்த பாடலை இங்கு இணைத்துக் காட்டுவதன் வழியாக பாம்பு என்பதன் பேருருவத்தை வாசகர் மனத்தின் முன்னால் கொண்டுவந்து நிறுத்தி, பாம்பு என்னும் உயிரியை அச்சம் என்னும் மெய்ப்பாட்டுடன் தொடர்புறச் செய்கிறார்.

அறிமுகக் கட்டுரையில், மலைப் பகுதியில் ஒரு ராஜ நாகத்தை நேருக்கு நேராகச் சந்தித்து, பதற்றத்தில் ஓடி பள்ளத்தில் உருண்டு, ஏரி நீரோட்டத்தில் சரிந்து விழுந்து, கரையேற முயன்று சகதியில் சிக்கி, முதலை என நினைத்து காட்டுப்பன்றிக்குப் பயந்து, மலைக்கிராமத்தார் உதவியுடன் மாட்டு வண்டியில் ஏறி அவர் இருப்பிடம் திரும்புவதை அவர் விவரித்துச் சொல்லும் முறை, வாழ்க்கைத் தத்துவம் குறித்துப் பேசும் ஜென் கதை போல இருக்கிறது!

’பச்சைப் பாம்பை தடவிக்கொடுத்தா, அவங்க செய்யுற சமையல் ருசிக்கும்; மணக்கும்; அவங்க கைப்பக்குவம் மாதிரி யாருக்கும் வராது!” இதுபோன்ற கிராமத்து நம்பிக்கைகளையும் அவருடைய பாட்டியின் சொற்களில் வாசகர்களுக்கு அறியத் தருகிறார்.

குளத்திற்குள் எருமைச் சவாரி செய்யும்பொழுது, எதிர்கொள்ளும் தண்ணீர்ப் பாம்பு பற்றி விவரிக்கையில் அதைத் தத்துவப்படுத்துகிறார். ‘நிலத்தில் உள்ள பாம்பு நேரெதிர் நின்று தாக்கும். தண்ணீர்ப் பாம்பு நேரிலும் வரலாம், நீருக்குள் ஒளிந்தும் வரலாம்.’ என அதை மனித இயல்போடு ஒன்றுபடுத்திக் காட்டுகிறார்.

குதிரைக்கு பாம்பின் விசம் செலுத்தப்பட்டு, அந்த விசத்தை எதிர்த்துப் போராடும் குதிரையின் நோய் எதிர்ப்புத் திரவத்தை, குதிரையின் குருதியிலிருந்து பிரித்தெடுத்து, சுத்திகரித்து, அதை விச முறிவுக்கான ஊசி மருந்தாக மாற்றும் தொழில்நுட்பத்தை யாவர்க்கும் எளிதாகப் புரியும் விதத்தில் ஒரு அழகான சிறுகதை போன்ற கலை நுட்பத்துடன் திருப்பதி எழுதியிருக்கும் விதம் அவருக்குள்ளிருக்கும் தேர்ந்த எழுத்தாளனை உணர்ந்து கொள்ள இயல்வதாக அந்தக் கட்டுரை அமைந்துள்ளது.

அடுத்து இரண்டாவது மெய்ப்பாடாக ‘நகை’ வருகிறது.

கோவணம் குறித்து ஒரு பேராய்வு நிகழ்த்த முடிந்த அளவுக்கு அதைப் பற்றி மிக விரிவாகப் பேசிச்செல்வதை வாசிக்கையில் சிரிப்பும் சிந்தனையும் ஒருங்கே இணைந்துகொள்கிறது.

               -கோவணம் பெயர்க் காரணம்.

               -பக்தி இலக்கியத்தில், தேவாரம் மற்றும் திருவாசகப் பாடல்களில் கோவணம்.

               - தமிழ்க் கடவுள் முருகனும் கோவணமும்.

               - உழைப்பாளிகளின் உடை கோவணம்.

               -கோவணம் என்னும் குளியலாடை.

இப்படியாகக் கோவணம் குறித்து அவர் எழுதிச்செல்லும் போக்கு வெற்று நகைச்சுவையாக, கிண்டல் கேலியாக எழுதாமல், அது சார்ந்த நாட்டுப் பாடல்கள், தேவார திருவாசக வரிகள், தொல்காப்பிய வரிகள் என விரிவான தகவல்களாக கருத்தூன்றிய தொனியில் அவர் எழுதுவதை வாசிக்கும்பொழுது கோவணம் என்பது நம் கிராமத்து வாழ்க்கையின் ஒரு இன்றியமையாத பண்பாட்டுக் கூறாக இருந்ததை அறிந்து கொள்ள துணை செய்கிறது.

ஆதிமனிதனின் ஆடைகளாக இலை தழைகளும் அதன் பிறகு தோலாடைகளும் இருந்தாலும் அவை இடுப்பைச் சுற்றிலும் அணியக் கூடியவைகளாக இருந்ததையும், மனிதனின் கால்களுக்கு இடையே அணிந்த முதல் ஆடையாகக் கோவணம் இருந்ததை நூலாசிரியர் குறிப்பிடுகையில், இன்னொரு சிந்தனை வாசகர் மனதில் உருவாக வாய்ப்புள்ளது. கால்களுக்கு இடையே அணியப்பட்ட கோவணம் பின்னர் நாகரிக வளர்ச்சியடைந்த காலகட்டத்தில் காற்சட்டைகளாக, முழுக்கால் சட்டைகளாக, ஜீன்ஸ்களாக உருமாற்றமடைந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது!

கோவணக் குளியலில் தொடங்கும் வாழ்க்கை அனுபவம், பிறகு அவர் செந்தட்டிச் செடி தீண்ட மண்ணடிக் குளம் குளியல் நிகழ்வினால் அப்பாவிடம் அடி வாங்கும் பொழுது, நீச்சல் கற்கவேண்டியதின் உத்வேகத்தைப் பாட்டியின் சொற்களில் பெற்று, சுரக்குடுக்கை உதவியோடு கிணற்றில் நீச்சல் கற்று, அவரது நீச்சல் பயணம் அந்தக் கிராமத்தின் ஊருணி, குளம், கிணறு, தெப்பம் எனத் தொடர்கிறது. அதனூடாக நீர்விளையாட்டுகள் பற்றிய பல அனுபவக் கதைகளை விவரித்துப் போகிறார்.

உள்ளூர் சாகசங்களை முடித்துவிட்டு வேளாண்மைக் கல்விப் படிப்பிற்காக கிள்ளிகுளம் போன பிறகும் அவரது இந்த நீர்விளையாட்டு அந்தந்தச் சூழல்களில் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. குற்றாலம், மணிமுத்தாறு, பாபநாசம் அருவிகள், அகத்தியர் அருவி, காரையார் நீர்த்தேக்கத்தின் பான தீர்த்தம் அருவி (ரோஜா பட அருவி) என அவரது அனுபவக் கதைகள் தொடர்கின்றன. இவற்றின் ஒவ்வோர் இடத்திலும் ஒரு சாகசக் கதை சொல்கிறார் நூலாசிரியர்.

மின்னஹாகா அருவியை நம் கண் முன் நேரடியாக நிறுத்துகையில், ஒரு சில வரிகளில் அதன் உன்னதத்தை வாசகருக்குப் புலப்படுத்திவிடுகிறார். அந்த அருவியில் மேலிருந்து தண்ணீர் கொட்டத் தொடங்கிய நிலையிலேயே நீர் உறைந்திருந்தது! கொட்டும் நீராக அல்ல, உறைந்த பனிக்கட்டியாக அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது அந்த அருவி.

நயாகரா நீர்வீழ்ச்சி பற்றிய அனுபவங்கள் அழகும் பிரமிப்பும் தருபவை.

‘வெகுளி’ என்னும் மெய்ப்பாட்டிற்கு கீழ் ‘மந்தணம் கொண்டேன்’ என்னும் தலைப்பில் எழுதப்பட்டிருக்கும் ஒரு கிராமத்துச் சிறுவனின் தீபாவளி அனுபவம் கிராமத்தில் பிறந்த ஒவ்வொருவரின் அனுபவமாக இருப்பதால், அதை வாசிக்கும் பொழுது ஒருவர் அந்தப் பிராயத்திற்குச் சென்று திரும்பும் மனமகிழ்வான அனுபவத்தைத் தருகிறது.

விடியலில் எண்ணெய், சீயக்காய் குளியல்; அன்று மட்டுமே சிறப்புப் பலகாரமாகச் செய்யப்படும் இட்லி, சட்னி, சாம்பார்; இவற்றுடன் மெதுவடை மற்றும் இனிப்புப் பலகாரங்கள். தீபாவளிக்கு முன்னரே அப்பாவின் சட்டைப்பையிலிருந்து சில்லறைக் காசு எடுத்துச் சேர்த்து வாங்கும் லட்சுமி வெடிகள். அவர் வெடித்த பிற வெடிகளின் பெயர்களைப் பட்டியலிட்டுச் சொல்கிறார். வெடி வெடித்து காயம் பட்டவர்களுக்காக அன்று மருத்துவமனையைத் திறந்து வைத்திருக்கும் கோவில்பட்டி டாக்டர் சென்னக்கேசவன் என்னும் மனித நேயமிக்க மருத்துவர் பற்றிய தகவல் நெகிழ்ச்சியளிப்பது.

ஒருவர் அவரது எழுத்து விவரிப்பு வழியாக வாசகரின் அனுபவங்களோடு இணைவு கொள்ளும்போது, ஒரு பொதுப்புள்ளியில் எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் சந்திப்பு நிகழ்ந்துவிடுகிறது. எழுத்தாளரின் அனுபவம் எல்லாருக்குமான ஒரு பொது அனுபவமாக விரிவு கொள்கிறது. திருப்பதி வெங்கடசாமி அவர்கள் தன் படைப்பின் வழியாக அந்த ரசவாதத்தை அழகாக நிகழ்த்தி விடுகிறார்.

இந்த நூலுக்கு திறனாய்வு எழுதுபவன் என்பதைக் கடந்து, நான் பல இடங்களில் இதயப்பூர்வமாகப் புளகாங்கிதம் அடைந்தேன். அத்தனை சிறு வயது மகிழ்ச்சிகளையும் மீட்டுத் தருகிறார். விலை கொடுக்க வேண்டிய அவசியங்களற்று, கிராமத்து வெளியில் கொட்டிக் கிடப்பவை. காற்று வழியாக நம் காதுகளை வந்தடைந்தவை. இன்று காணாமல் போய்விட்டன என்று ஏக்கம் கொண்டிருந்தோர்களுக்காக அவற்றை ஆவணப்படுத்தி நம் காட்சிக்கு வைக்கிறார்.

’நெடுஞ்சுடர் கதிர் காய்ந்து’ என்னும் கட்டுரையின் தொடக்கத்தில், ‘பொங்கும் பூம்புனல்’ என்னும் அறிவிப்பைத் தொடர்ந்து ஒலிக்கும் உற்சாகமான இசையை மீண்டும் நம் இதயத்தில் ஓர் இசைத் தட்டாகச் சுழலவிட்டு, நிகழ்ச்சி அறி­விப்பாளர் அப்துல் ஹமீது அவர்கள் மூச்சு விடாமல் நேயர்களின் பெயர்களைச் சொல்லிவிட்டு, அந்தக் காலகட்டத்தின் பாடல் ஒலிபரப்பப்படுவதை, அதே துள்ளலையும் உற்சாகத்தையும் திருப்பதி அவரது இன்றைய வரிகளில் கொண்டு வந்து விடுவது மிகவும் சிறப்பு.

பள்ளி விடுமுறை நாட்களில் அவர் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்ததை மீள் நினைவூட்டும் கட்டுரையில், அங்கு அத்தகைய தொழிற்சாலை வந்ததற்கான பொருளாதார காரணங்களைச் சொல்வதோடு, தீப்பெட்டி தொழிற்சாலையின் பணி அமைப்புகள், அந்தத் தொழிற்சாலைகளின் கட்டட அமைப்புகள் யாவற்றையும் ஒரு திரைப்படக் காட்சிகள் போல ஓடவிடுகிறார்.

அங்கு நடந்த ஒரு தீ விபத்து பற்றி சொல்வதற்கு அவர் இரண்டு பாராக்கள் மட்டும் எடுத்துக்கொள்கிறார். ஆனால், ஷாட் பை ஷாட் என்னும் நுட்ப முறையில், அவர் ஐம்புலன்களின் உணர்வுகள் வழியாக மட்டுமே அந்தத் தீயின் உக்கிரத்தை உணர்த்திவிடுகிறார். அந்தத் தீயை நற்றிணைப் பாடலின் வெம்மையோடு இணைக்கிறார்.

அந்தத் தீ அனுபவத்தை கார்த்திகைத் திருநாள் நிகழ்ச்சியில் மந்தையில் ‘மாம்பளி’ சுற்றும் நிகழ்ச்சி வரைக்கும் தொடர்ந்து அணையாமல் கொண்டுசெல்வது கவித்துவம்.

அவரது வாழ்வனுபவங்களாக இருக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் அதற்குப் பொருத்தமான ஒரு சங்கப் பாடலோடு தொடர்புபடுத்திக் காட்டுவது அவரது விரிந்த வாசிப்புத் தளத்தை நமக்கு உணர்த்துகிறது.

‘பெருமிதம்’ என்னும் மெய்ப்பாடு குறித்த கட்டுரை அவரது பள்ளி வாழ்க்கையில் தொடங்கி இறுதி இலக்கைச் சென்றடைவது வரை விவரிக்கப்பட்டுள்ளது. கல்வி சார்ந்த வாழ்க்கையில் ஒருவருக்கு ஏற்படும் சரிவுகளையும் அவராகவே உண்டாக்கிக் கொண்ட சில சறுக்கல்களையும் பேசும் இந்தக் கட்டுரைகளைச் சுய முன்னேற்ற நூல் வாசிப்பது போலவும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள உதவும் கட்டுரைகள் போலவும் வாசிக்க முடியும் என்றாலும் அந்த அத்தனை கட்டுரைகளும் விறுவிறுப்பான கதைத் தன்மையோடு, இலக்கியத் தகுதிகள் உடையதாகப் படைக்கப்பட்டிருக்கின்றன.

மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் கனவு சிதைந்த கதையை, அதாவது, அந்த வருடம் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்காக 250-க்கு 217.14 மதிப்பெண் பெற்றவர்கள் வரையில் அனுமதிக்கப்பட, நம் நூலாசிரியர் பெற்ற மொத்த மதிப்பெண் 216.34. ஒரு மதிப்பெண்ணைக் காட்டிலும் குறைவான மதிப்பெண்ணில் தகர்ந்துபோன அவரது மருத்துவக் கனவு குறித்து அவருக்குள் எழும் கேள்விகளை நோக்கியதாக அமைந்திருக்கிறது இந்த அத்தியாயம். வாழ்க்கைச் சூழல்களின் நிலையற்ற போக்குகள் ஒரு மாணவனின் இலக்கை எப்படி திசைமாற்றி விடுகின்றன என்பதை ஒரு கதையாக விவரித்துக் காட்டுகிறார். கிள்ளிகுளம், கோயம்புத்தூர் வேளாண்மைக் கல்லூரிப் படிப்புகள், ஐ.சி.ஏ.ஆர். தேர்வில் அகில இந்திய அளவில் நான்காம் இடம் எனத் தொடர்கிறது அந்தக் கதை சொல்லல்.

ஒரு மதிப்பு மிக்க உர நிறுவனத்தின் சந்தைப் பிரதிநிதியாக அரக்கோணத்தில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, அந்த வேலை சில காரணங்களால் அவருக்கு மனநிறைவு அளிக்காமல் போக, அவர் அந்தப் பணியைத் துறந்துவிட்டு குடிமைப் பணி தேர்வு எழுத முடிவு செய்து ஊருக்கு வருகிறார். ஒரு கீழ் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த அவர், அந்த வேலையை விட்டுவிட்டதைப் பற்றி ஊரில் இருக்கும் நாலு பேர் நாலு விதமாகப் பேசுகிறார்கள். அந்த நாலு பேர் எத்தகைய மனிதர்கள் என்பதை நமக்கு வகைப்படுத்திக் காட்டி, நமது நீண்ட கால கேள்விக்கும் விடை கொடுக்கிறார்.

குரூப்-1, குரூப்-2 மற்றும் வேளாண்மை அலுவலர் பணித் தேர்வு இவற்றின் தொடர் தோல்விகளைக் கடந்து, குடிமைப் பணித் தேர்விலும் இரண்டு தோல்விகளைச் சந்தித்து, விருப்பப்பாடங்களை ஒவ்வொரு தடவையும் மாற்றி அமைத்துக் கொண்டு, மூன்றாம் தடவையில் அவர் குடிமைப் பணி தேர்வில் வென்று சிகரத்தைத் தொட்டுவிட்டதை வாசிக்கும்பொழுது, நாமும் சேர்ந்து அவரோடு கொண்டாடுகிறோம்.

அவரது அயல் தேச பயணங்கள், பணிச் சூழல் அனுபவங்கள், இன்னும் பிற அனுபவங்கள் என இந்த நூல் புதுமை மிக்க அனுபவக் கதை சொல்லல்களைக் கொண்டிருக்கிறது.

சிப்பிப்பாறை என்னும் கிராமத்தில், ஒரு கீழ் நடுத்தர வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்து, முதல் தலைமுறைப் பட்டதாரியாக ஆகி, பெரு முயற்சிகளின் விளைவால் குடிமைப் பணியாளர் தேர்வில் வென்று, அவரது இலக்கை எய்திய அனுபவங்களின் தொகுப்பான இந்த நூல், ஒரு இலக்கிய உன்னதம் மிக்க நடையில் எழுதப்பட்டிருக்கிறது..

மெய்ப்பாடுகள் (வாழ்வனுபவக் கட்டுரைகள்)

ஆசிரியர்: இரா. திருப்பதி வெங்கடசாமி IAAS

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் |

பக்கங்கள்: 220 | விலை ரூ.280.

- கூத்தலிங்கம்

Pin It